எல்லாம் நிறைவேறிற்று

கடந்த ஒரு வாரமாக எழுதியதைப் பார்க்கும்போது வழக்கமாக நான் என் பதிவுகளுக்கு அளிக்கும் கவனத்தை சில பதிவுகளுக்கு அளிக்க முடியவில்லை என்று தோன்றுகிறது. தமிழ்மணம் என்னை நட்சத்திரமாக இருக்குமாறு ஒரு மாதத்திற்கு முன்பே கேட்டுக்கொண்டபோதும் எல்லாவற்றையும் கடைசி நேரத்துக்குத் ஒத்திப் போடும் குணத்தின் காரணமாக நட்சத்திர வாரத்துக்கான ஆக்கங்களில் இரு இடுகைகளை மட்டுமே முன்பே எழுதி வைத்திருந்தேன். மற்றவற்றை ஒவ்வொரு நாளும் சிறிது நேரம் செலவிட்டு எழுதிவிடலாம் என்று நினைத்தேன். ஆனால் பணிச்சுமை திடீரென்று அதிகரித்துவிட்டதாலும், நெருங்கிய உறவினர் ஒருவரின் வருகையாலும் நினைத்த அளவுக்கு எழுதமுடியாமல் போய்விட்டது. குறிப்பாக ஈழம், கேரளம் மற்றும் குமரி மாவட்டம் ஆகியவற்றுக்கு இடையே மொழி, கலாச்சாரம் மற்றும் சமூக அடிப்படையில் இருக்கும் எண்ணற்ற ஒற்றுமைகளைக் குறித்து ஒரு கட்டுரை எழுத நினைத்திருந்தேன். எழுதமுடியாமல் போனதும் ஒருவகையில் நல்லது தான். இப்போது எழுதியிருந்தால் நேரமின்மைக் காரணமாக மேலோட்டமாக எழுதியிருக்கக் கூடும். பிறகு விரிவாக எழுதுகிறேன்.

சென்ற ஆண்டு மனைவியும் குழந்தையும் சில வாரங்கள் ஊருக்குப் போயிருந்தபோது என் நாட்கள் நீளமாகிவிட்டதைப் போல உணர்ந்தேன். கிடைத்த நேரம் அனைத்தையும் புத்தகங்கள் (பெரும்பாலும் நாவல்கள்) வாசிப்பதிலேயே செலவிட்டேன். அவற்றை வாசிக்கும் போது எழுந்த எண்ணங்களை யாருடனாவது பகிர்ந்துகொள்ள வேண்டும் என்ற நோக்கமே என்னைப் பதிவு எழுதத் தூண்டியது. தமிழ்மணத்தில் கணக்குக் காட்டுவதற்காக சில இலகுவான இடுகைகளை இட்டுவிட்டு, ஜெயமோகனது எழுத்தைப் பற்றிய ஒரு நீண்ட கட்டுரையை இரண்டு பாகங்களாக எழுதினேன். இவை சொல்லிக் கொள்ளும்படியான வரவேற்பைப் பெறும் என்று நான் அப்போது எதிர்பார்க்கவில்லை.

அண்மையில் பாஸ்டன் பாலா ஒரு பதிவில் என்னைப் பற்றிக் குறிப்பிட்டது போல நான் என் பதிவின் வாசகர் எண்ணிக்கையைப் பெருக்குவதற்காக சந்தைப்படுத்தல் எதையும் செய்வதில்லை. ஆரம்பத்தில் பதிவு எழுதுவதை ஒரு நாட்குறிப்பு எழுதுவதைப் போல தான் பார்த்தேன். தமிழ்மணத்தின் மறுமொழி நிலவர சேவையைக் கூட சுமார் நான்கு மாதங்களுக்குப் பயன்படுத்திக் கொள்ளவில்லை. அதனால் இடுகையை தமிழ்மணத்தில் சேர்த்த சில நிமிடங்களிலேயே அது காணாமல் போய்விடும். தமிழ்மணம் மூலமாக இருபத்தைந்து முப்பது பேர் தான் வந்துப் படிக்கிறார்கள் என்று Sitemeter சொன்னது. அந்நாட்களில் என் பெரும்பாலான இடுகைகள் கில்லி தளத்தில் பரிந்துரைக்கப்பட்டதால் அங்கிருந்தும் ஒரு பத்து இருபது பேர் வருவார்கள். ஆனால் இப்படி வந்தவர்களில் பலர் நான் எழுதியிருந்ததைப் படித்துவிட்டு மிகவும் பாராட்டினார்கள். இவர்களில் பெரும்பாலானவர்கள் வலையுலகில் முக்கியமானவர்களாகவும், எழுத்துத்திறனுக்காக அறியப்படுபவர்களாகவும் இருந்தார்கள்.

எழுதத் தொடங்கிய சில நாட்களிலேயே மதி கந்தசாமி தன் பதிவில் என் கட்டுரைகளை வெகுவாகப் பாராட்டியிருந்ததைப் பார்த்தபோது ஆச்சரியமாகவும் உற்சாகமாகவும் இருந்தது. சென்ற ஆண்டின் இறுதியில் 2006-ன் சிறந்தப் பதிவுகள் என்று அவர் இட்டிருந்தப் பட்டியலிலும் என் பதிவைக் குறிப்பிட்டிருந்தார். பழைய பதிவர், புதிய பதிவர் என்ற பாகுபாடெல்லாம் இல்லாமல் தினமும் மிகவும் அதிகமான இடுகைகளைப் படிப்பவர் யார் என்று ஒரு போட்டி வைத்தால் மதிக்கு கடுமையான போட்டியை அளிக்கக்கூடியவர் பாஸ்டன் பாலா தான் என்று நினைக்கிறேன். அவரும் 2006-ன் சிறந்தப் பதிவுகளில் ஒன்றாக என் பதிவைப் பட்டியலிட்டிருந்தார். இண்டிபிளாகீஸ் நடத்திய தேர்தலிலும் கடந்த ஆண்டின் சிறந்த தமிழ்ப் பதிவுகளில் ஒன்றாக என் பதிவு பரிந்துரைக்கப்பட்டிருந்ததைக் கண்டேன்.

இதெல்லாம் பதிவு எழுதுவதைக் குறித்து நான் கொண்டிருந்த மெத்தனமான போக்கை கொஞ்சம் மாற்றியது. இத்தனை பேர் - அதுவும் தமிழ் இணையத்தில் பழம் தின்று கொட்டை போட்டவர்கள் - நம் எழுத்தைப் பற்றி நல்ல எண்ணம் கொண்டிருக்கையில் தொடர்ந்து எழுதுவது தான் முறை என்று தோன்றியது. இந்த ஆண்டின் தொடக்கத்திலிருந்து அதிக இடைவெளி விடாமல் அவ்வப்போது எழுத முயற்சித்து வருகிறேன். எனக்கு ஆர்வமுள்ள விஷயங்களை - மொழிகள், வரலாறு, சமூகவியல், புத்தக வாசிப்பு - குறித்து இனிவரும் நாட்களில் நிறைய எழுத நினைத்திருக்கிறேன். ஆனாலும் பணியிட அழுத்தங்களும் குடும்பப் பொறுப்புகளும் எந்த அளவுக்கு அனுமதிக்கும் என்று தெரியவில்லை.

இந்த நட்சத்திர வாரத்தின் போதும் அதற்கு முன்பும் என் இடுகைகளைப் பொறுமையாகப் படித்துக் கருத்து தெரிவித்தவர்கள், உற்சாகப்படுத்தியவர்கள், மற்றவர்களுக்குப் பரிந்துரை செய்தவர்கள் அனைவருக்கும் என் நன்றிகள்.

தமிழ் வழியே மலையாளம்

மலையாள மொழி ஓரளவுக்கு நன்றாகப் புரிகிற, ஆனால் மலையாள எழுத்துக்களை வாசிக்கத் தெரியாத தமிழர்கள் லட்சக்கணக்கில் இருப்பார்கள் என்று நினைக்கிறேன். மலையாளம் வாசிக்கக் கற்றுக்கொள்வது எளிதானதல்ல என்பது அந்த முயற்சியை மேற்கொண்டவர்களுக்குத் தெரியும். தமிழைவிட மிக அதிகமான மெய்யெழுத்துக்கள், அந்த மெய்யெழுத்துக்கள் ஒன்றோடொன்று சேரும்போது தோன்றும் சீரற்ற வடிவம் கொண்ட நூற்றுக்கணக்கானக் கூட்டெழுத்துக்கள் என்று எல்லாம் சேர்ந்து தலை சுற்ற வைத்துவிடும். நிறைய நேரமும் உழைப்பும் செலவிடத் தயாராக இருப்பவர்களால் மட்டுமே மலையாள எழுத்துக்களை வசப்படுத்த முடியும். அப்படி முடியாதவர்களுக்காக அண்மையில் நான் ஒரு கருவியை உருவாக்கினேன். அதன் மூலம் இணையத்தில் உள்ள மலையாள ஆக்கங்களை தமிழ் எழுத்துக்களுக்கு மாற்றிப் படிக்கலாம்.

இணையத்தில்/கணினியில் ஏற்றப்படாத சிறந்த மலையாளப் படைப்புகளை எப்படிப் படிப்பது? மொழிபெயர்ப்புகள் மூலம் படிப்பது ஒரு வழி. ஆனால் மலையாள மொழியையும் கலாச்சாரத்தையும் நன்கு அறிந்த ஒருவர் மலையாளத்தின் சிறந்த நாவல்களின் தமிழ் மொழிபெயர்ப்பைப் படித்தால் அது பிடிக்காமல் போவதற்கான வாய்ப்புகள் அதிகம். தகழியின் செம்மீன் நாவலை சுந்தர ராமசாமியின் மொழிபெயர்ப்பில் படித்தபோது மிகவும் செயற்கையாக உணர்ந்து இனி எந்த மலையாள நாவலின் மொழிபெயர்ப்பையும் படிப்பதில்லை என்று முடிவு செய்தேன். இது ஒருவித உளவியல் சிக்கல். தால்ஸ்தாயையும் தாஸ்தாவ்ஸ்கியையும் ஆங்கில மொழிபெயர்ப்பில் படிக்கும் போது நான் எந்தக் குறையையும் உணர்வதில்லை. ரஷ்ய மொழியையும் கலாச்சாரத்தையும் அறியாத என்னால் மொழிபெயர்ப்பில் உள்ள குறைகளை உணரமுடியாததே காரணம். ஆனால் மலையாள நாவல்களின் தமிழ் மொழிபெயர்ப்பைப் படிப்பது அப்படியல்ல. தில்லானா மோகனாம்பாள் படத்தை ஆங்கிலத்தில் பார்ப்பது போல இருக்கும்.

வேறு வழி? என்னை மாதிரி கிறுக்கு சிந்தனையுடைய யாராவது பதிப்பகம் நடத்திக்கொண்டிருந்தால் அவர்களுக்கு ஒரு யோசனை சொல்கிறேன். சிறந்த மலையாள நாவல்களை அப்படியே தமிழ் எழுத்துக்களைக் கொண்டு அச்சிட்டு வெளியிடுங்கள். கடினமான சொற்களுக்கு மட்டும் கீழே அடிக்குறிப்பு இட்டு பொருள் தரலாம். இந்தி போன்ற மொழிகளை எழுதுவதற்கு தமிழ் எழுத்துக்கள் போதுமானதாக இல்லாமல் இருக்கலாம். ஆனால் மலையாள மொழியை எழுதுவதற்கு அவை போதும். மணிக்கொடி காலத்து மணிப்பிரவாள நடையைத் தமிழ் எழுத்துக்களைக் கொண்டு எழுதுவதற்கும் மலையாளத்தை எழுதுவதற்கும் அதிக வேறுபாடில்லை. மலையாள மொழியோடு எந்த அறிமுகமும் இல்லாதத் தமிழர்கள் கூட சிறிது முயன்றால் தமிழ் எழுத்துக்களைக் கொண்டு எழுதப்பட்ட மலையாளப் படைப்புகளை வாசித்துப் புரிந்துக்கொள்ளலாம். அதற்கு உதவக்கூடிய சிலத் தகவல்களை கீழே தருகிறேன்.

ஒரு மொழி மற்றொரு மொழியின் கலப்பின் காரணமாக உருமாறும் போது பெரும்பாலும் அதன் அடிப்படைச் சொற்கள் அப்படியே தான் இருக்கும். மலையாளத்தில் வடமொழிச் சொற்கள் அதிக அளவில் கலந்திருந்தாலும் மிகப் பெரும்பாலான அடிப்படைச் சொற்கள் தமிழ் சொற்களே. சில எடுத்துக்காட்டுகளை கீழே தந்திருக்கிறேன்.

உறுப்புகள்: தல, கண்ணு, மூக்கு, நாக்கு, வாய், பல்லு, கழுத்து, நெஞ்சு, கை, காலு.

வினைகள்: வா, போ, நட, ஓடு, குடி, குளி, அடி, கடி, கொடு.

இடப்பெயர்கள்/சுட்டுப்பெயர்கள்: ஞான், நீ, அவன், அவள், அவர், அது, இது, எது.

பருவங்கள்: மழ, வெயில், காற்று, மின்னல், இடி.

திசைகள்: வடக்கு, தெக்கு, கிழக்கு, இடத்து, வலத்து.

எண்கள்: கால், அர, முக்கால், ஒந்நு, ரண்டு, மூந்நு, நாலு, அஞ்சு, ஆறு...

நிறங்கள்: கறுப்பு, வெளுப்பு, நீலம், சுவப்பு, பச்ச, மஞ்ஞ.

உலோகங்கள்: இரும்பு, செம்பு, ஈயம், வெள்ளி, வெங்கலம்.

கிழமைகள்: ஞாயர், திங்கள், சொவ்வ, புதன், வ்யாழம், வெள்ளி, சனி

விலங்குகள்/பறவைகள்: ஆன, பசு, எரும, ஆடு, பன்னி, மயில், குயில், காக்க, கோழி.

இன்றைய தமிழ் பேச்சுவழக்கில் அதிகம் பயன்படுத்தப்படாத, ஆனால் எழுத்துத்தமிழில் இடம்பெறும் ஏராளமான சொற்கள் மலையாளப் பேச்சு வழக்கில் வழங்கி வருகின்றன. கீழே தமிழ் பேச்சுவழக்கில் பயன்படுத்தப்படும் சில சொற்களையும் அவற்றுக்கான மலையாளச் சொற்களையும் எடுத்துக்காட்டுகளாகத் தருகிறேன்.

காது - செவி, உள்ளே - அகத்து, வெளியே - புறத்து, பக்கத்தில் - அரிகில், கூப்பிடு - விளி, வெட்கம் - நாணம், வேலை - பணி, சண்டை - பிணக்கு, பார் - நோக்கு, எப்படி - எங்ஙனெ (எங்ஙனம்)

வேறு சில அடிப்படைச் சொற்கள் தமிழல்லாதது போல் தோன்றினாலும், அவையும் தமிழ் சொற்களிலிருந்து தோன்றியவை என்பதை பழந்தமிழ் சொற்களோடு அறிமுகம் உள்ள ஒருவரால் கண்டறியமுடியும். மலையாளத்தில் நேற்று என்பதைக் குறிக்கும் இன்னலெ என்ற சொல் அதே பொருளுடைய பழந்தமிழ் சொல்லான நென்னல் என்பதன் திரிபு என்பதை ஒரு பழைய பதிவில் எழுதியிருந்தேன். இன்னொரு எடுத்துக்காட்டு தருவதென்றால் மற்ற மூன்று திசைகளையும் குறிக்க மலையாளத்தில் கிழக்கு, வடக்கு, தெக்கு என்ற சொற்கள் பயன்படுத்தப்படும் போது மேற்கு என்பதை மட்டும் "படிஞ்ஞாறு" என்று சொல்கிறார்கள். முதல் பார்வையில் அன்னியமாகத் தெரியும் இந்த சொல் "சூரியன் மறையும் திசை" என்பதைக் குறிக்கும் "படுவான்" என்ற தமிழ் சொல்லுடன் (அகராதியில் இருக்கிறது) தொடர்புடையது. படுஞாயிறு என்பதே படிஞ்ஞாறு என்று ஆகியிருக்கவேண்டும். இலங்கையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஒரு ஏரியின் கிழக்குப்பகுதியை "எழுவான்கரை" என்றும் மேற்குப்பகுதியை "படுவான்கரை" என்றும் அழைக்கிறார்கள். தெலுங்கில் மேற்கு என்பதைக் குறிக்கும் "படமதி" என்ற சொல் இதனுடன் தொடர்புடையது என்று நினைக்கிறேன்.

தமிழ் சொற்கள் மலையாளத்தில் எப்படித் திரியும் என்பதற்கான விதிகளைப் புரிந்து வைத்திருப்பதும் மலையாளத்தை வாசிக்க உதவும். பெரும்பாலும் தமிழின் வல்லின ஒலிகள் மலையாளத்தில் மென்மையாக ஒலிக்கும். வே. வேங்கடராஜுலு அவர்கள் எழுதிய "தமிழ் சொல்லமைபு" என்ற நூலிலிருந்து சில விதிகளை கீழே தருகிறேன்.

'ன்ற' ஓலி 'ன்ன' என்று மாறும்: ஒன்று-ஒன்னு, தென்றல்-தென்னல்

'ந்த' ஒலி 'ந்ந' என்று மாறும்: வந்து-வந்நு, சந்தனம்-சந்நனம்

'ங்க' ஒலி 'ங்ங' என்று மாறும்: மாங்காய்-மாங்ங, நீங்கள்-நிங்ஙள்

'ஞ்ச' ஒலி 'ஞ்ஞ' என்று மாறும்: மஞ்சு-மஞ்ஞு, கஞ்சி-கஞ்ஞி

'ந்த' ஒலி 'ஞ்ஞு' என்று மாறும்: அறிந்து-அறிஞ்ஞு, தேய்ந்து-தேய்ஞ்ஞு

'த்த' ஒலி 'ச்ச' என்று மாறும்: அடித்து-அடிச்சு, பித்தளை-பிச்சள

ஐகாரம் அகரம் ஆகும்: மலை-மல, தலை-தல, வாழை-வாழ

எண்பது ஆண்டுகளுக்கு முன்னால் தமிழகத்தில் பயன்படுத்தப்பட்ட மணிப்பிரவாள நடையை விட சற்று அதிகமான அளவுக்கு மலையாளத்தில் வடமொழிச் சொற்கள் கலந்திருக்கின்றன. மணிப்பிரவாள நடையை முழுவதுமாகப் புரிந்துக்கொள்ள முடியாதத் தமிழர்கள் கூட இன்று தமிழில் வழக்கிலிருக்கும் ஏராளமான வடமொழிச் சொற்களை மலையாளத்தில் அடையாளம் கண்டு புரிந்துக்கொள்ளமுடியும். (எ.கா: ஸந்தோஷம், ஆனந்தம், ஸ்நேகம், ப்ரேமம், இஷ்டம், விரோதம், தேஹம், திவஸம்..) தமிழில் தமிழ் இலக்கண விதிகளின் படி எழுதப்படும் பல வடமொழிச் சொற்கள் மலையாளத்தில் (மணிப்பிரவாளத்தைப் போல) எந்த மாற்றமும் இல்லாமல் அப்படியே எழுதப்படும் என்பதையும் நினைவில் வைத்திருக்கவேண்டும். (எ.கா: சுதந்திரம் - ஸ்வதந்திரம், உதாரணம்-உதாஹரணம், அட்சரம்-அக்ஷரம், சிங்கம் - ஸிம்ஹம், சுபாவம் - ஸ்வபாவம்..) அறிமுகமில்லாதவை போல் தோன்றும் பெரும்பாலான வடமொழிச் சொற்களையும் கொஞ்சம் கற்பனைத் திறனைப் பயன்படுத்தி முயன்றால் புரிந்துக்கொள்ளமுடியும். எடுத்துக்காட்டாக 'தக்ஷிணேந்திய' என்று ஒரு சொல் வருகிறது என்று வைத்துக்கொள்வோம் சொற்களின் புணர்ச்சி விதிகளை வைத்து அதை "தக்ஷிணம் + இந்திய" என்று பிரிக்கலாம். தக்ஷிணம் என்னும் சொல் தமிழில் இல்லையென்றாலும் தென்னாடுடைய சிவனை தக்ஷிணாமூர்த்தி என்று சொல்வது நினைவுக்கு வந்தால் 'தக்ஷிணேந்திய' என்பதன் பொருள் 'தென்னிந்திய' என்பது விளங்கும்.

வெங்கட்டின் எதிர்வினையை முன்வைத்து

இரண்டு நாட்களுக்கு முன் (திரை)மறைவு அரசியல் என்று ஒரு பதிவு எழுதியிருந்தேன். அதற்கு ஒரு விரிவான எதிர்வினையை வெங்கட் தன் பதிவில் எழுதியிருந்தார் . நான் எழுதியதன் மீது அவர் வைக்கும் முக்கியமான விமரிசனங்கள்:

1. என் பார்வை முழுமையாக இல்லை. என் கருத்துடன் முரண்படும் தரவுகளைத் தவற விட்டிருக்கிறேன்.

2. என்னுடைய கருத்து தவறு என்பதை சில எதிர் உதாரணங்கள் மூலம் காட்டமுடியும்.

3. சில நடிகர்கள் அரசியலில் வெல்வதற்கும், வேறு சிலர் தோற்பதற்கும் அவர்களது திறமை அல்லது திறமையின்மை தான் காரணம். ஊடகங்கள் எந்த வகையிலும் காரணமாக முடியாது. ஊடகங்களின் சக்தியை மிகையாகச் சித்தரித்து, அவர்களிடம் இல்லாத தகுதியும் திறமையும் இருப்பதாக சொல்லுவது பேனைப் பெருமாளாக்குவது போல.

*****

என் கருத்துக்கு வலு சேர்க்கும் விதமாக, என் கருத்துடன் முரண்படும் சில தரவுகளைத் தவற விட்டிருக்கிறேன் என்பதற்கு ஆதாரமாக வெங்கட் சொல்வது கீழே நீலத்தில்.

"தற்செயலாகவோ, அல்லது தன் கருத்துக்கு வலுசேர்க்கவோ வீட்டில் தெலுகு பேசும் கருணாநிதியைத் தவறவிட்டிருக்கிறார். பின்னால் ஒப்புக்கு ஜெயலலிதாவுக்கும் இந்தத் தகுதிகள் எல்லாம் உண்டு என்று சொல்லி அவரைக்கூடப் புறனடையாகத்தான் காட்டியிருக்கிறார். எம்.ஜி.ஆர், ரஜினிகாந்த், விஜயகாந்த் - மூவரையும் ஒரு அணியில் வைத்து அவர்கள் ஊடகங்களால் ரட்சிக்கப்பட்டு ஜீவித்தவர்கள் என்று சொல்லும்பொழுது அதே திரைப்பின்னணி கொண்ட ஜெயலலிதாவை வேறுவிதமாகக் காட்டியும் கருணாநிதியை முற்றிலும் சுயதகுதிகளாலும் கடின உழைப்பாலும் (அல்லது ஊடகங்களின் சதியைத் தகர்த்தெரிந்து) முன்வந்தவராக உணர்த்தியிருப்பது அவரது பார்வையின் முழுமையின்மையைக் காட்டுகிறது."

"தமிழைத் தாய்மொழியாகக் கொள்ளாததால்தான் இந்தி எதிர்ப்பில் மும்மூர்த்திகளால் தீவிரம் காட்டமுடியாது என்று சொல்லும்பொழுது எதிரிடையாகக் காட்டப்பட்டிருக்கும் கருணாநிதிக்கும் அதே வேற்றுமொழிப் பின்னணியிருப்பது முரணாகத் தோன்றவில்லை?"

"அண்ணா, கருணாநிதி, எம்.ஜி.ஆர். ஜெயலலிதா என்று ஒரு தொகுப்பான திரை அரசியல் பார்வையைத் தவறவிட்டிருக்கிறார். அப்படியிருந்தால் மாநிலவாதம், இந்தி எதிர்ப்பு போன்றவற்றை ஒரே தட்டில் வைக்கமுடியாது."


"வீட்டில் தெலுகு பேசும் கருணாநிதி" என்பது எனக்கு செய்தி. குறைந்தபட்சம் நான் பயன்படுத்தியிருந்த 'சொல்லப்படுகிற/அறியப்படுகிற' போன்ற அடவுகளைக் கூட வெங்கட் பயன்படுத்தவில்லை ;-) கருணாநிதி வீட்டில் தெலுங்கு பேசுபவர் என்பதை சர்வ நிச்சயமாகவே சொல்கிறார். இதற்கு ஏதாவது ஆதாரம் உண்டா? எம்.ஜி.ஆர், ரஜினி, விஜய்காந்த் ஆகியோரது தாய்மொழி தமிழ் அல்ல என்பது ஊரறிந்த, வெகுஜன ஊடகங்களில் பேசப்பட்ட, அவர்களால் இதுவரை மறுக்கப்படாத விஷயம். ஆனால் கருணாநிதியின் தாய்மொழி தெலுங்கு என்பது அப்படியா? வெங்கட் சில பத்திகள் தாண்டி கன்னடியரையும், மலையாளியையும் நாகரீகமற்ற முறையில் அவர்களது பிறப்புப் பின்னணியை முன்னிருத்தி வசைபாடியவர் கலைஞர் என்கிறார். இப்படிப்பட்ட பிரச்சாரத்தை மேற்கொள்பவர் ஒரு தெலுங்கர் என்றுத் தெரிந்தால் எதிராளிகள் அதைச் சுட்டிக்காட்டாமல் இருந்திருப்பார்களா? நாயுடுக்கள் தெலுங்கு பேசுவதற்கான வரலாற்றுக் காரணங்கள் நமக்குத் தெரியும். காவிரிக்கரை இசைவேளாளர்கள் ஏன் தெலுங்குப் பேசப்போகிறார்கள்? (கருணாநிதி தமிழர் அல்ல என்று நிறுவ சிலர் கண்டிப்பாக முனைந்திருப்பார்கள் என்பது எனக்குத் தெரியும். ஆனால் அவர்களது நம்பகத்தன்மையும் அவர்கள் சொல்வது எந்த அளவுக்கு ஏற்றுக்கொள்ளப்படுகிறது என்பதும் முக்கியம். சில வாரங்களுக்கு முன்பு அண்ணாவின் தாயார் பெயர் பங்காரம்மா என்பதை ஆதாரமாகக் காட்டி அவரது பூர்வீகமும் தெலுங்கு தான் என்று திண்ணையில் மலர்மன்னன் எழுதினார். ஆனால் தமிழ்நாட்டவரில் 99 விழுக்காடு பேருக்கு மேல் அண்ணா தமிழர் என்று தான் சொல்வார்கள். ஆனால் எம்.ஜி.ஆர், ரஜினி, விஜய்காந்த் விஷயம் அப்படியல்ல.)

அடுத்து, ஜெயலலிதாவுக்கும் இந்தத் தகுதிகள் எல்லாம் உண்டு என்று "ஒப்புக்கு" போகிற போக்கில் குறிப்பிட்டதாகச் சொல்வது பற்றி. உண்மையில் எழுபதுகளில் எம்.ஜி.ஆர், எண்பதுகளில் ஜெயலலிதா, தொண்ணூறுகளில் ரஜினி, இப்போது விஜய்காந்த் என்று ஒரு வரிசையை நான் உருவாக்கியிருந்தால் அது என் கருத்துக்கு வலுசேர்க்கத்தானே செய்யும்? பின் ஏன் அவரைப் பட்டியலில் சேர்க்கவில்லை? அந்தக் கட்டுரையிலேயே சொல்லியிருக்கிறேன். மற்றவர்களுடன் ஒப்பிடுகையில் ஜெயலலிதாவின் அரசியல் வளர்ச்சியில் ஊடகங்களின் பங்கு குறைவானது என்று நான் கருதுவது தான் காரணம். ஜெயலலிதாவை வளர்த்துவிட்டது ஊடகங்களல்ல, எம்.ஜி.ஆர். பத்து ஆண்டுகளாக தன்னுடன் இருந்த இரண்டாம் நிலை தலைவர்களையெல்லாம் விட்டுவிட்டு எம்.ஜி.ஆர் புதிதாக வந்த ஜெயலலிதாவைக் கட்சியில் முதன்மைப்படுத்தினார். எம்.ஜி.ஆர் மறைவுக்குப் பின், ஓரிரு வருடங்கள் கடுமையாகப் போராடிய பிறகு, ஏற்கனவே நன்கு வளர்ந்திருந்தக் கட்சியை ஜெயலலிதா கைப்பற்றினார். அந்த வகையில் அவர் மற்றவர்களிடமிருந்து வேறுபடுவதால் தான் நான் ஜெயலலிதாவைக் குறித்து அதிகம் பேசவில்லை.

அண்ணா, கருணாநிதி ஆகியோரது அரசியலைத் திரை அரசியல் என்று வகைப்படுத்துவது எந்த அளவுக்கு பொருத்தமானது? அப்படியே அவர்களை நடிகர்களுடன் பட்டியலில் சேர்த்தாலும், மாநிலவாதம், இந்தி எதிர்ப்பு போன்றவற்றை ஒரே தட்டில் ஏன் வைக்கமுடியாது? பேஷாக வைக்கலாமே. தமிழ்நாட்டைச் சேர்ந்த அண்ணாவும் கருணாநிதியும் இந்தி எதிர்ப்பு, மாநிலவாதம் பேசினார்கள், வெளிமாநிலங்களை சேர்ந்த மற்ற இருவரும் அப்படி செய்யவில்லை என்று சொல்ல எவ்வளவு நேரமாகும்?

****

என்னுடைய கருத்தை தவறு என்று காட்டும் எதிர் உதாரணங்களாக வெங்கட் கூறுவது:

"ஜெகத்-தின் கண்ணோட்டத்தில் பார்த்தால் அவர்கள் அரசியலுக்குள் நுழைந்த காலகட்டத்தில் மிகப் பிரபலமாக இருந்த பாக்கியராஜ், டி.ராஜேந்தர் இருவரையும் எதிருதாரணமாகக் காட்ட முடியும். தமிழகத்தின் பெரும்பான்மை சாதிகளின் பின்னணி இல்லாமலிருந்தபொழுதும், ஆத்திக சிகாமணிகளாக இருந்தபொழுந்தும் இவர்களை ஊடகம் வளர்த்தெடுக்கவில்லை (அ) ஊடகத்தால் இயலாமற்போயிற்று."

பாக்கியராஜும், ராஜேந்தரும் எப்படி எதிர் உதாரணம் ஆவார்கள்? அவர்கள் தமிழல்லாத மொழியைத் தாய்மொழியாகக் கொண்டவர்களா என்றுத் தெரியவில்லை. (சில குறிப்பிட்ட அச்சு ஊடகங்களுக்குத் தமிழ் தேசியவாதத்தைக் குறித்து இருக்கும் அச்சத்தைப் பார்க்கும்போது மேலே வெங்கட் குறிப்பிட்டிருக்கும் இரண்டு 'தகுதிகளை' விட இது முக்கியமான ஒன்று என்றே சொல்லவேண்டும்.) அப்படியே அவர்களுக்கு நான் குறிப்பிட்ட 'தகுதிகள்' அனைத்தும் இருந்தும் ஊடகங்கள் அவர்களை வளர்த்தெடுக்கவில்லை என்று வைத்துக்கொண்டால் கூட தர்க்கப்படி நான் சொன்னது தவறாகாது. பன்னிரண்டாம் வகுப்பில் தேர்ச்சிப் பெற்றவர்களைத் தான் மருத்துவக்கல்லூரிகள் சேர்த்துக்கொள்ளும் என்று நான் சொன்னால், பன்னிரண்டாம் வகுப்பில் தேர்ச்சிப் பெற்றும் மருத்துவக்கல்லூரியில் சேர்த்துக்கொள்ளப்படாத சிலரை நீங்கள் "எதிர் உதாரணமாகக்" காட்டமுடியாது. பால் கண்டிப்பாக வெளுத்திருக்கும். ஆனால் வெளுத்ததெல்லாம் பால் அல்ல.

சில ஆண்டுகளுக்கு முன் ரஜினியை ஆதரித்த, இப்போது விஜய்காந்தை ஆதரிக்கும் தினமலர் பாக்கியராஜ் தனிக்கட்சித் தொடங்கியபோது அவரைக் கடுமையாகத் தாக்கியது. "எம்ஜிஆர் மக்கள் முன்னேற்றக் கழகம்" என்ற அவரது கட்சிப்பெயரை "எம"முக என்று கிண்டலடிப்பது, அவரை எம நடிகர் என்று குறிப்பிடுவது போன்ற மலிவான நையாண்டிகளை தினமலர்/வாரமலரில் பார்த்த நினைவிருக்கிறது. பாக்கியராஜுக்குக் கிடைக்காத தினமலரின் ஆதரவு விஜய்காந்துக்கு ஏன் கிடைக்கிறது?

*****

நான் நடிகர்களின் வெற்றித் தோல்விக்கு அவர்களது திறமை அல்லது திறமையின்மையைக் காரணமாக ஏற்க மறுத்து, ஊடகங்களை மட்டுமே காரணமாகச் சொல்வது போல் புரிந்துக்கொண்டு வெங்கட் எழுதியிருக்கிறார். உண்மையில் அப்படிச் சொல்லும் அளவுக்கு நான் முட்டாளில்லை. "தமிழக அரசியலில் நடிகர்கள் பெறும் முக்கியத்துவத்துக்கு பாமரத் தமிழர்களின் திரைப்பட வெறி மட்டும் காரணமல்ல. ஊடகங்களின் செயற்பாடுகளும் ஒரு முக்கிய காரணம்." என்று எழுதியிருக்கும் போதே ஒன்றுக்கு மேற்பட்டக் காரணங்கள் இருப்பதை நான் ஏற்றுக்கொள்கிறேன் என்று தானே அர்த்தம்? சில வருடங்களுக்கு முன் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோர் மீது தமிழர்களுக்கு இருக்கும் ஈர்ப்புக்கு அவர்களது தோற்றத்தையும் நிறத்தையும் ஒரு காரணமாக முன்வைத்து வாசந்தி இந்தியா டுடேயில் எழுதியிருந்தார். அதற்காக அவர்களது மற்றத் தகுதிகளை அவர் மறுக்கிறார் என்றாகிவிடுமா? ஒரு நடிகர் அரசியலில் பெறும் முக்கியத்துவத்துக்குப் பின்னால் எத்தனையோ காரணங்கள் இருக்கக்கூடும். ஊடக ஆதரவை அவற்றில் ஒன்றாக நான் முன்வைக்கிறேன். அவ்வளவே.

வெங்கட் சொல்லியிருப்பதைப் போல ஊடகங்கள் "ஐம்பது வருடங்களாக ஒருவித மூர்க்கத்தனமான துல்லியத்துடன் தமிழகத்தின் அரசியல்வாதிகளை வெள்ளித்திரையிலிருந்து கண்டெடுத்து அவர்களை மக்கள் மனதில் விதைத்து பின்னர் கோட்டையேற்றுவதாக" நானும் நம்பவில்லை. திரையுலகிலிருந்து பலரும் முதல்வர் கனவுடன் அரசியலில் நுழைகிறார்கள் அல்லது நுழைவதற்கு திட்டமிடுகிறார்கள். ஜெயகாந்தன் சொன்னது போல் இவர்களில் குதிரைகளும் உண்டு, கழுதைகளும் உண்டு, கோவேறுக் கழுதைகளும் உண்டு. இவற்றில் எந்த மாதிரியானக் குதிரைகளின் மீது சில ஊடகங்கள் பந்தயம் கட்டுகின்றன என்றுப் பார்த்தால் அவற்றிடையே சில ஒற்றுமைகள் இருப்பது தெரிகிறது. அதைத் தான் சொல்லியிருக்கிறேன். மற்றபடி இவர்கள் பந்தயம் கட்டி என்ன தான் "கமான், கமான்" என்றுக் கத்தினாலும் ஓடத் தெம்பில்லாதக் குதிரைகள் வெற்றிபெறாது என்பது எனக்குத் தெரியும்.

ராமசேஷனின் கதை

[எதிர்பாராமல் ஏற்பட்டுவிட்ட சில வேலை அழுத்தங்கள் காரணமாக நேற்று எழுதுவதாகச் சொல்லியிருந்த திரை/ஊடக அரசியல் குறித்தக் கட்டுரையின் தொடர்ச்சியை எழுத முடியவில்லை. அதற்குப் பதிலாக முன்பே எழுதிவைத்திருந்த இந்த கட்டுரையை இடுகிறேன்.]

இணையத்தில் தமிழ்ப் பக்கங்களை மேய்வதால் விளையும் விரல் விட்டு எண்ணக்கூடிய நற்பயன்களில் ஒன்று தமிழில் உள்ள நல்ல நாவல்களின் பெயர்களை எல்லாம் ஓரளவுக்குத் தெரிந்து வைத்திருப்பது. நூலகத்தில் தமிழ் வரிசையில் இலக்கின்றித் தேடிக்கொண்டிருக்கும் போது கண்ணில் படும் ஒரு புத்தகம் ஏதாவது வலைப்பதிவிலோ இணைய இதழிலோ சிலாகிக்கப்பட்டது நினைவுக்கு வந்தால் ஒரு ஐந்து நிமிடம் புரட்டிப் பார்த்துவிட்டுப் பெரும்பாலும் வீட்டிற்கு எடுத்துவருவேன். அண்மையில் இப்படி எடுத்துவந்தது ஆதவனுடைய "என் பெயர் ராமசேஷன்".

இந்த நாவலைப் பற்றிய ஒரு விவரிப்பை இங்கே பதிவு செய்யலாம் என்று தோன்றியது. நான் எடுத்துவந்த பிரதியில் கடைசிப் பத்துப் பக்கங்கள் இல்லை என்பது தாமதமாகத் தான் தெரிந்தது. ஏற்கனவே படித்துவிட்டவர்கள் நாவலின் முடிவைக் குறித்து ஒரு பின்னூட்டம் எழுதினால் நூலகத்திற்கு போய் இன்னொரு பிரதி இருக்கிறதா என்றுத் தேடும் வேலை எனக்கு மிச்சமாகும்.

இது "ஒரு நகர்ப்புற மத்தியதர இளைஞனின் கண்களின் வழியே நவீன வாழ்நிலையின் பாசாங்குகளும் முகமூடிகளும் வேட்கைகளும் சித்தரிக்கப்படும்" நாவல் என்று பின்னட்டைச் சொல்கிறது. எழுபதுகளில் எழுதப்பட்ட இந்த நாவலில் அண்மைக்கால நாவல்களைப் போலப் பின்நவீனத்துவ வாசனை ஏதும் இல்லை. பல்வேறு நிலைகளையும், குணாதிசயங்களையும் பிரதிநிதிக்கும், ஒன்றோடொன்று முரண்படும் பாத்திரங்களை உருவாக்கி அவற்றைக் கதைவெளியில் உலவவிட்டு அதன்மூலம் எழுத்தாளன் தான் சொல்ல விரும்புவதை எல்லாம் "விளக்கும்" வழமையான யுத்தியே இங்குக் கையாளப்பட்டிருக்கிறது. நாவல் முழுக்க எதிர் எதிர் நிலைகளில் இருக்கும் கதைமாந்தர்களிடையே உள்ள முரண்கள் உளவியல் ரீதியாக அலசப்படுகிறது. குறிப்பாக,

நடுத்தட்டு (ராமசேஷன் குடும்பம்) - மேல்தட்டு (ராவ் குடும்பம்)
மரபு/மதம் சார்ந்த வாழ்வுமுறை (ராமசேஷனின் அப்பா) - நவீன வாழ்வுமுறை (பெரியப்பா)
பழமைவாத/சராசரிப் பெண்கள் (ராமசேஷனின் அம்மா, புரொபசரின் மனைவி) - நவீன / அறிவு ஜீவிப் பெண்கள் (பிரேமா, பெரியம்மா)

நாவலின் தொடக்கத்தில் ராமசேஷனின் குடும்பச் சூழல் விவரிக்கப்படுகிறது. எல்லாராலும் பந்தாடப்படும் ஒரு சம்பிரதாயப் பிச்சு மற்றும் கோழை என்று அறிமுகப்படுத்தப்படும் அப்பா "இயற்கையோடியைந்த வாழ்க்கைமுறை, மதமும் அனுஷ்டானமும் சிறப்பிடம் பெறும் கல்வி முறை, பெண்களுக்கு அதிக சுதந்திரம் கொடுப்பதால் நேரும் ஆபத்துக்கள்" போன்ற சில விஷயங்களில் உறுதியானக் கருத்துக்கள் கொண்டவர். தன் வீடு மற்றும் வேலையிடத்தில் உள்ள அழுத்தங்களைத் தாங்க முடியாமல் ஒரு கட்டத்தில் நகரில் உள்ள வெவ்வேறு பூங்காக்களுக்குச் சென்று ஏதாவதொரு மரத்தடியில் படுத்துக்கொள்ளத் தொடங்குகிறார். ராமசேஷனின் அம்மா "ஏதோ ஒரு வேஷத்தை ஒவ்வொரு நாளும் அணிந்துக்கொண்டு அதை உண்மையென்று ஆவேசத்துடன் நம்புபவள்."

"அந்தந்த தினத்து அதிருப்தியின் பரிமாணத்தை ஒட்டி, அவளுடைய அன்றைய வேஷம் அமையும். ஓரளவு இது அவள் முந்தின தினம் சந்தித்த நபரையும் பொறுத்தது. முந்தின தினம் அவள் ஒரு ஐ.ஏ.எஸ் ஆபிசரின் 'ராங்கி பிடித்த' (அவளுக்குப் புலப்பட்டதுபோல) போஸ்ட் கிராஜுவேட் மனைவியைச் சந்தித்திருந்தால், அதற்கடுத்த நாள் அவள் ஒரு அ-இன்டலெக்சுவலாக, பால்காரி, வேலைக்காரியாக, படிப்பினால் களங்கப்படாத தூய பிறவியாக விளங்குவாள். முந்தின நாள் தன்னைவிட நகைகளும் புடவைகளும் அதிகமுள்ளவளும், இவற்றைப் பற்றிப் பீற்றிக்கொண்டவளுமான ஒரு மாமியைச் சந்தித்திருந்தால், அடுத்த நாள் அவள் ஒரு இன்டலெக்சுவலாக மாறி நகை, புடவை என்ற மாயைகளில் உழலும் கிணற்றுத் தவளைகளை விளாசுவாள்."

ராமசேஷன் வீட்டு மனிதர்கள் - குறிப்பாகப் பெண்கள் - நுட்பமான முறையில் மற்றவர்களைக் காயப்படுத்துவதைப் பற்றிய விவரிப்புகள் நாவலில் நிறைய உள்ளன.

"நான் இப்படிக் கூச்சலிட்டபோது அப்பாவும் அதே அறையில்தான் இருந்தார். அவர் எதுவுமே காதில் விழாதது போல பூணூலால் முதுகைச் சொறிந்துகொண்டு சுவரிலிருந்த காலண்டர் எதிரே போய் நின்று அதை உற்றுப் பார்க்கத் தொடங்கினார். 'எப்படி சத்தம் போடறான் பார்த்தேளா? காலேஜுக்குப் போகிறானோல்லியா.. என்னையும் உங்களையும் மாதிரியா?' என்று சுருதியை மாற்றிக்கொண்டு அம்மா தன் கோட்டைக்குள் (சமையல்-கம்-பூஜை அறை) நுழைந்தாள். அதாவது இன்டலெக்சுவல் ரீதியாக அவளும் அப்பாவும் ஒன்றாம்! அப்பாவுக்கு இதைவிட வேறென்ன அவமானம் வேண்டும்? காலேஜுக்குப் போயிராத அவரை இவ்வாறு நுட்பமாக அவமதித்ததன் மூலம் எனக்கு ஒரு குற்ற உணர்ச்சியை அளிப்பதிலும் அவள் வெற்றியடைந்துவிட்டாள். ஒரு பாவமுமறியாத அவர் எங்கள் போரில் காயமடைய நேர்ந்ததே என்ற குற்ற உணர்ச்சி."

இது கணவனை இழந்து தம்பி வீட்டில் இருக்கும் ராமசேஷனின் அத்தை மற்றும் அவன் அம்மா ஆகியோரிடையே நிலவும் பனிப்போர் குறித்து:

"என் அம்மா சுறுசுறுப்பாக இருக்கும் நேரங்களில் அத்தைக்குத் தளர்ச்சியாகவும், அம்மா தளர்ச்சியாக இருக்கும் நேரங்களில் அத்தைக்குச் சுறுசுறுப்பாகவும் இருக்கும். அம்மா தூக்கத்திலோ ஒரு பக்கத்து வீட்டு மாமியுடன் சம்பாஷணையிலோ ஒரு பகல் நேரத்தைக் கழிக்க முற்பட்டால், அத்தை அன்றைக்கு நிச்சயம் ரவையைச் சலித்து வறுப்பாள் அல்லது வடாம் இட்டு உலர்த்துவாள், அல்லது காலியாய்ப் போன இன்ஸ்டண்ட் காஃபி, ஹார்லிக்ஸ் குப்பிகளை மறு உபயோகத்துக்காகக் கழுவி வைக்கத் தொடங்குவாள், அல்லது நாலு நாட்களுக்கு வேண்டிய அரிசியைச் சேர்ந்தாற் போலப் பொறுக்க உட்காருவாள். அம்மா இதெல்லாம் தன் குற்ற உணர்ச்சியைத் தூண்டுவதற்காகத்தான் என்பதை உணர்ந்து நறநறவென்று பற்களைக் கடித்துக்கொள்வாள்."

இப்படி ஒரு சூழலில் வளரும் ராமசேஷனுக்கு ராவ் என்னும் பணக்கார கல்லூரி நண்பன் மூலம் ஒரு மேல்தட்டுக் குடும்பத்தின் வாழ்வுமுறையை அருகிலிருந்துப் பார்க்கும் வாய்ப்புக் கிடைக்கிறது. ராவின் தங்கை மாலாவுடன் அவனுக்கு பாலியல் ரீதியான நெருக்கம் ஏற்பட்டு விரைவிலேயே அந்த உறவு முடிவுக்கு வருகிறது.

"அவளுடைய கேள்விகள் பலவற்றில் 'என்னுடைய கீழ்மட்டத்துச் சூழலை' நாசூக்காகச் சீண்டுகிற பாவம் தொனிப்பதாக எனக்குத் தோன்றும். அதாவது என் எல்லைகள் ராகம், தாளம், பல்லவிக்குள்ளும் சட்னி சாம்பாருக்குள்ளும் அடங்கிவிடுகிறவை. அவள் தொட்டிலில் கிடந்தபோதே சாச்சாச்சாவுக்குக் காலை உதைத்தவள், ஃப்ரூட் ஜெல்லியை நக்கினவள்... நான் இதேபோல, வேறு துறைகளில் அவளைவிட அதிகமாக எனக்கிருந்த பொது அறிவைப் பயன்படுத்தி அவளை மடக்க முயன்றால், அவள் உடனே தளுக்காக சம்பாஷணைத் தொனியை மாற்றி என்னை ஒரு dry professional type ஆக உணரச் செய்வாள். அப்பாவுடன் வெளியே போய்விட்டு வந்த குழந்தை தான் கண்ட அதிசயங்களை விவரிக்கும்போது அம்மா அதனிடம் காட்டுவது போன்ற ஒர் பாசாங்கு ஆர்வத்தையும் பரபரப்பையும் காட்டி, 'என் கண்ணு!' என்று தட்டிக் கொடுப்பாள். குழந்தைத்தனமானவள், பக்குவம் பெறாதவள் என்று நான் அவளைச் சொன்னால் உடனே தாத்தா, ஹாஸ்ய உணர்ச்சியில்லாத ஜடம், என்று அவள் என்னைச் சொல்லுவாள். இதெல்லாம் எனக்குச் சலித்துப் போகத் தொடங்கியிருந்தது."

இதற்குள் கல்லூரியில் காஸனோவா என்று பெயெரெடுத்துவிட்ட ராமசேஷன் அறிவுஜீவி காதலியைத் தேடும் ஒரு நண்பனுக்கு சொல்லும் மதியுரை:

"உடலுறவு பற்றிய உன்னுடைய குற்ற உணர்ச்சியிலிருந்து தப்பித்துக்கொள்வதற்காக, அல்லது நீ புழங்கும் சூழ்நிலையில் ஆரோக்கியமான ஸெக்ஸ் அனுபவங்களுக்கான வாய்ப்புகள் இல்லாததையே ஒர் virtueவாகக் காண்கிற முயற்சியில், ஆண்-பெண் இன்டலெக்சுவல் பரிமாற்றங்களைப் பற்றிய பெரிதுப்படுத்தப்பட்ட கற்பனைகளில் நீ திளைக்கிறாய் - உன்னுடைய தரத்துக்கு எந்தப் பெண்ணும் வராதது போலவும், எனவே உன் இயலாமை மன்னிக்கப்படுவது போலவும்! இது உன்னை நீயே ஏமாற்றிக்கொள்வதே தவிர வேறில்லை...லுக், உன்னை ஒரு பெண் நேசிக்க வேண்டுமென்றால் உனக்கு எஸ்கிமோக்களைப் பற்றியும் சூரியப் பொட்டுகள் பற்றியும் தெரியுமென்று அவளிடம் நிரூபிக்க முயல்வதால் எந்தப் பிரயோஜனமுமில்லை... பேசாமல் ஒரு தனியிடத்துக்கு அவளை எப்படியாவது அழைத்திச் சென்று, எனக்கு உன்னை ரொம்பப் பிடித்திருக்கிறது, எனக்கு உன்னைத் தவிர இந்த உலகத்தில் வேறெதுவும் வேண்டியதில்லை என்று சொல்லு. நீ ரொம்ப அழகாயிருக்கிறாய், உன்னுடைய எல்லாமே அழகாயிருக்கிறது என்று அவளுடைய மாரை அமுக்கு..."

பிறகு ராமசேஷன் தன் 'சிமோன் டி புவா'வை சந்திக்கிறான். "ஆசாரமான மத்தியதரப் பிராம்மணக் குடும்பத்தில் பிறந்தவளாயிருந்தும் அச்சூழலின் சின்னத்தனம், போலித்தனம், அசட்டுத்தனம் ஆகியவற்றுக்கப்பால் மன வளர்ச்சியடைந்து விடுதலையடைந்துள்ள இன்டலெக்சுவலான" பிரேமா என்ற கல்லூரித் தோழியுடன் நெருக்கமாகிறான். விரைவிலேயே அவனுக்கு அந்த உறவும் சலிக்கத் தொடங்குகிறது.

"அவளுடைய கறுப்பு நிறமும் உயரக் குறையும் அவளுக்கு ஒர் இன்ஸெக்யூரிட்டியைக் கொடுத்தது. மரபுக்கெதிரான அவளுடைய பாய்ச்சல்களுக்கு இந்த இன்ஸெக்யூரிட்டிதான் காரணமென்பதைப் பின்னால் நான் புரிந்துக்கொண்டு அவள்மீது அனுதாபப்படக் கற்றுக்கொண்டேன். ஆனால் அந்த ஆரம்ப நாட்களில், ஏற்கனவே சொன்னதுபோல, சராசரித் தமிழ் பிராமணர்களின் மீது அவள் காட்டிய தீவிர வெறுப்பையும், பொழிந்த கனமான வசைமாரியையும் நான் புரிந்துக்கொள்ள முடியாமல் திணறினேன். பௌதிக ஆகிருதியையும் தோற்றத்தையுமே செலாவணியாகக் கொண்ட சராசரிப் பெண் வர்க்கம், சராசரி ஆண் வர்க்கம், இரண்டிடையேயும் தான் மிகக் குறைந்த மதிப்பெண்களே பெறுவோமென்பதை உணர்ந்து, தான் இவர்களால் ஒதுக்கப்படுமுன் இவர்களைத் தான் ஒதுக்கும் உபாயமாகவே (அதாவது ஒரு பழிப்புக் காட்டலாக) அவள் தன் இன்டலெக்சுவல் திறன்களை ஆவேசமாக வலியுறுத்தவும் தூக்கலான மோஸ்தர்களிலும் நிறங்களிலும் அனாசாரமான உடைகளை அணியவும் செய்தாளென்பதை அப்போது உணராத நான், அதாவது இவை அவளுடைய தன்னைப் பற்றிய பிம்பத்துக்கு (அல்லது ஈகோவுக்கு) எவ்வளவு நெருக்கமானவையென்பதை உணராத நான், இவற்றை அவளுடைய துடுக்கான சேஷ்டைகளாக நினைத்து இந்தத் துடுக்குத்தனத்தை ஆரவாரமாக ரசித்தேன், என்னுடைய நுட்பமான ரசனையின் நிரூபணமாக. என் ரசிப்பை தன்னுடைய 'முரண்படுகிற இன்டலெக்சுவல்-கம்-சமூக விமரிசகை' பிம்பத்தின் அங்கீகாரமாகவே எடுத்துக்கொண்ட அவள், இந்தப் பிம்பத்தை மேன்மேலும் வலியுறுத்தியவாறு இருந்தாள், எனக்கு அது சலிக்கத் தொடங்கும் வரை."

ஆண்- பெண் இடையே உள்ள அறிவுரீதியான பொருத்தம் அல்லது பொருத்தமின்மை பல இடங்களில் அலசப்படுகிறது. ராமசேஷனின் பெரியப்பா தோழமையற்றத் திருமணம் குறித்து அவனை எச்சரிக்கிறார்: "ஸோ ராம், beware of a marriage without companionship." அறிவார்ந்த தளங்களில் இயங்கும் - அல்லது இயங்குவதாகக் காட்டிக்கொள்ளும் - கணவன், அவற்றில் சற்றும் நாட்டமில்லாத - அவன் பார்வையில் அசட்டுத்தனமாகத் தெரியும் - மனைவி, அதன் காரணமாக திருமண வாழ்வில் ஏற்படும் கசப்பு என்று இந்த சிக்கல் எத்தனையோ எழுத்தாளர்களால் கையாளப்பட்ட ஒன்றுதான். ஒருவேளை எழுத்தாளர்களுக்கு நிஜவாழ்வில் இத்தகைய இணைகளைப் பார்க்கும் வாய்ப்பு மற்றவர்களைவிட அதிகமாகக் கிட்டுகிறது போலும். ஜெயமோகன் ஒரு கட்டுரையில் எழுதியிருந்தார்: "இலக்கிய அன்பர்களின் மனைவிகள் வீட்டுக்கு வரும் எழுத்தாளர்களை கஞ்சா விற்பவர்களைப் போல் பார்ப்பது தமிழ்நாட்டில் சகஜம்."

இந்த நாவலில் அறிவுத்தேடலில் அல்லது அதுபோன்ற பாசாங்குகளில் ஈடுபட்டிருக்கும் கல்லூரி மாணவர்களுக்கு வழிகாட்டிகளாக இருக்கும் இரண்டு பாத்திரங்களுமே (தன்னை "சார்த்தரின் வாரிசாகக்" காட்டிக்கொள்ளும் ப்ரொபசர் மற்றும் இலக்கிய விமரிசகர் ராமபத்திரன்) தோழமையற்றத் திருமணத்தின் காரணமாக அவதிப்படுபவர்களாக இருக்கிறார்கள்.

"ப்ரொபசரின் மனைவி ஒரு சராசரித் தமிழ்ப் பிராமண மனைவி - 'ஆம்படையாள்': இந்த நூற்றாண்டின் நாகரிக முன்னேற்றத்தின் மேலோட்டமான பாதிப்புகள், ஒரு பெரிய நகரத்தின் cosmopolitanism பல வருடங்களாக அவள் மேல் நெருடி நெருடி ஏற்படுத்தியுள்ள பாதிப்புகள் ஆகியவற்றினால் சற்றே புடமிடப்பட்டிருந்தாலும், இந்த coatingஐச் சுரண்டிப் பார்த்தால் தன்னுடைய பாட்டியிடமிருந்தோ அந்தப் பாட்டியின் பாட்டியிடமிருந்தோ அதிகம் வேறுபடாதவள்."

"...ஒரு தடவை மூர்த்தியுடன் ராமபத்ரன் வீட்டுக்குப் போயிருந்தபோது அவருடைய மனைவியின் 'லெவலை'ப் பற்றி பிரேமா சொன்னது நிஜந்தான் என்பதை உணர்ந்தேன். எனக்கு அவள் மீதும் ராமபத்ரன் மீதும் மிகவும் அனுதாபமாக இருந்தது. தான் தன் மனைவியின் சராசரித்தனத்தின் கூட்டாளி இல்லை, தான் அவளைவிட நாசூக்கான ருசிகளும் தேட்டங்களும் உள்ளவன் என்று சதா நிரூபித்தவண்ணமிருப்பது ராமபத்ரனுக்கு ஒரு obsessionஆக ஆகியிருக்க வேண்டும்..."

மேலே உள்ள மேற்கோள்களிலிருந்து ஆதவனின் நடையைப் பற்றிய ஒரு புரிதலைப் பெறமுடியும். நாவல் முழுவதும் ஒரு லேசான ரசிக்கத்தக்க எள்ளல் தொடர்ந்து வருகிறது. "நகர்புற மத்தியதர வர்க்கத்தை" பற்றிய கதை என்பதாலோ என்னவோ எழுத்தில் அதீதமான ஆங்கிலக் கலப்பு. ஆதவன் அதிர்ச்சி மதிப்பீட்டுக்காக எழுதக்கூடியவர் என்ற குற்றச்சாட்டில் உண்மை இருக்கிறதோ என்று எண்ணவைக்கும் சிலபகுதிகளும் நாவலில் உண்டு.

நாவலைப் படித்து முடிக்கையில் தான் ஒரு விஷயத்தை கவனித்தேன். கதையில் வரும் அனைத்து பாத்திரங்களும் - ஓரிரு முறை அறைக்கு தேநீர் எடுத்துவரும் நாயர் பையன் நீங்கலாக, ராமசேஷனின் நண்பர்கள், காதலிகள், வழிகாட்டிகள் என்று அனைவருமே அவனது சமூகத்தை சேர்ந்தவர்களாகவே அடையாளப்படுத்தப்பட்டிருக்கிறார்கள். கொஞ்சம் யோசித்தபோது சிறுவயதில் படித்த பல ஆனந்தவிகடன் தொடர்கதைகள், பாலகுமாரனின் நாவல்கள் எல்லாமே இப்படித்தான் இருந்தன என்பதை உணர்ந்தேன். தலித் இலக்கியம், கரிசல் இலக்கியம் போல ஏன் இவையெல்லாம் அக்ரகார இலக்கியம் என்று கு(றி/று)க்கப்படவில்லை? ஆனால் இதை நான் ஒரு குறையாகக் காணவில்லை. பெரும்பாலான எழுத்தாளர்களால் தான் பழகி அறிந்த மனிதர்களையும் அவர்களது வாழ்வையும் பற்றி மட்டுமே யதார்த்தமாக எழுதமுடியும். நான் ஜெயமோகனின் படைப்புகளை விரும்புவதற்கு பல்வேறு சமூகப் பின்னணிகளைக் கொண்ட பாத்திரங்களை வழக்கமான பொதுமைப்படுத்தல்களைத் தாண்டி துல்லியமாக சித்தரிக்கும் அவரது ஆற்றலும் ஒரு காரணம். ஜெயமோகனின் நாவலில் அய்யரும் வருவார், கண்டன் புலையனும் வருவார். நாடார்களும் வருவார்கள், நாயர்களும் வருவார்கள். ஒருவேளை ஜெயமோகனின் சுற்றம் பல தலைமுறைகளாக ஊரோடு கலக்காமல் ஒதுங்கி தனியே வாழ்ந்திருந்தால் அவரும் காரணவர்களையும் கடலை பிரதமனையும் பற்றி மட்டுமே எழுதிக்கொண்டு இருந்திருப்பாரோ என்னவோ.

ராமசேஷனின் சமூகத்துக்கு வெளியே இருப்பவர்கள் அவனது கதையில் தான் வரவில்லை. அவனது மொழியில் வருகிறார்கள். நாவலில் இருந்து சில வரிகள் கீழே. இந்த வரிகள் ஏதோ ஒரு பாத்திரம் பேசுவதுபோல் அமைந்தவை அல்ல. மாறாக 'இன்டலெக்சுவலான' கதைசொல்லியின் மொழி இது.

"ராவின் செருப்பு ரிப்பேராயிருந்தால் இவன்தான் சக்கிலியனைக் கூப்பிடுவான், பேரம் பேசுவான்."

"முந்தா நாள் வேலைக்காரி தோட்டிச்சியிடம் சொல்கிறாளாம், 'ஐயா நல்லவரு, அம்மாதான் கொஞ்சம் ஒருமாதிரி' என்று."

"ராமபத்ரன் உடனே குளித்துவிட்டுக் கோயிலுக்குப் போய்கொண்டிருக்கும் பழங்காலத்துப் பிராமணரொருவர் எதிரே வரும் பறையனை எப்படிப் பார்த்திருப்பாரோ அப்படி என்னைப் பார்த்துவிட்டு..."


ம்... இலக்கியம் படிக்கும்போது சமூக/அரசியல் தலைச்சுமைகளை இறக்கிவைத்துவிட்டு தான் படிக்கவேண்டும் போல.

*****

ஒரு நாவலை படித்து முடித்தபின் இணையத்தில் அது குறித்த விமரிசனம் ஏதாவது இருக்கிறதா என்று தேடி அதைப் படித்த மற்றவர்கள் எப்படி உணர்ந்திருக்கிறார்கள் என்று அறிந்துகொள்வது அண்மைகாலமாக என் வழக்கமாக இருக்கிறது. அப்படி தேடியபோது ஆதவனைக் குறித்து திருப்பூர் கிருஷ்ணன் எழுதிய ஒரு கட்டுரை கண்ணில் பட்டது. ஆதவனின் அகால மரணத்தைக் குறித்து இப்படி எழுதுகிறார்:

"காலமான ஓரிரு நாட்களில் அம்பத்தூரிலிருந்து லா.ச.ரா. என்னைத் தேடி வந்தார். விபத்தில் மரணமடைந்த செய்தியை நானும் அவரும் பகிர்ந்துகொண்டோம். சற்று நேரம் மௌனமாக இருந்தார் லா.ச.ரா. என் மேசைமேல் ஜே.கிருஷ்ணமூர்த்தி படம் ஒன்று வைத்திருந்தேன். அந்தப் படத்தை விரலால் தட்டியவாறு சொன்னார்: 'அவனும் அழகனய்யா!' ஆமாம். அழகான எழுத்தாளர்கள் என்று நா.பா. தொடங்கிச் சிலரைப் பட்டியலிட்டால் அந்தப் பட்டியலில் கட்டாயம் இடம்பெறக் கூடியவர்."

மண்டையில் ஏதோ மணியடித்தது. சுந்தர ராமசாமி காலமானபோது ஜெயமோகன் எழுதிய கட்டுரை நினைவுக்கு வந்தது. அதிலிருந்து:

"(சுந்தர ராமசாமி) ஈடுபாட்டுடன் பேசிக் கொண்டிருந்தபோது அவரையே கூர்ந்து நோக்கி அமர்ந்திருந்த எம். யுவன் அபாரமான பிரியத்துடன் என் காதில் மெல்ல 'அழகன்யா...' என்றார்."

சாரு நிவேதிதா இந்த வரியைப் படித்தபோது தன் மீது யாரோ வாந்தியெடுத்து விட்டதைப் போல் அருவருப்பாக உணர்ந்தாராம். எனக்கு அத்தகைய அதீத உணர்ச்சிகள் ஏதும் ஏற்படவில்லை என்றாலும் ஒரு படைப்பாளியின் 'அழகை' மற்றொரு படைப்பாளி சிலாகிப்பதின் பின்னால் உள்ள உளவியல் சுவாரசியமான ஒன்றாகத்தான் இருக்கவேண்டும் என்று தோன்றுகிறது.

திரை(மறைவு) அரசியல்

சில ஆண்டுகளுக்கு முன் ஆர்னால்ட் ஸ்வாஸ்னேக்கர் கலிபோர்னியாவின் ஆளுநராகத் தேர்வு செய்யப்பட்டபோது, திரைத்துறையுடன் தொடர்புடையவர்களை, குறிப்பாக நடிகர்களை மட்டுமே அரசின் தலைவர்களாகத் தேர்ந்தெடுக்கும் இந்தியாவிலுள்ள தமிழ்நாடு என்னும் விசித்திர மாநிலத்தைப் பற்றியக் குறிப்புகள் சில அமெரிக்க இதழ்களில் இடம்பெற்றிருந்தன. அந்த அளவுக்கு தமிழ்நாட்டின் திரைத்துறைக்கும் அரசியலுக்கும் உள்ள தொடர்பு நன்கு அறியபட்டதாக இருக்கிறது. அண்டை மாநிலத்தவர்களுக்கு இது தமிழர்களை ஒட்டுமொத்தமாக மட்டம் தட்டுவதற்கு பயன்படும் ஒரு பேசுபொருள். திரைப்பட நடிகர்களுக்கு தமிழக அரசியலில் கிடைக்கும் வரவேற்பு மற்றும் வெற்றிக்கு பின்னால் பல்வேறு விதமான காரணங்கள் இருந்தாலும் இது குறித்து மேலோட்டமான புரிதல் உள்ளவர்கள் ஒரே ஒரு காரணத்தை மட்டுமே முன்வைக்கிறார்கள். பாமரத் தமிழர்களுக்கு திரையில் தெரியும் பிம்பத்தையும் நிஜ வாழ்வையும் வேறுபடுத்திப் பார்க்கும் பக்குவம் இல்லை என்பதே அது.

மேலே சொல்லப்பட்டிருக்கும் காரணத்தில் சிறிது உண்மை இருந்தாலும் தமிழக அரசியல் களத்தில் திரைப்பட நடிகர்களுக்கு கிடைக்கும் பெரும் ஆதரவுக்குப் பின்னால் வேறு ஒரு முக்கியமான காரணமும் இருக்கிறது. திரைத்துறையில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற பல நடிகர்கள் அரசியலில் ஈடுபட்டும் அனைவராலும் வெற்றிப்பெற முடியவில்லை. சிலர் முதலமைச்சர் ஆனார்கள், வேறு சிலரால் தேர்தலில் வைப்புத்தொகையை தக்கவைத்துக் கொள்ளக்கூட முடியவில்லை. ஒரு நடிகர் அரசியலில் எந்த அளவுக்கு வெற்றிப்பெறுவார் என்பதை முடிவு செய்வதில் அவரது திரை பிம்பத்துக்கு சற்றும் குறையாத வகையில் அவரது ஊடக பிம்பமும் முக்கிய பங்கு வகிக்கிறது. தமிழ்நாட்டு அரசியலின் கடந்த நாற்பதாண்டு கால வரலாற்றை நோக்கினால் தமிழக ஊடகங்களின் வலுவான ஒரு பிரிவு ஒவ்வொருக் காலகட்டத்திலும் ஏதாவது ஒரு நடிகரின் தலைக்குப் பின்னே ஒளிவட்டத்தை ஏற்படுத்தி அவரை ஒரு மிகப்பெரிய அரசியல் சக்தியாக உருவாக்க பெருமுயற்சி எடுத்துவந்திருப்பதைப் பார்க்கலாம். இதில் ஒரு வேடிக்கை என்னவென்றால் படித்தவர்கள் அரசியலுக்கு வந்தால் அனைத்துப் பிரச்சனைகளும் தீர்ந்துவிடும் என்ற மந்திரத்தை தொடர்ந்து ஓதிவரும் இந்த ஊடகப் பிரிவினர் தான் பாமர ரசிகர்களின் அறியாமையையே தங்கள் பலமாகக் கொண்ட நடிகர்களுக்கு கொம்புசீவி விடுபவர்கள்.

இந்த ஊடகங்கள் தாங்கள் வெறுக்கும் ஒருவகை அரசியலை - தமிழ் தேசியவாத சிந்தனை, 'உயர்'சாதி ஆதிக்க எதிர்ப்பு, கடவுள் மறுப்பு போன்ற கூறுகளை ஏதாவதொரு விகிதத்தில் கொண்ட அரசியலை - ஒழித்துக்கட்ட மற்ற அனைத்து வழிகளையும் கையாண்டுப் பார்த்து பலனில்லாத நிலையில் பாமர மக்களின் திரைப்பட மோகத்தை பயன்படுத்திக் கொள்கின்றன. இவர்களின் ஆதரவு எல்லா நடிகர்களுக்கும் கிடைப்பதில்லை, சில குறிப்பிட்டத் தகுதிகள் உள்ளவர்களுக்கு மட்டுமே கிடைக்கிறது.

1. ஆதரவு பெறும் நடிகர் எந்நிலையிலும் தமிழ் தேசியவாதம் பேச முடியாதவராக இருக்கவேண்டும். மலையாளத்தைத் தாய்மொழியாகக் கொண்ட எம்.ஜி.ஆரும், மராட்டியரான ரஜினிகாந்தும், வீட்டில் தெலுங்கு பேசுபவராக அறியப்படும் விஜய்காந்தும் ஒருபோதும் தமிழ் தேசியவாத அரசியலை முன்னெடுக்க முடியாது. மேலும் அவர்கள் தங்கள் பின்புலம் காரணமாக வரும் தமிழ் தேசியவாதிகளின் எதிர்ப்பை எதிர்கொள்ள இந்திய தேசிய அடையாளத்தை தீவிரமாக வலியுறுத்தவேண்டியக் கட்டாயத்துக்கு உள்ளாவார்கள். இந்தித் திணிப்பு எதிர்ப்பு, மாநில சுயாட்சி போன்ற நிலைபாடுகளைப் பொறுத்தவரை எழுபதுகளிலும் எண்பதுகளிலும் கருணாநிதி காட்டிய தீவிரத்தில் நூற்றில் ஒரு பங்கைக் கூட எம்.ஜி,ஆர் வெளிப்படுத்தியதில்லை. ஆட்சிக்கு வந்த உடனேயே தன் கட்சிப் பெயருக்கு முன்னால் 'அகில இந்திய' என்றொரு முன்னொட்டை சேர்த்துக்கொண்டார். ரஜினிகாந்தால் காவிரி நீருக்காக தமிழக நடிகர்கள் நடத்தும் ஒரு பேரணியில் கூட கலந்துக்கொள்ள முடியாது. விஜய்காந்த் தமிழக பள்ளிகளில் இந்தி கற்பிப்பதை ஆதரித்துப் பேசுகிறார். இரு வாரங்களுக்கு முன் ஒரு இணையக் கட்டுரையில் படித்ததைப் போல ஊடகங்களின் அமோக ஆதரவுடன் திமுகவை உடைத்து தனிக்கட்சி தொடங்கியவர்கள் அனைவருமே - ஈ.வி.கே சம்பத்(கன்னடம்), எம்.ஜி.ஆர்(மலையாளம்), வைகோ(தெலுங்கு) - தமிழல்லாத ஒரு மொழியைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள் என்பது தற்செயலானதா என்றுத் தெரியவில்லை.

2. பிற்படுத்தப்பட்டோருக்கு ஆதரவாக 'உயர்'சாதி ஆதிக்க எதிர்ப்பு அரசியலில் ஈடுபடும் வாய்ப்பு இல்லாதவர்களாக இருக்கவேண்டும். எண்ணிக்கைப் பலம் கொண்ட தேவர், வன்னியர், நாடார் போன்ற பிற்பட்டத் தமிழ் சாதிகளைச் சேர்ந்த நடிகர்கள் தங்கள் சமூக ஆதரவைத் தக்கவைத்துக்கொள்ள அத்தகைய அரசியலை மேற்கொள்வதற்கான வாய்ப்பு இருப்பதால், அவர்களுக்கு ஊடக ஆதரவு கிடைக்காது. எம்.ஜி.ஆருக்குக் கிடைத்த ஆதரவு 'என் தமிழ் என் மக்கள்' என்ற வசனத்துடன் தனிக்கட்சி தொடங்கி கள்ளர் சமூகத்தினர் பெரும்பான்மையாக உள்ள தொகுதியில் போட்டியிட்ட சிவாஜிக்கு கிடைக்காது. (எம்.ஜி.ஆர் ஆட்சிக்கு வந்த பின் 'உயர்'சாதியினருக்கு ஆதரவானதாக கருதப்பட்ட சில நடவடிக்கைகளை எடுத்தது கவனிக்கத்தக்கது. சாதி அடிப்படையிலான இடஒதுக்கீட்டு முறையை மாற்றி பொருளாதார அடிப்படையில் இடஒதுக்கீட்டை அமல்படுத்த முயன்றதை ஒரு எடுத்துக்காட்டாகச் சொல்லலாம். அதன் காரணமாக நாடாளுமன்ற தேர்தலில் மிக மோசமான தோல்வியை சந்தித்தப் பிறகே பிற்படுத்தப்பட்ட/தலித் மக்களுக்கான மொத்த இட ஒதுக்கீட்டை 69% ஆக உயர்த்தினார்.) தொண்ணூறுகளில் ரஜினிக்கு கிடைத்த ஆதரவும், கடந்த தேர்தலில் விஜய்காந்துக்கு கிடைத்த ஆதரவும் சரத்குமார், கார்த்திக் போன்றவர்கள் தனிக்கட்சி தொடங்கி தீவிர அரசியலில் இறங்கினால் கிடைக்காது.

3. கடவுள் மறுப்புக் கொள்கை உடைய நடிகர்களுக்கு இந்த ஊடகங்கள் ஒருபோதும் ஆதரவளிக்காது. ரகசியமாக மூகாம்பிகை கோயிலில் வழிபடுபவராக அறியப்பட்ட எம்.ஜி.ஆரும், இமயமலையில் இரண்டாயிரம் வயதுப் பெரியவர்களிடம் ஆன்மீகம் பயிலும் ரஜினியும், ஜோதிடர்களின் சொற்படி ஒவ்வொரு அடியையும் எடுத்துவைப்பதாக சொல்லப்படும் விஜய்காந்தும் பாதுகாப்பானவர்கள். கமலஹாசனோ சத்யராஜோ கட்சி ஆரம்பித்தால் ஊடக ஆதரவு கிடைப்பது சந்தேகமே.

மேலே உள்ள தகுதிகள் எல்லாம் ஜெயலலிதாவுக்கும் உண்டு என்றாலும் அவர் தன் திரைப் பிம்பத்தையும் ரசிகர்களையும் ஊடக ஆதரவையும் மட்டும் பயன்படுத்தி முன்னேறியவர் அல்ல. மாறாக எம்.ஜி.ஆரால் முன்னிலைப்படுத்தப்பட்டு அவரது மறைவுக்குப் பின் நன்கு வளர்ந்த நிலையில் இருந்த ஒரு கட்சியை கைப்பற்றிக் கொண்டவர்.

ஆக, தமிழக அரசியலில் நடிகர்கள் பெறும் முக்கியத்துவத்துக்கு பாமரத் தமிழர்களின் திரைப்பட வெறி மட்டும் காரணமல்ல. ஊடகங்களின் செயற்பாடுகளும் ஒரு முக்கிய காரணம். இன்னும் ஒரு பதினைந்து ஆண்டுகள் கழித்து வேறு ஏதாவது ஒரு நடிகருக்கு இதே ஊடகங்கள் கொம்புசீவிக் கொண்டிருந்தால் அவரும் மேலே சொன்ன தகுதிகளைக் கொண்டவராகத் தான் இருப்பார்.

[நேரமின்மை காரணமாக எழுத நினைத்த எல்லாவற்றையும் எழுத முடியவில்லை. மற்றவை நாளை.]

திரையேற்றம்

ஆடிக்கொரு முறை அமாவாசைக்கு ஒரு முறை என்று எழுதிக் கொண்டிருந்தவனை நட்சத்திரமாக்கி ஒரே வாரத்தில் ஏழு இடுகைகள் எழுதச் சொன்னால் சில விளைவுகளைத் தவிர்க்க முடியாது. எழுத வேண்டும் என்று நீண்ட நாட்களாக நினைத்திருந்த தலைப்புகளை ஒத்திப்போட்டுவிட்டு வேறு தலைப்புகளைக் குறித்து எழுதும்படி ஆகிவிட்டது. எழுதத் திட்டமிட்டிருந்தக் கட்டுரைகளில் பெரும்பாலானவற்றுக்கு நூலகத்திலோ இணையத்தேடலிலோ சில மணி நேரங்களை செலவிடவேண்டியிருக்கும் என்பதே காரணம். இப்போது அதற்கான கால அவகாசம் இல்லாததால் நினைவில் உள்ள தகவல்களை வைத்தே எழுதிவிடக்கூடிய சில தலைப்புகளைக் குறித்து அடுத்த ஏழு நாட்களுக்கு எழுதலாம் என்று இருக்கிறேன். பதிவு எழுதத் தொடங்கி பத்து மாதங்களாகியும் இன்னும் திரைப்படங்களைப் பற்றி ஒரு இடுகை கூட இடாமல் இருந்தால் நான் தமிழன் தானா என்ற நியாயமான ஐயப்பாடு சிலருக்கு எழக்கூடும் என்பதால் இந்த இடுகை.

முன்னொரு காலத்தில் படங்கள் பார்ப்பது எனக்கு மிகவும் விருப்பத்துக்குரியதாக இருந்தது. எண்பதுகளின் இறுதியிலும் தொண்ணூறுகளின் முதற்பாதியிலும் வெளிவந்தப் பெரும்பாலானத் தமிழ் படங்களைப் பார்த்திருப்பேன். இப்போதெல்லாம் ஒரு வருடத்தில் ஐந்தாறு தமிழ் படங்களை பார்ப்பதே அதிகம். அறிவுஜீவி முத்திரை குத்தப்படும் அபாயம் இருந்தாலும் பெரும்பாலான தமிழ் படங்களைப் பார்க்கும்போது அவை அறிவு முதிர்ச்சி அடையாத பார்வையாளர்களுக்காக உருவாக்கப்பட்டதைப் போல் உணர்வதை சொல்லித்தான் ஆகவேண்டும். அது உண்மைதான் என்று இரண்டு ஆண்டுகளுக்கு முன் தொலைக்காட்சியில் ஒரு இயக்குநரின் பேட்டியைக் கண்ட போது தெரிந்தது. ஒரு சில வணிகரீதியிலான வெற்றிப்படங்களை அளித்திருந்த அந்த இயக்குநர் சொன்னார்: "படித்தவர்கள், நடுத்தர வர்க்கத்தினர் படங்களை சிடி மூலமாகப் பார்த்துவிடுவதால் திரையரங்குகளுக்கு வருவதில்லை. பெண்கள் தொலைக்காட்சித் தொடர்களே கதி என்று இருப்பதால் அவர்களும் முன்பு போல் வருவதில்லை. திரையரங்குகளுக்கு அதிகம் வருவது பதினான்கிலிருந்து இருபத்திநான்கு வயதுவரை உள்ள சிறுவர்கள்/இளைஞர்கள். இவர்களது ரசனைக்கு ஏற்றவாறு எடுக்கப்படும் படங்கள் தான் வெற்றிபெறும் என்ற நிலை. அதனால் தான் குத்துப்பாட்டு, பஞ்ச் வசனம் என்றுத் தமிழ் படங்களின் போக்கு மாறி வருகிறது." வியாபாரக் கட்டாயங்களினால் முதிர்ச்சியற்ற விடலைப்பையன்களின் ரசனை ("யூத் லைக் பண்றாங்க") ஒட்டுமொத்த தமிழ் சமூகத்தின் ரசனையாக உருமாறுவது எப்படிப் பார்த்தாலும் ஆரோக்கியமான ஒன்றல்ல.

மிகையான சித்தரிப்புகள் இல்லாத யதார்த்த பாணி படங்களே என் விருப்பத்துக்குரியவை. அந்த வகையில் தமிழில் அண்மைக்காலமாக பாலா, சேரன், அமீர், தங்கர் பச்சான் ஆகியோரின் படங்களை பெரும்பாலும் பார்த்துவிடுகிறேன். இவர்களது படங்களும் வணிக கட்டாயங்களிலிருந்தும் வெகுஜன ரசனைக்குத் தீனிபோடவேண்டிய தேவையிலிருந்தும் முற்றிலுமாக விடுபட்டவை அல்ல என்றாலும் இந்தப் படங்களை வணிக 'மசாலா' படங்களுக்கும் கலைப்படங்களுக்கும் இடைப்பட்ட 'நடுவழி' படங்கள் எனலாம். தமிழக வாழ்வு, குறிப்பாக கிராமப்புற, சிறுநகர மக்களின் வாழ்வு இந்த இயக்குநர்களின் படங்களில் தான் கூடியமட்டும் யதார்த்தமாக சித்தரிக்கப்படுவதாக உணர்கிறேன். இவற்றில் பெரும்பாலான படங்கள் வணிகரீதியாகவும் வெற்றிப்பெறுவதைக் காணும்போது தமிழ் திரையுலகில் ஒரு ஆரோக்கியமான மாற்றம் ஏற்பட்டு வருகிறது என்ற நம்பிக்கை ஏற்படுகிறது. கூடவே இந்த போக்கு நீடிக்காது, நீடிக்க விடமாட்டார்கள் என்ற அவநம்பிக்கையும்.

தமிழிலும், இந்தியிலும் இதற்கு முன்பும் இதுபோன்ற நடுவழி படங்கள் நல்ல அங்கீகாரத்தைப் பெற்றிருந்த ஒரு காலகட்டம் இருந்திருக்கிறது. எழுபதுகளின் இறுதியில் தமிழில் பாலுமகேந்திரா, மகேந்திரன், பாரதிராஜா போன்ற இயக்குநர்கள் யதார்த்த பாணியில் அமைந்த தரமான படங்களை அளித்தனர். Superstar என்று சொல்லத்தக்க எந்த நடிகரும் களத்தில் இல்லாத அந்த காலகட்டத்தில் இயக்குநர்களுக்காக படம் பார்க்கும் நிலை இருந்தது. இந்தியிலும் ரிஷிகேஷ் முகர்ஜி போன்ற இயக்குநர்கள் உருவாக்கிய மசாலா அம்சங்கள் இல்லாத குறைந்த பொருட்செலவில் எடுக்கப்பட்ட யதார்த்த பாணி படங்கள் நல்ல வரவேற்பை பெற்றன. நசிருதீன் ஷா, அமொல் பாலேகர், ஃபருக் ஷேக், ஷபானா ஆஸ்மி போன்ற திறமையான நடிகர்கள் முன்னிலையில் இருந்த காலகட்டம் அது. ஆனால் எண்பதுகளின் தொடக்கத்தில் நிலைமை தலைகீழாக மாறியது. (பெரிய தயாரிப்பு நிறுவனங்கள் திட்டமிட்டு இந்த போக்கை மாற்றின என்று சொல்பவர்களும் உண்டு.) சர்வ வல்லமை படைத்தவனாக சித்தரிக்கப்படும் கதாநாயகனை மையமாக வைத்து எடுக்கப்படும் அப்பட்டமான மசாலாப் படங்கள் ஆதிக்கம் செலுத்த தொடங்கின. அதுவரை பல நடுவழி படங்களில் திறமையான நடிப்பை வெளிப்படுத்தியிருந்த ரஜினிகாந்தும் அமிதாப் பச்சனும் superstar-களாக மாற்றப்பட்டு மூளையை கழற்றிவைத்துவிட்டு நடித்துவிடக் கூடிய வேடங்களில் நடிக்கத் தொடங்கினர்.

ஆனால் அதே காலகட்டத்தின் மலையாளத் திரையுலகில் இதற்கு நேர்மாறான ஒரு மாற்றம் நடந்தது. எழுபதுகளின் இறுதியில் நாடகத்தன்மை வாய்ந்த மசாலா படங்கள் வந்துகொண்டிருந்த நிலை மாறி எண்பதுகள் மலையாளத் திரையுலகின் பொற்காலம் என்று சொல்லும் அளவுக்கு மிகச் சிறந்த யதார்த்த பாணி படங்கள் வரத்தொடங்கின. பல்வேறு துறைகளில் மிகச்சிறந்த திறனாளர்கள் பலர் உச்சத்தில் இருந்த காலகட்டம் அது. கேரளத்துக்கு வெளியே நடிப்புத் திறமைக்காக நன்கு அறியப்பட்ட மோகன்லால், மம்முட்டி தவிர துணை வேடங்களில் நடிப்பதற்கும் நெடுமுடி வேணு, திலகன் போன்ற உலகத்தரமான நடிகர்களும் இருந்தனர். ஸ்ரீனிவாசன், பத்மராஜன் போன்ற சிறந்த கதாசிரியர்கள்/இயக்குநர்கள் பல அருமையான படங்களை உருவாக்கினர். மிகச்சிறந்த இலக்கிய படைப்புகள் வெற்றிகரமாக படமாக்கப்பட்டன. எண்பதுகளிலும் தொண்ணூறுகளின் தொடக்கத்திலும் வந்த பல மலையாளப் படங்களை எனக்கு எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காது. கேரளத்தின் சமூக, குடும்ப வாழ்வு மிகவும் யதார்த்தமான முறையில் சித்தரிக்கப்பட்டிருப்பதும் நடிகர்களின் இயல்பான நடிப்பும் இதற்கு முக்கிய காரணங்கள். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக இந்த போக்கு மாறிவிட்டது. இன்றைய மலையாளப்படங்கள் தமிழ் வணிகப் படங்களில் மோசமான நகல்களாக இருக்கின்றன.

மலையாளப்படங்களில் என்னைக் கவர்ந்த மற்றொரு அம்சம் இயல்பான மிகையற்ற நகைச்சுவை. இன்னும் சொல்லப்போனால் அதுவும் யதார்த்தத்தின் பிரதிபலிப்பு தான். கிண்டலும் கேலியும் மலையாளிகளின் பேச்சுவழக்கிலிருந்து பிரிக்கமுடியாதவை. Mimicry மற்றும் parody பாடல்களைக் கொண்ட ஒலிநாடாக்கள் கேரளத்தில் மிகவும் பிரபலம். அவற்றில் கருணாகரனும், ஆன்டனியும், அச்சுதானந்தனும் படும் பாட்டைப் பார்த்தால் அங்குள்ள சகிப்புத்தன்மை விளங்கும். ஜெகதி ஸ்ரீகுமார், இன்னசென்ட் போன்ற சிறந்த நகைச்சுவை நடிகர்கள் எண்பதுகளிலும் தொண்ணூறுகளிலும் ஏராளமானப் படங்களில் தங்கள் திறமையை வெளிப்படுத்தினர். நகைச்சுவைக்காக தனியாகக் கிளைக்கதை அமைத்து வசனம் எழுதும் வழக்கம் மலையாளத்தில் இருந்ததில்லை. நகைச்சுவை நடிகர்கள் படத்தில் முக்கியமான பாத்திரங்களில் வருவார்கள். பல நகைச்சுவை காட்சிகளின் வசனங்களை மட்டும் தனியே எடுத்துப் பார்த்தால் அதில் சிரிப்பதற்கு எதுவும் இருக்காது. ஒரு எடுத்துக்காட்டாக காட்ஃபாதர் என்னும் படத்தில் வரும் ஒரு காட்சியை சொல்லலாம். கல்லூரி மாணவனாக வரும் ஜெகதீஷ் எதோ முட்டாள்தனமானக் காரியம் செய்து இன்னசென்டிடம் மாட்டிக்கொள்கிறார். அவர்களிடையே நடக்கும் சிறு உரையாடல் தமிழில்:

"நீ எதுக்குப் படிக்கிறே?"
"பி.எல்"
"அதில்ல. நீ எதுக்கு படிக்கிறேன்னு கேட்டேன்."

இதை வாசிக்கும்போது இதில் சிரிக்க என்ன இருக்கிறது என்றுத் தோன்றும். ஆனால் படத்தில் இந்தக் காட்சியைப் பார்ப்பவர்கள் தரையில் உருளாதக் குறையாக சிரிப்பார்கள். இன்னசென்ட் இரண்டாவது முறை கேட்கும் போது அவரது முகத்தில் தெரியும் எரிச்சலையும், 'எதுக்கு' என்ற இடத்தில் கொடுக்கும் அழுத்தத்தையும், மேல்நோக்கி திருப்பிய இடது உள்ளங்கையில் வலது உள்ளங்கையை அடித்து தேய்க்கும் அந்த செய்கையையும் பார்த்தால் சிரிக்காமல் இருக்க முடியாது.

மலையாளப் படங்களின் நகைச்சுவை தமிழர்களின் வெளிப்படையான, மிகையான, ஆரவாரமான பாணி நகைச்சுவையிலிருந்து (கமலஹாசனின் சில படங்கள் இதற்கு விதிவிலக்கு) வேறுபட்டிருப்பதாலோ என்னவோ, மலையாளப் படங்களை - குறிப்பாக நகைச்சுவை படங்களை - தழுவி தமிழில் எடுக்கப்பட்ட படங்கள் மூலப் படத்தில் இருந்த நகைச்சுவையை முழுவதுமாக இழந்துக் காணப்படுகின்றன. எண்பதுகளில் மோகன்லால் நடித்து வெளிவந்த "சன்மனசுள்ளவர்க்கு சமாதானம்" என்ற அருமையான படம் தமிழில் இல்லம் என்ற பெயரில் வந்தபோது அதில் மருந்துக்குக் கூட நகைச்சுவை இல்லை. மோகன்லாலும், ஸ்ரீனிவாசனும் வெளுத்துக்கட்டிய நகைச்சுவை வேடங்களுக்கு சிவகுமாரையும் சந்திரசேகரையும் தேர்வு செய்தவரை கடந்த நூற்றாண்டின் மிக மோசமான casting விருதுக்கு பரிந்துரைக்கலாம். மோகன்லால், சோபனா நடித்த "தேன்மாவின் கொம்பத்து" என்ற படம் தமிழில் முத்துவாக சீரழிக்கப்பட்டது. (நெடுமுடி வேணு சோபனாவிடம் காதல் வசப்படும் காட்சிகளையும் அவற்றைத் தமிழில் சரத்பாபு செய்திருப்பதையும் பார்த்தால் விளங்கும்.) சந்திரமுகியில் ரஜினிக்குப் பொருந்தியது போல மணிச்சித்திரதாழில் மோகன்லாலுக்கு நகைச்சுவை வேடம் பொருந்தவில்லை என்றும் மோகன்லால் சொதப்பி இருக்கிறார் என்றும் அண்மையில் ஒரு தமிழ் பதிவர் எழுதியிருந்ததைப் படித்து ஓரிரு நாட்களுக்கு மனம் ஆறவேயில்லை. இப்படி ஒரு சிந்தனை கூட சாத்தியம்தானா என்று எண்ணிக்கொண்டிருந்தேன்.

எண்பதுகளிலும் தொண்ணூறுகளிலும் வந்த மலையாளப் படங்களிலிருந்து காட்சிகளையும் சில நேரங்களில் முழுப்படத்தையும் திருடுவது தமிழில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. சிதம்பரத்தில் ஒரு அப்பாசாமியில் கதாநாயகி இருட்டில் குழந்தைகளுடன் பேசும் முதல் காட்சியைக் கண்ட உடனேயே அது ஸ்ரீனிவாசனின் "சிந்தாவிஷ்தயாய ஷியாமளா" என்ற படத்தின் நகல் என்று தெரிந்துவிட்டது. (படத்தின் உரிமையை வாங்கித் தான் எடுத்திருப்பார் என்று முதலில் நினைத்தேன். இல்லை என்று பின்னர் அறிந்தேன்.) கஜினி படத்தில் வரும் பல காட்சிகள் (துணை நடிகை பணக்காரனைத் தன் காதலனாக சொல்லிக்கொள்வது, அதனால் கதாநாயகியாக்கப்படுவது, பிறகு அவன் யாரென்றுச் சொல்லாமலே அவளுடன் பழகுவது..) "தீம்தரிகிட" என்ற ப்ரியதர்ஷனின் பழையப் படத்திலிருந்து எடுக்கப்பட்டவை. மலையாளத்தில் மிகச்சிறந்த நகைச்சுவைப் படங்கள் பலவற்றை அளித்த ப்ரியதர்ஷன் இப்போது அந்தப் படங்களை இந்தியில் வெற்றிகரமாக மறு ஆக்கம் செய்து வருகிறார்.

தமிழில் இருபது வருடங்களுக்கு முன்னால் தங்கள் தனி பாணியில் அமைந்த வெற்றிப்படங்களை தொடர்ந்து அளித்துக்கொண்டிருந்த பாரதிராஜா, பாலுமகேந்திரா, பாலசந்தர் போன்ற இயக்குநர்கள் அண்மைக்காலமாக எவ்வளவோ முயன்றும் தொடர் தோல்விகளை சந்தித்து வருவது பல கேள்விகளை எழுப்புகிறது. படைப்பூக்கம் என்பது ஒரு குறிப்பிட்ட காலத்துக்கு பிறகு காலியாகிவிடுமா என்பது அவற்றில் ஒன்று. எனக்கு என்ன தோன்றுகிறதென்றால் இந்த இயக்குநர்களது தனித்தன்மைகள் ஒரு காலத்தில் பெரும் வரவேற்பை பெற்றிருந்தாலும் இன்று அவை அவற்றின் புதுமைத்தன்மையை இழந்து சலிப்பை ஏற்படுத்துவதாக மாறிவிட்டன. மேலும் அவர்கள் கையாண்ட விஷயங்களை அவர்களைவிட சிறப்பாக செய்யும் புது இயக்குநர்களும் உருவாகியிருக்கிறார்கள். பாரதிராஜா உச்சத்தில் இருந்தக் காலத்தில் தென்மாவட்டங்களில் தேவர்களின் வாழ்வை பின்புலமாகக் கொண்ட பல வெற்றிப்படங்களை அளித்தார். (பிறகு பசும்பொன் போன்ற படங்களில் சாதிப்பெருமை வெளிப்படையாக ஒலிக்க ஆரம்பித்தது.) இன்று அதற்கு பாரதிராஜா தேவையில்லை. வெயில், பருத்திவீரன் போன்ற அண்மையப் படங்களில் அந்த வாழ்வும் கலாச்சாரமும் மிகவும் யதார்த்தமாக சித்தரிக்கப்பட்டிருக்கிறது. பாலுமகேந்திரா மனநோயாளிகளைப் பற்றிய பல படங்களை (மூடுபனி, மூன்றாம்பிறை..) எடுத்தார். அவரது உதவியாளாராக இருந்த பாலா இன்று அதே விஷயங்களை வெற்றிகரமாகப் படமாக்குகிறார்.

பாலசந்தர் படங்களை நோக்கும்போது அவர் ஒவ்வொரு படத்திலும் வித்தியாசமாக ஏதாவது செய்யவேண்டும் என்று நிறைய மெனக்கெட்டிருக்கிறார் என்பது தெரிகிறது. ஆனால் இந்த வித்தியாசத் தாகம் பல நேரங்களின் அளவுக்கதிகமானதாகவும் செயற்கையானதாகவும் மாறிவிடுகிறது. எடுத்துக்காட்டாக காதலன்-காதலி உறவுக்கும் பெற்றோர்-பிள்ளை உறவுக்கும் முடிச்சு போட்டு குழப்புவதை எத்தனையோ படங்களில் செய்திருக்கிறார். அபூர்வ ராகங்களில் ஒரு இளைஞன் நடுத்தர வயது பெண்ணைக் காதலிக்க, அந்த பெண்ணின் மகள் இளைஞனின் அப்பாவைக் காதலிக்கிறாள். மூன்று முடிச்சு படத்தில் கதாநாயகி தன்னை விரும்பும் வில்லனின் தந்தையை மணந்து அவனை மகனாக்கிக் கொள்கிறாள். வானமே எல்லையில் காதலர்களை பிரிப்பதற்காக அவனது தந்தையும் அவளது தாயும் திருமணம் செய்து அவர்களை சகோதன்-சகோதரி ஆக்கிவிடுகிறார்கள். அவள் ஒரு தொடர்கதையில் அடிக்கடி படாபட் என்று சொல்லும் பெண்ணும் அவளது தாயும் ஒரே ஆணைக் காதலித்து ஏமாறுகிறார்கள். இது ஏதாவது ஃபிராய்டிய சிக்கலின் வெளிப்பாடோ என்னவோ.

எண்பதுகளில் தொடர்ந்து வெற்றிப்படங்களைக் கொடுத்த மற்றொருவர் மணிரத்தினம். பள்ளி நாட்களில் மணிரத்தினத்தின் படங்களை - குறிப்பாக நாயகன், இதயத்தைத் திருடாதே போன்ற படங்களை - மிகவும் விரும்பிப் பார்த்திருக்கிறேன். இன்று அவரது பழைய படங்களைப் பார்க்கும்போது அவருடைய அழகுணர்ச்சியும் தொழில்நுட்ப நேர்த்தியும் மட்டுமே தெரிகிறது. மற்றபடி நடுத்தர வர்க்கத்தின் உளவியலையும், ரசனைகளையும் நுட்பமாகத் தெரிந்து வைத்துக்கொண்டு அதற்கேற்றவாறு படங்களை எடுத்து வெற்றிபெற்ற ஒரு தேர்ந்த வணிக இயக்குநராகவே மணிரத்தினத்தை இப்போது பார்க்கிறேன். எடுத்துக்காட்டாக எந்த சம்பிரதாயத்தையும் மீறத் துணிவில்லாத, குனிய சொன்னால் சாஷ்டாங்க நமஸ்காரமே செய்து விடும் நடுத்தர வர்க்க குமாஸ்தாக்களுக்கு சட்டத்துக்கும் சம்பிரதாயத்துக்கும் கட்டுப்படாத எதிர் நாயகனின் (anti-hero) மீதும் துடுக்குத்தனமான நவீன கதாநாயகியின் மீதும் ஒரு ரகசிய ஈர்ப்பு இருக்கவே செய்யும். ரோஜாவுக்கு முந்தைய மணிரத்தினத்தின் பெரும்பாலான படங்களில் இந்த அம்சங்கள் இருக்கும். ரோஜா படத்திலும் அதன் பிறகும் ஏதாவது ஒரு தேசிய பிரச்சனையை எடுத்துக்கொண்டு அதே நடுத்தர வர்க்கத்தின் ருசிகளுக்கு ஏற்றவாறு உப்புமா கிண்டுவதை வழக்கமாக்கிக் கொண்டார்.

பெரும்பாலானத் தமிழர்களைப் போல என்னுடைய இசை ரசனையும் தமிழ் திரையிசையைச் சார்ந்தது. சிறு வயதில் வீட்டில் பெரும்பாலும் எம்.எஸ்.விஸ்வநாதனின் பாடல்களும் இளையராஜாவின் ஆரம்பக்கால பாடல்களும் ஒலித்துக்கொண்டிருக்கும். அதனாலோ என்னவோ எனக்கு இன்றும் அதுபோன்ற மென்மையான பாடல்களே பிடித்தவையாக இருக்கின்றன. மேலும் இசைப்பாடல்கள் மிகச்சிறந்த அழகுணர்வுடன் கோர்க்கப்பட்ட சொற்களின் தோரணமாக இருப்பதைவிட உணர்வுகளை வெளிப்படுத்துவதாக இருக்கவேண்டும் என்பது என் எண்ணம். "உண்ணும் அழகைப் பார்த்திருப்பாயே, உறங்க வைத்தே விழித்திருப்பாயே.." என்ற வரிகளில் உள்ள சொற்கள் எளிமையானவையாக இருந்தாலும் அந்த வரி கேட்பவருக்கு ஒருவித மன நெகிழ்வை அளிக்ககூடியது. கண்ணதாசனின் பெரும்பாலான பாடல்களும் வைரமுத்துவின் ஆரம்பக்காலப் பாடல்களும் இப்படித்தான் இருந்தன.

ஆனால் கடந்த பத்து, பதினைந்து வருடங்களாக - ரஹ்மானுடன் இணைந்த பிறகு என்று சொல்லலாம் - வைரமுத்துவின் பாடல்களில் இத்தகைய உணர்ச்சி வெளிப்பாட்டை என்னால் காணமுடியவில்லை. மாறாக அவரது மேதமையை, அபாரமான தொழித்திறனை மட்டும் தான் காணமுடிகிறது. கண்ணுக்கு மை அழகு போன்ற பாடல்களின் வெற்றிக்குப் பிறகு வைரமுத்து அதுபோன்ற template பாடல்களை எழுதத்தொடங்கியதிலிருந்து தான் இந்த சரிவு ஏற்பட்டது என்று நினைக்கிறேன். (கண்ணதாசன் வெகு அபூர்வமாகத் தான் இதுபோன்ற பாடல்களை எழுதிருக்கிறார். எ.கா: காலங்களில் அவள் வசந்தம், கலைகளிலே அவள் ஓவியம்..) Template பாடல்கள் ஒருவித இயந்திரத்தன்மைக் கொண்டவை. முதல் வரியை முடிவு செய்துவிட்டால் ஓரிரு மணிநேரங்களில் அதைப்போல முன்னூறு வரிகளை எழுதிவிடலாம். உன் சமையலறையில் நான் உப்பா, சர்க்கரையா என்று முதல் வரியை எழுதிவிட்டால் அடுத்து உன் சாப்பாட்டில் நான் பாகற்காயா பாயாசமா, உன் தெருவோரத்தில் நான் பெட்டிக்கடையா, பெருமாள்கோயிலா என்று எழுதிக்கொண்டே போகலாம். பிறகு அவற்றிலிருந்து கொஞ்சம் அழகுணர்வு உள்ள சில வரிகளை எடுத்துக்கொண்டால் பாடல் தயார். இப்படி உணர்ச்சியில்லாமல் வெற்று அலங்கார வார்த்தைகளைப் போட்டு நிரப்பும் முறையில் நன்கு பழகிவிட்டதால் தான் வைரமுத்து உலகம் முழுவதும் மரண ஓலம் ஒலித்துக் கொண்டிருந்த ஒரு நாளில் தொலைக்காட்சியில் தோன்றி "ஏ சுனாமி, நீ மரணத்தின் பினாமி" என்று ஆபாசக் கவிதை வாசித்தார்

தமிழ் திரையுலகைக் குறித்துப் பேசிவிட்டு அதிலிருந்து பிரிக்கமுடியாத அரசியலைக் குறித்துப் பேசாமல் இருக்க முடியாது. நாளை பேசுகிறேன்.