ரஜினி, சங்கர் மற்றும் அவர்களது அரசியல்

சென்ற மாதம் நட்சத்திர வாரத்தின் போது தமிழ் திரையுலக அரசியலைக் குறித்து ஒரு பதிவு எழுதப்போய் அது சற்று அதிகமாகவே சர்ச்சையாகிவிட்டது. வெங்கட், சுந்தரமூர்த்தி ஆகியோர் இரண்டு வெவ்வேறு காரணங்களுக்காக அந்த பதிவுடன் முரண்பட்டு விரிவாக எதிர்வினையாற்றியிருந்தார்கள். உண்மையில் நேரமின்மைக் காரணமாக அந்த பதிவில் நான் சொல்ல நினைத்திருந்த எல்லாவற்றையும் சொல்லியிருக்கவில்லை. குறிப்பாக ரஜினி, சங்கர் ஆகியோரைப் பற்றி எழுதுவதற்கு சில குறிப்புகளை எடுத்து வைத்திருந்தும் எழுதவில்லை. "சிவாஜி" பஜனைக் காதைக் கிழித்துக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில் அந்த குறிப்புகளை லேசாக விரித்து இங்கே இடுகிறேன். ரசிகக் கண்மணிகள் பொறுத்தருள்வார்களாக.

தொண்ணூறுகளின் தொடக்கத்தில் ஜெயலலிதாவை அதுவரை தீவிரமாக ஆதரித்துவந்த தமிழ்நாட்டு வலதுசாரிகளுக்கு அவர் மீது கடும் அதிருப்தி ஏற்பட்டது. ஊழல் ஒரு காரணமாக சொல்லப்பட்டாலும் அதைவிட முக்கியமானக் காரணங்கள் இருந்தன. சசிகலாவின் சுற்றமும் சமூகமும் ஆட்சியில் ஆதிக்கம் செலுத்தியது, ஊடகங்களுக்கு எதிரான ஜெயலலிதாவின் போக்கு, அவர் வீரமணியின் ஆலோசனைகளை கேட்டு செயல்பட்டது, இட ஒதுக்கீட்டை எதிர்த்து வழக்குப் போட்டவர் அடித்து முடமாக்கப்பட்டது, சேஷன் மீது நடந்தத் தாக்குதல் முயற்சி என்று எத்தனையோ காரணங்களால் ஜெயலலிதாவுக்கு ஒரு மாற்றாக ரஜினிகாந்தை முன்வைக்கத் தொடங்கினர். (இதில் ஒரு ஒழுங்கைக் காணலாம். எண்பதுகளின் தொடக்கத்திலிருந்தே ரஜினி தமிழகத்தின் முன்னணி நட்சத்திரமாக இருந்தும் ஜெயலலிதா "நல்ல பிள்ளையாக" இருந்த வரையில் அவர் ஒரு அரசியல் சக்தியாக எவராலும் முன்வைக்கப்படவில்லை. அதேபோல தனக்கு அரசியலில் நுழையும் நோக்கம் உண்டு என்பதை விஜய்காந்த் தனது செயல்பாடுகள் மூலம் பல ஆண்டுகளாக உணர்த்தி வந்தும் 2004-ம் ஆண்டு தேர்தலில் ரஜினியின் அரசியல் கனவுகளுக்கு சந்தேகத்துக்கு இடமில்லாத வகையில் சங்கு ஊதப்படும் வரை அவர் ஆதரிக்கப்படவில்லை. ரஜினி மீது இன்னும் நம்பிக்கை இழக்காத சிலர் விஜயகாந்தை ஆதரிக்கத் தொடங்கவில்லை என்பதையும் கவனிக்கலாம். ஒரு நேரத்தில் ஒரு குதிரை மீது தான் சவாரி.)

அந்நாட்களில் ரஜினியை எல்லாம் வல்லவராக, தமிழ்நாட்டின் மிகப் பெரும்பாலான மக்களின் நன்மதிப்பையும் ஆதரவையும் பெற்றவராக, நினைத்தால் அடுத்த தேர்தலில் முதல்வராகிவிடக்கூடிய ஆற்றல் கொண்டவராக ஊடகங்கள் சித்தரித்து வந்தன. 1996-ம் ஆண்டு நடந்த தேர்தலில் திமுகவின் பெரும் வெற்றிக்கு ரஜினியின் ஐந்து நிமிட தொலைக்காட்சி பிரசாரம் முக்கியக் காரணமாக சொல்லப்பட்டது. அந்த தேர்தலில் 'ரஜினி அலை' வீசியதாக பலர் திரும்பத்திரும்ப எழுதிவந்தார்கள். நல்லவேளையாக ரஜினியின் உண்மையான செல்வாக்கு அடுத்து வந்த தேர்தல்களில் தெளிவாக வெளிப்பட்டது.

தொண்ணூறுகளில் ரஜினிக்கு உருவாக்கப்பட்டிருந்த புனிதபிம்பம் இன்று அப்துல்கலாமுக்கு இருக்கும் புனிதபிம்பத்துக்கு சற்றும் குறைந்ததல்ல. "மகாத்மாவின் மறுபிறப்பே" என்று ரஜினியை விளிக்கும் சுவரொட்டிகளை பார்த்த நினைவிருக்கிறது. இந்திய ஊடகங்கள் ஒருவரை புனிதபிம்பமாக சித்தரிக்கின்றன என்றால் அவர் வறுமை, அடிப்படை சுகாதாரமின்மை, சாதிக் கொடுமைகள் போன்றப் பிரச்சனைகளைக் குறித்து மறந்தும் கூட அக்கறை கொள்ளாதவராகவும் அதே நேரத்தில் இந்தியாவை வல்லரசாக்குதல், கங்கையையும் காவிரியையும் இணைத்தல், சந்திரனில் இறங்குதல் மற்றும் இன்னபிற கனவுகளை சர்வரோக நிவாரணியாக விநியோகிப்பவராகவும் இருப்பார் என்பதை சொல்லவேண்டியதில்லை. ஆன்மீகம், தத்துவம் போன்றவற்றில் நாட்டம் உள்ளவராகவும், மதத்துறவிகளிடம் உபதேசம் பெறுபவராகவும், அக்கம்பக்கம் பார்க்காமல் ஆகாயப் பார்வைப் பார்ப்பவராகவும் இருந்தால் இன்னும் நல்லது. இந்த தகுதிகள் பெரும்பாலும் அமையப்பெற்ற ரஜினி புனிதபிம்பமாக மாறியது இயல்பானதே.

ரஜினிக்கு சமூகப் பார்வை என்று ஒன்று இருக்குமானால் அது பிற்போக்கானது என்பதில் ஐயமில்லை. படிப்பறிவோ, உலக அறிவோ இல்லாத லட்சக்கணக்கானவர்கள் தன்னை ஒரு ஆதர்சமாக காண்பதை அறிந்திருந்தும் "எஜமான் காலடி மண்ணெடுத்து நெற்றியில் பொட்டுவைப்போம்" போன்ற நிலபிரபுத்துவ துதிபாடல்களை தன் படங்களில் அனுமதித்தவர் அவர். "தைரியலட்சுமி"யிடம் நேரடியாக மோத தைரியம் இல்லாமல் பெண்களை இழிவுப்படுத்தும் வசனங்களைத் தன் படங்களில் தொடர்ந்து பேசி வந்தவர். பொதுப் பிரச்சனைகளில் அவர் அக்கறை வெளிப்படுத்தியதெல்லாம் தானோ தனது நண்பர்களோ (மணிரத்தினம், ராஜ்குமார்..) பாதிக்கப்பட்டபோது மட்டுமே. முப்பது ஆண்டுகளாகத் தமிழ்நாட்டில் வாழ்ந்தும் தெனாலி படம் பார்த்த பிறகு தான் "சிலோன் பிரச்சனை"யின் தீவிரம் புரிந்தது என்று சொல்லும் அளவிற்கே அரசியல் அறிவு உள்ள ஒருவரைத் தான் தமிழக மக்களை உய்விக்க வந்தவராக ஊடகங்கள் கொண்டாடின. அரசியலில் தான் இப்படி அரிச்சுவடி தெரியாமல் இருக்கிறார் என்றில்லை, இத்தனை ஆண்டுகளாக ஆன்மீகத் தேடலில் ஈடுபட்டும் ஆன்மீகம் குறித்த அவரது புரிதல் ஒரு சராசரி பாமர பக்தனிலிருந்து எவ்வகையிலும் வேறுபட்டதாகத் தெரியவில்லை. ("உலகில் பாவிகள் அதிகரித்ததால்" தான் சுனாமி போன்ற இயற்கை பேரிடர்கள் தோன்றுகின்றன என்று அறிக்கை வெளியிட்டதை இங்கே சொல்லலாம்.)

அடுத்த எம்.ஜி.ஆராக சித்தரிக்கப்பட்ட ரஜினியிடம் எம்.ஜி.ஆரிடம் இருந்த சில திறமைகளும் குணங்களும் அறவே கிடையாது. சிறுவயதிலேயே தமிழகத்துக்கு வந்து நாடகக்குழுவுடன் ஊர்ஊராக சுற்றித்திருந்து பலதரப்பட்டத் தமிழர்களுடன் பழகிய எம்.ஜி.ஆரைப் போலல்லாது ரஜினி தமிழகத்தின் கிராமப்புற, சிறுநகர வாழ்வு குறித்து நேரடியாக அறியாதவர். மக்கள் கூட்டத்திற்கிடையே திளைப்பதும், கிழவிகளைக் கட்டிப்பிடிப்பதும், குழந்தைகளை முத்தமிடுவதும் எம்.ஜி.ஆருக்கு இயல்பாகவே வந்தது. ரஜினியோ தன்னை சந்திக்கவரும் ரசிகர்களை வருடத்திற்கு ஒருமுறை கூட சந்திக்க மறுப்பவர். முக்கியமாக, தன்னை நம்பி வருபவர்களுக்கு தாராளமாக உதவிகள் செய்து அவர்களது நன்றியையும் விசுவாசத்தையும் சம்பாதிக்கும் குணம் எம்.ஜி.ஆருக்கு இருந்தது. ரஜினி தனக்கு இத்தகைய ஒரு வாழ்வை அளித்த திரைத்துறைக்குக் கூட எதுவும் செய்ததில்லை. கமலஹாசன், நாசர், பிரகாஷ்ராஜ் போன்றவர்கள் திரைத்துறையில் ஈட்டிய பணத்தையெல்லாம் நல்ல படம் என்றுத் தாங்கள் கருதுவதை எடுக்க அந்த துறையிலேயே மறுபடியும் இடுகின்றனர். ஆனால் ரஜினி தமிழ் திரைத்துறையை அவ்வப்போது வந்து பணம் அள்ளிச்செல்லும் ஒரு களஞ்சியமாக பயன்படுத்துகிறாரே தவிர அதன் மேம்பாட்டுக்கு எதுவும் செய்ததில்லை. தன்னைக் கடுமையாக விமரிசித்த சிலருக்கு பண உதவியையோ அல்லது நடிப்பதற்கான வாய்ப்பையோ வழங்கி அவர்களை ஊடகங்களில் தன்னைப் புகழ வைத்தது தான் தன்னுடன் பணிபுரிபவர்களுக்கு அவர் செய்த ஆகப்பெரிய உதவியாகத் தெரிகிறது. மொத்தத்தில், ஒரு அரசியல் தலைவராக, "அடுத்த முதல்வராக" வரவிரும்பும் ஒரு மனிதரிடம் இருக்கவேண்டிய குறைந்தப்பட்ச சமூக அக்கறையைக் கூட ரஜினி வெளிப்படுத்தியதில்லை என்பதே உண்மை.

*****

அண்மைக்கால தமிழ் திரைப்படங்களின் அரசியல் குறித்த எந்தவொரு விவாதத்திலும் சங்கரின் படங்களைக் குறித்துப் பேசுவதை தவிர்க்கமுடியாது. குறிப்பாக "சமூகப் பிரச்சனைகளை" பேசுவதாகச் சொல்லப்படும் ஜென்டில்மேன், இந்தியன், முதல்வன், அந்நியன் ஆகிய நான்கு படங்களைக் குறித்து. உண்மையில் இந்த நான்கு மொந்தைகளிலும் ஒரேவகையான கள் தான் இருக்கிறது. இந்த படங்களில் முன்வைக்கப்படும் அரசியலும் ஒன்றுதான். அந்தக்காலத்தில் எல்லாமே நன்றாக இருந்தது; தகுதி இல்லாதவர்கள் அதிகாரத்தைக் கைப்பற்றிவிட்டது தான் அனைத்து சீர்கேடுகளுக்கும் காரணம் என்று கடந்த நாற்பதாண்டுகளாகத் தமிழகத்தில் ஒலிக்கும் தினமலர்/துக்ளக் வாசகர்களுக்கு நன்கு பழக்கமான வாதத்தை தான் சங்கரின் படங்கள் பரப்புகின்றன.

இந்த நான்கு படங்களிலும் ஊழலையும் மற்ற சமூக சீர்கேடுகளையும் எதிர்த்து போராடும் கதாநாயகன் என்ற பொதுவான அம்சம் உண்டு. அதைக் குறித்து ஏதும் பிரச்சனையில்லை. ஆனால் ஒவ்வொரு படத்திலும் அந்த கதாநாயகனுக்கு கொடுக்கப்படும் அடையாளங்களும் அவனால் எதிர்க்கப்படும் ஊழல்வாதிகளுக்கும் சமூக விரோதிகளுக்கும் அளிக்கப்படும் அடையாளங்களையும் கவனித்தால் சங்கர் சொல்லவருவது என்ன என்பது புரியும். "தர்ம-அதர்ம" யுத்தங்களைப் பற்றிய புராணப் படங்களில் இந்த அடையாளங்கள் வெளிப்படையாக இருக்கும். வெள்ளைத்தோல் நாயகனின் முகத்தில் தேஜஸ் பெருகி வழியும். எதிர்த்து நிற்கும் அசுரனின் முகத்தில் லேசான கரிப்பூச்சும், சில நேரங்களில் தலையில் இரண்டு கொம்புகளும் இருக்கும். இருபத்தோராம் நூற்றாண்டின் "சமூகப் பிரச்சனைகளைப்" பேசும் படங்களில் அப்படிப்பட்ட வெளிப்படையான அடையாளங்களை அளிக்கமுடியாது என்பதால் சங்கர் தன் படங்களில் வேறு வழிகளில் கூடியமட்டும் வெளிப்படையான அடையாளங்களை நாயகனுக்கும் அவனது எதிரிகளுக்கும் அளிக்கிறார்.

அவரது முதல்படமான ஜென்டில்மேனில் தன் தாயின் சாவுக்கு காரணமான அரசியல்வாதியை பழிவாங்க ஒருவித மிருக ஓலத்துடன் அரிவாளைத் தூக்கிக்கொண்டுப் புறப்படும் கதாநாயகனை நம்பியார் பாத்திரம் தடுத்து அவனுக்கு பொறுமையை போதித்து, பூணூல் அணிவித்து, அக்ரகார வாழ்வை அறிமுகப்படுத்திய பிறகே அவன் புத்திசாலித்தனமாக தன் போராட்டத்தை மேற்கொள்கிறான். இந்தியன் படத்தின் நாயகன் 'அந்த'காலத்தை பிரதிநிதிக்கும் சுதந்திரப் போராட்டத் தியாகி. முதல்வன், படித்த டை கட்டிய இளைஞன் அதிகாரத்தைக் கைப்பற்றி அனைத்து பிரச்சனைகளையும் ஒரே நாளில் தீர்க்கும் மற்றொரு நடுத்தர வர்க்கக் கனவு. அந்நியனில் கதாநாயகன் குடுமி, நாமம் போன்ற புற அடையாளங்களைக் கொண்ட அக்ரகாரத்து அம்பி. இந்த நாயகர்களால் பழிவாங்கப்படும் வில்லன்களை ஆராய்ந்தால் அவர்களது தோற்றம், மொழி ஆகியவற்றின் மூலம் வேறுவிதமான அடையாளங்கள் கொடுக்கப்பட்டிருப்பதை உணரலாம். ஜெண்டில்மேனில் வேட்டியைத் தொடைக்குமேல் தூக்கிக்கொண்டு கொச்சை மொழியில் பேசும் அரசியல்வாதியையோ, அந்நியனால் கொல்லப்படுபவர்களையோ மனதில் கொண்டுவந்துப் பார்த்தால் இது புரியும். இந்தியனில் தியாகியின் மகன் தவறு செய்வதாகக் காட்டப்பட்டாலும் அவன் நேர்மையாக முன்னேறுவதற்கான அனைத்து வழிகளையும் சமூகம் அடைத்துவிட்டதன் காரணமாகவே அவன் அப்படி செய்வதாகவும், இயல்பாகவே நேர்மையானவனான அவன் கையூட்டு வாங்கத் தயங்கும் போது உடனிருக்கும் கவுண்டமணி பாத்திரம் அவனது மனதை மாற்றுவதாகவும் காட்டப்பட்டிருக்கும்.

சங்கரின் இந்த படங்களில் சட்டத்துக்கும் தர்மத்துக்கும் கீழ்படிந்து நேர்மையாக வாழும் அப்பாவிப் பார்ப்பனர்கள் மற்றவர்களால் துன்புறுத்தப்படுவது / அவமானப்படுத்தப்படுவது போன்றக் காட்சிகள் தவறாமல் இடம்பெற்றிருக்கும். ஜென்டில்மேன் படத்தில் திறமை இருந்தும் மருத்துவக்கல்லூரியில் இடம் கிடைக்காமல் முறுக்கு விற்க அனுப்பப்படும் பார்ப்பன இளைஞன் தற்கொலை செய்துகொள்ளும் காட்சி பார்வையாளர்களின் மனதை உருக்கும் விதத்தில் படமாக்கப்பட்டிருக்கும். அதே படத்தில் கதாநாயகன் வசிக்கும் அக்ரகாரச் சூழலுக்கு சற்றும் பொருந்தாத தோற்றத்தையும் பேச்சுவழக்கையும் கொண்டிருக்கும் கவுண்டமணி பாத்திரம் எதிர்த்துப் பேசக்கூடத் தெம்பில்லாத வயோதிக பார்ப்பனர்களை மரியாதைக்குறைவாகப் பேசி அவமானப்படுத்தும் காட்சிகள் பல இடங்களில் வரும். இந்தியன் படத்தில் கையூட்டுக் கொடுக்காமல் எந்த வேலையும் நடக்காத போக்குவரத்து அலுவலகத்தில் நேர்மையான முறையில் உரிமம் பெற முயலும் மைலாப்பூர் 'ஐ-வில்-ரைட்-டு-தி-ஹிண்டு' பார்த்தசாரதி கேலிசெய்யப்பட்டு அலைக்கழிக்கப்படும் காட்சிகள் நகைச்சுவை என்ற பெயரில் சேர்க்கப்பட்டிருக்கும். இவற்றை எல்லாம் மிஞ்சும் ஒரு காட்சி அந்நியன் படத்தில் இருக்கிறது. தோற்றம், மொழி, உடை என்று அனைத்து வகையிலும் நுட்பமாக அடையாளம் காட்டப்படிருக்கும் சார்லி பாத்திரம் அனைத்து சாலை விதிகளையும் கடைபிடித்து வண்டியோட்டி வரும் அம்பியின் முகத்தில் காறி உமிழ்ந்துவிட்டு அதைப்பற்றி சிறிதும் கண்டுகொள்ளாமல் போகும் காட்சி தான் அது. (என்னக் காரணத்தாலோ சார்லி அந்நியனால் கொல்லப்படும் காட்சி விரிவாகக் காட்டப்படவில்லை.) "நான் தயிர்சாதம் சாப்பிடறவன். வலிக்குது" என்று அம்பி அடிபட்டு அலறும் காட்சியையும் இந்த வரிசையில் சேர்த்துக்கொள்ளலாம்.

ஏதோ ஒரு படத்தில் மட்டும் இப்படிப்பட்டக் காட்சிகள் இடம்பெற்றால் அது தற்செயலானது எனலாம். ஆனால் ஒவ்வொரு படத்திலும் இது தொடரும்போது இயக்குநரின் நோக்கத்தைப் பற்றி பேசாமல் இருக்கமுடியாது. தமிழ்நாட்டுப் பார்ப்பனர்களின் தற்போதைய நிலைமை 1930-களில் இருந்த யூதர்களின் நிலைமையை மிகவும் ஒத்திருக்கிறது என்று எழுத்தாளர் அசோகமித்திரன் போன்றவர்கள் செய்துவரும் பிரச்சாரத்தை தான் சங்கர் தன் படங்களில் செய்கிறார். இத்தகைய படங்கள் நடுத்தர வர்க்கத்தின் பேராதரவுடன் பெரும் வெற்றி பெறுவது எதிர்பார்க்கத்தக்கதே. இந்த அரசியலைப் பற்றியெல்லாம் எதுவும் தெரியாத, அப்படித் தெரிந்தாலும் அதைக் குறித்து அக்கறைக் கொள்ளாதக் கூட்டத்தை திரையரங்குகளுக்கு அழைத்து வருவதற்குத் தான் இருக்கவே இருக்கிறது ரண்டக்க ரண்டக்க பாட்டும் ஜலபுலஜங்ஸ் காட்சிகளும்.

மலையாளப் பதிவுகள் ஒரே இடத்தில், தமிழில்

அண்மைக்காலமாக வாசித்த தமிழ்ப்பதிவுகள் பெரும்பாலும் தமிழகத்தின் வெயிலையும் வறட்சியையும் நினைவூட்டும் விதமாக அமைந்திருந்ததால் தைவத்தின்றெ ஸ்வந்தம் நாட்டில் தணுத்த புழகளெயும் காயல்களெயும் ஒந்நு கண்டு வராமெந்நு தீர்மானிச்சு. வாயனக்கார் பேடிக்கண்டா. தமிழ்த்தாய்க்கு வீண்டும் ஸ்வாகதம். இரண்டு மாதங்களுக்கு முன் நான் உருவாக்கிய இனியன் கருவியைப் பயன்படுத்தி மலையாளப் பதிவுகளைத் தமிழ் எழுத்துக்களுக்கு மாற்றி வாசிக்கத் தொடங்கினேன். இந்த முறையைக் கையாண்டு மலையாளப் பதிவுகளை வாசிப்பதில் உள்ள ஒரு அடிப்படை சிக்கலை விரைவில் உணர்ந்தேன். ஒவ்வொருப் பதிவிலிருந்தும் இடுகைகளை வெட்டி எடுத்து இனியன் பக்கத்தில் ஒட்டி தமிழுக்கு மாற்றிய பின்பே அதில் என்ன எழுதப்பட்டிருக்கிறது என்றும் அதைப் வாசிப்பதா வேண்டாமா என்றும் ஒரு முடிவுக்கு வர முடியும். இப்படி ஒவ்வொரு இடுகையாக வெட்டி ஒட்டி வாசிப்பது விரைவிலேயே சோர்வடைய வைத்துவிடும்.

தமிழ்மணம், தேன்கூடு போல மலையாளப் பதிவுகளுக்கு என்று ஒரு தமிழ் திரட்டி இருந்தால் - அதாவது மலையாள இடுகைகளின் தலைப்புகளும் எழுதியவர்களது பெயர்களும் தமிழ் எழுத்துக்களில் ஒரே பக்கத்தில் தானியக்க முறையில் தோன்றினால் - எப்படி இருக்கும்? நன்றாகத் தான் இருக்கும். இன்னும் ஒருபடி மேலே போய் அதே பக்கத்திலேயே முழு இடுகையையும் - படங்கள் இருந்தால் அவற்றையும் சேர்த்து - தமிழிலேயே வாசிக்க முடிந்தால் எப்படி இருக்கும்? அடிபொளியாக இருக்கும்.

தேவைகளே கண்டுபிடிப்புகளின் தாய் என்பது தேய்பதமா என்று தெரியவில்லை. வேலையில் இறங்கினேன். சில வாரங்கள் செலவிட்டப் பின் மேலே சொல்லியிருப்பதைப் போன்ற ஒரு வலைப்பக்கத்தை உருவாக்க முடிந்தது. தனி வலைத்தளம், வழங்கி எல்லாம் இல்லாமல் முற்றிலும் கூகிள்/பிளாகர் நிறுவனம் அளிக்கும் இலவச சேவைகளைப் பயன்படுத்தியே இதை உருவாக்கியிருக்கிறேன். இது போன்ற முயற்சிகளில் ஆர்வம் உள்ளவர்களுக்காக கற்ற வித்தைகளைச் சுருக்கமாக செப்பிவிடுகிறேன்.

இதுபோன்ற ஒரு வலைப்பக்கத்தை உருவாக்கத் தேவையான நுட்பங்கள் மூன்று. அவையாவன:

1. திரட்டுதல் (Aggregation): நூறுக்கு மேற்பட்ட மலையாளப் பதிவுகளை கூகிள் ரீடர் மூலம் திரட்டுகிறேன். என் பதிவின் இடப்பக்கம் வருவது போல நமக்கு விருப்பமானப் பதிவுகளை மட்டும் கூகிள் ரீடர் மூலம் திரட்டி அவற்றை வலைப்பக்கங்களில் தானியக்க முறையில் பகிர்ந்துக்கொள்வது எப்படி என்று சில மாதங்களுக்கு முன்பு இங்கு எழுதியிருந்தேன். இப்படி திரட்டப்படும் பதிவுகளில் ஆக அண்மையில் எழுதப்பட்ட இடுகைகளை உள்ளடக்கிய ஒரு செய்தியோடையை XML கோப்பு வடிவில் பெறமுடியும்.

நுட்பச் சிக்கல்: தற்போது கூகிள் ரீடர் அளிக்கும் செய்தியோடையில் ஆக அண்மைய இருபது இடுகைகள் மட்டுமே உள்ளன. கொஞ்சம் முயன்றால் இந்த உச்சவரம்பை உடைத்துவிடலாம். ஒரு வழி: பதிவுகளைப் பல தொகுதிகளாகப் பிரித்துத் திரட்டுவதன் மூலம் ஒவ்வொருத் தொகுதியிலிருந்தும் இருபது இடுகைகளை எடுக்கலாம். நான் இதை இன்னும் செய்யவில்லை. ஏனென்றால் தமிழ்ப்பதிவுகளுடன் ஒப்பிடுகையில் ஒவ்வொரு நாளும் எழுதப்படும் மலையாள இடுகைகளின் எண்ணிக்கைக் குறைவே. மொக்கையாளர்களை அடையாளம் கண்டு திரட்டியிலிருந்து நீக்கிவிட்டால் இருபது தரமான இடுகைகள் கிடைப்பதற்கு இரண்டு மூன்று நாட்கள் கூட ஆகலாம்.

2. செய்தியோடைப் படித்தல் (Feed reading): கூகிள் ரீடர் தளத்திலிருந்து செய்தியோடையை XML கோப்பு வடிவில் பெற்று அதைப் பிரித்து மேய்வது எப்படி என்று இணையத்தில் தேடியபோது அஜாக்ஸ் (AJAX) என்ற புதிய நுட்பத்தைக் குறித்தும் அதன் பிரணவ மந்திரமான XMLHttpRequest என்பதைக் குறித்தும் அறிந்துக்கொண்டேன். விவரங்களுக்குள் போக விரும்பவில்லை. தேடுங்கள். கிடைக்கும்.

நுட்பச் சிக்கல்: இந்த XMLHttpRequest-ஐ பயன்படுத்தி ஒரு வலைத்தளத்தில் செயல்படும் Javascript மற்றொரு தளத்திலிருந்து தரவுகளைப் பெறமுடியும். (நான் பிளாக்ஸ்பாட் தளத்தில் ஓடும் Javascript மூலம் கூகிள் ரீடர் தளத்திலிருந்து தரவுகளைப் பெறுகிறேன்.) இந்த வசதியை "தீய சக்திகள்" தவறாகப் பயன்படுத்திக்கொள்ளும் வாய்ப்பு இருப்பதால் ஃபயர்ஃபாக்ஸ் உலாவி இதை அனுமதிப்பதில்லை. எனவே இந்த வலைப்பக்கம் ஃபயர்ஃபாக்ஸில் வேலை செய்யாது. இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் பயன்படுத்தலாம். ஆனால் அதன் Internet Options பகுதியில் ஒரு தேர்வை செய்துக்கொள்ளவேண்டும். இந்த தொல்லைகளைப் போக்க அஜாக்ஸில் ஒரு வழி இருப்பதாக அண்மையில் அறிந்தேன். நேரம் கிடைக்கும்போது அதை செயல்படுத்தலாம் என்றிருக்கிறேன்.

[பிற்சேர்க்கை - ஜூன் 4, 2007: இந்த பிரச்சனையை சரிசெய்துவிட்டேன். அதற்கான வழியைச் சுட்டிக்காட்டிய ஆனந்துக்கு நன்றி. இப்போது எல்லா உலாவிகளையும் பயன்படுத்தலாம். சிறப்புத் தேர்வு எதுவும் செய்யத் தேவையில்லை.]

3. எழுத்துப்பெயர்த்தல் (Transliteration): இதைப் பற்றி ஏற்கனவே விரிவாக விளக்கியிருக்கிறேன்.

நுட்பச் சிக்கல்: மலையாள எழுத்துமுறை கடந்த பல ஆண்டுகளாக சீர்திருத்தம் அல்லது எளிமைப்படுத்துதல் என்ற பெயரில் தொடர்ந்து சின்னாபின்னமாக்கப்பட்டு வந்திருக்கிறது. இதன் விளைவாக இணைய மலையாளிகளிடையேயும் மலையாளத் தட்டச்சு செயலிகளிடையேயும் சிலவற்றில் ஒற்றுமை இல்லை. குறிப்பாக குற்றியலுகரத்தில் முடியும் சொற்களை எப்படி எழுதுவது என்பதில். எடுத்துக்காட்டாக 'எனக்கு' என்பதைக் குறிக்கும் 'எனிக்கு' என்னும் சொல்லில் உள்ள 'கு' முழுமையான உகரம் அல்ல. அந்த சொல்லின் உண்மையான உச்சரிப்பு 'எனிக்' என்பதற்கும் 'எனிக்கு' என்பதற்கும் இடையில் எங்கோ உள்ளது. இதை சிலர் 'எனிக்' என்றே எழுதுகிறார்கள். சிலர் 'எனிக்கு' என்று எழுதி ஒரு சிறப்புக் குறியின் மூலம் அது குற்றியலுகரம் என்று உணர்த்துகிறார்கள். இதன் காரணமாகத் தமிழில் எழுத்துப் பெயர்த்து வாசிக்கும் போது சிறிது குழப்பம் நிலவும். எனவே தமிழில் வாசிக்கையில் மெய்யெழுத்தில் முடியும் ஒரு சொல் விளங்கவில்லையென்றால் அதனுடன் ஒரு உகரத்தைச் சேர்த்து வாசிக்கவேண்டும். (எ.கா: எந்த் -> எந்து)

இந்த பக்கத்தை சோதிக்க / பயன்படுத்த இங்கே சுட்டுங்கள். மலையாளத்தில் ஆர்வம் உள்ள நண்பர்கள் யாரேனும் இருந்தால் அவர்களுக்குப் பரிந்துரைக்கலாம்.