பிளாகர்: தமிழில் நாளும் நேரமும்

நாளையும் நேரத்தையும் தமிழில் மாற்றுவது எப்படி என்று மணியன் கேட்டிருந்தார். உண்மையில், மாதத்தையும் கிழமையையும் தமிழில் மாற்றுவதற்கான நிரலை சிலப் பதிவர்கள் ஏற்கனவேப் பயன்படுத்தி வருகிறார்கள். நான் அதோடு நேரத்தில் AM/PM என்று இருப்பதை தமிழில் காலை/மதியம்/மாலை/இரவு என்று மாற்றுவதற்கான சில வரிகளையும் சேர்த்திருக்கிறேன். புது பிளாகரில் புது வார்ப்புருவுடன் பயன்படுத்தக்கூடிய இந்த நிரல் எப்படி செயல்படுகிறது என்பதற்கு சில எடுத்துக்காட்டுகள் கீழே:

1. நாள் காட்டும் இடத்தில் January அல்லது Jan என்று இருந்தால் அதை ஜனவரி என்றும், Sunday அல்லது Sun என்று இருந்தால் அதை ஞாயிறு என்றும் மாற்றிவிடும்.

2. நேரம் 3:15 PM என்றோ 08:45:00 PM என்றோ இருந்தால் அதை முறையே மதியம் 3:15 அல்லது இரவு 08:45:00 என்று மாற்றிவிடும். (குறிப்பு: உங்கள் பதிவில் நேரம் காட்டும் இடத்தில் AM, PM ஆகிய எழுத்துத்தொடர்கள் இல்லாவிட்டால் - 2:35 PM என்பது 14:35 என்று இருந்தால் - இந்த நிரல் அதை ஏதும் செய்யாமல் அப்படியே விட்டுவிடும். நேரம் காட்டப்படும் முறையை நீங்கள் உங்கள் Settings பக்கத்தின் மூலம் மாற்றிக் கொள்ளலாம்.)

நிரலை அப்படியேப் பயன்படுத்த விரும்புவோர் கீழே உள்ள வழிமுறைகளைப் பின்பற்றினால் போதும். ஏதாவது சிறப்பு மாற்றங்கள் செய்ய விரும்புபவர்கள் நிரல் துண்டை Notepad, Wordpad போன்ற ஒரு Text Editor-ல் வைத்து வேண்டிய மாற்றங்களைச் செய்தபின் வார்ப்புருவில் இடலாம். எடுத்துக்காட்டாக கீழே உள்ள மாற்றங்களை நீங்கள் செய்ய விரும்பலாம்.

(அ) மாதத்தையும் கிழமையையும் மட்டும் மாற்றிவிட்டு நேரத்தை அப்படியே விட்டுவிட நினைப்பவர்கள் நிரலில் <!-- Time starts --> என்னும் வரியிலிருந்து <!-- Time ends --> என்னும் வரி வரை உள்ளவற்றை அகற்றிவிடலாம்.

(ஆ) ஆங்கில மாதங்களை ஈழத்தமிழ் (யாழ்ப்பாணத் தமிழ்?) முறையில் எழுத விரும்புவோர் யூலை, ஒக்ரோபர் என்று வேண்டிய மாற்றங்களைச் செய்துக் கொள்ளலாம். (டகரமா ரகரமா என்றப் பட்டிமன்றத்தை மீண்டும் தொடங்கி அரைத்து அரைத்து விழுதான மாவை மறுபடியும் அரைக்க வேண்டாம் என்று அனைவரையும் கரம் கூப்பிக் கேட்டுக்கொள்கிறேன்.)

நீங்கள் செய்ய வேண்டியது:

1. வார்ப்புருவின் Edit HTML tab-க்கு செல்லுங்கள். மாற்றங்கள் செய்வதற்கு முன் வார்ப்புருவின் நகலை சேமித்து வைத்துக் கொள்ளுங்கள். கீழே உள்ள நிரல் துண்டை வெட்டி </HEAD> என்ற இடத்துக்கு மேலே ஒட்டுங்கள்.

<script>
<!-- Script by Jagad (http://kaiman-alavu.blogspot.com) -->
function tamilize(stg)
{
EList = new Array("Sunday", "Monday", "Tuesday", "Wednesday", "Thursday", "Friday", "Saturday", "January", "February", "March", "April", "May", "June", "July", "August", "September", "October", "November", "December");

EList2 = new Array("Sun", "Mon", "Tue", "Wed", "Thu", "Fri","Sat", "Jan", "Feb", "Mar", "Apr", "May", "Jun", "Jul", "Aug", "Sep", "Oct", "Nov", "Dec");

TList = new Array("ஞாயிறு", "திங்கள்", "செவ்வாய்", "புதன்", "வியாழன்", "வெள்ளி", "சனி", "ஜனவரி", "பிப்ரவரி", "மார்ச்", "ஏப்ரல்", "மே", "ஜூன்", "ஜூலை", "ஆகஸ்ட்", "செப்டம்பர்", "அக்டோபர்", "நவம்பர்", "டிசம்பர்");

<!-- Time starts -->
is_pm = 0;
is_am = 0;
has_ampm = 0;
hr_msd = 0;
hr_lsd = 0;
hr = 0;
dp = "";
blanko = "";
colonfound = 0;
i = 1;
while( i &lt; stg.length) {
if(stg.charCodeAt(i) == 77 &amp;&amp; stg.charCodeAt(i-1) == 80)
is_pm = 1;
if(stg.charCodeAt(i) == 77 &amp;&amp; stg.charCodeAt(i-1) == 65)
is_am = 1;
if(stg.charCodeAt(i) == 58 &amp;&amp; colonfound == 0){
colonfound = 1;
hr_lsd = stg.charCodeAt(i-1)-48;
if(i &gt;= 2 &amp;&amp; stg.charCodeAt(i-2) != 32) {
hr_msd = stg.charCodeAt(i-2)-48;
start_pos = i - 2;}
else {
start_pos = i - 1;}
hr = hr_msd*10 + hr_lsd;
if(stg.charCodeAt(i+3) == 58)
end_pos = i + 5;
else
end_pos = i + 2;}
i++;}
has_ampm = is_am + is_pm;
if (has_ampm == 1){
if (is_pm == 0){
if (hr == 12)
{dp = "இரவு ";}
else if (hr &gt;= 4)
{dp = "காலை ";}
else
{dp = "இரவு ";}
stg = stg.replace("AM", blanko);}
else {
if (hr == 12)
{dp = "மதியம் ";}
else if (hr &gt;= 8)
{dp = "இரவு ";}
else if (hr &gt;= 4)
{dp = "மாலை ";}
else
{dp = "மதியம் ";}
stg = stg.replace("PM", blanko);}
slice = stg.substring(start_pos,end_pos);
dp = dp + slice;
stg = stg.replace(slice,dp);}
<!-- Time ends -->

for (i=0;i &lt; 19;i++){
stg = stg.replace(EList[i], TList[i]);
stg = stg.replace(EList2[i], TList[i]);}
return stg;
}
</script>


2. வார்ப்புருவில் <data:post.dateHeader/> என்று இருக்கும் இடத்தைக் கண்டுபிடித்து அதை அகற்றிவிட்டு கீழே உள்ளதை இடுங்கள்.

<script>document.write(tamilize('<data:post.dateHeader/>'))</script>

3. <data:post.timestamp/> என்று எங்காவது இருக்கிறதா என்றுப் பாருங்கள். (சிலருக்கு இருக்காது.) இருந்தால் அதைக் கீழே உள்ளவாறு மாற்றுங்கள்.

<script>document.write(tamilize('<data:post.timestamp/>'))</script>

4. வார்ப்புருவில் <data:comment.timestamp/> என்று இருக்கும் இடத்தைக் கண்டுபிடித்து அதை அகற்றிவிட்டு கீழே உள்ளதை இடுங்கள்.

<script>document.write(tamilize('<data:comment.timestamp/>'))</script>

5. வார்ப்புருவில் <data:i.name/> என்று எங்கெல்லாம் இருக்கிறதோ அங்கெல்லாம் அதைக் கீழே உள்ளவாறு மாற்றுங்கள். (சிலருக்கு இருக்காது. மற்றவர்களுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் இருக்கக்கூடும்.)

<script>document.write(tamilize('<data:i.name/>'))</script>

6. வார்ப்புருவைச் சேமியுங்கள்.

இப்போது மாதம், கிழமை, நேரம் எல்லாம் தமிழில் தெரியும். பதிவில் ஒற்றை ஆங்கில எழுத்தைக் கூட சகித்துக் கொள்ளமுடியாத தனித்தமிழ் வெறியர் என்று உங்களை யாராவது நினைத்துக் கொண்டால் நான் பொறுப்பல்ல :-)

புது ப்ளாகரில் பழைய பின்னூட்டங்கள் - தீர்வு

முன்குறிப்பு: சொந்தக்கதை கேட்க விரும்பாதவர்கள் அடுத்த மூன்று பத்திகளை விட்டுவிடலாம்.

என் பதிவின் வார்ப்புரு நீளமான இடுகைகளை வாசிப்பதற்கு வசதியாக இல்லை என்று நலம் விரும்பிகள் சிலர் தெரிவித்ததால் வழக்கமாக இம்மாதிரி விஷயங்களில் எனக்கு இருக்கும் சோம்பலை ஒரங்கட்டிவிட்டு புது ப்ளாகருக்கு மாறினேன். அப்படியே புது ப்ளாகர் அளிக்கும் புது வார்ப்புருவுக்கும் மேம்படுத்திக் கொண்டேன். மாறிய பின் பழைய பதிவுகளைப் பார்த்தால் பின்னூட்டம் இட்டவர்களது பெயர்கள் தமிழில் இருந்தால் அவை சரியாகத் தெரியவில்லை. இது குறித்து ப்ளாகர்/கூகிள் நிறுவனத்துக்கு முன்பே அறிவிக்கப்பட்டுவிட்டது என்றும் அவர்கள் தற்போது எதுவும் செய்வதற்கு இல்லை என்று கையை விரித்து விட்டதாகவும் அறிந்தேன்.

இந்நிலையில் தமிழ்மண முகப்பில் சுட்டி அளிக்கப்பட்டிருந்த கோபியின் பதிவைப் பார்த்தேன். அவர் இந்தப் பிரச்சனைக்குத் தீர்வாக ஒரு நிரல் துண்டை அளித்திருந்தார். அதை வெட்டி என் வார்ப்புருவில் இட்ட பின் வார்ப்புருவை சேமிக்க முடியவில்லை. மர்மமான XML Error அறிவிப்புகள் வந்துக் கொண்டிருந்தன. XML, Javascript போன்றவற்றில் எவ்வித அறிமுகமும் இல்லாத எனக்கு (நான் தொழில்முறை மென்பொருளாளன் அல்ல) அவற்றை விளங்கிக் கொள்வது கடினமாக இருந்தது. பிறகு ஒருவழியாக error தகவலுக்கான காரணத்தைக் கண்டறிந்தேன். (XML-ல் <, >, & போன்ற சில சிறப்புக் குறிகளை அப்படியே நிரலில் (script) பயன்படுத்துவது குழப்பத்தை விளைவிக்குமாம். அவற்றுக்குப் பதில் முறையே &lt;, &gt;, &amp; என்று எழுதவேண்டும்.)

இவற்றை எல்லாம் சரிசெய்த பின்னும் பழையப் பின்னூட்டங்களை இட்டவர்களது பெயர்கள் தெரியவில்லை. பிறகு கோபியின் பதிவில் அவரது பின்னூட்டங்களைப் பார்த்தபோது அவர் புது ப்ளாகருக்கு மாறிய பின்னும் Classic Template எனப்படும் பழைய வார்ப்புருவையே பயன்படுத்துகிறார் என்பது தெரிந்தது. அப்படி பழைய வார்ப்புருவைப் பயன்படுத்துவோருக்கு அவரது நிரல் தீர்வாக அமையக் கூடும். ஆனால் பெரும்பாலானாவர்கள் புது ப்ளாகருக்கு மாறியபின் புது வார்ப்புருவுக்கு மேம்படுத்திக் கொண்டுவிட்டனர். அவர்களுடைய பதிவில் இந்த நிரல் துண்டு வேலை செய்யாது என்பதை சில மணிநேரங்கள் மெனக்கெட்ட பின் சர்வ நிச்சயமாக அறிந்துக்கொண்டேன். ஏன் வேலை செய்யாது என்பதும் புரிந்தது. வேலை செய்யக்கூடிய ஒரு நிரல் துண்டை நாமே எழுதிவிடலாம் என்ற எண்ணம் மூளையில் ஏறியது. அப்படி எழுதியது சரியாகச் செயல்படுகிறது என்பதற்கு என் பழையப் பதிவுகளில் உள்ள பின்னூட்டங்களில் அட்சர சுத்தமாகத் தெரியும் பெயர்களே ஆதாரம்.

இந்த நிரல் புது ப்ளாகரில் புது வார்ப்புருவுக்கு மேம்படுத்திக் கொண்டவர்களுக்கு மட்டுமே. பின்னூட்டமிட்டவரது பெயர் ஆங்கிலம், தமிழ் அல்லாத வேறு மொழிகளில் இருந்தால் தெரியாது. இந்த தீர்வு தமிழ் பெயர்களுக்கு மட்டுமே.

நீங்கள் செய்யவேண்டியது:

1. வார்ப்புருவின் Edit HTML tab-க்கு செல்லுங்கள். "Expand Widget Templates" என்றக் கட்டத்தை தேர்வு செய்துக் கொள்ளுங்கள். கீழே உள்ள நிரல் துண்டை வெட்டி உங்கள் வார்ப்புருவில் </HEAD> என்ற இடத்துக்கு மேலே ஒட்டுங்கள்.

<script>
function to_unicode(stg)
{
ostg = &quot;&quot;;
i = 0;
while(i &lt; stg.length)
{
if(stg.charCodeAt(i) == 224)
{
if(stg.charCodeAt(i+1) == 38)
{
secondchar = (stg.charCodeAt(i+3)-48)*100 + (stg.charCodeAt(i+4)-48)*10 + (stg.charCodeAt(i+5)-48);
if(stg.charCodeAt(i+7) == 38)
{
mainchar = (stg.charCodeAt(i+9)-48)*100 + (stg.charCodeAt(i+10)-48)*10 + (stg.charCodeAt(i+11)-48);
i += 13;
}
else
{
mainchar = stg.charCodeAt(i+7);
i += 8;
}
}
else
{
secondchar = stg.charCodeAt(i+1);
if(stg.charCodeAt(i+2) == 38)
{
mainchar = (stg.charCodeAt(i+4)-48)*100 + (stg.charCodeAt(i+5)-48)*10 + (stg.charCodeAt(i+6)-48);
i += 8;
}
else
{
mainchar = stg.charCodeAt(i+2);
i += 3;
}
}
mainchar += 2816;
if (secondchar == 175)
mainchar += 64;
ostg += String.fromCharCode(mainchar);
}
else
{
ostg += String.fromCharCode(stg.charCodeAt(i));
i++;
}
}
return ostg;
}
</script>

2. வார்ப்புருவில் இரண்டு இடங்களில் <data:comment.author/> என்று இருக்கும். அதை அகற்றிவிட்டு அந்த இடங்களில் கீழே உள்ளதை இடுங்கள்.

<script>document.write(to_unicode('<data:comment.author/>'))</script>

3. வார்ப்புருவை சேமியுங்கள். பழைய பின்னூட்டங்களை இட்டவர்களது பெயர்கள் இப்போது சரியாகத் தெரியும்.

பி.கு: இந்த தகவல்களை நீங்கள் தாராளமாக எங்கு வேண்டுமானாலும் மறு பிரசுரம் செய்யலாம்.

நடை

எழுதத் தொடங்கிய சில காலத்துக்குப் பின்னரே தன் நடை பற்றிய பதற்றம் முழுமையாக விலகியது என்ற பொருளில் ஜெயமோகன் ஏதோ ஒரு புத்தக முன்னுரையிலோ இணையக் கட்டுரையிலோ எழுதியிருந்தார். (ஜெயமோகன் பெயரைக் குறிப்பிடாமல் தொடர்ந்து இரண்டு பதிவுகள் எழுத முடியாமல் செய்யும் ஜெமோனோமேனியா எனும் விசித்திர வியாதி எப்போது விலகும் என்றுத் தெரியவில்லை.) எனக்கும் ஒரு காலத்தில் நடை பற்றிய பதற்றம் இருந்தது. வலதுத் தோளை லேசாகக் கீழே சாய்த்து நடப்பது தவிர்க்கவேண்டிய ஒருக் குறைபாடாக சிறுவயதிலிருந்தே சுட்டிக் காட்டப்பட்டு வந்ததால் ஏற்பட்ட பதற்றம் அது. பின்னாளில் அறிமுகமான ஒரு மலையாளி நண்பர் "நீங்கள் மோகன்லால் ரசிகரா?" என்றுக் கேட்டுச் சிரித்தார். புரியவில்லை. மோகன்லால் ஒரு தோளை கீழே சாய்த்து நடந்து வந்து "எடா மோனே தினேஷா" என்று வசனம் பேசும் அந்த அடவுக்குப் பாதிக் கேரளமே அடிமை என்றும் நிறைய இளைஞர்கள் அவரைப் போலவே ஒருத் தோளை கீழே சாய்த்து நடக்கிறார்கள் என்றும் நண்பர் விளக்கினார்.

ம்.. இந்த "நடை"யைப் பற்றி ஒருப் பதிவு எழுதும் அளவுக்கு கையிருப்பு இன்னும் காலியாகவில்லை. அதே நேரத்தில் கடந்த இரண்டு பதிவுகளில் sidebar கடுகாய் சிறுக்கும் அளவுக்கு எழுதிய நடை உடை பாவனைகளைப் பற்றி மேற்கொண்டு எதுவும் எழுதும் எண்ணமும் இல்லை. உண்மையில் சென்றப் பதிவின் நீளத்தைப் பார்த்துவிட்டு "படிக்கிறவங்கள ஏன் இப்படிப் போட்டுக் கொல்லுறீங்க?" என்று என் மனைவி வினவியது நீளமும் அழுத்தமும் குறைந்த ஒரு பதிவையாவது எழுதவேண்டும் என்ற அழுத்தத்தை எனக்கு ஏற்படுத்திவிட்டது. இந்தப் பதிவு எழுத்து நடையைப் பற்றியது தான்.

நான் எழுதுவதையெல்லாம் எழுத்து என்று ஒத்துக்கொள்வதானால், சொல்ல வருவதை எந்த வரிசையில் அடுக்கலாம் என்று முடிவு செய்ய சற்று நேரம் செலவிடுவதுண்டே தவிர நடையைப் பற்றியெல்லாம் கவலைப்படுவதில்லை. இன்பச் சுற்றுலாவைக் குறித்து இருநூறு வார்த்தைகளுக்கு மிகாமல் எழுதும் நடை எட்டிப் பார்த்துவிடக் கூடாது என்பதில் மட்டும் கொஞ்சம் கவனம் இருக்கும்.

சிலரை நடைக்காகவே படிக்கலாம். எழுத்தில் புதிய தகவல்களோ கருத்துக்களோ ஏதும் இல்லாமல் இருந்தாலும் படிக்கத் தொடங்கினால் "நடையா, இது நடையா?" என்றுப் படித்துக்கொண்டே இருக்கலாம். வேறு சிலர் நடமாடும் பல்கலைக் கழகங்களாக இருப்பார்கள். ஆனால் நடை எப்போதோ படித்த Asterix படக்கதைகளில் வரும் Julius Monotonus பாத்திரத்தை நினைவுப் படுத்தும். நாம் அதிகம் ரசிக்கும் எழுத்தாளர்களின் பாதிப்பு நம்முடைய நடையில் இருப்பது தவிர்க்க முடியாதது. ஏ.ஆர்.ரஹ்மான் ஒரு பேட்டியில் சொன்னார்: "மற்ற இசையமைப்பாளர்களின் சாயல் என் இசையில் வந்துவிடக் கூடாது என்பதற்காக நான் அவர்களுடைய இசையை அதிகம் கேட்பதில்லை". நானும் அவரது இசை சுத்த சுயம்புவானது என்று தான் நினைத்திருந்தேன். நுஸ்ரத் ஃபத்தே அலி கானின் கவ்வாலியைக் கேட்கும் வரை.

தமிழ் பதிவுலகைப் பொறுத்தவரை இரண்டு வகையான நடைகள் அதிக வரவேற்பைப் பெறுவதாக உணர்கிறேன். ஒன்று கலக நடை. மற்றொன்று அங்கத நடை.

கலக நடை மரபுவாதிகளின் முகச்சுழிப்பை தன் முக்கிய நோக்கங்களில் ஒன்றாகக் கொள்ளவேண்டும் என்று ஒருக் கருத்து நிலவுகிறது. அந்த வகையில் இடக்கர் அடக்கலுக்கோ, இன்னபிற அடக்கல்களுக்கோ அடங்காமல் எழுதும் வல்லமை கலக நடைக்கு முக்கியம். "மனிதக் கழிவை அகற்றுதல்" என்று ஆசாரம் பேணுவதெல்லாம் கலக நடைக்கு உதவாது. "பீ அள்ளுவது" என்றுச் சாற்றுவதே சாலச் சிறந்தது. அதே போல பொதுமைப்படுத்துதல், ஸ்டீரியோடைப்பிங் போன்ற பெரிய பெரிய வார்த்தைகளைக் கொண்டு நீங்கள் வாக்கியம் அமைத்தால் அது வெறும் உரைநடையாக இருக்குமே தவிர உறைக்கும் நடையாக இருக்காது. ஆனால் "டீ.ராஜேந்தர் அடுக்கு மொழியில்தான் **விடுவார் என்று எண்ணுவது போல்" (நன்றி: ரோசாவசந்த்) என்பது போன்ற உவமைகளைப் பயன்படுத்தினால் பசுமரத்தாணியின் மண்டையிலேயே போட்ட மாதிரி இருக்கும். கலக நடையில் அதிகப்பட்சமாக எந்த அளவுக்கு இடக்கர் கலந்து இடக்காக எழுதலாம் என அறிய விரும்புவோர் சிலுக்கு ஸ்மிதாவுக்கு அர்ப்பணிக்கப்பட்ட சாரு நிவேதிதாவின் சிறுகதைத் தொகுப்பில் இடம்பெற்றுள்ள "பிரஸ்ஸில் இருக்கிறது" போன்றக் கதைகளைப் படிக்கலாம்.

இணையத்தில் உள்ள அங்கத எழுத்தாளர்கள் பொதுவாக ஏதாவது ஒரு சாரியில் இருந்துக்கொண்டு எதிர் சாரியில் இருப்போரை நையாண்டி செய்வதை வழக்கமாக வைத்திருப்பார்கள். சென்னைத் தமிழ், நெல்லைத் தமிழ், கோவைத் தமிழ் என்றுப் பன்மொழிப் புலமை இருப்பது அங்கத எழுத்துக்குப் பலம் சேர்க்கும். இவர்கள் பெரும்பாலும் முகத்திரைக்கு பின்னால் இருந்து தான் எழுதுவார்கள். அங்கதக்காரர்கள் கையில் கிடைத்தால் அவர்களை அங்கம் அங்கமாக பிரித்தெடுக்க ஒருக் கூட்டம் எப்போதும் தயாராக இருப்பது இதற்குக் காரணமாக இருக்கக்கூடும். இவர்களது முகத்திரையைக் கிழித்துவிட்டு தான் மறுவேலை என்று சிலர் களம் இறங்குவதும், இவர்கள் "பர்தே மே ரெஹ்னே தோ" என்று ஆஷா போன்ஸ்லேயை மிஞ்சும் விதத்தில் சிணுங்குவதும் எழுத்துக்கு அப்பாற்பட்டக் கூடுதல் நகைச்சுவை.

இணையத்தில் அதிகம் காணமுடியாத ஒருவகை நடை இருக்கிறது. அந்த நடையை எதிர்கொள்ளும்போது என் சிறுவயதில் எங்கள் ஊரில் கிழிந்த அழுக்கு உடைகளோடு திரிந்த ஒரு மனிதர் நினைவுக்கு வருவார். ஒருவித சித்த விகாரக் கலக்கத்தில் இருப்பதாக நம்பப்பட்ட அவரது வாய் ஒயாமல் சொல் மாரி பொழிந்துக் கொண்டே இருக்கும். சொற்கள் ஒன்றோடு ஒன்று தொடர்பற்று சித்தம் தெளிவாக இருப்பவர்களால் அறவே பொருள் விளங்கிக்கொள்ள முடியாமல் இருக்கும். சில நிமிடங்கள் தொடர்ந்துக் கேட்டுக்கொண்டு இருந்தால் probability விதிகளின் படி அவ்வப்போது சில பொருள் உள்ள வாக்கியங்கள் கிடைக்கும். இன்னும் அதிக நேரம் பொறுமையுடன் கேட்பவர்களுக்கு அட என்றுப் புருவம் உயர்த்த வைக்கும் கவித்துவமான வரிகளும் சில நேரங்களில் வாழ்வியல் தத்துவங்களும் கூட கிடைப்பதாக பேசிக்கொண்டார்கள்.

ஆமாம், தானியக்க எழுத்தைத் தான் சொல்கிறேன். இந்த வகை எழுத்தைப் படிப்பதில் உள்ள தடைகளைத் தாண்டி உள்ளே நுழைந்துவிட நான் எத்தனையோ முறை முயற்சி செய்தும் ஒவ்வொரு முறையும் அந்த நடை அகநானூற்றுத் தோழியைப் போல வாயில் மறுத்துவிடுகிறது. விலக்கப்பட்ட கனி மீது ஏற்படும் தவிர்க்க முடியாத ஈர்ப்பை போல தானியக்க எழுத்தின் மீதான ஆர்வம் தொடர்கிறது.

யாராவது நண்பர்களுடன் - குறிப்பாக ஆனந்தவிகடனுக்கு அப்பால் நகராத பெரும்போக்கு நண்பர்களுடன் - நூலகத்துக்குச் செல்ல நேர்ந்தால் ஒரு விளையாட்டில் ஈடுபடுவதுண்டு. தமிழ் வரிசையிலிருந்து முற்றிலும் தானியக்க நடையில் எழுதப்பட்ட ஒருப் புத்தகத்தை எடுத்துக் கொடுத்து இதைப் படித்திருக்கிறீர்களா என்றுக் கேட்பேன். அவரும் வாங்கி "கோணங்கி... ஆத்தர் பேரு வித்தியாசமா இருக்கே.." என்றவாறு புத்தகத்தைத் தற்போக்காகத் திறந்து ஒரு - ஒரே ஒரு - வாக்கியத்தைப் படிக்க முயல்வார்.

"நாமறியாத கிரகத்தில் சுழலும் பாதரஸ ஓநாய்களின் நரம்புகள் மெய்யெழுத்தொலியாய் நீண்டுவர ஒலி அலகுகளில் வளையும் கமகங்கள் கிரக இடை சூன்யத்தில் ஆலாபிக்க வேறு இருகால அடுக்கில் பின் முன்மொழிமாற காலத்துகள் நுண்மையாய் சேரும் பொழுதுகள் புலர்ந்து பச்சிலைகளின் அகர வரிசை பதினாயிரம் இசைக்குறிப்புகளாய் பெருகி உயிர்மெய் சுருள்வில் ரசாயன அகராதியில் அணுக்கவைகள் புரண்டு மனிதப்பேச்சைவிடவும் புலனுக்கு எட்டாத நுண் ஒலிகள் மட்டும் பாதரஸ ஓநாய்கள் தொனிக்க வேதியிலை நரம்புகளின் பரிபாஷை ஓநாய்களின் உரையாடலாய் பச்சை உலகின் அந்தரங்க நுரையீரலில் சரமூச்சு திருகி அதிரும் ஓநாய்களின் மண்ணீரல் சவ்வுகளில் பரவிய துடிப்பறையில் பாலைநில எயினர் விரல் அலகுத்துடி மாற செந்நாய் தோன்றி மைவரைமேல் நின்று ஊளையிட்டது உருவற்று."

படித்து முடித்துவிட்டு திகிலும், மருட்சியும், "ஒருவேளை இவனுக்கு இதெல்லாம் புரிகிறதோ" என்றக் கொடிய சந்தேகமுமாய் நிமிரும் நண்பரின் பேயறைந்த முகத்தைப் பார்ப்பது வாழ்க்கையை வாழ லாயக்கானதாக மாற்றும் நானூற்று முப்பத்து ஏழு வகை அற்ப சந்தோஷங்களில் ஒன்று.

நவீன மெக்காலேக்கள்: சமூகநீதி எதிர்ப்பு அரசியல்

தொடரும் போட்டுவிட்டுத் தொலைந்துபோய் ஒரு மாதத்திற்கு மேலாகிவிட்ட நிலையில் எழுத நினைத்தவற்றை எல்லாம் மூளையின் மூலைகளிலிருந்துப் பொறுக்கியெடுத்து அடுக்குவது சற்றே ஆயாசம் தருவதாக இருக்கிறது. சென்ற பதிவில் சமஸ்கிருதமயமாக்கல் எனும் போக்கின் நீட்சியாக படித்த, நகர்புற ஆதிக்கசாதியினரின் அடையாளங்களை ஒடுக்கப்பட்ட சமூக மக்கள் நகலெடுப்பது அண்மைக்காலமாக மிகவும் தீவிரமடைந்திருப்பதைப் பற்றி எழுதியிருந்தேன். இயற்கையான சமூக நிகழ்வாக பார்க்கப்படும் இந்த போக்கு உண்மையில் சமூக நீதிக்கு எதிரான சக்திகளுக்கு மிகவும் சாதகமாக இருப்பதையும் அதன் காரணமாகவே அவர்களால் ஊக்குவிக்கப்படுவதையும் அலசுவது அல்லது துவைத்து உலர்த்துவது இந்தப் பதிவின் நோக்கங்களில் ஒன்று.

இந்த நகலெடுப்பு முழுக்க முழுக்க திட்டமிட்டு நடத்தப்படுகிறது என்று நான் சொல்லவில்லை. சிலப் பத்தாண்டுகளுக்கு முன்பு இந்த போக்கைத் தொடங்கி வைத்த ஒடுக்கப்பட்ட சமூகங்களைச் சேர்ந்தவர்களுக்கு வேறு வழியேதும் இருக்கவில்லை. ஐம்பதுகளிலும் அறுபதுகளிலும் அதுவரை கல்லூரிப் படிப்பையோ அரசு வேலையையோ அறியாத சமூகங்களிலிருந்து முதன்முறையாக கல்விப் பெற்று அலுவலக வேலைகளுக்குச் சென்றவர்கள் விரைவிலேயே ஒன்றைப் புரிந்துக் கொண்டார்கள். தன்னுடன் பணிபுரிபவர்களில் மிகப் பெரும்பாலானவர்கள் தன்னுடைய சமூகம் குறித்து தாழ்வான எண்ணம் கொண்ட ஆதிக்கசாதியினர் என்பதே அது. அவர்களைப் போலவே நடந்துக் கொள்வதின் மூலம் அவர்களது அங்கீகாரத்தைப் பெற்று அவர்களது உள் வட்டங்களில் நுழைந்துவிடலாம் என்ற கனவில் தங்கள் பழக்கங்கள், ரசனைகள், பேச்சு, வாசிப்பு, வீட்டிலிருந்து எடுத்துவரும் மதிய உணவு என்று எல்லாவற்றையும் மாற்றிக் கொண்டார்கள். தங்கள் சமுகத்துடன் தொடர்புடையதாகக் கருதப்படும் குலக்குறிகளை மிகக் கவனமாக மறைத்தார்கள். என்னுடைய சுற்றத்தில் இத்தகைய நகலெடுப்பில் கரைகண்ட பிதாமகன்கள் அனைவரின் தொடக்கமும் இப்படித்தான் இருந்திருக்கிறது.

சமூக நீதியை விரும்புபவன் என்ற முறையில் இந்த போக்கினால் விளையும் மிக மோசமான துன்பியல் நிகழ்வாக நான் கருதுவது இதைத் தான்: தன் சமூக அடையாளங்கள் குறித்து வெட்கம் கொண்டு அவற்றை மறைத்து ஆதிக்கச் சாதியினரின் அடையாளங்களை விரும்பி அணியும் ஒருவர் தன்னுடைய சாதி இழிவானது என்றும் ஆதிக்க சாதி உயர்வானது என்றும் தன் மனதின் ஆழத்தில் ஏற்றுக்கொள்கிறார். தன் சுற்றம் மற்றும் பிள்ளைகளின் மனதிலும் இந்த எண்ணத்தை ஏற்றுகிறார். (தர்க்கத்தின் மூலம் உருவாக்கப்படாத இத்தகைய எண்ணங்களை பின்னாளில் தர்க்கத்தின் மூலம் மாற்றுவது மிகவும் கடினம்.) சாதி அமைப்பு எவ்வித சீர்திருத்தமும் இன்றித் தொடரவேண்டும் என்று விரும்புவோரின் அதிகப்பட்ச எதிர்பார்ப்பு இதுதான்.

ஒடுக்கப்பட்ட சமூக மக்கள் தங்கள் குலக்குறிகளை மறைப்பதற்காக எந்த அளவிற்கு சிரமம் எடுத்துக் கொள்வார்கள் என்பதை மிக அருகில் இருந்துப் பார்த்த அனுபவம் எனக்கு நிறைய உண்டு. குமரி மாவட்டத்தில் கடந்தகாலத்தில் கடும் அடக்குமுறைகளுக்கு உள்ளான நாடார் மற்றும் மீனவ சமூகத்தினருக்கு அவர்கள் சாதியுடன் தொடர்புடையதாக அறியப்படும் தனிப் பேச்சு வழக்கு உண்டு. எடுத்துக்காட்டாக நாடார்களில் பலர் தங்களுக்குள் பேசிக்கொள்ளும்போது "அவர்கள் வந்தார்கள்" என்பதற்கு "அவிய வந்தாவ" என்பார்கள். மீனவர்கள் ஈழத்தின் சிலப் பகுதிகளில் பேசப்படுவதைப் போல மிகவும் இழுத்து பேசுவார்கள். ஆனால் மற்ற சமூகத்தினர் முன்னிலையில் பேச்சில் இந்த அடையாளங்கள் வெளிப்பட்டுவிடக் கூடாது என்பதில் மிகவும் கவனம் எடுத்துக் கொள்வார்கள்.

அதே நேரத்தில் 'உயர்'சாதியினரில் பலரும் மற்ற சமூகத்தினருடன் உரையாடும்போது பேச்சில் தம் சாதி வழக்கை தவிர்க்க முயல்வதில்லை. முற்போக்குவாதம் பேசும் அறிவுஜீவிகள் கூட தங்கள் குலக்குறிகளை பொதுவில் வெளிப்படுத்துவதில் எவ்வித தயக்கமோ வெட்கமோ கொள்வதில்லை. உண்மையில் அத்தகைய அடையாளங்கள் பெருமைக்குரிய ஒன்றாகவே சமூகத்தால் பார்க்கப்படுகிறது. தொலைக்காட்சி வந்தப் புதிதில் வெளிவந்த வெற்றிகரமான விளம்பரங்களில் பல அப்பட்டமான 'உயர்'சாதி அடையாளங்களையும் சூழலையும் கொண்டவை. ("பேஷ் பேஷ் ரொம்ப நன்னா இருக்கு", "நீ கொழந்தையா இருக்கச்சே அதத்தான் கொடுத்தேன்"...)

****

கேள்வி: மேட்டுக்குடியினரின் கலாச்சாரத்தை மற்றவர்கள் நகலெடுக்கும் போக்குக்கு யார் முக்கியக் காரணம், நகலெடுப்பவர்களா நகலெடுக்கப்படுபவர்களா?

ஏதாவது ஒன்றைப் பெரும்பாலானவர்கள் பின்பற்ற வேண்டும் என்றால் அது உயர்வானது/நாகரிகமானது என்ற பொதுக்கருத்து நிலவ வேண்டும். இந்தியாவைப் பொறுத்தவரை இத்தகைய பொதுக்கருத்துக்கள் உருவாக்கப்படுதலில் ஜனநாயகத்தன்மை அறவே இல்லை என்பதே உண்மை. எடுத்துக்காட்டாக கிரிக்கெட் விளையாட்டைப் பற்றிய பொதுக்கருத்தை உருவாக்கியதில் நாளிதழில் மற்ற அனைத்து விளையாட்டுக்களுக்கும் சேர்த்து அளிக்கப்படும் இடத்தை விட அதிகமாக கிரிக்கெட்டுக்கு அளித்த "தி ஹிண்டு" துணை ஆசிரியர், ஒரு கிரிக்கெட் போட்டியை "வர்ணிப்பதற்கு" அகில இந்திய வானொலியில் ஐந்து நாட்களை ஒதுக்கிய அதிகாரி என்று பலரின் பங்கும் இருக்கக்கூடும். ஆனால் இந்த கருத்துருவாக்கும் கூட்டத்தில் ஒடுக்கப்பட்ட சமூகத்தினருக்கு இடம் உண்டா, கிராமப்புற பின்னணி கொண்டோருக்கு இடம் உண்டா என்பதெல்லாம் சந்தேகமே. இது மட்டுமல்ல, எது அழகு எது அவலட்சணம், எது தேசபக்தி எது தேசத்துரோகம், எது பற்று எது வெறி என்று எல்லாவற்றைப் பற்றியும் பொதுக்கருத்து உருவாக்கியதில் கிட்டத்தட்ட முழுப்பங்கும் மேட்டுக்குடியினருடையதே. அண்மைக்காலமாக ஒடுக்கப்பட்ட மக்கள் தங்கள் சமூக அடையாளங்களை வெறுத்து ஒதுக்கி ஆதிக்க சாதிக் கலாச்சாரத்தை நகலெடுக்கும் போக்கு மேட்டுக்குடியினரால் பரவலாக விரும்பி ஊக்குவிக்கப்படுகிறது.

*****

கேள்வி: ஏன் இப்படி? யாம் பெற்ற இன்பம் பெறுக வையகம் என்ற நல்லெண்ணமா? White man's burden மாதிரி ஏதாவது? அதி உயர் நாகரிக சாகரத்தில் மூழ்கி எடுத்த முத்துக்களை எல்லாம் குப்பனோடும் சுப்பனோடும் பகிர்ந்துக் கொள்ளும் பரந்த மனப்பான்மை இந்திய மேட்டுக்குடியினரிடத்தில் தொன்றுத் தொட்டு இருந்து வருகிறதா?

இந்த இடத்தில் கொசுவர்த்திச் சுருளைக் கொஞ்சம் சுற்ற வேண்டியிருக்கிறது. உண்மையில் கொஞ்சம் அல்ல நிறையவே. நூற்றைம்பது ஆண்டுகளுக்கு முன்னால் போக வேண்டும். வருடம் 1859. இடம் தென் திருவிதாங்கூர் (இன்றையக் குமரி மாவட்டம்). இரணியல், கோட்டார், திட்டுவிளை மற்றும் பல ஊர்களில் பெரும் கலவரம் வெடிக்கிறது. நாடார் சமூகத்தினரை நாயர்கள் கடுமையாக தாக்கி வீடுகளை எரிக்கின்றனர். காரணம் நாடார் பெண்கள் தங்கள் உடலின் மேல்பகுதியை மறைப்பதற்காக தோள்சீலை எனப்படும் ஒரு துணியை உடலுக்குக் குறுக்காக அணியத் துணிந்தது தான். (பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கம் வரை திருவிதாங்கூரில் சாணார் என்று அழைக்கப்பட்ட நாடார் மற்றும் ஏனைய ஒடுக்கப்பட்ட சமூகப் பெண்களுக்கு இடுப்புக்கு மேல் துணி அணியும் உரிமை இருக்கவில்லை. பின்னர் நாடார்களின் போராட்டங்கள் காரணமாகவும் ஐரோப்பிய மிஷனரிகள் ஆங்கில அரசாங்கத்தின் மூலம் கொடுத்த அழுத்தம் காரணமாகவும் 1829-ம் ஆண்டு திருவிதாங்கூர் அரசு நாடார் பெண்கள் குப்பாயம் எனப்படும் ஒருவித ரவிக்கையை மட்டும் அணியலாம் என்று அனுமதி அளித்திருந்தும் அது நாயர்களின் எதிர்ப்பு காரணமாக நடைமுறையில் சாத்தியமாகவில்லை.)

1859-ம் ஆண்டு நடந்தக் கலவரங்களின் போது முன்னம் போலவே திருவிதாங்கூர் அரசாங்கம் நாடார்களுக்கு எதிராகவும் 'உயர்'சாதியினருக்கு ஆதரவாகவும் - பெண்கள் தோள்சீலை அணிந்தது சட்டவிரோதம் என்ற - ஒரு நிலைப்பாட்டை எடுத்தது. பின்னர் சென்னை ஆங்கில கவர்னரின் கடும் அழுத்தம் காரணமாக மன்னர் மார்த்தாண்ட வர்மா (இசை மேதையாக அறியப்படும் ஸ்வாதி திருநாள் மகாராஜாவின் தம்பி) ஒரு பிரகடனம் வெளியிடுகிறார். அது பின்வருமாறு:

"சாணார் பெண்கள் தங்கள் உடலின் மேற்பகுதியை மறைக்கும் விஷயத்தில் உள்ள எல்லாக் கட்டுபாடுகளும் அகற்றப்படுகின்றன. அவர்கள் தாங்கள் விரும்பிய முறையில் தங்கள் மானத்தை மறைத்துக் கொள்ளலாம். ஆனால் ஒரு நிபந்தனைக்கு மட்டும் கட்டுப்படவேண்டும். உயர்சாதிப் பெண்களைப் போல உடை அணியக் கூடாது."

இந்தியாவின் மற்றப் பகுதிகளிலும் ஆதிக்க சாதியினரின் அடையாளங்களை ஒடுக்கப்பட்ட மக்கள் நகலெடுக்க முயன்றால் அவர்கள் மீது கடும் வன்முறை ஏவப்படுவதே வழக்கமாக இருந்து வந்துள்ளது. ஆண்டைகளும் அடிமைகளும் "அவரவர் இடத்தில்" இருந்து தத்தம் தனி அடையாளங்களைப் பேணவேண்டும் என்பதே கடந்த காலங்களில் இந்திய மேட்டுக்குடியினரின் நிலைபாடாக இருந்து வந்துள்ளது. அப்படி இருந்தவர்கள் இன்று தங்கள் முன்னாள் அடிமைகளின் தனி அடையாளங்களை அழித்து தங்கள் அடையாளங்களை - அதிகாரங்களை அல்ல - அவர்கள் மேல் திணிக்க முயல்வதற்கு என்னக் காரணம்?

காரணத்தை ஆங்கிலத்தில் universal adult franchise என்கிறார்கள். வயதுவந்த அனைவருக்கும் வாக்குரிமை. 1949-ம் ஆண்டு இந்திய அரசியலமைப்புச் சட்டம் அமைக்கப்பட்டுக் கொண்டிருந்தபோது மேற்கத்திய ஜனநாயகங்களைப் போலவே இந்தியாவிலும் அனைவருக்கும் வாக்குரிமை அளிக்கப்பட வேண்டும் என்றக் கருத்து நிலவியது. இதற்கு இந்திய மேட்டுக்குடியினர் மற்றும் ஆதிக்கச் சாதியினரிடம் இருந்து பரவலாக எதிர்ப்பு எழுந்தது. பெரும்பாலான மக்கள் படிப்பறிவில்லாத பாமரர்களாக இருக்கும் நாட்டில் அனைவருக்கும் வாக்குரிமை அளிப்பது ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தும் என்றுக் காரணம் சொல்லப்பட்டது. சில குறைந்தப்பட்சத் 'தகுதிகள்' உள்ளவர்களுக்கு மட்டும் ஒட்டுரிமை அளிக்கலாம் என்ற யோசனை முன்வைக்கப்பட்டது. "தி ஹிண்டு" நாளிதழ் அனைவருக்கும் வாக்குரிமை அளிப்பதைக் கடுமையாக எதிர்த்தது. அதன் ஆசிரியர் கஸ்தூரி ஸ்ரீனிவாசன் இவ்வாறு தலையங்கம் எழுதினார்: "பாமர மக்கள் தங்கள் அறியாமையின் காரணமாக ஏமாற்றுக்காரர்களின் ஆசை வார்த்தைகளில் மயங்கிவிடுவார்கள். இந்த விஷப்பரீட்சையை இன்னும் சில ஆண்டுகள் தள்ளிப் போடுவதால் எந்த இழப்பும் ஏற்பட்டுவிடாது". (பொழிப்புரை: "நாட்டில் பெரும்பான்மையாக இருக்கும் ஒடுக்கப்பட்ட மக்கள் தங்களை அரசியல் ரீதியாக ஒருங்கிணைத்து அதிகாரத்தைக் கைப்பற்றிவிடும் ஆபத்து இருப்பதால் அனைவருக்கும் வாக்குரிமை அளிக்கும் திட்டத்தைக் கைவிடவேண்டும்".)

அன்று இந்தியாவில் வலது, இடது, நடு என்று எல்லாவகை பெரிய அரசியல் இயக்கங்களுக்கும் சாதி அமைப்பின் இருப்பைக் கேள்விக் கேட்காத, சாதி ஒழிப்பு போன்ற நோக்கங்கள் ஏதும் அறவே இல்லாத 'உயர்'சாதி தலைமையே அமைந்திருந்த நிலையில் ஒடுக்கப்பட்ட மக்கள் ஆதிக்கசாதியினருக்கு எதிராக அணிதிரண்டு அதிகாரத்தைப் பிடிப்பதற்கான வாய்ப்பு மிகவும் குறைவாகவே காணப்பட்டது. ஆனால் இருபது ஆண்டுகளிலேயே நிலைமை மாறியது. தமிழ்நாட்டில் 'உயர்'சாதி எதிர்ப்பு அரசியலை அடையாளமாக கொண்ட இயக்கம் அதிகாரத்தைப் பிடித்தது. அகில இந்திய அளவில் எண்பதுகளின் இறுதியில் - மண்டல் பரிந்துரைகளுக்குப் பின் - மாற்றங்கள் தொடங்கின. நாட்டின் மிகப்பெரிய இரண்டு மாநிலங்களில் அமைப்புக்கு எதிரான பிற்படுத்தப்பட்ட மக்களின் தலைவர்களாக லாலு யாதவும் முலாயம் யாதவும் அதிகாரத்தைப் பிடித்தனர். தலித் மக்கள் கண்ஷிராம்/மாயாவதி தலைமையில் வலுவான சக்தியாக மாறினர். இட ஒதுக்கீடு எதிர்ப்பாளர்களின் கட்சியான பா.ஜ.க கூட கல்யாண் சிங், வகேலா, உமாபாரதி போன்ற பிற்படுத்தப்பட்டோரை மாநிலத் தலைமைகளாக முன்னிறுத்தவேண்டியக் கட்டாயம் ஏற்பட்டது. (பின்னர் இவர்கள் அனைவரும் "கட்சிக் கட்டுப்பாட்டை" மீறிச் செயல்பட்டதால் வெளியேற்றப்பட்டது வேறு கதை.)

இந்த போக்கை அப்படியே தொடர விடுவதற்கு ஆதிக்க சாதியினர் தயாராக இருக்கவில்லை. பிற்படுத்தப்பட்ட / தலித் மக்கள் தங்கள் சமூகங்களுடன் தங்களை அடையாளப்படுத்திக் கொண்டு, தங்கள் எண்ணிக்கை பலத்தைப் பயன்படுத்தி சமூக நீதிக்கான திட்டங்களுடன் வலுவான அரசியல் சக்திகளாக மாறுவதை தடுக்கும் நோக்கில் சில திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன. அவற்றில் முக்கியமானவை:

1. சிறுபான்மை மதத்தினரை ஆபத்தான எதிரிகளாகச் சித்தரிப்பதன் மூலம் ஒடுக்கப்பட்ட மக்களைத் தங்கள் சாதி அடையாளங்களை கைவிட வைத்து மதரீதியாக - 'உயர்'சாதித் தலைமையின் கீழ் - ஒன்றுகூட வைப்பது. ஒரு தலித்தின் வீட்டில் கல்யாணம் செய்வதற்கோ கறிச்சோறு உண்பதற்கோ தயாராக இல்லாத நிலையிலும் "நாம் அனைவரும் ஒன்று" என்ற பிரச்சாரம் மேற்கொள்வது இதன் ஒரு அங்கம். ஆனால் வெறும் கோஷங்களினால் மக்களை மதரீதியாக ஒருங்கிணைக்க முடியாது. அதற்கு நிறைய உயிர்பலி கொடுத்தாகவேண்டும். மண்டல் பரிந்துரைகளை அமல்படுத்த 1990-ல் முடிவுசெய்யப்பட்ட பின் அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு இந்தியாவில் மிக மோசமான மத வன்முறைகள் (ரதயாத்திரை - மசூதி இடிப்பு மற்றும் அதைத் தொடர்ந்தக் கலவரங்கள் - மும்பை குண்டுவெடிப்புகள்) நிகழ்ந்தது தற்செயலானது அல்ல. ஒவ்வொருக் கலவரத்துக்கு பிறகும் மக்களின் மத அடையாளம் முன்னிலும் தீவிரமாகிறது. 1982-ல் குமரி மாவட்டத்திலும், 1998-ல் கோவையிலும் நடந்த மத கலவரங்களுக்குப் பின் வந்த தேர்தலில் அதுவரை சாதி அடிப்படையில் பிரிந்திருந்த ஓட்டுகள் மதரீதியாகப் பிரிந்ததும் பா.ஜ.க வேட்பாளர்கள் முதன்முறையாக அப்பகுதிகளில் வெற்றிப்பெற்றதும் அண்மைய வரலாறு.

2. ஆதிக்க சாதியினருக்கு எதிராகத் தங்கள் சமூகத்தினரை அரசியல் ரீதியாக ஒன்று திரட்டுவதில் குறிப்பிடத்தக்க வெற்றிப் பெற்ற பிற்படுத்தப்பட்ட / தலித் தலைவர்களைப் (எ.கா: லாலு, முலாயம், மாயாவதி, ராமதாஸ்) பற்றிய மிகக் கேவலமான பிம்பத்தை ஊடகங்கள் மூலம் கட்டியெழுப்புவது. எப்படி எண்பதுகளில் அனைத்து தமிழ் ஊடகங்களும் ராமதாஸை மிகவும் அருவருக்கத்தக்க ஒரு சாதி வெறியராகச் சித்தரித்தனவோ, அதே போல் தொண்ணூறுகளில் லாலுவையும் மற்றவர்களையும் வட இந்திய ஊடகங்கள் நடத்தின. மேட்டுக்குடிக் பையன்கள் லாலுவை அடிமுட்டாளாகச் சித்தரிக்கும் "லாலு ஜோக்குகளை" (வெயிட் ப்ளீஸ் என்றுச் சொல்லும் விமானப் பணிப்பெண்ணிடம் லாலு 69 கிலோ என்றுச் சொல்லிவிட்டு நிற்காமல் போய்விடுகிறார். ஹஹ்ஹஹ்ஹா..) சகலருக்கும் மின்னஞ்சல் செய்து தங்கள் சமூகக் கடமையை நிறைவேற்றினார்கள். இன்று லாலுவைப் பற்றிய பிம்பம் மெல்ல மாறத் தொடங்குகிறது. (இந்திய ரயில்வே லாலுவின் தலைமையின் கீழ் குறிப்பிடத்தக்க, மறுக்கமுடியாத முன்னேற்றம் அடைந்து வருவது இன்று பலராலும் ஒப்புக்கொள்ளப்படுகிறது.)

ஒடுக்கப்பட்ட மக்களின் தலைவர்களைப் பற்றிய இத்தகைய இழிவான பிம்பங்கள் அவர்களது ஊழல், வன்முறை, திறமையின்மை மற்றும் சுயமுரண்கள் காரணமாகவே உருவாவதாக ஒருத் தோற்றத்தை ஊடகங்கள் ஏற்படுத்துகின்றன. உண்மையில் அவர்களின் சமுக நீதி அரசியல் காரணமாக மட்டுமே அவர்கள் மீது சேறு பூசப்படுகிறது. இதற்கு ஆதாரம் வேண்டுவோர் வி.பி.சிங்கை பற்றி 1989-ம் ஆண்டு நிலவிய ஊடகப் பிம்பத்தையும் 1990-ம் ஆண்டு மண்டல் பரிந்துரைகள் அமலாக்கத்துக்குப் பிறகு உருவாக்கப்பட்ட பிம்பத்தையும் ஒப்பிட்டு நோக்க வேண்டும். இந்திய அரசியலை உய்விக்க வந்த மெசியாவாக "மிஸ்டர் க்ளீன்" என்றப் பட்டப் பெயருடன் கொண்டாடப்பட்ட அவருக்கு ஓராண்டு கழித்து ஒட்டுக்காக சாதி அரசியல் செய்யும் மலிவான அரசியல்வாதி என்ற முத்திரையையும் மிக மோசமான வசைகளையும் ஊடகங்கள் வழங்கின. அந்நாளைய நாளேடுகளைப் படிக்கும் ஒரு வெளிநாட்டவர் வி.பி.சிங் பிரதமராவதற்கு முன்னர் இந்தியா சாதிபேதங்கள் ஏதும் இன்றி சமத்துவபுரமாகத் திகழ்ந்தது என்ற முடிவுக்கு வரக்கூடும். (உ.பி-யிலோ பிகாரிலோ சில வருடங்களேனும் வாழ்ந்த ஒருவரால் தான் இதில் உள்ள அயோக்கியத்தனத்தை முழுவதுமாக உணரமுடியும். தென்னிந்தியாவைப் போலல்லாது அங்கே உயர்கல்வியிலோ, அரசு உயர்பதவிகளிலோ பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு அறவே பங்கில்லாமல் இருந்தது.)

3. பொதுவில் நடைபெறும் சமூக / அரசியல் விவாதங்களில் சாதியுடன் தொடர்புடைய பிரச்சனைகளைப் பேசுவது படித்தவர்களும் நாகரிகமானவர்களும் செய்யத்தகாதக் காரியம் என்றத் தோற்றத்தை ஏற்படுத்துவது. இதில் உள்ள மோசடி என்னவென்றால் "இந்தக் காலத்தில யாரு சார் கேஸ்ட் எல்லாம் பாக்கிறாங்க?" என்று இந்தப் பிரச்சாரத்தை மேற்கொள்வோரில் பெரும்பாலானவர்கள் தனி வாழ்வில் சாதி அமைப்பின் பாதுகாவலர்களாக விளங்குபவர்கள். தங்களால் முடிந்த அனைத்து வழிகளிலும் கலப்புத் திருமணம் போன்றவற்றை எதிர்த்து குலசங்கமம் ஏற்படாமல் பார்த்துக்கொள்பவர்கள்.

4. மேலே உள்ளவற்றை எல்லாம் விட பலமான ஒரு ஆயுதம் இருக்கிறது. அது அடக்குமுறைக்கு உள்ளாகும் மக்களின் தனி அடையாளங்களை அழித்து ஆதிக்கம் செலுத்துவோரின் அடையாளங்களை - பொது அடையாளங்கள் என்ற பேரில் - அவர்கள் மீதுத் திணிப்பது. இந்த யுத்தி எப்படி வேலை செய்கிறது? சற்று விளக்கமாகப் பார்ப்போம்.

*****

உரிமைப் போராட்டங்களில் அடையாளங்கள் மிகவும் முக்கியம். உரிமைகளுக்காக போராடுபவர்களுக்கும் உரிமைகளை மறுக்கும் ஆதிக்கச் சக்திகளுக்கும் இடையே தெளிவான, வேறுபட்ட அடையாளங்கள் இருத்தல் போராட்டத்தின் வெற்றிக்கு அவசியம்.

இதை சரியாகப் புரிந்துக்கொண்ட உரிமைப் போராட்டத் தலைவர்களில் காந்தி முக்கியமானவர். பாரிஸ்டர் காந்தி தன் ஆங்கில பாணி நடை உடை பாவனைகளை எல்லாம் துறந்து அரை வேட்டி, பஜனைப் பாடல்கள் பாடுதல் போன்ற இந்திய அடையாளங்களை ஏற்காமல் இருந்திருந்தால் அவரது போராட்டம் இந்த அளவு வெற்றிப் பெற்றிருக்குமா என்பது சந்தேகமே. மேலும் தன்னைப் பின்பற்றுபவர்கள் ஆங்கிலப் பாணி உடைகளை புறக்கணித்து இந்திய கதர் உடைகளை அணியவேண்டும் என்பது போன்ற பல விதிகளை அவர் வலியுறுத்தியது கவனிக்கத்தக்கது.

இன்னும் சற்று பொருத்தமான ஒரு எடுத்துக்காட்டாக அமெரிக்க கறுப்பினத்தவரின் உரிமைப் போராட்டத்தை எடுத்துக் கொள்ளலாம். பல நூற்றாண்டு அடிமை வாழ்வின் காரணமாக கறுப்பர்கள் தங்கள் மரபையும் கலாச்சாரத்தையும் முற்றாக இழந்திருந்த நிலையிலும் உரிமைப் போராட்டம் தீவிரமாக நடந்த காலத்தில் மால்கம் எக்ஸ் போன்றவர்களின் தாக்கத்தால் வெள்ளையர்களின் கலாச்சாரத்தையும், அடையாளங்களையும், மதத்தையும் நிராகரித்து கறுப்பர்களுக்கானத் தனி அடையாளங்களை உருவாக்கும் போக்கு உருவானது. அமெரிக்கப் பொது மரபாக முன்வைக்கப்பட்ட ஆங்கிலோ-சாக்ஸன் மரபை நிராகரித்து தங்கள் ஆப்பிரிக்க மரபுடன் தொடர்புடைய சின்னங்களை கறுப்பர்கள் முன்னிறுத்தினார்கள். ஆப்பிரிக்க அறுவடை பண்டிகைகளின் சாயல் கொண்ட க்வான்ஸா பண்டிகை கிருஸ்துமஸுக்கு மாற்றாக முன்வைக்கப்பட்டதை இங்கே சுட்டலாம்.

இன்றும் கூட மைக்கேல் ஜாக்ஸன் போன்ற சில விநோத நபர்களைத் தவிர்த்து பெரும்பாலான கறுப்பர்கள் வெள்ளையர்களாக மாறும் முயற்சியில் ஈடுபடுவதில்லை. தங்களுக்கென்று தனி பேச்சு வழக்கு, இசை, விளையாட்டுக்கள் என்று தனி அடையாளங்களுடன் வாழ்கின்றனர். அமெரிக்க அதிகார அமைப்பு எதிர் கலாச்சாரம் பேசிய மால்கம் எக்ஸ் போன்றவர்களை நிராகரித்து, வெள்ளையர்களின் கலாச்சாரத்தையும் மதத்தையும் ஏற்று செயல்பட்ட கிருஸ்தவ மதப் போதகர் மார்ட்டின் லூதர் கிங்கை கறுப்பர்களின் தலைவராக அங்கீகரித்தது. (இந்தியாவிலும் ஆதிக்க சாதியினரின் மரபையும் கலாச்சாரத்தையும் முழுமையாக ஏற்றுக்கொண்டு எதைக் குறித்தும் எதிர் நிலைபாடு எடுக்காத ஸ்ரீ நாராயண குரு போன்றோர் காட்டிய வழியிலேயே ஒடுக்கப்பட்ட மக்கள் தங்களை மேம்படுத்திக்கொள்ள வேண்டும் என்றும் மேற்படி மரபையும் கலாச்சாரத்தையும் நிராகரித்த பெரியார் போன்றவர்களை கடுமையாகத் தாக்கியும் வலதுசாரி சிந்தனையாளர்கள் தொடர்ந்து எழுதிவருவது இங்கே குறிப்பிடத்தக்கது.)

தனி அடையாளங்கள் மற்றும் எதிர் கலாச்சாரம் குறித்து இந்திய மேட்டுக்குடியினரிடையே இருக்கும் புரிதல் மற்றும் அச்சம் காரணமாகவே தங்கள் கலாச்சாரத்தை சமூக ரீதியாக பின்தங்கிய மக்கள் நகலெடுப்பதை ஊக்குவிக்கின்றனர். இதில் மற்றுமொரு துன்பியல் நிகழ்வு என்னவென்றால் மேட்டுக்குடி கலாச்சாரத்தையும் ரசனைகளையும் நகலெடுப்போர் அதோடு நிறுத்திக்கொள்வதில்லை. அவர்களது அரசியலையும் ஏற்றுக்கொள்கிறார்கள். மிகவும் பின்தங்கிய சமூகங்களைச் சேர்ந்த என் நண்பர்கள் பலர் கல்வியிலும் பொருளாதாரத்திலும் ஓரளவு முன்னேற்றம் கண்ட பின் சமூக நீதிக்கு எதிரான தீவிர வலதுசாரி கருத்துக்களைக் கொண்டிருப்பதைக் கவனித்திருக்கிறேன். தகுதி, திறமை, தேசநலன் பற்றியெல்லாம் அவர்கள் பேசும்போது துக்ளக் கட்டுரைகளை மனப்பாடம் செய்து ஒப்பிக்கிறார்களா என்ற சந்தேகம் சிலநேரங்களில் ஏற்படுவதுண்டு. தன் சமூகத்தில் பெரும்பாலானவர்களுக்குக் கிடைக்காத சூழலும், கல்வி வாய்ப்புகளும், கணினி குமாஸ்தா உத்தியோகமும் தனக்குக் கிடைத்துவிட்டது என்பதனால் அநீதியை அடிப்படையாகக் கொண்ட அமைப்பின் தீவிர விசுவாசிகளாக மாறிவிடுகின்றனர். (இதை காண்டலீஸா சிண்ட்ரோம் அல்லது காலின் பவல் சிண்ட்ரோம் என்று அழைப்பது பொருத்தமாக இருக்கும் என்றுத் தோன்றுகிறது.)

இந்தப் போக்கை ஊக்குவிக்கும் வகையிலேயே இந்திய அதிகார அமைப்பு மற்றும் ஊடகங்களின் பல்வேறு செயல்பாடுகள் அமைந்துள்ளன. பின்தங்கிய சமூகங்களில் பிறந்திருந்தாலும் அந்த சமூகங்களுடன் தாங்கள் அடையாளப்படுத்தப்படுவதை அறவே விரும்பாத, அந்த சமூகங்களுக்கு இழைக்கப்படும் அநீதிகள் குறித்து எவ்வித எதிர்ப்பையோ கவலையையோ வெளிப்படுத்தாத, அதே நேரத்தில் மேட்டுக்குடி கலாச்சாரத்தையும் அரசியலையும் முழுவதுமாக ஏற்றுக்கொண்டவர்கள் (எ.கா: அப்துல் கலாம், இளையராஜா) விமரிசனங்களுக்கு அப்பாற்பட்ட புனிதப் பசுக்களாக சித்தரிக்கப்படுவது இதன் ஒரு அங்கம். உடன் பணிபுரிந்த நண்பர்களால் கலாம் அய்யர் என்று அழைக்கப்படும் அளவிற்கு கலாச்சார ரீதியாகத் தன்னை மாற்றிக்கொண்ட அப்துல் கலாம் மீது பொது விவாதங்களில் ஒரு சிறு விமரிசனம் வைக்கப்பட்டால் கூட அதற்கு ஆகக் கடுமையான எதிர்வினைகள் வழக்கமாக இஸ்லாமியர்கள் மீது அதீதக் காழ்ப்பை வெளிப்படுத்தும் வலதுசாரிகளிடமிருந்தே எழுவது ஒருவித நகைமுரண். ஒரு இஸ்லாமியர் / தலித் எப்படி இருக்கவேண்டும் என்று ஆதிக்க சக்திகள் விரும்புகின்றனவோ அதற்கு பல படிகள் மேலே அப்துல் கலாமும் இளையராஜாவும் இருக்கிறார்கள்.

இதெல்லாம் ஒருபக்கம் நடந்துக்கொண்டிருக்க இந்தப் போக்குக்கு ஒரு சித்தாந்த அடித்தளம் அமைத்துத் தரும் பணியில் வலதுசாரி அறிவுஜீவிகள் ஈடுபட்டிருக்கிறார்கள். முகத்திலறையும் யதார்த்தத்தைப் பொருட்படுத்தாமல் பேதங்களும் ஏற்றத்தாழ்வுகளும் பிறப்பின் அடிப்படையில் அல்ல மாறாக குண கர்ம அடிப்படையிலேயே உருவாக்கப்பட்டவை என்றக் கருத்தை வலியுறுத்துதல் இதன் ஒரு அங்கம். ஆனால் தங்கள் அரசியல் கட்டாயங்களுக்காக "குண கர்ம விபாகச" என்ற வரிக்கு இன்று இவர்கள் அளிக்கும் பொழிப்புரையை இவர்களது சகபயணிகள் பலரால் தெய்வமாக மதிக்கப்படும் ஒருப் பெரியவர் துவைத்து தொங்கப்போடுவதை
இங்கே பார்க்கலாம். மேற்படி பெரியவர் காந்தியிடமிருந்து எடுத்து இட்டிருக்கும் ஒரு மேற்கோள் 1947-க்கு முன்னால் இந்த வரிக்கு என்னப் பொருள் நிலவியது என்பதை சந்தேகத்துக்கு இடமில்லாமல் தெளிவாக்குகிறது.

கலாச்சார நகலெடுப்பின் விளைவுகள் பற்றிய ஒரு தெளிவான புரிதல் மெக்காலேக்கு 1835-யிலேயே இருந்திருக்கிறது. அதனால் தான் இரத்தத்தாலும் நிறத்தாலும் மட்டும் இந்தியர்களாவும் சிந்தனை, கருத்துக்கள், மொழி, ரசனைகள் ஆகியவற்றால் - குண கர்ம அடிப்படையில் - ஆங்கிலேயர்களாகவும் இருக்கும் பழுப்புத் துரைகளை உருவாக்கப் பரிந்துரைத்தார். ஆனால் இந்த பழுப்புத் துரைகள் தங்கள் பாசாங்குகளில் தாங்களே ஏமாந்து வெள்ளையர்களுக்கு மட்டுமே உரிமை உள்ள ரயில் பெட்டிகளிலோ, மற்ற உள் வட்டங்களிலோ அதிகார மையங்களிலோ நுழைய முயன்றால் தூக்கி வெளியே வீசப்படுவார்கள் என்பது மெக்காலேக்கு தெரியும். நவீன மெக்காலேக்களுக்கும் தெரியும்.

பி.கு: எழுதி முடித்தப் பிறகு தான் நீளத்தைக் கவனித்தேன். வெட்டிச் சுருக்க மனமில்லை. சுருக்கமாக எழுதுமாறு கேட்டுக்கொண்ட நண்பர்கள் நாய் வாலை நிமிர்த்துவதில் உள்ள நடைமுறைச் சிக்கல்களைப் பற்றி யோசித்துக் கொண்டிருக்கக்கூடும். அவர்களுக்கு என் வருத்தங்கள்.