நவீன மெக்காலேக்களும் நகலெடுப்பு இயந்திரங்களும்

தாமஸ் பபிங்டன் மெக்காலே என்ற மனிதர் இறந்து சுமார் நூற்றைம்பது ஆண்டுகள் ஆகின்றன. பிரிட்டனில் உள்ள அவரது வழித்தோன்றல்கள் கூட அவரை மறந்திருக்கக் கூடும். ஆனால் இந்திய சமூகவியல் குறித்தான விவாதங்களில் மெக்காலே ஒருத் தவிர்க்க முடியாதப் பெயர். மேற்கத்தியக் கலாச்சாரத்தையும் வாழ்வுமுறையையும் முழுமையாகக் கடைப்பிடிக்கும் இந்தியர்கள் "மெக்காலேயின் மக்கள்" என்றுக் குறிக்கப்படுகிறார்கள். இதற்குக் காரணம் 1835-ஆம் ஆண்டு இந்தியக் கல்விமுறைக் குறித்து அவர் வெளியிட்ட ஒரு அறிக்கை. அதில் "இரத்தத்தாலும் நிறத்தாலும் மட்டுமே இந்தியர்களாகவும் சிந்தனை, ரசனை மற்றும் கொள்கைகளின் அடிப்படையில் ஆங்கிலேயர்களாகவும்" இருக்கும் பழுப்புத் துரைகளை உருவாக்கும் வகையில் கல்விமுறை அமைக்கப்பட வேண்டும் என்று மெக்காலே அன்றைய ஆங்கில காலனித்துவ அரசுக்குப் பரிந்துரைத்தார். அந்தப் பரிந்துரை பின்னாளில் மிக வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டது என்பதைச் சொல்லத் தேவையில்லை.

அத்தகைய ஒரு பழுப்புத் துரையைப் பற்றிய குஷ்வந்த் சிங்கின் "கர்மா" என்ற சிறுகதை எனக்கு பள்ளியில் ஆங்கிலத் துணைப் பாடத்தில் இடம்பெற்றிருந்தது. அந்தக் கதையின் முக்கிய பாத்திரமான சர் மோகன் ஆங்கிலக் கனவான்களின் நாகரீக உடை, ஆக்ஸ்ஃபோர்டு உச்சரிப்பு என்று அனைத்து விதங்களிலும் ஆங்கிலேயர்களைப் போலவே வாழ்பவர். மேற்கத்திய நாகரிகத்தில் எவ்வித அறிமுகமும் இல்லாத தன் மனைவியுடன் சேர்ந்து பயணம் செய்வதைக் கூட அவமானமாக நினைப்பவர். கதையின் இறுதியில் ரயிலின் முதல் வகுப்புப் பெட்டியிலிருந்து ஆங்கில சிப்பாய்களால் சர் மோகன் வெளியே தூக்கி எறியப்படுகிறார். நடைபாதையில் விழுந்துக் கிடக்கையில் தான் சர் மோகனுக்கு தன்னுடைய "கர்மா" விளங்குகிறது. தான் எவ்வளவு தான் ஆங்கிலேயர்களை நகலெடுத்தாலும் தன் பிறப்பின் காரணமாக தான் ஒரு ஆங்கிலேயனாக ஒருபோதும் எற்றுக்கொள்ளப்பட மாட்டோம் என்ற எளிய உண்மையைப் புரிந்துக்கொள்கிறார்.

(கதையில் ரயிலில் இருந்து வெளியேற்றப்படுபவர் பெயர் மோகன் என்றிருப்பது தற்செயல் அல்ல என்றே நினைக்கிறேன். இப்படித் தூக்கி எறியப்பட்ட இன்னொரு மோகன் தான் அதுவரைக் கொண்டிருந்த அனைத்து ஆங்கில அடையாளங்களையும் இழந்து ஆங்கில எதிர்ப்பாளராக மாறியக் கதை அனைவரும் அறிந்ததே.)

****

எம். என். ஸ்ரீனிவாஸ் என்ற இந்திய சமூகவியலாளர் அவர் அறிமுகப்படுத்திய சமஸ்கிருதமயமாக்கல் என்ற சொல்லுக்காக அறியப்படுகிறார். இந்திய சாதி அடுக்கில் கீழே இருக்கும் பிரிவினர் மேலே இருப்போரின் கலாச்சாரத்தையும், சடங்குகளையும் பழக்கவழக்கங்களையும் நகலெடுப்பதின் மூலம் தங்கள் சமூக நிலையை உயர்த்திக்கொள்ள முயலும் போக்கே சமஸ்கிருதமயமாக்கல் எனக் குறிக்கப்படுகிறது.

இது பல நூற்றாண்டுகளாக நடந்து வரும் ஒன்று தான் என்றாலும் அண்மைக் காலமாக இந்தப் போக்கு ஒருவித பரிணாம வளர்ச்சி அடைந்திருக்கிறது என்று சொல்லலாம். இதற்கு முக்கிய காரணம் இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் முதல் தலைமுறையாக கல்வியும் அதன் மூலமாக "வெள்ளைக் காலர்" வேலைகளையும் பெற்றப் பிற்படுத்தப்பட்ட / தலித் மக்கள் தங்களை "நாகரிகமானவர்கள்" என்றுக் காட்டிக் கொள்வதற்காக தங்கள் சமூக அடையாளங்களை மறைத்து மேட்டுக்குடியினரின் சமூக அடையாளங்களை விரும்பி அணிந்துக்கொள்வது தான். (இந்தப் பதிவில் மேட்டுக்குடியினர் என்ற சொல்லை நகர்புறங்களில் வாழும், பல தலைமுறைகளாக கல்வி அறிமுகம் உள்ள, 'உயர்'சாதியினரைக் குறிக்கப் பயன்படுத்துகிறேன்.) மற்றொரு குறிப்பிடத்தகுந்த காரணம் தொலைக்காட்சியின் வருகை. மேட்டுக்குடியினரின் வாழ்க்கை, கலாச்சாரம், ரசனை, அரசியல் ஆகியவற்றை அவர்களின் சமூக வட்டத்துக்கு வெளியே உள்ள மக்களிடம் கடை விரித்ததில் தொலைக்காட்சியின் பங்கைப் புறந்தள்ள முடியாது.

இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன் வரை முற்றிலும் மேட்டுக்குடியினருடன் தொடர்புடையதாக அறியப்பட்ட எத்தனையோ ரசனைகள் இன்று அனைத்து இந்தியர்களின் பொதுவான ரசனையாக உருமாறியிருப்பதைக் காணலாம். இதற்கு கிரிக்கெட்டை விட ஒரு சிறந்த எடுத்துக்காட்டு இருப்பதாக தெரியவில்லை. இன்று கிரிக்கெட் இந்திய வாழ்வின் பிரிக்க முடியாத ஒரு அங்கம். கிரிக்கெட்டில் சற்றும் ஆர்வம் இல்லை என்றுச் சொல்லும் இந்தியன் ஒரு வினோதப் பிறவியைப் போல் பார்க்கப்படுவது சகஜமான நிகழ்வு. ஆனால் கால் நூற்றாண்டுக் காலம் முன்பு வரை கிரிக்கெட் பெருநகரங்களுக்கு வெளியே அதிகம் அறியப்படாத ஒன்றாகவே இருந்தது. எண்பதுகளின் தொடக்கம் வரை இந்தியாவுக்காக விளையாடியவர்களின் பட்டியலை ஆராய்ந்தால் குறைந்தது நூற்றுக்கு தொண்ணூறு பேர் மும்பை, பெங்களூர், சென்னைப் போன்ற பெருநகரங்களைச் சேர்ந்தவர்களாக இருப்பர். சில அபூர்வமான விதிவிலக்குகளைத் தவிர மற்ற அனைவருமே சாதி அடுக்கின் உச்சத்தில் இருப்பவர்கள். தமிழக வீரர்களின் பட்டியலை (ரங்காச்சாரி, வெங்கட்ராகவன், ஸ்ரீகாந்த், சிவராமகிருஷ்ணன்..) ஆராய்ந்தாலும் அதே முடிவு தான் கிட்டும்.

மேட்டுக்குடியினருடையக் கலாச்சாரம் தேசியக் கலாச்சாரமாகவும், அவர்களது நலன்கள் தேசிய நலனாகவும் எந்தக் கேள்வியுமில்லால் ஏற்றுக்கொள்ளப்பட்டுவிட்டதைப் போல கிரிக்கெட்டும் இன்றுத் தேசிய விளையாட்டாகிவிட்டது. நூறு கோடி மக்கள் இருந்தும் ஒவ்வொரு ஒலிம்பிக் போட்டியிலும் கடும் வறுமை நிலவும் ஆப்பிரிக்க நாடுகளுடன் கூடப் போட்டியிட வலுவில்லாமல் ஒற்றை வெங்கலப் பதக்கத்துக்கே திண்டாடும் நிலைக்கு இந்தியாவை தள்ளியதில் கிரிக்கெட்டுக்குக் கொடுக்கப்படும் அதீத முக்கியத்துவம் ஒரு முக்கியக் காரணம். அடிப்படையில் ஆங்கிலேய நிலபிரபுத்துவத்தின் எச்சமான கிரிக்கெட் உழைக்கும் வர்க்கத்துக்குரிய ஒரு விளையாட்டல்ல. பெரும்பாலும் வெற்றித் தோல்வியின்றி முடியும் ஒரு விளையாட்டுக்காக ஐந்து முழு நாட்களைச் செலவிடுவது அவர்களுக்கு சாத்தியமும் இல்லை. காற்பந்து போன்ற விளையாட்டுக்களே அடித்தட்டு மக்களுக்கு ஏற்றவை. பெலே, மாரடோனா போன்ற உலகின் தலைசிறந்த காற்பந்து மேதைகளில் பலர் சேரிகளில் பிறந்தவர்கள். இந்தியாவில் கிரிக்கெட் வெறி தீவிரமடைவதற்கு முன் காற்பந்து மிகப் பிரபலமாக இருந்த கேரளத்திலும் மேற்கு வங்காளத்திலும் இடதுசாரிகளின் தாக்கம் மிக அதிகமாக இருப்பது கவனிக்கத்தக்கது. கிரிக்கெட் இந்தியாவில் இயற்கையாகவே பிரபலம் அடைந்தது என்ற வாதம் ஏற்றுக்கொள்ளத் தக்கதல்ல. உலகில் தொண்ணூற்றைந்து விழுக்காடு நாடுகளால் சீண்டப்படாமல் இருக்கும் இந்த விளையாட்டுக்கு அத்தகைய சிறப்புத் தகுதிகள் ஏதும் இருப்பதாகத் தெரியவில்லை.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை இத்தகைய நகலெடுக்கும் போக்கின் ஒரு முக்கிய அம்சம் அளவுக்கதிகமான ஆங்கிலம் கலந்தப் பேச்சு. இந்தியாவில் கிட்டத்தட்ட அனைத்து மாநிலங்களைச் சேர்ந்தவர்களுடனும் பழகும் வாய்ப்பு எனக்குக் கிடைத்திருக்கிறது. பல்வேறு மொழி பேசுவோருடன் வெவ்வேறு காலகட்டங்களில் ஒரே வீட்டில் வாழ்ந்திருக்கிறேன். அந்த வகையில் ஒன்றைச் சொல்லமுடியும். தமிழர்கள் அளவுக்கு தங்கள் தாய்மொழியில் ஆங்கிலம் கலந்துப் பேசுவோர் வேறு எவரும் இல்லை. குமரி மாவட்டத்தில் கூட - ஆங்கிலேயர்களின் நேரடி ஆட்சியின் கீழ் ஒருபோதும் இருந்திராததாலோ என்னவோ - அண்மைக்காலம் வரை பேச்சுத் தமிழில் ஆங்கிலக் கலப்பு மிகக் குறைவாகவே இருந்தது. ஐரோப்பியர்கள் மூலம் அறிமுகமானவற்றுக்கு மட்டுமே (எ.கா: பஸ், ஃபோன்) ஆங்கிலச் சொற்கள் பயன்படுத்தப்பட்டு வந்தது. ஆனால் காலங்காலமாக தமிழில் வழங்கி வந்த அடிப்படை வினைச்சொற்கள், எண்கள், நிறங்கள் ஆகியற்றுக்குக் கூட ஆங்கிலச் சொற்களைப் பயன்படுத்தும் கலாச்சாரத்தை உருவாக்கியப் பெருமை சென்னைவாசிகளையே சேரும்.

எண்பதுகளில் பள்ளி மாணவனாக சென்னைக்கு வந்தப் புதிதில் ஒருமுறை பேருந்தில் பயணம் செய்துக் கொண்டிருந்தேன். கையில் மீன்கூடையை வைத்திருந்தப் பெண் தான் இறங்குவதற்கு முன் வண்டியை எடுத்துவிட்ட ஓட்டுநரைப் பார்த்து "ஹோல்டான்.." என்றுக் கத்தியபோது அது குப்பத்து மொழியில் மோசமானதொரு வசையாக இருக்கக்கூடும் என்றே முதலில் நினைத்தேன். அது "hold on" என்று பின்னர் தெரிந்துக் கொண்டபோது சென்னைக்காரர்களின் ஆங்கிலப் புலமையை நினைத்து மலைப்பாக இருந்தது. குமரி மாவட்டத்தில் ஹோல்டான் கிடையாது. என்னதான் ஆங்கிலத்தைக் கரைத்துக் குடித்தவராக இருந்தாலும் "ஆள் இறக்கம்" என்று ஒரு குரல் கொடுத்தால் தான் வண்டி நிற்கும். கிழக்கிந்தியக் கம்பெனிக் காலத்திலிருந்தே சென்னை ஆங்கில அரசுக் குமாஸ்தாக்களின் மெக்காவாக இருந்து வந்தது. ஆங்கில சொற்களைக் கலந்து தமிழ் பேசும் வழக்கத்தை முதலில் தொடங்கி வைத்த இவர்களது ஆங்கில மோகத்தை பாரதி கடுமையாக விமரிசித்திருக்கிறார். அன்று அரசுப்பணியில் இருந்தவர்கள் முழுக்க முழுக்க உயர்சாதியினர் என்பதால் இவர்களது வழக்கம் பின்னாளில் பிற்படுத்தப்பட்ட மற்றும் தலித் மக்களால் பின்பற்றப்பட்டது பேச்சுத் தமிழின் இன்றைய நிலைக்கு ஒரு முக்கியக் காரணம்.

இன்று தமிழ்நாட்டில் நிலவும் அதீத ஆங்கிலக் கலப்பு இயற்கையாக நிகழ்ந்த தவிர்க்க முடியாத ஒரு மாற்றம் என்று சிலர் சொல்லக்கூடும். ஆனால் அது உண்மையல்ல. தமிழ்நாட்டவர்களைப் போலவே ஆங்கில காலனி ஆட்சியின் கீழ் இருந்த, ஆங்கில அரசுப் பணி மீது அதீத மோகம் கொண்டிருந்த ஈழத்தமிழர்களின் பேச்சில் ஆங்கிலக் கலப்பு ஒப்புநோக்க மிகவும் குறைவாகவே இருக்கிறது. மேலும் "திரும்பிப் பார்த்துச் சிரித்தான்" என்பது "டர்ண் பண்ணி ஸ்மைல் பண்ணினான்" என்று மாறுவது இயல்பான மொழிமாற்றம் அல்ல.

தமிழகத்தில் நிகழ்ந்த இந்த மாற்றத்துக்குப் பின்னால் ஒரு வலுவான அரசியல் உண்டு. சமூக நீதியை நோக்கமாகக் கொண்டு உருவான திராவிட இயக்கம் என்றைக்குத் தமிழைத் தன் அடையாளமாக்கிக் கொண்டுத் தனித்தமிழை வலியுறுத்தத் தொடங்கியதோ அன்றிலிருந்து தமிழ் ஆர்வலர்களை இழிவாகச் சித்தரிக்கும் ஒரு அரசியலை பெரும்போக்கு ஊடகங்கள் முன்னெடுக்கத் தொடங்கின. தீவிர வலதுசாரி ஏடுகளான தினமலர், துக்ளக் போன்றவற்றில் நையாண்டி என்றப் பெயரில் வெளிப்படையாகவே ("தமிளு வாளுக") நடத்தப்படும் இந்த மூளைச்சலவை மற்ற ஊடகங்களில் பூடகமாக நடக்கிறது. பிறமொழிக் கலப்புக்கு எதிராகக் கருத்துத் தெரிவிப்பவர்களை மொழி வெறியர்கள் என்றுச் சித்தரிப்பது தமிழக ஊடகங்களிலும் தற்போது இணையத்திலும் சகஜமாக நடக்கும் ஒன்று. பேச்சுத்தமிழில் எஞ்சியிருக்கும் கொஞ்ச நஞ்ச தமிழ் சொற்களும் போய் நாளை "நான் ரோட்ல கோ பண்ணிக்கிட்டிருக்கும் போது அவன் ஆப்போசிட் சைட்ல கம் பண்ணிக்கிட்டிருந்தான்" என்றுப் பண்ணி மொழி பரிணாம வளர்ச்சி அடைந்தால் கூட யாரும் அதைக் கேள்விக் கேட்க முடியாது. கேட்டால் மொழிவெறி முத்திரைக் குத்தப்படுவது நிச்சயம்.

நகலெடுப்பாளர்களில் பலர் தமிழ் சொற்களைப் பயன்படுத்துவதில் மட்டுமல்லாமல் தமிழர்களின் மற்ற அனைத்து அடையாளங்கள் குறித்தும் தாழ்வு மனப்பான்மை கொண்டுள்ளனர். குழந்தைகளுக்குப் பெயர் சூட்டும் போது தமிழ் பெயர்களையோ தமிழன் என்று அடையாளம் காணத்தக்கப் பெயர்களையோ (எ.கா: 'அன்' விகுதி) அவர்கள் மறந்தும் கூட நினைப்பதில்லை. ஓரு தலைமுறை முன்பு வரை தமிழ்நாட்டில் கேட்டறியாத பொருள் தெரியாத வட இந்திய பெயர்களை சூட்டுவதே புரியாத சில பேர்க்கு புது நாகரீகமாக இருக்கிறது. நான் என் மகனுக்கு 'அன்' விகுதியுடன் தமிழ் பெயர் வைத்தபோது பல புருவங்கள் உயர்ந்தன. சமஸ்கிருதமயமாக்கலின் அனைத்துக் கூறுகளையும் தன்னகத்தே கொண்ட என் குடும்பத்தில் அந்த வழக்கம் இருந்ததில்லை. "எனக்குக் கூட தமிழ் பேர் வைக்க ஆசைதான். ஆனா மாடர்னா எதுவும் கிடைக்கல" என்றுத் தன்னிலை விளக்கம் அளித்த நண்பர்களும் உண்டு.

பெரும்பாலான தமிழர்களால் இழிவாக நோக்கப்படும் தமிழர்களின் மற்றொரு அடையாளம் கருப்பு நிறம். தமிழர்களின் வெள்ளைத் தோல் மோகத்துக்கு நம்முடைய சினிமாவும் அரசியலுமே முக்கிய ஆதாரங்கள். ஜெயலலிதாவை நேரில் பார்த்த அனுபவத்தை என்னிடம் விவரித்தவர்களில் கிட்டத்தட்ட யாருமே அவருடைய நிறத்தைக் குறிப்பிடாமல் இருந்ததில்லை. "என்ன நிறம் தெரியுமா? சுண்டினா ரத்தம் வந்திரும்." மனைவி கர்ப்பமாக இருக்கையில் ஒருத் தமிழ் கணவன் குங்குமப்பூ வாங்கிக் கொடுக்குமாறு வரும் அறிவுரைகளைச் சந்திக்காமல் இருப்பதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு. இதற்கும் சமஸ்கிருதமயமாக்கலுக்கும் என்ன தொடர்பு என்றுக் கேட்போர் கொஞ்சம் சிவப்பாக பெண் குழந்தைப் பிறந்தால் தமிழக கிராமப்புறங்களில் சிலாகித்துச் சொல்லப்படும் ஒரு வாக்கியத்தை விசாரித்தறிந்துத் தெளிவு பெறுக.

ஓருவேளை இப்படி நகலெடுக்கப்படுபவை எல்லாம் உண்மையிலே உயர்வானவையோ? கழுதைகளுக்குத் தெரியாத கற்பூர வாசனையாக இருக்கக்கூடுமோ? நிச்சயமாக இல்லை. உண்மையில் இவற்றில் உயர்ந்தவை தாழ்ந்தவை என்று எதுவும் இல்லை. உயர்ந்தவர்கள் தாழ்ந்தவர்கள் என்ற கருத்தாக்கம் மட்டுமே இங்கு மிக வலுவாக வேரூன்றியிருக்கிறது. மிக இழிவானதாகக் கருதப்படும் ஒன்றைக் கூட மேட்டுக்குடியினர் கையிலெடுத்துக் கொண்டால் அது மதிப்புக்குரியதாக மாறிவிடுவதே தமிழக சமூக வழக்கம். பரதநாட்டியத்தை இதற்கு எடுத்துக்காட்டாகச் சொல்லலாம். முதல் தலைமுறை வெள்ளைக் காலர் தமிழர்களில் பலர் தங்கள் பெண் குழந்தைகளை பரதநாட்டியம் படிக்க அனுப்புவதை பெருமையாகக் கருதுகிறார்கள். (கரகாட்டம் படிக்க அனுப்புவார்களா?) ஆனால் எண்பது ஆண்டுகளுக்கு முன் அது தேவரடியார்களின் கையில் இருந்தபோது மிகவும் இழிவாகவே நோக்கப்பட்டது. தேவ(ர)டியாள் என்பது இன்றைக்கு தமிழ்நாட்டின் மிகப்பெரிய இழிச்சொல்லாக இருப்பது போலவே ஆட்டக்காரி, நாட்டியக்காரி ஆகியவை வசைச்சொல்லாக பயன்படுத்தப்பட்டு வந்தன. ருக்மிணி தேவி அருண்டேல் அம்மையார் அதைக் கையிலெடுத்து கலாக்ஷேத்ராவைத் தொடங்கிய பின் தான் பரதநாட்டியத்துக்கு மதிப்புக் கூடியது.

****

கேள்வி: ஒருவன் கிரிக்கெட் வெறி பிடித்து அலைவதும், பண்ணி மொழிப் பேசுவதும், ஷாருக் கான் படங்களிலிருந்து தன் பிள்ளைக்குப் பெயரைத் தேர்வு செய்வதும் அவனது தனிமனித உரிமை இல்லையா? மற்றவர்களுக்கு இதனால் என்ன பிரச்சனை இருக்கமுடியும்?

நிறைய இருக்கிறது. ஆனால் பதிவின் நீளம் கூடிவிட்டதால் அதெல்லாம் அடுத்தப் பதிவில்.