அழிவின் நினைவுகள்

பங்குனிக்கு ஒருமுறை, பவுர்ணமிக்கு ஒருமுறை பதிவெழுதிக் கொண்டிருந்த நான் கடந்த மே மாதம் இட்ட சிறு இடுகைக்குப் பின் இந்தப் பக்கமே வரவில்லை. இணையத்தில் தமிழ் தளங்களை வாசிப்பதையும் வெகுவாகக் குறைத்துக்கொண்டேன். அந்த மே மாத நிகழ்வுகள் ஏற்படுத்திய பாதிப்பும் கசப்பான உணர்வுகளை மீண்டும் மீண்டும் வரவழைத்து தன்னைத்தானே வதைத்துக்கொள்ள விரும்பாததும் அதற்கான காரணங்களில் சில. இந்நிலையில் கடந்த வாரம் திரையரங்கு ஒன்றில் புலிப்படை தோற்று, அவமானப்படுத்தப்பட்டு அதன் தலைவன் கடற்கரையில் மடியும் அந்தக் காட்சியைக் கண்டபோது மீண்டும் அதே உணர்வுகள் எழுந்ததைத் தவிர்க்கமுடியவில்லை.

சென்றவாரம் முத்துக்குமாரின் நினைவு நாளை ஒட்டி தமிழகத்தின் பல பகுதிகளிலும் நடந்த நிகழ்வுகள் எதிர்பார்த்ததுபோலவே ஊடகங்களில் இருட்டடிக்கப்பட்டிருக்கின்றன. சென்ற ஆண்டு முத்துக்குமாரின் தியாகத்துக்குப் பின் தமிழகத்தில் உருவான எழுச்சி பரவாமல் தடுத்ததில் ஊடகங்களின் இருட்டடிப்புக்கு முக்கியமான பங்கு உண்டு. ஒரு ஜனநாயக நாட்டில் அரசின் செயல்பாடுகளுக்கு வேறு எந்த வகையில் எதிர்ப்பைக் காட்டியும் பயனில்லை என்ற நிலையில் ஒரு இளைஞன் தன்னைத்தானே கொளுத்திக்கொள்கிறான் என்றால் அது எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கவேண்டும்? வியட்நாமில் ஒரு பௌத்த துறவி இதை செய்தபோது அது உலகின் மனசாட்சியையே உலுக்கியது. ஆனால் நம் ஊடகங்கள் நடிகர் நடிகைகளின் மணமுறிவு பற்றிய செய்திகளுக்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தைக் கூட முத்துக்குமாரின் இறப்புக்கோ அதன் பிந்தைய நிகழ்வுகளுக்கோ அளிக்கவில்லை.

ஈழப்போரின் போது பல நேரங்களில் தமிழக ஊடகங்கள் தமிழகத்தில் ஈழத்தமிழர்களுக்கான ஆதரவை நீர்த்துப்போக செய்யவேண்டும் என்ற அதிகாரவர்க்கத்தின் நோக்கத்திற்கு சுயமாகவோ கட்டாயத்தின் பேரிலோ துணைபோயிருப்பதை நாம் காணமுடியும். எடுத்துக்காட்டாக செஞ்சோலை போன்ற இடங்களில் அப்பாவி மக்களின் மீது இலங்கை இராணுவம் நடத்திய கொடூரத் தாக்குதல்களுக்குப் பிறகு பெரும்பாலான தமிழக மக்கள் தமிழீழத்துக்கும் புலிகளுக்கும் ஆதரவான நிலைக்கு மாறினார்கள். (இதை பின்பு எடுக்கப்பபட்ட சில கருத்துக்கணிப்புகள் உறுதிசெய்தன.) இந்நிலையில் 2007-ஆம் ஆண்டு ஐந்து தமிழக மீனவர்களை நடுக்கடலில் சுட்டுக்கொன்றதும், பன்னிரண்டு மீனவர்களை கடத்திசென்றதும் புலிகள் தான் என்று இந்திய/தமிழக அரசு அதிகாரிகள் அறிவித்தனர். இதைக்குறித்து அதிகாரப்பூர்வமாக சொல்லப்பட்ட சிறுபிள்ளைத்தனமான கதையில் எத்தனையோ ஓட்டைகள் இருந்தும் யாரும் அதைக் கேள்வி கேட்கவில்லை. திரும்பி வந்த மீனவர்களுக்கு செய்தியாளர்களிடம் பேசக்கூடாது என்று கடுமையான வாய்ப்பூட்டு போடப்பட்டிருந்த நிலையில் அந்த மீனவர்கள் குழுவில் இருந்த சிறுவன் தங்களைக் கடத்தியது 'நேவி' தான் என்று தெளிவாகச் சொன்னதையும், மற்ற மீனவர்கள் சிறுவனைப் பேசவிடாமல் தடுத்ததையும் மக்கள் தொலைக்காட்சி மட்டுமே ஒளிபரப்பியது. இதுகுறித்து மூச்சுவிடும் துணிவுகூட மற்ற தமிழ் ஊடகங்களுக்கு இருக்கவில்லை. அதன் பிறகு அந்த மீனவர்களை சந்தித்து நடந்த உண்மைகளை அறிந்துக்கொள்ளும் முயற்சியில் யாரும் இறங்கியதாக தெரியவில்லை. இதுதான் நம் ஊடக சுதந்திரத்தின் அறிவிக்கப்படாத எல்லை. இறையாண்மை பூச்சாண்டி காட்டப்பட்டால் அதை மீறும் துணிவு மிகப்பெரும்பாலானவர்களுக்கு இல்லை என்பதே உண்மை.

இந்தியாவின் வெளிவிவகாரத்துறை மற்றும் பாதுகாப்புத் துறையில் தலைமைப் பதவிகளையெல்லாம் ஒரு சிறு இனக்குழுவைச் சேர்ந்த அதிகாரிகள் மொத்தமாகக் குத்தகைக்கு எடுத்திருப்பது குறித்தோ ஈழத்தமிழர் மீதான இனப்படுகொலையில் இவர்களது பங்கு குறித்து எழுப்பப்பட்டுள்ளக் குற்றச்சாட்டுகள் குறித்தோ ஊடகங்களில் ஒரு சிறு விவாதம் கூட சாத்தியமில்லை. மலையாளி என்று பலருக்கும் தெரியாத ஜே.என்.தீக்சித்துக்கு பின் எம்.கே.நாராயணன் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக வருகிறார். நாராயணனுக்குப் பிறகு அந்த இடத்துக்கு இப்போது சிவசங்கர் மேனன் வந்திருக்கிறார். வெளியுறவுச் செயலர் பதவியிலிருந்து சிவசங்கர் மேனன் விலகினால் அந்தப் பதவி நிருபமா மேனன் ராவ் என்ற மற்றொரு மலையாளிக்கே செல்கிறது. இவர்களில் நாராயணன் தவிர மற்ற மூவரும் இலங்கைக்கான இந்திய தூதராக இருந்தவர்கள் என்பதும் அப்படி இருந்தபோது வெளிப்படையான தமிழர்-எதிர்ப்பு நிலைப்பாட்டைக் கொண்டிருந்தவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. மலையாளிகளின் குழு உணர்வைக் குறித்து முன்பு நண்பர்கள் சிலர் பேசியபோது அத்தகைய பொதுமைப்படுத்தலுக்கு எதிராக நான் விவாதித்திருக்கிறேன். ஆனால் பல துறைகளிலும் இந்தப் போக்கையே காணமுடிகிறது. ஒரு அண்மைய எடுத்துக்காட்டைச் சொல்வதென்றால் மாதவன் நாயருக்குப் பிறகு இந்திய விண்வெளி ஆய்வுக்கழகத்தின் தலைவராக ராதாகிருஷ்ணன் வந்திருப்பதைச் சொல்லலாம். 'திறமைவாதிகள்' இதையெல்லாம் சற்றும் கண்டுக்கொள்ளாமல் இருப்பது ஆச்சரியம் தான்.

சென்ற ஆண்டு ஈழத்தில் குழந்தைகள் பெண்கள் உட்பட ஆயிரக்கணக்கானத் தமிழர்கள் கொன்றொழிக்கப்பட்ட நேரத்தில் தமிழரல்லாத இந்தியர்கள் வெளிப்படுத்திய அசாதாரணமான அக்கறையின்மையை இன்னும் ஐம்பது ஆண்டுகள் ஆனாலும் கூட மறக்கவோ மன்னிக்கவோ முடியாது. எவ்வித அரசியல் உணர்வோ பொது அக்கறையோ இல்லாதவர்கள் என்று நான் நினைத்திருந்த பல தமிழர்கள் கூட ஈழத்து நிகழ்வுகளால் கடும் மனச்சோர்வுக்கு உள்ளானதை அறிவேன். குழந்தைகள் கூட்டம் கூட்டமாக செத்துக் கிடக்கும் காட்சிகளைப் பார்த்த சிலருக்கு இரவில் உறங்குவது சாத்தியமில்லாமல் ஆனது. தமிழ்நாட்டில் பத்துக்கு மேற்பட்டவர்கள் தற்கொலை செய்துக்கொண்டார்கள். ஆனால் மற்ற இந்தியர்களிடம் இதுகுறித்து ஒரு சிறு சலனம் கூட எழவில்லை. இத்தகைய பேரழிவு நிகழ்ந்துக்கொண்டிருக்கும் போது இந்திய கிரிக்கெட் அணி இலங்கைக்கு சென்று விளையாடுவது குறித்த நெருடல் கூட எவருக்கும் இருக்கவில்லை. அருந்ததி ராய் கூட மிகவும் காலங்கடந்து ஒரு கட்டுரை எழுதிவிட்டு பின்பு வந்தவேகத்தில் பின்வாங்கினார். சென்னையிலுள்ள அவரது நண்பர்கள் சிலர் அவரைத் தடுத்தாட்கொண்டிருக்கக்கூடும். குஜராத்தில் முஸ்லீம்கள் கொல்லப்பட்டபோது, முஸ்லீம்கள் மட்டும் தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்திக்கொண்டிருக்க மற்றவர்கள் யாருமே கண்டுக்கொள்ளாமல் இருந்திருந்தால் எப்படி இருந்திருக்கும்? தமிழர்கள் ஆயிரக்கணக்கில் கொல்லப்பட்டுக்கொண்டிருந்தபோது மற்ற இந்தியர்கள் அதைத்தானே செய்தார்கள்?

பெரும்பாலான தமிழரல்லாத இந்தியர்களைப் பொறுத்தவரை இலங்கையில் உள்ள ஒரே பிரச்சனை தமிழ் பயங்கரவாதம் மட்டுமே. அங்கு வேறு எந்த பிரச்சனையும் இல்லை. அவர்களுக்குத் தொடர்ந்து சொல்லப்படுவது அதுதான். அது தவிர தமிழர்கள் மொழிவெறி பிடித்தவர்கள் என்ற சித்திரம் கடந்த ஒரு தலைமுறையாக அங்கே வலுவாகிவருகிறது என்பதை வடக்கே பல ஆண்டுகள் வாழ்ந்தவன் என்ற முறையில் என்னால் சொல்லமுடியும். பல வட இந்தியர்கள் இந்தி பேசத்தெரியாதத் தமிழர்களையும் வடகிழக்கை சேர்ந்தவர்களையும் சக இந்தியர்களாக ஏற்றுக்கொள்வதில்லை. அங்குள்ள ஊடகங்களுக்கு தமிழர்கள் குறித்து இருக்கும் இழிவான பார்வையும் தமிழர்கள் பற்றிய செய்திகளுக்கு அவர்கள் அளிக்கும் முக்கியத்துவமும் இந்திய ஆங்கிலத் தொலைக்காட்சிகளைத் தொடர்ந்து பார்ப்பவர்களுக்குத் தெரிந்திருக்கும். ஆஸ்திரேலியாவில் படிக்கப்போன பஞ்சாபி பையன்கள் தடுக்கி விழுந்தால் கூட இனவெறித் தாக்குதல் என்று மணிக்கணக்காக ஓலமிடும் இந்த தொலைக்காட்சிகள் இலங்கை கடற்படையால் சுட்டுக்கொல்லப்பட்ட நூற்றுக்கணக்கான தமிழக மீனவர்களுக்காக மொத்தம் எத்தனை நிமிடங்களை ஒதுக்கியிருக்கிறார்கள்? ஈழம் குறித்த செய்திகள் அபூர்வமாக இடம்பெறும் போது தமிழர்களுக்கு ஆதரவான குரல்களுக்கு மிகப்பெரும்பாலும் வாய்ப்பளிக்கப்படுவது இல்லை. சொல்லப்போனால் சோ ராமசாமியிடமோ இந்து ராமிடமோ சுப்பிரமணியம் சுவாமியிடமோ கருத்துக் கேட்கப்படாத ஈழப்பிரச்சனை குறித்த ஒரு செய்தித்தொகுப்பை நான் இந்திய ஆங்கிலத் தொலைக்காட்சிகளில் இதுவரைக் கண்டதே இல்லை.

நான் என்னை ஒரு தமிழ் தேசியவாதியாக எண்ணியதில்லை. இருந்தாலும் இன்று இலங்கையின் போர்க்குற்றங்கள் குறித்த வலுவான ஆதாரங்கள் மேலைநாடுகளிடம் இருந்தும் அவர்கள் ஒரு சிறு நடவடிக்கையைக் கூட எடுக்காமல் இருப்பதற்கு இலங்கைக்கு இந்தியா அரசதந்திர ரீதியாக வழங்கும் பாதுகாப்பே காரணம் என்று வரும் செய்திகளைப் படிக்கும்போது எழும் வெறுப்பைக் கட்டுப்படுத்த முடியவில்லை. கடந்த ஆண்டின் நிகழ்வுகள் நான் அறிந்த பல தமிழர்களைப் போலவே எனக்கும் தமிழனா இந்தியனா என்ற அடையாளச் சிக்கலை எல்லாம் என்றென்றைக்குமாக தீர்த்துவைத்திருக்கின்றன.

இரு இணைப்புகள்

அனைத்துலக செஞ்சிலுவை சங்கத்தின் மூலம் வன்னியிலுள்ள தமிழ் மக்களுக்கு பொருள் உதவி செய்ய விரும்புவோர் கீழேயுள்ள இணைப்பில் சென்று கடன் அட்டை மூலம் நன்கொடை அளிக்கலாம். 'Programme' என்னுமிடத்தில் Sri Lanka என்று தேர்வு செய்வது முக்கியம்.

http://www.icrc.org/web/eng/siteeng0.nsf/iwpList2/Help_the_ICRC

கீழேயுள்ள இணைப்பில் உள்ள 'இறுதி யுத்தம்' என்னும் காணொளியை இதுவரைப் பார்க்காத தமிழகத் தமிழர்களை அதை பார்க்குமாறும், அதன் நோக்கங்களுடன் உடன்பாடு இருந்தால் நண்பர்களுக்கு அறியத்தருமாறும் வேண்டுகிறேன்.

http://www.tamilsforobama.com/Final_War.html

நன்றி.

கிரிக்கெட்டும் காளைச்சாணமும்

சிங்கப்பூரின் 'ஸ்ட்ரெயிட்ஸ் டைம்ஸ்' நாளிதழ் ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியாவின் பரிதாப நிலையின் பின்னுள்ள காரணங்களை ஆராயும் நோக்கில் "1.1 billion people, only 1 gold" என்ற தலைப்பில் ஒரு கட்டுரையை வெளியிட்டிருந்தது. ஒரு இந்தியரால் எழுதப்பட்ட அக்கட்டுரையில் பேட்டிக் காணப்பட்ட மற்றொரு இந்தியரின் வக்காலத்து இப்படி போகிறது:

"Unlike in the West, we Indians do not worship the human body...We see it as a mere temporary vehicle for the soul's journey towards salvation. And so we neglect it. We do not take pride in our physiques."

இப்படி காளைச்சாணத்தை வீசியெறிவது ஒலிம்பிக்கில் ஒரு போட்டியாகச் சேர்க்கப்பட்டால் நம்மவர்கள் அனைத்துப் பதக்கங்களையும் வழித்தெடுத்துவிடுவார்கள் என்பது நியாயமான ஐயங்களுக்கு அப்பாற்பட்டது. உடல் நிரந்தரமானது என்று உலகில் எந்த மதமோ பண்பாடோ கருதுவதாகத் தெரியவில்லை. இந்தியர்கள் "உடலை வழிபடாதிருத்தல்" பற்றி சொல்வதென்றால் இந்திய மரபு இலக்கியங்கள் கதைமாந்தர்களின் உடல் பற்றிய அளவுக்கதிகமான விவரிப்புகளாலும் புகழ்ச்சிகளினாலும் நிறைந்திருப்பதை அவற்றுடன் சிறிதளவு அறிமுகம் உள்ளவர்கள் கூட அறிந்திருப்பார்கள். விளையாட்டுகளில் இந்தியாவின் மிகவும் பின்தங்கிய நிலைக்கு ஆன்மீக/தத்துவ அடிப்படையிலான ஒரு காரணத்தை சொல்லியே ஆகவேண்டும் என்றால் இந்தியர்கள் விதி, கருமவினை ஆகியவற்றின் மீது வைத்திருக்கும் தீவிர நம்பிக்கையை சொல்லலாம். ஒவ்வொருவரும் தனக்கு "விதிக்கப்பட்ட" நிலையை ஏற்றுக்கொண்டு அதை மாற்றுவதற்கு எவ்வகையிலும் முயலாமலிருக்க வலியுறுத்தப்படும் ஒரு பண்பாட்டில் விளையாட்டுகளில் சிறந்து விளங்கத் தேவையான ஊக்கமும் போட்டித்தன்மையும் இருக்க வாய்ப்பில்லை என்று சொல்லலாம்.

நூற்றிப்பத்து கோடி மக்களைக் கொண்ட நாளைய வல்லரசு சைதாப்பேட்டையை விட சற்று பெரியதாக இருக்கும் நாடுகள் சாதித்த அளவுக்குக் கூட விளையாட்டுக்களில் சாதிக்க முடியாமல் போனது ஏன் என்பது சமூகவியலாளர்களால் ஆராயப்படவேண்டிய முக்கியமானக் கேள்வி. இதற்கு வழக்கமாக சொல்லப்படும் காரணங்கள் மொக்கையானவை. மேற்கத்தியவர்களோடு ஒப்பிடுகையில் இந்தியர்களின் உயரமும் உடல்வலுவும் குறைவாக இருப்பதே காரணம் என்பதை சீனர்களின் மிகப்பெரிய வெற்றி உடைத்தெறிகிறது. இந்தியாவை விட அதிக வறுமை நிலவும் ஆப்பிரிக்க நாடுகள் கூட சில குறிப்பிட்ட விளையாட்டுகளில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. இந்தியர்கள் அடிப்படையிலேயே விளையாட்டுக்களில் ஆர்வமற்றவர்கள் என்றால், இந்தியாவில் கிரிக்கெட்டின் மீது நிலவும் வெறித்தனமான மோகத்திற்கு விளக்கம் தேவைப்படுகிறது.

*****

அவுட்லுக் இதழில் எஸ். ஆனந்த் என்ற பெயரில் எழுதிக்கொண்டிருந்த தலித் எழுத்தாளர் சிறியவன் ஆனந்த் இந்திய ஊடகங்களில் பொதுவாக பேசப்படாத பேசுபொருட்களைக் குறித்து அதிகம் எழுதுபவர். இளையராஜா என்னும் புனித பிம்பத்திடம் சமூக நோக்கங்களுக்காக இசையைப் பயன்படுத்துதல் குறித்தும், கம்யூனிஸ்ட் மேடைப் பாடகரான அவரது அண்ணன் வரதராஜன் குறித்தும், ஆந்திராவின் கத்தாரைக் குறித்தும், சமூக உணர்வுடைய மற்ற இசைக்கலைஞர்கள் குறித்தும் கேட்டு பதிலாக பு.பி.யை "நான் அந்தக் குப்பைகளுக்கெல்லாம் அப்பாற்பட்டவன்" என்று திருவாய் மலரவைத்தது இவர்தான். ஆனந்த் கிரிக்கெட்டை சமூகக் கண்ணோட்டத்தில் ஆராயும் பல விரிவானக் கட்டுரைகளை எழுதியிருக்கிறார். இந்தியாவில் கிரிக்கெட்டின் சமூகப் பின்னணி மற்றும் வரலாறு குறித்து புத்தகங்கள் எழுதியுள்ள ராமச்சந்திர குகா, ஆஷிஷ் நந்தி ஆகியோரை பல இடங்களில் மேற்கோள் காட்டியே ஆனந்த் தன் கட்டுரைகளை எழுதியுள்ளார். (Cricket historian என்று இந்திய ஊடகங்களால் பட்டம் சூட்டப்பட்டிருக்கும் குகாவைக் குறிப்பிடாமல் கிரிக்கெட் ஆதிக்கத்திற்கு பின்னுள்ள சமூகக் காரணங்களை யாரும் எழுதமுடியாத ஒரு நிலை நிலவுகிறது. நான் முன்பு கிரிக்கெட்டை லேசாகத் தொட்டு எழுதியபோது ஆங்கில அனானிகள் அவதரித்து குகாவைப் படித்தாயா, குன்றத்தில் ஏறினாயா என்றெல்லாம் குடைந்தெடுத்தார்கள்.)

மொத்தம் பதினைந்துப் பக்கங்களுக்கு மேல் நீளும் ஆனந்தின் கிரிக்கெட் பற்றியக் கட்டுரைகளை அவுட்லுக் இணையதளத்தில் பதிவு செய்தவர்கள் மட்டுமே படிக்கமுடியும். கட்டுரைகளிலுள்ள சில முக்கியமானக் கருத்துக்களை மட்டும் கீழே (நீலத்தில்) தொகுத்து அளித்திருக்கிறேன். (வரிக்கு வரியான மொழிபெயர்ப்பு அல்ல.)

  • இந்தியாவில் முதன்முதலில் கிரிக்கெட் விளையாடத் தொடங்கியது வேலையற்ற ராஜாக்களும் ஆங்கிலேயர்களை நகலெடுத்த பார்சிகளும் தான் என்றாலும் 1947-க்கு பிறகு மாநகரங்களைச் சேர்ந்த பார்ப்பனர்களே கிரிக்கெட்டில் முழுமையான ஆதிக்கம் செலுத்திவந்தனர். அறுபதுகளிலிருந்து தொண்ணூறுகள் வரை நடந்த 'டெஸ்ட்' போட்டிகளில் விளையாடிய பதினொன்று பேர் கொண்ட அணிகளில் எப்போதும் குறைந்தது ஆறிலிருந்து ஒன்பது பேர் வரை பார்ப்பனர்களாக இருந்திருக்கிறார்கள். அவர்கள் மக்கட்தொகையில் ஐந்து விழுக்காட்டுக்கு குறைவாக இருக்கும் நிலையில் இது எப்படி சாத்தியமானது என்பது ஆராயப்படவில்லை. கிரிக்கெட் அணியில் இடம் பெற்ற பார்ப்பனரல்லாதவர்களும் சமூகத்தின் மேல் அடுக்குகளிலிருந்தே வந்தார்கள். இதற்கு மாறாக ஹாக்கி அணிகளில் பெரும்பாலும் பிற்படுத்தப்பட்டோர், தலித், சீக்கியர், பழங்குடியினர் ஆகியோர் அதிகமாக இடம் பெற்றிருக்கிறார்கள். கடந்த (2002) ஹாக்கி உலக கோப்பையில் விளையாடிய இந்திய அணியில் பார்ப்பனர் ஒருவர் கூட இல்லை.
  • ஹாக்கி, காற்பந்து போன்ற குழு விளையாட்டுக்களுடன் ஒப்பிடுகையில் கிரிக்கெட்டில் உடல் உழைப்பிற்கானத் தேவை மிகவும் குறைவு என்பது உடல் உழைப்பை இழிவாகக் கருதி ஒதுக்கிய இந்திய 'உயர்'சாதிகள் அதன் மீது மோகம் கொண்டதற்கு ஒரு முக்கியக் காரணம். ஒரு கிரிக்கெட் ஆட்டக்காரர் நீண்ட நேரம் ஒரே இடத்தில் நின்றுக்கொண்டிருப்பதற்கான வாய்ப்பு அதிகம். மிகுந்த நேர விரயத்தை ஏற்படுத்தும் கிரிக்கெட் விளையாட்டில் தொடர்ந்து ஈடுபடுவது உழைக்காத வர்க்கங்களை சேர்ந்தவர்களுக்கு மட்டுமே சாத்தியமானது. காவஸ்கர், குண்டப்பா விஸ்வநாத் போன்ற ஆட்டக்காரர்கள் வைத்திருந்த தொப்பைகளின் அளவுக்கு அவர்களால் ஹாக்கி போன்ற விளையாட்டுக்களில் நுழைந்திருக்கக் கூட முடியாது. சற்று அதிகமாக உடல் உழைப்புத் தேவைப்படும் வேகப்பந்து வீச்சு போன்ற பிரிவுகளில் கபில் தேவைத் தவிர இந்தியர் யாரும் உலக அளவில் புகழ்பெற்றதில்லை. இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் பெரும்பாலும் கபில் தேவைப் போல மாமிசம் உண்ணும் சாதியினராகத் தான் இருந்திருக்கிறார்கள். இதற்கு விதிவிலக்காக இருந்த, "உலகின் மிகவேகமான சைவப் பந்துவீச்சாளர்" என்று அழைக்கப்பட்ட ஸ்ரீநாத் பின்பு தன் பயிற்சியாளரின் அறிவுரைப்படி மாமிசம் உண்ணுபவராக மாறினார். ஒப்புநோக்க அதிக உடல் உழைப்பைக் கோரும் ஒருநாள் போட்டிகள் மேலோங்கியிருப்பது தற்போது மாநகரங்களைச் சேர்ந்த பார்ப்பனர்களின் ஆதிக்கத்தை சற்றுக் குறைத்திருக்கிறது. அண்மைக்காலமாக சிறு நகரங்களைச் சேர்ந்த, ஆங்கிலம் பேசாத ஆட்டக்காரர்கள் இந்திய அணியில் இடம்பெறத் தொடங்கியிருக்கிறார்கள்.
  • கிரிக்கெட் உடல் தொடுகைக்கு தேவையில்லாத குழு விளையாட்டு என்பது பார்ப்பனர்கள் அதை (முன்பு) விரும்ப ஒரு காரணமாக இருந்தது என்று ராமசந்திர குகா குறிப்பிடுகிறார்.
  • பெரும்பாலான நாடுகளில் விளையாட்டுக்கள் ஒடுக்கப்பட்டப் பிரிவினர் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தும் இடமாக இருந்திருக்கிறது. மாரடோனா, பெலே, மைக் டைசன், மாஜிக் ஜாண்சன், மைக்கேல் ஜோர்டன் என்று எத்தனையோ பேர் விளையாட்டின் மூலமே சேரிகளிலிருந்து உச்சத்திற்கு வந்திருக்கிறார்கள். ஆனால் இந்தியாவில், குறிப்பாகக் கிரிக்கெட்டில், இதற்கான சாத்தியங்கள் மிகவும் குறைவு. அபூர்வ விதிவிலக்குகளான வினோத் காம்ப்ளி, டொட்ட கணேஷ் போன்றவர்களால் திறமை இருந்தும் இந்திய கிரிக்கெட் சூழலில் நீடிக்க முடியவில்லை. காம்ப்ளியைத் தவிர வேறு எந்த தலித்தும் இந்தியாவுக்காக 'டெஸ்ட்' போட்டிகளிலோ ஒருநாள் போட்டிகளிலோ விளையாடியதில்லை. தலித் மற்றும் பழங்குடிகள் மிக அதிகமாக இடம்பெறும் ஹாக்கி போன்ற விளையாட்டுக்கள் கிரிக்கெட் ஆதிக்கத்தின் மூலம் ஓரங்கட்டப்படுகின்றன. தவிரவும் இந்திய ஹாக்கி அணி எவ்வளவு தான் சாதனைகள் புரிந்தாலும், கருப்பு நிறமுடைய இந்தியர்கள் புறக்கணிக்கப்படும் இந்திய ஊடகங்களில் கிரிக்கெட் ஆட்டக்காரர்களுக்கு கிடைக்கும் விளம்பர வாய்ப்புக்கள் தன்ராஜ் பிள்ளை போன்றவர்களுக்கு கிடைப்பது அரிது.
  • கிரிக்கெட் ஜனநாயகத்தன்மை அதிகம் இல்லாத ஒரு விளையாட்டு. கிரிக்கெட் தோன்றிய இங்கிலாந்து போன்ற நாடுகளில் அது தற்போது மக்களால் அதிகம் விரும்பப்படும் விளையாட்டாக இல்லை. காற்பந்து தான் அங்கு மிக பிரபலமாக உள்ளது. சாதி அமைப்பு பேணப்படும் இந்திய துணைக்கண்டத்தில் மட்டுமே கிரிக்கெட் மோகம் அளவுக்கு அதிகமாக உள்ளது.

*****

பிரச்சனை என்னவென்றால் இந்தியச் சூழலில் இதைப் பற்றி எல்லாம் பேசமுடியாது. அதிலும் குறிப்பாக இணையத்தில் ஆங்கிலத் தளங்களில் 'உயர்'சாதியினரின், குறிப்பாக பார்ப்பனர்களின், ஆதிக்கத்தைக் குறித்து விவாதிப்பது சற்றும் நடக்காத காரியம். என்.ஆர்.ஐ கம்ப்யூட்டர் பையன்களின் படை ஒன்று வந்திறங்கும். வழக்கமான தகுதி-திறமை காளைச்சாணம் வாரி எறியப்படும். இருபத்தோராம் நூற்றாண்டிலும் எல்லவற்றிலும் சாதியை இழுக்கும் குகைமனிதர்கள் மீது எல்லையற்ற அருவருப்பு வெளிப்படுத்தப்படும். சாதியைப் பார்க்காமல் அனைவரையும் இந்தியர்களாக பார்க்கவேண்டும் என்ற அறிவுரையும் இதிலும் இடஒதுக்கீடு வேண்டுமா என்ற நக்கலும் கலந்து ஒலிக்கும். சமூகத்தின் உயர் அடுக்குகளில் பிறந்ததன் காரணமாக கிடைத்த அனைத்து சாதகங்களையும் எவ்வித குற்ற உணர்வும் இல்லாமல் பயன்படுத்தி வெற்றிபெற்ற பின் சாதி ஆதிக்கத்தைப் பற்றி யாராவது சுட்டிக்காட்டினால் "சாதியா? அப்படீன்னா என்ன?" என்று பாவனை செய்யும் நவநாகரீக மைனர் குஞ்சுகளைப் போல் கொலைவெறியூட்டும் உயிரினங்கள் வேறு எதுவும் இல்லை. எவ்வித புள்ளிவிவரங்களும் இங்கு வேலைக்காகாது. பேரரசர் அம்மணமாக இருப்பதைப் படம் எடுத்துக் காட்டினால் கூட பட்டு வேட்டியும் தங்கச் சரிகையிட்ட அங்கவஸ்திரமும் கண்ணுக்குத் தெரியவில்லையா என்றுக் கேட்பார்கள்.

எஸ். ஆனந்த் இந்திய கிரிக்கெட்டை தன் நிழலுக்கு அடியில் வேறு எதையும் வளரவிடாத பெரும் ஆலமரம் என்கிறார். கடந்த கால் நூற்றாண்டு நிகழ்வுகளை ஆராய்ந்துப் பார்த்தால் இது மிகவும் உண்மை என்றே தோன்றுகிறது. எண்பதுகளின் தொடக்கம் வரை ('உலக' கோப்பை வெற்றி, தொலைக்காட்சிகளின் பெருக்கம் ஆகியவற்றிற்கு முன்பு வரை) கிரிக்கெட் மாநகரங்களுக்கு வெளியே அதிகம் ஆதரிக்கப்படாமலே இருந்தது. 1985-86 ஆண்டுகளில் பள்ளி மாணவர்களிடம் கிரிக்கெட் ஆர்வம் மிகத் தீவிரமடைந்த பிறகு கூட நாகர்கோயிலில் நான் படித்துக்கொண்டிருந்த பள்ளியில் கிரிக்கெட் விளையாடுவது தடை செய்யப்பட்டிருந்தது. உடற்பயிற்சி ஆசிரியர்கள் சோம்பேறிகளின் விளையாட்டு என்று சொல்லி கிரிக்கெட்டை வெறுத்தனர். ஹாக்கி மற்றும் காற்பந்து விளையாட்டுக்களுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. கேரளத்திலும் மேற்கு வங்காளத்திலும் நிலபிரபுத்துவ வேர்களைக் கொண்ட கிரிக்கெட்டுக்கு தீவிர எதிர்ப்பு இருந்தது. குறிப்பாக கேரளத்தில். எண்பதுகளில் பல மலையாளப் படங்களில் கிரிக்கெட் மோகத்தை கிண்டல் செய்யும் காட்சிகள் இடம்பெற்றிருந்தன. அந்த காலகட்டத்தில் கேரளத்திலிருந்து தான் இந்தியாவின் மிகச்சிறந்த காற்பந்து வீரர்களும் தடகள வீராங்கனைகளும் தோன்றினர். ஆனால் தற்போது கேரளத்தையும் கிரிக்கெட் மோகம் முழுமையாக ஆக்கிரமித்திருப்பதைக் காணமுடிகிறது. குரங்கு சேட்டைகளுக்குப் பெயர் போன ஸ்ரீசந்த் என்ற மலையாளி முதன்முதலாக இந்திய கிரிக்கெட் அணியில் இடம்பெற்றிருப்பது வருங்கால உஷாக்களுக்கும், ஷைனிக்களுக்கும், விஜயன்களுக்கும் கள்ளிப்பால் கொடுப்பதற்கு ஒப்பான ஒரு சோக நிகழ்வு.