அழிவின் நினைவுகள்

பங்குனிக்கு ஒருமுறை, பவுர்ணமிக்கு ஒருமுறை பதிவெழுதிக் கொண்டிருந்த நான் கடந்த மே மாதம் இட்ட சிறு இடுகைக்குப் பின் இந்தப் பக்கமே வரவில்லை. இணையத்தில் தமிழ் தளங்களை வாசிப்பதையும் வெகுவாகக் குறைத்துக்கொண்டேன். அந்த மே மாத நிகழ்வுகள் ஏற்படுத்திய பாதிப்பும் கசப்பான உணர்வுகளை மீண்டும் மீண்டும் வரவழைத்து தன்னைத்தானே வதைத்துக்கொள்ள விரும்பாததும் அதற்கான காரணங்களில் சில. இந்நிலையில் கடந்த வாரம் திரையரங்கு ஒன்றில் புலிப்படை தோற்று, அவமானப்படுத்தப்பட்டு அதன் தலைவன் கடற்கரையில் மடியும் அந்தக் காட்சியைக் கண்டபோது மீண்டும் அதே உணர்வுகள் எழுந்ததைத் தவிர்க்கமுடியவில்லை.

சென்றவாரம் முத்துக்குமாரின் நினைவு நாளை ஒட்டி தமிழகத்தின் பல பகுதிகளிலும் நடந்த நிகழ்வுகள் எதிர்பார்த்ததுபோலவே ஊடகங்களில் இருட்டடிக்கப்பட்டிருக்கின்றன. சென்ற ஆண்டு முத்துக்குமாரின் தியாகத்துக்குப் பின் தமிழகத்தில் உருவான எழுச்சி பரவாமல் தடுத்ததில் ஊடகங்களின் இருட்டடிப்புக்கு முக்கியமான பங்கு உண்டு. ஒரு ஜனநாயக நாட்டில் அரசின் செயல்பாடுகளுக்கு வேறு எந்த வகையில் எதிர்ப்பைக் காட்டியும் பயனில்லை என்ற நிலையில் ஒரு இளைஞன் தன்னைத்தானே கொளுத்திக்கொள்கிறான் என்றால் அது எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கவேண்டும்? வியட்நாமில் ஒரு பௌத்த துறவி இதை செய்தபோது அது உலகின் மனசாட்சியையே உலுக்கியது. ஆனால் நம் ஊடகங்கள் நடிகர் நடிகைகளின் மணமுறிவு பற்றிய செய்திகளுக்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தைக் கூட முத்துக்குமாரின் இறப்புக்கோ அதன் பிந்தைய நிகழ்வுகளுக்கோ அளிக்கவில்லை.

ஈழப்போரின் போது பல நேரங்களில் தமிழக ஊடகங்கள் தமிழகத்தில் ஈழத்தமிழர்களுக்கான ஆதரவை நீர்த்துப்போக செய்யவேண்டும் என்ற அதிகாரவர்க்கத்தின் நோக்கத்திற்கு சுயமாகவோ கட்டாயத்தின் பேரிலோ துணைபோயிருப்பதை நாம் காணமுடியும். எடுத்துக்காட்டாக செஞ்சோலை போன்ற இடங்களில் அப்பாவி மக்களின் மீது இலங்கை இராணுவம் நடத்திய கொடூரத் தாக்குதல்களுக்குப் பிறகு பெரும்பாலான தமிழக மக்கள் தமிழீழத்துக்கும் புலிகளுக்கும் ஆதரவான நிலைக்கு மாறினார்கள். (இதை பின்பு எடுக்கப்பபட்ட சில கருத்துக்கணிப்புகள் உறுதிசெய்தன.) இந்நிலையில் 2007-ஆம் ஆண்டு ஐந்து தமிழக மீனவர்களை நடுக்கடலில் சுட்டுக்கொன்றதும், பன்னிரண்டு மீனவர்களை கடத்திசென்றதும் புலிகள் தான் என்று இந்திய/தமிழக அரசு அதிகாரிகள் அறிவித்தனர். இதைக்குறித்து அதிகாரப்பூர்வமாக சொல்லப்பட்ட சிறுபிள்ளைத்தனமான கதையில் எத்தனையோ ஓட்டைகள் இருந்தும் யாரும் அதைக் கேள்வி கேட்கவில்லை. திரும்பி வந்த மீனவர்களுக்கு செய்தியாளர்களிடம் பேசக்கூடாது என்று கடுமையான வாய்ப்பூட்டு போடப்பட்டிருந்த நிலையில் அந்த மீனவர்கள் குழுவில் இருந்த சிறுவன் தங்களைக் கடத்தியது 'நேவி' தான் என்று தெளிவாகச் சொன்னதையும், மற்ற மீனவர்கள் சிறுவனைப் பேசவிடாமல் தடுத்ததையும் மக்கள் தொலைக்காட்சி மட்டுமே ஒளிபரப்பியது. இதுகுறித்து மூச்சுவிடும் துணிவுகூட மற்ற தமிழ் ஊடகங்களுக்கு இருக்கவில்லை. அதன் பிறகு அந்த மீனவர்களை சந்தித்து நடந்த உண்மைகளை அறிந்துக்கொள்ளும் முயற்சியில் யாரும் இறங்கியதாக தெரியவில்லை. இதுதான் நம் ஊடக சுதந்திரத்தின் அறிவிக்கப்படாத எல்லை. இறையாண்மை பூச்சாண்டி காட்டப்பட்டால் அதை மீறும் துணிவு மிகப்பெரும்பாலானவர்களுக்கு இல்லை என்பதே உண்மை.

இந்தியாவின் வெளிவிவகாரத்துறை மற்றும் பாதுகாப்புத் துறையில் தலைமைப் பதவிகளையெல்லாம் ஒரு சிறு இனக்குழுவைச் சேர்ந்த அதிகாரிகள் மொத்தமாகக் குத்தகைக்கு எடுத்திருப்பது குறித்தோ ஈழத்தமிழர் மீதான இனப்படுகொலையில் இவர்களது பங்கு குறித்து எழுப்பப்பட்டுள்ளக் குற்றச்சாட்டுகள் குறித்தோ ஊடகங்களில் ஒரு சிறு விவாதம் கூட சாத்தியமில்லை. மலையாளி என்று பலருக்கும் தெரியாத ஜே.என்.தீக்சித்துக்கு பின் எம்.கே.நாராயணன் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக வருகிறார். நாராயணனுக்குப் பிறகு அந்த இடத்துக்கு இப்போது சிவசங்கர் மேனன் வந்திருக்கிறார். வெளியுறவுச் செயலர் பதவியிலிருந்து சிவசங்கர் மேனன் விலகினால் அந்தப் பதவி நிருபமா மேனன் ராவ் என்ற மற்றொரு மலையாளிக்கே செல்கிறது. இவர்களில் நாராயணன் தவிர மற்ற மூவரும் இலங்கைக்கான இந்திய தூதராக இருந்தவர்கள் என்பதும் அப்படி இருந்தபோது வெளிப்படையான தமிழர்-எதிர்ப்பு நிலைப்பாட்டைக் கொண்டிருந்தவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. மலையாளிகளின் குழு உணர்வைக் குறித்து முன்பு நண்பர்கள் சிலர் பேசியபோது அத்தகைய பொதுமைப்படுத்தலுக்கு எதிராக நான் விவாதித்திருக்கிறேன். ஆனால் பல துறைகளிலும் இந்தப் போக்கையே காணமுடிகிறது. ஒரு அண்மைய எடுத்துக்காட்டைச் சொல்வதென்றால் மாதவன் நாயருக்குப் பிறகு இந்திய விண்வெளி ஆய்வுக்கழகத்தின் தலைவராக ராதாகிருஷ்ணன் வந்திருப்பதைச் சொல்லலாம். 'திறமைவாதிகள்' இதையெல்லாம் சற்றும் கண்டுக்கொள்ளாமல் இருப்பது ஆச்சரியம் தான்.

சென்ற ஆண்டு ஈழத்தில் குழந்தைகள் பெண்கள் உட்பட ஆயிரக்கணக்கானத் தமிழர்கள் கொன்றொழிக்கப்பட்ட நேரத்தில் தமிழரல்லாத இந்தியர்கள் வெளிப்படுத்திய அசாதாரணமான அக்கறையின்மையை இன்னும் ஐம்பது ஆண்டுகள் ஆனாலும் கூட மறக்கவோ மன்னிக்கவோ முடியாது. எவ்வித அரசியல் உணர்வோ பொது அக்கறையோ இல்லாதவர்கள் என்று நான் நினைத்திருந்த பல தமிழர்கள் கூட ஈழத்து நிகழ்வுகளால் கடும் மனச்சோர்வுக்கு உள்ளானதை அறிவேன். குழந்தைகள் கூட்டம் கூட்டமாக செத்துக் கிடக்கும் காட்சிகளைப் பார்த்த சிலருக்கு இரவில் உறங்குவது சாத்தியமில்லாமல் ஆனது. தமிழ்நாட்டில் பத்துக்கு மேற்பட்டவர்கள் தற்கொலை செய்துக்கொண்டார்கள். ஆனால் மற்ற இந்தியர்களிடம் இதுகுறித்து ஒரு சிறு சலனம் கூட எழவில்லை. இத்தகைய பேரழிவு நிகழ்ந்துக்கொண்டிருக்கும் போது இந்திய கிரிக்கெட் அணி இலங்கைக்கு சென்று விளையாடுவது குறித்த நெருடல் கூட எவருக்கும் இருக்கவில்லை. அருந்ததி ராய் கூட மிகவும் காலங்கடந்து ஒரு கட்டுரை எழுதிவிட்டு பின்பு வந்தவேகத்தில் பின்வாங்கினார். சென்னையிலுள்ள அவரது நண்பர்கள் சிலர் அவரைத் தடுத்தாட்கொண்டிருக்கக்கூடும். குஜராத்தில் முஸ்லீம்கள் கொல்லப்பட்டபோது, முஸ்லீம்கள் மட்டும் தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்திக்கொண்டிருக்க மற்றவர்கள் யாருமே கண்டுக்கொள்ளாமல் இருந்திருந்தால் எப்படி இருந்திருக்கும்? தமிழர்கள் ஆயிரக்கணக்கில் கொல்லப்பட்டுக்கொண்டிருந்தபோது மற்ற இந்தியர்கள் அதைத்தானே செய்தார்கள்?

பெரும்பாலான தமிழரல்லாத இந்தியர்களைப் பொறுத்தவரை இலங்கையில் உள்ள ஒரே பிரச்சனை தமிழ் பயங்கரவாதம் மட்டுமே. அங்கு வேறு எந்த பிரச்சனையும் இல்லை. அவர்களுக்குத் தொடர்ந்து சொல்லப்படுவது அதுதான். அது தவிர தமிழர்கள் மொழிவெறி பிடித்தவர்கள் என்ற சித்திரம் கடந்த ஒரு தலைமுறையாக அங்கே வலுவாகிவருகிறது என்பதை வடக்கே பல ஆண்டுகள் வாழ்ந்தவன் என்ற முறையில் என்னால் சொல்லமுடியும். பல வட இந்தியர்கள் இந்தி பேசத்தெரியாதத் தமிழர்களையும் வடகிழக்கை சேர்ந்தவர்களையும் சக இந்தியர்களாக ஏற்றுக்கொள்வதில்லை. அங்குள்ள ஊடகங்களுக்கு தமிழர்கள் குறித்து இருக்கும் இழிவான பார்வையும் தமிழர்கள் பற்றிய செய்திகளுக்கு அவர்கள் அளிக்கும் முக்கியத்துவமும் இந்திய ஆங்கிலத் தொலைக்காட்சிகளைத் தொடர்ந்து பார்ப்பவர்களுக்குத் தெரிந்திருக்கும். ஆஸ்திரேலியாவில் படிக்கப்போன பஞ்சாபி பையன்கள் தடுக்கி விழுந்தால் கூட இனவெறித் தாக்குதல் என்று மணிக்கணக்காக ஓலமிடும் இந்த தொலைக்காட்சிகள் இலங்கை கடற்படையால் சுட்டுக்கொல்லப்பட்ட நூற்றுக்கணக்கான தமிழக மீனவர்களுக்காக மொத்தம் எத்தனை நிமிடங்களை ஒதுக்கியிருக்கிறார்கள்? ஈழம் குறித்த செய்திகள் அபூர்வமாக இடம்பெறும் போது தமிழர்களுக்கு ஆதரவான குரல்களுக்கு மிகப்பெரும்பாலும் வாய்ப்பளிக்கப்படுவது இல்லை. சொல்லப்போனால் சோ ராமசாமியிடமோ இந்து ராமிடமோ சுப்பிரமணியம் சுவாமியிடமோ கருத்துக் கேட்கப்படாத ஈழப்பிரச்சனை குறித்த ஒரு செய்தித்தொகுப்பை நான் இந்திய ஆங்கிலத் தொலைக்காட்சிகளில் இதுவரைக் கண்டதே இல்லை.

நான் என்னை ஒரு தமிழ் தேசியவாதியாக எண்ணியதில்லை. இருந்தாலும் இன்று இலங்கையின் போர்க்குற்றங்கள் குறித்த வலுவான ஆதாரங்கள் மேலைநாடுகளிடம் இருந்தும் அவர்கள் ஒரு சிறு நடவடிக்கையைக் கூட எடுக்காமல் இருப்பதற்கு இலங்கைக்கு இந்தியா அரசதந்திர ரீதியாக வழங்கும் பாதுகாப்பே காரணம் என்று வரும் செய்திகளைப் படிக்கும்போது எழும் வெறுப்பைக் கட்டுப்படுத்த முடியவில்லை. கடந்த ஆண்டின் நிகழ்வுகள் நான் அறிந்த பல தமிழர்களைப் போலவே எனக்கும் தமிழனா இந்தியனா என்ற அடையாளச் சிக்கலை எல்லாம் என்றென்றைக்குமாக தீர்த்துவைத்திருக்கின்றன.

11 மறுமொழிகள்:

பேரழிவு ஏற்படுத்திய அழியாத நினைவுகள் அவை.

"இந்தி"ய இறையாண்மையை காக்கும் தேசிய வியாதிப் பத்திரிக்கைகள் மட்டுமல்ல தங்களது ஊடக தர்மத்தை மறந்தது, சில கட்சி விசுவாச பதிவுலக அடிமைகளும் தான். பதிவுலகம் ஒன்றும் பெரும்பான்மை ஊடக பலம் இல்லை என்றாலும் கூட, இதில் கூட தாங்களது கட்சி விசுவாசத்தினை காட்டிக் கொண்டிருந்தவர்களையும் நீங்கள் மேற்குறிப்பிட்டுள்ள பட்டியலில் சேர்த்திருக்கலாம்.

//அந்த மே மாத நிகழ்வுகள் ஏற்படுத்திய பாதிப்பும் கசப்பான உணர்வுகளை மீண்டும் மீண்டும் வரவழைத்து தன்னைத்தானே வதைத்துக்கொள்ள விரும்பாததும் அதற்கான காரணங்களில் சில.//

அவ்வப்பொழுது உங்கள் பதிவை எட்டிப் பார்க்கும் நான், மே மாதத்துக்குப் பின் நீங்கள் எழுதாததற்கான காரணம் அதுவாகத்தான் இருக்கும் என்று நினைத்துக் கொள்வதுண்டு.

//சென்ற ஆண்டு ஈழத்தில் குழந்தைகள் பெண்கள் உட்பட ஆயிரக்கணக்கானத் தமிழர்கள் கொன்றொழிக்கப்பட்ட நேரத்தில் தமிழரல்லாத இந்தியர்கள் வெளிப்படுத்திய அசாதாரணமான அக்கறையின்மையை இன்னும் ஐம்பது ஆண்டுகள் ஆனாலும் கூட மறக்கவோ மன்னிக்கவோ முடியாது.//

தமிழரல்லாத இந்தியர்களென்ன. தம்மைத் தமிழர் என்றே சொல்லிக் கொள்ளும் தமிழ் நாட்டவர் ஒரு சிலரை கருத்துக்கள் பல மாறுபட்ட போதிலும் நான் நல்ல நண்பர்களாகவே மனதாரக் கருதி வந்திருக்கிறேன். ஆனால் கடந்த ஆண்டு ஒவ்வொரு நாளும் ஈழத்திலிருந்து வரும் செய்திகளைக் கண்டு அனலில் இடப்பட்டப் புழுவெனத் துடித்துக் கொண்டிருந்தேன். அப்பொழுதெல்லாம் ட்விட்டரில் இச்செய்திகளை வெளியிட்டுத் தம் மகிழ்ச்சியைப் பறை சாற்றிக் கொண்டிருந்தனர் இந்த முன்னாள் நண்பர்கள், புலிகள் கொல்லப் படுகிறார்களாம். தமக்குப் பிடிக்காதவர்களே கூட இறக்கும் பொழுது ஏற்படும் ஒரு அடிப்படை மனிதாபிமான உணர்வு கூட இல்லாத குரூரமான இப்பிறவிகளை எல்லாம் நான் நண்பர்கள் என்று கருதிக் கொண்டிருந்தேன். இப்பொழுது கூட அக்குரூரமானவர்கள் அஹிம்சை பற்றி போலித்தனமான ஆதரவுக் குரல் கொடுத்துக் கொண்டிருக்கின்றனர் என்பதுதான் முரண்நகை.

//கடந்த ஆண்டின் நிகழ்வுகள் நான் அறிந்த பல தமிழர்களைப் போலவே எனக்கும் தமிழனா இந்தியனா என்ற அடையாளச் சிக்கலை எல்லாம் என்றென்றைக்குமாக தீர்த்துவைத்திருக்கின்றன.//

இதே கருத்தை நானும் கடந்த ஆண்டு பிரதிபலித்துள்ளேன்.
http://blog.tamilsasi.com/2009/04/identity-crisis-tamilnadu-tamils-india.html

நான் தமிழ்த் தேசியவாதி என்றே அழைக்கப் பட்டாலும் கவலையில்லை. குருரமான எண்ணங்களை மனதில் சுமந்து கொண்டு மனிதன் என்று சொல்லிக் கொள்வதை விட, இனப்படுகொலைக்கு ஆதரவாக இருக்கும் உயர்சாதி வெறியை மறைத்துத் திரியும் இந்தியர்களை விட தமிழ்த் தேசியவாதியாக இருப்பதில் தவறில்லை. இன்னும் சொல்லப் போனால் தமிழன் என்ற அடையாளத்தை நிலை நிறுத்துவதற்கு நாம் துளியும் சங்கடப்படாமலிருப்பதே முதல் படிக்கட்டு.

நன்றி - சொ.சங்கரபாண்டி

நடந்த எல்லா கொலைகளுக்கும் புலிகளே காரணம்

புலிகள் மக்களை எப்படி வதைத்தனர் எண்டு இந்த உலகம் அறியும்

http://www.athirady.info/archives/61589

http://www.athirady.info/archives/61501

முத்துகுமரன் மாதிரி மூளை இல்லாத உணர்வு ஜடங்கள் செத்து போவதால் யாருக்கும் எந்த பாதகங்களும் இல்லை

http://www.tamilnet.tv/news/2009/123329/tamil-nadu-man-sets-fire-on-himself/

பாஸ்... உங்க வருத்தம் நன்றாகத் தெரிகிறது! இந்த கேவலப்பட்ட இந்திய நாட்டில் பிறந்ததே பாவம். வாருங்கள், நாமெல்லாம் இலங்கைக்குப்போய் நம் சகோதரர்களுக்கு வால்வு கொடுப்போம்! அப்படியே யேர்மனி, கனடா, பிரான்ஸ், அமெரிக்க பொன்ற நாடுகளில் இருக்கும் புலத்தை பெயர்ந்தவர்களையும் அழைத்துக் கொள்ளலாம்! எழலாம் தோழர்!!

முழு தகவல்களையும் தெரிந்து கொண்டு பேசுங்கள்
மலையக தமிழர்களை ஈழ தமிழர்கள் எப்படி நடத்தினார்கள்
உழைக்கும் அப்பாவி சிங்களவர்களை எப்படி நடத்தினார்கள்
கரையார் - யாழ் வெள்ளாளரிடம் எப்படி நடந்துகொண்டார்கள்
யாழ் வெள்ளாளர்கள் -ஒடுக்கப்பட்ட கோவியர், அம்பட்டர், வண்ணார், நளவர், பள்ளர், பறையர் முதலானோரிடம்
எப்படி நடந்துகொண்டார்கள்
இல்லங்கை தமிழ் முஸ்லிம்களை யார் கொன்று குவித்தார்கள்
இல்லங்கை தமிழ் முஸ்லிம்கள் யாரை கொன்று குவித்தார்கள்
இதையெல்லாம் தெரிந்து கொண்டு பேசுங்கள்
சமூகத்தின் சமூகக் கூறுகளை பிரித்து அதை மோத வைத்து
லாபம் பெறுபவர்களின் முடிவு இவ்வாறுதான் இருக்கும்.

===================================
They That Take The Sword Shall Perish
With The Sword
===================================
by your standard of measure, it will be measured to you.
===================================
Refer the following
http://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=6132:-qq-5&catid=277:௨௦௦௯
http://somee.blogspot.com/2007/10/blog-post_21.html

முழு தகவல்களையும் தெரிந்து கொண்டு பேசுங்கள்
மலையக தமிழர்களை ஈழ தமிழர்கள் எப்படி நடத்தினார்கள்
உழைக்கும் அப்பாவி சிங்களவர்களை எப்படி நடத்தினார்கள்
கரையார் - யாழ் வெள்ளாளரிடம் எப்படி நடந்துகொண்டார்கள்
யாழ் வெள்ளாளர்கள் -ஒடுக்கப்பட்ட கோவியர், அம்பட்டர், வண்ணார், நளவர், பள்ளர், பறையர் முதலானோரிடம்
எப்படி நடந்துகொண்டார்கள்
இலங்கை தமிழ் முஸ்லிம்களை யார் கொன்று குவித்தார்கள்
இலங்கை தமிழ் முஸ்லிம்கள் யாரை கொன்று குவித்தார்கள்
இதையெல்லாம் தெரிந்து கொண்டு பேசுங்கள்
சமூகத்தின் சமூகக் கூறுகளை பிரித்து அதை மோத வைத்து
லாபம் பெறுபவர்களின் முடிவு இவ்வாறுதான் இருக்கும்


http://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=6132:-qq-5&catid=277:௨௦௦௯
http://somee.blogspot.com/2007/10/blog-post_21.ஹ்த்ம்ல்

இந்தியன் -எண்டு சொல்ல வெக்கமாய் இருந்தால்
இந்திய குடி உரிமையை துறந்து இலங்கை வாருங்கள்
வந்து உங்களால் முடிந்த சேவையை தாருங்கள்

விடுதலைப் புலிகளால் சமூக விரோதிகளென்றும் துரோகிகள் என்றும் குற்றஞ் சாட்டப்பட்டு மக்கள் கொல்லப்படும் போதும், புலிகள் உரிமை கோராமலேயே மாற்றுக் கருத்தாளர்களைக் கொன்றொழித்த போதும், புலிகள் அப்பாவி முசுலீம் மக்களையும் சிங்கள மக்களையும் படுகொலை செய்த போதும், அதை நியாயப்படுத்திக்கொண்டிருந்த புலிகளின் ஊடகங்களும் புலி ரசிகர்களும்
பிரபாகரனுக்கு ஆபத்து, புலிப்படை அழியபோகிறது என்று தெரிந்ததும்
அப்பாவி தமிழர்கள் சாகிறார்கள் என்று ஒப்பாரி வைத்தீர்கள்
புலிப்படை அப்பாவி தமிழர்களை அழித்த பொது எங்கே போனீர்கள்

விடுதலைப்புலிகள் ஓர் அதிபயங்கரமான அரசியல் முட்டுச்சந்துக்குள் சிக்கியிருக்கிறார்கள் என்பது அவர்களே உணர்ந்திருக்கும் ஓர் உண்மை. புலிகளின் இந்த வீழ்ச்சிக்குக் காரணங்களாகத் தேனி இணையத்தளமும், TBC வானொலியும் தமது மேட்டுக்குடி மதிப்பீடுகளால் சுட்டும் காரணங்களான, புலிகளின் தலைவர் படித்த எட்டாம் வகுப்போ, அன்ரன் பாலசிங்கம் அருந்தும் மதுவோ, சுப.தமிழ்ச்செல்வனுக்கு ஆங்கிலம் தெரியாததோ இருக்க முடியாது. புலிகளின் தனிமனிதப் பலவீனங்களிலிருந்து அல்லாமல் புலிகளின் வலதுசாரிக் குறுந்தேசியவாதப் பிற்போக்கு வேலைத்திட்டத்திலிருந்தே இந்த வீழ்ச்சி நேரிட்டது. அவர்கள் மக்களை வரி செலுத்தும், பவுண் வழங்கும், கப்பங் கட்டும் மந்தைகளாக மதிப்பிட்டார்களே தவிர, மக்களை அரசியற் சக்திகளாக மதிக்கவில்லை. அவர்கள் மக்களிடமிருந்து அந்நியப்பட்டுச் சாகச நாயகர்களாகத் தம்மை நிறுத்திக்கொண்டார்கள். பிரபாகரன் குறித்த பிரமைகளையும் தனிமனிதத் துதியையும் கட்டியெழுப்புவதற்கு செலவு செய்த சக்தியில் இலட்சத்தில் ஒரு மடங்கைத் தன்னும் புலிகள் மக்களுக்கு ஏகாதிபத்திய எதிர்ப்புணர்வையும், சமூக நீதியையும் சொல்லிக் கொடுப்பதற்கு செலவு செய்தார்களில்லை. தமது இயக்க உறுப்பினர்களுக்குப் புரட்சிகரக் கோட்பாடுகளைக் கடைப் பிடிப்பதற்குக் கற்றுக் கொடுப்பதற்குப் பதிலாகப் புலிகள் யாழ் இந்து மரபில் பேணக் கூடிய பிற்போக்குக் கோட்பாடுகளைக் கற்றுக்கொடுத்து அமைப்புக்குள் அதைக் கறாராகக் கடைப்பிடித்தார்கள் (பார்க்க: அன்ரன் பாலசிங்கம், நேர்காணல்:ஆனந்த விகடன் - 23.04.2006). வெறும் உணர்ச்சிக் கவிஞர்களையும் உலைக்களக் கவிஞர்களையும் பரப்புரையில் இறக்கிவிட்டு எமது இளைஞர்களினதும் மாணவர்களினதும் சிந்தனையை அரசியல் நீக்கம் செய்தார்கள். புலிகள் தமது முப்பது வருட வரலாற்றில் எப்போதாவது எங்காவது ஓர் ஏகாதிபத்திய எதிர்ப்புக் கூட்டத்தைப் போட்டது பற்றி நீங்கள் கேள்விப்பட்டதுண்டா?

பார்க்க
http://www.shobasakthi.com/2006/05/23/%E0%AE%85%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%B7%E0%AF%87/

இளந்தமிழர் இயக்கத்தில் இணைந்து தனி நாடு அடைவோம்

http://elanthamizhar.blogspot.com/

வாழ்க தமிழ்தேசியம்

இந்திய புலனாய்வுத்துறையினர் சதியை வெல்வோம்
http://tamilthesiyam.blogspot.com/2010/03/blog-post_04.html

நண்பர்கள் என்ற பகுதியை உருவாக்கினால் எத்தனையோ பேர்கள் இணைத்துக்கொண்டு படிக்கலாமே?
அணைவருக்கும் செல்ல வேண்டிய தளம் இது.

தேவியர் இல்லம் திருப்பூர்

ஜெகத்:

உங்கள் பதிவுகளில் இது தான் கடைசி பதிவாக இருக்கிறது என்பதால் இங்கே எழுதுகிறேன். இதைப் படிப்பீர்களா என்று தெரியவில்லை.

மூன்று ஆண்டுகளுக்கு மேல் ஆகி விட்ட பின்னரும் - அடி வயிற்றில் இன்னும் கசப்புணர்வு இருக்கிறது.

இந்திய அரசு எடுத்த நிலைப்பாடு, பெருமளவு நாடாளு மன்ற உறுப்பினர்கள் இருந்தும் தம் ஊழல் வெளிப்பட்டு விடும் என பயந்து, திராணியற்றுக் கிடந்த தமிழ் நாட்டு அரசியல் வாதிகளின் கையாமை, பத்திரிக்கைகளின் பாரபட்சம், புலிகளின் பெரும் தவறுகள், என இந்த வீழ்ச்சிக்கு கோபம் கொள்ள எத்தனை இலக்குகள்? என்ன செய்ய?

உங்கள் வலி புரிகிறது.

நம்முள் உறைந்திருக்கும் அறியாமை எனும் நோய், தமிழீலப் பிரச்னைகள் போன்ற தருணங்களில், வெளிப்படையாக தெரியக்கூடிய சில அறிகுறிகளை காட்டுகிறது. அறியாமையையே முற்போக்குச் சிந்தனை என்று வலிந்து பிம்பங்கள் உருவாக்கப்படுகின்றன. அந்த பிம்பங்களை எதிர்த்து தரமான எதிர்வினை செய்யும் அரிதான குரல் உங்களுடையது.

அவசியம் தொடர்ந்து எழுதுங்கள்.

அன்புடன்
ராஜா