காலஞ்சென்றவை: சமஸ்கிருதமும் லத்தீனும்

தொலைக்காட்சியில் காட்டப்படும் வேற்றுமொழிப் படங்களை ஆங்கிலத் துணைத் தலைப்புகளின் உதவியுடன் பார்ப்பது எனக்கு விருப்பமான பொழுதுபோக்குகளில் ஒன்று. அப்படி ஒரு முறை புகழ்பெற்ற யூகோஸ்லாவிய இயக்குனர் எமிர் கூஸ்தூரீட்சா இயக்கியதென பின்னர் தெரிந்துக்கொண்ட "Black Cat, White Cat" என்ற நகைச்சுவைப் படத்தை மிகவும் ஒன்றிப்போய் பார்த்துக் கொண்டிருந்தேன். கிழக்கு ஐரோப்பாவில் பரவலாக உள்ள ஜிப்ஸி எனப்படும் நாடோடி இனக்குழுக்களின் வாழ்க்கையைப் பின்புலமாகக் கொண்ட இந்தப் படத்தைப் பார்க்கத் தொடங்கிய சில நிமிடங்களிலேயே உருவான ஒரு ஐயம் நேரம் போகப்போக வலுவடைந்தது. படத்தில் வரும் கதை மாந்தர்கள் பயன்படுத்திய பல சொற்கள் இந்திச் சொற்களை ஒத்திருப்பதைக் கவனித்தேன். அவை உச்சரிக்கப்பட்ட விதம் பஞ்சாபிகளின் இந்தி உச்சரிப்பை நினைவுபடுத்துவதாக இருந்தது. எடுத்துக்காட்டாக பஞ்சாபிகள் தங்களுக்குள் பேசிக்கொள்ளும் போது 'சுன்' (கேள்) என்ற இந்திச் சொல்லை 'சுனு' என்று ஒருவிதமாக இழுத்து உச்சரிப்பார்கள்.

மறுநாள் போதிமரத்தின் அடியில் (அதாவது கூகிளில்) தேடியபோது விஷயம் புரிந்தது. அந்தப் படத்தின் பெரும்பகுதி ஐரோப்பிய நாடோடிக் குழுக்களின் மொழியான ரோமானியில் இருந்ததையும், அவர்கள் ஏறத்தாள பத்து நூற்றாண்டுகளுக்கு முன்னால் இஸ்லாமிய படையெடுப்புகளின் போது பஞ்சாப் பகுதியிலிருந்து மேற்கு நோக்கிக் குடிபெயர்ந்தவர்கள் என்பதையும், ரோமானி மொழி இந்தி மற்றும் பஞ்சாபி மொழிகளுடன் நெருங்கியத் தொடர்புடையது என்பதையும் தெரிந்துக் கொண்டேன். தங்கள் தாயகத்திலிருந்து ஆயிரக்கணக்கான மைல்களுக்கு அப்பால் நாடோடி வாழ்க்கை வாழ்ந்தும், தொடர்ந்து கடும் அடக்குமுறைகளுக்கு ஆளாகியும் கூட இந்த மக்கள் ஆயிரம் ஆண்டுகளாகத் தங்கள் மொழியின் கூறுகளையும் இன அடையாளத்தையும் இழக்காமல் இருப்பது வியப்பாக இருந்தது. முற்றிலும் புதிய ஒரு மொழியை அணுகும் போது அதில் ஏற்கனவே அறிமுகமானச் சொற்களை அடையாளம் கண்டுக்கொள்வதில் ஒருவிதமான சுகம் இருக்கத்தான் செய்கிறது.

வில்லியம் ஜோன்ஸுக்கும் அப்படித்தான் இருந்திருக்க வேண்டும். பதினெட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த ஆங்கிலேயரான இவர் சிறுவயதிலேயே ஐரோப்பிய செம்மொழிகளான லத்தீனையும் கிரேக்கத்தையும் கற்றுத் தேர்ந்தவர். கிழக்கிந்திய கம்பெனி நிர்வாகத்தில் நீதிபதியாக பணிபுரிய வங்காளத்துக்கு வந்த ஜோன்ஸ் மரபுவழி இந்திய சட்டங்களைத் தெரிந்துக்கொள்வதற்காக சமஸ்கிருத மொழியை கற்கத் தொடங்கினார். சமஸ்கிருதத்துக்கும் லத்தீன் மற்றும் கிரேக்க மொழிகளுக்கும் ஏராளமான ஒற்றுமைகள் இருப்பதை கண்டு அவர் வியப்படைந்தார். அடுத்த சில ஆண்டுகளை இதுக்குறித்து ஆராய்வதில் செலவிட்ட பின்னர் இந்த மூன்று மொழிகளும் வழக்கொழிந்துவிட்ட ஒரு பழம் மொழியை பொது வேராகக் கொண்டவை என்றக் கருத்தை முன்வைத்தார்.

அடுத்த நூறு ஆண்டுகளில் இந்தக் கருத்து மேலும் பல மொழியியல் ஆய்வாளர்களால் முன்னெடுத்துச் செல்லப்பட்டதன் விளைவாக அஸ்ஸாமிலிருந்து அயர்லாந்து வரை பேசப்படும் நூற்றுக்கணக்கான ஆசிய/ஐரோப்பிய மொழிகள் ஒரே மொழிக் குடும்பத்தைச் (இந்திய-ஐரோப்பிய மொழிக் குடும்பம்) சேர்ந்தவையே என்னும் கருத்து நிறுவப்பட்டது. இந்த மொழிகள் அனைத்தும் ஏறத்தாள ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன் (பெரும்பாலும் மத்திய ஆசியாவில்) பேசப்பட்ட ஒரு மொழியிலிருந்துத் தோன்றியவை. Proto-Indo-European என்று தற்போது குறிக்கப்படும் இம்மொழியைப் பேசியவர்கள் பல்வேறு காலக்கட்டங்களில் சிறுக் குழுக்களாகப் பிரிந்து மேற்கு (ஐரோப்பாவை நோக்கி) மற்றும் தெற்கு (இந்தியாவை நோக்கி) திசைகளில் நகர்ந்ததின் விளைவாக பல கிளைகளாகப் பிரிந்தது என்பது ஏராளமான மொழியியல் / தொல்லியல் / வரலாற்று சான்றுகளின் மூலம் நிறுவப்பட்டுள்ளது.

சமஸ்கிருதம் லத்தீன் ஆகிய இரு மொழிகளுக்கும் இடையில் மொழியியல் ரீதியிலான ஒற்றுமைகளைத் தவிர வேறு பல ஒற்றுமைகளும் இருப்பது காணக்கூடியதாக இருக்கிறது. இரண்டுமே பேச்சுவழக்கில் இல்லாத செம்மொழிகள் என்பது வெளிப்படை. ஐரோப்பிய மொழிகளில் லத்தீன் வேர்ச்சொற்கள் மற்றும் இரவல் சொற்கள் ஏராளமாகக் காணப்படுவதைப் போல் இந்திய மொழிகளில் சமஸ்கிருதச் சொற்கள் நிறைந்திருக்கின்றன. தமிழகத்தில் தனித்தமிழ் இயக்கம் தோன்றுவதற்கு முன் மணிப்பிரவாள நடை என்ற பெயரில் அளவுக்கதிகமான சமஸ்கிருதச் சொற்களைக் கலந்து எழுதுவது மேதமையின் அடையாளமாகக் கருதப்பட்டதுப் போல கடந்த காலங்களில் தங்கள் எழுத்தில் ஆங்காங்கே லத்தீன் சொற்களையும் சொற்றொடர்களையும் தெளிப்பது ஆங்கில கல்விமான்களின் வழக்கமாக இருந்தது.

இன்னொரு முக்கியமான ஒற்றுமை இரண்டுமே வழிபாட்டுக்குரிய மொழிகள் என்று அடையாளப்படுத்தப்படுவது. சமஸ்கிருதம் இன்றளவும் நம்மில் பலருக்கு வழிபாட்டு மொழியாக இருந்து வருகிறது. குமரி மாவட்ட கத்தோலிக்கரான என் முன்னோருக்கு நானூறு ஆண்டுகளாக லத்தீன் வழிபாட்டு மொழியாக இருந்தது. விவிலியம், முக்கியமான வேண்டுதல்கள் ஆகியவை பதினாறாம் நூற்றாண்டிலேயே தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுவிட்ட போதிலும், திருப்பலி (mass) எனப்படும் இறைவழிபாட்டுக்கு ஆயிரத்து தொள்ளாயிரத்து அறுபதுகள் வரை லத்தீன் பயன்படுத்தப்பட்டது. சில வயதான பாதிரியார்கள் பழக்கத்தை விட முடியாமல் அடக்கச் சடங்கு போன்ற நேரங்களில் லத்தீனில் வேண்டுதல்களைச் சொல்வதை எண்பதுகளின் முற்பகுதி வரை நான் கண்டிருக்கிறேன். திருப்பலி லத்தீனில் இருந்தக் காலத்தில் பாதிரியார் மட்டுமில்லாமல் பொதுமக்களும் லத்தீனில் (பொருள் புரியாமலே மனனம் செய்து) வேண்டிக்கொள்ள வேண்டும். தமிழ் தவிர வேறு மொழியேதும் அறியாத கிராமத்து மக்கள் "mea culpa, mea culpa, mea maxima culpa" என்று இறைவனிடம் பாவமன்னிப்புக் கேட்பதைக் கற்பனை செய்வதே சற்று அபத்தமாகத் தான் இருக்கிறது. இப்போது இதை "என் பாவமே, என் பாவமே, என் பெரும்பாவமே" என்கிறார்கள்.

எனக்கு லத்தீன் தெரியாது. ஆனால் லத்தீன் சொற்களை வேராகக் கொண்ட ஏராளமான ஆங்கிலச் சொற்களை அறிவேன். அதுபோல எனக்கு சமஸ்கிருதமும் தெரியாது. ஆனால் தமிழ், மலையாளம், இந்தி போன்ற இந்திய மொழிகளில் பயன்படுத்தப்படும் நூற்றுக்கணக்கான சமஸ்கிருத சொற்களை அடையாளம் காணமுடியும். இந்த இரண்டு சொற்கூட்டங்களுக்கு இடையே உள்ள ஒற்றுமைகள் சில நேரங்களில் எனக்கு புலப்பட்டு வியப்பளிப்பதுண்டு.இப்படிப்பட்ட சொற்களை எழுதி வைத்தால் என்ன என்று ஒருமுறை தோன்றியதை செயல்படுத்தியபோது நிறைய சொற்கள் இருப்பது தெரிந்தது. இணையத்தில் உள்ள அகராதிகளைப் பயன்படுத்தித் தேடியதில் இன்னும் சில சொற்கள் அகப்பட்டன. அவற்றில் மொழியியல் அறிமுகம் எதுவும் இல்லாதவர்களுக்குக் கூட ஒற்றுமை புலப்படக்கூடிய சில சொற்களை மட்டும் ஒரு பட்டியலாகக் கீழே இட்டிருக்கிறேன்.

மொழியியல் அறிமுகம் இல்லாதவர்களுக்கு தொடர்பில்லாததுபோல் தோன்றும் சொற்களுக்கிடையே உள்ள ஒற்றுமைகளையும் பயிற்சி உடையவர்களால் கண்டறிய முடியும். அதற்கு ஒரு மொழியில் உள்ள சொல் மற்றொரு மொழியில் எப்படித் திரியும் என்ற விதிகளை அறிந்திருக்கவேண்டும். ஒரு எளிய எடுத்துக்காட்டாக 'பெயர்' என்றத் தமிழ் சொல்லுக்கும் அதே பொருளுடைய கன்னடச் சொல்லான "ஹெசரு" என்பதற்கும் உள்ள தொடர்பை மூன்று விதிகளைக் கொண்டு விளங்கலாம். விதி 1: தமிழ்சொல்லின் துவக்கத்தில் 'ப' வந்தால் அது கன்னடத்தில் 'ஹ' என்று திரியும் (புலி -> ஹுலி, பால் -> ஹாலு). விதி 2: 'ய' என்ற எழுத்து 'ச' என்றுத் திரிவதை தமிழ் மொழிக்கு உள்ளேயேக் காணலாம் (நேயம் -> நேசம், குயவன் -> குசவன்). விதி 3: 'ர்' என்ற எழுத்தில் முடியும் சொற்களை 'ரு' என்று முடியுமாறு உச்சரிப்பது கன்னடர்களின் வழக்கம் (ஓசூர் -> ஓசூரு, மைசூர் -> மைசூரு). இந்த மூன்று விதிகளையும் 'பெயர்' என்ற சொல்லின் மேல் செலுத்தினால் 'ஹெசரு' என்று உருமாறும்.

இரண்டு மொழிகளில் உள்ள சொற்களுக்கு இடையே உள்ளத் தொடர்பை அறிய வழக்கொழிந்துவிட்ட பழஞ்சொற்களைப் பற்றிய அறிவும் தேவை. எடுத்துக்காட்டாக, 'இன்று' என்பதை 'இண்ணு' என்றும் 'நாளை' என்பதை 'நாள' என்றும் சொல்லும் மலையாளிகள் 'நேற்று' என்பதை மட்டும் 'இன்னலெ' என்று ஏன் சொல்கிறார்கள் என்று நான் குழம்பியதுண்டு. இதற்கான விளக்கம் வேங்கடராஜுலு என்பவர் எழுதிய "தமிழ் சொல்லமைபு" என்ற நூலில் கிடைத்தது. பழந்தமிழில் 'நேற்று' என்பதைக் குறிக்க 'நெருநல்' மற்றும் அதன் திரிபாகிய 'நென்னல்' ஆகியவைப் பயன்படுத்தப்பட்டுள்ளன. (குறள்: "நெருநல் உளனொருவன் இன்றில்லை.." - நேற்று இருந்தவன் இன்றில்லை). நென்னல் என்பதே கன்னடத்தில் 'நென்ன' என்றும் மலையாளத்தில் இன்னலெ என்றும் திரிந்திருக்கிறது.

தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு போன்ற தென்னிந்திய மொழிகளும், மத்திய மற்றும் வடமேற்கு இந்தியாவில் அழிவின் விளிம்பில் இருக்கும் பிராஹுய் போன்ற மொழிகளும் சமஸ்கிருதம், லத்தீன் போன்ற இந்திய-ஐரோப்பிய மொழிகளுடன் சற்றும் தொடர்ப்பில்லாத மற்றொரு மொழிக் குடும்பத்தைச் சேர்ந்தவை என்பதை முதன்முதலில் முறையாக ஆய்ந்து அறிவித்தவர் ராபர்ட் கால்டுவெல். 1841-ல் கிருஸ்தவம் பரப்புவதற்காக திருநெல்வேலிக்கு வந்த இவர் தொழிலுக்கு உதவும் என்று தமிழ் கற்கத் தொடங்கிய பின் ஏற்பட்ட ஆர்வம் காரணமாக அடுத்த ஐம்பது ஆண்டுகளைத் தமிழ் ஆய்விலும் மொழியியல் ஆய்விலும் செலவிட்டார். "திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்" என்ற நூல் இவரது முக்கியமான பங்களிப்பு. தமிழறிஞர்களால் "கால்டுவெல் அய்யர்" என்று குறிப்பிடப்படும் இவருக்கு சென்னைக் கடற்கரையில் தமிழக அரசால் சிலை வைக்கப்பட்டது. அண்மைக்காலமாக அய்யரவர்களுக்கு நேரம் அவ்வளவாக சரியில்லை. "இந்தியாவைத் துண்டாட வந்த வெள்ளை இனவெறியன்" போன்ற வசைகள் தன் மீது ஏவப்படுவதை அறிந்தால் கால்டுவெல் இடையன்குடியில் உள்ளத் தன் கல்லறையில் புரண்டுப் படுக்கக்கூடும். வேற்றுமையில் ஒற்றுமை என்பதையெல்லாம் பள்ளிப்பாடத்தோடு விட்டுவிட்டச் சிலருக்கு தமிழும் சமஸ்கிருதமும் முற்றிலும் வெவ்வேறு மொழிக் குடும்பங்களைச் சேர்ந்தவை என்ற ஆய்வு முடிவை எவ்வளவு ஹஜ்மோலாவுடன் சேர்த்து விழுங்கினாலும் செரிக்க முடியாமல் இருப்பதே இந்த வசைகளுக்குக் காரணம்.

என் நண்பர் ஒருவர் தெலுங்கைத் தாய்மொழியாகக் கொண்டவர். சென்னையில் சில ஆண்டுகள் தங்கியிருந்தபோது தமிழைச் சரளமாகப் பேசக் கற்றுக்கொண்டுவிட்டார். அவரது ஆர்வத்தையும் முயற்சியையும் பாராட்டியபோது, "தமிழ் தெலுகு ரெண்டுக்கும் பெரிய டிஃபரன்ஸ் இல்லை. ஆஃப்டர் ஆல், ரெண்டுமே ஸான்ஸ்க்ரிட்லேந்து வந்தது தானே" என்றார். தமிழும் தெலுங்கும் சமஸ்கிருதத்திலிருந்து தோன்றியவை என்ற அவரதுக் கருத்து கடந்த நூற்றைம்பது ஆண்டுகால மொழியியல் ஆய்வு முடிவுகளுக்கு முற்றிலும் எதிரானது என்று விளக்க முயன்றபோது சற்று எரிச்சல் கலந்தக் குரலில் சொன்னார்: "இண்டியன் லாங்குவேஜஸ் எல்லாம் ஸான்ஸ்க்ரிட்லேந்து தான் வந்ததுங்கிறது ரொம்ப பேசிக்கான விஷயம்". உண்மையில் பெரும்பாலான தெலுங்கர்களும் மலையாளிகளும் (சிலத் தமிழர்களும்) இந்தக் கருத்தைக் கொண்டிருப்பதை விவாதங்களில் கண்டிருக்கிறேன். தங்கள் மொழி சமஸ்கிருதத்திலிருந்து தோன்றியதல்ல என்று மொழியியல் ஆதாரங்களோடுச் சுட்டிக் காட்டப்பட்டால் இவர்கள் மிகுந்த சினம் கொள்வதைக் காணலாம்.

மேற்படிக் கருத்தைக் கொண்டிருப்பவர்கள் செய்யும் தவறு இதுதான்: தென்னிந்திய மொழிகளில் ஏராளமான சமஸ்கிருத இரவல் சொற்கள் இருப்பதைக் காண்கிறார்கள். எனவே தென்னிந்திய மொழிகள் சமஸ்கிருத்ததிலிருந்து தான் தோன்றியிருக்கவேண்டும் என்ற முடிவுக்கு வருகிறார்கள். இதைவிட அபத்தம் வேறெதுவும் இருக்கமுடியாது. நானூறு ஆண்டுகளுக்கு முந்தையத் தமிழில் ஒரு ஆங்கிலச் சொல் கூட இருந்திருக்காது. ஆனால் இன்றையப் பேச்சுத்தமிழிலும் (திங்க் பண்ணி, டிசைட் பண்ணி, இன்ஃபார்ம் பண்ணி என்று பேசப்படும் 'பண்ணி' மொழியில்) ஜூனியர் விகடன் போன்ற எழுத்துக்களிலும் ஏராளமான ஆங்கிலச் சொற்கள் கலந்திருப்பதால் தமிழ் ஆங்கிலத்திலிருந்துத் தோன்றியது என்றுச் சொல்லமுடியாது. இருநூறு ஆண்டுகளாக தமிழர்கள் மீது ஆங்கிலேயர் அரசியல் ரீதியாக ஆதிக்கம் செலுத்தியது மற்றும் இன்றைய உலகில் ஆங்கிலம் பேசுவோரின் மறைமுக ஆதிக்கம் ஆகியவையே தமிழில் ஆங்கிலக் கலப்புக்குக் காரணம். தென்னிந்திய மொழிகளில் சமஸ்கிருதக் கலப்புக்கான காரணமும் இதுபோன்றது தான். உண்மை இப்படியிருக்க, இந்திய மொழிகள் அனைத்தும் சமஸ்கிருதத்திலிருந்துத் தோன்றியவை என்பது மத நம்பிக்கைகளைப் போல தர்க்கத்துக்கு அப்பாற்பட்ட ஒரு நம்பிக்கையாக இந்தியர்கள் நடுவே நிலவுகிறது.

தங்கள் மதம், இனம் தொடர்பான நம்பிக்கைகளுக்கும் ஐதீகங்களுக்கும் எதிரான அறிவியல் / தொல்லியல் ஆய்வு முடிவுகளை மூர்க்கமாக எதிர்ப்பதும் உள்நோக்கம் கற்பிப்பதும் இந்தியர்களுக்கு மட்டுமே உள்ள இயல்பு அல்ல. மனித இனத்தின் தோற்றம் குறித்த டார்வின் கோட்பாடு தங்கள் மத நம்பிக்கைக்கு எதிரானது என்பதால் அது பள்ளிகளில் பயிற்றுவிக்கப் படுவதை கடுமையாக எதிர்த்து அதற்கு மாற்றாக எவ்வித அறிவியல் அடிப்படையும் இல்லாத intelligent design என்ற ஒரு பம்மாத்து தத்துவத்தை அமெரிக்க கிருஸ்தவ அடிப்படைவாதிகள் முன்வைப்பதை இங்கேச் சுட்டலாம். அதுபோல இந்திய-ஐரோப்பிய மொழிக் குடும்பத்தின் பிறப்பிடம் மத்திய ஆசியா என்ற ஆய்வு முடிவு இந்தியாவில் 'பித்ருபூமி', 'புண்ணியபூமி' போன்ற கருத்தாக்கங்களால் ஒருத் தேசியத்தை வரையறைச் செய்து தங்களுக்கு வேண்டாதவர்களை அதற்கு வெளியே நிறுத்தி மகிழும் சிலருக்கு படக்கூடாத இடத்தில் உதைக்கப்பட்டதுப் போன்ற உணர்வை எழுப்புகிறது போலும். எனவே அதை மறுத்து இந்திய-ஐரோப்பிய மொழிக் குடும்பத்தின் பிறப்பிடம் இந்தியா தான் என்று "எப்படியாவது" நிறுவவேண்டும். மொகஞ்சதாரோவிலும் ஹரப்பாவிலும் வாழ்ந்த மக்கள் சமஸ்கிருத மொழியையோ பண்பாட்டையோ அறிந்திருக்கவில்லை என்பது நியாயமான ஐயங்களுக்கு அப்பாற்பட்ட முறையில் நிறுவப்பட்டுவிட்டப் போதும் அங்கே சமஸ்கிருதத்தின் இருப்பை நிலைநாட்டியேத் தீருவோம் என்ற முன்முடிவுடன் நடத்தப்படும் "ஆய்வுகள்" இந்தப் போக்கின் நீட்சி.

பதிவுக்கு மீள்வோம். கீழே உள்ளப் பட்டியல் சமஸ்கிருதம் மற்றும் லத்தீன் சொற்களிடையே உள்ள ஒற்றுமைகளின் அடிப்படையில் உருவானது. வேறு சில சமஸ்கிருதச் சொற்களுக்கு லத்தீன் சொற்களோடு உள்ள ஒற்றுமையை நிறுவ முடியாவிட்டாலும் மற்ற ஐரோப்பிய மொழிகளில் அதேபோல் ஒலிக்கும் சொற்கள் இருப்பதைக் காணமுடிகிறது. எடுத்துக்காட்டாக, நாபி (தொப்புள்) என்ற சமஸ்கிருதச் சொல்லுக்குரிய லத்தீன் சொல் umbilicus. ஆனால் ஜெர்மன் மொழியில் nabel, ஆங்கிலத்தில் navel. அதே வேளையில் சமஸ்கிருதத்துக்கு ஐரோப்பிய மொழிகளைக் காட்டிலும் பலமடங்கு அதிக ஒற்றுமை இரான், ஆஃப்கானிஸ்தான் நாடுகளில் பேசப்படும் பழைய பாரசீக மொழியிலிருந்து தோன்றிய மொழிகளுடன் இருக்கிறது. இந்திய-ஐரோப்பிய மொழிக் குடும்பத்தில் சமஸ்கிருதத்துக்கு பாரசீக மொழி சொந்த சகோதரி என்றால் லத்தீன் ஒன்றுவிட்ட சகோதரி. பட்டியல் இந்த வரிசையில் உள்ளது: முதலில் தமிழ்ச்சொல், அடுத்த வரியில் சமஸ்கிருதச் சொல்லும் தொடர்புடைய இந்திய மொழிச் சொற்களும், இறுதியாக லத்தீன் சொல்லும் தொடர்புடைய ஆங்கிலச் சொற்களும்.

1. பிறப்பு
ஜன் -> ஜன்மம், ஜனனம்
genus -> genetic, genealogy

2. இறப்பு
மர் -> மரணம்
mors -> mortuary, mortal

3. தாய்
மாத்ர் -> மாத்ருபாஷா, 'வந்தே மாதரம்'
mater -> matrilineal, maternal

4. தந்தை
பித்ர் -> பித்ருபூமி, 'பிதுர் கடன்'
pater -> patriarchal, paternal

5. பெயர்
நாமன் -> நாமம், நாமகரணம்
nomen -> name, nomenclature

6. நெருப்பு
அக்னி -> அக்னி
ignis -> ignite

7. கடவுள்
தேவ -> தெய்வம்
deus -> deity, deify

8. மன்னன்
ராஜ -> ராஜகுரு, ராஜகுமாரன்
regis -> regicide, regal

9. கைம்பெண்
விதவா -> விதவை
vidua -> widow

10. மூக்கு
நாஸ் -> நாசி
nasus -> nasal

11. பல்
தந்த் -> தாந்த் (ஹிந்தி: பல்)
dentis -> dental

12. அடி
பாத -> பாதசாரி
pedis -> pedestrian, pedal

13. இரண்டு
த்வி -> த்விபாஷி (இரு மொழி அறிந்தவன்), த்விவேதி
duo -> dual, duet

14. மூன்று
த்ரி -> த்ரிமூர்த்தி, த்ரிவேதி
tria -> triangle, trinity

15. ஏழு
சப்த -> சப்தஸ்வரம் (ஏழு ஸ்வரங்கள்)
septem -> september (7th month in old calender)

16. ஒன்பது
நவ -> நவக்கிரகம், நவராத்திரி
novem -> november (9th month in old calender)

17. பத்து
தச -> தசாவதாரம், தசாப்தம்
decem -> december, decimal

18. என்னை
மா -> மேய்ன் (இந்தி: நான்)
me -> me

19. உன்னை
த்வா -> து (இந்தி: நீ)
tu -> thou (Old English: you)

20. உள்ளம்
மனஸ் -> மனஸ்தாபம், மனம்
mens -> mental

21. பெரும்-
மகா -> மகாகவி, மகாராஜா
magna -> magnificent, megastar

22. சிறை
காராக்ரஹ -> காராக்ரஹம்
carcer -> incarcerate

23. தொன்மையான
சன -> சனாதன
senex -> senile, senior

24. இளைஞன்
யுவன் -> யுவன்
iuvenis -> juvenile

25. குரல் / பேச்சு
வாக் -> வாக்கு
vox -> vocal

26. ஆடவன்
வீரா -> வீரியம்
vir -> virile

27. சொல்
வ்யார்த்தி -> வார்த்தை
verbum -> verbal

28. தன்
ஸ்வ -> சுய, சுயம்
suo -> 'suo moto'

29. இரவு
நக்தம் -> நக்ஷத்திரம்
noctis -> nocturnal

30. புதுமை
நவ -> நவீன
novus -> novel

31. உதவி
ஸாக -> சகாயம்
succurro -> succor

32. அறிவு
ஞான -> ஞானம்
gnoscere -> ignore, knowledge

33. நடு
மத்ய -> மத்யஸ்தம், மத்தியில்
medius -> median, middle

34. கக்குதல்
வாமிதி -> வாந்தி (திரிபு)
vomito -> vomit

35. மாலுமி
நௌகர -> நௌக்கா (இந்தி: படகு)
nauta -> nautical

36. உள்ளே / இடையே
அந்தர் -> அந்தராத்மா, 'அந்தர்-ராஷ்ட்ரிய' (இந்தி)
inter -> internal, international

37. ஊர்தல்
சர்ப்ப -> சர்ப்பம் (பாம்பு)
serpere -> serpent

38. வண்டி
வாஹன -> வாகனம்
vehiculum -> vehicle

39. நிலம்
தர -> தரை, தரணி
terra -> terrestrial, terrain

40. ஆடை
வஸ்த்ர -> வஸ்திரம்
vestis -> vest