பே-இமானித்தனம்

கையில் கிடைக்கும் காகிதத்தை எல்லாம் - அது கடலை பொதிந்து வந்த காகிதமானாலும் - ஒரு எழுத்துவிடாமல் படிக்கும் பழக்கம் எனக்கு ஒன்பது அல்லது பத்து வயதிலேயே தொற்றிவிட்டது. அந்நாட்களில் தமிழ் நாளிதழ்களில் ஏதாவது ஒரு அரசியல்வாதி - காளிமுத்துவோ, ஜெயலலிதாவோ, வைக்கோவோ - எதிரணியில் இருக்கும் மற்றொரு அரசியல்வாதியை "தமிழகத்து கோயபெல்ஸ்" அல்லது "இந்தியாவின் கோயபெல்ஸ்" என்ற அடைமொழியுடன் விளித்து பேசியதாகச் செய்திகள் இடம்பெற்றிருக்கும். அது ஏதோ ஒரு வசை என்று புரிந்தாலும் கோயபெல்ஸ் என்றால் என்ன என்று அப்போது குழம்பியது நினைவிருக்கிறது. இந்த கோயபெல்ஸ் தான் ஒரு பெரிய பொய்யைச் சொல்லி பின்பு அதிலிருந்து பின்வாங்காமல் அதையே திரும்பத் திரும்பச் சொல்லும் உத்தியை அறிமுகப்படுத்தியவர் என்று பின்னாளில் தெரிந்துக்கொண்டேன். கடந்த இரு வாரங்களாக தமிழ் வலைப்பதிவுகளில் இந்த உத்தியின் மிகச்சிறந்த செய்முறை விளக்கம் ஒன்றைக் காணும் பேறு கிடைத்திருக்கிறது.

*****

பத்து நாட்களுக்கு முன் தமிழ்மணம் நிர்வாகம் வெளியிட்டிருந்த ஒரு அறிவிப்பைப் படித்தேன். தமிழ்மண நிர்வாகத்திடம் சில விளக்கங்களை கேட்டிருந்த ஒரு பதிவருக்கு அதில் பதில் அளித்திருந்தார்கள். மேற்படி பதிவர் எழுதியிருந்த சில வரிகளை அந்த அறிவிப்பில் மேற்கோள் காட்டியிருந்தார்கள். அதை இங்கே இடுகிறேன்:

"தமிழ்மண கருவிப்பட்டை இருக்கும்போது நமது ஒவ்வொரு செயலும் தமிழ்மணத்தால் பதிவு செய்யப்படும் வாய்ப்பிருக்கின்றது. இந்த தகவல்கள் யார் யாருடன் பகிர்ந்து கொள்ளப்படுகின்றன, who is privy to all these details, யாரெல்லாம் டெக்னிக்கல் விஷயங்களை பார்த்துக் கொள்கிறார்கள் என்பதைத் தெளிவுபடுத்துவது நல்லது."

இதில் இரண்டு கேள்விகள் இருக்கின்றன.

கேள்வி 1: (பதிவர்கள் பற்றிய தகவல்கள்) யார் யாருடன் பகிர்ந்து கொள்ளப்படுகின்றன?

கேள்வி 2: (தமிழ்மணத்தை நிர்வகிப்பவர்களில்) யாரெல்லாம் டெக்னிக்கல் விஷயங்களை பார்த்துக் கொள்கிறார்கள்?

இந்த இரண்டு கேள்விகளுக்கும் தமிழ்மணம் நிர்வாகம் அந்த அறிவிப்பில் ஒன்றன்பின் ஒன்றாகப் பதில் சொல்லியிருந்தது. தினத்தந்தி பாணியில் ஒவ்வொன்றுக்கும் தனித் தலைப்பு போட்டுவிடுகிறேன்.

முதல் கேள்விக்கு பதில்

பதிவர்கள் பற்றிய தகவல்கள் யார் யாருடன் பகிர்ந்து கொள்ளப்படுகின்றன என்ற முதல் கேள்விக்கான பதில்:

“Policy of Privacy பக்கத்தில் பதிவர்களின் அந்தரங்கத் தகவல் சேகரிப்பது பற்றியும், அவை முறையான விண்ணப்பமூடே சட்டம் கொணரக் கேட்டாலன்றி, எந்நிலையிலுங்கூட, எவருடனும் பகிர்ந்துகொள்ளப்படுவதில்லை என்பதும் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது."

ஆங்கிலத்திலும் சொல்லியிருக்கிறார்கள்:

"Specific information such as name, IP address, email address, or other contact information will never be shared with anyone unless ordered by a court of law.”

இரண்டாவது கேள்விக்கு பதில்

தமிழ்மணத்தை நிர்வகிப்பவர்களில் யாரெல்லாம் டெக்னிக்கல் விஷயங்களை பார்த்துக் கொள்கிறார்கள் என்ற இரண்டாவது கேள்விக்கான பதில்:

"இந்நிறுவனத்தினை நடத்துகின்றவர்களின் பெயர்கள் இத்தளத்தில் ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளன. இதற்குமேல் ஒரு பதிவருக்குத் தமிழ்மணத்தின் உள்ளமைப்பு, நிர்வாகம் தொடர்பாக எவ்விதமான மேலதிகத்தகவலும் தேவையில்லை, அப்படியாகத் தரவேண்டிய அவசியமும் எமக்கில்லை என்று கருதுகிறோம். தமிழ்மணத்தின் திட்டங்கள் நிர்வாகக் குழுவுக்குள் நாட்டின் சட்டங்களுக்கும் நிறுவன விதிகளுக்கும் அமைய விவாதிக்கப்பட்டு , முடிவுகள் எடுக்கப்பட்டுச் செயற்படுத்தப்படுகின்றன. எமது செயற்பாடுகள் குறித்து தார்மீகக்காரணங்களுக்காக நாமே விரும்பினால்மட்டுமே தகவல்களைத் தாமாகவே எமது விதிமுறைகளுக்கமைய வந்திணைந்து கொள்ளும் பதிவர்களுக்குத் தரமுடியும்."

*****

நான் தமிழ்ப் புலவன் இல்லை. என் தமிழ் படிப்பு பதினாறு வருடங்களுக்கு முன்பு பள்ளிப்படிப்போடு முடிந்துவிட்டது. இருப்பினும் மேலே உள்ளதைப் புரிந்துக்கொள்வதில் எனக்கு கடுகளவு கூட பிரச்சனை இல்லை. பதிவர்களின் அந்தரங்கத் தகவல்களை முறையாக நீதிமன்ற உத்தரவு மூலம் கேட்டால் தவிர எந்நிலையிலும் எவருடனும் பகிர்ந்துக்கொள்ள மாட்டோம் என்று தெளிவாகச் சொல்லியிருக்கிறார்கள். நிர்வாகிகளின் செயற்பாடுகள் பற்றிய தகவல்களை அவர்கள் விரும்பினால் மட்டுமே தார்மீகக் காரணங்களுக்காக பதிவர்களுக்கு தரமுடியும் என்றும் சொல்லியிருக்கிறார்கள். இரண்டு வெவ்வேறு கேள்விகளுக்கான பதில்கள் அவை.

இன்னும் ஒரு ஐந்து வருடங்கள் கழித்து என் மகன் கூட இதை வாசித்து சரியாகப் புரிந்துக்கொள்வான் என்ற நம்பிக்கை இருக்கிறது. (இப்போது அவனுக்கு வயது இரண்டு.) ஆனால் தமிழில் வலைப்பதிவு எழுதும் அளவுக்குத் தமிழ் தெரிந்த சிலருக்கு இது தலைகீழாக அல்லது கால்மேலாக புரிந்திருக்கிறது. இந்த அறிவிப்பு வந்த அன்றே ஒரு தவறான தகவல் அல்லது பொய் உருவாக்கப்பட்டது. பதிவர்களின் அந்தரங்கத் தகவல்களை தார்மீகக் காரணங்களுக்காகத் தமிழ்மணம் நிர்வாகம் மற்றவர்களுக்கு அளிக்கும் என்று சொல்லியிருக்கிறார்கள் என்ற தகவல் பரவியது / பரப்பப்பட்டது. கடந்தப் பத்து நாட்களாக குறைந்தது ஒரு இருபது பதிவுகளிலாவது இந்த தவறான தகவல் / பொய் எழுதப்பட்டிருப்பதைப் பார்த்திருப்பேன். இப்படி எழுதியவர்களை இரண்டு பிரிவுகளாகப் பிரிக்கிறேன்.

பிரிவு 1: உண்மையிலேயே தவறாகப் புரிந்துக்கொண்டவர்கள்.
பிரிவு 2: சரியாகப் புரிந்துக்கொண்டு வேண்டுமென்றே பொய்யானத் தகவலைப் பரப்புபவர்கள்.

முதல் பிரிவில் இருப்பவர்களைக் குறிக்க பொருத்தமான ஒரு சொல் இருந்தால் மேற்கொண்டு விளக்குவதற்கு வசதியாக இருக்கும். ஆனால் அப்படி ஒரு சொல்லை மெனக்கெட்டுக் கண்டுபிடிப்பதற்கான நேரம் கைவசம் இல்லாததால் இப்போதைய வசதிக்காக அவர்களைக் குறிக்க இங்கிலீஷ்காரர்கள் என்ற சொல்லைப் பயன்படுத்துகிறேன். இங்கிலீஷ்காரர்களுக்கு மேலே தமிழில் எழுதப்பட்டிருப்பது புரியாமல் போனது மற்றும் தமிழ்மணம் அறிவிப்புகளில் பயன்படுத்தப்படும் மொழி/நடை மீது அவர்களுக்கு இருக்கும் இனம்தெரியாத வெறுப்பு ஆகியவற்றின் பின்னணியில் உள்ள சமூக காரணங்களை புரிந்துக்கொள்வது நல்லது. இது எந்த விதத்திலும் அவர்களைக் குறை சொல்வதாகாது. உண்மையில் கடந்த பல பத்தாண்டுகளாக தமிழ்நாட்டில் நிலவும் விசித்திரமான ஒரு கலாச்சாரப் போக்கு ஏற்படுத்திய பாதிப்புக் காரணமாகவே அவர்கள் அவ்வாறு நடந்துக்கொள்கிறார்கள்.

இன்று கல்லூரிப் படிப்பு முடித்து நல்ல வேலையில் இருக்கும் ஒரு சராசரி தமிழக இளைஞனின் தமிழ் சொற்தொகை (vocabulary) மிகக் குறைவானது. அந்த சொற்தொகையை வைத்து அவனால் எதைக் குறித்தும் - குறிப்பாக இலக்கியம், அறிவியல், சட்டம், தத்துவம் போன்றவற்றைக் குறித்து - ஆழமாக பேசவோ விவாதிக்கவோ முடியாது. ஐஸ்வர்யாவின் திருமணம், ஜூனியர் விகடன் கழுகாரின் செய்திகள், ரஜினிகாந்தின் 'ஒரு தடவை சொன்னா' தத்துவம், வடிவேலின் அவ்வ்வ் என்ற ஊளை போன்ற இலகுவான விஷயங்களை விவாதிக்க மட்டுமே அவனது தமிழ் போதுமானதாக இருக்கிறது. அதற்கு தன்னுடைய உழைப்பின்மையே காரணம் என்பதை ஒத்துக்கொள்ள மறுக்கும் அவன் அதை தமிழ் மொழியின் குறைபாடாக நினைக்கிறான். ஆனால் அப்படி அல்ல, சிக்கலான சிந்தனைகளையும் தமிழில் வெளிப்படுத்தலாம் என்று யாராவது செய்துக் காட்டினால் எரிச்சல் அடைந்து நக்கல் நையாண்டி மூலம் அதை எதிர்கொள்கிறான். அல்லது நடையை எளிமைப்படுத்துமாறு கோரிக்கை வைக்கிறான். (இதே ஆட்கள் ஒரு ஆங்கிலக் கட்டுரை புரியவில்லை என்றால் அதன் ஆசிரியரிடம் எளிமையாக எழுதுங்கள் என்று கனவில் கூட கேட்கமாட்டார்கள். அகராதியின் துணையுடன் நேரம் செலவிட்டு உழைத்து புரிந்துக்கொள்வார்கள். எனக்கு எளிமையான ஆங்கிலம் மட்டும் தான் புரியும் என்று சொல்வதை விட நாற்சந்தியில் அம்மணமாக நிற்பார்கள். ஆனால் தமிழில் மட்டும் எளிமை வேண்டும்.)

இதற்கு தமிழ்நாட்டுச் சூழல் தான் காரணம். "தமிழ்" நாளிதழ்கள் உயர்நீதிமன்றம் என்ற சொல் வாசகனுக்குப் புரியாது என்று அதை ஐ(!)கோர்ட்டு என்று "எளிமைப்படுத்தி" அச்சிடுகின்றன. இன்று இணையம், கணினி, வலைப்பக்கம், விசைப்பலகை, இசைவட்டு போன்ற சொற்களை வழக்கில் நிலைபெறச் செய்தது தமிழ்நாட்டு ஊடகங்களின் ஆதிக்கத்துக்கு வெளியே இருக்கும் வெளிநாடுகளில் வாழும் தமிழர்கள் தான். "எங்க ஆக்டிவிடீஸ் பத்தின டீடெய்ல்ஸ் எல்லாம் எத்திக்கல் ரீசன்ஸுக்காக நாங்களே வாலன்டரியா கொடுப்போம்" என்று தமிழ்மண நிர்வாகம் "எளியத் தமிழில்" அறிவிப்புகளை வெளியிட்டிருந்தால் சராசரி தமிழ்நாட்டு இளைஞன் கருத்தை கச்சிதமாக கவ்வியிருப்பான். அதை விட்டுவிட்டு செயற்பாடுகள், தார்மீகம் என்றெல்லாம் எழுதினால் அவன் என்ன செய்வான்?

தமிழ்நாட்டு இங்கிலீஷ்காரர்களுக்கு மற்ற நாடுகளைப் பிறப்பிடமாகக் கொண்டத் தமிழர்கள் தங்கள் தாய்மொழியைப் பேணுவது ஒருவித எரிச்சலை அளிப்பதை நான் பலமுறை பார்த்திருக்கிறேன். ஈழத்தமிழர் விஷயத்தில் தான் என்றில்லை. சிங்கப்பூர் தமிழ் தொலைக்காட்சி செய்திகளில் பயன்படுத்தப்படும் தூயத் தமிழைக் கூட தமிழ்நாட்டிலிருந்து வந்தவர்கள் நக்கலடிப்பதைப் பலமுறை பார்த்திருக்கிறேன். ("என்ன தமிழுய்யா இது? திருவாட்டிங்கிறான், மின்தூக்கிங்கிறான்...") மற்ற நாட்டுத் தமிழர்களுக்குத் தன்னைப் போல தாய்மொழி எதிர்ப்பு என்னும் ஈன அரசியலை செய்யவோ அல்லது அந்த அரசியலுக்கு சப்ளாக்கட்டை அடிக்கவோ வேண்டியக் கட்டாயம் எதுவும் இல்லை என்பதைக் கூட இவர்கள் புரிந்துக் கொள்வதில்லை.

இத்தகையவர்களுக்கு தமிழ் வலைப்பதிவுகளில் ஆழமான அல்லது "புரியாத" விஷயங்கள் பேசப்படுவது அன்னியமான ஒன்றாகத் தெரிகிறது. தங்கள் வேலை அலுப்பைப் போக்க அவ்வப்போது வந்து விளையாடிச் செல்லும் களிப்பிடமாகவே (எழுத்துப்பிழை அல்ல) இவர்கள் தமிழ் வலைப்பதிவுகளை காண்கிறார்கள். குமுதம், விகடன், குங்குமம் போன்றவற்றின் நீட்சியாக என்று சொல்லலாம். அதே மொழியைப் பேசி, அதே நையாண்டி மேளத்தை வாசித்து, அதே வெற்றுக் கோஷங்களை எழுப்பி...

எனக்கு நெருக்கமான ஒருவருக்கு ரமணி சந்திரனின் எழுத்துப் புரிகிறது. ஜெயமோகன் புரிவதில்லை. ஜெயமோகன் எல்லாருக்கும் புரியும்படி எழுதினால் என்ன என்று கேட்டார். என்ன செய்யட்டும்? ஒன்று அவரிடம் இப்படி சொல்லாம்: "ஜெயமோகனது எழுத்தை ஆயிரக்கணக்கானவர்கள் புரிந்து ரசிக்கிறார்கள். நீங்களும் கொஞ்சம் உழைத்தால் புரிந்துக்கொள்ளலாம்". அல்லது ஜெயமோகனுக்கு மடல் அனுப்பி ரமணி சந்திரனைப் போல எளிமையாக எழுதுமாறு கேட்டுக்கொள்ளலாம். இன்னும் ஒருபடி மேலே போய் சிந்துபாத் கதையைப் போல் சகலருக்கும் புரியுமாறு எழுதச்சொல்லலாம். இங்கிலீஷ்காரர்கள் தான் முடிவுசெய்ய வேண்டும்.

முதல் பிரிவினரைக் குறித்து நிறையச் சொல்லியாகிவிட்டது, அவர்களில் சிலரிடமாவது ஏதாவது மாற்றம் ஏற்படும் என்ற நம்பிக்கையில். இரண்டாம் பிரிவினரின் மேல் அத்தகைய நம்பிக்கைகள் ஏதும் இல்லாததால் சுருக்கமாக முடித்துக்கொள்கிறேன். தார்மீகக் காரணங்களுக்காகப் பதிவர்களின் தகவல்களை தருவோம் என்று தமிழ்மணம் "தெளிவாகவே" சொல்லிவிட்டதாக எழுதுபவர்கள் தான் தமிழ்மணம் அறிவிப்பு "குழப்பமாக" இருப்பதாகவும் எழுதுகிறார்கள். தெளிவா, குழப்பமா என்பதில் கூட ஒரு தெளிவு இல்லையா? இந்த அறிவிப்பை வேண்டுமென்றே உள்நோக்கத்தோடு திரித்து, இத்தனை முறை தெளிவுபடுத்திய பிறகும் விளங்காதது போல் நடித்துக்கொண்டு சற்றும் கூச்சமில்லாமல் சொன்ன பொய்யையே திரும்பத் திரும்பச் சொல்லிக்கொண்டிருப்பதைப் போல ஒரு பே-இமானித்தனம் ஏதும் இல்லை. அப்படி இல்லை என்றால் தவறாகப் புரிந்துக்கொண்டதை ஏற்றுக்கொண்டு மீதி இருக்கும் கொஞ்சநஞ்ச நம்பகத்தன்மையைக் காப்பாற்றிக்கொள்வது நல்லது.

உருது/இந்தி தெரியாதவர்களுக்கு: பே-இமான் -> நேர்மையற்றவன், நம்பத்தகாதவன் (இமான்தாரி -> நேர்மை)

ஆதிக்க வெறி, ஐஐடி மற்றும் ஆங்கில அனானி

தேசபக்தியும் கிரிக்கெட் வெறியும் மிகுந்த நண்பர்கள் சிலரிடையே சுற்றிக்கொண்டிருக்கும் ஒரு மின்னஞ்சலை அண்மையில் காணநேர்ந்தது. வழக்கமாக இவர்கள் அனுப்பும் மின்னஞ்சல்களில் ஒவ்வொரு இந்தியனையும் பெருமிதத்தால் விம்ம வைக்கும் தகவல்கள் இடம் பெற்றிருக்கும். பரலோகராஜ்யம் சமீபித்திருக்கிறது என்று எங்களூர் சுவர்களில் எழுதும் பெந்தக்கொஸ்தேக்காரர்களைப் போல வல்லரசாகப் போகும் இந்தியாவுக்குக் கட்டியம் கூறும் மின்னஞ்சல்களே அவற்றில் பெரும்பாலானவை. ஆனால் நான் குறிப்பிட்ட மின்னஞ்சல் சற்று வித்தியாசமானது. Photoshop திறமைகளைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்டிருக்கும் இதன் தலைப்பு "உலகக் கோப்பைக்குப் பின் இந்திய ஆட்டக்காரர்கள்". அதில் கங்குலி முடி வெட்டுகிறார், டெண்டுல்கர் மீன் பிடிக்கிறார், எனக்குப் பெயர் தெரியாத ஒரு ஆட்டக்காரர் செருப்புத் தைக்கிறார். ஆட்டக்காரர்களை மிக மோசமாக அவமானப்படுத்துவதாக நினைத்துக்கொண்டு ஏதோ ஒரு கம்பியூட்டர் பையன் உருவாக்கிய இந்தப் படங்களை அதன் பின்னால் இருக்கும் சாதி/வர்க்கத் திமிரைப் பற்றிய சொரணை ஏதும் இல்லாமல் மற்றக் க.பையன்கள் பரப்பி வருகிறார்கள்.

சாதி அடுக்கில் கீழே இருப்பவர்களை இழிவாக நினைப்பதும், அந்த சாதியினருக்கு பல நூற்றாண்டுகளாக விதிக்கப்பட்ட மேற்படி தொழில்களை அதைவிட இழிவாகக் கருதுவதும் இந்திய நடுக்குடி/மேட்டுக்குடி மக்களின் ரத்தத்தில் கலந்துவிட்ட ஒன்று. இந்த மனப்போக்கு தான் சில மாதங்களுக்கு முன் டில்லியில் இட ஒதுக்கீட்டுக்கு எதிராகப் போராட்டம் நடத்திய ஆதிக்க சாதி மாணவர்களிடையே வெளிப்பட்டது. பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இட ஒதுக்கீடு அளிக்கப்பட்டால் "திறமையை" மொத்தமாக குத்தகைக்கு எடுத்து வைத்திருக்கும் இவர்கள் தெருப் பெருக்கவும், செருப்புத் தைக்கவும் போகவேண்டியிருக்கும் என்று நடித்துக் காண்பித்தார்கள். வெள்ளைக் காலர் வேலைகளில் சாதி அடிப்படையிலான இட ஒதுக்கீட்டை எதிர்க்கும் இந்தக் கனவான்களுக்கு மயிரளவாவது தார்மீக நேர்மையும் சமூக உணர்வும் இருந்திருந்தால் தெருப் பெருக்குவதிலும், செருப்புத் தைப்பதிலும், முடி வெட்டுவதிலும், சாக்கடைக் கழுவுவதிலும் சாதி அடிப்படையிலான நூறு விழுக்காடு இட ஒதுக்கீடு அமலில் இருப்பதைப் பற்றி யோசித்திருப்பார்கள்.

சரி, இத்தகைய மனப்போக்கை வெளிப்படுத்துபவர்கள் முதிர்ச்சியற்ற இளைஞர்கள் என்றுக் கருதிப் பொறுத்துக்கொள்ளலாம். ஆனால் இந்தியாவில் எல்லா அமைப்புகளுக்கும் மேலாக மதிக்கப்படும் சர்வ வல்லமை படைத்த உச்சநீதிமன்றம் உயர்கல்வி நிறுவனங்களில் பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டைத் தடை செய்த தீர்ப்பில் உள்ள சில வரிகளைப் பாருங்கள்:

"The statute in question, it is contended, has lost sight of the social catastrophe it is likely to unleash. Not only would the products be intellectual pygmies as compared to normal intellectually sound students passing out, it has been highlighted that on the basis of unfounded and unsupportable data about the number of OBCs in the country the Act has been enacted."

ஐஐடி போன்ற உயர்கல்வி நிறுவனங்களில் 27% இடங்களைப் பிற்படுத்தப்பட்டோருக்கு ஒதுக்கினால் சமூகப் பேரழிவு ஏற்படும் என்ற பூச்சாண்டியை விட்டுவிடுவோம். ஏனென்றால் அதற்கு அடுத்த வரியில் அதைவிடப் பெரிய பூச்சாண்டி இருக்கிறது. உயர்கல்வி நிறுவனங்களில் இட ஒதுக்கீடு அமல்படுத்தப்பட்டால் இயல்பான அறிவார்ந்த மாணவர்கள் வெளிவருவதற்குப் பதிலாக அறிவு வளர்ச்சிக் குன்றியவர்கள் (intellectual pygmies) வெளிவருவார்களாம்.

இங்கே ஒன்றைக் கவனிக்கவேண்டும். ஐஐடி-களில் 27% இடங்களை ஒதுக்குவது என்பது ஒவ்வொரு வருடமும் சுமார் 1000 பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு வாய்ப்பளிப்பது தான். நாடு முழுவதும் உள்ள கோடிக்கணக்கான பிற்படுத்தப்பட்ட சமூக மாணவர்களில் கடுமையான நுழைவுத்தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆயிரம் பேருக்கு படிப்பதற்கு வாய்ப்பு அளிக்கப்படும். ஆக, 50 கோடிக்கு மேற்பட்ட பிற்படுத்தப்பட்ட மக்களில் அறிவு வளர்ச்சி குன்றாத - intellectual pygmies அல்லாத - ஆயிரம் மாணவர்கள் கூட தேறமாட்டார்கள் என்ற வாதத்தின் அடிப்படையிலேயே உச்சநீதிமன்றம் இட ஒதுக்கீட்டுக்குத் தடை விதித்திருக்கிறது. இனவெறிக்கு எதிரான கடுமையான சட்டங்கள் உள்ள ஒரு நாட்டில் இப்படி ஒரு பிரிவினரின் அறிவுத்திறனை ஒட்டுமொத்தமாக இழிவுபடுத்துவது களி தின்ன வைக்கக்கூடும். ஆனால் இந்தியாவில் இப்படிப்பட்ட ஒரு தீர்ப்பைக் கேள்வி கேட்பது தேசத்துரோகச் செயல்.

போதிய புள்ளி விவரங்கள் இல்லாததை இட ஒதுக்கீட்டை தடை செய்வதற்கு ஒரு காரணமாகச் சொல்லியிருக்கும் உச்சநீதிமன்றம் கொஞ்சம் தமிழ்நாட்டின் கல்வி மேம்பாடு பற்றிய புள்ளிவிவரத்தை பார்த்திருந்தால் இட ஒதுக்கீட்டுக்கும் intellectual pygmies -க்கும் முடிச்சுப் போடுவதிலுள்ள அபத்தம் தெரியவந்திருக்கும். இன்றுத் தமிழக மக்களில் 85 விழுக்காட்டுக்கு மேலான மக்கள் பிற்படுத்தப்பட்டோர்/தாழ்த்தப்பட்டோர் என்று வகைப்படுத்தப்பட்டு இட ஒதுக்கீட்டினால் பயன்பெறுகிறார்கள். 4 விழுக்காட்டுக்கு குறைவாக இருக்கும் பார்ப்பன சமூகத்தினரும், சுமார் 10% வரை இருக்ககூடிய இதர 'உயர்'சாதியினரும் மட்டுமே இட ஒதுக்கீட்டுக்கு வெளியே இருக்கிறார்கள். தமிழகத்தில் (அன்றைய மதராஸ் மாகாணத்தில்) நீதிக்கட்சி ஆங்கில அரசாங்கத்திடம் தனக்கிருந்த செல்வாக்கைப் பயன்படுத்தி கல்வி மற்றும் அரசு வேலைவாய்ப்புகளில் பின்தங்கிய சமூகங்களுக்கு சிறு அளவில் இட ஒதுக்கீட்டை அமல்படுத்தி எண்பத்தைந்து ஆண்டுகள் ஆகின்றன. அதற்கு முந்தைய நிலைமை என்ன?

M.R. Barnett எழுதிய The Politics of Cultural Nationalism in South India (Princeton University Press, 1976) என்ற நூலிலிருந்து:

"From 1901 to 1911 Brahmins received 71 percent of the degrees awarded by Madras University and controlled the key power centre in the university, the Senate."

அன்று மதராஸ் மாகாணத்தில் இருந்த அனைத்துக் கல்லூரிகளும் சென்னைப் பல்கலைக்கழகத்தின் கீழ் தான் இருந்தன என்பதுக் குறிப்பிடத்தக்கது. மக்கட்தொகையில் 4 விழுக்காட்டுக்கு குறைவாக இருந்த சமூகம் கல்லூரிகளில் 71 விழுக்காடு இடங்களைப் பெற்றிருந்தது. அன்றும் சில மேதாவிகள் இதற்கு "திறமையை" காரணமாகச் சொல்லியிருப்பார்கள். சில சாதிகள் இயல்பிலேயே அறிவாளிகள் என்றும் வேறு சில சாதிகளுக்கும் அறிவுக்கும் சம்பந்தமே கிடையாது என்றும் நம்பப்பட்டக் காலம் அது.

சரி, மீதி 29% இடங்கள் யாருக்குப் போயிருக்கக் கூடும்? அந்தக் காலத்தில் இந்தியக் கல்லூரிகளில் படித்தவர்களிடையே ஆங்கிலேயர்களின் வாரிசுகளும், ஆங்கிலோ இந்தியர்களும் உண்டு. அக்கால தமிழ் சமூகத்தைப் பற்றிய நம் அறிவை வைத்து நோக்குகையில் எஞ்சியுள்ள இடங்களில் பெரும்பாலானவற்றை இதர 'உயர்' சாதியினர் (முதலியார், வெள்ளாளர், நாயுடு..) கைப்பற்றியிருப்பதற்கே வாய்ப்புகள் அதிகம். மக்கட்தொகையில் 85% இருக்கும் மற்ற பின்தங்கிய சாதியினர் (நாடார், தேவர், வன்னியர், மீனவர், தலித்துக்கள்..) முற்றிலும் "திறந்த போட்டி" நிலவிய அக்காலத்தில் கல்லூரிகளில் 10% இடங்களைக் கூட பெற்றிருக்கவில்லை என்பது நியாயமான ஐயங்களுக்கு அப்பாற்பட்டது.

இத்தகைய ஒரு சூழலில் தான் நீதிக் கட்சி சிறு அளவு இட ஒதுக்கீட்டை அமல்படுத்தியது. இந்த நடவடிக்கையை காங்கிரஸ் கட்சியின் அன்றையத் தலைவர்கள் "தேச நலன்" கருதி கடுமையாக எதிர்த்தது சபைக் குறிப்புகளில் ஆவணப்படுத்தப்பட்டிருக்கிறது. இப்போது நடப்பதைப் போலவே அன்றும் கல்லூரிகளிலிருந்து intellectual pygmies வெளிவருவார்கள் என்ற பூச்சாண்டி காட்டப்பட்டிருக்கக் கூடும். பின்னாளில் அதிகாரத்திற்கு வந்த திமுக, அதிமுக அரசுகள் இட ஒதுக்கீட்டின் அளவை அதிகரித்தன.

கல்வித் திறனைப் பொறுத்தவரை தமிழகத்தில் பின்தங்கியிருந்த சாதிகளின் இன்றைய நிலை என்ன?

கடும் போட்டி நிலவும் மருத்துவ படிப்புக்கான இடங்களில் திறந்தப் போட்டி (open competition) அடிப்படையிலானப் பொதுப் பிரிவில் 2005-ம் ஆண்டு 90 விழுக்காட்டுக்கு மேலான இடங்களைப் பிற்படுத்தப்பட்ட / தலித் மாணவர்கள் கைப்பற்றி இருக்கிறார்கள். அதே செய்தியிலிருந்து:

"Education analyst Jayaprakash Gandhi says that students from the so-called forward classes are clearly not keeping pace with the competition from the BC/MBC/SC contenders."

வட இந்திய மாநிலங்களில் கற்பனை கூட செய்யமுடியாத ஒரு நிகழ்வு இது. "திறமைவாதிகள்" சொல்வதைப் போல மதிப்பெண்களின் அடிப்படையில் தான் அறிவு தீர்மானிக்கப்படுகிறது என்றால் தமிழகத்தில் அன்று intellectual pygmies ஆக இருந்தவர்களது வாரிசுகள் இன்று intellectual giants ஆகிவிட்டார்கள் எனலாம். வெறும் 10% இடங்களைக் கூட பெறமுடியாத நிலையிலிருந்த சமூகங்கள் இன்று - பொதுப் பிரிவில் - 90% இடங்களை கைப்பற்றுகிறார்கள். எண்பத்தைந்து ஆண்டுகளில் - ஒரு மனித ஆயுள் - இது எப்படி சாத்தியமானது? காலங்காலமாக கல்வியும் மற்ற வாய்ப்புகளும் மறுக்கப்பட்டதால் பின்தங்கியிருக்கும் மக்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டால் ஓரிருத் தலைமுறைகளிலேயே முன்னிலைக்கு வந்துவிடுவார்கள் என்பது தமிழகத்தில் சந்தேகத்துக்கு இடமில்லாமல் நிறுவப்பட்டிருக்கிறது.

ஆனால் இந்தப் புள்ளி விவரங்களை எல்லாம் உச்சநீதிமன்றம் சீண்டாது. அல்லது அவற்றைக் குறித்து நன்றாக அறிந்துள்ளதால் தான் இடஒதுக்கீட்டை எப்படியாவதுத் தடுக்க முயல்கிறார்களோ என்னவோ. போகட்டும். உச்சநீதிமன்ற நீதிபதிகள் அமைப்பின் பாதுகாவலர்கள், பெரும்பாலும் மரபுவாதிகள். அவர்கள் இத்தகைய தீர்ப்புகளை வழங்குவது எதிர்பார்க்கத்தக்கதே. ஆனால் இடஒதுக்கீட்டை ஆதரிப்பதாகச் சொல்லிக்கொள்ளும் "முற்போக்கு, இடதுசாரி" நாளிதழான ஹிந்துவின் தலையங்கத்தைப் பாருங்கள்:

"The overall national interest would also require preserving certain institutions such as the Indian Institutes of Technology and the Indian Institutes of Management as islands of excellence uncompromised by any other consideration."

தேச நலனை முன்னிட்டு ஐஐடி போன்ற நிறுவனங்கள் (இடஒதுக்கீடு போன்ற) சமரசங்கள் ஏதுமற்ற உன்னதத் தீவுகளாகப் பாதுகாக்கப்பட வேண்டுமாம். கோயிலில் எல்லோரையும் அனுமதிக்கலாம் ஆனால் கருவறைக்குள் மட்டும் அனுமதிக்கக்கூடாது என்பது போன்ற ஒரு நிலைபாட்டை ஹிந்து எடுத்திருக்கிறது. ஐஐடி-களில் ஒரு பகுதி இடங்களை பிற்படுத்தப்பட்டோருக்கு ஒதுக்கினால் "தேச நலன்" எப்படி பாதிக்கும்? பார்ப்போம்.

*****

2003-ம் ஆண்டு ஐஐடியின் பொன்விழாவை முன்னிட்டு ஹிந்து குழுமத்தின் ஃப்ரண்ட்லைன் இதழில் காந்தா முரளி என்பவர் ஒரு விரிவானக் கட்டுரையை எழுதியிருந்தார். அதிலிருந்து:

"The IITs involve a considerable burden to the Indian taxpayer and this raises the important question of how the country should direct its educational investment. In a country with a woeful primary education record, government funding of the IITs is significant. In 2002-2003, the Central government's budgetary allocation to the IITs was Rs.564 crores compared with a total elementary education outlay of Rs.3,577 crores. Even if it is recognised that the State governments undertake a large responsibility in providing primary education, there is little doubt that the allocation to primary education is grossly inadequate."

இட ஒதுக்கீட்டுக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கனவான்கள் "What they need is good schools, not reservation" என்று திருவாய் மலர்வதை நீங்கள் தொலைக்காட்சியில் கண்டிருக்கக்கூடும். Good schools -ஐ உருவாக்குவதற்கு இந்திய கொள்கை வகுப்பாளர்கள் அளிக்கும் முக்கியத்துவத்தை தான் மேலே பார்க்கிறீர்கள். (வழக்கம் போல அரசியல்வாதிகளின் மேல் இதற்கான பழியைப் போடுவதானால் வெறும் ஏழு ஐஐடிகளுக்கு 564 கோடி ருபாய் ஒதுக்கி போஷாக்காக வைத்திருப்பதற்கும் அவர்களேப் பொறுப்பு என்பதையும் ஒத்துக்கொள்ளவேண்டும்.) உடைந்தக் கரும்பலகைகளும் ஒழுகும் கூரைகளுமாய் இருக்கும் கிராமப்புறத் தொடக்கப் பள்ளிகளின் நிலையைக் கண்டிருக்கும் எவரும் அவற்றுக்கு எந்த அளவு நிதிப் பற்றாக்குறை இருக்கிறது என்பதை உணரமுடியும்.

சரி, ஐஐடிகளுக்கு ஏன் இவ்வளவு பெரும்தொகை தேவைப்படுகிறது? உலகத்தரமானக் கல்வி நிறுவனங்களை உருவாக்கவேண்டுமானால் மற்ற உலகத்தர நிறுவனங்களைப் போலவே செலவு செய்யவேண்டும் என்று மேற்படி கட்டுரை சொல்கிறது. ஆனால் அமெரிக்காவின் எம்.ஐ.டி-யில் ஒரு இளங்கலை மாணவர் செலுத்தும் கட்டணத்தில் இருபத்தைந்தில் ஒரு பங்கைத் தான் இந்திய ஐஐடி மாணவர் செலுத்துகிறார் என்றத் தகவலும் கட்டுரையில் உள்ளது. மீதி? அரசு வழங்கும் தாராளமான மானியங்களின் மூலம் ஈடுகட்டப்படுகிறது. இப்படி மக்கள் வரிப்பணத்தில் உலகத்தர கல்வியைப் பெறும் ஐஐடி மாணவர்கள் படித்தபின் என்ன செய்கிறார்கள்? படியுங்கள்:

"It is likely that close to half the annual undergraduate output of the seven IITs, that is, anything between 1,500 and 2,000 young men and women, go abroad every year — overwhelmingly to the U.S. It is estimated that there are some 25,000 IIT alumni in the U.S. A bleak factor for India is that few of those who go to the U.S. for higher studies plan to return. ... The (Economist) survey also revealed that Indian students were more likely to remain in the U.S. after higher studies than students from any other country....But what is telling, even in the Sukhatme study, is that migration rates were significantly higher in those branches of engineering that attracted the highest ranked entrants to the IITs. .... It also currently estimated that in the popular computer science stream, almost 80 per cent migrated to the U.S."

இதெல்லாம் தேச நலனைப் பாதிக்காதா? ஆனால் ஐஐடிகளைப் பொறுத்தவரை இது விவாதத்துக்கு அப்பாற்பட்டது போலிருக்கிறது.

"Interestingly, the IITs and their web sites are coy about the number of alumni who go abroad to study and work. Despite receiving substantial budgetary allocations from the Central government, the failure to collect systematically data on the sensitive point of the brain drain suggests an attitude of non-transparency. IIT managements and alumni networks tend to avoid initiating a public debate on the destination of IIT graduates and who benefits directly from the IIT system."

புள்ளி விவரங்கள் போதாததால் ஐஐடிகளில் இட ஒதுக்கீட்டை தடை செய்த நீதிபதிகளுக்கு ஐஐடி நிர்வாகங்கள் இந்த முக்கியமானப் புள்ளி விவரத்தை தொகுக்கவோ வெளியிடவோ மறுப்பதைப் பற்றிக் கவலை ஏதும் இருப்பதாகத் தெரியவில்லை.

ஐஐடிகளில் இட ஒதுக்கீட்டை எதிர்ப்பவர்கள் மூச்சுக்கு மூவாயிரம் முறை தகுதியைப் பற்றிப் பேசுகிறார்கள். ஐஐடிகள் விண்ணப்பிக்கும் மாணவர்களின் தகுதியை எப்படி எடை போடுகின்றன? இளங்கலைப் படிப்புக்கான ஐஐடியின் நுழைவுத்தேர்வு முறை உலகிலேயே கடுமையானதாகக் கருதப்படுகிறது. விண்ணப்பிப்பவர்களில் சுமார் 2 விழுக்காடு மாணவர்கள் தான் அனுமதிக்கப்படுகிறார்கள். பள்ளிப்படிப்பின் இறுதி வருடங்களில் பள்ளிப்படிப்போடு ஐஐடி நுழைவுத்தேர்வுக்கான மிகக் கடுமையான பயிற்சியில் ஈடுபடுபவர்களுக்கு மட்டுமே இடம் கிடைப்பதற்கான சிறிதளவு வாய்ப்பாவது இருக்கிறது என்று இந்தக் கட்டுரை தெரிவிக்கிறது. இந்த "மிகக் கடுமையான பயிற்சியை" இதற்காகவே உள்ள, பெரும்பாலும் பெருநகரங்களில் அமைந்துள்ள சிறப்பு பயிற்றுவிப்பு நிறுவனங்கள் மூலம் மட்டுமே பெறமுடியும். இதனால் ஐஐடிகளின் நுழைவுத்தேர்வு முறை பெருநகரங்களில் உள்ள மாணவர்களுக்கு சாதகமாக இருக்கிறது என்றக் கருத்து பரவலாக நிலவுகிறது. ஒரு முன்னாள் ஐஐடி மாணவர் எழுதிய ஒரு கட்டுரையிலிருந்து இந்தப் பயிற்றுவிப்பு நிறுவனங்கள் ஆற்றும் பங்கைத் தெரிந்துக்கொள்ளலாம்.

"It is reckoned 95 percent of the candidates seeking admission into IITs go through coaching shops, paying high fees. The amount of money spent by IIT aspirants attending the coaching factories is about Rs.20 billion per year."

"The distorted impact of assembly line coaching taken by candidates is indicated by the percentage of students admitted to IITs from different states in southern India. During a recent year under review, 979 candidates from the south zone secured admission. Of them, 769 were from Andhra Pradesh, while Tamil Nadu accounted for 94 successful candidates, Karnataka, 84, and Kerala, for no more than 32 candidates. Andhra Pradesh may well be producing bright IIT entrants, but those from the other three states can't be that poor. Mushrooming of IIT tutorials and coaching factories in Hyderabad may have much to do with the JEE results."

தமிழகம், கர்நாடகம், கேரளம் ஆகிய மாநிலங்கள் ஒவ்வொன்றிலும் இருந்து 100 மாணவர்கள் கூட ஐஐடிக்கு தேர்வு செய்யப்படாத நிலையில், ஆந்திராவில் இருந்து மட்டும் 769 மாணவர்களுக்கு இடம் கிடைக்கிறது. காரணம் ஹைதராபாத்தில் இருக்கும் ராமையா இன்ஸ்டிட்யூட் போன்ற வெற்றிகரமானப் பயிற்றுவிப்புத் தொழிற்சாலைகள். அங்கே போய் அதிக கட்டணம் செலுத்திப் படிப்பது எத்தனை கிராமப்புற / சிறுநகர மாணவர்களுக்கு சாத்தியம்? இது தான் தகுதியை அளக்கும் முறையா?

சரி, இப்படிப்பட்ட ஒரு தேர்வுமுறையில் வெற்றிபெற்று ஐஐடிகளில் நுழையும் மாணவர்களின் தரம் எப்படி இருக்கிறது? அதே கட்டுரையிலிருந்து:

"An IIT review committee report in 2004 had questioned the calibre of students selected on the basis of an extremely tough entrance examination conducted by IIT joint Entrance Examination (JEE)."

இந்தியாவின் மிகப்பெரிய தனியார்துறை நிறுவனங்களில் ஒன்றான டாடா ஸ்டீல் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் திரு. பி. முத்துராமனின் கருத்து:

"The Tata Steel chief, recalling his recent interaction with some final-year students of IIT Chennai, observed they could not even name the authors of the subject books they were supposed to have studied. He later found out that the students were able to clear the tests without having to read books. He was in for further shock on discovering that their teachers were no more knowledgeable about the subjects they were supposed to teach. ... Muthuraman and the Tata Steel were not alone in their perception of today's IIT graduates. Some other companies are equally disinterested in recruiting from IITs."

அரசிடமிருந்து மிக அதிகமாகப் பொருளாதார உதவி பெறும் ஐஐடிகளினால் சமூகத்தின் எந்தப் பிரிவு அதிகம் பயன்பெறுகிறது? மேலே குறிப்பிட்ட ஃப்ரண்ட்லைன் கட்டுரையிலிருந்து:

"The typical IIT student is male, hails from an urban middle class family."

இந்திய ஊடகங்களைப் பொறுத்தவரை "urban middle class" என்பது ஒருவகை இடக்கரடக்கல் (euphemism) எனலாம். இப்போது உங்களுக்கு ஹிந்து தலையங்கத்தில் சொல்லப்படும் "தேச நலன்" லேசாக விளங்கத் தொடங்கியிருக்கும்.

*****

அண்மைக்காலமாக சமூகநீதிக்கு ஆதரவாகப் பேசும் தமிழ்பதிவுகளில் இட ஒதுக்கீட்டை எதிர்த்து ஆங்கிலத்தில் சில அனானி பின்னூட்டங்கள் தவறாமல் இடம்பெறும். நடை, தொனி, பயன்படுத்தப்படும் மானே-தேனே-பொன்மானேக்கள் ஆகியவற்றின் அடிப்படையில் இவற்றில் பெரும்பாலானவற்றை எழுதுவது ஒருவரே என்று நினைக்கிறேன். அண்மையில் இட ஒதுக்கீட்டை தடை செய்த உச்சநீதிமன்றத் தீர்ப்பை விமரிசிக்கும் பதிவுகளில் எல்லாம் இந்த அனானி ஆதாரமில்லாத ஒரு தகவலைப் பரப்பி வருகிறார். அதாவது இந்த தீர்ப்பை அளித்த நீதிபதிகளில் ஒருவர் (நீதிபதி முனைவர் அரிஜித் பசாயத்) பழங்குடியை (scheduled tribe) சேர்ந்தவராம். மற்றவர் (நீதிபதி லோகேஷ்வர் சிங் பாண்டா) பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த சீக்கியராம். இந்தத் தகவலை சரி பார்க்காமல் அப்படியே ஏற்றுக்கொண்டு வேறு சிலரும் இப்படி எழுதி வருகிறார்கள். இந்த பின்னூட்டங்களிலிருந்து சில வரிகள் கீழே:

"Of the 2 judges who gave the stay order on OBC quota in IITs etc one (Ajit Prasyait) is a tribal(ST) and other is a Sikh.Both are not from upper castes."

"Thank god that some of the judges who heard this case were from backward community, if not you would have even painted them being discriminatory."

இது தவறானத் தகவல். தமிழ்பதிவுகளில் சமூகநீதி பேசுபவர்களுக்கு வட இந்திய சாதிப்பெயர்களைப் பற்றியெல்லாம் என்ன தெரியப்போகிறது என்ற தைரியத்தில் வேண்டுமென்றே பரப்பப்படும் பொய் இது. நீதிபதி அரிஜித் பசாயத் ஒரிசாவை சேர்ந்தவர். பசாயத் என்பது ஒரிசாவில் சத்திரியர்களாக கருதப்படும் கண்டாயத் என்னும் 'உயர்'சாதியின் ஒரு உபபிரிவு. இந்த கண்டாயத் சாதியினர் தான் அண்மையில் தலித் பெண்களை நிர்வாணப்படுத்தி வீதிவழியே இழுத்துச் சென்றதற்காக செய்திகளில் அடிபட்டவர்கள். நீதிபதி லோகேஷ்வர் சிங் பாண்டா (Panta, Panda அல்ல) ஹிமாச்சலப் பிரதேசத்தில் ராஜபுத்திர இனத்தை சேர்ந்தவர். ராஜபுத்திரர்களும் பிற்படுத்தப்பட்டோர் தான் என்றெல்லாம் கதைகட்டப்படுவதற்கு முன்பே அப்படி அல்ல என்பதை தெளிவுபடுத்திவிடுவது நல்லது.

ஆக, இந்த தீர்ப்பை வழங்கிய நீதிபதிகள் பழங்குடியினரோ பிற்படுத்தப்பட்டவரோ அல்ல. இடஒதுக்கீடு அமல்படுத்தப்பட்டால் பாதிக்கப்படக்கூடிய 'உயர்'சாதிகளை சேர்ந்தவர்கள். நீதிபதிகளின் சாதியைப் பற்றிப் பேசும் தேசத்துரோகச் செயலை நான் செய்துவிட்டதாக சிலர் கொதித்து எழக்கூடும். ஆனால் தேசபக்தரும், இட ஒதுக்கீட்டு எதிர்ப்பாளருமான ஆங்கில அனானி நீதிபதிகளின் சாதியைப் பற்றிய தவறானத் தகவலைப் பரப்பிவருவதன் காரணமாகவே நான் இந்த தகவல்களை தோண்டியெடுக்க வேண்டியதாயிற்று. ஆங்கில அனானி போன்ற இட ஒதுக்கீட்டு எதிர்ப்பாளர்கள் இத்தகைய மலிவான மோசடிகளின் மூலம் இந்த தீர்ப்பை நியாயப்படுத்தவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டிருப்பது கவலையையும் மகிழ்ச்சியையும் அளிக்கிறது.

கிறுக்கு, கிறுக்கலாக

ஒவ்வொருவரும் தங்களை விந்தையான சிந்தைக் கொண்டவர்களாகவும் மந்தையிலிருந்து வேறுபட்டவர்களாகவும் காட்டிக்கொள்ள முயலும் இந்த விளையாட்டில் கலந்துக்கொள்ள மதி அழைத்திருந்தார். என்னிடம் கிறுக்குத்தனங்களுக்குப் பஞ்சமில்லாததால் நிறைய எழுதலாம் தான். ஆனால் படிப்பதற்கு ஆள் வேண்டாமா? எனவே சுருக்கமாக:

புதிதாகப் போய் சேர்ந்த ஊர் ஒன்றில் அம்மை நோய் வந்து இரண்டு வாரங்கள் யாரையும் சந்திக்காமல் ஒற்றை வார்த்தைக் கூட பேசாமல் வீட்டுக்குள் தனியே வேக உணவுகளையும் வேகாத உணவுகளையும் உண்டு இருக்க நேர்ந்தால் உங்கள் மனநிலை எப்படி இருக்கும்? நான் ஒரு அதி உன்னதமான மனநிலையில் இருந்தேன். (இது விந்தையல்ல விசர் என்ற அசரீரி குரல் கேட்கிறது.) எவ்விதக் குறுக்கீடுகளோ கடமைகளோ இன்றி முற்றிலும் தான்தோன்றித்தனமாக புத்தகம் வாசிப்பதும், தொலைக்காட்சியில் படங்கள் பார்ப்பதுமாகப் பொழுதைப் போக்கிக்கொண்டிருந்தேன். நான் ஒரு தனிமைவிரும்பி என்றுச் சொன்னால் அதைப்போல் ஒரு understatement (தாழ்வுநவிற்சி?) இருக்கமுடியாது. கபிரியல் கார்சியா மார்க்வெஸைப் பற்றி எதுவும் தெரியாதக் காலத்திலேயே "One Hundred Years of Solitude" -ஐ அந்தத் தலைப்புக்காகவே எடுத்துவந்துப் படித்திருக்கிறேன் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.

தனிமையை விரும்புபவர்கள் அமைதியை விரும்பாமல் இருக்கமாட்டார்கள். கூட்டமும் இரைச்சலும் உள்ள இடங்களுக்குப் போவது எனக்கு சிறுவயது முதலே பிடிக்காது. இது இயல்பானது தான் என்றும் எல்லாரும் இப்படித் தான் இருப்பார்கள் என்றும் அப்போது நினைத்திருக்கிறேன். ஆனால் "இல்லை, இல்லை, இல்லவே இல்லை" என்றுச் சொல்லும் நிறைய மனிதர்கள் பின்னாளில் அறிமுகமானார்கள். சிறிது நேரம் கூட சலசலப்பு இல்லாமல் இருக்கமுடியாதப் பனங்காட்டு நரிகள் இவர்கள். தொலைபேசியோ இணைய இணைப்போ இல்லாத தனியறையில் அரை மணி நேரம் அடைக்கப்பட்டால் மூச்சுத்திணறக்கூடியவர்கள். நான் இதற்கு நேர் எதிர். பள்ளி நாட்களில் யாராவது ஆசிரியர் வரவில்லையென்றால் அந்த முக்கால் மணி நேரமும் முழு அமைதி காக்கவேண்டும் என்பது விதி. பேசுகிற மாணவர்களின் பெயர்களை ரகசியமாக குறித்துவைக்கும் ஐந்தாம் படை வேலையைச் செய்வதற்கு சில மாணவர்கள் பணிக்கப்பட்டிருப்பார்கள் என்பதும் அப்படி பேசுபவர்களுக்கு பிறகு பிரம்படி முதலானத் தண்டனைகள் கிடைக்கும் என்பதும் அனைவருக்கும் தெரியும். இருந்தாலும் வகுப்பில் பெரும்பாலான மாணவர்களுக்கு முக்கால் மணி நேரம் பேசாமல் அமைதியாக இருப்பது சற்றும் முடியாதக் காரியம். ஒவ்வொரு முறையும் பேசி அடிபடுவார்கள். எனக்கோ இந்த அமைதி நேரங்கள் மிகவும் விருப்பத்திற்குரியவை. ஏதாவதுப் பகற்கனவிலோ வேறு ஏதாவது எண்ணங்களிலோ எனக்குள்ளே தொலைந்துவிடுவேன். அதேப்போல் எனக்கு ஆர்வமில்லாத அறுவைப் பாடங்கள் நடத்தப்படும் போதும் மனம் வகுப்பறையை விட்டு எங்கோ பறந்துவிடும்.

சிலகாலம் முன்பு வரை சொல்வதற்கு உருப்படியாக ஏதும் இல்லாத நேரங்களில் மௌனமாக இருக்கும் வழக்கத்தைக் கொண்டிருந்தேன். (எப்போதுமே இப்படித்தான் என்றில்லை. ஒரே அலைவரிசையில் இருக்கும் நண்பர்களுடன் உரையாடுகையில் - குறிப்பாக கார்ல்ஸ்பெர்க்கோ அவன் சிற்றப்பன் ஹைனக்கென்னோ உடனிருந்தால் - மடை திறந்து பாயும் நதியலையாக மாறிவிடுவதுண்டு.) பன்னிரண்டு வயதிலிருந்தே படிப்புக்காகவும் பின்னர் வேலைக்காகவும் குடும்பத்தையும் சுற்றத்தையும் பிரிந்து வெளியூர்களில் ஒரு சிறு நண்பர் வட்டத்துக்கு வெளியே எவ்வித சமூக வாழ்வும் இல்லாமல் இருந்ததாலோ என்னவோ வெறுமனே சம்பிரதாயத்துக்காக நடத்தப்படும் உரையாடல்களில் (குசலம் விசாரிப்புகள், ஏதாவதுப் பேசவேண்டுமே என்பதற்காக பேசப்படும் வாக்கியங்கள்) அறவேப் பயிற்சியில்லாமல் இருந்தேன். "போன வருஷத்த விட இந்த வருஷம் வெயில் ஜாஸ்தி" போன்ற உப்புசப்பில்லாதப் பேச்சுகளை சகித்துக்கொள்ளவும், அதிகப்பட்சமாக ஒற்றை வார்த்தைகளில் பதில் சொல்லவும் முடிந்ததே தவிர அத்தகைய உரையாடல்களில் பங்கெடுக்க முடிந்ததில்லை. ஆனால் கடந்த மூன்று வருடங்களாக - திருமணத்திற்குப் பிறகு - இப்படி "பேச்சிலர்" ஆக இருப்பவர்களை மற்றவர்கள் எப்படிப் பார்க்கிறார்கள் என்பதைக் கொஞ்சம் புரிந்துக்கொண்டிருப்பதால் என்னை மாற்றிக்கொள்ள முயற்சித்து வருகிறேன். இப்போது சில நேரங்களில் வெயில், மழை பற்றியெல்லாம் நான் "ஆர்வத்துடன்" பேசுவது எனக்கே வியப்பாகவும் வேடிக்கையாகவும் இருக்கும்.

எவ்வளவு தான் என்னை மாற்றிக்கொள்ள முயன்றாலும், என்னால் இயல்பாக ஈடுபட முடியாத, நினைத்தாலே பயமும் மன அழுத்தமும் ஏற்படுத்துகிற ஒரு சம்பிரதாய உரையாடல் இருக்கிறது. ஆனால் வெளிநாட்டில் வசிப்பதால் அடிக்கடி அந்த ஆக்கினைக்கு ஆளாகவேண்டி இருக்கிறது. குடும்ப உறுப்பினர் யாரையாவது இழந்த உறவினரையோ நண்பரையோ தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசுவதைத் தான் சொல்கிறேன். ஊரில் இருந்தால் நேரில் சென்று எதுவும் பேசாவிட்டாலும் உங்கள் துக்கத்தில் நான் உடனிருக்கிறேன் என்பதை உணர்த்த முடியும். ஆனால் தொலைபேசியில்? கடுமையானத் துயரில் இருப்பவரிடம் என்ன "பேச" முடியும்? அந்த நேரத்தில் எதைப் பேசினாலும் எனக்கு அபத்தமாகத் தான் தெரியும். எப்படி இறந்தார், எப்போது இறந்தார் என்பதையெல்லாம் தெரிந்துவைத்துக்கொண்டே ஏதாவது கேட்கவேண்டுமே என்பதற்காக கேட்பதில் உள்ள போலித்தனம் உறுத்தும். ஆனாலும் இத்தகைய தொலைபேசி அழைப்புகள் எதிர்பார்க்கப்படுகின்றன. ஊரில் யாராவது இறந்துவிட்டதாக தகவல் அறிந்தால் அந்த இழப்பு தரும் கவலையுடன் உபரியாக இந்த தொலைபேசி அழைப்பை எப்படி சமாளிக்கப் போகிறேன் என்றக் கவலையும் தொற்றிக்கொள்ளும்.

பழைய கதைகள், படங்கள், பாடல்கள் ஆகியவற்றின் மீது எனக்கு இருக்கும் அதீதமான ஈர்ப்புக்கு தர்க்கபூர்வமான விளக்கம் எதுவும் என்னிடம் இல்லை. திரைப்படப் பாடல்களில் எண்பதுகளிலும் அதற்கு முன்பும் வெளிவந்தப் பாடல்களை மிகவும் விரும்பிக் கேட்பேன். புதிய பாடல்களை (கடந்த பத்து ஆண்டுகளில் வெளிவந்த எல்லா பாடல்களும் எனக்கு "புதிய" பாடல்கள் தான்) கிட்டத்தட்ட கேட்பதே இல்லை. சமகால ஆங்கில நாவல்களைப் பொறுத்தவரை ஞானசூன்யமான நான் விரும்பிப் படித்த/படிக்கும் பெரும்பாலான ஆங்கில நாவல்கள் திருமதி விக்டோரியாவின் காலத்தில் எழுதப்பட்டவை. கார்களும், கணினிகளும், தொலைபேசிகளும் மற்ற நவீன அடையாளங்களும் இல்லாத அந்த உலகம் எனக்கு ஏனோ பிடித்திருக்கிறது. குறிப்பாக பத்தொன்பதாம் நூற்றாண்டு இங்கிலாந்தின் அமைதியான கிராமம் ஒன்றில் சில நாட்கள் வாழ்ந்துவிட்டு வந்த உணர்வைத் தரும் தாமஸ் ஹார்டியின் நாவல்கள் எனக்கு மிகவும் விருப்பமானவை.

சந்திரமுகி சரவணனைப் போல் இல்லாத ஒரு நல்ல உளவியல் மருத்துவரிடம் நேரம் வாங்கிவிட்டுப் பொறுமையாகச் சொல்லியிருக்கவேண்டியதை எல்லாம் இங்கே எழுதிவிட்டேனோ என்றுத் தோன்றுகிறது. பரவாயில்லை. "சர்வம் கிறுக்கு மயம்" என்ற நிலையிலிருந்து தமிழ்மணம் மெல்ல மீண்டுக்கொண்டிருக்கும் இந்த நேரத்தில் இன்னுமொரு ஐந்து பேரை இந்த விளையாட்டுக்கு இழுக்கவேண்டாம் என்று நினைக்கிறேன்.