தமிழ்த்தாயையும் பாரதமாதாவையும் பேசவைப்போம்

கீழே இருப்பது உங்களுக்குப் பொருந்துகிறதா என்றுப் பாருங்கள்.

உங்களுக்குத் தமிழைத் தவிர வேறு ஒரு இந்திய மொழியும் தெரியும். புரிந்துக்கொள்வதில் பெரிய சிரமம் எதுவும் இல்லை. ஓரளவுப் பேசவும் செய்வீர்கள். அந்த மொழியில் படங்கள் பார்க்கவும் பாடல் கேட்கவும் செய்வீர்கள். ஆனால் வாசிக்கத் தெரியாது. வாசிக்க முடிந்தால் நன்றாகத் தான் இருக்கும். இணையத்திலேயே அந்த மொழியில் அமைந்த நூற்றுக்கணக்கான வலைப்பக்கங்கள் உள்ளன. அவற்றில் சுவையான, தரமான ஆக்கங்கள் பலவும் இருக்கக்கூடும். ஆனால் அந்த மொழியின் எழுத்துக்களைக் கற்றுக்கொண்டு, கணினித் திரையில் ஒவ்வொரு எழுத்தாகக் கூட்டி ஆமை வேகத்தில் வாசிப்பது நடைமுறைக்கு ஒத்துவருவதாகத் தெரியவில்லை.

கொஞ்சம் பொருந்துகிற மாதிரி தெரிகிறதா? மேலே -அதாவது கீழே- படியுங்கள்.

ஒருங்குறி (Unicode) அறிமுகப்படுத்தப்பட்டப் பிறகு இணையத்தில் பல்லாயிரக்கணக்கான இந்திய மொழிப் பக்கங்கள் தோன்றிவிட்டன. வலைப்பதிவுகள், இணைய இதழ்கள் தவிர இந்திய மொழிகளில் உள்ள சிறப்பான இலக்கிய ஆக்கங்களை இணையத்திலேற்றும் பணியையும் பல ஆர்வலர்கள் செய்து வருகின்றனர். எனக்கு மலையாளம், இந்தி ஆகிய மொழிகளுடன் ஓரளவு அறிமுகம் உண்டு. ஆனால் இந்த மொழிகளை இணையத்தில் வாசிப்பதற்கு பெரும் தடையாக இருப்பது எழுத்துக்கள். எனக்கு மலையாளத்தையும் இந்தியையும் தட்டுத் தடுமாறி வாசிக்கத் தெரியும் என்றாலும் தமிழ்/ஆங்கிலம் வாசிக்கும் வேகத்தில் பத்தில் ஒருப் பங்கு வேகத்தில் கூட என்னால் அவற்றை வாசிக்க முடியாது.

இப்படி மொழி புரியும் ஆனால் எழுத்துத் தெரியாது என்றிருக்கும் ஏராளமானவர்களுக்கு எழுத்துப்பெயர்ப்பு (transliteration) ஒரு தீர்வாக அமையக்கூடும். தமிழ் எழுத்துக்களை ஆங்கில (உரோம) எழுத்துக்களுக்கு மாற்றும் செயலிகள் இணையத்தில் கிடைப்பதுப் போல மற்ற மொழிகளுக்கும் இருக்கலாம். AnAl inthiya mozikalai Angkila ezuththukaLai koNdu ezuthi vAcippathu oru kodumaiyAna anupavam. இதற்கான சில காரணங்கள் கீழே:

(1) இந்திய அரிச்சுவடிகள் (scripts) கிட்டத்தட்ட முழுமையாக ஒலி அடிப்படையில் (phonetic) அமைந்தவை. அதாவது ஒரு எழுத்து எந்த இடத்தில் வந்தாலும் ஒரே போல தான் ஒலிக்கும். ஆனால் ஆங்கில எழுத்துக்களின் உச்சரிப்பு இடத்துக்கு ஏற்றவாறு மாறும். எடுத்துக்காட்டாக i என்ற எழுத்தை bit என்பதில் இ என்றும் bite என்பதில் ஐ என்றும் உச்சரிக்கவேண்டும். C என்ற எழுத்து cat, space ஆகியச் சொற்களில் வெவ்வேறு விதமாக ஒலிக்கும்.

(2) இந்திய அரிச்சுவடிகள் உயிர் + மெய் = உயிர்மெய் என்ற அமைப்புடைய அபிகுடா எழுத்து முறையைச் சேர்ந்தவை. உரோம அரிச்சுவடி அப்படியல்ல.

இந்திய அரிச்சுவடிகளுக்கிடையே மேலேக் குறிப்பிட்ட ஒற்றுமைகளைத் தவிர வேறொரு முக்கியமான ஒற்றுமையும் உண்டு. அவை யாவுமே பிரம்மி அரிச்சுவடியிலிருந்து தோன்றியவை. (இன்று தெற்காசியாவில் பயன்படுத்தப்படும் பெரும்பான்மையான அரிச்சுவடிகளின் மூதாதையான பிராமி அசோகர் காலத்தில் தோன்றியது என்ற எண்ணத்தில் அசோகன் பிராமி என்றே அழைக்கப்பட்டு வந்தாலும் அது அசோகருக்கு முன்னூறு ஆண்டுகளுக்கு முன்பே தமிழகத்திலும் இலங்கையிலும் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்பதற்கானச் சான்றுகள் அண்மையில் கிடைத்திருக்கின்றன.) இந்த ஒற்றுமைகளின் காரணமாக மற்றொரு இந்திய மொழியை தமிழ் அரிச்சுவடியைக் கொண்டு எழுதுவது உரோம எழுத்துக்களைக் கொண்டு எழுதுவதை விட வாசிப்பதற்கு சுலபமாக இருக்கும். பல்வேறு வட இந்திய மொழிகள் இப்படி ஒன்றுக்கு மேற்பட்ட அரிச்சுவடிகளைக் கொண்டு எழுதப்படுகின்றன.

மற்ற இந்திய மொழிகளில் நிரம்பியிருக்கும் ஏராளமான வடமொழிச் சொற்களை எழுதுவதற்கு தமிழ் எழுத்துக்கள் போதுமானதாக இல்லை என்றுச் சிலர் சொல்லக்கூடும். ஆனால் அறுபது ஆண்டுகளுக்கு முன் வரை மணிப்பிரவாள நடை என்றப் பெயரில் ஏராளமான வடமொழிச் சொற்கள் அதே வடிவிலேயே தமிழ் எழுத்துக்களைக் கொண்டு எழுதப்பட்டு வந்ததுக் கவனிக்கத்தக்கது. (எடுத்துக்காட்டாக தற்போது சுதந்திரம், விவகாரம், பிரபலம் என்றுத் தமிழ்படுத்தப்பட்டிருக்கும் சொற்கள் முறையே ஸ்வதந்திரம், வ்யவஹாரம், பிரபல்யம் என்றே எழுதப்பட்டு வந்தன.) எனவே இதை ஒருப் பெரிய குறைபாடாக நான் கருதவில்லை.

மலையாளம், இந்தி போன்ற மொழிகளைத் தமிழ் எழுத்துக்களுக்குப் பெயர்க்கும் செயலி ஏதாவது இருக்கிறதா என்று இணையத்தில் தேடினேன். திரு. அன்புமணி என்பவரால் உருவாக்கப்பட்ட இந்தி எழுத்துக்களைத் தமிழுக்கு மாற்றும் ஒரு செயலியைத் தவிர வேறு எதுவும் கிடைக்கவில்லை. இந்த செயலியும் ஏனோ வேலைச் செய்வதாகத் தெரியவில்லை. (சுட்டித் தருவதற்காக இப்போது தேடிப்பார்த்தபோது அந்தப் பக்கத்தைக் காணவில்லை.) ஒரு வாரம் செலவிட்டால் நாமே ஒருச் செயலியை உருவாக்கிவிடலாம் என்ற நம்பிக்கையில் வேலையைத் தொடங்கினேன். காலை விட்டப் பிறகு தான் ஆழம் தெரிந்தது. கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக ஒய்வு நேரம் முழுவதையும் அதற்கே ஒப்புக்கொடுக்கும்படி ஆகிவிட்டது. இப்போது ஒருவழியாக வேலை வெற்றிகரமாக முடிந்துவிட்டது. இதன் மூலம் மலையாளம், இந்தி மட்டுமல்ல வேறு எந்த இந்திய மொழியையும் தமிழ் எழுத்துக்களுக்கு மாற்ற முடியும். இந்த செயலியின் செயல்பாட்டுக்கு சில எடுத்துக்காட்டுகளைக் கீழேத் தருகிறேன்.

കാവിരിപ്പട്ടണത്തിലെ ഒരു ധനികവ്യാപാ‍രിയുടെ മകനായ കോവലന്‍ അതിസുന്ദരിയായ കണ്ണകി എന്ന യുവതിയെ വിവാഹം ചെയ്തു. കാവേരിപൂമ്പട്ടണം എന്ന നഗരത്തില്‍ ഇരുവരും സസുഖം ജീവിക്കവേ കോവലന്‍ മാധവി എന്ന നര്‍ത്തകിയെ കണ്ടുമുട്ടുകയും അവരില്‍ പ്രണയാസക്തനാവുകയും ചെയ്തു. കണ്ണകിയെ മറന്ന കോവലന്‍ തന്റെ സ്വത്തുമുഴുവന്‍ മാധവിക്കുവേണ്ടി ചിലവാക്കി. ഒടുവില്‍ പണമെല്ലാം നഷ്ടപ്പെട്ടപ്പോള്‍ കോവലന്‍ തന്റെ തെറ്റുമനസിലാക്കി കണ്ണകിയുടെ അടുത്തേക്ക് തിരിച്ചുപോയി. അവരുടെ ആകെയുള്ള സമ്പാദ്യം കണ്ണകിയുടെ രത്നങ്ങള്‍ നിറച്ച ചിലമ്പുകള്‍ മാത്രമായിരുന്നു. കണ്ണകി സ്വമനസ്സാലെ തന്റെ ചിലമ്പുകള്‍ കോവലനു നല്‍കി. ഈ ചിലമ്പുകള്‍ വിറ്റ് വ്യാപാരം നടത്തുവാന്‍ കോവലനും കണ്ണകിയും മധുരയ്ക്കു പോയി.

மேலே இருப்பது ஒரு மலையாள விக்கிபீடியா கட்டுரையிலிருந்து எடுக்கப்பட்ட சில வரிகள். நான் இதை எழுத்துக் கூட்டிப் படிப்பதானால் சில நிமிடங்களைச் செலவிடவேண்டி வரும். ஆனால் எழுத்துப்பெயர்ப்புச் செயலியைப் பயன்படுத்தி ஒரே நொடியில் கீழே இருப்பது போலத் தமிழுக்கு மாற்றிவிட்டேன். சில விநாடிகளில் படித்தும் விட்டேன். உங்களுக்குப் புரிகிறதா என்றுப் பாருங்கள்.

காவிரிப்பட்டணத்திலெ ஒரு தனிகவ்யாபாரியுடெ மகனாய கோவலன் அதிஸுந்தரியாய கண்ணகி எந்ந யுவதியெ விவாஹம் செய்து. காவேரிபூம்பட்டணம் எந்ந நகரத்தில் இருவரும் ஸஸுகம் ஜீவிக்கவே கோவலன் மாதவி எந்ந நர்த்தகியெ கண்டுமுட்டுகயும் அவரில் ப்ரணயாஸக்தனாவுகயும் செய்து. கண்ணகியெ மறந்ந கோவலன் தன்றெ ஸ்வத்துமுழுவன் மாதவிக்குவேண்டி சிலவாக்கி. ஒடுவில் பணமெல்லாம் நஷ்டப்பெட்டப்போள் கோவலன் தன்றெ தெற்றுமனஸிலாக்கி கண்ணகியுடெ அடுத்தேக்கு திரிச்சுபோயி. அவருடெ ஆகெயுள்ள ஸம்பாத்யம் கண்ணகியுடெ ரத்னங்ஙள் நிறச்ச சிலம்புகள் மாத்ரமாயிருந்நு. கண்ணகி ஸ்வமனஸ்ஸாலெ தன்றெ சிலம்புகள் கோவலனு நல்கி. ஈ சிலம்புகள் விற்று வ்யாபாரம் நடத்துவான் கோவலனும் கண்ணகியும் மதுரய்க்கு போயி.

ஒருகாலத்தில் மிகவும் விருப்பத்திற்குரியதாக இருந்த இந்த இந்திப் பாடலைச் செயலியில் இட்டேன்.

तुझे देखा तो ये जाना सनम
प्यार होता है दीवाना सनम
अब यहाँ से कहाँ जाएं हम
तेरी बाहों में मर जाएं हम

தமிழில் இப்படி வந்தது:

துஜே தேகா தோ யே ஜானா ஸனம்
ப்யார் ஹோதா ஹை தீவானா ஸனம்
அப் யஹான் ஸே கஹான் ஜாயேன் ஹம்
தேரீ பாஹோன் மேன் மர் ஜாயேன் ஹம்


எனக்கு மலையாளம், இந்தி தவிர மற்ற இந்திய மொழி எழுத்துக்கள் பழக்கமில்லையென்றாலும் முடிந்த அளவு தெலுங்கு, கன்னடம், வங்காளம், ஒரியா, குஜராத்தி போன்ற மொழிகளைச் சோதித்துப் பார்த்தேன். கீழே இருப்பது ஒரு வங்காளப் பாடல்.

জনগণমন-অধিনায়ক জয় হে ভারতভাগ্যবিধাতা!
পঞ্জাব সিন্ধু গুজরাট মরাঠা দ্রাবিড় উত্কল বঙ্গ
বিন্ধ্য হিমাচল যমুনা গঙ্গা উচ্ছলজলধিতরঙ্গ
তব শুভ নামে জাগে, তব শুভ আশিস মাগে!


தமிழுக்கு மாற்றிய போது கீழே உள்ளது போல வந்தது. (வங்காள மொழியில் வ என்ற ஒலிக்குப் பதில் ப பயன்படுத்தப்படுகிறது.)

ஜனகணமன-அதினாயக ஜய ஹே பாரதபாக்யபிதாதா!
பஞ்ஜாப ஸிந்து குஜராட மராடா த்ராபிட உத்கல பங்க
பிந்த்ய ஹிமாசல யமுனா கங்கா உச்சலஜலதிதரங்க
தப ஷுப நாமே ஜாகே, தப ஷுப ஆஷிஸ மாகே!


இந்திய மொழிகளுக்கான ஒருங்குறி ஒதுக்கீட்டைப் பற்றி மேலோட்டமாக அறிந்திருப்பவர்கள் (நான் முதலில் நினைத்ததைப் போல) இந்த செயலியை உருவாக்குவது எளிதான வேலை என்று நினைக்கக்கூடும். இதற்குக் காரணம் என்னவென்றால் ஒருங்குறி முறையில் ஒவ்வொரு எழுத்துக்கும் உரிய இடத்தை ஒதுக்குவதில் ஒரு ஒழுங்கு கடைப்பிடிக்கப்படுகிறது. எடுத்துக்காட்டாகத் தமிழுக்கானத் தொகுதியில் க என்ற எழுத்து எந்த நிலையில் இருக்கிறதோ அதே நிலையில் தான் மற்ற மொழிகளிலும் க என்ற எழுத்து இருக்கும். அதனால் ஒரு மொழியில் ஒரு எழுத்துக்குரிய எண்ணுடன் (character code) ஒரு குறிப்பிட்ட எண்ணைக் கூட்டினால் இன்னொரு மொழியில் உள்ள அதே எழுத்துக் கிடைக்கும். ஆனால் இந்த முறையில் இயந்திரத்தனமாக தமிழுக்கு எழுத்துப்பெயர்த்தால் பாதிக்கு மேற்பட்ட இடங்களில் எழுத்துக்களுக்குப் பதில் கட்டங்கள் தான் தெரியும். மற்ற இந்திய மொழிகளில் பயன்படுத்தப்படும் நிறைய எழுத்துக்கள் தமிழ் அரிச்சுவடியில் இல்லாமல் இருப்பதே இதற்கு காரணம். எடுத்துக்காட்டாக தேவநாகரிக்கான ஒருங்குறித் தொகுதியில் உள்ள சுமார் நாற்பது எழுத்துக்களும் குறிகளும் தமிழில் இல்லை. அத்தகைய எழுத்துக்களை அதற்கு மிக நெருக்கமாக ஒலிக்கும் மற்ற தமிழ் எழுத்துக்களுடன் பொருத்தவேண்டும்.

மேலே சொன்னதைச் செய்தப் பிறகு எழுத்துப்பெயர்க்கப்பட்ட தமிழில் கட்டங்கள் மறையுமே தவிர வேறு சில சிக்கல்கள் இருக்கும். தமிழில் உள்ளதை வாசித்துப் பார்த்தால் அது சில இடங்களில் மூல மொழியின் உச்சரிப்பிலிருந்து பெரிதும் வேறுபடுவதைக் காணலாம். பெரும்பாலும் மூல மொழிகளில் உள்ள ஒழுங்கற்ற, வழக்கமான விதிகளுக்குக் கட்டுப்படாத சிறப்பு உச்சரிப்புகளே இதற்குக் காரணம். (தமிழிலேயே இதற்கு ஒரு எடுத்துக்காட்டுச் சொல்வதென்றால் 'றி' என்ற எழுத்து வெறி எனும் சொல்லில் ஒரு விதமாகவும் வெற்றி என்பதில் வேறொரு விதமாகவும் ஒலிப்பதைச் சொல்லலாம்.) எனவே தமிழ் எழுத்துப்பெயர்ப்புச் செம்மையாக அமையவேண்டும் என்றால் மூல மொழிகளின் ஒலியியலை (phonology) முழுமையாக அறிந்திருக்கவேண்டும். இதற்காகக் கல்வித்துறை ஆய்வுக் கட்டுரைகள், விக்கிப்பீடியாக் கட்டுரைகள் என்று நிறையப் படிக்கவேண்டி வந்தது. மலையாளம், இந்தி ஆகிய மொழிகளில் உள்ள ஏராளமானப் வலைப்பக்கங்களைச் சோதித்துப் பார்த்து எழுத்துப்பெயர்ப்பில் உள்ள பிழைகளைக் கண்டறிந்து முடிந்தமட்டும் சரி செய்தேன். இப்படி எழுத்துப்பெயர்ப்பதில் உள்ள சிக்கல்களையும் அவற்றைக் கையாள்வதற்கான வழிமுறைகளையும் பற்றி ஒரு நீளமான ஆய்வுக் கட்டுரையே எழுதலாம் என்றாலும் முக்கியமான சிலவற்றை மட்டும் சுருக்கமாக இங்கேக் குறிப்பிடுகிறேன். இந்திய மொழிகளிலும் அவற்றுக்கான கணினிக் கருவிகளை உருவாக்குவதிலும் ஆர்வம் உள்ளவர்களுக்கு ஒருவேளை சுவாரசியமாக இருக்கக்கூடும்.

(1) இந்திய மொழிகளில் எழுத்துக்களின் உச்சரிப்பு இடத்துக்கு இடம் வேறுபடாது என்று சொல்லியிருந்தேன். ஆனால் விதிவிலக்குகள் உண்டு. இந்தியிலும் வேறு சில மொழிகளிலும் schwa deletion என்று ஒரு முக்கியச் சிக்கல் இருக்கிறது. இந்தி மொழிக்கான உரையிலிருந்து பேச்சுக்கு (text to speech) மாற்றும் செயலிகளை உருவாக்குவதற்கு இது ஒரு முக்கியத் தடையாக இருக்கிறது. பிரச்சனை என்னவென்றால் பல இந்திச் சொற்கள் எழுதப்படும் முறைக்கும் உச்சரிக்கப்படும் முறைக்கும் வேறுபாடுகள் உள்ளன. "அபனா" (अपना) என்று எழுதிவிட்டு "அப்னா" என்று உச்சரிப்பார்கள். "கலம" (कलम) என்று எழுதப்பட்டிருப்பதை "கலம்" என்று உச்சரிக்கவேண்டும். அதாவது சில உயிர்மெய் எழுத்துக்களில் உள்ள 'அ' என்ற உயிரெழுத்தை அகற்றிவிட்டு அதை மெய்யெழுத்தாக்கி உச்சரிக்கவேண்டும். ஆனால் எந்த இடத்தில் உயிரை -அதாவது உயிரெழுத்தை - எடுக்கவேண்டும் எங்கே எடுக்கக்கூடாது என்பதற்குத் தெளிவான விதிகள் கிடையாது. பொதுவாக சொல்லப்படும் சில விதிகளும் சில இடங்களில் பொய்த்துவிடும். எடுத்துக்காட்டாக "அப்னா" என்ற சரியான உச்சரிப்பை வரச் செய்வதற்காக இறுதி எழுத்து நெடிலாக இருந்தால் முந்தைய எழுத்தின் உயிரை அகற்றலாம் என்று ஒரு விதியைக் கொண்டுவந்தால் "சாருலதா" என்றப் பெயர் "சாருல்தா" என்று ஆகிவிடும். இப்படி நிறையச் சிக்கல்கள். இதைப் பற்றிய பத்துக்கும் மேற்பட்ட விரிவான ஆய்வுக் கட்டுரைகளைப் படித்தேன். எந்தத் தீர்வுமே நூறு விழுக்காடு சரியாக இல்லை. நான் பயன்படுத்தியிருக்கும் வழிமுறை தொண்ணூறு விழுக்காட்டுக்கு மேல் சரியாக வருகிறது.

(2) தமிழைத் தவிர மற்ற அனைத்து இந்திய மொழிகளிலும் அனுஸ்வரம் என்று ஒரு எழுத்து/குறி இருக்கிறது. இதற்கு நிலையான ஒரு ஒலிக் கிடையாது. எந்த இடத்தில் வருகிறது என்பதைப் பொறுத்து உச்சரிப்பு மாறுபடும். 'க' என்ற எழுத்துக்கு முன்னால் வந்தால் 'ங்' என்றும் 'ச' எனும் எழுத்துக்கு முன்னால் வந்தால் 'ஞ்' என்றும் ஒலிக்கும். இது தமிழர்களுக்குப் பழக்கமானது தான். ஆனால் மற்ற இடங்களில் வந்தால் எப்படி எழுத்துப்பெயர்ப்பது என்பதில் நிறையக் குழப்பங்கள் உள்ளன. சொல்லின் இறுதியில் அனுஸ்வரம் வந்தால் மலையாளத்தில் ம் என்று ஒலிக்கும். ஸ்வாகதம், வசந்தம் எனும் சொற்களில் இருப்பதுப் போல. ஆனால் இந்தியில் அப்படியல்ல. சொல்லின் இறுதியில் அனுஸ்வரம் வந்தால் முந்தைய எழுத்தை nasalization செய்யவேண்டும். அதாவது மூக்கு வழியாக சிறிதுக் காற்றை வேகமாக வெளியேற்றினால் என்ன ஒலி வருமோ அந்த ஒலியை எழுப்பவேண்டும். அத்தகைய ஒலிகளுக்கான எழுத்துக்கள் ஆங்கிலம் போன்ற மொழிகளில் இல்லையென்பதால் 'ன்' என்ற ஒலியைக் குறிக்கும் எழுத்து அனுஸ்வரத்தைக் குறிக்கப் பயன்படுத்தப்படுகிறது. நானும் அதே முறையைப் பின்பற்றியிருக்கிறேன். "எங்கே" எனும் பொருளுடைய இந்திச் சொல் தமிழில் "கஹான்" என்று எழுத்துப்பெயர்க்கப்படும்.

(3) மலையாள எழுத்துக்களைப் பொறுத்தவரை பழைய லிபி, புது லிபி என்று ஒருக் குழப்பமும், வாதப் பிரதிவாதங்களும் கடந்தக் கால் நூற்றாண்டுக் காலமாக இருந்து வருகின்றன. சீன மொழியுடன் போட்டியிடும் அளவுக்கு அதிகமான எழுத்து வடிவங்களைக் கொண்டுள்ள மலையாள மொழியை தட்டச்சு இயந்திரத்தில் வசப்படுத்தவேண்டிக் கொண்டுவரப்பட்டச் சில சீர்திருத்தங்களை மரபுவாதிகள் ஏற்க மறுத்ததால் ஒரே சொல் இருவேறு விதமாக எழுதப்படும் நிலை ஏற்பட்டது. கணினியில் புது லிபியே பயன்படுத்தப்பட்டாலும் சில சொற்களை எப்படி எழுதுவது என்பதில் இணையத்தில் எழுதுவோரிடம் ஒற்றுமை இல்லை. குறிப்பாக குற்றியலுகரத்தில் முடியும் ஏராளமானச் சொற்களை எப்படி எழுதுவது என்பதில். எப்படி எழுதினாலும் எழுத்துப்பெயர்ப்பு சரியாக வரவேண்டும் என்பதற்காக நிரலில் சில மாற்றங்களைச் செய்தேன். ஆனால் இந்தக் மாற்றங்களினால் பிறமொழிச் சொற்களை எழுத்துப்பெயர்க்கும் போது சில பக்க விளைவுகள் ஏற்படுவதை தவிர்க்கமுடியவில்லை. (எடுத்துக்காட்டாக ஸ்கிரிப்ட் என்று மலையாளத்தில் எழுதப்பட்டிருந்தால் அது தமிழில் ஸ்கிரிப்டு என்று எழுத்துப்பெயர்க்கப்படும்.)

(4) 'ன' என்றத் தமிழ் எழுத்து மலையாளத்தில் இல்லை. 'ந' மட்டும் தான் இருக்கிறது. அதை அப்படியே எழுத்துப்பெயர்த்தால் தமிழில் வாசிப்பதற்கு வசதியாக இருக்காது. எடுத்துக்காட்டாக "அவன்" என்பது "அவந்" என்று இருக்கும். அதற்காக சொல்லின் முதலெழுத்தைத் தவிர மற்ற அனைத்து இடங்களிலும் 'ந' என்பதை 'ன' என்று மாற்றினால் "ஒந்நு", "வந்நு" போன்ற மலையாளச் சொற்களின் உச்சரிப்புக் கெட்டுவிடும். மேலும் "பன்தம்", "சொன்தம்" என்று வாசிப்பது தமிழர்களுக்குக் கொடுமையாக இருக்கும். எனவே இடத்துக்குத் தகுந்ததுபோல 'ந' அல்லது 'ன' வருமாறுச் செய்திருக்கிறேன்.

இந்த எழுத்துப்பெயர்ப்புச் செயலியை பயன்படுத்த / சோதித்துப் பார்க்க இங்கேச் சுட்டுங்கள்.