நகைச்சுவைக்குள் பதுங்கும் மேட்டிமைத்தனம்

சில வாரங்களுக்கு முன் ஜெயமோகனின் வலைப்பதிவில் சிவாஜியை மட்டமான முறையில் கிண்டலடித்து எழுதப்பட்டிருந்த கட்டுரையை வாசித்தபோது அது சர்ச்சையைக் கிளப்பும் என்று தோன்றியது. சிவாஜியை 'இழிவுபடுத்தியதற்காக' நடிகர் சங்கம் ஜெயமோகனுக்கு எதிராக ஏதாவது போராட்ட நடவடிக்கையை மேற்கொள்ள வாய்ப்பிருக்கிறது என்று அப்போது நினைத்தேன். அப்படி நிகழ்ந்திருந்தால் அது ஜெயமோகனுக்கு கருணாநிதியின் வசைக்கவிதைக்கு சற்றும் குறையாத விளம்பரத்தைப் பெற்றுத் தந்திருக்கும். இப்போது ஆனந்தவிகடன் அட்டைப்படக் கட்டுரை மூலம் விளம்பரம் அளித்திருக்கிறது. அதன்பிறகு அவரது இணையத்தளத்திற்கு வருவோர் எண்ணிக்கை ஆறு மடங்கு அதிகரித்திருக்கிறதாம். சில நூறு புது வாசகர்களாவது கிடைப்பார்கள். விகடன் போன்ற வணிக இதழ்களின் மூலம் புது வாசகர்களை இழுப்பதற்கான வாய்ப்பு குறித்தும் சங்கச் சித்திரங்கள் தொடர் மூலம் தனக்கு கிடைத்த பல நல்ல வாசகர்களைக் குறித்தும் ஜெயமோகன் அடிக்கடி எழுதிவருவதை வைத்துப் பார்க்கும்போது விகடனின் செயல் அவருக்கு மகிழ்ச்சியைத் தவிர வேறு எதை தந்திருக்கமுடியும் என்று ஊகிப்பது கடினமாக இருக்கிறது. ஆனால் எல்லா மகிழ்ச்சிகளையும் வெளிப்படுத்திக்கொள்ள முடியாது. விகடன் தனக்கு பெரிய அநீதி இழைத்துவிட்டது போல இப்போது சொல்லிக் கொண்டிருக்கிறார்.

ஒன்றை சொல்லியாகவேண்டும். சிவாஜி, எம்.ஜி.ஆர் ஆகியோரைக் குறித்து ஜெயமோகன் எழுதியதை எழுதுவதற்கான உரிமை அவருக்கு கண்டிப்பாக இருக்கிறது. கருத்து சுதந்திரம் என்பது எல்லாவிதமான கருத்துக்களுக்கும் சேர்த்து தான். அவ்வப்போது எதாவது ஒரு கூட்டம் "மனம் புண்பட்டுவிட்டது" என்ற ஓலத்துடன் எழுத்தாளர்கள் மற்றும் கலைஞர்களுக்கு எதிராக தெருவில் இறங்குவதில் எனக்கு சற்றும் உடன்பாடில்லை. தஸ்லிமா நஸ்ரின், எம்.எஃப்.ஹூசைன், ஞாநி, ஜெயமோகன் என்று யாராக இருந்தாலும் என் நிலைபாடு இதுதான்.

இவ்விவகாரம் குறித்து தன்மீது வைக்கப்பட்டக் குற்றச்சாட்டுகளுக்கு ஜெயமோகன் தன் வலைப்பதிவில் எழுதியிருக்கும் பதில்களிலிருந்து:

"இலக்கியத்தில் இல்லாத ஒன்றை, தேவையற்ற ஒன்றை நான் எழுதிவிடவில்லை. அங்கதம் இலக்கியத்தின் அடிப்படை இயல்புகளில் ஒன்று. அதிகார அமைப்பை, புனிதங்கள் என்று கருதப்படுவனவற்றை, எல்லாராலாலும் ஏற்கப்பட்டுவிட்ட ஒன்றைத்தான் எப்போதும் அங்கத இலக்கியம் தன் குறியாகக் கொள்கிறது. அதை தன் நகைச்சுவை மூலம் தலைகீழாக்கிப் பார்க்கிறது."

"எம்.ஜி.ஆரின் பேச்சுமுறையைக் கிண்டல் செய்யலாமா என்ற வினா. உடல்ஊனத்தைப் பழிப்பது ஒழுக்கமல்ல. ஒருபோதும் நான் என் தனிவாழ்விலும் எழுத்திலும் அதைச் செய்ததில்லை. ஆனால் இலக்கியத்தில் இதற்கு இடமிருக்கிறது. பின்நவீனத்துவ காலத்து இலக்கியம் அங்கதத்தை ‘கவிழ்ப்பாக்கம்’ [subversive writing] என்றே குறிப்பிடுகிறது. ... அவற்றுக்கு நாகரீக எல்லைகளோ, ஒழுக்க எல்லைகளோ இல்லை. ஏனென்றால் நாகரீகம், ஒழுக்கம் என்று வரையறைசெய்து அதிகாரமாக ஆக்கியிருக்கும் விஷயங்களைத்தான் அவை தலைகீழாக்குகின்றன."

"சென்ற காலத்தவரே கருத்துகக்ளை உருவாக்கி நமக்கு தந்திருக்கிறார்கள். பிம்பங்களை உருவாக்கி அளித்திருகிறார்கள். அவற்றை உடைக்காமல் நமக்கு சிந்தனை நிகழ முடியாது. வழிபாட்டில் இருந்து சிந்தனை உருவாவதில்லை. அங்கதம் ஒரு வகை உடைப்பு மட்டுமே."

ஜெயமோகனின் அரசியலைக் குறித்து ஏதும் அறியாதவர்கள் இதையெல்லாம் வாசித்தால் அவர் ஒரு தீவிரமான முற்போக்குவாதியென்றும் நாகரீக எல்லைகளுக்கோ ஒழுக்க எல்லைகளுக்கோ அடங்காமல் மரபு வழிவந்த அதிகார அமைப்பையும் புனிதங்களையும் அங்கதத்தின் மூலம் கட்டுடைத்து தலைகீழாக்குவதே அவரது முழுநேரப் பணி என்று எண்ணக்கூடும். ஆனால் இதற்கும் உண்மைக்குமான தூரம் பல ஒளி ஆண்டுகள் இருக்கும்.

விகடனுக்கு எழுதிய கடிதத்தில் தான் சிவாஜி, எம்.ஜி.ஆர் ஆகியோரை மட்டுமல்லாது தன் இலக்கிய ஆசிரியர்கள் உட்பட பலரையும் பகடி செய்திருப்பதாக சொல்கிறார். இது முழுக்க நேர்மையான ஒரு தகவல் அல்ல. தன் 'குருநாதர்'களைப் பற்றியும் நகைச்சுவைக் கட்டுரைகள் எழுதியிருக்கிறார் என்பது உண்மைதான். ஆனால் அது வேறுவிதமான நகைச்சுவை. நான் என் மகனின் சேட்டைகளைப் பற்றி நகைச்சுவையாக எழுதினால் அது வாசிப்பவருக்கு அவன் மேல் ஒரு வாஞ்சையை ஏற்படுத்தும் விதமாக தான் இருக்கும். ஜெயமோகன் ஆற்றூர் ரவிவர்மாவை பற்றி வேடிக்கையாக எழுதியிருக்கும் கட்டுரையை வாசித்தால் ஆற்றூர் ஒரு விரும்பத்தக்க, குழந்தைத்தனமான, பெருந்தன்மையுடைய மனிதராக தான் தோன்றுகிறார். பிம்பங்களை உடைத்து தலைகீழாக்குவதன் தேவையை பற்றியெல்லாம் நீட்டி முழக்கும் ஜெயமோகன் உண்மையில் ரவிவர்மாவின் பிம்பத்துக்கு வலுசேர்க்கும் விதமாகவே இந்த அங்கதக் கட்டுரையை எழுதியிருக்கிறார். எடுத்துக்காட்டாக: "அவர் கேரள இலக்கியத்தில் ஒரு வலுவான, நுட்பமான மையம். எவரையும் விமரிசனம்செய்வதில்லை ஆற்றூர். யாரையுமே வெறுப்பதில்லை. எல்லா மனிதர்களுக்கும் பிரியமானவர்." "அது என் குருநாதனின் ஆசி" என்பது போன்ற நெக்குருகல்களும் உண்டு. நித்ய சைதன்ய யதியைப் பற்றியக் கட்டுரையில் அவரது பாமரப் பக்தர்கள் தான் பகடி செய்யப்படுகிறார்கள். சிவாஜி, எம்.ஜி.ஆர் பற்றிய கட்டுரைகளில் உள்ள மட்டம் தட்டும் தொனி ஜெயமோகனின் மதிப்புக்குரியவர்களைப் பற்றியக் கட்டுரைகளில் இல்லை.

உண்மையில் பல ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்ட எம்.ஜி.ஆரையும் சிவாஜியையும் மட்டம் தட்டவேண்டிய தேவை எதுவும் ஜெயமோகனுக்கு இருப்பதாகத் தெரியவில்லை. அந்த இருவரையும் உயர்வாக எண்ணி ரசிக்கும் 'பாமர' தமிழர்களின் ரசனையைத் தான் அவர் மறைமுகமாக நக்கல் செய்கிறார். ஜெயமோகன் தன்னுடைய திரைப்பட ரசனையும் அளவுகோல்களும் மலையாளப் படங்கள் மூலம் உருவானைவையே என்று முன்பு ஒருமுறை எழுதியிருக்கிறார். அவருக்கு சிவாஜியின் நடிப்பு பிடிக்காது என்பது தெரிந்தது தான். ஆறு ஆண்டுகளுக்கு முன்பு ஒரு நகைச்சுவை-அல்லாத கட்டுரையில் இப்படி எழுதியிருக்கிறார்:

"தமிழ் நடிப்பில் நான் விரும்பாதது சிவாஜி பாணி நடிப்பு. சிவாஜியின் புருவம் நேராக இருந்த ஒரு புகைப்படத்தைக் கூட நான் பார்த்தது இல்லை. இயல்பாக இருப்பதென்றால் கூட அப்படி நடித்துக் காட்டக் கூடியவர் அவர்."

உலக சினிமாவில் பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்ட அளவுகோல்களை வைத்துப் பார்த்தால் சிவாஜி ஒரு சிறந்த நடிகராக தேறாமல் இருக்கலாம். ஆனால் அவர் தமிழ் நாடக மரபினால் உருவாக்கப்பட்டவர். அந்த மரபின் அளவுகோல்களின் படி அவர் ஒரு சிறந்த நடிகர். மிகையுணர்ச்சி அவ்வகை நடிப்பின் பிரிக்கமுடியாத அம்சம். அதன் காரணமாகவே திரைப்படங்கள் நாடகங்களின் நீட்சியாகப் பார்க்கப்பட்ட ஒரு காலகட்டத்தில் சிவாஜி தமிழர்களால் மிகச் சிறந்த நடிகராகக் கொண்டாடப்பட்டார். இன்னும் சொல்லப்போனால் மேற்கத்திய நாகரிகத்தால் அதிகம் பாதிக்கப்படாத தமிழர்களின் வாழ்விலும் பண்பாட்டிலும் மிகையுணர்ச்சி என்பது நெருக்கமாக கலந்த ஒன்று. அதீதமாகவும் ஆரவாரமாகவும் உணர்ச்சிவசப்படுவது, தலைவனுக்காக (உண்மையிலேயே) உயிரைக் கொடுப்பது போன்ற மற்ற சமூகங்களிடம் அதிகம் காணமுடியாத குணங்களை நவீன நாகரிகத்தின் தாக்கம் இல்லாத தமிழர்களிடம் இன்றளவும் காணமுடிகிறது. மேற்குலக கனவான்களும் அந்த பண்பாட்டில் தோய்ந்துபோன இந்திய மேட்டுக்குடியினரும் உணர்ச்சிகளை பொதுவில் வெளிப்படுத்தமாட்டார்கள். எவ்வளவு கொடூரமான இறப்பு நேர்ந்தாலும் நேரு குடும்பத்தினரின் கண்ணில் ஒரு துளி கண்ணீரைக் கூட பொதுமக்கள் பார்க்கமுடியாது. ஆனால் ஊரைக் கூட்டி ஒப்பாரி வைப்பது தமிழர்களின் பண்பாடு. மேட்டுக்குடியை சேர்ந்த ஒருவர் அதை நக்கல் செய்தால் அது வெறும் அங்கதமாக அல்லாமல் கலாச்சாரப் பாசிசமாக பார்க்கப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

மிகையுணர்ச்சி / மிகைநவிர்ச்சி கலந்த ஒன்றை தமிழர்கள் ரசிப்பது திரைப்படங்களில் மட்டுமல்ல இலக்கியத்திலும் ஜெயமோகனுக்கு ஒரு பிரச்சனையாக இருக்கிறது. அதை எப்போதுமே ஒரு நக்கலுடன் தான் எதிர்கொள்வார். எடுத்துக்காட்டாக வைரமுத்துவின் கள்ளிக்காட்டு இதிகாசத்துக்கு விருது வழங்கப்பட்டதை விமரிசித்து இப்படி எழுதுகிறார்:

"தலைப்பிலேயே யதார்த்தவாதத்துக்கு ஒவ்வாத மிகை ஆரம்பித்துவிடுகிறது. அதன் கூறுமுறை, நிகழ்வுகள் அனைத்துமே ஆர்ப்பாட்டமானவை, மிகையானவை, அலங்காரமானவை. வைரமுத்துவின் தமிழ்நடையை சசிகலாவின் நகையலங்காரத்தை ரசிப்பவர்களே ரசிக்க முடியும்."

தடம் விலகல்: ஜெயமோகனின் இலக்கியக் கருத்துகளையும் விமரிசனங்களையும் தொடர்ந்து வாசித்து வரும் கூர்மையான வாசகனுக்கு அவற்றின் அறிவுஜீவித்தனமான பூச்சுகளையும், பெயர்கள் பட்டியலிடுதல் போன்ற உத்திகளையும் தாண்டி அவற்றின் பின்னே இருக்கும் நேர்மையின்மையையும் மலிவான அரசியல் செயல்பாடுகளையும் புரிந்துக்கொள்ள மிஞ்சிப் போனால் சில மாதங்கள் ஆகலாம். கள்ளிக்காட்டு இதிகாசத்தின் தலைப்பிலேயே யதார்த்தவாதத்துக்கு ஒவ்வாத மிகை இருக்கிறது என்ற கருத்து கசாக்கின்றெ இதிகாசத்துக்கும் பொருந்துமா என்று கேட்டால் அதற்கு அவர் சொல்லப்போகும் பதில் எதுவாக இருப்பினும் அதில் குறைந்தது முப்பது எழுத்தாளர்களின் பெயர்களாவது இருக்கும் என்பதை நிச்சயமாகச் சொல்லலாம். வைரமுத்துவின் எழுத்து இலக்கியம் அல்ல என்று உறுதியாக சொல்லும் அதே ஜெயமோகன் தான் உடல்ஊனத்தைப் பழிப்பது ஒழுக்கமில்லாமல் இருந்தாலும் இலக்கியத்தில் அதற்கு இடம் இருப்பதாக சொல்கிறார். தேவைப்பட்டால் இரும்புக்கை மாயாவியிலும் ஒருகாலத்தில் பள்ளி மாணவர்கள் மறைத்துவைத்துப் படித்த 'என் பெயர் சு' வகை 'அனுபவ'க் கதைகளிலும் கூட உன்னத இலக்கிய கூறுகளைக் கண்டெடுத்து அதிஉச்சபேரெழுச்சிவாதம் என்றோ ஈரவெங்காயவாதம் என்றோ விளங்காத வார்த்தைகளைத் தூவிப் பரிமாறும் வித்தை அவருக்கு அத்துப்படி. இலக்கியத்தில் யாருக்கு இடம் உண்டு யாருக்கு இல்லை என்று தன் வசதிக்கேற்ப இப்படி பட்டா போட்டுக் கொடுப்பதை யாராவது தர்க்க வழிமுறைகளைக் கையாண்டு கேள்வி கேட்டால் இலக்கியக் கருத்துக்கள் அகவயமானவை, அவற்றை புறவய நிரூபண முறைகளைப் பயன்படுத்தி உண்மையென நிரூபிக்கவோ பொய்ப்பிக்கவோ முடியாது என்று சொல்லி வாயை அடைப்பார்.

சிவாஜியையும் எம்.ஜி.ஆரையும் ஒரு மேல்நிலைப்பள்ளி மாணவனின் தரத்துக்கு இறங்கி கிண்டலடித்துவிட்டு அங்கதம் இலக்கியத்தின் அடிப்படை இயல்புகளில் ஒன்று என்று சொல்லும் ஜெயமோகன் தன் 'அறிவார்ந்த' ரசனைக்கேற்ற, தான் உயர்வாக மதிக்கும் ஒரு கலைஞனை இது போல் நக்கல் செய்யமுடியுமா என்பது சந்தேகமே. எடுத்துக்காட்டாக மகாராஜபுரம் சந்தானத்தை. சந்தானத்தைக் குறித்து ஜெயமோகன் எழுதியிருப்பது சுவாரசியமானது. 'தலீவர்' கட்-அவுட்டுக்கு பால் ஊற்றும் ரசிகனின் மனநிலையை அதில் காணமுடியும்.

"மகாராஜபுரம் சந்தானம் பாடுவதற்கு முன்பு இலேசாக முனகுவார், அவ்வொலியிலேயே அவர் என்னுடைய பாடகராக ஆனார். அது இசை மலையில் கசியும் சிறு ஊற்றுபோல, முதல் மழைத்துளிபோல... தன்னகங்காரம் , சுய அடையாளம், அறிவின் பெரும்பாரம் ஆகிய அனைத்தையும் கழற்றி வைத்து எளிய ரசிகனாக சரணடைவதில், கலையின் வாசல்முன் முழுஉடலும் பணிய விழுவதில், மகத்தான ஒரு சுதந்திரம் உள்ளது. எத்தனை மேதைகள் இருந்தாலும் மகாராஜாவைத்தவிர எவரையுமே நான் பெரும்பாடகனாக அங்கீகாிக்க மாட்டேன். அவரது குரலின் சாயல் இல்லாத எவரையும் ரசிக்கவும் மாட்டேன். இப்பிறப்பில் நான் அவருக்கு மட்டுமே ரசிகன் என பெருமையுடன் சொல்லிக் கொள்வேன்."

தான் ஒரு மிகப்பெரிய அறிவாளி என்ற கர்வத்தை சற்றும் கூச்சமில்லாமல் வெளிப்படுத்திக்கொள்பவர் ஜெயமோகன். 'தகுதி' இருப்பவர்கள் மட்டுமே தன்னை விமரிசிக்கவோ தன்னுடன் விவாதிக்கவோ செய்யலாம் என்று தொடர்ந்து சொல்லி வருபவர். இது மேட்டிமைத்தனம் இல்லையென்றால் வேறு எதுவுமே மேட்டிமைத்தனம் இல்லை. அறிவு முதிர்ச்சியற்றவர்களாகவும் மலிவான ரசனை உடையவர்களாகவும் தான் கருதுபவர்களை மட்டம் தட்டுவதற்கு அங்கதத்தை ஒரு கருவியாக அவர் பயன்படுத்துகிறார். ஐயாயிரம் புத்தகங்கள் கொண்ட நூலகம் உள்ள வீடும் ஹெமிங்வேயையும் பஷீரையும் ஜெயகாந்தனையும் வாசிக்கும் பெற்றோரும் பிறப்பிலேயே அமையப்பெற்ற ஜெயமோகனுக்கு எழுத்தாளனிடம் 'எவ்வளவு கிடைக்கும்?' என்று கேட்கும் இலக்கிய அறிமுகமில்லாத குமாஸ்தாவை இத்தனை ஆண்டுகளாக நக்கல் செய்தும் இன்னும் அலுக்கவில்லை. பலரிடமும் பிறந்த சாதி மற்றும் வர்க்கத்தை பற்றிய திமிராக வெளிப்படுவது ஜெயமோகனிடம் அறிவு பற்றிய கர்வமாக சற்றே மாறிய வடிவத்தை அடைகிறது. அவர் தன் வீட்டுக்கு சற்றுத் தொலைவில் கலையங்கள் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் தங்கச்சனின் குடியிருப்பில் பிறந்திருந்தால் 'ஞானச்செருக்கு' இந்த அளவு ஏறியிருக்காது என்று தோன்றுகிறது.

இந்த இடத்தில் ஒரு சிறு விளக்கம் தேவை. தமிழகத்தின் வெகுஜன கலாச்சாரம் மற்றும் ரசனை குறித்து எனக்கும் நிறைய விமரிசனங்கள் இருக்கின்றன. அறிவார்ந்த சிந்தனைகளுக்கு எதிரான போக்கும், எல்லாவற்றையும் எளிமைப்படுத்துவதும், சராசரித்தனத்தை ஊக்குவிக்கும் போக்கும் ஒரு சமூகத்துக்கு கேடானது என்றே நம்புகிறேன். பாமர மக்களின் அறிவு, ரசனை போன்றவற்றை மேம்படுத்தும் நோக்கில் முற்போக்கு அறிவுஜீவிகள் அங்கதத்தை ஒரு கருவியாகப் பயன்படுத்துவது எனக்கு ஏற்புடையதே. ஆனால் இதை செய்பவர்கள் பாமரர்களின் நம்பிக்கைகளையும், அவர்கள் உயர்வாக கருதும் ஆளுமைகளையும் மட்டுமல்லாது மரபு வழிவந்த புனித பிம்பங்களையும் கட்டுடைக்கத் தயாரானவர்களாகவும் இருக்கவேண்டும்.

ஆனால் ஜெயமோகன் அப்படி இல்லை. மரபு மற்றும் அதனால் உருவாக்கப்பட்ட புனிதங்களின் பாதுகாவலராகவும், அவற்றை கட்டுடைக்க முயலும் சீர்திருத்தவாதிகளை மோசமாக தாக்குபவராகவும் இருப்பவர் அவர். மரபுடன் தொடர்புடைய எல்லாவற்றிலும் ஆழ்ந்த பொருள் இருக்கும் என்ற முன்முடிவுடன் அணுகுபவர். சென்ற காலத்தவர் உருவாக்கி தந்திருக்கும் கருத்துக்களையும் பிம்பங்களையும் அங்கதத்தின் மூலம் உடைக்கவேண்டியதின் அவசியம் குறித்து தற்போது வகுப்பெடுக்கும் ஜெயமோகன் தான் இந்து ஞான மரபு என்று அவர் சொல்லும் மரபின் கருத்தாக்கங்களை பெரியாரியர்கள் நக்கல் செய்யும் போது ஆவேசத்தை வெளிப்படுத்துபவர். புனித பிம்பங்களை உண்மையிலேயே உடைப்பவராக, ஒரு iconoclast-ஆக இறுதிவரை வாழ்ந்த பெரியாரை ஜெயமோகன் அளவுக்கு தாக்கிய எவரையும் நான் வாசித்ததில்லை.

மரபின் புனிதங்களுக்கு எதிரான ஒரு சிறு நக்கலை கூட 'அங்கத எழுத்தாளர்' ஜெயமோகனால் சகிக்கமுடியாது என்பதற்கு ஒரு எடுத்துக்காட்டை என் பழைய பதிவொன்றில் சுட்டியிருந்தேன். (புனிதங்களுக்கு எதிரான நக்கல் என்றால் மேற்கில் கிருஸ்தவ மத நம்பிக்கைகளை மாண்டி பைத்தான் போன்றவர்கள் கிண்டலடித்த அளவிற்கெல்லாம் போகவேண்டாம். அதில் பத்தில் ஒரு பங்கே போதும்.) ஒரு பெரியபுராணப் பாடலைப் பற்றி திண்டுக்கல் லியோனி கிண்டலாக ஏதோ சொல்லிவிட அதை குறித்து ஜெயமோகன் இப்படி எழுதினார்.

"(லியோனியின் வெற்றிக்கான காரணங்களில்) முக்கியமானது முழுமையான அறியாமை மட்டுமே அளிக்கும் அவரது தன்னம்பிக்கை. அறிவார்ந்தது, முக்கியமானது, பிரபலமானது என கருதப்படும் விஷயங்களையெல்லாம் திண்டுக்கல் லியோனி தூக்கிப்போட்டு உடைக்கும்போது பாமரத்தமிழ் மனம் மகிழ்ச்சி அடைகிறது... லியோனி அவ்வுரையில் பெரியபுராணத்தை நக்கல் செய்கிறார். ஒரு கிராமத்துக்கு அவர்கள்குழு சென்று 'உலகெலாம் உணர்ந்தோதற்கரியவன் ... ' என்று பாட, உள்ளூர் விவசாயிகள் 'அய்யா என்ன பாடுறீங்க ?' என்று கேட்கிறார்கள். ''பெரியபுராணம்'' என்கிறார் இவர். 'எங்க புராணம்தான் பெரியபுராணமா கெடக்கே. சினிமாப்பாட்டு எதாவது பாடுங்க' என்கிறார்கள். அப்படித்தான் இவர்கள் 'எளிய மக்களிடையே' இறங்கி வந்தார்களாம். உண்மையில் லியோனி புலியாட்டம் ஆடக் கற்றிருந்தால் எளிய மக்கள் மேலும் மகிழ்ந்திருப்பார்கள்."

ஜெயமோகனின் சொல்வது இதுதான். 'அறிவார்ந்தவற்றை' பாமரத் தமிழ் மனம் கொண்டவர்கள் நக்கல் செய்யலாகாது. ஆனால் பாமரத் தமிழ் மனம் கொண்டவர்கள் உயர்வாக மதிப்பவற்றை 'அறிவார்ந்தவர்கள்' நக்கல் செய்யலாம். இதில் இன்னொரு சிறிய வேடிக்கை. தற்போதைய விகடன் சர்ச்சையைப் பற்றி எழுதும் போது ஜெயமோகன் சொல்கிறார்:

"...பி.ஏ.கிருஷ்ணனின் ‘புலிநகக் கொன்றை’ பெங்குவின் பதிப்பக வெளியீடாக ஆங்கிலத்தில் வெளிவந்து உலகெலாம் படிக்கபட்டு ஒரு கிளாசிக் என புகழப்பட்ட Tiger Claw Tree நாவலின் இந்த தமிழாக்கத்தில் எம்.ஜி.ஆர், சிவாஜி குறித்து வெளிவந்தவற்றுக்கு ஒரு படி குறைவாகவே என் கட்டுரைகள் உள்ளன என்று நீங்கள் வாசித்தால் காணலாம்."

எம்.ஜி.ஆர், சிவாஜி குறித்து ஜெயமோகனைவிட ஒரு படி அதிகமாக கிண்டலடித்திருக்கும் பி.ஏ.கிருஷ்ணன் பெரிய நகைச்சுவையாளராக தான் இருக்கவேண்டும். ஜெயமோகன் லியோனி பற்றி எழுதியதற்கு பி.ஏ.கிருஷ்ணன் இப்படி பதில் எழுதினார்: "திண்டுக்கல் லியோனி போன்றவர்கள் மையத்துக்கு வந்திருப்பது தமிழ் மக்களின் அறிவுத்திறனுக்கும் நகைச்சுவை உணர்வுக்கும் வந்திருக்கும் நோயின் அறிகுறி."

"திண்டுக்கல் லியோனி போன்றவர்கள்" மையத்துக்கு வருவதற்கு முன்னால் தமிழகத்தில் கோலோச்சிய 'நகைச்சுவையாளர்கள்' - சோ ராமசாமி, எஸ்.வீ.சேகர் வகையறாக்கள் - குறித்து பி.ஏ.கிருஷ்ணனுக்கு ஏதும் பிரச்சனை இருப்பதாக தெரியவில்லை. இவர்களது நகைச்சுவை எப்படிப்பட்டது? சமூக அடுக்கில் தங்களுக்கு கீழே இருப்பதாக கருதப்படுபவர்களின் அறிவுத்திறன், ரசனை, அடையாளங்கள் ஆகியவற்றை கேலிப்பொருளாக்கி நக்கலடிப்பதை தானே இவர்கள் செய்துவந்திருக்கிறார்கள்? இவர்களின் 'நகைச்சுவை'க்கு பின்னால் உள்ள உளவியலும் அரசியலும் பெரும்பாலும் மேலோட்டமான பார்வைக்கு தெரியாதவண்ணம் இருக்கும். ஆனால் அபூர்வமாக பூனைக்குட்டி வெளியே வருவதும் உண்டு. அண்மைய எடுத்துக்காட்டு ஒன்றை சொல்வதென்றால் இரண்டு பெண்களை அட்டைக்கரி நிறமாக்கி, அங்கவை சங்கவை என்று பெயரிட்டு, அவர்களின் தகப்பன் அவர்களுக்கு ஆண் துணை பிடிக்க அலைவது போல் அமைக்கப்பட்டிருக்கும் 'நகைச்சுவை'க்கு பின்னால் உள்ள ஆதிக்க உளவியலை அறிய செரிப்ரம் செரிபெல்லம் இரண்டில் ஏதாவது ஒன்று இயங்கினாலே போதும்.

கடந்த நாற்பது ஆண்டுகளாக தமிழர்களின் அரசியல் தேர்வுகள், அடையாளங்கள், ரசனை ஆகியவற்றை நக்கல் செய்வதையே தன் முழுநேரப் பணியாக கொண்டு இயங்கும் சோ ராமசாமிக்கு ராமர் பாலம் எனும் நம்பிக்கையின் மீதான கருணாநிதியின் எள்ளல் கோபாவேசம் ஏற்படுத்துகிறது. அதற்கு எதிர்வினையாக 'பிதற்றியிருக்கிறார்', 'அற்பத்தனம்', 'மடத்தனம்' போன்ற தடித்த வார்த்தைகளால் நிரம்பிய ஒரு வசைத் தலையங்கத்தை எழுதி தன் ஆத்திரத்தைத் தணித்துக்கொள்கிறார். ஜெயமோகன், சோ போன்ற மேட்டிமைத்தனம் மிகுந்த 'அங்கத எழுத்தாளர்'களின் இலக்கணம் இதுதான். நாங்கள் மலிவானதாகவும், இழிவானதாகவும் கருதும் எதையும் - அது மற்றவர்களால் எவ்வளவு தான் உயர்வாக மதிக்கப்பட்டாலும் - மட்டமாக கிண்டலடிக்கும் முழு உரிமை எங்களுக்கு வேண்டும். அது தான் கருத்து சுதந்திரம். ஆனால் எங்கள் மரபுடன் தொடர்புடைய புனிதங்களை யாராவது நக்கல் செய்ய துணிந்தால் தொலைந்தீர்கள்.