நகைச்சுவைக்குள் பதுங்கும் மேட்டிமைத்தனம்

சில வாரங்களுக்கு முன் ஜெயமோகனின் வலைப்பதிவில் சிவாஜியை மட்டமான முறையில் கிண்டலடித்து எழுதப்பட்டிருந்த கட்டுரையை வாசித்தபோது அது சர்ச்சையைக் கிளப்பும் என்று தோன்றியது. சிவாஜியை 'இழிவுபடுத்தியதற்காக' நடிகர் சங்கம் ஜெயமோகனுக்கு எதிராக ஏதாவது போராட்ட நடவடிக்கையை மேற்கொள்ள வாய்ப்பிருக்கிறது என்று அப்போது நினைத்தேன். அப்படி நிகழ்ந்திருந்தால் அது ஜெயமோகனுக்கு கருணாநிதியின் வசைக்கவிதைக்கு சற்றும் குறையாத விளம்பரத்தைப் பெற்றுத் தந்திருக்கும். இப்போது ஆனந்தவிகடன் அட்டைப்படக் கட்டுரை மூலம் விளம்பரம் அளித்திருக்கிறது. அதன்பிறகு அவரது இணையத்தளத்திற்கு வருவோர் எண்ணிக்கை ஆறு மடங்கு அதிகரித்திருக்கிறதாம். சில நூறு புது வாசகர்களாவது கிடைப்பார்கள். விகடன் போன்ற வணிக இதழ்களின் மூலம் புது வாசகர்களை இழுப்பதற்கான வாய்ப்பு குறித்தும் சங்கச் சித்திரங்கள் தொடர் மூலம் தனக்கு கிடைத்த பல நல்ல வாசகர்களைக் குறித்தும் ஜெயமோகன் அடிக்கடி எழுதிவருவதை வைத்துப் பார்க்கும்போது விகடனின் செயல் அவருக்கு மகிழ்ச்சியைத் தவிர வேறு எதை தந்திருக்கமுடியும் என்று ஊகிப்பது கடினமாக இருக்கிறது. ஆனால் எல்லா மகிழ்ச்சிகளையும் வெளிப்படுத்திக்கொள்ள முடியாது. விகடன் தனக்கு பெரிய அநீதி இழைத்துவிட்டது போல இப்போது சொல்லிக் கொண்டிருக்கிறார்.

ஒன்றை சொல்லியாகவேண்டும். சிவாஜி, எம்.ஜி.ஆர் ஆகியோரைக் குறித்து ஜெயமோகன் எழுதியதை எழுதுவதற்கான உரிமை அவருக்கு கண்டிப்பாக இருக்கிறது. கருத்து சுதந்திரம் என்பது எல்லாவிதமான கருத்துக்களுக்கும் சேர்த்து தான். அவ்வப்போது எதாவது ஒரு கூட்டம் "மனம் புண்பட்டுவிட்டது" என்ற ஓலத்துடன் எழுத்தாளர்கள் மற்றும் கலைஞர்களுக்கு எதிராக தெருவில் இறங்குவதில் எனக்கு சற்றும் உடன்பாடில்லை. தஸ்லிமா நஸ்ரின், எம்.எஃப்.ஹூசைன், ஞாநி, ஜெயமோகன் என்று யாராக இருந்தாலும் என் நிலைபாடு இதுதான்.

இவ்விவகாரம் குறித்து தன்மீது வைக்கப்பட்டக் குற்றச்சாட்டுகளுக்கு ஜெயமோகன் தன் வலைப்பதிவில் எழுதியிருக்கும் பதில்களிலிருந்து:

"இலக்கியத்தில் இல்லாத ஒன்றை, தேவையற்ற ஒன்றை நான் எழுதிவிடவில்லை. அங்கதம் இலக்கியத்தின் அடிப்படை இயல்புகளில் ஒன்று. அதிகார அமைப்பை, புனிதங்கள் என்று கருதப்படுவனவற்றை, எல்லாராலாலும் ஏற்கப்பட்டுவிட்ட ஒன்றைத்தான் எப்போதும் அங்கத இலக்கியம் தன் குறியாகக் கொள்கிறது. அதை தன் நகைச்சுவை மூலம் தலைகீழாக்கிப் பார்க்கிறது."

"எம்.ஜி.ஆரின் பேச்சுமுறையைக் கிண்டல் செய்யலாமா என்ற வினா. உடல்ஊனத்தைப் பழிப்பது ஒழுக்கமல்ல. ஒருபோதும் நான் என் தனிவாழ்விலும் எழுத்திலும் அதைச் செய்ததில்லை. ஆனால் இலக்கியத்தில் இதற்கு இடமிருக்கிறது. பின்நவீனத்துவ காலத்து இலக்கியம் அங்கதத்தை ‘கவிழ்ப்பாக்கம்’ [subversive writing] என்றே குறிப்பிடுகிறது. ... அவற்றுக்கு நாகரீக எல்லைகளோ, ஒழுக்க எல்லைகளோ இல்லை. ஏனென்றால் நாகரீகம், ஒழுக்கம் என்று வரையறைசெய்து அதிகாரமாக ஆக்கியிருக்கும் விஷயங்களைத்தான் அவை தலைகீழாக்குகின்றன."

"சென்ற காலத்தவரே கருத்துகக்ளை உருவாக்கி நமக்கு தந்திருக்கிறார்கள். பிம்பங்களை உருவாக்கி அளித்திருகிறார்கள். அவற்றை உடைக்காமல் நமக்கு சிந்தனை நிகழ முடியாது. வழிபாட்டில் இருந்து சிந்தனை உருவாவதில்லை. அங்கதம் ஒரு வகை உடைப்பு மட்டுமே."

ஜெயமோகனின் அரசியலைக் குறித்து ஏதும் அறியாதவர்கள் இதையெல்லாம் வாசித்தால் அவர் ஒரு தீவிரமான முற்போக்குவாதியென்றும் நாகரீக எல்லைகளுக்கோ ஒழுக்க எல்லைகளுக்கோ அடங்காமல் மரபு வழிவந்த அதிகார அமைப்பையும் புனிதங்களையும் அங்கதத்தின் மூலம் கட்டுடைத்து தலைகீழாக்குவதே அவரது முழுநேரப் பணி என்று எண்ணக்கூடும். ஆனால் இதற்கும் உண்மைக்குமான தூரம் பல ஒளி ஆண்டுகள் இருக்கும்.

விகடனுக்கு எழுதிய கடிதத்தில் தான் சிவாஜி, எம்.ஜி.ஆர் ஆகியோரை மட்டுமல்லாது தன் இலக்கிய ஆசிரியர்கள் உட்பட பலரையும் பகடி செய்திருப்பதாக சொல்கிறார். இது முழுக்க நேர்மையான ஒரு தகவல் அல்ல. தன் 'குருநாதர்'களைப் பற்றியும் நகைச்சுவைக் கட்டுரைகள் எழுதியிருக்கிறார் என்பது உண்மைதான். ஆனால் அது வேறுவிதமான நகைச்சுவை. நான் என் மகனின் சேட்டைகளைப் பற்றி நகைச்சுவையாக எழுதினால் அது வாசிப்பவருக்கு அவன் மேல் ஒரு வாஞ்சையை ஏற்படுத்தும் விதமாக தான் இருக்கும். ஜெயமோகன் ஆற்றூர் ரவிவர்மாவை பற்றி வேடிக்கையாக எழுதியிருக்கும் கட்டுரையை வாசித்தால் ஆற்றூர் ஒரு விரும்பத்தக்க, குழந்தைத்தனமான, பெருந்தன்மையுடைய மனிதராக தான் தோன்றுகிறார். பிம்பங்களை உடைத்து தலைகீழாக்குவதன் தேவையை பற்றியெல்லாம் நீட்டி முழக்கும் ஜெயமோகன் உண்மையில் ரவிவர்மாவின் பிம்பத்துக்கு வலுசேர்க்கும் விதமாகவே இந்த அங்கதக் கட்டுரையை எழுதியிருக்கிறார். எடுத்துக்காட்டாக: "அவர் கேரள இலக்கியத்தில் ஒரு வலுவான, நுட்பமான மையம். எவரையும் விமரிசனம்செய்வதில்லை ஆற்றூர். யாரையுமே வெறுப்பதில்லை. எல்லா மனிதர்களுக்கும் பிரியமானவர்." "அது என் குருநாதனின் ஆசி" என்பது போன்ற நெக்குருகல்களும் உண்டு. நித்ய சைதன்ய யதியைப் பற்றியக் கட்டுரையில் அவரது பாமரப் பக்தர்கள் தான் பகடி செய்யப்படுகிறார்கள். சிவாஜி, எம்.ஜி.ஆர் பற்றிய கட்டுரைகளில் உள்ள மட்டம் தட்டும் தொனி ஜெயமோகனின் மதிப்புக்குரியவர்களைப் பற்றியக் கட்டுரைகளில் இல்லை.

உண்மையில் பல ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்ட எம்.ஜி.ஆரையும் சிவாஜியையும் மட்டம் தட்டவேண்டிய தேவை எதுவும் ஜெயமோகனுக்கு இருப்பதாகத் தெரியவில்லை. அந்த இருவரையும் உயர்வாக எண்ணி ரசிக்கும் 'பாமர' தமிழர்களின் ரசனையைத் தான் அவர் மறைமுகமாக நக்கல் செய்கிறார். ஜெயமோகன் தன்னுடைய திரைப்பட ரசனையும் அளவுகோல்களும் மலையாளப் படங்கள் மூலம் உருவானைவையே என்று முன்பு ஒருமுறை எழுதியிருக்கிறார். அவருக்கு சிவாஜியின் நடிப்பு பிடிக்காது என்பது தெரிந்தது தான். ஆறு ஆண்டுகளுக்கு முன்பு ஒரு நகைச்சுவை-அல்லாத கட்டுரையில் இப்படி எழுதியிருக்கிறார்:

"தமிழ் நடிப்பில் நான் விரும்பாதது சிவாஜி பாணி நடிப்பு. சிவாஜியின் புருவம் நேராக இருந்த ஒரு புகைப்படத்தைக் கூட நான் பார்த்தது இல்லை. இயல்பாக இருப்பதென்றால் கூட அப்படி நடித்துக் காட்டக் கூடியவர் அவர்."

உலக சினிமாவில் பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்ட அளவுகோல்களை வைத்துப் பார்த்தால் சிவாஜி ஒரு சிறந்த நடிகராக தேறாமல் இருக்கலாம். ஆனால் அவர் தமிழ் நாடக மரபினால் உருவாக்கப்பட்டவர். அந்த மரபின் அளவுகோல்களின் படி அவர் ஒரு சிறந்த நடிகர். மிகையுணர்ச்சி அவ்வகை நடிப்பின் பிரிக்கமுடியாத அம்சம். அதன் காரணமாகவே திரைப்படங்கள் நாடகங்களின் நீட்சியாகப் பார்க்கப்பட்ட ஒரு காலகட்டத்தில் சிவாஜி தமிழர்களால் மிகச் சிறந்த நடிகராகக் கொண்டாடப்பட்டார். இன்னும் சொல்லப்போனால் மேற்கத்திய நாகரிகத்தால் அதிகம் பாதிக்கப்படாத தமிழர்களின் வாழ்விலும் பண்பாட்டிலும் மிகையுணர்ச்சி என்பது நெருக்கமாக கலந்த ஒன்று. அதீதமாகவும் ஆரவாரமாகவும் உணர்ச்சிவசப்படுவது, தலைவனுக்காக (உண்மையிலேயே) உயிரைக் கொடுப்பது போன்ற மற்ற சமூகங்களிடம் அதிகம் காணமுடியாத குணங்களை நவீன நாகரிகத்தின் தாக்கம் இல்லாத தமிழர்களிடம் இன்றளவும் காணமுடிகிறது. மேற்குலக கனவான்களும் அந்த பண்பாட்டில் தோய்ந்துபோன இந்திய மேட்டுக்குடியினரும் உணர்ச்சிகளை பொதுவில் வெளிப்படுத்தமாட்டார்கள். எவ்வளவு கொடூரமான இறப்பு நேர்ந்தாலும் நேரு குடும்பத்தினரின் கண்ணில் ஒரு துளி கண்ணீரைக் கூட பொதுமக்கள் பார்க்கமுடியாது. ஆனால் ஊரைக் கூட்டி ஒப்பாரி வைப்பது தமிழர்களின் பண்பாடு. மேட்டுக்குடியை சேர்ந்த ஒருவர் அதை நக்கல் செய்தால் அது வெறும் அங்கதமாக அல்லாமல் கலாச்சாரப் பாசிசமாக பார்க்கப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

மிகையுணர்ச்சி / மிகைநவிர்ச்சி கலந்த ஒன்றை தமிழர்கள் ரசிப்பது திரைப்படங்களில் மட்டுமல்ல இலக்கியத்திலும் ஜெயமோகனுக்கு ஒரு பிரச்சனையாக இருக்கிறது. அதை எப்போதுமே ஒரு நக்கலுடன் தான் எதிர்கொள்வார். எடுத்துக்காட்டாக வைரமுத்துவின் கள்ளிக்காட்டு இதிகாசத்துக்கு விருது வழங்கப்பட்டதை விமரிசித்து இப்படி எழுதுகிறார்:

"தலைப்பிலேயே யதார்த்தவாதத்துக்கு ஒவ்வாத மிகை ஆரம்பித்துவிடுகிறது. அதன் கூறுமுறை, நிகழ்வுகள் அனைத்துமே ஆர்ப்பாட்டமானவை, மிகையானவை, அலங்காரமானவை. வைரமுத்துவின் தமிழ்நடையை சசிகலாவின் நகையலங்காரத்தை ரசிப்பவர்களே ரசிக்க முடியும்."

தடம் விலகல்: ஜெயமோகனின் இலக்கியக் கருத்துகளையும் விமரிசனங்களையும் தொடர்ந்து வாசித்து வரும் கூர்மையான வாசகனுக்கு அவற்றின் அறிவுஜீவித்தனமான பூச்சுகளையும், பெயர்கள் பட்டியலிடுதல் போன்ற உத்திகளையும் தாண்டி அவற்றின் பின்னே இருக்கும் நேர்மையின்மையையும் மலிவான அரசியல் செயல்பாடுகளையும் புரிந்துக்கொள்ள மிஞ்சிப் போனால் சில மாதங்கள் ஆகலாம். கள்ளிக்காட்டு இதிகாசத்தின் தலைப்பிலேயே யதார்த்தவாதத்துக்கு ஒவ்வாத மிகை இருக்கிறது என்ற கருத்து கசாக்கின்றெ இதிகாசத்துக்கும் பொருந்துமா என்று கேட்டால் அதற்கு அவர் சொல்லப்போகும் பதில் எதுவாக இருப்பினும் அதில் குறைந்தது முப்பது எழுத்தாளர்களின் பெயர்களாவது இருக்கும் என்பதை நிச்சயமாகச் சொல்லலாம். வைரமுத்துவின் எழுத்து இலக்கியம் அல்ல என்று உறுதியாக சொல்லும் அதே ஜெயமோகன் தான் உடல்ஊனத்தைப் பழிப்பது ஒழுக்கமில்லாமல் இருந்தாலும் இலக்கியத்தில் அதற்கு இடம் இருப்பதாக சொல்கிறார். தேவைப்பட்டால் இரும்புக்கை மாயாவியிலும் ஒருகாலத்தில் பள்ளி மாணவர்கள் மறைத்துவைத்துப் படித்த 'என் பெயர் சு' வகை 'அனுபவ'க் கதைகளிலும் கூட உன்னத இலக்கிய கூறுகளைக் கண்டெடுத்து அதிஉச்சபேரெழுச்சிவாதம் என்றோ ஈரவெங்காயவாதம் என்றோ விளங்காத வார்த்தைகளைத் தூவிப் பரிமாறும் வித்தை அவருக்கு அத்துப்படி. இலக்கியத்தில் யாருக்கு இடம் உண்டு யாருக்கு இல்லை என்று தன் வசதிக்கேற்ப இப்படி பட்டா போட்டுக் கொடுப்பதை யாராவது தர்க்க வழிமுறைகளைக் கையாண்டு கேள்வி கேட்டால் இலக்கியக் கருத்துக்கள் அகவயமானவை, அவற்றை புறவய நிரூபண முறைகளைப் பயன்படுத்தி உண்மையென நிரூபிக்கவோ பொய்ப்பிக்கவோ முடியாது என்று சொல்லி வாயை அடைப்பார்.

சிவாஜியையும் எம்.ஜி.ஆரையும் ஒரு மேல்நிலைப்பள்ளி மாணவனின் தரத்துக்கு இறங்கி கிண்டலடித்துவிட்டு அங்கதம் இலக்கியத்தின் அடிப்படை இயல்புகளில் ஒன்று என்று சொல்லும் ஜெயமோகன் தன் 'அறிவார்ந்த' ரசனைக்கேற்ற, தான் உயர்வாக மதிக்கும் ஒரு கலைஞனை இது போல் நக்கல் செய்யமுடியுமா என்பது சந்தேகமே. எடுத்துக்காட்டாக மகாராஜபுரம் சந்தானத்தை. சந்தானத்தைக் குறித்து ஜெயமோகன் எழுதியிருப்பது சுவாரசியமானது. 'தலீவர்' கட்-அவுட்டுக்கு பால் ஊற்றும் ரசிகனின் மனநிலையை அதில் காணமுடியும்.

"மகாராஜபுரம் சந்தானம் பாடுவதற்கு முன்பு இலேசாக முனகுவார், அவ்வொலியிலேயே அவர் என்னுடைய பாடகராக ஆனார். அது இசை மலையில் கசியும் சிறு ஊற்றுபோல, முதல் மழைத்துளிபோல... தன்னகங்காரம் , சுய அடையாளம், அறிவின் பெரும்பாரம் ஆகிய அனைத்தையும் கழற்றி வைத்து எளிய ரசிகனாக சரணடைவதில், கலையின் வாசல்முன் முழுஉடலும் பணிய விழுவதில், மகத்தான ஒரு சுதந்திரம் உள்ளது. எத்தனை மேதைகள் இருந்தாலும் மகாராஜாவைத்தவிர எவரையுமே நான் பெரும்பாடகனாக அங்கீகாிக்க மாட்டேன். அவரது குரலின் சாயல் இல்லாத எவரையும் ரசிக்கவும் மாட்டேன். இப்பிறப்பில் நான் அவருக்கு மட்டுமே ரசிகன் என பெருமையுடன் சொல்லிக் கொள்வேன்."

தான் ஒரு மிகப்பெரிய அறிவாளி என்ற கர்வத்தை சற்றும் கூச்சமில்லாமல் வெளிப்படுத்திக்கொள்பவர் ஜெயமோகன். 'தகுதி' இருப்பவர்கள் மட்டுமே தன்னை விமரிசிக்கவோ தன்னுடன் விவாதிக்கவோ செய்யலாம் என்று தொடர்ந்து சொல்லி வருபவர். இது மேட்டிமைத்தனம் இல்லையென்றால் வேறு எதுவுமே மேட்டிமைத்தனம் இல்லை. அறிவு முதிர்ச்சியற்றவர்களாகவும் மலிவான ரசனை உடையவர்களாகவும் தான் கருதுபவர்களை மட்டம் தட்டுவதற்கு அங்கதத்தை ஒரு கருவியாக அவர் பயன்படுத்துகிறார். ஐயாயிரம் புத்தகங்கள் கொண்ட நூலகம் உள்ள வீடும் ஹெமிங்வேயையும் பஷீரையும் ஜெயகாந்தனையும் வாசிக்கும் பெற்றோரும் பிறப்பிலேயே அமையப்பெற்ற ஜெயமோகனுக்கு எழுத்தாளனிடம் 'எவ்வளவு கிடைக்கும்?' என்று கேட்கும் இலக்கிய அறிமுகமில்லாத குமாஸ்தாவை இத்தனை ஆண்டுகளாக நக்கல் செய்தும் இன்னும் அலுக்கவில்லை. பலரிடமும் பிறந்த சாதி மற்றும் வர்க்கத்தை பற்றிய திமிராக வெளிப்படுவது ஜெயமோகனிடம் அறிவு பற்றிய கர்வமாக சற்றே மாறிய வடிவத்தை அடைகிறது. அவர் தன் வீட்டுக்கு சற்றுத் தொலைவில் கலையங்கள் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் தங்கச்சனின் குடியிருப்பில் பிறந்திருந்தால் 'ஞானச்செருக்கு' இந்த அளவு ஏறியிருக்காது என்று தோன்றுகிறது.

இந்த இடத்தில் ஒரு சிறு விளக்கம் தேவை. தமிழகத்தின் வெகுஜன கலாச்சாரம் மற்றும் ரசனை குறித்து எனக்கும் நிறைய விமரிசனங்கள் இருக்கின்றன. அறிவார்ந்த சிந்தனைகளுக்கு எதிரான போக்கும், எல்லாவற்றையும் எளிமைப்படுத்துவதும், சராசரித்தனத்தை ஊக்குவிக்கும் போக்கும் ஒரு சமூகத்துக்கு கேடானது என்றே நம்புகிறேன். பாமர மக்களின் அறிவு, ரசனை போன்றவற்றை மேம்படுத்தும் நோக்கில் முற்போக்கு அறிவுஜீவிகள் அங்கதத்தை ஒரு கருவியாகப் பயன்படுத்துவது எனக்கு ஏற்புடையதே. ஆனால் இதை செய்பவர்கள் பாமரர்களின் நம்பிக்கைகளையும், அவர்கள் உயர்வாக கருதும் ஆளுமைகளையும் மட்டுமல்லாது மரபு வழிவந்த புனித பிம்பங்களையும் கட்டுடைக்கத் தயாரானவர்களாகவும் இருக்கவேண்டும்.

ஆனால் ஜெயமோகன் அப்படி இல்லை. மரபு மற்றும் அதனால் உருவாக்கப்பட்ட புனிதங்களின் பாதுகாவலராகவும், அவற்றை கட்டுடைக்க முயலும் சீர்திருத்தவாதிகளை மோசமாக தாக்குபவராகவும் இருப்பவர் அவர். மரபுடன் தொடர்புடைய எல்லாவற்றிலும் ஆழ்ந்த பொருள் இருக்கும் என்ற முன்முடிவுடன் அணுகுபவர். சென்ற காலத்தவர் உருவாக்கி தந்திருக்கும் கருத்துக்களையும் பிம்பங்களையும் அங்கதத்தின் மூலம் உடைக்கவேண்டியதின் அவசியம் குறித்து தற்போது வகுப்பெடுக்கும் ஜெயமோகன் தான் இந்து ஞான மரபு என்று அவர் சொல்லும் மரபின் கருத்தாக்கங்களை பெரியாரியர்கள் நக்கல் செய்யும் போது ஆவேசத்தை வெளிப்படுத்துபவர். புனித பிம்பங்களை உண்மையிலேயே உடைப்பவராக, ஒரு iconoclast-ஆக இறுதிவரை வாழ்ந்த பெரியாரை ஜெயமோகன் அளவுக்கு தாக்கிய எவரையும் நான் வாசித்ததில்லை.

மரபின் புனிதங்களுக்கு எதிரான ஒரு சிறு நக்கலை கூட 'அங்கத எழுத்தாளர்' ஜெயமோகனால் சகிக்கமுடியாது என்பதற்கு ஒரு எடுத்துக்காட்டை என் பழைய பதிவொன்றில் சுட்டியிருந்தேன். (புனிதங்களுக்கு எதிரான நக்கல் என்றால் மேற்கில் கிருஸ்தவ மத நம்பிக்கைகளை மாண்டி பைத்தான் போன்றவர்கள் கிண்டலடித்த அளவிற்கெல்லாம் போகவேண்டாம். அதில் பத்தில் ஒரு பங்கே போதும்.) ஒரு பெரியபுராணப் பாடலைப் பற்றி திண்டுக்கல் லியோனி கிண்டலாக ஏதோ சொல்லிவிட அதை குறித்து ஜெயமோகன் இப்படி எழுதினார்.

"(லியோனியின் வெற்றிக்கான காரணங்களில்) முக்கியமானது முழுமையான அறியாமை மட்டுமே அளிக்கும் அவரது தன்னம்பிக்கை. அறிவார்ந்தது, முக்கியமானது, பிரபலமானது என கருதப்படும் விஷயங்களையெல்லாம் திண்டுக்கல் லியோனி தூக்கிப்போட்டு உடைக்கும்போது பாமரத்தமிழ் மனம் மகிழ்ச்சி அடைகிறது... லியோனி அவ்வுரையில் பெரியபுராணத்தை நக்கல் செய்கிறார். ஒரு கிராமத்துக்கு அவர்கள்குழு சென்று 'உலகெலாம் உணர்ந்தோதற்கரியவன் ... ' என்று பாட, உள்ளூர் விவசாயிகள் 'அய்யா என்ன பாடுறீங்க ?' என்று கேட்கிறார்கள். ''பெரியபுராணம்'' என்கிறார் இவர். 'எங்க புராணம்தான் பெரியபுராணமா கெடக்கே. சினிமாப்பாட்டு எதாவது பாடுங்க' என்கிறார்கள். அப்படித்தான் இவர்கள் 'எளிய மக்களிடையே' இறங்கி வந்தார்களாம். உண்மையில் லியோனி புலியாட்டம் ஆடக் கற்றிருந்தால் எளிய மக்கள் மேலும் மகிழ்ந்திருப்பார்கள்."

ஜெயமோகனின் சொல்வது இதுதான். 'அறிவார்ந்தவற்றை' பாமரத் தமிழ் மனம் கொண்டவர்கள் நக்கல் செய்யலாகாது. ஆனால் பாமரத் தமிழ் மனம் கொண்டவர்கள் உயர்வாக மதிப்பவற்றை 'அறிவார்ந்தவர்கள்' நக்கல் செய்யலாம். இதில் இன்னொரு சிறிய வேடிக்கை. தற்போதைய விகடன் சர்ச்சையைப் பற்றி எழுதும் போது ஜெயமோகன் சொல்கிறார்:

"...பி.ஏ.கிருஷ்ணனின் ‘புலிநகக் கொன்றை’ பெங்குவின் பதிப்பக வெளியீடாக ஆங்கிலத்தில் வெளிவந்து உலகெலாம் படிக்கபட்டு ஒரு கிளாசிக் என புகழப்பட்ட Tiger Claw Tree நாவலின் இந்த தமிழாக்கத்தில் எம்.ஜி.ஆர், சிவாஜி குறித்து வெளிவந்தவற்றுக்கு ஒரு படி குறைவாகவே என் கட்டுரைகள் உள்ளன என்று நீங்கள் வாசித்தால் காணலாம்."

எம்.ஜி.ஆர், சிவாஜி குறித்து ஜெயமோகனைவிட ஒரு படி அதிகமாக கிண்டலடித்திருக்கும் பி.ஏ.கிருஷ்ணன் பெரிய நகைச்சுவையாளராக தான் இருக்கவேண்டும். ஜெயமோகன் லியோனி பற்றி எழுதியதற்கு பி.ஏ.கிருஷ்ணன் இப்படி பதில் எழுதினார்: "திண்டுக்கல் லியோனி போன்றவர்கள் மையத்துக்கு வந்திருப்பது தமிழ் மக்களின் அறிவுத்திறனுக்கும் நகைச்சுவை உணர்வுக்கும் வந்திருக்கும் நோயின் அறிகுறி."

"திண்டுக்கல் லியோனி போன்றவர்கள்" மையத்துக்கு வருவதற்கு முன்னால் தமிழகத்தில் கோலோச்சிய 'நகைச்சுவையாளர்கள்' - சோ ராமசாமி, எஸ்.வீ.சேகர் வகையறாக்கள் - குறித்து பி.ஏ.கிருஷ்ணனுக்கு ஏதும் பிரச்சனை இருப்பதாக தெரியவில்லை. இவர்களது நகைச்சுவை எப்படிப்பட்டது? சமூக அடுக்கில் தங்களுக்கு கீழே இருப்பதாக கருதப்படுபவர்களின் அறிவுத்திறன், ரசனை, அடையாளங்கள் ஆகியவற்றை கேலிப்பொருளாக்கி நக்கலடிப்பதை தானே இவர்கள் செய்துவந்திருக்கிறார்கள்? இவர்களின் 'நகைச்சுவை'க்கு பின்னால் உள்ள உளவியலும் அரசியலும் பெரும்பாலும் மேலோட்டமான பார்வைக்கு தெரியாதவண்ணம் இருக்கும். ஆனால் அபூர்வமாக பூனைக்குட்டி வெளியே வருவதும் உண்டு. அண்மைய எடுத்துக்காட்டு ஒன்றை சொல்வதென்றால் இரண்டு பெண்களை அட்டைக்கரி நிறமாக்கி, அங்கவை சங்கவை என்று பெயரிட்டு, அவர்களின் தகப்பன் அவர்களுக்கு ஆண் துணை பிடிக்க அலைவது போல் அமைக்கப்பட்டிருக்கும் 'நகைச்சுவை'க்கு பின்னால் உள்ள ஆதிக்க உளவியலை அறிய செரிப்ரம் செரிபெல்லம் இரண்டில் ஏதாவது ஒன்று இயங்கினாலே போதும்.

கடந்த நாற்பது ஆண்டுகளாக தமிழர்களின் அரசியல் தேர்வுகள், அடையாளங்கள், ரசனை ஆகியவற்றை நக்கல் செய்வதையே தன் முழுநேரப் பணியாக கொண்டு இயங்கும் சோ ராமசாமிக்கு ராமர் பாலம் எனும் நம்பிக்கையின் மீதான கருணாநிதியின் எள்ளல் கோபாவேசம் ஏற்படுத்துகிறது. அதற்கு எதிர்வினையாக 'பிதற்றியிருக்கிறார்', 'அற்பத்தனம்', 'மடத்தனம்' போன்ற தடித்த வார்த்தைகளால் நிரம்பிய ஒரு வசைத் தலையங்கத்தை எழுதி தன் ஆத்திரத்தைத் தணித்துக்கொள்கிறார். ஜெயமோகன், சோ போன்ற மேட்டிமைத்தனம் மிகுந்த 'அங்கத எழுத்தாளர்'களின் இலக்கணம் இதுதான். நாங்கள் மலிவானதாகவும், இழிவானதாகவும் கருதும் எதையும் - அது மற்றவர்களால் எவ்வளவு தான் உயர்வாக மதிக்கப்பட்டாலும் - மட்டமாக கிண்டலடிக்கும் முழு உரிமை எங்களுக்கு வேண்டும். அது தான் கருத்து சுதந்திரம். ஆனால் எங்கள் மரபுடன் தொடர்புடைய புனிதங்களை யாராவது நக்கல் செய்ய துணிந்தால் தொலைந்தீர்கள்.

38 மறுமொழிகள்:

இந்த சர்ச்சை/விவாதம் குறித்துப் பேசிய எல்லாப் பதிவுகளையும் வாசித்திருந்தாலும் எங்கும் மறுமொழியிட்டதில்லை. உங்கள் பதிவு மிக நேர்மையானதாக இருப்பதாக எனக்குத் தோன்றுகிறது.

/ நாங்கள் மலிவானதாகவும், இழிவானதாகவும் கருதும் எதையும் - அது மற்றவர்களால் எவ்வளவு தான் உயர்வாக மதிக்கப்பட்டாலும் - மட்டமாக கிண்டலடிக்கும் முழு உரிமை எங்களுக்கு வேண்டும். அது தான் கருத்து சுதந்திரம். ஆனால் எங்கள் மரபுடன் தொடர்புடைய புனிதங்களை யாராவது நக்கல் செய்ய துணிந்தால் தொலைந்தீர்கள்./

முத்தாய்ப்பு! வாழ்த்துகள்…

வெறுமே அங்கதம் என்று சொல்லி நழுவிக் கொள்ளும் செயமோகனை, என்ன தொனியில், என்ன நிலையில் அதைச் செய்தார்? - என்பது சரியான கோணம். மேட்டிமை நோக்கில் அங்கதம் செய்வதை ஏற்க முடியாது தான்.

தெளிவாக எழுதியிருக்கிறீர்கள்.

அன்புடன்,
இராம.கி.

//மேட்டுக்குடியை சேர்ந்த ஒருவர் அதை நக்கல் செய்தால் அது வெறும் அங்கதமாக அல்லாமல் கலாச்சாரப் பாசிசமாக பார்க்கப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.// ஆம். பாசிசமேதான்.

//ஜெயமோகனின் சொல்வது இதுதான். 'அறிவார்ந்தவற்றை' பாமரத் தமிழ் மனம் கொண்டவர்கள் நக்கல் செய்யலாகாது. ஆனால் பாமரத் தமிழ் மனம் கொண்டவர்கள் உயர்வாக மதிப்பவற்றை 'அறிவார்ந்தவர்கள்' நக்கல் செய்யலாம்.//

தமிழ் வாசக சூழலில் (கவனிக்க, தவறிப்போய்க்கூட 'இலக்கிய' சூழலில் என்று எழுதவில்லை:P எலக்கியத்துக்கும் நமக்கும் எண்ணிடலங்காத் தூரம் என்று அறிக.) சோ, மதன் தொடக்கம் பல 'மே''தாவி'களிடம் இந்தக் கூறுகளைக் காணலாம்.

அருமையான கட்டுரை, ஜெகத்.

வாங்க ஜெகத், நலமா?

வரவேண்டிய நேரத்துல சரியா வந்துடுறீங்களே. நன்றி

//ஆனால் இதற்கும் உண்மைக்குமான தூரம் பல ஒளி ஆண்டுகள் இருக்கும்.//

கவித்துவ உச்சம் நிரம்பிய வரிகள் ;-)

//அதிஉச்சபேரெழுச்சிவாதம் என்றோ ஈரவெங்காயவாதம் என்றோ விளங்காத வார்த்தைகளைத் தூவிப் பரிமாறும் வித்தை //

;-))))))))

அற்புதமான எழுத்து

ஜெயமோகனின் ரசிகனான எனக்கே பிடித்திருக்கிறது உங்களின் வாதங்கள்.

"ஜெகத்" முத்திரை உள்ள கட்டுரை

நல்ல காத்திரமான அலசல். வரிக்கு வரி நுட்பமாக எழுதியள்ளீர்கள். உங்கள் எழுத்து நடையும் அதன் கனமும் அரசியலும் புரியும் வண்ணம் அதனை வெளிப்படுத்தியருப்பதும் அருமை.

ஜெமோ போன்ற அதிமேதாவிகளின் அரசியலை தோலுரித்துள்ளீர்கள்.

என்ன சொல்வது என்றே தெரியவி்ல்லை. அலசி காய்ப் போட்டுவிட்டீர்கள்.

நான் கூட ஜெ.மோ ரசிகன் தான்.இப்பிரச்னையில் இணையத்தில் காணக்கிடைத்த வயித்தெரிச்சல்+கேணை வாதங்களால் மனம் வருந்தினேன். ஆனா உங்கள் எதிர்வினை மிக அருமை..ஜெ.மோ கண்டிப்பாக படிக்க வேண்டிய ஒன்று..மின்னஞ்சல் செய்து பாருங்களேன்..

மேற்கோள் எல்லாம் காட்டி சொல்லத் தேவையில்லை ஜெகத். முழுதும் ஒத்துப் போக முடிகிறது.

மிகத் தெளிவுடையதாய் இருக்கிறது. வாழ்த்துக்கள்.

ஜெயமோகனை படித்ததில்லை.

உங்கள் கட்டுரை அங்கதத்தின் பின்னுள்ள அரசியலை நன்கு வெளிப்படுத்துகிறது.

தங்கள் மீதான/தங்கள் கருத்துக்கள் மீதான அங்கதத்தையோ விமர்சனத்தையோ தாங்கமுடியாதவர்கள் மற்றவர்களை விமர்சிக்க தகுதியற்றவர்கள்.

மிகத் தெளிவாகவும் ஆழமாகவும் எழுதப்பட்ட கட்டுரை.நீண்ட கால அவதானம்,நேர்மை,தெளிவான அணுகுமுறை என மிகச்செறிவான கட்டுரை..

மிக்க நன்றி ஜெகத்...

தினம் பல ஆயிரம் ஹிட்டுக்கள் முந்ந்நூறுக்கும் மேற்பட்டகடிதங்களில் தொலைந்துபோகும் செயமோகனுக்கு நிச்சயமாய் இக்கட்டுரை கண்ணில் படாது..

அருமையான பதிவு. நிதானத்துடன் ஆதாரங்களுடன் சொல்லியிருக்கிறீர்கள்.

வாழ்க ஜெகத்.

ஜெகத்,

உங்களிடம் இதுதான் பிரச்னை, மனதில் தோன்றுவதை எல்லாம் விடாமல் எழுதிவிடுவீர்கள். பின்னூட்டமிடுவதில்தான் பிரச்னை!

ஆமாம், லியோனியை பற்றி இப்படியா சொல்லியிருக்கிறார். நான் லியோனியின் பரம விசிறி!

என்ன மட்டமான ரசனை எனக்கு...

எம்ஜிஆர், சிவாஜியை பற்றி எழுதட்டும்...பிரழ்ச்சினை எழுந்தவுடன் 'நான் சும்மா கிண்டலுக்குத்தானே எழுதினேன். கொஞ்ச பேர் படிக்க மட்டும்தானே' என்று அழுது புலம்பாமல், 'ஆமாம், என் கருத்து அதுதான். அதை எழுத எனக்கு உரிமை உண்டு' என்று கூறியிருந்தால் மரியாதை கொடுக்கலாம்...

//சிவாஜி, எம்.ஜி.ஆர் பற்றிய கட்டுரைகளில் உள்ள மட்டம் தட்டும் தொனி ஜெயமோகனின் மதிப்புக்குரியவர்களைப் பற்றியக் கட்டுரைகளில் இல்லை//

தனது மதிப்புக்குரியவர்களை யாரும் மட்டம் தட்ட மாட்டார்கள்.செய்ய சொல்லி யாரும் வற்புறுத்தவும் முடியாது.சிவாஜி,எம்ஜிஆரை பகடி செய்வதால் எல்லோரையும் அதே போல் பகடி செய்யவேண்டும் என்றும் யாரும் சொல்ல முடியாது.

//உண்மையில் பல ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்ட எம்.ஜி.ஆரையும் சிவாஜியையும் மட்டம் தட்டவேண்டிய தேவை எதுவும் ஜெயமோகனுக்கு இருப்பதாகத் தெரியவில்லை. அந்த இருவரையும் உயர்வாக எண்ணி ரசிக்கும் 'பாமர' தமிழர்களின் ரசனையைத் தான் அவர் மறைமுகமாக நக்கல் செய்கிறார்//

'தன்னை சுற்றி இருக்கும் உலகத்தின் முட்டாள்தனத்தை ஒருத்தன் பகடி செய்ய கூடாதா?' என்ற கேள்வியை இப்போதைக்கு ஒதுக்கி விட்டாலும் சிவாசி,எம்சிஆரை பகடி செய்பவர்களெல்லாம் தமிழனின் ரசனையை பகடி செய்கிறார்கள் என்று நீங்கள் அடிக்கும் கும்மியை சகிக்க இயலவில்லை.(எம்சிஆரை உடன்பிறப்புக்கள் திட்டியதெல்லாம் நினைவுக்கு வந்து தொலைக்கிறது. கூடவே எம்சிஆருக்கு ஓட்டு போட்ட தமிழனை வாழமட்டை, சோற்றாலடித்த பிண்டம் என உடன்பிறப்புக்கள் அர்ச்சனை செய்தது எல்லாம் நினைவுக்கு வருகிறது)

அது சரி ஜெகத் ஐயா, 'தமிழர்களின் ரசனை' - என்பது என்ன கிண்டல் செய்யப்படக்கூடாத கடவுளா? ரசினிகாந்த கடவுளை வசைமாறி பொழிபவனெல்லாம் தெய்வகுத்தத்துக்கு ஆளாவர்களா?


//ஊரைக் கூட்டி ஒப்பாரி வைப்பது தமிழர்களின் பண்பாடு. மேட்டுக்குடியை சேர்ந்த ஒருவர் அதை நக்கல் செய்தால் அது வெறும் அங்கதமாக அல்லாமல் கலாச்சாரப் பாசிசமாக பார்க்கப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம்//

பாசிசம் என்றால் என்னவென்று உங்களுக்கு தெரியுமா என்பதே சந்தேகமாக இருக்கிறது. பாசிசத்துக்கு டிக்ஷனரி விளக்கம்

http://dictionary.reference.com/browse/fascism

A system of government marked by centralization of authority under a dictator, stringent socioeconomic controls, suppression of the opposition through terror and censorship, and typically a policy of belligerent nationalism and racism.

எந்த பதவியிலும் இல்லாமல் அதிகாரத்திலும் இல்லாமல் சும்மா பிளாகில் கிறுக்குபவரை பாசிஸ்ட் என்பது அபத்தத்தின் உச்சகட்டம்.

உண்மையில் உங்களுக்கும் விகடனுக்கும் தஸ்லிமாவை அடித்த கும்பலுக்கும் பெரிய வித்தியாசம் இல்லை."இதா பார் நம்ம அண்ணனை திட்டிட்டான்" என உசுப்பேத்தி விடும் வேலையைத்தான் மூவரும் செய்கிறீர்கள்.தஸ்லிமாவை தாக்கிய கும்பல் எந்த சாக்கு,போக்கும் சொல்லாமல் உள்ளத்து உணர்வுகளை வெளிப்படையாகவாவது காட்டியது.நீங்கள் 'பாமர தமிழனை அவமதித்துவிட்டார் பாசிஸ்ட் ஜெயமோகன்' என இதை இனரீதியான பிரச்சனையாக்கி விடுகிறீர்கள்.(நல்ல வேளை ஜெமோ பாப்பானாக இல்லாமல் போனதால் பிழைத்தார்)

//தான் ஒரு மிகப்பெரிய அறிவாளி என்ற கர்வத்தை சற்றும் கூச்சமில்லாமல் வெளிப்படுத்திக்கொள்பவர் ஜெயமோகன். 'தகுதி' இருப்பவர்கள் மட்டுமே தன்னை விமரிசிக்கவோ தன்னுடன் விவாதிக்கவோ செய்யலாம் என்று தொடர்ந்து சொல்லி வருபவர். இது மேட்டிமைத்தனம் இல்லையென்றால் வேறு எதுவுமே மேட்டிமைத்தனம் இல்லை//

ஒருத்தருடன் விவாதம் செய்ய கண்டிப்பாக ஒரு தகுதி வேண்டும்.விமர்சனம் செய்யவும் ஒரு தகுதி வேண்டும்.....பிளாகில் உலகில் இருக்கும் எல்லோரையும் விமர்சனம் செய்துகொண்டு திரியும் கும்பல் பிளாக் இருப்பதாலேயே விமர்சனம் செய்யும் தகுதி தனக்கு இருக்கிறது என நினைத்துக் கொண்டிருக்கிறது...அந்தோ பரிதாபம்.

நீங்கள் சுஜாதாவையும், சோவையும் திட்டும் திட்டுக்களை எல்லாம் ஒரு கட்டுரையாக எழுதி எதாவது தரமான இலக்கிய இதழுக்கு அனுப்புங்கள்.வெளியிட்டால் உங்களுக்கு விமர்சனம் செய்யும் தகுதி இருக்கிறதென்று அர்த்தம்.வெளிவரவில்லை என்றால் கிடையாது என்று அர்த்தம்.பிளாகில் எழுதுவதெல்லாம் தெருமுனையில் நின்று பேசுவதற்கு தான் சமம்.தெருமுனையில் விமர்சனம் செய்ய ஊமையாக இல்லாமல் இருப்பது ஒன்றுதான் தகுதி.டீக்கடை பெஞ்சில் பேசுவதெல்லாம் விமர்சனம் தான் என்றாலும் தகுதியான விமர்சனமாகாது.

//பாமர மக்களின் அறிவு, ரசனை போன்றவற்றை மேம்படுத்தும் நோக்கில் முற்போக்கு அறிவுஜீவிகள் அங்கதத்தை ஒரு கருவியாகப் பயன்படுத்துவது எனக்கு ஏற்புடையதே. ஆனால் இதை செய்பவர்கள் பாமரர்களின் நம்பிக்கைகளையும், அவர்கள் உயர்வாக கருதும் ஆளுமைகளையும் மட்டுமல்லாது மரபு வழிவந்த புனித பிம்பங்களையும் கட்டுடைக்கத் தயாரானவர்களாகவும் இருக்கவேண்டும//

1. 'முற்போக்கு அறிவுஜீவிகள்' மட்டும்தான் அங்கதத்தை பயன்படுத்த வேண்டும்

2. சிவாசியை கிண்டல் செய்தால், x ,Y,Z எல்லாம் கூட சேர்த்து கிண்டல் செய்ய வேண்டும்.

இதெல்லாம் நீங்கள் எழுத்தாளர்களுக்கு போடும் ரூல்ஸ், ரெகுலேசன் அன்ட் பத்துவாக்களா?

ஸ்ஸப்பா....இப்பவே கண்ணை கட்டுதே...

ஒருவேளை ஜெயமோகனுக்கு பைப்பு இருக்கு ஆனா பம்பு இல்லையோ என்னவோ?

அவர் சொல்வது சரிதான் என்று நினைத்துக்கொண்டிருந்த என்னை உங்கள் இடுகை கொஞ்சம் யோசிக்க வைக்கிறது.

ஜெகத்,
உங்கள் கட்டுரையும் சரி விஜயபுரி வீரன் பின்னூட்டமும் சரி பிரச்சனையை வெவ்வேறு கோணங்களில் அணுகுகின்றன.

இரண்டிலும் சிந்திக்க விஷயங்கள் உள்ளன.

என்னுடைய ஒரூ கேள்வி

மேட்டிமைத்தனம் எதையும் சாதித்ததிலையா? ஏன் மேட்டிமைத்தனம் மோசமானதெனக் கூறுகிறீர்கள்.

கீழே இருப்பவர்கள் எல்லோரும் அங்கே வரத்தான் எத்தனிக்கிரார்கள். Elitist thinking has also contributed greatly to human development, in fact might have done more than any other way of thinking.
(but through out human history only the 'elite' have been thinking big time.(others were not allowed) now we have great contributions from everyone)

நாங்க என்னத்த நினைக்க? நாங்க நினக்கிறதெல்லாம்தான் நீங்க எழுதிடறீங்களே :-) எல்லா இடுகைகளுக்கும் கூடவே ஒரு அறிஞரையும் பின்னூட்டமிடக் கூட்டி வந்திடுறீங்க:-)

ஜெயமோகனத்தனத்துக்கான சில பதில்களை ஆதவன் தீட்சண்யாவின் இந்த நேர்காணலிலும் காணலாம்.

அதிலிருந்து ஆதவன் தீட்சண்யாவின் ஒரே ஒரு கருத்தை மட்டும் இங்கு தருகிறேன்:

"ஒரு புத்தகம் 1200 பிரதிகள் அச்சிடப்பட்டால் அதைப் பற்றி 1200 பேர் பேசலாம். ஆனால் தமிழ்ச் சமூகம் ஏழு கோடி மக்களை கொண்டது. இந்த இலக்கியம் குறித்து தெரியாமலே பெரும்பகுதி சமூகம் இயங்கிக் கொண்டிருக்கிறது. அவர்களோடு எப்படிப் பொருந்துவது என்று தான் யோசிக்க வேண்டும். அதைவிட்டு விட்டு நான் மேதாவி, அறிவுஜீவி என்று தனியாக உட்கார்ந்து விட்டால் எந்த மாற்றமும் நடக்காது."


நன்றி - சொ. சங்கரபாண்டி

வாசித்து கருத்துத் தெரிவித்த நண்பர்கள் அனைவருக்கும் நன்றி.

விஜயபுரி வீரன்: உங்கள் 'டிக்ஷனரி விளக்க'த்துக்கு மட்டும் ஒரு சுருக்கமான பதில். பாசிஸ்ட் என்னும் சொல்லின் வரையறையை ஒரேயடியாக குறுக்கினால் இத்தாலியில் முசோலினியை பின்பற்றியவர்களை மட்டும் தான் குறிக்கும். ஆனால் அந்த சொல்லின் தற்போதைய வரையறை மிக விரிவானது. பாசிசம் என்பது அரசையோ, அதிகார அமைப்பையோ மட்டுமல்லாமல் அரசியல் சித்தாந்தத்தையும் குறிக்கும் என்பதைக் கூட அறியாதவர்கள் யாரும் என் பதிவை முதல் பத்திக்கு அப்பால் படிக்கமாட்டார்கள் என்று நினைத்திருந்தேன். ஏதாவது பதவியிலோ அதிகாரத்திலோ இருப்பவர்களை மட்டும் தான் பாசிஸ்ட் என்று சொல்லமுடியும் என்பது எனக்குப் புது தகவல். Cultural fascism என்பது பரந்த பொருளில் பயன்படுத்தப்படும் ஒரு சொற்றொடர்.

உங்கள் மற்ற கருத்துக்களை பற்றி ஏதும் சொல்ல விரும்பவில்லை. இணையத்தில் நிறைய 'திரி'புரசுந்தரர்களை பார்த்து அலுத்துவிட்டது.

சிறில்: Elites have indeed contributed greatly to human development, especially in the west. But the terms 'elitism' and 'elitist' usually have negative connotations. I have used the term elitism more in line with definition below (from Wikipedia). This kind of elitism is usually anti-democratic and often has contempt for the masses.

"Elitism is the belief or attitude that those individuals who are considered members of the elite are those whose views on a matter are to be taken the most seriously or carry the most weight; whose views and/or actions are most likely to be constructive to society as a whole; or whose extraordinary skills, abilities or wisdom render them especially fit to govern."

//ஆமாம், லியோனியை பற்றி இப்படியா சொல்லியிருக்கிறார். நான் லியோனியின் பரம விசிறி!

என்ன மட்டமான ரசனை எனக்கு...//

ரிப்பீட்டு:-))))

//ஜெயமோகனை படித்ததில்லை.//

நானும்தான் படித்ததில்லை. வாய்ப்புக் கிடைக்கலை

/ஆனா உங்கள் எதிர்வினை மிக அருமை..ஜெ.மோ கண்டிப்பாக படிக்க வேண்டிய ஒன்று..மின்னஞ்சல் செய்து பாருங்களேன்../

மிக முக்கியம். அவருடைய அங்கீகாரம் உங்கள் எதிர்வினைக்குக் கட்டாயம் வேண்டும். அல்லது, அது தரமான எதிர்வினையே அல்ல. பேசாமல், அவருக்கென்று ஒரு பதிவினை நீங்களே தொடங்கியோ தொடக்கியோ வைத்துவிடுங்களேன். இப்போதெல்லாம், வலறத்துடிக்கும் படையலாலிகள் இப்படியாகத்தான் அங்கீகாரம் பெற்றுக்கொல்வதாகச் சேதி :-)

இந்த பதிவுக்கு நன்றி!

கீழே உள்ள பின்னூட்டத்தில் ஒரு பெயரை நீக்கியிருக்கிறேன். மன்னிக்கவும்.

********************
விஜயபுரி கோழை has left a new comment on your post "நகைச்சுவைக்குள் பதுங்கும் மேட்டிமைத்தனம்":

விஜயபுரி வீரன் என்ற பெயரில் பின்னூட்டம் போட்டது வேறு யாருமல்ல. தமிழ் வலையுலக இலக்கிய புரவலர் ________.

"அறிவார்ந்த சிந்தனைகளுக்கு எதிரான போக்கும், எல்லாவற்றையும் எளிமைப்படுத்துவதும், சராசரித்தனத்தை ஊக்குவிக்கும் போக்கும் ஒரு சமூகத்துக்கு கேடானது என்றே நம்புகிறேன். "

ஐயா, இதை தங்களுடைய வலைப்பதிவிற்குப் பொருத்திப்
பார்க்கலாமா.

ஜெயமோகன் மகாபாரதத்தை, பெரியபுராணத்தை இலக்கியம்
என்ற வகையில் பார்க்கிறார்.
மத நூல்கள் என்பதற்காக அவற்றை
அவஎ உயர்த்திப் பிடிக்கவில்லை.
கீதை இடைசெருகலா என்ற கேள்விக்கு கொடுத்துள்ள பதிலைப்
படிக்கவும்.மிகவும் நுட்பமான
பார்வை அது.

கலை குறித்த பெரியாரின் கருத்துக்கள்
மிகவும் தட்டையானவை.ஞான மரபுகளைக் குறித்து ஜெயமோகன்
எழுதியுள்ளதில் எங்காவது பழமை,
பழமை என்பதற்காகவே ஏற்றுக்
கொள்ளத்தக்கது என்று எழுதியிருக்கிறாரா.

பெரியாரிய கண்ணோட்டத்தில்
பழமையிலிருந்து கற்க/பெற
எதுவுமில்லை. இதை ஏற்பது
கடினம், ஏனெனில் இங்கு இருந்தவர்கள் மூடர்கள், வெள்ளையர்ள்தான் மேலானவர்கள்
என்ற காலனிய அணுகுமுறைதான்
அவரிடம் இருந்தது. ஜெயமோகன்
பெரியாரை நிராகரிப்பதில் சில
நியாயங்கள் உள்ளன.

என்னால் உங்கள் வாதங்களையும் ஏற்க முடியவில்லை.செயமோகன்
எழுதியதையும் ஏற்க முடியவில்லை.
ஏனென்றால் இரண்டும் இன்னொரு தரப்புடன் உரையாடல் தேவை
என்பதை புறக்கணிக்கின்றன.
பெரும்பான்மைவாதமும், மேட்டிமைத்தனமும்
தவிர்க்கப்பட வேண்டியவை.
லியோனியும் பட்டிமன்றமும்,
ஜெயமோகனின் எழுத்தும்
அவற்றின் உள்ளடக்க
அடிப்படையில் மதிப்பிடப்
படவேண்டியவை.

திரு. ஜமாலன் refer செய்து உங்கள் பக்கத்திற்கு வந்து இக்கட்டுரையை வாசித்தேன்.

நல்ல பதிவு.

இதைவிடவும் "எனது வாசிப்பில் ஜெயமோகன் 2" கூர்மையான அவதானிப்புகள் உள்ள கட்டுரையாகப் படுகிறது.

நன்றிகள்.

Mr. விஜயபுரி வீரன்
//
2. சிவாசியை கிண்டல் செய்தால், x ,Y,Z எல்லாம் கூட சேர்த்து கிண்டல் செய்ய வேண்டும்.
//

இதே வாதத்தை துக்ளக், வேறு விதமாக கையாண்டுள்ளது :

முதல்வர், "இறந்தவர் தமிழர், நானும் தமிழன். அதனால் அஞ்சலி' என்று விளக்கம் அளித்திருக்கிறார். ஆட்டோ சங்கர், வீரப்பன் போன்றவர்கள் எல்லாம் கூட தமிழர்கள்தான். அவர்களுடைய மரணங்களுக்கு முதல்வர் ஏன் கண்ணீர் அஞ்சலி செலுத்தவில்லை? (துக்ளக், நவம்பர் 2007)

உங்கள் பாணியில் சொல்வதென்றால், ஸ்ஸப்பா இப்பவே கண்ணை கட்டுதே!

சிறில் அலெக்ஸ் said...

//என்னுடைய ஒரூ கேள்வி

மேட்டிமைத்தனம் எதையும் சாதித்ததிலையா? ஏன் மேட்டிமைத்தனம் மோசமானதெனக் கூறுகிறீர்கள்.

கீழே இருப்பவர்கள் எல்லோரும் அங்கே வரத்தான் எத்தனிக்கிரார்கள்.//

நண்பர் ஜெகத் ஆங்கிலத்திற்கு பதில கூறிவிட்டார். பிரச்சனைகள்:
1. மேட்டிமைத்தனம் என்பதன் அடிப்படை ஒரு குழவினர் அல்லது ஒரு மக்கள் கூட்டத்தை கீழானவர்களாக வைத்துக் கொள்வதை தனது அடிப்படை தர்க்கமாக கொண்டுள்ளது.

2. மேட்டிமைத்தனம் விளிம்பு நிலை மனிதர்களால் எந்த காலத்திலும் அடைய முடியாத ஒன்றே. அவர்கள் அதை அடைந்துவிட்டால் அது மேட்டிமைத்தனம் அல்ல.

3. மேட்டிமைத்தனம் என்பது ஒரு அரசியல் வகைப்பட்ட சொல்லாடல். அதற்கு உலகெங்கிலும் பொதுவான ஒரு வகை இலக்கணம் இல்லை.

4. மேட்டிமைத்தனம் என்பதன் நீட்சி தூய்மைவாதம் மற்றும் பாசிசத்திற்கே இட்டச் செல்லும்.

ஜெகத்தின் விளக்கம் கீழே ஏன் மெட்டிமைத்தனம் வெகுமக்களுக்கு விரோதமானது என்பதற்கு..

//இந்தியச் சூழலில் கடந்த காலங்களில் ஞானம் என்பது பொத்திப் பாதுகாக்க வேண்டிய ஒன்றாகவே பார்க்கப்பட்டு வந்திருக்கிறது. 'தகுதி' உள்ள சிலரைத் தவிர்த்து ஏனைய சாமானியர்களை ஞானம் சென்றடைந்து மலிந்துவிடாமல் தடுப்பதற்காக போடப்பட்ட எத்தனையோ வேலிகளை சுட்டமுடியும். //
ஜெகத் (ஜெயமோகனாயம் பாகம்:2)

உங்களிடம் ஒரு பார்முலாவை வைத்துக் கொண்டு வார்த்தைகளை தூவி லாவகமாக
எழுத முடிகிறது. அதை எத்தனை
நாள்தான் எத்தனை முறைதான்
கையாள்வீர்கள்.நீங்கள் விமர்சிப்பவர்கள் அதை பொருட்படுத்துவதாகவே தெரியவில்லை. அவர்கள்
அவர்கள் வேலையை கவனித்துக்
கொணடிருக்கிறார்கள்.வலைப்பதிவர்,
வாசகர்களில் ஒரு கூட்டம் உங்கள்
எழுத்துக்களை, உங்கள் கருத்துக்களை
ஏற்பதால் ரசிக்கிறது, பாராட்டுகிறது.
இப்படி உங்கள் பதிவுகள் ஒரு வட்டத்திற்குள் சுருங்கிறது போல் தெரிகிறது.

பாமர மக்களின் ரசனை மீதான விமர்சனம் என உங்களுக்குப் படுகிறது.. எனக்கோ அவர் அந்தக் கால சினிமாக்களை விமர்சிப்பதாகப் படுகிறது.

சீரியசான சீனில் சிவாஜி பாடுகிறார் எனச் சொன்னால் அது அவரை குறை சொல்வதாகுமா? சிவாஜி போய் இந்த சீனில் பாட்டு வைத்தால் நல்லாயிருக்கும் எனச் சொன்னாரா?

உண்மையில் பாமரர்களின் ரசனை வாயிலாகவே விமர்சனத்தை முன்வைக்கிறார். அவர் சொல்லியிருக்கும் பலதும் ஏற்கனவே சிவாஜி குறித்து எம்.ஜி.ஆர் ரசிகர்களும் அவர் குறித்து இவர் ரசிகர்களும் மாறி மாறி சொல்லக் கூடிய பழைய ஜோக்குகள்.

//ஜெயமோகன் மகாபாரதத்தை, பெரியபுராணத்தை இலக்கியம் என்ற வகையில் பார்க்கிறார். மத நூல்கள் என்பதற்காக அவற்றை அவர் உயர்த்திப் பிடிக்கவில்லை.//

இது உண்மைதான். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவிதமான புனிதங்கள். பலருக்கு மதநம்பிக்கைகளை நக்கல் செய்தால் கோபம் வருகிறது. ஜெயமோகனுக்கு 'ஞான மரபின்' மீது அந்த மரபை நிராகரிப்பவர்கள் செய்யும் நக்கல் கோபத்தை ஏற்படுத்துகிறது. அவரது பல சமூக / அரசியல் கருத்துக்கள் இந்துத்துவ கொள்கைகளை ஒட்டியதாகவே இருந்தாலும் அவர் தீவிர மத நம்பிக்கையாளர் அல்ல என்றே நினைக்கிறேன். அப்படி இருக்கவேண்டிய தேவையும் இல்லை. சவர்க்கரும் ஜின்னாவும் நாத்திகர்கள்.

//பெரியாரிய கண்ணோட்டத்தில் பழமையிலிருந்து கற்க/பெற எதுவுமில்லை. இதை ஏற்பது கடினம், ஏனெனில் இங்கு இருந்தவர்கள் மூடர்கள், வெள்ளையர்ள்தான் மேலானவர்கள் என்ற காலனிய அணுகுமுறைதான் அவரிடம் இருந்தது. ஜெயமோகன் பெரியாரை நிராகரிப்பதில் சில நியாயங்கள் உள்ளன.//

பெரியார் மரபை நிராகரித்தார் என்பதைப் பெரியாரின் மிகப்பெரிய குறையாக ஜெயமோகன் தொடர்ந்து சொல்லி வருகிறார். பெரியார் மீதான தன் வெறுப்புக்கான உண்மையானக் காரணங்களை சொல்லமுடியாத நிலையில் இந்த ஒப்புக்குச் சப்பாணி குற்றச்சாட்டை முன்வைக்கிறார் அவர். மரபை நிராகரித்தது பெரியார் மட்டும் அல்ல. சுந்தர ராமசாமி மரபையும் தத்துவத்தையும் குறித்து இம்மி கூட தெரியாமலே அவற்றை நிராகரித்தவர் என்று ஜெயமோகன் எழுதியிருக்கிறார். அப்படிப்பட்ட சுந்தர ராமசாமியுடன் தனிப்பட்ட காரணங்களுக்காக பிணக்கு ஏற்படும் வரை அவரை தலையில் தூக்கிவைத்துக் கொண்டாடியதும் இதே ஜெயமோகன் தான்.

//உண்மையில் பாமரர்களின் ரசனை வாயிலாகவே விமர்சனத்தை முன்வைக்கிறார்.//

சிறில், அது ஒரு வழமையான உத்தி. கொச்சையாகவோ பச்சையாகவோ சொன்னால் மட்டுமே ரசிக்கத்தக்க சில நக்கல்களை கட்டுரையில் நேரடியாக சொல்லி தன் பிம்பத்துக்கு கேடு ஏற்படுத்தாமல், யாராவது 'பாமரர்'களின் வாயில் போடும் வழக்கத்தை ஜெயமோகன் பலமுறைக் கையாளக் கண்டிருக்கிறேன். எடுத்துக்காட்டாக இதைப் பாருங்கள்:

"சில வருடங்களுக்கு முன்பு நாகர்கோவிலில் ஒரு தி க கூட்டம் நடந்தது. அதில் ஈவேராவின் ஒரு மேற்கோளை சொல்லிப் பேசினார் ஒருவர். "சரஸ்வதி நாவில் இருக்கிறாள் என்றால் அவள் மலம் கழிப்பது எங்கே? ". நான் போன ஆட்டோ ஓட்டுநரிடம் அவரது கருத்தை கேட்டேன். "இவர்கள் இதயத்தில் குடிகொண்டிருக்கும் அண்ணாவுக்கு அங்கே என்ன கக்கூஸா கட்டி வைத்திருக்கிறார்கள்?" என்றார் அவர். "சரஸ்வதின்னா ஒரு சக்தி சார். வீணை நாதத்திலேயும் பாட்டோட அழகிலேயும் அது இருக்குது. நம் நாக்கிலும்புத்தியிலும் அது வரணும்னு ஆசப்படறோம். கும்பிடற வசதிக்காக அத அம்மான்னு சொல்லிக்கிறோம்.வேற மாதிரியும் சொல்லலாம்... அவரு பாவம் வயசானவரு .படிச்சவர் கூட கெடயாது. ஏதோசொல்லிட்டார். இவரு எம்மே படிச்சவர்தானே, இவருக்கு எங்கேபோச்சு சார் புத்தி?" இதுதான் தமிழ்நாட்டில் இன்று ஈவேராவின் இடம்."

பொதுமக்களின் பேச்சில் எம்.ஜி.ஆரும் சிவாஜியும் இதைவிட மோசமாகக் கிண்டலடிக்கப்படுவதை நானும் பார்த்திருக்கிறேன். நடிகர்கள், அரசியல் தலைவர்கள், ஏன் கடவுள்களைப் பற்றிக் கூட மிக ஆபாசமான, கொச்சையான நகைச்சுவைகளைக் கேட்டிருக்கிறேன். ரசித்துமிருக்கிறேன். ஜெயமோகன் எம்.ஜி.ஆரைக் குறித்து தீப்பொறி ஆறுமுகத்தின் பைப்பு-பம்பு வசனத்தை மேற்கோள் காட்டி எழுதியிருப்பதைப் போல எந்த பிரபல மனிதரைக் குறித்தும் எழுதமுடியும். ஆனால் ஜெயமோகன் தான் உயர்வாக மதிப்பவர்களையும் இதே தரத்துக்கு இறங்கி அங்கதம் செய்வாரா என்பது சந்தேகமே.

ஜமாலன்: உங்கள் விளக்கத்துக்கும், ஜெ.மோ பற்றிய என் பழைய பதிவுகளில் உங்கள் விரிவான கருத்துக்களுக்கும் நன்றி. அவற்றை மீண்டும் ஒருமுறை நிதானமாக படிக்கவேண்டும் என்றிருக்கிறேன்.

//ஆனால் ஜெயமோகன் தான் உயர்வாக மதிப்பவர்களையும் இதே தரத்துக்கு இறங்கி அங்கதம் செய்வாரா என்பது சந்தேகமே.
//
நீங்கள் இதேபோல அலசலை மற்ற எழுத்தாளர்கள் மீது ஏன் வைக்கவில்லை என நான் கேள்வி கேட்க முடியுமா?

இதை அவரின் அரசியல் என்றே வைத்துக் கொண்டாலும் அதில் என்ன தவறு இருக்கிரது. எல்லோருக்கும் விறுப்பு வெறுப்பு உண்டு. இப்படியெல்லாம் ஆர அமர்ந்து யோசித்து எழுத ஆரம்பித்தால் ஒருபய பதிவெழுத முடியாது.

:)

சிறில்,

மேலதிகாரியோ அல்லது வேறு யாரோ கணினித்திரையை பார்க்கிறார்களா என்று ஒரு கண்ணால் நோட்டம் விட்டபடி மறு கண்ணால் வேகவேகமாக "இதன் மூலம் நீர் சொல்லவரும் கருத்து?" என்ற நக்கீரத் தோரணையுடன் பதிவு படிப்பவர்கள் நீங்கள் வெட்டி இட்டிருக்கும் ஒற்றை வரியை இரண்டு மணிநேரம் மெனக்கெட்டு தட்டச்சிய இந்தப் பதிவின் மையக் கருத்தாக எடுத்துக்கொள்ளும் வாய்ப்பு இருப்பதால் கொஞ்சம் தெளிவித்துவிடுகிறேன்.

ஜெ.மோ எம்.ஜி.ஆரையும் சிவாஜியையும் நக்கல் செய்ததில் எனக்கு வருத்தமா?

இல்லை.

அவர் தன் மதிப்புக்குரியவர்களையும் அதே மாதிரி நக்கல் செய்யவில்லை என்பது தான் என் பிரச்சனையா?

இல்லை.

அப்புறம் என்ன பிரச்சனை?

தான் எழுதியதை நியாயப்படுத்துவதற்காக அவர் முன்வைக்கும் வாதங்கள் போலித்தனமானவை, அவரது முந்தைய செயல்பாடுகளுடன் சற்றும் பொருந்தாதவை என்பதை வெளிப்படுத்துவற்குத் தான் இந்த பதிவை எழுதினேன். புனித பிம்பங்களை அங்கதம் மூலம் உடைப்பது பற்றியெல்லாம் அவர் வகுப்பெடுப்பதால் தான் 'பாமர'த் தமிழர்களின் புனித பிம்பங்களான எம்.ஜி.ஆரையும் சிவாஜியையும் மட்டுமல்லாது அவர் உண்மையிலேயே புனிதமாக மதிக்கும் பிம்பங்களையும் இதே பைப்பு-இருக்கு-பம்பு-இல்லை தரத்துக்கு இறங்கி நக்கலடிக்க முடியுமா என்ற rhetorical கேள்வியை எழுப்புகிறேன்.

(எழுதவேண்டாம் என்று நினைத்து கை அரித்துக் கொண்டிருந்ததால் எழுதுவது)

//இப்படியெல்லாம் ஆர அமர்ந்து யோசித்து எழுத ஆரம்பித்தால் ஒருபய பதிவெழுத முடியாது.//

அப்படியா? :) "கத்தோலிக்கமதம் இன்றும் பெண்ணடிமைக்கருத்துகளின் தொகையாகவே உள்ளது" என்று ஜெ.மோ போகிறபோக்கில் புறந்தள்ளிவிட்டுப் போனால் நீங்கள் ஏன் அந்த ஒரு வரிக்காக ஆற அமர யோசித்து scrollbar கண்ணுக்குத் தெரியாத நீளத்துக்கு பதிவு எழுதுகிறீர்கள்?

"வெறுப்புடனும், மனத்தடைகளுடனும், முன்முடிவுகளுடனும் அணுகினால் முதலில் நம் வாதங்கள் கேட்கப்படமாட்டாது" என்ற புரிதலுடன் எழுதி ஜெயமோகனிடம் பாராட்டு பெற்றிருக்கிறீர்கள். இதே கட்டுரையை நக்கல் தொனியிலோ, எரிச்சலுடனோ எழுதியிருந்தால் அவர் இதை ஒதுக்கியிருப்பார் என்று நீங்கள் எழுதியிருந்ததைப் படித்தேன். அவரிடம் அங்கீகாரம் வேண்டுவோருக்குப் பயனுள்ள அறிவுரை தான்.

சரி, நேரமும் ஆர்வமும் இருந்தால் 'கீதை வருணாசிரமத்தை முன்வைக்கும் நூலா' என்பதற்கான ஜெயமோகனின் பதிலை இணையத்தில் படித்துப்பாருங்கள். அதில் மேலே நீங்கள் சொல்லியிருக்கும் நன்னடத்தை விதிகள் பின்பற்றப்பட்டிருக்கிறதா என்று பாருங்கள். பெரியார் மீதான வசைகள் ("தனக்கு சற்றும் தெரியாத விஷயங்களை வசைபாட தனக்கு உரிமை இருப்பதாக எண்ணியவர் ஈ.வே.ரா." "அவரது இயக்கம் வலுவான ஒரு நூலைக்கூட உருவாக்க முடியாத மலட்டு இயக்கம்") மற்றும் வருணம்/சாதி குறித்து தனக்குப் பிடிக்காத கருத்துக்களைச் சொன்ன இந்தியவியலாளர்களை ஏற்றுக்கொள்வோரை வெள்ளையன் கருத்தை உணடு கக்குபவர்கள் என்று திட்டுவது எல்லாம் அந்த விவாதத்துக்கு தேவைதானா என்று பாருங்கள். அதிலுள்ள polemics எல்லாவற்றையும் தவிர்த்துவிட்டு பார்த்தீர்களானால் கீதை வருணாசிரமக்கருத்துக்களின் தொகை அல்ல என்று நிறுவுவதற்கு அவர் பயன்படுத்தியிருக்கும் தர்க்க வழிமுறைகளை அப்படியே இம்மி கூட பிசகாமல் பயன்படுத்தி கத்தோலிக்கமதம் பெண்ணடிமைக்கருத்துகளின் தொகையென்ற அவரது கருத்தை நீங்கள் துவைத்து உலர்த்தியிருக்கமுடியும். ஆனால் அந்தக் கட்டுரைக்கு அவரது பாராட்டுக் கிடைத்திருக்காது.

ஜெகத், இன்றுதான் இக்கட்டுரையை வாசித்தேன்.
ஜெயமோகனின் 'நகைச்சுவையும்' உங்களது கேள்விகளும் இருவரது அரசியல் தளங்களையும் பிரதிபலிப்பதாகவே இருக்கிறது.

இந்தப்பதிவுக்கு நன்றி!

இந்த பதிவில் சில பின்னூட்டங்கள் ரசிக்கத்தக்கன.

சிலர் ஜெயமோகன் இதைப் படித்து அங்கீகரிக்கவேண்டும் என்பதிலும் இதைப் போன்ற பதிவுகள் உதாசீனப்படுத்த வேண்டிய ரோட்டோர புலம்பல்கள் என்பதிலும் மரபின் 'தீண்டாமையும்' அதே உத்தியுமே தெரிகிறது.

நவீன ஜெயகாந்தனைப்பற்றி பற்றி நன்றாக் எழுதி இருக்கிறீர்கள்? ;)

v'puri veeran,
out of curiosity , looked up meaning of fasism in the link mentioned by you. and at the bottom end of the page found thisnote: "Note: Today, the term fascist is used loosely to refer to military dictatorships, as well as governments or individuals that profess racism and that act in an arbitrary, high-handed manner. nunipul meithal is gross when u bring it to the public and serve as shrill campaigning.

உங்கள் பதில்களை இப்பத்தான் பார்த்தேன்.

சொல்வதற்கு அதிகமில்லை. என்னைப் பொருத்தவரை எழுத்தும் எழுத்தாளனும் ஒன்றாயிருக்கத் தேவையில்லை. ஜெ.மோ இதை மறுக்கிறார். :)

நான் 'பதிவெழுத முடியாது' எனச் சொல்ல வந்தது என்னென்ன கேள்விகள் எழும் என யோசித்துக்கொண்டிருந்தால் ஒருவரால் எழுத முடியாது என்பதத முன்வைத்தே.

இதை எழுதினா அதப்பத்தி செய்வியாண்ணு கேள்வி வருமே என்றெல்லாம் யோசித்துக்கொண்டிருக்க முடியாது.

ஜெ.மோவை அதிகம் படித்தவனில்லை, அவரின் அரசியல் நிலைப்பாடுகளை அறிந்தவனுமில்லை என்கிற வகையில் எந்த முன்முடிவுகளுமின்றி அவரின் எழுத்தை ரசிக்க முடிகிறது. Ignorance is Bliss indeed. :)

நல்ல கட்டுரை. நீங்கள் ஜெயமோகனை கட்டுடைக்க முயன்றிருக்கிறீர்கள். இதே போல் எல்லா எழுத்தாளர்களையும் கட்டுடைப்பீர்களா? அது முடியாது, நடக்காது. உங்களுக்கு தோன்றுபவரைப் பற்றித்தான் எழுதுவீர்கள். ஜெயமோகனும் அப்படித்தானே?

வைரமுத்துவின் மீதான கருத்து அதீதமாகத்தான் படுகிறது. அதே சமயம் லியோனியின் ‘புலிவேசம்’ உண்மையிலேயே ரசிக்கும்படியாக இருக்கிறது. இந்த எதிர்மறை விமர்சனங்கள் எல்லாம் வரும் முன்னர் சிவாஜி,எம்.ஜி.ஆர். குறித்த அக்கட்டுரையை படித்து விழுந்து விழுந்து சிரித்தேன். இதே போல் நாட்டியப்பேரொளி பற்றி அவரது மகனும் மகளும் பேசிக்கொண்டதையும் எழுதியிருந்தார். இன்று எல்லா தொலைக்காட்சிகளிலும் நகைச்சுவை நிகழ்ச்சிகளிலும் எம்.ஜி.ஆர்.,சிவாஜி, சரோஜாதேவி, விஜயகாந்த், டி.ராஜேந்தர் போன்றோர் நொடிக்கொடி அங்கதம் செய்யப்படுகின்றனர். அதையே ஒரு எழுத்தாளர் செய்தால் ஏன் இப்படி உணர்ச்சிவசப் படுகிறீர்கள் என தெரியவில்லை.

அங்கவை/சங்கவை- சங்கரின் கட்டி வந்த மூளையிலிருந்துதான் வந்திருக்க வேண்டும். ஆனால் வசனகர்த்தாவாக சுஜாதாவிற்கும் தார்மீக பொறுப்புண்டு என சுஜாதாவின் எந்த ஒரு தீவிர விசிறியும் ஒப்புக்கொள்வான். நீங்களே கூட இங்கு சாலமன் பாப்பையாவின் தார்மீக பொறுப்பு குறித்து கூறவில்லை. ஏனெனில் அவரை கட்டுடைக்கும் அவசியம் உங்களுக்கு இல்லை....