பே-இமானித்தனம்

கையில் கிடைக்கும் காகிதத்தை எல்லாம் - அது கடலை பொதிந்து வந்த காகிதமானாலும் - ஒரு எழுத்துவிடாமல் படிக்கும் பழக்கம் எனக்கு ஒன்பது அல்லது பத்து வயதிலேயே தொற்றிவிட்டது. அந்நாட்களில் தமிழ் நாளிதழ்களில் ஏதாவது ஒரு அரசியல்வாதி - காளிமுத்துவோ, ஜெயலலிதாவோ, வைக்கோவோ - எதிரணியில் இருக்கும் மற்றொரு அரசியல்வாதியை "தமிழகத்து கோயபெல்ஸ்" அல்லது "இந்தியாவின் கோயபெல்ஸ்" என்ற அடைமொழியுடன் விளித்து பேசியதாகச் செய்திகள் இடம்பெற்றிருக்கும். அது ஏதோ ஒரு வசை என்று புரிந்தாலும் கோயபெல்ஸ் என்றால் என்ன என்று அப்போது குழம்பியது நினைவிருக்கிறது. இந்த கோயபெல்ஸ் தான் ஒரு பெரிய பொய்யைச் சொல்லி பின்பு அதிலிருந்து பின்வாங்காமல் அதையே திரும்பத் திரும்பச் சொல்லும் உத்தியை அறிமுகப்படுத்தியவர் என்று பின்னாளில் தெரிந்துக்கொண்டேன். கடந்த இரு வாரங்களாக தமிழ் வலைப்பதிவுகளில் இந்த உத்தியின் மிகச்சிறந்த செய்முறை விளக்கம் ஒன்றைக் காணும் பேறு கிடைத்திருக்கிறது.

*****

பத்து நாட்களுக்கு முன் தமிழ்மணம் நிர்வாகம் வெளியிட்டிருந்த ஒரு அறிவிப்பைப் படித்தேன். தமிழ்மண நிர்வாகத்திடம் சில விளக்கங்களை கேட்டிருந்த ஒரு பதிவருக்கு அதில் பதில் அளித்திருந்தார்கள். மேற்படி பதிவர் எழுதியிருந்த சில வரிகளை அந்த அறிவிப்பில் மேற்கோள் காட்டியிருந்தார்கள். அதை இங்கே இடுகிறேன்:

"தமிழ்மண கருவிப்பட்டை இருக்கும்போது நமது ஒவ்வொரு செயலும் தமிழ்மணத்தால் பதிவு செய்யப்படும் வாய்ப்பிருக்கின்றது. இந்த தகவல்கள் யார் யாருடன் பகிர்ந்து கொள்ளப்படுகின்றன, who is privy to all these details, யாரெல்லாம் டெக்னிக்கல் விஷயங்களை பார்த்துக் கொள்கிறார்கள் என்பதைத் தெளிவுபடுத்துவது நல்லது."

இதில் இரண்டு கேள்விகள் இருக்கின்றன.

கேள்வி 1: (பதிவர்கள் பற்றிய தகவல்கள்) யார் யாருடன் பகிர்ந்து கொள்ளப்படுகின்றன?

கேள்வி 2: (தமிழ்மணத்தை நிர்வகிப்பவர்களில்) யாரெல்லாம் டெக்னிக்கல் விஷயங்களை பார்த்துக் கொள்கிறார்கள்?

இந்த இரண்டு கேள்விகளுக்கும் தமிழ்மணம் நிர்வாகம் அந்த அறிவிப்பில் ஒன்றன்பின் ஒன்றாகப் பதில் சொல்லியிருந்தது. தினத்தந்தி பாணியில் ஒவ்வொன்றுக்கும் தனித் தலைப்பு போட்டுவிடுகிறேன்.

முதல் கேள்விக்கு பதில்

பதிவர்கள் பற்றிய தகவல்கள் யார் யாருடன் பகிர்ந்து கொள்ளப்படுகின்றன என்ற முதல் கேள்விக்கான பதில்:

“Policy of Privacy பக்கத்தில் பதிவர்களின் அந்தரங்கத் தகவல் சேகரிப்பது பற்றியும், அவை முறையான விண்ணப்பமூடே சட்டம் கொணரக் கேட்டாலன்றி, எந்நிலையிலுங்கூட, எவருடனும் பகிர்ந்துகொள்ளப்படுவதில்லை என்பதும் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது."

ஆங்கிலத்திலும் சொல்லியிருக்கிறார்கள்:

"Specific information such as name, IP address, email address, or other contact information will never be shared with anyone unless ordered by a court of law.”

இரண்டாவது கேள்விக்கு பதில்

தமிழ்மணத்தை நிர்வகிப்பவர்களில் யாரெல்லாம் டெக்னிக்கல் விஷயங்களை பார்த்துக் கொள்கிறார்கள் என்ற இரண்டாவது கேள்விக்கான பதில்:

"இந்நிறுவனத்தினை நடத்துகின்றவர்களின் பெயர்கள் இத்தளத்தில் ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளன. இதற்குமேல் ஒரு பதிவருக்குத் தமிழ்மணத்தின் உள்ளமைப்பு, நிர்வாகம் தொடர்பாக எவ்விதமான மேலதிகத்தகவலும் தேவையில்லை, அப்படியாகத் தரவேண்டிய அவசியமும் எமக்கில்லை என்று கருதுகிறோம். தமிழ்மணத்தின் திட்டங்கள் நிர்வாகக் குழுவுக்குள் நாட்டின் சட்டங்களுக்கும் நிறுவன விதிகளுக்கும் அமைய விவாதிக்கப்பட்டு , முடிவுகள் எடுக்கப்பட்டுச் செயற்படுத்தப்படுகின்றன. எமது செயற்பாடுகள் குறித்து தார்மீகக்காரணங்களுக்காக நாமே விரும்பினால்மட்டுமே தகவல்களைத் தாமாகவே எமது விதிமுறைகளுக்கமைய வந்திணைந்து கொள்ளும் பதிவர்களுக்குத் தரமுடியும்."

*****

நான் தமிழ்ப் புலவன் இல்லை. என் தமிழ் படிப்பு பதினாறு வருடங்களுக்கு முன்பு பள்ளிப்படிப்போடு முடிந்துவிட்டது. இருப்பினும் மேலே உள்ளதைப் புரிந்துக்கொள்வதில் எனக்கு கடுகளவு கூட பிரச்சனை இல்லை. பதிவர்களின் அந்தரங்கத் தகவல்களை முறையாக நீதிமன்ற உத்தரவு மூலம் கேட்டால் தவிர எந்நிலையிலும் எவருடனும் பகிர்ந்துக்கொள்ள மாட்டோம் என்று தெளிவாகச் சொல்லியிருக்கிறார்கள். நிர்வாகிகளின் செயற்பாடுகள் பற்றிய தகவல்களை அவர்கள் விரும்பினால் மட்டுமே தார்மீகக் காரணங்களுக்காக பதிவர்களுக்கு தரமுடியும் என்றும் சொல்லியிருக்கிறார்கள். இரண்டு வெவ்வேறு கேள்விகளுக்கான பதில்கள் அவை.

இன்னும் ஒரு ஐந்து வருடங்கள் கழித்து என் மகன் கூட இதை வாசித்து சரியாகப் புரிந்துக்கொள்வான் என்ற நம்பிக்கை இருக்கிறது. (இப்போது அவனுக்கு வயது இரண்டு.) ஆனால் தமிழில் வலைப்பதிவு எழுதும் அளவுக்குத் தமிழ் தெரிந்த சிலருக்கு இது தலைகீழாக அல்லது கால்மேலாக புரிந்திருக்கிறது. இந்த அறிவிப்பு வந்த அன்றே ஒரு தவறான தகவல் அல்லது பொய் உருவாக்கப்பட்டது. பதிவர்களின் அந்தரங்கத் தகவல்களை தார்மீகக் காரணங்களுக்காகத் தமிழ்மணம் நிர்வாகம் மற்றவர்களுக்கு அளிக்கும் என்று சொல்லியிருக்கிறார்கள் என்ற தகவல் பரவியது / பரப்பப்பட்டது. கடந்தப் பத்து நாட்களாக குறைந்தது ஒரு இருபது பதிவுகளிலாவது இந்த தவறான தகவல் / பொய் எழுதப்பட்டிருப்பதைப் பார்த்திருப்பேன். இப்படி எழுதியவர்களை இரண்டு பிரிவுகளாகப் பிரிக்கிறேன்.

பிரிவு 1: உண்மையிலேயே தவறாகப் புரிந்துக்கொண்டவர்கள்.
பிரிவு 2: சரியாகப் புரிந்துக்கொண்டு வேண்டுமென்றே பொய்யானத் தகவலைப் பரப்புபவர்கள்.

முதல் பிரிவில் இருப்பவர்களைக் குறிக்க பொருத்தமான ஒரு சொல் இருந்தால் மேற்கொண்டு விளக்குவதற்கு வசதியாக இருக்கும். ஆனால் அப்படி ஒரு சொல்லை மெனக்கெட்டுக் கண்டுபிடிப்பதற்கான நேரம் கைவசம் இல்லாததால் இப்போதைய வசதிக்காக அவர்களைக் குறிக்க இங்கிலீஷ்காரர்கள் என்ற சொல்லைப் பயன்படுத்துகிறேன். இங்கிலீஷ்காரர்களுக்கு மேலே தமிழில் எழுதப்பட்டிருப்பது புரியாமல் போனது மற்றும் தமிழ்மணம் அறிவிப்புகளில் பயன்படுத்தப்படும் மொழி/நடை மீது அவர்களுக்கு இருக்கும் இனம்தெரியாத வெறுப்பு ஆகியவற்றின் பின்னணியில் உள்ள சமூக காரணங்களை புரிந்துக்கொள்வது நல்லது. இது எந்த விதத்திலும் அவர்களைக் குறை சொல்வதாகாது. உண்மையில் கடந்த பல பத்தாண்டுகளாக தமிழ்நாட்டில் நிலவும் விசித்திரமான ஒரு கலாச்சாரப் போக்கு ஏற்படுத்திய பாதிப்புக் காரணமாகவே அவர்கள் அவ்வாறு நடந்துக்கொள்கிறார்கள்.

இன்று கல்லூரிப் படிப்பு முடித்து நல்ல வேலையில் இருக்கும் ஒரு சராசரி தமிழக இளைஞனின் தமிழ் சொற்தொகை (vocabulary) மிகக் குறைவானது. அந்த சொற்தொகையை வைத்து அவனால் எதைக் குறித்தும் - குறிப்பாக இலக்கியம், அறிவியல், சட்டம், தத்துவம் போன்றவற்றைக் குறித்து - ஆழமாக பேசவோ விவாதிக்கவோ முடியாது. ஐஸ்வர்யாவின் திருமணம், ஜூனியர் விகடன் கழுகாரின் செய்திகள், ரஜினிகாந்தின் 'ஒரு தடவை சொன்னா' தத்துவம், வடிவேலின் அவ்வ்வ் என்ற ஊளை போன்ற இலகுவான விஷயங்களை விவாதிக்க மட்டுமே அவனது தமிழ் போதுமானதாக இருக்கிறது. அதற்கு தன்னுடைய உழைப்பின்மையே காரணம் என்பதை ஒத்துக்கொள்ள மறுக்கும் அவன் அதை தமிழ் மொழியின் குறைபாடாக நினைக்கிறான். ஆனால் அப்படி அல்ல, சிக்கலான சிந்தனைகளையும் தமிழில் வெளிப்படுத்தலாம் என்று யாராவது செய்துக் காட்டினால் எரிச்சல் அடைந்து நக்கல் நையாண்டி மூலம் அதை எதிர்கொள்கிறான். அல்லது நடையை எளிமைப்படுத்துமாறு கோரிக்கை வைக்கிறான். (இதே ஆட்கள் ஒரு ஆங்கிலக் கட்டுரை புரியவில்லை என்றால் அதன் ஆசிரியரிடம் எளிமையாக எழுதுங்கள் என்று கனவில் கூட கேட்கமாட்டார்கள். அகராதியின் துணையுடன் நேரம் செலவிட்டு உழைத்து புரிந்துக்கொள்வார்கள். எனக்கு எளிமையான ஆங்கிலம் மட்டும் தான் புரியும் என்று சொல்வதை விட நாற்சந்தியில் அம்மணமாக நிற்பார்கள். ஆனால் தமிழில் மட்டும் எளிமை வேண்டும்.)

இதற்கு தமிழ்நாட்டுச் சூழல் தான் காரணம். "தமிழ்" நாளிதழ்கள் உயர்நீதிமன்றம் என்ற சொல் வாசகனுக்குப் புரியாது என்று அதை ஐ(!)கோர்ட்டு என்று "எளிமைப்படுத்தி" அச்சிடுகின்றன. இன்று இணையம், கணினி, வலைப்பக்கம், விசைப்பலகை, இசைவட்டு போன்ற சொற்களை வழக்கில் நிலைபெறச் செய்தது தமிழ்நாட்டு ஊடகங்களின் ஆதிக்கத்துக்கு வெளியே இருக்கும் வெளிநாடுகளில் வாழும் தமிழர்கள் தான். "எங்க ஆக்டிவிடீஸ் பத்தின டீடெய்ல்ஸ் எல்லாம் எத்திக்கல் ரீசன்ஸுக்காக நாங்களே வாலன்டரியா கொடுப்போம்" என்று தமிழ்மண நிர்வாகம் "எளியத் தமிழில்" அறிவிப்புகளை வெளியிட்டிருந்தால் சராசரி தமிழ்நாட்டு இளைஞன் கருத்தை கச்சிதமாக கவ்வியிருப்பான். அதை விட்டுவிட்டு செயற்பாடுகள், தார்மீகம் என்றெல்லாம் எழுதினால் அவன் என்ன செய்வான்?

தமிழ்நாட்டு இங்கிலீஷ்காரர்களுக்கு மற்ற நாடுகளைப் பிறப்பிடமாகக் கொண்டத் தமிழர்கள் தங்கள் தாய்மொழியைப் பேணுவது ஒருவித எரிச்சலை அளிப்பதை நான் பலமுறை பார்த்திருக்கிறேன். ஈழத்தமிழர் விஷயத்தில் தான் என்றில்லை. சிங்கப்பூர் தமிழ் தொலைக்காட்சி செய்திகளில் பயன்படுத்தப்படும் தூயத் தமிழைக் கூட தமிழ்நாட்டிலிருந்து வந்தவர்கள் நக்கலடிப்பதைப் பலமுறை பார்த்திருக்கிறேன். ("என்ன தமிழுய்யா இது? திருவாட்டிங்கிறான், மின்தூக்கிங்கிறான்...") மற்ற நாட்டுத் தமிழர்களுக்குத் தன்னைப் போல தாய்மொழி எதிர்ப்பு என்னும் ஈன அரசியலை செய்யவோ அல்லது அந்த அரசியலுக்கு சப்ளாக்கட்டை அடிக்கவோ வேண்டியக் கட்டாயம் எதுவும் இல்லை என்பதைக் கூட இவர்கள் புரிந்துக் கொள்வதில்லை.

இத்தகையவர்களுக்கு தமிழ் வலைப்பதிவுகளில் ஆழமான அல்லது "புரியாத" விஷயங்கள் பேசப்படுவது அன்னியமான ஒன்றாகத் தெரிகிறது. தங்கள் வேலை அலுப்பைப் போக்க அவ்வப்போது வந்து விளையாடிச் செல்லும் களிப்பிடமாகவே (எழுத்துப்பிழை அல்ல) இவர்கள் தமிழ் வலைப்பதிவுகளை காண்கிறார்கள். குமுதம், விகடன், குங்குமம் போன்றவற்றின் நீட்சியாக என்று சொல்லலாம். அதே மொழியைப் பேசி, அதே நையாண்டி மேளத்தை வாசித்து, அதே வெற்றுக் கோஷங்களை எழுப்பி...

எனக்கு நெருக்கமான ஒருவருக்கு ரமணி சந்திரனின் எழுத்துப் புரிகிறது. ஜெயமோகன் புரிவதில்லை. ஜெயமோகன் எல்லாருக்கும் புரியும்படி எழுதினால் என்ன என்று கேட்டார். என்ன செய்யட்டும்? ஒன்று அவரிடம் இப்படி சொல்லாம்: "ஜெயமோகனது எழுத்தை ஆயிரக்கணக்கானவர்கள் புரிந்து ரசிக்கிறார்கள். நீங்களும் கொஞ்சம் உழைத்தால் புரிந்துக்கொள்ளலாம்". அல்லது ஜெயமோகனுக்கு மடல் அனுப்பி ரமணி சந்திரனைப் போல எளிமையாக எழுதுமாறு கேட்டுக்கொள்ளலாம். இன்னும் ஒருபடி மேலே போய் சிந்துபாத் கதையைப் போல் சகலருக்கும் புரியுமாறு எழுதச்சொல்லலாம். இங்கிலீஷ்காரர்கள் தான் முடிவுசெய்ய வேண்டும்.

முதல் பிரிவினரைக் குறித்து நிறையச் சொல்லியாகிவிட்டது, அவர்களில் சிலரிடமாவது ஏதாவது மாற்றம் ஏற்படும் என்ற நம்பிக்கையில். இரண்டாம் பிரிவினரின் மேல் அத்தகைய நம்பிக்கைகள் ஏதும் இல்லாததால் சுருக்கமாக முடித்துக்கொள்கிறேன். தார்மீகக் காரணங்களுக்காகப் பதிவர்களின் தகவல்களை தருவோம் என்று தமிழ்மணம் "தெளிவாகவே" சொல்லிவிட்டதாக எழுதுபவர்கள் தான் தமிழ்மணம் அறிவிப்பு "குழப்பமாக" இருப்பதாகவும் எழுதுகிறார்கள். தெளிவா, குழப்பமா என்பதில் கூட ஒரு தெளிவு இல்லையா? இந்த அறிவிப்பை வேண்டுமென்றே உள்நோக்கத்தோடு திரித்து, இத்தனை முறை தெளிவுபடுத்திய பிறகும் விளங்காதது போல் நடித்துக்கொண்டு சற்றும் கூச்சமில்லாமல் சொன்ன பொய்யையே திரும்பத் திரும்பச் சொல்லிக்கொண்டிருப்பதைப் போல ஒரு பே-இமானித்தனம் ஏதும் இல்லை. அப்படி இல்லை என்றால் தவறாகப் புரிந்துக்கொண்டதை ஏற்றுக்கொண்டு மீதி இருக்கும் கொஞ்சநஞ்ச நம்பகத்தன்மையைக் காப்பாற்றிக்கொள்வது நல்லது.

உருது/இந்தி தெரியாதவர்களுக்கு: பே-இமான் -> நேர்மையற்றவன், நம்பத்தகாதவன் (இமான்தாரி -> நேர்மை)

43 மறுமொழிகள்:

கோயபல்ஸ் வழி நடப்பது, புரட்டு சப்பைக்கட்டுகளை அடுக்குவது எஞ்சியிருக்கும் நீங்கள்தான் (உங்கள் குழு...). "சரியாக" புரிந்துகொண்டவர்கள் தமிழ்மணத்தை "சீ" என்று ஒதுக்கிவிட்டார்கள். அதனால் எங்களுக்கு லாபம்தான் என்று மட்டரகமாக கொக்கரித்துகொண்டு இங்கு எஞ்சியவர்கள் கேலி பேசுகிறார்கள். அவ்வளவே!

விட்டு விலகியவர்கள் கேட்ட கேள்விக்கு நேர்மையான பதில் இல்லை, தமிழ்மண தரப்பிலிருந்து....

/// எமது செயற்பாடுகள் குறித்து தார்மீகக்காரணங்களுக்காக நாமே விரும்பினால்மட்டுமே தகவல்களைத் தாமாகவே எமது விதிமுறைகளுக்கமைய வந்திணைந்து கொள்ளும் பதிவர்களுக்குத் தரமுடியும்." ////

இங்கு "தகவல்களை" என்பது தனித்து நிற்கிறது. "எமது செயல்பாடுகள் குறித்த" தகவல்கள் என்று நீங்களாகவே இட்டுக்கட்டுள்ளீர்கள். இது இங்கு இவ்வாறில்லை. "எமது செயல்பாடுகள் குறித்த" என்ற அடைமொழி "தார்மீக காரணங்கள்" என்ற பெயர்சொல்லை ஒட்டியே அமைகிறது.

இதை இலக்கணத்தை மீறி நீங்களும், மற்றெல்லேரும் நேர்மையற்று இதை திரித்து சரிக்கட்ட முயலுகிறீர்கள்.

இதுவரை தமிழ்மணம் ஒரு விளக்கமும் கொடுத்ததாக நான் அறியேன். அப்படியிருக்கையில், தங்களின் இந்த விளக்கம், சரியில்லை என்ற போதிலும், இது உங்கள் பார்வையே அன்றி இது தமிழ்மணத்தின் உண்மையான விளக்கமாக அறியப்படாது.

தமிழ்மணத்தின் நடவடிக்கைகள் இதால் மட்டுமல்ல, பலவேறு நிகழ்வுகளைக்குறித்தும் அவர்களின் சார்பு நிலை வெளிப்பட்டுவிட்டது.

உள்ளிப்பூண்டுக்கு சந்தனம் பூசினாலும் அதை அறிவது கடினமா என்ன?

ஜெகத் நல்லதொரு விள்க்கம்.

எழுதப்படுபவை எல்லாம் விளங்குகின்றமாதிரி எழுதப்படவேண்டும் என்பதில் ஒற்றைக்காலில் நிற்ப்தைவிட, அவ்வாறு நம்மால் விளங்கமுடியாது இருப்பதை எவ்வாறு விளங்கிக்கொள்வது என்று எமது வாசிப்பை சற்று அகலப்படுத்துவதால் இழக்கப்போவது எதுவுமேயில்லை.

//இங்கு "தகவல்களை" என்பது தனித்து நிற்கிறது.//

நீங்கள் சொல்வதுபடி பார்த்தாலும் "தகவல்களை" என்பது தனித்து தானே நிற்கிறது? "பதிவர்களைப் பற்றிய" என்ற முன்னொட்டுடன் இல்லையே? அதை எடுத்து ஒட்டியது அல்லது "இட்டுக்கட்டியது" யார்? ஏன், அதே வாக்கியத்திலிருக்கும் "எமது செயற்பாடுகள் குறித்து" என்ற சொற்றொடரை எடுத்து ஒட்டியிருக்கலாமே?

//இதுவரை தமிழ்மணம் ஒரு விளக்கமும் கொடுத்ததாக நான் அறியேன்.//

அறிந்துகொள்ளுங்கள்.

DJ, நன்றி.

என்னை பொருத்தவரை, சரியோ தவறோ... ஒரு சாராரை நீக்கியது/அவர்களாகவே நீங்கியது, தமிழ்மணத்திற்கு பின்னடைவே...

இருவரும் தமிழ்மணத்தில் இருந்ததால் தான் என் போன்றோர் இருசாராரின் கருத்துக்களையும் அறிய முடிந்தது....சில விரும்பத்தகாத விஷயங்கள் நடந்திருந்தாலும் அதை தமிழ்மணம் சரியாக Handle செய்யவில்லை என்றே எண்ணத்தோன்றுகிறது...

இதுவரை பலவிஷயங்கள் விவாதிக்கப்பட்டு வந்தன.. பல அரிய கருத்துக்கள் அறிய வந்தன..அவசரபடாமல்...உணர்ச்சிவசப்படாமல் யோசித்தால் ஏற்பட்டு இருக்கும் இழப்பு புரியும்.. இனி ஒரு பக்க வாதங்களே தமிழ்மணத்தில் இருக்கும், அதற்கு எதிர்கருத்தோ விவாதங்களோ இருக்கப்பொவதில்லை..
விவாதங்கள்/எதிர்கருத்துக்கள் இல்லாமல் எந்தக் கருத்தும்/வாதமும் முழுமை அடைய போவதில்லை...

இப்பொழுதே. கடந்த சில நாட்களாக வாசகர் பரிந்துரை பக்கம் சென்று பார்த்தால்.. திராவிட பதிவுகளும், இஸ்லாமிய பதிவுகளும் தான் பெரும்பான்மையாக உள்ளன.. ஒரு பக்க கருத்துக்களே முதன்மை பெறுவது ஆரோக்கியமற்ற சூழல்.


உங்களுடைய வாதங்களை சோதனைக்குட்படுத்தி எதிர் தரப்பினர் பலருடன் விவாதித்து முடிவில் நீங்கள் உங்கள் கருத்தில் வெற்றி பெறும் போது கிடைக்கும் சந்தோஷம், பெருமை, கவுரவம் இனி உமக்கு வாய்க்கப்போவதரிது...

இதை சரியாக புரிந்து கொள்ளாமல் ஒரு பக்க ஆட்டமே வெற்றி என நினைத்தால் சொல்வதுற்கு ஏதுமில்லை...நன்றி

/இன்னும் ஒருபடி மேலே போய் சிந்துபாத் கதையைப் போல் சகலருக்கும் புரியுமாறு எழுதச்சொல்லலாம்/

போதாது. தமிழ்மணம் கன்னித்தீவு மாதிரி கார்ட்டூனாக (கருத்துப்படம் அல்ல) மட்டுமே அறிவிப்பு செய்யணும் அப்படீன்னு இண்டர்நெட் லா கொண்டு வரணும் சாரே

//எனக்கு எளிமையான ஆங்கிலம் மட்டும் தான் புரியும் என்று சொல்வதை விட நாற்சந்தியில் அம்மணமாக நிற்பார்கள். //

:)

அநாநியின் வாதம் சிரிப்பைத் தருகிறது.
சட்டைசபைக்கு உள்ளே இருந்தோ நின்றோ சட்டையை சேலையை இழுப்போம் என்பது ஒரு நிலை.
"நாங்கள் வெளிநடப்பு செய்கிறோம்" அப்படியாக வீராப்போடு கட்டடத்துக்கு வெளியே தாமாக வந்து விட்டு "அராஜக அரசே! எதிர்க்கட்சிக்காரர்களிலே அடக்குமுறையைப் பிரயோகிக்காதே" என்று வீதியிலே போய் வருகின்றவர்கள் முகங்களைப் பார்த்தபடி கூக்குரலிடுவது இன்னொரு நிலை. உள்ளே இருந்து இவர்கள் வெளியே வந்தால், உள்ளுக்கு ஆளுங்கட்சிக்காரர் மட்டுந்தானே மிஞ்சுவார்கள் என்பது வெளியே வரமுதல் இவர்களுக்குத் தெரியாதா?
அநாநி சொல்வதைப் பார்த்தால், தலைமைநீதிபதி வந்து வெளியே வந்தவர்கள் கால்களிலேயெல்லாம் விழுந்து "நீங்கள் வெளியே வந்தால் உள்ளே ஆளுங்கட்சி மட்டுமே மிஞ்சும். தயவு செய்து உங்கள் குரல் கேட்பதற்காக, உங்கள் நலனுக்காக நீங்கள் உள்ளே போங்கள்" என்று கெஞ்சவேண்டும்.
ஆளுங்கட்சியும் எதிர்க்கட்சியும் நீதிபதிக்கு ஏதென்று கொஞ்சம் வெளியே போகிறோம் என்று கூப்பாடு வைத்துக்கொண்டு ஓடமுன்னால், யோசிக்கவேண்டிய விடயமில்லையா? இப்போது என்ன ஆயிற்று? வாளையும் தாமே எடுத்துக்கொடுத்து கழுத்தையும் வெட்டியதாக ஆகிவிட்டதா இல்லையா?
என்ன வாதமைய்யா இந்தவாதம்? வெறும் பக்கவாதம் :(

நீக்குவது, நீங்குவது, நீக்கமற நிறைந்திருப்பது பற்றியெல்லாம் நான் எதுவும் சொல்லவில்லை. மாற்றான் தோட்டத்து மல்லிகைகளுக்கு மட்டுமல்ல கனகாம்பரங்களுக்கும் மணம் இருக்கக்கூடும்.

அனானி, தங்கமணி, சொ.வா.வெறுத்துப்போனவன்: உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.

ஜெகத் வழக்கம் போல தெளிவாக எழுதப்பட்டிருக்கும் பதிவு.இணைய இங்கிலிஷ்காரர்களுக்கு தாம் விரும்பிய வகையில் தமிழ் இருக்க வேண்டும். அப்படி இருந்தால்தான் அது தமிழ். தமிழ் கலைச் சொற்கள் அதிகமாக நடைமுறையில் உபயோகப்படுத்தினால் தமிழ் மொழி அழிந்துவிடும் என்ற உண்மை புரியாமல் நீட்டி முழக்கிக் கொண்டு இருக்கிறீர்கள்களே. இன்றைய நவீன வளர்ச்சிக்கு ஏற்ப தமிழ் தன்னை வளர்த்துக் கொள்ளும் இலகுதன்மை வாய்ந்தது. பொருத்தமான சொற்கள் இல்லாத பொழுது பிறமொழிச் சொற்களை பயன்படுத்திக்கொள்வது அறிவார்ந்த செயலாகும்.

தங்களைத் தாங்களே இந்தியத்தமிழ் அறிவுசீவுகளாகவும், எழுத்தாளர்களாகவும், கருத்தியல் மேதைகளாகவும், சீர்திருத்தவாதிகளாக அறிவித்துக்கொள்ளும் இவர்களுக்கு உடனடித் தேவை ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரையிலான தமிழ் பாடப்புத்தகங்களே...

//இங்கிலீஷ்காரர்களுக்கு மேலே தமிழில் எழுதப்பட்டிருப்பது புரியாமல் போனது மற்றும் தமிழ்மணம் அறிவிப்புகளில் பயன்படுத்தப்படும் மொழி/நடை மீது அவர்களுக்கு இருக்கும் இனம்தெரியாத வெறுப்பு ஆகியவற்றின் பின்னணியில் உள்ள சமூக காரணங்களை புரிந்துக்கொள்வது நல்லது.//

சரியான அவதானிப்பு. இந்தவொரு வெறுப்பு அல்லது திமிர்தான் இரமேஷ் பண்டாரியிலிருந்து சோ இராமசாமி- சுப்பிரமணியசாமி-இந்து இராம் வரை ஆட்டிப் படைக்கிறது. தமிழன் என்றாலே நாங்கள் (உயர்சாதித் தமிழ் நாட்டுத்தமிழர்கள்) வகுக்கும் வரையரைகளுக்குள் இயங்க வேண்டும். அது பேச்சு மொழி், எழுத்து மொழி், இலக்கியம், கலை, நாட்டியம், நாடகம், திரைப்படம், அரசியல், விடுதலை, தேசியம், தேச நலன், மதம், சமூகக் கட்டமைப்பு என எல்லாவற்றிலும் நாங்கள் சொல்லியபடியும், விரும்பும்படியும் உலகத்தில் உள்ள எல்லா தமிழர்களும் நடக்க வேண்டும். அவற்றை எதிர்ப்பவர்களை "தேசத்துரோகி, இந்து மதஎதிரி இந்தியாவின் எதிரி" என வசைப் பெயர்களைக் கொடுத்து அரசு வன்முறை இயந்திரங்களைப் பயன்படுத்துதல், சட்டம், நீதி என்று மிரட்டல் விடுத்தல், அவை செல்லா இடங்களில் முகமூடி அணிந்து தாக்குதல் செய்யுதல், தங்களைத் தாங்களே அசிங்கமாக எழுதிக் கொண்டு பழியை மற்றவர்கள் மேலே போடுதல், அதன் மூல தங்களுக்கு அனுதாபம் தேடிக்கொள்ளல் என எல்லா ஆயுதங்களையும் படுத்துவர்.

சில நேரங்களில் இந்த உளவியலைப் புரிந்து கொள்ளாத அப்பாவித் தமிழ் நாட்டுத் தமிழர்களும் அதே தவறைச் செய்கின்றனர். அவர்கள் புரிந்து கொள்வதற்காகவாவது இந்தியா அல்லாத மற்ற நாட்டுத் தமிழர்கள் (குறிப்பாக ஈழம், மலேசியா, சிங்கப்பூர், மொரீசியஸ்) நிறைய வலைப் பதிய வரவேண்டும். ஒரு லிவிஸ் ஸ்மைல் வித்யாவால் திருநங்கைகளின் பிரச்னைகளைப் பற்றிய புரிதலும், அணுகு முறையும் தமிழ்ப் பதிவர்களிடையே முன்னேற்றம் வந்திருக்கிறது என்ற முக்கியமான எடுத்துக்காட்டை இங்கு குறிப்பிட விரும்புகிறேன். இதற்காகத்தான் எனக்கென தனியே வலைப்பதிய நேரமில்லையென்றாலும், இதுவரை மேல்தட்டு அச்சு ஊடகங்களால் நெரிக்கப் பட்டவர்களின் குரல் இணையம் அளிக்கும் சுதந்திரத்தில் வெளிவர வேண்டும் என்று என்னுடைய நேரத்தைச் செலவிட விரும்புகிறேன். இதனால் சிலருக்கு ஏற்படும் கோபத்தைப் புரிந்து கொள்ள முடிகிறது. விரல் விட்டு எண்ணக்கூடிய அளவில் வெறும் பின்னூட்டங்களை மட்டுமே சில இடுகைகளில் எழுதி வரும் என்னைப் பற்றி் மிக அவதூறாக நேசக்குமார் எழுதிய இரண்டாவது பதிவே அதற்கு சாட்சி. (முக்கியமாக நான் மதம் தொடர்பான எந்தப் பதிவுகளையுமே படிப்பதில்லை. எனவே நேசக்குமாருடைய பெரும்பாலான எழுத்துக்களைப் படித்ததில்லை. எங்குமே அவருக்குப் பின்னூட்டம் இட்டதுமில்லை. அவருடன் வேறு எங்குமே விவாதம் செய்ததுமில்லை).

இணையத்துக்கு முன்பாக நான் படித்த ஈழத்து எழுத்துக்கள்/இலக்கியங்கள் பெரும்பாலும் தமிழ்நாட்டு இலக்கியவாதிகளால் அடையாளம் காட்டப் பட்டவை. இணையத்தில் படிக்க ஆரம்பித்தபின்பே ஈழத்தின் உண்மையான பக்கங்களைப் பார்க்க முடிந்தது. எனவே தமிழ்நாட்டில் இருந்து தோன்றும் வெறுப்புக் குரல்களுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் ஈழத்தவர்கள் இயல்பாக எழுத வேண்டும்.

இங்கு அனானி மறுபடியும் அடித்துச் சொல்லும் பொய்யைப் படியுங்கள் -
//இனி ஒரு பக்க வாதங்களே தமிழ்மணத்தில் இருக்கும், அதற்கு எதிர்கருத்தோ விவாதங்களோ இருக்கப்பொவதில்லை..//

தமிழ் மணத்திலிருந்து வெளியேற்றப் பட்ட இருவர் அவர்களுடைய அரசியல் சார்புக்காகவோ, முரண்பட்ட கருத்துக்களுக்காகவோ வெளியேற்றப் படவில்லை. பலமுறை பலர் சொல்லியாயிற்று, இங்கு ஜெகத்தும் சொல்லியிருக்கிறார் - "தமிழ் மணம் பிறருக்கு ஐபி முகவரியைக் கொடுக்கிறது" என்ற ஒரு அபாண்டமாக பொய்யை எந்த அடிப்படையுமில்லாமல் திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருப்பதனால் வெளியேற்றப் பட்டனர். அவர்களுடைய மாற்றுக் கருத்துக்களையும், முரண்பட்ட அரசியலையும் இன்னும் யார் வேண்டுமானாலும் எழுதலாம். அவர்களே வேறு பெயரில் வந்து எழுதினாலும் தெரியப் போவதில்லை. தமிழ் மணம் திரட்டிக் கொண்டுதான் இருக்கும். உண்மை இப்படியிருக்க இந்த அனானி கூசாமல் இங்கு வந்து அதே பொய்யைச் சொல்லிக் கொண்டிருக்கிறார். இவர்கள் தூக்கிப் பிடிக்கும் திண்ணையில் படைப்புகள் மறுக்கப் படுவதற்கும், மட்டுறுத்தப் படுவதற்கும் என்றைக்காவது விதிமுறைகளைக் கேட்டதுண்டா? திண்ணையாவது அவற்றை பொதுவில் முன் வைத்ததுண்டா? யோசித்துப் பார்க்கட்டும்.

நன்றி - சொ. சங்கரபாண்டி

சரியாகச் சொல்லியிருக்கிறீர்கள்.
'தகவல்கள்' தனித்து நிற்பதாகச் சொல்லியவருக்கு,

'எமது செயற்பாடுகள் குறித்து' என்ற தொடர் அதேவசனத்தில் இருக்கிறது. அந்த வசனத்துக்கு முன்னும் பின்னும் சில வசனங்கள் அதே பந்தியில்(paragraph) வருகின்றன. எல்லாமே தமிழ்மண நிர்வாகிகளின் செயற்பாடுகள் குறித்து மட்டுமே பேசுகின்றன. தொடர்புடையதாக இவ்வளவு சொற்கள் இருக்கும்போது எங்குமே தொடர்புபடாத 'பதிவர்களின்' என்ற சொல்லைக்கொண்டு வந்து எப்படி ஐயா உங்களால் 'தகவல்கள்' என்பதற்கு முன் பொருத்தி 'பதிவர்களின் தகவல்கள்' என்ற பொருளை எடுக்க முடிந்தது?

அப்படியே தான் குழப்பம் வந்திருந்தால்கூட 'தகவல்கள்' என்பது எதைக்குறிக்கிறது அல்லது யாருடைய தகவல்களைக் குறிக்கிறது என்ற கேள்விகள் மட்டுமே நேர்மையான குழப்பமாக இருந்திருக்க முடியும். அப்படி எங்குமே விளக்கம் கேட்கப்படவில்லை. மாறாக எழுந்த கேள்விகள் எவ்வகையானவை என்று உங்களுக்கே தெரியும்.
_______________
இவ்விடுகையில் சொல்லப்பட்ட பல, இப்போது தமிழ்மணத்துக்கு ஆதரவாகப் 'பட்டை கிளப்பிக்கொண்டிருக்கும்' பலருக்கும் பொருந்தும். அவர்களும் வாசிப்பார்களாக. எப்படி எதிர்வினை வருகிறதென்று பார்க்க ஆவல்.

ஜெகத்,
நீங்கள் சொன்ன நிறைய விதயங்களோடு ஒத்துப்போகிறேன்.
இதையே நாங்கள் எழுதியிருந்தால் வேறுவகையில் இச்சிக்கல் திசைதிருப்பப்பட்டிருக்கும்.

நல்ல பதிவு. தெளிவான விளக்கங்கள். நன்றி

ஜெகத்!
சரியாகச் சொல்லியுள்ளீர்கள். உங்கள் கருத்துக்களுடன் முழுமையாக ஒத்துப்போகின்றேன்.

அருமையாக எழுதியிருக்கிறீர்கள்.

நீங்கள் சொல்லியிருக்கிற இங்கிலீஷ்காரர்களை தமிங்கிலர் என்ற சொல்லால் பத்துப் பதினைந்து ஆண்டு காலமாய்ப் பலரும் அழைத்துக் கொண்டிருக்கிறோம். தமிங்கிலர்கள் என்போர் கொஞ்சம் கொஞ்சமாய் நம் குமுகாயத்திற் பெருத்துப் போனார்கள்; தமிங்கிலருக்குத் தமிழ்நடை புரிபடமாட்டேன் என்கிறது. "கண்டதே காட்சி கொண்டதே கோலம்" என்று அவர்கள் அமைந்து விடுகிறார்கள். தங்களின் தமிழ் நடையை மேம்படுத்திக் கொள்ள எந்த முயற்சியும் எடுப்பதில்லை; மாறாகத் தமிழையே குறை சொல்லிக் கொண்டு இருக்கிறார்கள். இதில் வலது, இடது சாரிகள் என இரண்டு பக்கத்தாருமே அடக்கம். தங்களின் குறையைத் தமிழின் குறையாக மாற்றுவதில் இவர்கள் இருவரும் சளைப்பதில்லை. வலது, இடது என்ற இரண்டு பக்கமும் உள்ள அறிவுய்திகள் (அறிவால் உய்பவர்கள் அறிவுய்திகள்; இன்னும் எத்தனை காலத்திற்குத்தான் அறிவு ஜீவிகள் என்று சொல்லிக் கொண்டிருப்பார்கள்? அறிவு ஜீவிகள் என்றால் பாமரிடம் பம்மாத்த முடியும் பாருங்கள்; அறிவுய்திகள் என்றால் சட்டென்று பொருள்புரிந்து "இவ்வளவு தானா?" என்று நாம் சொல்லிவிடுவோமே?) ஒரு பக்கச் சார்பான மொழிச் சிந்தனையில், பழைய குலக்கல்வியின் வழிவந்த "பார்ப்பனியம்" என்ற கருத்துமுதல் வாதத்தில், ஆழ்ந்து போயிருக்கிறார்கள். சொன்னால் இரு சாராருக்கும் கோவம் வந்துவிடுகிறது.

அடுத்து பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்கிற இரண்டாமவரைப் பற்றிச் சொன்னீர்கள்; இவர்கள் இந்தப் புலனத்தில் பிடித்துக் கொண்டு தொங்கும் "தார்மீகக் காரணங்கள்" பற்றி இவர்கள் சரியாகப் புரிந்திருக்கிறார்களா என்பது கூட எனக்கு அய்யம் தான். தருமம் என்ற சொல்லை வடமொழி முடிப்பில் திரித்து அதைப் பெயரடை ஆக்கி தார்மீக என்று ஆக்கிய சொல் இங்கே பாவிக்கப் படுகிறது.

இங்கே தருமம் என்பது தானம் என்ற பொருளில் வரவில்லை. இவர்கள் எல்லாம் அவ்வப்போது விழுந்தடித்துச் சொல்லிவருகிறார்களே "சனாதன தருமம்" அதில் வரும் தருமம் என்ற பொதுச் சொல்லுக்கு என்ன பொருள் கொள்ளுகிறார்களோ, அது போன்ற தருமம் தான் தார்மீகக் காரணத்தில் இருக்கிறது. (கவனம்: சனாதனம் பற்றி நான் இங்கு பேசவில்லை; வெறுமே தருமம் என்ற பொதுச்சொல் பற்றிப் பேசுகிறேன்.)

தருமம் என்பது நெறி/அறம்/சட்ட ஒழுங்கு/முறைமை.

இந்தத் தருமக் காரணங்களுக்காக மட்டுமே தங்களின் செயற்பாடுகளை மற்றவருக்குத் தெரியப் படுத்துவோம் என்று தமிழ்மணத்து நிர்வாகம் சொல்லுகிறது. இதற்கே "நெறி/அறம்/சட்ட ஒழுங்கு/முறைமை" பார்க்கும் போது, ஒரு வலைப்பதிவரின் இணைய நடைவரை (internet protocol) பற்றிய செய்தியைக் கண்டவருக்குக் கொடுப்பார்களோ?

இரண்டாமவ்ர் தமிழை எப்படிப் புரிந்து கொள்ளுகிறார்கள்?

"கேப்பையில் நெய் வடிகிறது என்றால் கேட்பாருக்கு எங்கே புத்தி போயிற்று?" என்பது பழமொழி.

அன்புடன்,
இராம.கி.

ஜெகத்,

நல்ல பதிவு. சங்கரபாண்டி, சொந்தவாழ்க்கை வெறுத்துப்போனவர், வசந்தன் ஆகியோரின் பின்னூட்டக் கருத்துக்களும் யோசிக்க வைப்பவை.

"எமது செயல்பாடுகளைத் தார்மீகக் காரணங்களுக்காகத் தருவோம்" என்பதற்கும், "பதிவர்கள் பற்றிய விவரங்களைத் தார்மீகக் காரணங்களுக்காகப் பிற பதிவர்களுக்குத் தந்துவிடுவோம்" என்பதற்கும்கூட வித்தியாசம் விளங்கிக்கொள்ளமுடியாமல் ஒருவாரம் அதைப்பற்றிய விளக்கங்களைக் கொடுத்துக்கொண்டிருக்கவேண்டிய நிலையிலும், புரியாத சொல்வந்தால் "இதை என்னபொருளில் சொல்லவருகிறீர்கள்?" என்று இயல்பாய் ஒரு ஒற்றைக் கேள்விகேட்டுப் பதிலைவாங்காமல் உடனே குற்றம்சுமத்தி நீதிவிசாரணையை நடத்தக் கூட்டத்தைச் சேர்த்துவிடும் பொறுமையின்மையிலும்தான் இணையத்தமிழைத் தமிழன் கட்டிக்காப்பாற்றி வளர்த்துவருகிறான்:)) இந்தியதேசியத்தையும் யாரும் கொன்றுவிடாமல் விடியவிடியக் காவலும் இருந்துவருகிறான்:)) (தமிழன் என்றபெயர் கொண்டவர்கள் யாரையும் இங்கு அந்தச் சொல் குறிக்கவில்லை, பொதுவாய்ச் செந்தமிழ்நாட்டுத் தமிழனை/தமிழச்சியைச் சொல்கிறேன்)///கல்லூரிப் படிப்பு முடித்து நல்ல வேலையில் இருக்கும் ஒரு சராசரி தமிழக இளைஞனின் தமிழ் சொற்தொகை (vocabulary) மிகக் குறைவானது. அந்த சொற்தொகையை வைத்து அவனால் எதைக் குறித்தும் - குறிப்பாக இலக்கியம், அறிவியல், சட்டம், தத்துவம் போன்றவற்றைக் குறித்து - ஆழமாக பேசவோ விவாதிக்கவோ முடியாது. ஐஸ்வர்யாவின் திருமணம், ஜூனியர் விகடன் கழுகாரின் செய்திகள், ரஜினிகாந்தின் 'ஒரு தடவை சொன்னா' தத்துவம், வடிவேலின் அவ்வ்வ் என்ற ஊளை போன்ற இலகுவான விஷயங்களை விவாதிக்க மட்டுமே அவனது தமிழ் போதுமானதாக இருக்கிறது////

இதுமிகமுக்கியமான கூற்று ஜெகத். சாதரணமாய் ஒரு சொல்லை, வாக்கியத்தை நீங்கள் வலியுறுத்தவரும் கருத்தில் போட்டாலே அதைப் பிடித்துக்கொண்டு மற்ற எல்லாவற்றையும் மறந்துவிட்டு குத்தாட்டம் போடும் கொடுமையும் பலநேரங்களில் நடக்கும் இங்கே:))

//இணைய இங்கிலிஷ்காரர்களுக்கு தாம் விரும்பிய வகையில் தமிழ் இருக்க வேண்டும். அப்படி இருந்தால்தான் அது தமிழ். //

தமிழ்மணத்திற்கெதிராக முன் வைக்கப்படும் சிலரின் குரல்களில் உள்ள அரசியல் எல்லோருக்கும் தெரியும். நல்லது கெட்டது என்று பகுத்தாராயாமல், சிலவற்றை ஒழித்தே கட்டிவிட வேண்டும் என்கிற கங்கணத்தோடு புறப்பட்டிருக்கும் அவர்களுக்காக நான் பரிதாபப்படுகிறேன். ஒரு தமிழ்மணம் ஒழிந்துபோனால், தமிழ்மணம் போல சிந்திக்கிறவர்கள் அத்துணை பேரும் ஒழிந்து விடுவரா..?? இது இரண்டு தரப்பிலும் தொடர்கின்ற யுத்தம். வெற்றியும் தோல்வியும் தற்காலிகம். நாமெல்லாம் கருவிகள்.!!!!!!

நிற்க.

தமிழ்மணத்தின் அறிவிப்பில் தெரிகின்ற மொழியில் உள்ள சிக்கலை குறைத்துக் கொள்வது நலம். செறிவான நடை தெளிவான நடையாகவும் இருந்தால் இப்படி ஆளுக்காள் மாற்றி மாற்றி பொருள் கொண்டிருக்கத் தேவை இல்லை.சிலருக்கு பிரமிள் தெளிவு. சிலருக்கு வைரமுத்து தெளிவு. பெரும்பான்மை புரிந்து கொள்ளக் கூடிய, தேவை உள்ள இடங்களில் பெரும்பான்மையினருக்கு புரிகிறவாறு தான் எழுத வேண்டும்.( நான் ஏஏஏஏஏ..மாற்றி பொருள் கண்டு பிடிப்போரைப் பற்றி இங்கே கூறவில்லை)

//இந்தியா அல்லாத மற்ற நாட்டுத் தமிழர்கள் (குறிப்பாக ஈழம், மலேசியா, சிங்கப்பூர், மொரீசியஸ்) நிறைய வலைப் பதிய வரவேண்டும்//

திரு.சங்கர், "இந்தியா அல்லாத மற்ற நாட்டுத் தமிழர்களும்" என்று எழுதி இருக்க வேண்டுமோ. உலகத் தமிழர்களுக்கான உங்கள் கரிசனையில், தமிழ்நாட்டுத் தமிழனுக்கும் இடம் இருக்க வேண்டும் என்பது என் எதிர்பார்ப்பு.

என்றென்றும் அன்புடன்

நல்ல பதிவு ஜெகத்.. நன்றிகள்...

வசந்தன் போலவே இதை நாங்கள் பேசியிருந்தால், வேறு திசைமாறிப் போகும் அபாயங்களை யோசித்துக் கொண்டே இருந்தேன்...

நல்ல பதிவு!

இன்றைய இளைஞனுக்கு தமிழ் என்று சொல்லிக் கொடுத்த மிடையங்களை கேள்விக்குட்படுத்தியதை வரவேற்க வேண்டும்.

மற்றபடி, சொல்வதற்கு ஒன்றுமில்லை, தமிழ்மணம் மட்டுமே ஏன் குற்றஞ்சாட்டப்படுகிறது என்கிற வினாவைத் தவிர!

திரு.செகத் அவர்களே, வணக்கம்.
முன்பு தொடர்ந்து எழுதி வந்த பல பதிவர்கள் இப்போது எழுதவதேயில்லை / மிகக் குறைவாக எழுதுகிறார்கள். விலகியவர்கள்/விலக்கப்பட்டவர்கள் முன் வைக்கும் கருத்துக்கள் மீது விவாதம் இருக்கலாம்.ஆனால் அவர்கள் விபரம் தெரியாதவர்களோ அல்லது வெறுமனே வார்த்தைகளை வைத்து விளையாடுபவர்களோ அல்லர். அரவிந்தன் நீலகண்டன் ஆர்.எஸ்.எஸ்காரர்தான். அவரது அனைத்து எழுத்துக்களையும் ஆர்.எஸ்.எஸ் என்ற சிமிழிக்கும் அடைத்துவிட முடியாது. இந்த வகையில் நோக்கும்கால் தமிழ்மணத்தில் உள்ள கருத்துக்களின் பன்வகைத்தன்மை பாதிப்புற்றிருப்பதை அவதானிக்க முடியும். இதைப் புரிந்து கொள்ளாமல் தமிழ் மண ஆதரவு பட்டையை இடுவதும், கசடுகள் ஒழிந்தன என்று எக்காளமிடுவதும் தமிழ்மணம் ஒரு பக்க சார்புடையவர்களையே ரும்பான்மையினராகக் கொணட ஒர் திரட்டியாகிவிடுமோ என்ற ஐயம் எழுகிறது. தமிழில் காத்திரமான செய்தி அலசல் கட்டுரைகள்,துறை சார்ந்த பதிவுகள், இருதரப்பாரும் பங்கு பெறும் செம்மையான விவாதங்கள் குறைவு. இப்போது வலைப்பதிவுகளில் அவை இன்னும்
குறையும் நிலை உருவாகியிருப்பது நல்ல அறிகுறி அல்ல.
(எழுத்துப் பிழை இருப்பினும் கருத்தினை தெளிவாக இட்டருக்கிறேன் என்று கருதுகிறேன். எனவே பிழை பொறுத்திடுக)

//இருதரப்பாரும் பங்கு பெறும் செம்மையான விவாதங்கள் குறைவு.//

இரு தரப்பர் மட்டுமல்ல, பலதரப்பார் கொண்டது தமிழ்மணம். தரமான விமர்சனங்களை திசைதிருப்பி காழ்ப்புணர்வுகளை வளர்த்துக்கொண்டிருந்தவர்கள் மட்டுமே வெளியேறி உள்ளனர். காழ்ப்புணர்வு இல்லாமல் தரமான விமர்சங்கள் செய்ய இங்கே இருக்கும் இரண்டாயிரத்துச் சொச்சம் பதிவர்களுக்கு தகுதி இல்லை. வெளியே போய் தமிழ்மணத்தின் மீது எச்சில் துப்பிக் கொண்டிருப்பவர்கள் தான் அறிவாளிகள் என்று சொல்ல வெட்கமாக இல்லையா?

//இனி ஒரு பக்க வாதங்களே தமிழ்மணத்தில் இருக்கும், அதற்கு எதிர்கருத்தோ விவாதங்களோ இருக்கப்பொவதில்லை..
விவாதங்கள்/எதிர்கருத்துக்கள் இல்லாமல் எந்தக் கருத்தும்/வாதமும் முழுமை அடைய போவதில்லை...

இப்பொழுதே. கடந்த சில நாட்களாக வாசகர் பரிந்துரை பக்கம் சென்று பார்த்தால்.. திராவிட பதிவுகளும், இஸ்லாமிய பதிவுகளும் தான் பெரும்பான்மையாக உள்ளன.. ஒரு பக்க கருத்துக்களே முதன்மை பெறுவது ஆரோக்கியமற்ற சூழல்.//

தமிழ்மணத்தில் இருக்கும் பதிவர்களில் பெரும்பான்மை இந்து மத நம்பிக்கையாளர்கள்தான். ஆனால் அவர்கள் வெறியர்கள் இல்லை. ஒருகை ஓசைகள் சீக்கிரமே ஓய்ந்து போகும். ஆரோக்கியமான விவாதம் என்றால் அதில் பங்கேற்க அறிவும் திறமையும் கொண்ட பதிவர்கள் ஏராளமானவர்கள் இருக்கிறார்கள். வெளியே போனவர்களுக்காக பரிந்து பேசி தமிழ்மணமே அல்லது தமிழ் பதிவுலகமே அவர்களை நம்பி இருந்ததாக கதைவிடுவது மானங்கெட்ட பிழைப்பு.

நல்ல.. தெளிவான பதிவு ஜெகத்!

வாழ்த்துக்கள். தமிழ்மணத்தின் மீது குற்றப்பத்திரிக்கையை அவர்கள் தாக்கல் செய்த போது அமைதி காத்தவர்கள்.. இன்று பட்டை போடும் விசயம் வந்த உடன் குழு மனப்பாண்மைக்கு இடமளிக்கக் கூடாது என்கிறார்கள்.

வேடிக்கைதான் போங்கள்!

விளக்கமான நல்ல பதிவு.

தவறு செய்தவர்களுக்கெதிராக தமிழ்மணம் எடுத்த முடிவினால், அடுத்து தாமும் மாட்டிக் கொள்வோம் என்று பயந்தவர்கள், விலகும் முடிவுக்கு வந்து விட்டனர். அதன் பின்னர், 'பிழை எங்கிருக்கிறது?' என்று அவர்களால் தேடப்பட்டு, அவர்களுக்குப் பிழையாகத் தெரிந்த ஒன்று அங்கே பொருத்தப்பட்டு, வெளியேற / வெளியேற்ற காரணமாகச் சொல்லப்பட்டிருக்கிறது.

"எனக்கு எளிமையான ஆங்கிலம் மட்டும் தான் புரியும் என்று சொல்வதை விட நாற்சந்தியில் அம்மணமாக நிற்பார்கள்"

:-}}

Mookku Sundar said...
//திரு.சங்கர், "இந்தியா அல்லாத மற்ற நாட்டுத் தமிழர்களும்" என்று எழுதி இருக்க வேண்டுமோ. உலகத் தமிழர்களுக்கான உங்கள் கரிசனையில், தமிழ்நாட்டுத் தமிழனுக்கும் இடம் இருக்க வேண்டும் என்பது என் எதிர்பார்ப்பு//

சுந்தர், 'தமிழர்களும்' என்பது தான் நான் சொல்ல வந்ததும். இந்தியாவைச் சேர்ந்த அல்லது தமிழ் நாட்டுத்தமிழர்கள் தான் பெரும்பான்மையாக எழுதி வருகிறோமே. அவர்கள் எழுதக் கூடாது என்று எங்காவது நான் குறிப்பிட்டிருந்தால் நீங்கள் இந்தக் கேள்வியைக் கேட்டிருக்கலாம். கறுப்பர்கள் அமெரிக்காவின் அரசு உயர்பதவிகளில் நியமிக்கப் படவேண்டும் என்று சொன்னால் வெள்ளையர்கள் நியமிக்கப் படக் கூடாது என்று பொருள் அல்ல. ஏற்கனவே அவர்கள் பெரும்பான்மையாக நியமிக்கப் பட்டிருக்கிறார்கள், கறுப்பர்களும் நியமிக்கப் படவேண்டும் என்பதுதான். ஒருவேளை நான் தமிழ் நாட்டு தமிழன் அல்ல என்று நினைத்துக் கொண்டு என்னிடம் தமிழ்நாட்டுத் தமிழர்களுக்காக வக்காலத்து வாங்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டீர்களோ என்னவோ :-)

நன்றி - சொ. சங்கரபாண்டி

//ஒருவேளை நான் தமிழ் நாட்டு தமிழன் அல்ல என்று நினைத்துக் கொண்டு என்னிடம் தமிழ்நாட்டுத் தமிழர்களுக்காக வக்காலத்து வாங்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டீர்களோ என்னவோ :-)//

தமிழ் இணையத்தில் கடந்த 3-4 வருடங்கங்களாக குப்பை (யை) ( மட்டும்!!!! :-) ) கொட்டிக் கொண்டிருப்பவன் என்கிற முறையில் உங்களை எனக்கு ஓரளவு தெரியும்.
வக்காலத்து என்பதெல்லாம் பெரிய வார்த்தை. அதனை ஒரு சார்பு நிலை எடுக்கிறவர்கள்தான் செய்வார்கள். நான் வெறும் பார்வையாளன்.

மற்றவர்களிடமிருந்து கற்றுக்கொள்ள ஏதாவது இருக்கிறதா என்று தேடுகிற பார்வையாளனுக்கு எங்கே முள் இறங்குறது அல்லது ஏறுகிறது என்று பார்ப்பதில், அதை சொல்வதில் தயக்கம் ஏதும் இல்லை. கருத்துக்களை பரப்ப முனைபவர்களுக்கும், ஒரு கருத்தியலை உருவாக்க முனைபவர்களுக்கும் முள் தெரிவது கொஞ்சம் கடினம்தான். நுகர்வோருக்கும் கடைக்காரனுக்கும் உள்ள வித்தியாசம்!!!!

ஒருவேளை சொர்ணம் சங்கரபாண்டி அவர்களே என்று விளித்திருந்தால் உங்களைப் பற்றி அதிகமாக எனக்குத் தெரியும் என்று நினைத்திருப்பீர்களோ என்னவோ..!!! :-) :-). just kidding.

//இலகுவான விஷயங்களை விவாதிக்க மட்டுமே அவனது தமிழ் போதுமானதாக இருக்கிறது. அதற்கு தன்னுடைய உழைப்பின்மையே காரணம் என்பதை ஒத்துக்கொள்ள மறுக்கும் அவன் அதை தமிழ் மொழியின் குறைபாடாக நினைக்கிறான். ஆனால் அப்படி அல்ல, சிக்கலான சிந்தனைகளையும் தமிழில் வெளிப்படுத்தலாம் என்று யாராவது செய்துக் காட்டினால் எரிச்சல் அடைந்து நக்கல் நையாண்டி மூலம் அதை எதிர்கொள்கிறான். அல்லது நடையை எளிமைப்படுத்துமாறு கோரிக்கை வைக்கிறான். (இதே ஆட்கள் ஒரு ஆங்கிலக் கட்டுரை புரியவில்லை என்றால் அதன் ஆசிரியரிடம் எளிமையாக எழுதுங்கள் என்று கனவில் கூட கேட்கமாட்டார்கள். அகராதியின் துணையுடன் நேரம் செலவிட்டு உழைத்து புரிந்துக்கொள்வார்கள். எனக்கு எளிமையான ஆங்கிலம் மட்டும் தான் புரியும் என்று சொல்வதை விட நாற்சந்தியில் அம்மணமாக நிற்பார்கள். ஆனால் தமிழில் மட்டும் எளிமை வேண்டும்.)//

//இன்று இணையம், கணினி, வலைப்பக்கம், விசைப்பலகை, இசைவட்டு போன்ற சொற்களை வழக்கில் நிலைபெறச் செய்தது தமிழ்நாட்டு ஊடகங்களின் ஆதிக்கத்துக்கு வெளியே இருக்கும் வெளிநாடுகளில் வாழும் தமிழர்கள் தான்.//

//தமிழ்நாட்டு இங்கிலீஷ்காரர்களுக்கு மற்ற நாடுகளைப் பிறப்பிடமாகக் கொண்டத் தமிழர்கள் தங்கள் தாய்மொழியைப் பேணுவது ஒருவித எரிச்சலை அளிப்பதை நான் பலமுறை பார்த்திருக்கிறேன்.//

//தங்கள் வேலை அலுப்பைப் போக்க அவ்வப்போது வந்து விளையாடிச் செல்லும் களிப்பிடமாகவே (எழுத்துப்பிழை அல்ல) இவர்கள் தமிழ் வலைப்பதிவுகளை காண்கிறார்கள். குமுதம், விகடன், குங்குமம் போன்றவற்றின் நீட்சியாக என்று சொல்லலாம். அதே மொழியைப் பேசி, அதே நையாண்டி மேளத்தை வாசித்து, அதே வெற்றுக் கோஷங்களை எழுப்பி...//

நல்ல சிந்தனை. இப்பவாவது உறைக்க வேண்டியவர்களக்கு உறைத்தால் சரி.

நல்ல பதிவு. தெளிவான விளக்கங்கள்

ஜெகத்,

புரியவைக்க நீங்கள் எடுக்கும் முயற்சிக்கு பாராட்டுக்கள்.

இந்த விசயத்தில் குழப்பத்தை எற்படுத்தி வெளியேறுவது மடுமல்ல, தமிழ்மணம் என்னும் திரட்டி மீது வெறுப்பை, எதிர்பிரச்சாரத்தை ஏற்படுத்துவது தான் இவர்களது எண்ணமாக தெரிகிறது.

ஆபாசமாக பெண்பதிவர் பெயரில் வலைப்பதிந்த ஒருவர் மாட்டினார். அவரை காப்பாற்றுவது எப்படி? அதற்கு இன்னொரு அவதூறு பிரச்சாரம் உருவாக்கினார்கள். ஐ.பி என பி.பி எகிற கத்திய இவர்கள் எந்த ஆதாரத்தில் இப்படி குதித்தார்கள் என தெரியவில்லை. இருந்தும், தமிழ்மணம் தரப்பில் சரியான விளக்கம் கொடுத்த பின்னரும் இந்த கூச்சலை நிப்பாட்டாமல் இருக்க அவர்களுக்கு காரணம் இருந்தது.

1. சிக்கிய குற்றவாளியை தப்பிக்க வைக்க திசைதிருப்பும் நாடகம்.
2. வலைப்பதிவுகளில் வருகிற இந்துத்துவம்/பார்ப்பனீயம் போன்றவற்றிற்கு எதிரான விமர்சனங்களுக்கு, கேள்விகளுக்கு பதில் சொல்ல இயலாமையும். அதிலிருந்து தப்பித்து வெளியேறி தாங்கள் தான் அறிவாளி அவதாரங்கள் என காட்டிக்கொள்ளும் மேலாதிக்க போக்கு.
3. வெகுஜன ஊடகங்கள் ஆதிக்க கருத்துக்களால் ஆக்கிரமிக்கப்பட்டிருக்கும் போது வலைத்திரட்டி ஒன்று அதற்கு 'எதிரான கோணத்தின் அரசியலை முன்னிறுத்துவதா? அந்த ஊடகம் இருக்கலாமா?' என்ற மனப்போக்கு.

மற்றபடி வெளியேறியவர்களது வலைப்பதிவுகளில் ஹிட்லர் படம் இருப்பது பொருத்தமே. இந்துத்துவ கருத்தியலும், நாசிக் கொள்கையும் ஒரே மாதிரியானவை என்பதை அறிவிக்கிறார்கள்.

இவர்களுக்கு விளக்கம் சொல்லி புரியவைக்க முயல்வது வீண் முயற்சி! கொஞ்சமும் நேர்மையற்ற இவர்களுக்கு பதில் சொல்வதை விட மற்ற விசயங்களில் கவனம் செலுத்துவது நல்லது.

//தங்கள் வேலை அலுப்பைப் போக்க அவ்வப்போது வந்து விளையாடிச் செல்லும் களிப்பிடமாகவே (எழுத்துப்பிழை அல்ல) இவர்கள் தமிழ் வலைப்பதிவுகளை காண்கிறார்கள். குமுதம், விகடன், குங்குமம் போன்றவற்றின் நீட்சியாக என்று சொல்லலாம். அதே மொழியைப் பேசி, அதே நையாண்டி மேளத்தை வாசித்து, அதே வெற்றுக் கோஷங்களை எழுப்பி...//

சரியான புரிதல்.

சங்கரபாண்டி,

தாங்கள் வகுத்ததே வாய்க்கால் என்று (இன்னும்) நினைத்துக்கொண்டிருக்கும் தமிழகத்து தலைமைக் குருமார்களைப் பற்றி சரியாக சொல்லியிருக்கிறீர்கள். தமிழில் பிறமொழிக் கலப்பை குறைக்க எடுக்கப்படும் முயற்சிகளை சோ ராமசாமி எந்த அளவுக்கு வழக்கமான நக்கல் நையாண்டி வழிமுறைகளைக் கையாண்டு சிறுமைப்படுத்தி வருகிறார் என்பது தெரிந்ததே. கவனிக்கவேண்டியது என்னவென்றால் தமிழில் ஆங்கிலக் கலப்பைத் தற்காத்துப் பேசும் ஒரே ஒரு விஷயத்தில் மட்டும் தான் அவர் புதியன புகுதலை ஆதரிப்பது. மற்ற எல்லாவற்றிலும் அவரைப் போல பழமைவாதம், மரபுவாதம் பேசுபவர் யாரும் இல்லை. திருவாசகத்தை மேற்கத்திய மரபிசையில் பாடினால் "கோவிலில் கேட்கக் கூடியதாக இல்லை; சர்ச்சிற்கு உகந்ததாக இருக்கலாம். துதி, தமாஷாகி விடுவது ஏற்கக் கூடியது அல்ல" என்று கருத்து உதிர்ப்பார். அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற சட்டம் கொண்டுவரப்பட்டபோது துக்ளக்கின் குதர்க்க வாதம் இப்படி போகிறது:

"நாளை ஒரு அரசு 'அனைத்து மதத்தினரும் அர்ச்சகர் ஆகலாம்' என்று ஏன் உத்தரவிட முடியாது? ... நாளையே ஒரு அரசு, கோவில் அர்ச்சகர்கள் திறந்த மார்புடன், கச்சம் வைத்த வேட்டியைக் கட்டிக்கொண்டு அர்ச்சனை செய்வது அநாகரிகமாக இருக்கிறது, இது இன்டீஸன்ட் எக்ஸ்போஷர், அதனால் இனி அர்ச்சகர்கள் பாண்ட், ஷர்ட் அணிந்துதான் அர்ச்சனை செய்வார்கள் என்று உத்திரவிடமுடியாதா? ...கோவிலில் நைவேத்யமாகப் படைப்பது, அசைவ உணவு சாப்பிடுபவர்களை இழிவுபடுத்துவதாக இருக்கிறது. அதனால் இனி எல்லா கோவில்களிலும் அசைவ உணவு நைவேத்யம் செய்யப்படலாம். ... சிக்கன் மட்டன் கருவாடு போன்றவையும் தெய்வங்களுக்கு நைவேத்யம் செய்யப்படலாம்... பெண்களும் அர்ச்சகர்கள் ஆகலாமே? ...இன்னும் கொஞ்சம் புரட்சி செய்யலாம். மாதவிலக்கு நாட்களிலும் அந்த அர்ச்சகிகள் கோவிலில் அர்ச்சனை செய்யலாம்."

இந்த அளவு பழமைவாத சிந்தனைகளை வெளிப்படுத்தி தன் மரபை காக்கும் ஒருவருக்கு, தொன்மையான ஒரு மொழி சிதைந்து சீரழிவதை தடுக்க முயன்றால் ஏன் கோபம் வருகிறது? மற்ற மொழிகள் விஷயத்திலும் இப்படித்தான் இருக்கிறாரா என்றால் இல்லை. மத்திய அரசும் அதன் ஊடகங்களும் இந்தியில் வழக்கில் இருக்கும் ஏராளமான உருது/பாரசீக சொற்களை அகற்றி அவற்றுக்குப் பதில் சமஸ்கிருத சொற்களை புகுத்தி இந்தி மொழியை உருமாற்றும் வேலையை திட்டமிட்டு செய்துவருவதைப் பற்றியெல்லாம் நானறிந்து அவர் எதுவும் சொன்னதில்லை.

வசந்தன்,

உண்மைதான். எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி இருந்தது தமிழ்நாடாக இல்லாமல் இருந்திருந்தால் திரிப்பாளர்கள் தங்கள் வேலையைக் காட்டியிருக்கக்கூடும் ;-)

இராம.கி அய்யா,

விரிவான விளக்கத்துக்கு நன்றி. "எளிமைவிரும்பிகள்" உங்களுக்கும் தொடர்ந்து தொந்தரவு கொடுத்து வருவதை அறிவேன்.

முத்துகுமரன், கவிதா, மலைநாடான், செல்வநாயகி, சுந்தர், பொன்ஸ், வாசகன், தமிழினியன், சுல்தான், பிரபு, ரவிசங்கர், கல்ஃப் தமிழன், திரு, அனானிகள்: உங்கள் வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி.

/ இந்துத்துவ கருத்தியலும், நாசிக் கொள்கையும் ஒரே மாதிரியானவை என்பதை அறிவிக்கிறார்கள். /
http://wandererwaves-o.blogspot.com/2007/04/blog-post_23.html

நேற்றிரவு இலக்கணம் கற்பித்துவிட்டுப் போன அனானி நண்பரிடம் கேட்க நினைத்து அரைத்தூக்கத்தில் இருந்ததால் கேட்காமல் விட்டது:

"எனது குடும்பம் குறித்து நெருங்கிப் பழகியவர்களிடம் மட்டுமே தகவல்களைப் பகிர்ந்துக்கொள்வேன்" என்று எழுதினால் எப்படிப் புரிந்துக்கொள்வீர்கள்?

"எனது குடும்பம் குறித்து" என்பது "நெருங்கிப் பழகியவர்கள்" என்பதற்கான அடைமொழியா அல்லது "தகவல்களைப் பகிர்ந்துக்கொள்வேன்" என்பதற்கான அடைமொழியா?

Mookku Sundar எழுதியது:
//மற்றவர்களிடமிருந்து கற்றுக்கொள்ள ஏதாவது இருக்கிறதா என்று தேடுகிற பார்வையாளனுக்கு எங்கே முள் இறங்குறது அல்லது ஏறுகிறது என்று பார்ப்பதில், அதை சொல்வதில் தயக்கம் ஏதும் இல்லை. கருத்துக்களை பரப்ப முனைபவர்களுக்கும், ஒரு கருத்தியலை உருவாக்க முனைபவர்களுக்கும் முள் தெரிவது கொஞ்சம் கடினம்தான். நுகர்வோருக்கும் கடைக்காரனுக்கும் உள்ள வித்தியாசம்!!!!//

இதை நான் உங்களுக்கும் சொல்லலாம்தானே :-)

Dear Jegath,
Though there are differences in your views, I really apperciate the way you are expressing your views.
Particularly, the views about contemporary youth is absolute fact. Being taught English partially and learnt Tamil partially they form a group called "Tanglish people". And worst thing is that they not ony feel proud of it but also make fun of people who would like to be perfect.
This way we are unique and shameless society in world. Excuse me that I dont have Tamil fonts.
Murali.

கறுப்பர்கள்

கறுப்பர்கள் என்று இன்னும் ஒருவர் தமிழில் எழுதுகிறார் என்றால் அது வெட்கக்கேடு, தீங்கு, மானக்கேடு என்று உலகிற்த்கு உரத்து சொல்லும் காலம் வந்து விட்டது.
மஞ்சள் நிறத்தவர், கறுப்பர் என்று தோல் நிற அடிப்படையில் விளிப்பதும், எழுதுவதும் தேவையற்றது. அது அம்மக்களை இழிவுபடுத்துவதாகும்.இதில் காலனியாதிக்க சிந்தனைதான் தெரிகிறது. ஆப்பிரிக்க அமெரிக்கர் என்ற பொருத்தமான சொல் இருக்க இன்னும் கறுப்பர் என்று எழுதுவது
தவிர்க்கப்பட வேண்டிய ஒன்று. இதையே வேறொருவர் எழுதியிருந்தால் சகத் அதற்கு ஒரு நீண்ட பதில் எழுதி ஆதிக்க வெறி, நிற வெறி இன்ன பிறவென்று சாமியாடியிருப்பார். சுடலைமாடன் என்பதால் கண்டு கொள்ளாமல் விட்டுவிட்டார் . ஆதிக்க சக்திகளை எதிர்க்கிறோம், அது இது என்று சவுண்டு விடும் பார்ட்டிகளின் ஆழ்மனதில் இருப்பது ஆதிக்க வெறி பிடித்தவர்கள் உருவாக்கிய இழி சொற்களும்,வசை வார்த்தைகளும்.

முரளி, நன்றி.

அனானி: கருத்து சொல்வதற்கு முன் அதைப் பற்றி கொஞ்சம் தெரிந்துக்கொள்ள முயற்சித்தால் விளக்கம் கொடுப்பவர்களது நேரமாவது மிச்சமாகுமில்லையா?

கறுப்பர்கள் / கருப்பர்கள் (Blacks) என்பது காலனியாதிக்க வெள்ளையர்களால் உருவாக்கப்பட்ட Negro, Coloured போன்ற சொற்களை நிராகரித்து கறுப்பின மக்கள் தாங்களாகவே தேர்ந்தெடுத்துக்கொண்டது. இந்தியாவில் பஞ்சமர், அரிஜன் போன்ற சொற்களை நிராகரித்து தலித் என்ற சொல்லை அந்த மக்களே தேர்வு செய்தது போல. Blacks, Whites போன்றவை உலக அளவில் பெரிதும் மதிக்கப்படும், இனவாத தொனியுடைய சொற்களை முற்றாகத் தவிர்க்கும் எத்தனையோ ஊடகங்களால் பயன்படுத்தப்படும் சொல். விக்கிப்பீடியா கட்டுரையிலிருந்து:

"As the Civil Rights Movement evolved in the 1960s into the Black Power/Black Pride movement, these older terms lost favor and became associated with the pre-civil-rights situation of Blacks in America. Through this movement, the terms Black and Afro-American both emerged into common usage in the late 1960s. Due to this legacy, by 1980, the term Black had become accepted by a majority of Americans of African descent, and had also became the referential term applied by White Americans in general."

"...This usage of the term African American generally refers to black African ancestry and American nationality. But generally speaking, the term does not include black immigrants from the Caribbean, Latin America and the continent of Africa and whites and Asians from any African country. Still, there is disagreement as to whether the term should refer only to blacks who can trace their American roots to the colonial period or slavery, or whether it also should include black immigrants from Africa, the Caribbean and Latin America and their descendants."

கறுப்பர்கள் என்பது தமிழ் இணையத்தில் நூற்றுக்கணக்கானவர்களால் பயன்படுத்தப்படும் சொல். நானும் என் பதிவுகளில் பலமுறை பயன்படுத்தியிருக்கிறேன். இதில் இனவாதத் தொனி என்ற பேச்சுக்கே இடமில்லை.

//நீங்கள் சொல்வதுபடி பார்த்தாலும் "தகவல்களை" என்பது தனித்து தானே நிற்கிறது? "பதிவர்களைப் பற்றிய" என்ற முன்னொட்டுடன் இல்லையே? அதை எடுத்து ஒட்டியது அல்லது "இட்டுக்கட்டியது" யார்? ஏன், அதே வாக்கியத்திலிருக்கும் "எமது செயற்பாடுகள் குறித்து" என்ற சொற்றொடரை எடுத்து ஒட்டியிருக்கலாமே?//

ஜெகத்,
ஐபி அட்ரஸ் கொடுத்தது தமிழ்மணம் என்று இட்டுக்கட்டுபவர்களுக்கு 'எமது செயல் பாடுகளில்' க்கு பதிலாக ரவுடிகளுக்கு என்று இணைப்பது முடியாத செயலா ?
:)

பொய்யை திரும்ப திரும்ப சொன்னால் உண்மையாகிடும் என்று நினைக்கிறாங்கப் போல... அவுங்க 4 பேர் சொல்வதை அந்த நாள் பேருக்கு மேல் எவரும் நம்மப் போவதில்லை.

:)

எத்தனைக் காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே.

//Anonymous எழுதியது:
/ இந்துத்துவ கருத்தியலும், நாசிக் கொள்கையும் ஒரே மாதிரியானவை என்பதை அறிவிக்கிறார்கள். /
http://wandererwaves-o.blogspot.com/2007/04/blog-post_23.html
//

அனானி,
அருமையான இணைப்பைத் தந்தமைக்கு நன்றி.
பலநேரங்களில் நிறைய எழுதுவதைவிடவும் இப்படியொரு படம்போடுவது சிறப்பாக இருக்கும்.

/கறுப்பர்கள் என்பது தமிழ் இணையத்தில் நூற்றுக்கணக்கானவர்களால் பயன்படுத்தப்படும் சொல்/
முரண்நகையாக, கறுப்பர்கள் என்ற சொல் இழிவென்று கறுப்பாய் இருப்பதை இழிவென்று கருதுகின்றவர்களுக்குத்தான் தோன்றும்.
அநாநி தன் பூனைக்குட்டியின் வாசஸ்தல வாயிலைத் திறந்துவிட்டிருக்கிறார்.

//கறுப்பர்கள் என்று இன்னும் ஒருவர் தமிழில் எழுதுகிறார் என்றால் அது வெட்கக்கேடு, தீங்கு, மானக்கேடு என்று உலகிற்த்கு உரத்து சொல்லும் காலம் வந்து விட்டது. மஞ்சள் நிறத்தவர், கறுப்பர் என்று தோல் நிற அடிப்படையில் விளிப்பதும், எழுதுவதும் தேவையற்றது. அது அம்மக்களை இழிவுபடுத்துவதாகும்.இதில் காலனியாதிக்க சிந்தனைதான் தெரிகிறது. ஆப்பிரிக்க அமெரிக்கர் என்ற பொருத்தமான சொல் இருக்க இன்னும் கறுப்பர் என்று எழுதுவது தவிர்க்கப்பட வேண்டிய ஒன்று.//

அமெரிக்காவில் ப்ளாக்ஸ் என்பது கறுப்பர்களாலும் வெள்ளையர்களாலும் சர்வசாதாரணமாகப் புழங்கப்படும் வார்த்தை - ஆப்பிரிக்க அமெரிக்கர்கள் என்பது புழக்கத்தில் அதிகம் இருந்தாலும், கறுப்பர் என்ற வார்த்தைக்கு ஏதும் இனவாத அர்த்தம் கிடையாது. போலீஸ் அறிவிப்புகளிலேயே black male, white male, black female என்றுதான் அறிவிக்கப்படுகின்றன. உமது காவிக் கண்ணாடி வழியாகத் தெரிவதுதான் உலகம் எனில், முதலில் அந்தக் கண்ணாடியைக் கழற்றி அமெரிக்கப் போலீஸுக்கு மாட்டவும் - ஒத்து வருகிறதா பார்ப்போம்.

//இதையே வேறொருவர் எழுதியிருந்தால் சகத் அதற்கு ஒரு நீண்ட பதில் எழுதி ஆதிக்க வெறி, நிற வெறி இன்ன பிறவென்று சாமியாடியிருப்பார்.//

அதுதானே விசயம். முறுக்கிக்கொண்டு இங்கே பின்னூட்டம் போடும் சங்கதி சுடலைமாடனின் பின்னூட்டம் குறித்து கூட அல்ல. சகத்தின் இந்தப் பதிவு தந்த எரிச்சல். அடுத்து கரெக்டாக வைக்கிறீர்கள் பாருங்கள் ஒரு திரிப்பு -

//ஆதிக்க சக்திகளை எதிர்க்கிறோம், அது இது என்று சவுண்டு விடும் பார்ட்டிகளின் ஆழ்மனதில் இருப்பது ஆதிக்க வெறி பிடித்தவர்கள் உருவாக்கிய இழி சொற்களும்,வசை வார்த்தைகளும்.//

அடடா, அடடா, காணக் கண் கோடி போதாது. ஏன், மிசி நரி என்று எழுதினால் மட்டும் இனிக்குமே? ஏனய்யா இப்படி சில்லறை அரசியல் செய்து உம் மேலிருக்கும் மதிப்பை நீரே இறக்கிக்கொள்கிறீர்? இல்லை அசல் மதிப்பே சில சில்லறை அளவுதானா?

//Anonymous எழுதியது:
கறுப்பர்கள், கறுப்பர்கள் என்று இன்னும் ஒருவர் தமிழில் எழுதுகிறார் என்றால் அது வெட்கக்கேடு, தீங்கு, மானக்கேடு என்று உலகிற்த்கு உரத்து சொல்லும் காலம் வந்து விட்டது.
மஞ்சள் நிறத்தவர், கறுப்பர் என்று தோல் நிற அடிப்படையில் விளிப்பதும், எழுதுவதும் தேவையற்றது. அது அம்மக்களை இழிவுபடுத்துவதாகும்.இதில் காலனியாதிக்க சிந்தனைதான் தெரிகிறது.//

ஆகாகா, இந்த அனானிக்குத்தான் எந்த அளவு கரிசனம். ஆனால் இந்த அனானி எந்த உலகத்தில் வாழ்கிறார் என்றுதான் தெரியவில்லை. இணையத்தில் ஆவியாக வாழும் இவர் இப்படி முட்டாள்தனமாக பின்னூட்டமிடும் முன்பு சுடலைமாடன் அப்படி எழுதுவது சரியா எனக் கேட்டிருக்கலாம். அல்லது அட்லாண்டிக்குக்கு அப்பால் என்ன நடக்கிறது என்று தன் நண்பர்களைக் கேட்டாவது தெரிந்து கொண்டிருக்கலாம். அல்லது இன்று
கறுப்பர்-வெள்ளையர் பற்றி சிந்திக்க வைக்கும் சிறியதோர் பதிவு போட்டிருக்கும் கனடா வெங்கட்டிடமாவது பின்னூட்டமிட்டுக் கேட்டுத் தெளிந்து கொண்டிருக்கலாம்.

இந்த அனானிக்குச் சொல்லிப் பயனில்லை என்றாலும், ஜெகத் இதைப் பற்றி விளக்கமாகப் பதில் சொல்லியிருக்கிறார். அனானி படித்துத் தெளிவதற்காக இந்த சுட்டியை மட்டும் இங்கு அளிக்கிறேன். மேலும் இனத்தால் இல்லாவிட்டாலும், நிறத்தால் நானும் என்னை கறுப்பர் என்று சொல்லிக் கொள்ளவே பெருமைப் படுகிறேன்.

http://en.wikipedia.org/wiki/Black_pride

ஜெகத்துக்கு என் நன்றி. சோ. ராமசாமியின் இரட்டை நிலைப்பாடு பற்றியும் சரியாக எடுத்துக்காட்டியிருந்தீர்கள்.

நன்றி - சொ.சங்கரபாண்டி

// (இதே ஆட்கள் ஒரு ஆங்கிலக் கட்டுரை புரியவில்லை என்றால் அதன் ஆசிரியரிடம் எளிமையாக எழுதுங்கள் என்று கனவில் கூட கேட்கமாட்டார்கள். அகராதியின் துணையுடன் நேரம் செலவிட்டு உழைத்து புரிந்துக்கொள்வார்கள். எனக்கு எளிமையான ஆங்கிலம் மட்டும் தான் புரியும் என்று சொல்வதை விட நாற்சந்தியில் அம்மணமாக நிற்பார்கள். ஆனால் தமிழில் மட்டும் எளிமை வேண்டும்.)//

//இத்தகையவர்களுக்கு தமிழ் வலைப்பதிவுகளில் ஆழமான அல்லது "புரியாத" விஷயங்கள் பேசப்படுவது அன்னியமான ஒன்றாகத் தெரிகிறது. தங்கள் வேலை அலுப்பைப் போக்க அவ்வப்போது வந்து விளையாடிச் செல்லும் களிப்பிடமாகவே (எழுத்துப்பிழை அல்ல) இவர்கள் தமிழ் வலைப்பதிவுகளை காண்கிறார்கள். குமுதம், விகடன், குங்குமம் போன்றவற்றின் நீட்சியாக என்று சொல்லலாம். அதே மொழியைப் பேசி, அதே நையாண்டி மேளத்தை வாசித்து, அதே வெற்றுக் கோஷங்களை எழுப்பி...//

நெத்தியடி.... தமிழ்மணம் மீது அவதூறு கிளப்பும் மத வெறியர்கள் அவர்களது ஆதரவாளர்களை மட்டும் விமர்சிப்பதாக இல்லாமல் அதன் பின்னே இருக்கும் உளவியல் அம்சங்களையும் வெகு அழகாக சொல்லியுள்ளீர்கள். அதுவும் மேற்சொன்ன வரிகள் தமிழ்மணம் உள்ளிட்ட இணையத்தை சந்தை பத்திர்க்கைகளின் கழிசடைத்தனத்தை வாங்கி நுகரும் நீட்சி ஊடகமாக கருதி களிப்பதை நன்கு விமர்சித்துள்ளீர்கள்.

அனேகமாக உங்களது இந்த கட்டுரை அந்த மேற்சொன்ன ஆட்களில் பெரும்பாலோருக்கு புரியாது.