புதன், செப்டம்பர் 3, 2008

கிரிக்கெட்டும் காளைச்சாணமும்

சிங்கப்பூரின் 'ஸ்ட்ரெயிட்ஸ் டைம்ஸ்' நாளிதழ் ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியாவின் பரிதாப நிலையின் பின்னுள்ள காரணங்களை ஆராயும் நோக்கில் "1.1 billion people, only 1 gold" என்ற தலைப்பில் ஒரு கட்டுரையை வெளியிட்டிருந்தது. ஒரு இந்தியரால் எழுதப்பட்ட அக்கட்டுரையில் பேட்டிக் காணப்பட்ட மற்றொரு இந்தியரின் வக்காலத்து இப்படி போகிறது:

"Unlike in the West, we Indians do not worship the human body...We see it as a mere temporary vehicle for the soul's journey towards salvation. And so we neglect it. We do not take pride in our physiques."

இப்படி காளைச்சாணத்தை வீசியெறிவது ஒலிம்பிக்கில் ஒரு போட்டியாகச் சேர்க்கப்பட்டால் நம்மவர்கள் அனைத்துப் பதக்கங்களையும் வழித்தெடுத்துவிடுவார்கள் என்பது நியாயமான ஐயங்களுக்கு அப்பாற்பட்டது. உடல் நிரந்தரமானது என்று உலகில் எந்த மதமோ பண்பாடோ கருதுவதாகத் தெரியவில்லை. இந்தியர்கள் "உடலை வழிபடாதிருத்தல்" பற்றி சொல்வதென்றால் இந்திய மரபு இலக்கியங்கள் கதைமாந்தர்களின் உடல் பற்றிய அளவுக்கதிகமான விவரிப்புகளாலும் புகழ்ச்சிகளினாலும் நிறைந்திருப்பதை அவற்றுடன் சிறிதளவு அறிமுகம் உள்ளவர்கள் கூட அறிந்திருப்பார்கள். விளையாட்டுகளில் இந்தியாவின் மிகவும் பின்தங்கிய நிலைக்கு ஆன்மீக/தத்துவ அடிப்படையிலான ஒரு காரணத்தை சொல்லியே ஆகவேண்டும் என்றால் இந்தியர்கள் விதி, கருமவினை ஆகியவற்றின் மீது வைத்திருக்கும் தீவிர நம்பிக்கையை சொல்லலாம். ஒவ்வொருவரும் தனக்கு "விதிக்கப்பட்ட" நிலையை ஏற்றுக்கொண்டு அதை மாற்றுவதற்கு எவ்வகையிலும் முயலாமலிருக்க வலியுறுத்தப்படும் ஒரு பண்பாட்டில் விளையாட்டுகளில் சிறந்து விளங்கத் தேவையான ஊக்கமும் போட்டித்தன்மையும் இருக்க வாய்ப்பில்லை என்று சொல்லலாம்.

நூற்றிப்பத்து கோடி மக்களைக் கொண்ட நாளைய வல்லரசு சைதாப்பேட்டையை விட சற்று பெரியதாக இருக்கும் நாடுகள் சாதித்த அளவுக்குக் கூட விளையாட்டுக்களில் சாதிக்க முடியாமல் போனது ஏன் என்பது சமூகவியலாளர்களால் ஆராயப்படவேண்டிய முக்கியமானக் கேள்வி. இதற்கு வழக்கமாக சொல்லப்படும் காரணங்கள் மொக்கையானவை. மேற்கத்தியவர்களோடு ஒப்பிடுகையில் இந்தியர்களின் உயரமும் உடல்வலுவும் குறைவாக இருப்பதே காரணம் என்பதை சீனர்களின் மிகப்பெரிய வெற்றி உடைத்தெறிகிறது. இந்தியாவை விட அதிக வறுமை நிலவும் ஆப்பிரிக்க நாடுகள் கூட சில குறிப்பிட்ட விளையாட்டுகளில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. இந்தியர்கள் அடிப்படையிலேயே விளையாட்டுக்களில் ஆர்வமற்றவர்கள் என்றால், இந்தியாவில் கிரிக்கெட்டின் மீது நிலவும் வெறித்தனமான மோகத்திற்கு விளக்கம் தேவைப்படுகிறது.

*****

அவுட்லுக் இதழில் எஸ். ஆனந்த் என்ற பெயரில் எழுதிக்கொண்டிருந்த தலித் எழுத்தாளர் சிறியவன் ஆனந்த் இந்திய ஊடகங்களில் பொதுவாக பேசப்படாத பேசுபொருட்களைக் குறித்து அதிகம் எழுதுபவர். இளையராஜா என்னும் புனித பிம்பத்திடம் சமூக நோக்கங்களுக்காக இசையைப் பயன்படுத்துதல் குறித்தும், கம்யூனிஸ்ட் மேடைப் பாடகரான அவரது அண்ணன் வரதராஜன் குறித்தும், ஆந்திராவின் கத்தாரைக் குறித்தும், சமூக உணர்வுடைய மற்ற இசைக்கலைஞர்கள் குறித்தும் கேட்டு பதிலாக பு.பி.யை "நான் அந்தக் குப்பைகளுக்கெல்லாம் அப்பாற்பட்டவன்" என்று திருவாய் மலரவைத்தது இவர்தான். ஆனந்த் கிரிக்கெட்டை சமூகக் கண்ணோட்டத்தில் ஆராயும் பல விரிவானக் கட்டுரைகளை எழுதியிருக்கிறார். இந்தியாவில் கிரிக்கெட்டின் சமூகப் பின்னணி மற்றும் வரலாறு குறித்து புத்தகங்கள் எழுதியுள்ள ராமச்சந்திர குகா, ஆஷிஷ் நந்தி ஆகியோரை பல இடங்களில் மேற்கோள் காட்டியே ஆனந்த் தன் கட்டுரைகளை எழுதியுள்ளார். (Cricket historian என்று இந்திய ஊடகங்களால் பட்டம் சூட்டப்பட்டிருக்கும் குகாவைக் குறிப்பிடாமல் கிரிக்கெட் ஆதிக்கத்திற்கு பின்னுள்ள சமூகக் காரணங்களை யாரும் எழுதமுடியாத ஒரு நிலை நிலவுகிறது. நான் முன்பு கிரிக்கெட்டை லேசாகத் தொட்டு எழுதியபோது ஆங்கில அனானிகள் அவதரித்து குகாவைப் படித்தாயா, குன்றத்தில் ஏறினாயா என்றெல்லாம் குடைந்தெடுத்தார்கள்.)

மொத்தம் பதினைந்துப் பக்கங்களுக்கு மேல் நீளும் ஆனந்தின் கிரிக்கெட் பற்றியக் கட்டுரைகளை அவுட்லுக் இணையதளத்தில் பதிவு செய்தவர்கள் மட்டுமே படிக்கமுடியும். கட்டுரைகளிலுள்ள சில முக்கியமானக் கருத்துக்களை மட்டும் கீழே (நீலத்தில்) தொகுத்து அளித்திருக்கிறேன். (வரிக்கு வரியான மொழிபெயர்ப்பு அல்ல.)

  • இந்தியாவில் முதன்முதலில் கிரிக்கெட் விளையாடத் தொடங்கியது வேலையற்ற ராஜாக்களும் ஆங்கிலேயர்களை நகலெடுத்த பார்சிகளும் தான் என்றாலும் 1947-க்கு பிறகு மாநகரங்களைச் சேர்ந்த பார்ப்பனர்களே கிரிக்கெட்டில் முழுமையான ஆதிக்கம் செலுத்திவந்தனர். அறுபதுகளிலிருந்து தொண்ணூறுகள் வரை நடந்த 'டெஸ்ட்' போட்டிகளில் விளையாடிய பதினொன்று பேர் கொண்ட அணிகளில் எப்போதும் குறைந்தது ஆறிலிருந்து ஒன்பது பேர் வரை பார்ப்பனர்களாக இருந்திருக்கிறார்கள். அவர்கள் மக்கட்தொகையில் ஐந்து விழுக்காட்டுக்கு குறைவாக இருக்கும் நிலையில் இது எப்படி சாத்தியமானது என்பது ஆராயப்படவில்லை. கிரிக்கெட் அணியில் இடம் பெற்ற பார்ப்பனரல்லாதவர்களும் சமூகத்தின் மேல் அடுக்குகளிலிருந்தே வந்தார்கள். இதற்கு மாறாக ஹாக்கி அணிகளில் பெரும்பாலும் பிற்படுத்தப்பட்டோர், தலித், சீக்கியர், பழங்குடியினர் ஆகியோர் அதிகமாக இடம் பெற்றிருக்கிறார்கள். கடந்த (2002) ஹாக்கி உலக கோப்பையில் விளையாடிய இந்திய அணியில் பார்ப்பனர் ஒருவர் கூட இல்லை.
  • ஹாக்கி, காற்பந்து போன்ற குழு விளையாட்டுக்களுடன் ஒப்பிடுகையில் கிரிக்கெட்டில் உடல் உழைப்பிற்கானத் தேவை மிகவும் குறைவு என்பது உடல் உழைப்பை இழிவாகக் கருதி ஒதுக்கிய இந்திய 'உயர்'சாதிகள் அதன் மீது மோகம் கொண்டதற்கு ஒரு முக்கியக் காரணம். ஒரு கிரிக்கெட் ஆட்டக்காரர் நீண்ட நேரம் ஒரே இடத்தில் நின்றுக்கொண்டிருப்பதற்கான வாய்ப்பு அதிகம். மிகுந்த நேர விரயத்தை ஏற்படுத்தும் கிரிக்கெட் விளையாட்டில் தொடர்ந்து ஈடுபடுவது உழைக்காத வர்க்கங்களை சேர்ந்தவர்களுக்கு மட்டுமே சாத்தியமானது. காவஸ்கர், குண்டப்பா விஸ்வநாத் போன்ற ஆட்டக்காரர்கள் வைத்திருந்த தொப்பைகளின் அளவுக்கு அவர்களால் ஹாக்கி போன்ற விளையாட்டுக்களில் நுழைந்திருக்கக் கூட முடியாது. சற்று அதிகமாக உடல் உழைப்புத் தேவைப்படும் வேகப்பந்து வீச்சு போன்ற பிரிவுகளில் கபில் தேவைத் தவிர இந்தியர் யாரும் உலக அளவில் புகழ்பெற்றதில்லை. இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் பெரும்பாலும் கபில் தேவைப் போல மாமிசம் உண்ணும் சாதியினராகத் தான் இருந்திருக்கிறார்கள். இதற்கு விதிவிலக்காக இருந்த, "உலகின் மிகவேகமான சைவப் பந்துவீச்சாளர்" என்று அழைக்கப்பட்ட ஸ்ரீநாத் பின்பு தன் பயிற்சியாளரின் அறிவுரைப்படி மாமிசம் உண்ணுபவராக மாறினார். ஒப்புநோக்க அதிக உடல் உழைப்பைக் கோரும் ஒருநாள் போட்டிகள் மேலோங்கியிருப்பது தற்போது மாநகரங்களைச் சேர்ந்த பார்ப்பனர்களின் ஆதிக்கத்தை சற்றுக் குறைத்திருக்கிறது. அண்மைக்காலமாக சிறு நகரங்களைச் சேர்ந்த, ஆங்கிலம் பேசாத ஆட்டக்காரர்கள் இந்திய அணியில் இடம்பெறத் தொடங்கியிருக்கிறார்கள்.
  • கிரிக்கெட் உடல் தொடுகைக்கு தேவையில்லாத குழு விளையாட்டு என்பது பார்ப்பனர்கள் அதை (முன்பு) விரும்ப ஒரு காரணமாக இருந்தது என்று ராமசந்திர குகா குறிப்பிடுகிறார்.
  • பெரும்பாலான நாடுகளில் விளையாட்டுக்கள் ஒடுக்கப்பட்டப் பிரிவினர் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தும் இடமாக இருந்திருக்கிறது. மாரடோனா, பெலே, மைக் டைசன், மாஜிக் ஜாண்சன், மைக்கேல் ஜோர்டன் என்று எத்தனையோ பேர் விளையாட்டின் மூலமே சேரிகளிலிருந்து உச்சத்திற்கு வந்திருக்கிறார்கள். ஆனால் இந்தியாவில், குறிப்பாகக் கிரிக்கெட்டில், இதற்கான சாத்தியங்கள் மிகவும் குறைவு. அபூர்வ விதிவிலக்குகளான வினோத் காம்ப்ளி, டொட்ட கணேஷ் போன்றவர்களால் திறமை இருந்தும் இந்திய கிரிக்கெட் சூழலில் நீடிக்க முடியவில்லை. காம்ப்ளியைத் தவிர வேறு எந்த தலித்தும் இந்தியாவுக்காக 'டெஸ்ட்' போட்டிகளிலோ ஒருநாள் போட்டிகளிலோ விளையாடியதில்லை. தலித் மற்றும் பழங்குடிகள் மிக அதிகமாக இடம்பெறும் ஹாக்கி போன்ற விளையாட்டுக்கள் கிரிக்கெட் ஆதிக்கத்தின் மூலம் ஓரங்கட்டப்படுகின்றன. தவிரவும் இந்திய ஹாக்கி அணி எவ்வளவு தான் சாதனைகள் புரிந்தாலும், கருப்பு நிறமுடைய இந்தியர்கள் புறக்கணிக்கப்படும் இந்திய ஊடகங்களில் கிரிக்கெட் ஆட்டக்காரர்களுக்கு கிடைக்கும் விளம்பர வாய்ப்புக்கள் தன்ராஜ் பிள்ளை போன்றவர்களுக்கு கிடைப்பது அரிது.
  • கிரிக்கெட் ஜனநாயகத்தன்மை அதிகம் இல்லாத ஒரு விளையாட்டு. கிரிக்கெட் தோன்றிய இங்கிலாந்து போன்ற நாடுகளில் அது தற்போது மக்களால் அதிகம் விரும்பப்படும் விளையாட்டாக இல்லை. காற்பந்து தான் அங்கு மிக பிரபலமாக உள்ளது. சாதி அமைப்பு பேணப்படும் இந்திய துணைக்கண்டத்தில் மட்டுமே கிரிக்கெட் மோகம் அளவுக்கு அதிகமாக உள்ளது.

*****

பிரச்சனை என்னவென்றால் இந்தியச் சூழலில் இதைப் பற்றி எல்லாம் பேசமுடியாது. அதிலும் குறிப்பாக இணையத்தில் ஆங்கிலத் தளங்களில் 'உயர்'சாதியினரின், குறிப்பாக பார்ப்பனர்களின், ஆதிக்கத்தைக் குறித்து விவாதிப்பது சற்றும் நடக்காத காரியம். என்.ஆர்.ஐ கம்ப்யூட்டர் பையன்களின் படை ஒன்று வந்திறங்கும். வழக்கமான தகுதி-திறமை காளைச்சாணம் வாரி எறியப்படும். இருபத்தோராம் நூற்றாண்டிலும் எல்லவற்றிலும் சாதியை இழுக்கும் குகைமனிதர்கள் மீது எல்லையற்ற அருவருப்பு வெளிப்படுத்தப்படும். சாதியைப் பார்க்காமல் அனைவரையும் இந்தியர்களாக பார்க்கவேண்டும் என்ற அறிவுரையும் இதிலும் இடஒதுக்கீடு வேண்டுமா என்ற நக்கலும் கலந்து ஒலிக்கும். சமூகத்தின் உயர் அடுக்குகளில் பிறந்ததன் காரணமாக கிடைத்த அனைத்து சாதகங்களையும் எவ்வித குற்ற உணர்வும் இல்லாமல் பயன்படுத்தி வெற்றிபெற்ற பின் சாதி ஆதிக்கத்தைப் பற்றி யாராவது சுட்டிக்காட்டினால் "சாதியா? அப்படீன்னா என்ன?" என்று பாவனை செய்யும் நவநாகரீக மைனர் குஞ்சுகளைப் போல் கொலைவெறியூட்டும் உயிரினங்கள் வேறு எதுவும் இல்லை. எவ்வித புள்ளிவிவரங்களும் இங்கு வேலைக்காகாது. பேரரசர் அம்மணமாக இருப்பதைப் படம் எடுத்துக் காட்டினால் கூட பட்டு வேட்டியும் தங்கச் சரிகையிட்ட அங்கவஸ்திரமும் கண்ணுக்குத் தெரியவில்லையா என்றுக் கேட்பார்கள்.

எஸ். ஆனந்த் இந்திய கிரிக்கெட்டை தன் நிழலுக்கு அடியில் வேறு எதையும் வளரவிடாத பெரும் ஆலமரம் என்கிறார். கடந்த கால் நூற்றாண்டு நிகழ்வுகளை ஆராய்ந்துப் பார்த்தால் இது மிகவும் உண்மை என்றே தோன்றுகிறது. எண்பதுகளின் தொடக்கம் வரை ('உலக' கோப்பை வெற்றி, தொலைக்காட்சிகளின் பெருக்கம் ஆகியவற்றிற்கு முன்பு வரை) கிரிக்கெட் மாநகரங்களுக்கு வெளியே அதிகம் ஆதரிக்கப்படாமலே இருந்தது. 1985-86 ஆண்டுகளில் பள்ளி மாணவர்களிடம் கிரிக்கெட் ஆர்வம் மிகத் தீவிரமடைந்த பிறகு கூட நாகர்கோயிலில் நான் படித்துக்கொண்டிருந்த பள்ளியில் கிரிக்கெட் விளையாடுவது தடை செய்யப்பட்டிருந்தது. உடற்பயிற்சி ஆசிரியர்கள் சோம்பேறிகளின் விளையாட்டு என்று சொல்லி கிரிக்கெட்டை வெறுத்தனர். ஹாக்கி மற்றும் காற்பந்து விளையாட்டுக்களுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. கேரளத்திலும் மேற்கு வங்காளத்திலும் நிலபிரபுத்துவ வேர்களைக் கொண்ட கிரிக்கெட்டுக்கு தீவிர எதிர்ப்பு இருந்தது. குறிப்பாக கேரளத்தில். எண்பதுகளில் பல மலையாளப் படங்களில் கிரிக்கெட் மோகத்தை கிண்டல் செய்யும் காட்சிகள் இடம்பெற்றிருந்தன. அந்த காலகட்டத்தில் கேரளத்திலிருந்து தான் இந்தியாவின் மிகச்சிறந்த காற்பந்து வீரர்களும் தடகள வீராங்கனைகளும் தோன்றினர். ஆனால் தற்போது கேரளத்தையும் கிரிக்கெட் மோகம் முழுமையாக ஆக்கிரமித்திருப்பதைக் காணமுடிகிறது. குரங்கு சேட்டைகளுக்குப் பெயர் போன ஸ்ரீசந்த் என்ற மலையாளி முதன்முதலாக இந்திய கிரிக்கெட் அணியில் இடம்பெற்றிருப்பது வருங்கால உஷாக்களுக்கும், ஷைனிக்களுக்கும், விஜயன்களுக்கும் கள்ளிப்பால் கொடுப்பதற்கு ஒப்பான ஒரு சோக நிகழ்வு.

14 மறுமொழிகள்:

» மணிவண்ணன் எழுதியது:

வழக்கம் போலவே அருமையான பதிவு. அதிவும் கடைசிக்கு முந்திய பத்தி நச்!
உங்களது கருத்துக்களுடன் பெரும்பாலும் ஒத்து போனாலும் சில விசயங்களில் உடன்பாடில்லை. விரிவாக எழுத நேரமில்லை...பிறிதொரு சமயம்.

இன்னும் சற்று அதிகமாக எழுதலாமே?

» அகஆராய்ச்சியாளன் எழுதியது:

மனப்பாடப்போட்டி,குண்டலினி யோகம்,செஸ்,கிரிக்கெட் போன்ற போட்டிகள் எல்லாம் ஒலிம்பிக்கில் இருந்தால் நிச்சயம் இந்தியாவை அடித்துக்கொள்ள முடியாது.அதிலும் செஸ்,கிரிக்கெட் போன்ற அறிவுபூர்வமான விளையாட்டுகளில் இந்தியர்கள் வல்லவர்களாம்.ஆய் மதனின் கண்டுபிடிப்பு இது.ஒன்று மதன் கடைந்தெடுத்த முட்டாளாக இருக்க வேண்டும் அல்லது மக்களை சுத்த கேணக்கிறுக்கர்கள் என்று நினைத்திருக்க வேண்டும், இந்த இரண்டில் அவர் எந்த வகை என்று ஒரு முடிவுக்கு வர இயலவில்லை.

இவரைப்போன்றவர்களை காலம் கழித்துக்கொண்டிருக்கிறது, என்றாலும் இந்தியாவின் வளர்ச்சிக்கு நந்தி மாதிரி வழிமறிப்பதில் இன்னும் வலுவாகத்தான் இருக்கிறார்கள்.

» Anonymous எழுதியது:

கேரம்,செஸ் - இரண்டிலும் சர்வதேச அளவில் முதலில் இருப்பவர்கள் இந்தியர்கள்.கிரிக்கெட்டில் இந்திய
அணி முதலிடத்தில் இருக்கிறதோ
இல்லையோ முக்கியமான அணியாக
இருக்கிறது.கேரம்,செஸ் இரண்டிற்கு அதை விளையாடுவோரின் சாதிக்கும் உள்ள தொடர்பு குறித்து சாணத்தை தெளிக்கும் முன் கேரத்தில் உலக
அளவில் முதலிடத்தில் இருப்பவர்
தலித் பெண் என்பதை சகத் அறிந்து
கொள்வது நல்லது.சிறியவன் ஆனந்த் செஸ்ஸில் இந்தியாவிலிருந்து இத்தனை கிராண்ட் மாஸ்டர்கள் இருப்பதற்கு காரணம் அதில் ஒருவரை ஒருவர்
தொட வேண்டியதில்லை என்பதால்
பார்பனர்கள் அதனை தெரிவு செய்தார்கள் என்று எழுதியிருக்க
கூடும்.அப்படியாயின் செஸ் விளையாடும் போது ஆரத் தழுவிக்
கொள்ள வேண்டும் என விதிகளை
மாற்றக் கோரி சர்வதேச செஸ் அமைப்பிற்கு மனு செய்யவும்.
செஸ் பார்பனர் அதிகம் விளையாடும் விளையாட்டு என்று ‘கண்டுபிடித்து' அதை தடை செய்யக் கோரி கலைஞருக்கு வீரமணி மூலம் கோரிக்கை விடுக்கவும்.

» Anonymous எழுதியது:

மூன்று பின்னூட்டங்கள்தானா. திராவிடதமிழர்கள்,சுடலைமாடன்கள்,
ஆங்கில அனானிகள் எங்கிருந்தாலும்
பின்னூட்டங்களிட்டு ஆதரவு தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

» ஜெகத் எழுதியது:

மணிவண்ணன், அகஆராய்ச்சியாளன்,

உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.

அனானியார்:

இரண்டு பின்னூட்டங்களுக்கும் நன்றி. என் பதிவின் முதன்மை வாசகர் நீங்கள் இருக்க மற்றவர்கள் ஆதரவு எதற்கு? :-) ஆங்கில அனானிகளுக்கு வேறு அழைப்பு விடுக்கிறீர்கள். வழக்கமாக அந்த வேலையையும் நீங்கள் தானே செய்வீர்கள்? அல்லது துர்காஷ்டமி அன்றைக்கு மட்டும் தான் ஆங்கில அனானியாக வருவீர்களா? அநாமதேயமாக எழுதுவது என்று முடிவெடுத்தப் பிறகு இப்படி கதாநாயகியின் முகத்தையும் சூரியகாந்தி பூவையும் மாறிமாறிக் காட்டி மண்டை நோகவைக்கும் பாரதிராசா போல உங்கள் தனி முத்திரைகளை வாரி இறைப்பது ஏனோ?

» -/சுடலை மாடன்/- எழுதியது:

நம்ம சூரிய அனானியின் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்வதற்காக இங்கே வந்து ”உள்ளேன் ஐயா” என்று மட்டும் சொல்லிவிட்டுப் போகிறேன் :-)

கொசுறு: தொடர்புடைய சன்னாசியின் பழைய இடுகை இங்கே:

http://dystocia.weblogs.us/archives/167

நன்றி - சொ.சங்கரபாண்டி

» ஜோ/Joe எழுதியது:

மீண்டும் ஒரு அருமையான பதிவி!

தயவு செய்து நிறைய எழுதுங்கள்.

» superlinks எழுதியது:

வணக்கம் ஜெகத் உங்களுக்கு இணைப்பு கொடுத்துள்ளேன் பாருங்கள்.

» ஜமாலன் எழுதியது:

நல்ல பதிவு. ஆனந்தின் கட்டுரை நூலாக வெளிவந்துள்ளது.

» Venkatramanan எழுதியது:

http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=137
A relevant link which says Corruption & improper coaching are the main culprits of poor Indian olympic performance. Can you reply for this?

Regards
Venkatramanan

» கோவை சிபி எழுதியது:

நல்ல பதிவு.உங்களின் எழுத்துநடை தரமான தமிழ் அரசியல் விமர்சகர்களுக்கு நிகரானது.
நிறைய எழுதுங்கள்.
புத்தகமாக வெளியிடுங்கள்.

» Anonymous எழுதியது:

>> வாழ்வனுபவமும் வாசிப்பனுபவமும்
புதன், செப்டம்பர் 3, 2008
கிரிக்கெட்டும் காளைச்சாணமும்

சிங்கப்பூரின் 'ஸ்ட்ரெயிட்ஸ் டைம்ஸ்' நாளிதழ் ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியாவின் பரிதாப நிலையின் பின்னுள்ள காரணங்களை ஆராயும் நோக்கில் "1.1 billion people, only 1 gold" என்ற தலைப்பில் ஒரு கட்டுரையை வெளியிட்டிருந்தது. ஒரு இந்தியரால் எழுதப்பட்ட அக்கட்டுரையில் பேட்டிக் காணப்பட்ட மற்றொரு இந்தியரின் வக்காலத்து இப்படி போகிறது:

"Unlike in the West, we Indians do not worship the human body...We see it as a mere temporary vehicle for the soul's journey towards salvation. And so we neglect it. We do not take pride in our physiques."

இப்படி காளைச்சாணத்தை வீசியெறிவது ஒலிம்பிக்கில் ஒரு போட்டியாகச் சேர்க்கப்பட்டால் நம்மவர்கள் அனைத்துப் பதக்கங்களையும் வழித்தெடுத்துவிடுவார்கள் என்பது நியாயமான ஐயங்களுக்கு அப்பாற்பட்டது. உடல் நிரந்தரமானது என்று உலகில் எந்த மதமோ பண்பாடோ கருதுவதாகத் தெரியவில்லை. இந்தியர்கள் "உடலை வழிபடாதிருத்தல்" பற்றி சொல்வதென்றால் இந்திய மரபு இலக்கியங்கள் கதைமாந்தர்களின் உடல் பற்றிய அளவுக்கதிகமான விவரிப்புகளாலும் புகழ்ச்சிகளினாலும் நிறைந்திருப்பதை அவற்றுடன் சிறிதளவு அறிமுகம் உள்ளவர்கள் கூட அறிந்திருப்பார்கள். விளையாட்டுகளில் இந்தியாவின் மிகவும் பின்தங்கிய நிலைக்கு ஆன்மீக/தத்துவ அடிப்படையிலான ஒரு காரணத்தை சொல்லியே ஆகவேண்டும் என்றால் இந்தியர்கள் விதி, கருமவினை ஆகியவற்றின் மீது வைத்திருக்கும் தீவிர நம்பிக்கையை சொல்லலாம். ஒவ்வொருவரும் தனக்கு "விதிக்கப்பட்ட" நிலையை ஏற்றுக்கொண்டு அதை மாற்றுவதற்கு எவ்வகையிலும் முயலாமலிருக்க வலியுறுத்தப்படும் ஒரு பண்பாட்டில் விளையாட்டுகளில் சிறந்து விளங்கத் தேவையான ஊக்கமும் போட்டித்தன்மையும் இருக்க வாய்ப்பில்லை என்று சொல்லலாம்.

நூற்றிப்பத்து கோடி மக்களைக் கொண்ட நாளைய வல்லரசு சைதாப்பேட்டையை விட சற்று பெரியதாக இருக்கும் நாடுகள் சாதித்த அளவுக்குக் கூட விளையாட்டுக்களில் சாதிக்க முடியாமல் போனது ஏன் என்பது சமூகவியலாளர்களால் ஆராயப்படவேண்டிய முக்கியமானக் கேள்வி. இதற்கு வழக்கமாக சொல்லப்படும் காரணங்கள் மொக்கையானவை. மேற்கத்தியவர்களோடு ஒப்பிடுகையில் இந்தியர்களின் உயரமும் உடல்வலுவும் குறைவாக இருப்பதே காரணம் என்பதை சீனர்களின் மிகப்பெரிய வெற்றி உடைத்தெறிகிறது. இந்தியாவை விட அதிக வறுமை நிலவும் ஆப்பிரிக்க நாடுகள் கூட சில குறிப்பிட்ட விளையாட்டுகளில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. இந்தியர்கள் அடிப்படையிலேயே விளையாட்டுக்களில் ஆர்வமற்றவர்கள் என்றால், இந்தியாவில் கிரிக்கெட்டின் மீது நிலவும் வெறித்தனமான மோகத்திற்கு விளக்கம் தேவைப்படுகிறது.

*****

அவுட்லுக் இதழில் எஸ். ஆனந்த் என்ற பெயரில் எழுதிக்கொண்டிருந்த தலித் எழுத்தாளர் சிறியவன் ஆனந்த் இந்திய ஊடகங்களில் பொதுவாக பேசப்படாத பேசுபொருட்களைக் குறித்து அதிகம் எழுதுபவர். இளையராஜா என்னும் புனித பிம்பத்திடம் சமூக நோக்கங்களுக்காக இசையைப் பயன்படுத்துதல் குறித்தும், கம்யூனிஸ்ட் மேடைப் பாடகரான அவரது அண்ணன் வரதராஜன் குறித்தும், ஆந்திராவின் கத்தாரைக் குறித்தும், சமூக உணர்வுடைய மற்ற இசைக்கலைஞர்கள் குறித்தும் கேட்டு பதிலாக பு.பி.யை "நான் அந்தக் குப்பைகளுக்கெல்லாம் அப்பாற்பட்டவன்" என்று திருவாய் மலரவைத்தது இவர்தான். ஆனந்த் கிரிக்கெட்டை சமூகக் கண்ணோட்டத்தில் ஆராயும் பல விரிவானக் கட்டுரைகளை எழுதியிருக்கிறார். இந்தியாவில் கிரிக்கெட்டின் சமூகப் பின்னணி மற்றும் வரலாறு குறித்து புத்தகங்கள் எழுதியுள்ள ராமச்சந்திர குகா, ஆஷிஷ் நந்தி ஆகியோரை பல இடங்களில் மேற்கோள் காட்டியே ஆனந்த் தன் கட்டுரைகளை எழுதியுள்ளார். (Cricket historian என்று இந்திய ஊடகங்களால் பட்டம் சூட்டப்பட்டிருக்கும் குகாவைக் குறிப்பிடாமல் கிரிக்கெட் ஆதிக்கத்திற்கு பின்னுள்ள சமூகக் காரணங்களை யாரும் எழுதமுடியாத ஒரு நிலை நிலவுகிறது. நான் முன்பு கிரிக்கெட்டை லேசாகத் தொட்டு எழுதியபோது ஆங்கில அனானிகள் அவதரித்து குகாவைப் படித்தாயா, குன்றத்தில் ஏறினாயா என்றெல்லாம் குடைந்தெடுத்தார்கள்.)

மொத்தம் பதினைந்துப் பக்கங்களுக்கு மேல் நீளும் ஆனந்தின் கிரிக்கெட் பற்றியக் கட்டுரைகளை அவுட்லுக் இணையதளத்தில் பதிவு செய்தவர்கள் மட்டுமே படிக்கமுடியும். கட்டுரைகளிலுள்ள சில முக்கியமானக் கருத்துக்களை மட்டும் கீழே (நீலத்தில்) தொகுத்து அளித்திருக்கிறேன். (வரிக்கு வரியான மொழிபெயர்ப்பு அல்ல.)

* இந்தியாவில் முதன்முதலில் கிரிக்கெட் விளையாடத் தொடங்கியது வேலையற்ற ராஜாக்களும் ஆங்கிலேயர்களை நகலெடுத்த பார்சிகளும் தான் என்றாலும் 1947-க்கு பிறகு மாநகரங்களைச் சேர்ந்த பார்ப்பனர்களே கிரிக்கெட்டில் முழுமையான ஆதிக்கம் செலுத்திவந்தனர். அறுபதுகளிலிருந்து தொண்ணூறுகள் வரை நடந்த 'டெஸ்ட்' போட்டிகளில் விளையாடிய பதினொன்று பேர் கொண்ட அணிகளில் எப்போதும் குறைந்தது ஆறிலிருந்து ஒன்பது பேர் வரை பார்ப்பனர்களாக இருந்திருக்கிறார்கள். அவர்கள் மக்கட்தொகையில் ஐந்து விழுக்காட்டுக்கு குறைவாக இருக்கும் நிலையில் இது எப்படி சாத்தியமானது என்பது ஆராயப்படவில்லை. கிரிக்கெட் அணியில் இடம் பெற்ற பார்ப்பனரல்லாதவர்களும் சமூகத்தின் மேல் அடுக்குகளிலிருந்தே வந்தார்கள். இதற்கு மாறாக ஹாக்கி அணிகளில் பெரும்பாலும் பிற்படுத்தப்பட்டோர், தலித், சீக்கியர், பழங்குடியினர் ஆகியோர் அதிகமாக இடம் பெற்றிருக்கிறார்கள். கடந்த (2002) ஹாக்கி உலக கோப்பையில் விளையாடிய இந்திய அணியில் பார்ப்பனர் ஒருவர் கூட இல்லை.

* ஹாக்கி, காற்பந்து போன்ற குழு விளையாட்டுக்களுடன் ஒப்பிடுகையில் கிரிக்கெட்டில் உடல் உழைப்பிற்கானத் தேவை மிகவும் குறைவு என்பது உடல் உழைப்பை இழிவாகக் கருதி ஒதுக்கிய இந்திய 'உயர்'சாதிகள் அதன் மீது மோகம் கொண்டதற்கு ஒரு முக்கியக் காரணம். ஒரு கிரிக்கெட் ஆட்டக்காரர் நீண்ட நேரம் ஒரே இடத்தில் நின்றுக்கொண்டிருப்பதற்கான வாய்ப்பு அதிகம். மிகுந்த நேர விரயத்தை ஏற்படுத்தும் கிரிக்கெட் விளையாட்டில் தொடர்ந்து ஈடுபடுவது உழைக்காத வர்க்கங்களை சேர்ந்தவர்களுக்கு மட்டுமே சாத்தியமானது. காவஸ்கர், குண்டப்பா விஸ்வநாத் போன்ற ஆட்டக்காரர்கள் வைத்திருந்த தொப்பைகளின் அளவுக்கு அவர்களால் ஹாக்கி போன்ற விளையாட்டுக்களில் நுழைந்திருக்கக் கூட முடியாது. சற்று அதிகமாக உடல் உழைப்புத் தேவைப்படும் வேகப்பந்து வீச்சு போன்ற பிரிவுகளில் கபில் தேவைத் தவிர இந்தியர் யாரும் உலக அளவில் புகழ்பெற்றதில்லை. இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் பெரும்பாலும் கபில் தேவைப் போல மாமிசம் உண்ணும் சாதியினராகத் தான் இருந்திருக்கிறார்கள். இதற்கு விதிவிலக்காக இருந்த, "உலகின் மிகவேகமான சைவப் பந்துவீச்சாளர்" என்று அழைக்கப்பட்ட ஸ்ரீநாத் பின்பு தன் பயிற்சியாளரின் அறிவுரைப்படி மாமிசம் உண்ணுபவராக மாறினார். ஒப்புநோக்க அதிக உடல் உழைப்பைக் கோரும் ஒருநாள் போட்டிகள் மேலோங்கியிருப்பது தற்போது மாநகரங்களைச் சேர்ந்த பார்ப்பனர்களின் ஆதிக்கத்தை சற்றுக் குறைத்திருக்கிறது. அண்மைக்காலமாக சிறு நகரங்களைச் சேர்ந்த, ஆங்கிலம் பேசாத ஆட்டக்காரர்கள் இந்திய அணியில் இடம்பெறத் தொடங்கியிருக்கிறார்கள்.

* கிரிக்கெட் உடல் தொடுகைக்கு தேவையில்லாத குழு விளையாட்டு என்பது பார்ப்பனர்கள் அதை (முன்பு) விரும்ப ஒரு காரணமாக இருந்தது என்று ராமசந்திர குகா குறிப்பிடுகிறார்.

* பெரும்பாலான நாடுகளில் விளையாட்டுக்கள் ஒடுக்கப்பட்டப் பிரிவினர் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தும் இடமாக இருந்திருக்கிறது. மாரடோனா, பெலே, மைக் டைசன், மாஜிக் ஜாண்சன், மைக்கேல் ஜோர்டன் என்று எத்தனையோ பேர் விளையாட்டின் மூலமே சேரிகளிலிருந்து உச்சத்திற்கு வந்திருக்கிறார்கள். ஆனால் இந்தியாவில், குறிப்பாகக் கிரிக்கெட்டில், இதற்கான சாத்தியங்கள் மிகவும் குறைவு. அபூர்வ விதிவிலக்குகளான வினோத் காம்ப்ளி, டொட்ட கணேஷ் போன்றவர்களால் திறமை இருந்தும் இந்திய கிரிக்கெட் சூழலில் நீடிக்க முடியவில்லை. காம்ப்ளியைத் தவிர வேறு எந்த தலித்தும் இந்தியாவுக்காக 'டெஸ்ட்' போட்டிகளிலோ ஒருநாள் போட்டிகளிலோ விளையாடியதில்லை. தலித் மற்றும் பழங்குடிகள் மிக அதிகமாக இடம்பெறும் ஹாக்கி போன்ற விளையாட்டுக்கள் கிரிக்கெட் ஆதிக்கத்தின் மூலம் ஓரங்கட்டப்படுகின்றன. தவிரவும் இந்திய ஹாக்கி அணி எவ்வளவு தான் சாதனைகள் புரிந்தாலும், கருப்பு நிறமுடைய இந்தியர்கள் புறக்கணிக்கப்படும் இந்திய ஊடகங்களில் கிரிக்கெட் ஆட்டக்காரர்களுக்கு கிடைக்கும் விளம்பர வாய்ப்புக்கள் தன்ராஜ் பிள்ளை போன்றவர்களுக்கு கிடைப்பது அரிது.

* கிரிக்கெட் ஜனநாயகத்தன்மை அதிகம் இல்லாத ஒரு விளையாட்டு. கிரிக்கெட் தோன்றிய இங்கிலாந்து போன்ற நாடுகளில் அது தற்போது மக்களால் அதிகம் விரும்பப்படும் விளையாட்டாக இல்லை. காற்பந்து தான் அங்கு மிக பிரபலமாக உள்ளது. சாதி அமைப்பு பேணப்படும் இந்திய துணைக்கண்டத்தில் மட்டுமே கிரிக்கெட் மோகம் அளவுக்கு அதிகமாக உள்ளது.

*****

பிரச்சனை என்னவென்றால் இந்தியச் சூழலில் இதைப் பற்றி எல்லாம் பேசமுடியாது. அதிலும் குறிப்பாக இணையத்தில் ஆங்கிலத் தளங்களில் 'உயர்'சாதியினரின், குறிப்பாக பார்ப்பனர்களின், ஆதிக்கத்தைக் குறித்து விவாதிப்பது சற்றும் நடக்காத காரியம். என்.ஆர்.ஐ கம்ப்யூட்டர் பையன்களின் படை ஒன்று வந்திறங்கும். வழக்கமான தகுதி-திறமை காளைச்சாணம் வாரி எறியப்படும். இருபத்தோராம் நூற்றாண்டிலும் எல்லவற்றிலும் சாதியை இழுக்கும் குகைமனிதர்கள் மீது எல்லையற்ற அருவருப்பு வெளிப்படுத்தப்படும். சாதியைப் பார்க்காமல் அனைவரையும் இந்தியர்களாக பார்க்கவேண்டும் என்ற அறிவுரையும் இதிலும் இடஒதுக்கீடு வேண்டுமா என்ற நக்கலும் கலந்து ஒலிக்கும். சமூகத்தின் உயர் அடுக்குகளில் பிறந்ததன் காரணமாக கிடைத்த அனைத்து சாதகங்களையும் எவ்வித குற்ற உணர்வும் இல்லாமல் பயன்படுத்தி வெற்றிபெற்ற பின் சாதி ஆதிக்கத்தைப் பற்றி யாராவது சுட்டிக்காட்டினால் "சாதியா? அப்படீன்னா என்ன?" என்று பாவனை செய்யும் நவநாகரீக மைனர் குஞ்சுகளைப் போல் கொலைவெறியூட்டும் உயிரினங்கள் வேறு எதுவும் இல்லை. எவ்வித புள்ளிவிவரங்களும் இங்கு வேலைக்காகாது. பேரரசர் அம்மணமாக இருப்பதைப் படம் எடுத்துக் காட்டினால் கூட பட்டு வேட்டியும் தங்கச் சரிகையிட்ட அங்கவஸ்திரமும் கண்ணுக்குத் தெரியவில்லையா என்றுக் கேட்பார்கள். <<

Absolutely fabulous lines!

Jagath you always make it worth the time spent on reading your blog!

» PRABHU RAJADURAI எழுதியது:

அடிக்கடி எழுத மாட்டீர்களா என்று நினைப்பதுண்டு...இந்தப் பதிவு இதுவரை என் கண்ணில் படவில்லை.

உங்களது கருத்துகளை ஒட்டி பல் நான் சொல்வதற்கு...பாளையங்கோட்டையில் இருந்து ஹாக்கியை துரத்திய கிரிக்கெட் உட்பட

ஆயினும், பின்னூட்டங்கள் எப்படி எப்படி வரும் என்று தாங்கள் விவரித்து எழுதியதன் மூலம், பலர் தங்களது கருத்துகளை இங்கு பதிவு செய்வதை தடுத்து விட்டீர்கள். உங்களது கருத்துகளை மட்டும் எழுதி மற்றவற்றை தாங்கள் தவிர்த்திருக்கலாம்.

எதிர்வினைகள் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று தாங்கள் எதிர்பார்ப்பது போல ஒரு தோற்றத்தை ஏற்ப்படுத்திவிட்டீர்கள்

அடுத்த பதிவு போடும் பொழுது, ஒரு மெயில் அனுப்பவும்;-)

» நான் எழுதியது:

அருமையான உண்மையான பதிவு...அனைவரும் இதை உணர வேண்டும்