ரஜினி, சங்கர் மற்றும் அவர்களது அரசியல்

சென்ற மாதம் நட்சத்திர வாரத்தின் போது தமிழ் திரையுலக அரசியலைக் குறித்து ஒரு பதிவு எழுதப்போய் அது சற்று அதிகமாகவே சர்ச்சையாகிவிட்டது. வெங்கட், சுந்தரமூர்த்தி ஆகியோர் இரண்டு வெவ்வேறு காரணங்களுக்காக அந்த பதிவுடன் முரண்பட்டு விரிவாக எதிர்வினையாற்றியிருந்தார்கள். உண்மையில் நேரமின்மைக் காரணமாக அந்த பதிவில் நான் சொல்ல நினைத்திருந்த எல்லாவற்றையும் சொல்லியிருக்கவில்லை. குறிப்பாக ரஜினி, சங்கர் ஆகியோரைப் பற்றி எழுதுவதற்கு சில குறிப்புகளை எடுத்து வைத்திருந்தும் எழுதவில்லை. "சிவாஜி" பஜனைக் காதைக் கிழித்துக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில் அந்த குறிப்புகளை லேசாக விரித்து இங்கே இடுகிறேன். ரசிகக் கண்மணிகள் பொறுத்தருள்வார்களாக.

தொண்ணூறுகளின் தொடக்கத்தில் ஜெயலலிதாவை அதுவரை தீவிரமாக ஆதரித்துவந்த தமிழ்நாட்டு வலதுசாரிகளுக்கு அவர் மீது கடும் அதிருப்தி ஏற்பட்டது. ஊழல் ஒரு காரணமாக சொல்லப்பட்டாலும் அதைவிட முக்கியமானக் காரணங்கள் இருந்தன. சசிகலாவின் சுற்றமும் சமூகமும் ஆட்சியில் ஆதிக்கம் செலுத்தியது, ஊடகங்களுக்கு எதிரான ஜெயலலிதாவின் போக்கு, அவர் வீரமணியின் ஆலோசனைகளை கேட்டு செயல்பட்டது, இட ஒதுக்கீட்டை எதிர்த்து வழக்குப் போட்டவர் அடித்து முடமாக்கப்பட்டது, சேஷன் மீது நடந்தத் தாக்குதல் முயற்சி என்று எத்தனையோ காரணங்களால் ஜெயலலிதாவுக்கு ஒரு மாற்றாக ரஜினிகாந்தை முன்வைக்கத் தொடங்கினர். (இதில் ஒரு ஒழுங்கைக் காணலாம். எண்பதுகளின் தொடக்கத்திலிருந்தே ரஜினி தமிழகத்தின் முன்னணி நட்சத்திரமாக இருந்தும் ஜெயலலிதா "நல்ல பிள்ளையாக" இருந்த வரையில் அவர் ஒரு அரசியல் சக்தியாக எவராலும் முன்வைக்கப்படவில்லை. அதேபோல தனக்கு அரசியலில் நுழையும் நோக்கம் உண்டு என்பதை விஜய்காந்த் தனது செயல்பாடுகள் மூலம் பல ஆண்டுகளாக உணர்த்தி வந்தும் 2004-ம் ஆண்டு தேர்தலில் ரஜினியின் அரசியல் கனவுகளுக்கு சந்தேகத்துக்கு இடமில்லாத வகையில் சங்கு ஊதப்படும் வரை அவர் ஆதரிக்கப்படவில்லை. ரஜினி மீது இன்னும் நம்பிக்கை இழக்காத சிலர் விஜயகாந்தை ஆதரிக்கத் தொடங்கவில்லை என்பதையும் கவனிக்கலாம். ஒரு நேரத்தில் ஒரு குதிரை மீது தான் சவாரி.)

அந்நாட்களில் ரஜினியை எல்லாம் வல்லவராக, தமிழ்நாட்டின் மிகப் பெரும்பாலான மக்களின் நன்மதிப்பையும் ஆதரவையும் பெற்றவராக, நினைத்தால் அடுத்த தேர்தலில் முதல்வராகிவிடக்கூடிய ஆற்றல் கொண்டவராக ஊடகங்கள் சித்தரித்து வந்தன. 1996-ம் ஆண்டு நடந்த தேர்தலில் திமுகவின் பெரும் வெற்றிக்கு ரஜினியின் ஐந்து நிமிட தொலைக்காட்சி பிரசாரம் முக்கியக் காரணமாக சொல்லப்பட்டது. அந்த தேர்தலில் 'ரஜினி அலை' வீசியதாக பலர் திரும்பத்திரும்ப எழுதிவந்தார்கள். நல்லவேளையாக ரஜினியின் உண்மையான செல்வாக்கு அடுத்து வந்த தேர்தல்களில் தெளிவாக வெளிப்பட்டது.

தொண்ணூறுகளில் ரஜினிக்கு உருவாக்கப்பட்டிருந்த புனிதபிம்பம் இன்று அப்துல்கலாமுக்கு இருக்கும் புனிதபிம்பத்துக்கு சற்றும் குறைந்ததல்ல. "மகாத்மாவின் மறுபிறப்பே" என்று ரஜினியை விளிக்கும் சுவரொட்டிகளை பார்த்த நினைவிருக்கிறது. இந்திய ஊடகங்கள் ஒருவரை புனிதபிம்பமாக சித்தரிக்கின்றன என்றால் அவர் வறுமை, அடிப்படை சுகாதாரமின்மை, சாதிக் கொடுமைகள் போன்றப் பிரச்சனைகளைக் குறித்து மறந்தும் கூட அக்கறை கொள்ளாதவராகவும் அதே நேரத்தில் இந்தியாவை வல்லரசாக்குதல், கங்கையையும் காவிரியையும் இணைத்தல், சந்திரனில் இறங்குதல் மற்றும் இன்னபிற கனவுகளை சர்வரோக நிவாரணியாக விநியோகிப்பவராகவும் இருப்பார் என்பதை சொல்லவேண்டியதில்லை. ஆன்மீகம், தத்துவம் போன்றவற்றில் நாட்டம் உள்ளவராகவும், மதத்துறவிகளிடம் உபதேசம் பெறுபவராகவும், அக்கம்பக்கம் பார்க்காமல் ஆகாயப் பார்வைப் பார்ப்பவராகவும் இருந்தால் இன்னும் நல்லது. இந்த தகுதிகள் பெரும்பாலும் அமையப்பெற்ற ரஜினி புனிதபிம்பமாக மாறியது இயல்பானதே.

ரஜினிக்கு சமூகப் பார்வை என்று ஒன்று இருக்குமானால் அது பிற்போக்கானது என்பதில் ஐயமில்லை. படிப்பறிவோ, உலக அறிவோ இல்லாத லட்சக்கணக்கானவர்கள் தன்னை ஒரு ஆதர்சமாக காண்பதை அறிந்திருந்தும் "எஜமான் காலடி மண்ணெடுத்து நெற்றியில் பொட்டுவைப்போம்" போன்ற நிலபிரபுத்துவ துதிபாடல்களை தன் படங்களில் அனுமதித்தவர் அவர். "தைரியலட்சுமி"யிடம் நேரடியாக மோத தைரியம் இல்லாமல் பெண்களை இழிவுப்படுத்தும் வசனங்களைத் தன் படங்களில் தொடர்ந்து பேசி வந்தவர். பொதுப் பிரச்சனைகளில் அவர் அக்கறை வெளிப்படுத்தியதெல்லாம் தானோ தனது நண்பர்களோ (மணிரத்தினம், ராஜ்குமார்..) பாதிக்கப்பட்டபோது மட்டுமே. முப்பது ஆண்டுகளாகத் தமிழ்நாட்டில் வாழ்ந்தும் தெனாலி படம் பார்த்த பிறகு தான் "சிலோன் பிரச்சனை"யின் தீவிரம் புரிந்தது என்று சொல்லும் அளவிற்கே அரசியல் அறிவு உள்ள ஒருவரைத் தான் தமிழக மக்களை உய்விக்க வந்தவராக ஊடகங்கள் கொண்டாடின. அரசியலில் தான் இப்படி அரிச்சுவடி தெரியாமல் இருக்கிறார் என்றில்லை, இத்தனை ஆண்டுகளாக ஆன்மீகத் தேடலில் ஈடுபட்டும் ஆன்மீகம் குறித்த அவரது புரிதல் ஒரு சராசரி பாமர பக்தனிலிருந்து எவ்வகையிலும் வேறுபட்டதாகத் தெரியவில்லை. ("உலகில் பாவிகள் அதிகரித்ததால்" தான் சுனாமி போன்ற இயற்கை பேரிடர்கள் தோன்றுகின்றன என்று அறிக்கை வெளியிட்டதை இங்கே சொல்லலாம்.)

அடுத்த எம்.ஜி.ஆராக சித்தரிக்கப்பட்ட ரஜினியிடம் எம்.ஜி.ஆரிடம் இருந்த சில திறமைகளும் குணங்களும் அறவே கிடையாது. சிறுவயதிலேயே தமிழகத்துக்கு வந்து நாடகக்குழுவுடன் ஊர்ஊராக சுற்றித்திருந்து பலதரப்பட்டத் தமிழர்களுடன் பழகிய எம்.ஜி.ஆரைப் போலல்லாது ரஜினி தமிழகத்தின் கிராமப்புற, சிறுநகர வாழ்வு குறித்து நேரடியாக அறியாதவர். மக்கள் கூட்டத்திற்கிடையே திளைப்பதும், கிழவிகளைக் கட்டிப்பிடிப்பதும், குழந்தைகளை முத்தமிடுவதும் எம்.ஜி.ஆருக்கு இயல்பாகவே வந்தது. ரஜினியோ தன்னை சந்திக்கவரும் ரசிகர்களை வருடத்திற்கு ஒருமுறை கூட சந்திக்க மறுப்பவர். முக்கியமாக, தன்னை நம்பி வருபவர்களுக்கு தாராளமாக உதவிகள் செய்து அவர்களது நன்றியையும் விசுவாசத்தையும் சம்பாதிக்கும் குணம் எம்.ஜி.ஆருக்கு இருந்தது. ரஜினி தனக்கு இத்தகைய ஒரு வாழ்வை அளித்த திரைத்துறைக்குக் கூட எதுவும் செய்ததில்லை. கமலஹாசன், நாசர், பிரகாஷ்ராஜ் போன்றவர்கள் திரைத்துறையில் ஈட்டிய பணத்தையெல்லாம் நல்ல படம் என்றுத் தாங்கள் கருதுவதை எடுக்க அந்த துறையிலேயே மறுபடியும் இடுகின்றனர். ஆனால் ரஜினி தமிழ் திரைத்துறையை அவ்வப்போது வந்து பணம் அள்ளிச்செல்லும் ஒரு களஞ்சியமாக பயன்படுத்துகிறாரே தவிர அதன் மேம்பாட்டுக்கு எதுவும் செய்ததில்லை. தன்னைக் கடுமையாக விமரிசித்த சிலருக்கு பண உதவியையோ அல்லது நடிப்பதற்கான வாய்ப்பையோ வழங்கி அவர்களை ஊடகங்களில் தன்னைப் புகழ வைத்தது தான் தன்னுடன் பணிபுரிபவர்களுக்கு அவர் செய்த ஆகப்பெரிய உதவியாகத் தெரிகிறது. மொத்தத்தில், ஒரு அரசியல் தலைவராக, "அடுத்த முதல்வராக" வரவிரும்பும் ஒரு மனிதரிடம் இருக்கவேண்டிய குறைந்தப்பட்ச சமூக அக்கறையைக் கூட ரஜினி வெளிப்படுத்தியதில்லை என்பதே உண்மை.

*****

அண்மைக்கால தமிழ் திரைப்படங்களின் அரசியல் குறித்த எந்தவொரு விவாதத்திலும் சங்கரின் படங்களைக் குறித்துப் பேசுவதை தவிர்க்கமுடியாது. குறிப்பாக "சமூகப் பிரச்சனைகளை" பேசுவதாகச் சொல்லப்படும் ஜென்டில்மேன், இந்தியன், முதல்வன், அந்நியன் ஆகிய நான்கு படங்களைக் குறித்து. உண்மையில் இந்த நான்கு மொந்தைகளிலும் ஒரேவகையான கள் தான் இருக்கிறது. இந்த படங்களில் முன்வைக்கப்படும் அரசியலும் ஒன்றுதான். அந்தக்காலத்தில் எல்லாமே நன்றாக இருந்தது; தகுதி இல்லாதவர்கள் அதிகாரத்தைக் கைப்பற்றிவிட்டது தான் அனைத்து சீர்கேடுகளுக்கும் காரணம் என்று கடந்த நாற்பதாண்டுகளாகத் தமிழகத்தில் ஒலிக்கும் தினமலர்/துக்ளக் வாசகர்களுக்கு நன்கு பழக்கமான வாதத்தை தான் சங்கரின் படங்கள் பரப்புகின்றன.

இந்த நான்கு படங்களிலும் ஊழலையும் மற்ற சமூக சீர்கேடுகளையும் எதிர்த்து போராடும் கதாநாயகன் என்ற பொதுவான அம்சம் உண்டு. அதைக் குறித்து ஏதும் பிரச்சனையில்லை. ஆனால் ஒவ்வொரு படத்திலும் அந்த கதாநாயகனுக்கு கொடுக்கப்படும் அடையாளங்களும் அவனால் எதிர்க்கப்படும் ஊழல்வாதிகளுக்கும் சமூக விரோதிகளுக்கும் அளிக்கப்படும் அடையாளங்களையும் கவனித்தால் சங்கர் சொல்லவருவது என்ன என்பது புரியும். "தர்ம-அதர்ம" யுத்தங்களைப் பற்றிய புராணப் படங்களில் இந்த அடையாளங்கள் வெளிப்படையாக இருக்கும். வெள்ளைத்தோல் நாயகனின் முகத்தில் தேஜஸ் பெருகி வழியும். எதிர்த்து நிற்கும் அசுரனின் முகத்தில் லேசான கரிப்பூச்சும், சில நேரங்களில் தலையில் இரண்டு கொம்புகளும் இருக்கும். இருபத்தோராம் நூற்றாண்டின் "சமூகப் பிரச்சனைகளைப்" பேசும் படங்களில் அப்படிப்பட்ட வெளிப்படையான அடையாளங்களை அளிக்கமுடியாது என்பதால் சங்கர் தன் படங்களில் வேறு வழிகளில் கூடியமட்டும் வெளிப்படையான அடையாளங்களை நாயகனுக்கும் அவனது எதிரிகளுக்கும் அளிக்கிறார்.

அவரது முதல்படமான ஜென்டில்மேனில் தன் தாயின் சாவுக்கு காரணமான அரசியல்வாதியை பழிவாங்க ஒருவித மிருக ஓலத்துடன் அரிவாளைத் தூக்கிக்கொண்டுப் புறப்படும் கதாநாயகனை நம்பியார் பாத்திரம் தடுத்து அவனுக்கு பொறுமையை போதித்து, பூணூல் அணிவித்து, அக்ரகார வாழ்வை அறிமுகப்படுத்திய பிறகே அவன் புத்திசாலித்தனமாக தன் போராட்டத்தை மேற்கொள்கிறான். இந்தியன் படத்தின் நாயகன் 'அந்த'காலத்தை பிரதிநிதிக்கும் சுதந்திரப் போராட்டத் தியாகி. முதல்வன், படித்த டை கட்டிய இளைஞன் அதிகாரத்தைக் கைப்பற்றி அனைத்து பிரச்சனைகளையும் ஒரே நாளில் தீர்க்கும் மற்றொரு நடுத்தர வர்க்கக் கனவு. அந்நியனில் கதாநாயகன் குடுமி, நாமம் போன்ற புற அடையாளங்களைக் கொண்ட அக்ரகாரத்து அம்பி. இந்த நாயகர்களால் பழிவாங்கப்படும் வில்லன்களை ஆராய்ந்தால் அவர்களது தோற்றம், மொழி ஆகியவற்றின் மூலம் வேறுவிதமான அடையாளங்கள் கொடுக்கப்பட்டிருப்பதை உணரலாம். ஜெண்டில்மேனில் வேட்டியைத் தொடைக்குமேல் தூக்கிக்கொண்டு கொச்சை மொழியில் பேசும் அரசியல்வாதியையோ, அந்நியனால் கொல்லப்படுபவர்களையோ மனதில் கொண்டுவந்துப் பார்த்தால் இது புரியும். இந்தியனில் தியாகியின் மகன் தவறு செய்வதாகக் காட்டப்பட்டாலும் அவன் நேர்மையாக முன்னேறுவதற்கான அனைத்து வழிகளையும் சமூகம் அடைத்துவிட்டதன் காரணமாகவே அவன் அப்படி செய்வதாகவும், இயல்பாகவே நேர்மையானவனான அவன் கையூட்டு வாங்கத் தயங்கும் போது உடனிருக்கும் கவுண்டமணி பாத்திரம் அவனது மனதை மாற்றுவதாகவும் காட்டப்பட்டிருக்கும்.

சங்கரின் இந்த படங்களில் சட்டத்துக்கும் தர்மத்துக்கும் கீழ்படிந்து நேர்மையாக வாழும் அப்பாவிப் பார்ப்பனர்கள் மற்றவர்களால் துன்புறுத்தப்படுவது / அவமானப்படுத்தப்படுவது போன்றக் காட்சிகள் தவறாமல் இடம்பெற்றிருக்கும். ஜென்டில்மேன் படத்தில் திறமை இருந்தும் மருத்துவக்கல்லூரியில் இடம் கிடைக்காமல் முறுக்கு விற்க அனுப்பப்படும் பார்ப்பன இளைஞன் தற்கொலை செய்துகொள்ளும் காட்சி பார்வையாளர்களின் மனதை உருக்கும் விதத்தில் படமாக்கப்பட்டிருக்கும். அதே படத்தில் கதாநாயகன் வசிக்கும் அக்ரகாரச் சூழலுக்கு சற்றும் பொருந்தாத தோற்றத்தையும் பேச்சுவழக்கையும் கொண்டிருக்கும் கவுண்டமணி பாத்திரம் எதிர்த்துப் பேசக்கூடத் தெம்பில்லாத வயோதிக பார்ப்பனர்களை மரியாதைக்குறைவாகப் பேசி அவமானப்படுத்தும் காட்சிகள் பல இடங்களில் வரும். இந்தியன் படத்தில் கையூட்டுக் கொடுக்காமல் எந்த வேலையும் நடக்காத போக்குவரத்து அலுவலகத்தில் நேர்மையான முறையில் உரிமம் பெற முயலும் மைலாப்பூர் 'ஐ-வில்-ரைட்-டு-தி-ஹிண்டு' பார்த்தசாரதி கேலிசெய்யப்பட்டு அலைக்கழிக்கப்படும் காட்சிகள் நகைச்சுவை என்ற பெயரில் சேர்க்கப்பட்டிருக்கும். இவற்றை எல்லாம் மிஞ்சும் ஒரு காட்சி அந்நியன் படத்தில் இருக்கிறது. தோற்றம், மொழி, உடை என்று அனைத்து வகையிலும் நுட்பமாக அடையாளம் காட்டப்படிருக்கும் சார்லி பாத்திரம் அனைத்து சாலை விதிகளையும் கடைபிடித்து வண்டியோட்டி வரும் அம்பியின் முகத்தில் காறி உமிழ்ந்துவிட்டு அதைப்பற்றி சிறிதும் கண்டுகொள்ளாமல் போகும் காட்சி தான் அது. (என்னக் காரணத்தாலோ சார்லி அந்நியனால் கொல்லப்படும் காட்சி விரிவாகக் காட்டப்படவில்லை.) "நான் தயிர்சாதம் சாப்பிடறவன். வலிக்குது" என்று அம்பி அடிபட்டு அலறும் காட்சியையும் இந்த வரிசையில் சேர்த்துக்கொள்ளலாம்.

ஏதோ ஒரு படத்தில் மட்டும் இப்படிப்பட்டக் காட்சிகள் இடம்பெற்றால் அது தற்செயலானது எனலாம். ஆனால் ஒவ்வொரு படத்திலும் இது தொடரும்போது இயக்குநரின் நோக்கத்தைப் பற்றி பேசாமல் இருக்கமுடியாது. தமிழ்நாட்டுப் பார்ப்பனர்களின் தற்போதைய நிலைமை 1930-களில் இருந்த யூதர்களின் நிலைமையை மிகவும் ஒத்திருக்கிறது என்று எழுத்தாளர் அசோகமித்திரன் போன்றவர்கள் செய்துவரும் பிரச்சாரத்தை தான் சங்கர் தன் படங்களில் செய்கிறார். இத்தகைய படங்கள் நடுத்தர வர்க்கத்தின் பேராதரவுடன் பெரும் வெற்றி பெறுவது எதிர்பார்க்கத்தக்கதே. இந்த அரசியலைப் பற்றியெல்லாம் எதுவும் தெரியாத, அப்படித் தெரிந்தாலும் அதைக் குறித்து அக்கறைக் கொள்ளாதக் கூட்டத்தை திரையரங்குகளுக்கு அழைத்து வருவதற்குத் தான் இருக்கவே இருக்கிறது ரண்டக்க ரண்டக்க பாட்டும் ஜலபுலஜங்ஸ் காட்சிகளும்.

48 மறுமொழிகள்:

Parattakkoodia pakuthayvu. Naan manathil s(h)ankarai patri ninaithadai appadiye key board'il thatti ulleergal

s(h)ankaraip patri en manathil thonriyathai appadiye keyboardil thatti ulleergal nanri

பதிவுக்கு நன்றி!

சங்கர் படங்களில் நீங்கள் குறிப்பிடும் படியான பல காட்சியமைப்புகளைக் காணலாம். அவைகள் மிகவும் நுட்பமாகச் சித்தரிக்கப்பட்டிருக்கும். இரசிகனின் பார்வையில் இடஒதுக்கீடு, தமிழ், சமூக நீதி போன்றவை மேலோட்டமான பார்வையில் கேலிக்குரியதாக தெரியும் வரையில் காட்டப்பட்டிருக்கும். உடைகள், பேச்சுமொழி இவைகள் கூட அதற்கேற்றாற் போல அமைக்கப்பட்டிருக்கும். பொதுவாக பிரமணரல்லாதார் பிராமண விழுமியங்களை போற்றுவதாக அமைந்திருப்பதும் உண்டு.

ரஜினி-அரசியல் பற்றிய பழைய பதிவொன்று.

http://ntmani.blogspot.com/2004/04/blog-post_12.html

"Vivek arivukku avar bramin enru ninaithen" enru rajini pesiyathai maranthu vittergale

நுண்ணரசியல் வெளிப்பாடுகளைத் தெளிவாக விவரமாக எழுதியிருக்கிறீர்கள். நன்றி ஜெகத். ஜென்டில்மேன் படம் பார்த்த காலத்தில் அதில் இருந்த சில காட்சிகள் பெரிதாக ஈர்க்கவில்லை.

ரஜனியின் அந்த ஐந்து நிமிடப் பிரச்சாரத்துக்கு எங்க வீட்டிலயே பயங்கர ஆதரவிருந்தது. அப்ப இடக்குமடக்கா கேள்வி கேக்காத பட்டமும் எனக்குக் கிடைச்சது. :)

ரஜனியின் புதுப்படத்தின் காவிரி நதி பற்றி என்னமோ பாட்டு வருதாமே? ;)

அப்புறம், ரஜனிக்கு தெனாலி சினிமா பார்த்து 'சிலோன்' பிரச்சினை புரிந்ததற்கு அந்தப் படத்தில வர்ர 'சிங்களத்தமிழ்' அதுக்குப் பேருதவியாக இருந்திருக்கும் என்பது முக்கிய்மான விதயம்!

-மதி

இவ்வளவு விரிவாக சங்கரின் மனதில் புகுந்து அவரது மனதில் ஓடும் எண்ணங்களைப்படித்து, அவரது திரைப்படங்களில் 4 மட்டும் எடுத்து ஆராய்ந்து விளக்கியிருக்கும் நீங்கள் இன்னும் சில பல இயக்குனர்களின் படங்களையும் சேர்த்து ஆராய்ந்து இக்கட்டுரையை போட்டிருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

எடுத்துக்காட்டாக, பார்ப்பனர்களை கிண்டல்செய்து படம் எடுத்த பாக்யராஜ், பார்ப்பன பெண்கள் அலைவது போலவே காட்டிவந்துள்ளார். இதை காரெக்டர் அஸாஸினேஷன் என்று சொல்வார்கள். ஏன் தற்காலத்துப்படங்களில் கூட வடுமாங்கா தயிர்சாதம் என்று நக்கலடிப்பார்கள். அதெல்லாம் உங்களுக்கு சொறிந்துவிடுவது போல இருக்கும். ஏனெனில் நீங்கள் தேடுவது எல்லாம் உங்கள் பார்ப்பன எதிர்ப்புக்கான ஆதாரங்கள் மட்டுமே.
வேறு எதாவது ஒரு ஜாதியினரை மட்டம் தட்டுவது போல ஒரு காட்சி வந்திருந்தால் சும்மா விட்டிருப்பார்களா? சண்டியர் என்று பேர் வைத்ததற்கே பற்றி எரிந்ததல்லவா? தமிழ்நாட்டில் பார்ப்பன சமூகம் ஒரு சிறுபாண்மை சமுகமாகத்தான் இருக்கிறது. இதில் எள்ளளவும் சந்தேகமில்லை.

அரசிலயில் இருந்து தொடங்கி, ரஜினியின் யாருக்கும் உதவாத போக்கை கண்டித்து சங்கரின் பார்ப்பன கொடியேற்றும் படங்களை தோலுரிக்க எப்படி வந்தீர்கள் என்பதே புரியவில்லை. ஒரு பைத்தியக்காரனின் உளரலாகத்தான் இந்தப்பதிவு இருக்கிறது.

முதலில் போய் உங்கள் மனதை ஒரு நல்ல மனநல மருத்துவரிடம் பரிசோதியுங்கள். போகும்போது அவர் பார்ப்பனரா என்று பார்த்துவிட்டு போங்கள். ஏனென்றால், அவர்கள் தான் ரிசர்சேஷன் இல்லாமல் சுயமாக படித்து வந்தவர்கள். மெரிட் என்று சொல்வார்கள். உண்மையாக மருத்துவம் பார்ப்பார்கள். சரியா?

excellant.

maha

பதிவுக்கு நன்றி ஜெகத். நினைவு கூற வேண்டிய நேரத்தில் தான் பதிவு வந்திருக்கிறது. இன்னும் படம் வந்த பிறகு அதைப் பற்றி நிறையப் பேச வேண்டி இருக்கும்.

ஒரு புனித பிம்பத்தை எப்படி உருவாக்குகிறார்கள் என்பதற்கு ரஜினி பற்றிய இந்த நிகழ்ச்சி ஒரு உதாரணம்.
குமுதத்தில் ஒரு பேட்டியில் ரஜினி சொல்லி இருப்பார் தனக்கு தினமும் ஒரு பெண் வேண்டும் (இந்த பேட்டி அவரது திருமணத்திற்கு முன்னார் வந்தது) என்றும் குடி இல்லாமல் வாழ முடியாது என்றும். இதையே நீங்களே நானோ சொல்லி இருந்தால் செருப்பால் அடித்து இருப்பார்கள், ஆனால் இவரு போதையில் இப்படி உளறியதை கூட ஒரு பில்டப்பு குடுத்து ஆகா அரிச்சந்திரனுக்கு அப்புறம் இவரு மட்டும் தான் உண்மையை பேசுறாருன்னு மகாத்மா ரேஞ்சுக்கு ஏத்தி விட்டாங்க.

ஓவர் டூ ரஜினிராம்கி மற்றும் இணையத்தின் எண்ணிலா விசிலடிச்சான் குஞ்சுகள்

படிப்பது ராமயணம் இடிப்பது பெருமாள் கோவில் என்பது தான் இவர்கள் இருவரின் பேச்சும் செய்கையும். படத்தில் ஒவ்வொருத்தனும் வரிகட்டனும் என்று சொல்வாங்க.. இவர்கள் எடுக்கும் படத்திற்கு முதல் ஆளாப் போய் "வரி விலக்கு" கேட்பாங்க.

5 பைசா திருடினாலும் தப்புதான் என்று எண்ணெய் கொப்பரையில் போட வேண்டும் எனப் போதித்த சங்கரை ஒழுங்காக வருமான வரி கட்டாம்லிருந்ததுக்கு எதில் போட வேண்டும்.

ரஜினி ஒரு நல்ல வியாபாரி. அவ்வளவுதான் அதற்கு மேல் சொல்ல என்ன இருக்கு?

ரஜனி மீது அப்படி என்ன எரிச்சல்? அவர் தொழில் நடிப்பு, சமுக சீர்திருத்தம் அல்லவே! அவர் தொழிலை அவர் சரியாக பார்கிரார், உங்கள் தொழிலை நீர் சரியாக பாரும்.

நடிப்புக்கும் உண்மைக்கும் வித்தியாசம் தெரியாத உங்களுக்கு? நடிப்பு தொழிலை உண்மை என்று எடுத்து கொண்டது யார் பிழை? ரஜனியுடையதா அல்லது உங்ககுடையதா?

ஷங்கரின் கதைகள், கதா பாத்திரங்கள் பற்றிச் சரியாகப் பேசியுள்ளீர்கள். அவரது 'ப்ரமாண்டத்தைப்' பற்றியும் சொல்லியிருக்கலாமே! ரோடெல்லாம் பெயிண்ட் அடிக்கிறது, தெருவையே கலர் கலரா மாத்திர்ரது, கதாநாயகன், நாயகி நாயா, பல்லியா மாறுறதுன்னு இருக்குமே .. கிராபிக்ஸ் இந்த அள்வு கேவ்லமா பயன்படுத்த இன்னொரு ஆளு இனிமதான் பொறக்கணும்.

Rajini,Sankar mela appidi enna kobamo ungalukku

a)1996ல், 1998ல் ரஜனியின்
ஆதரவு திமுக-தமாக கூட்டணிக்கு இருந்தது.அதிமுகவுடன் கூட்டை விரும்பாத மூப்பனார் குழு அவர் காங்கிரஸை ஆதரிப்பார் என்று நம்பியது, நரசிம்ம ராவை அவர் சந்திக்க ஏற்பாடும் செய்தது.ஆனால் ராவ் அதிமுகவுடன் கூட்டு என்று கூறி விட்டதால், தமாகவை உருவாக்கிய
மூப்பனார் திமுகவுடன் கூட்டணி ஏற்படுத்தினார்.அவர்களுக்கு ரஜனியின் வாய்ஸ் தேவைப்பட்டது.
அதனால் பலன் கண்டது திமுக-தாமக கூட்டணி. மீண்டும் 1998ல் பாராளுமன்ற தேர்தலிலும் அவர்
ஆதரவை அக்கூட்டணி கோரியது. முதலில் தயங்கிய ரஜனி பின் ஆதரவு தந்தார்.1999ல் யாருக்கும்
அவர் ஆதரவு தரவில்லை.
b)அந்த நான்கு படங்களையும் நீங்கள் கவனமாகப் பார்க்கவில்லை.
மனம் போன போக்கில் எழுதியிருக்கிறீர்கள். சிவனும்,கிருட்டிணனும் எத்தகைய நிறத்தில் புராணப் படங்களில் காட்டப்படுவார்கள் என்பது கூட தெரியாமல் எழுதுவது சிரிக்க வைக்கிறது.
c)நீங்கள் திறன்மிக்க தொழில் நுட்பராக இருக்கலாம், உங்கள் அலசல்கள் வலுவற்றவையாகவும், ஒரே வாய்ப்பாட்டை திரும்ப திரும்ப கூறுபவையாக உள்ளன. உங்களிடம் இருக்கும் ஒரே சரக்கை லேபிள்களை மாற்றி மாற்றி ஒட்டி விட்டால் அவை புதிதாகிவிடா -:).

அருமையான அலசல்.ஜெண்டில்மேன் படத்தை இடைவேளை வரை பார்த்துவிட்டு வெளியேறிவிட்டேன்.அதன் பிறகு சங்கரின் படங்களை காசு கொடுத்து தியேட்டரில் சென்று பார்த்ததில்லை.அவருடைய படங்களை புறக்கணிக்க வேண்டும்.அதற்கான காரணங்களை அழகாக விளக்குகிறது இப்பதிவு.

// முதலில் போய் உங்கள் மனதை ஒரு நல்ல மனநல மருத்துவரிடம் பரிசோதியுங்கள். போகும்போது அவர் பார்ப்பனரா என்று பார்த்துவிட்டு போங்கள். ஏனென்றால், அவர்கள் தான் ரிசர்சேஷன் இல்லாமல் சுயமாக படித்து வந்தவர்கள். மெரிட் என்று சொல்வார்கள். உண்மையாக மருத்துவம் பார்ப்பார்கள். சரியா?
//

:)))))))

ஆமாம்! பிராமணர்கள் தவிர மற்ற மருத்துவ மாணவர்கள் எல்லாம் அனைத்து மருத்துவத்தேர்வுகளிலும் தேறாமல் சும்மா தர்மமதிப்பெண்கள் பெற்று படிக்காமலேயே டாக்டரானவர்கள்!!

மனநல மருத்துவர் உதவி யாருக்குத் தேவையென எனக்குப் புரிந்துவிட்டது! :)

மதி கந்தசாமி !!

அது என்ன சிங்களத் தமிழ்? உலகத்தில யாரும் சிங்களத்தமிழ் என்று கூறியது இல்லை. இலங்கைத் தமிழ் அல்லது ஈழத்தமிழ்
என திருத்திக்கொள்ளுங்கள். இந்தியாவில் ஹிந்தி மொழி பரவலாக பேசப்படுகின்றது. அதற்காக இந்தியாவில் பேசப்படும் தமிழை "ஹிந்தித் தமிழ்" என்றுதான் அழைப்பீர்களா?


ஒரு ஈழத்தமிழன்

ரஜனியின் அறிவு வரட்சியும் வணிகச் சாதுரியமும் வெளிப்படையானது.அவருடைய அசட்டுத்தனதிற்குத் தளமாக இருக்கும் தமிழ்னாடும், தமிழ்னாட்டு செய்தி ஊடகங்கள் குறித்து எதுவும் சொல்லப்படவில்லையே!!


புள்ளிராஜா

ரஜனியின் அறிவு வரட்சியும் வணிகச் சாதுரியமும் வெளிப்படையானது.அவருடைய அசட்டுத்தனதிற்குத் தளமாக இருக்கும் தமிழ்னாடும், தமிழ்னாட்டு செய்தி ஊடகங்கள் குறித்து எதுவும் சொல்லப்படவில்லையே!!


புள்ளிராஜா

கலாம் வறுமையை ஒழிக்க,வளமான வலுவான இந்தியாவை உருவாக்குக என்று இளைய சமுதாயத்திற்கு அழைப்பு விடுக்கிறார். வாழும் உதாரணமாய், நல்லாசிரியராய்,
வழிகாட்டியாய் திகழ்கிறார். அவர் வெளிநாடு சென்று கோடி கோடியாய் சம்பாதிக்கவில்லை.
தன் அறிவை,திறமையை நாட்டுகு அர்பணித்து, எளிய வாழ்க்கை மேற்கொண்ட கர்மயோகியாய், ஞான தீபமாய் திகழ்கிறார். மத நல்லிணக்கம்,தேசப்பற்று, தூய வாழ்க்கைக்கு ஒர் முன் மாதிரி.உங்களுக்கு அவர் மீது என்ன கோபம்?. அவர் என்ன ஊழல் செய்தாரா இல்லை பொதுப்பணத்தில் உல்லாசமாக வாழ்ந்தாரா, இல்லை தன் குடும்பத்திற்காக சலுகைகள்
பெற்றுத் தந்தாரா. ஊடகங்கள் மீது உள்ள வெறுப்பினை அந்த உத்தமர் மீது காட்ட வேண்டாம். இன்றைய இளைய தலைமுறைக்கு அவரே முன் மாதிரியாக இருக்கிறார். இந்தியாவிற்கு
தேவை பிரேம்ஜிகளும், நாராயணமூர்த்திகளும், அப்துல் கலாம்களும், விக்ரம் சாராபாய்களும்,
கோமி பாபாக்களும். இளைய தலைமுறை அதை நிச்சயம் செய்யும். அதற்கு அவர் துணை
நிற்பார். எதிர்கால இந்தியா இளைய சமுதாயத்தின் கையில். அறிவியல் தொழில்னுட்பம்
கொண்டு முன்னெறுவோம், புதிய இந்தியாவைப் படைப்போம்.

ஆயிரம் கைகள் மறைத்தாலும் ஆதவன் மறைவதில்லை
ஆயிரம் செகத்துக்கள் பழித்தாலும் அப்துல் கலாம் புகழ் மங்குவதில்லை.

Thank you very much

After long years I've found an interesting and intelligent tamil blog ,keep continue your wonderful job , I accept all your works word to word

ரொம்ப அழகா அருமையா அலசி எழுதியிருக்கீங்க. இப்படி நாலு பேரு கிழிச்சாலும் அடங்க மாட்டாங்க. இவங்களையெல்லாம் உயர்த்திவிட்ட ஊடகத்த சொல்லணும்.

//தகுதி இல்லாதவர்கள் அதிகாரத்தைக் கைப்பற்றிவிட்டது தான் அனைத்து சீர்கேடுகளுக்கும் காரணம்//
Thanks for accepting this.Isn't it true?

பூச்செண்டுகளுக்கும் கல்லெறிகளுக்கும் நன்றி நண்பர்களே!

//இந்த அரசியலைப் பற்றியெல்லாம் எதுவும் தெரியாத, அப்படித் தெரிந்தாலும் அதைக் குறித்து அக்கறைக் கொள்ளாதக் கூட்டத்தை திரையரங்குகளுக்கு அழைத்து வருவதற்குத் தான் இருக்கவே இருக்கிறது ரண்டக்க ரண்டக்க பாட்டும் ஜலபுலஜங்ஸ் காட்சிகளும்.
//

ஜெகத்,
முழுக்கட்டுரையும்...குறிப்பாக கடைசிவரிகளுக்கு பாராட்டுக்கள் !

அப்துல் காலமும் புனித பிம்பம் ஆகிட்டாரா.... சூப்பர்... இது தெரியாம அவரை ரொம்ப நல்லவர்னுல நான் நினைச்சுக்கிட்டு இருந்தேன்....

எங்கயோ ஆரம்பிச்சி ஏதையோ தொட்டு எங்கோ கொண்டு போய் முடிச்சிட்டீங்க...

வாவ், மிக அருமையான அலசல். நீங்கள் நட்சத்திர பதிவாளராக ஆனதிலிருந்துதான் உங்கள் பதிவுகளை படித்து வருகிறேன். நீஙகள் தொடர்ந்து அதிகமாக எழுத கேட்டுக்கொள்கிறேன்.

மிக நல்ல பதிவு , நிறைய நாள் நான் நினைதிருந்ததை அப்படியே சொல்லியிருக்கிறீர்கள் , நேற்று சிவாஜி படத்திற்கு டிக்கெட் வாங்க உதயமிலிருந்து காசி வரை ரசிகர் மந்தை

ஷங்கர் பார்ப்பனர் என்று நினைத்து கரித்து கொட்டியுள்ளீர்ர்கள் , (புத்திசாலிகள் எல்லோரும் பார்ப்ப்னர் என்று ஏன் ரஜினி (விவேக் மேட்டர்) போலவே தவறாக எண்ணுகிறீர்கள் ?

மிகவும் சிரமப்பட்டு மொட்டைத்தலைகளுக்கும், முழங்கால்களுக்கும் முடிச்சுப் போட்டிருக்கிறீர்கள். அது அவிழ்ந்து போகிறது. ஊடகங்களை காரணம் காண்பித்து எப்படி வேண்டுமானாலும் பொலிடிகலி கரெக்ட் பதிவுகள் போட முடியும் என்பதற்கு வழிகாட்டி நீங்கள்தான்.

// ஷங்கர் பார்ப்பனர் என்று நினைத்து
//கரித்து கொட்டியுள்ளீர்ர்கள்.

that would be shankar's dream come true.

sorry for the english.

To anonymous :
//தகுதி இல்லாதவர்கள் அதிகாரத்தைக் கைப்பற்றிவிட்டது தான் அனைத்து சீர்கேடுகளுக்கும் காரணம்//
//Thanks for accepting this.Isn't
//it true?

It seems you haven't bothered to read the tons of discussion in blogosphere on "merit" and its true reasons.
Or is it unpleasant to know the truth ? being in a nice cocoon of self-congratulating hypocrisy.

again, sorry for writing in English, jegath.

First things first: Real good analysis. I more than happy to agree with you.

To few anony's who defer / oppose this blog:

1. Why don't you dare to reveal your identity?

2. To Anony who commented on:June 10, 2007 1:40 PM
Rajani is being criticized since he is portrayed as the saviour of Tamilnadu. He may be an actor. When he accepts all credits given to him and uses it in his films to make money, we have every right to criticise hime.

ஏய் பிரஹ்மா, இன்னுமா உன் பிண வெறி தீரவில்லை. என்னடா பெரிய உலகத்து மெரிட் முழுவதையும் மொத்தமாக குத்தகைக்கு வாங்கிணவன் போல் பேசற. 1930 வரை மருத்துவ நுழைவுக்கு உன் செத்த மொழி சம்ஸ்கிருத்தத்தை வைத்தததிருந்தாய். அந்த சதி யை பனகல் அரசர் ஒழித்த வரலாறு மறந்து விட்டாயா? உலகத்து விக்ஞானி எவனும் பாப்பான் இல்லை. காட்டி குடுத்வன் தான் பாப்பான். உனக்கென்ன நாடா மொழியா ஒழுக்கமா ? உங்களுக்கு தான் மேல் கீழ் எதுவும் இல்லையே. அடுத்த்வன் உழைப்பை உறிஞ்சி வாழும் கிருமியே, இனியும் இந்த மெரிட் ஜாலம் செல்லாது. போ போ அந்த மெரிட் பாப்பபனிடம் உனக்கும் உன் அம்மாஞ்சி சங்கரும் முதலில் தேதி வாங்கு.

Comparing Rajinikanth of 90s with today's Abdul Kalam is strongly condemnable. I think the problem with us is still we are not able to differentiate between the actual national heros and film heros. Your post is no different. Totally without any direction.

first of all..am not a "visiladichan kunju" athukaga en manasula irukira sila santhegangalai ketkamalum iruka mudiyathu..nadigan(thevaiyana porupum arivum illathavarai) naadala kudathu endru ninaipavan naan..nadigan mattumalla,arivu illatha yaarum naadala koodathu endru virumbubavan naan.athai vidunga. rajini ye thitinavanga ellarukiteyum oru santhegam ketkiren..rajini eppovavathu oru muraiyavathu "naan arasiyaluku varuven,arasiyal thaan en latchiyam,moochu endru ethavathu solli irukara? avar sonnathellam "athu kadavul ennam aaga irunthaal varuven" so its clear that he don have any such thought and as media is forcing him everytime to answer for such questions,he is saying "kadavul virupam na varuven" so rajini "arasiyal than letchiyam" nu solliruntha ungaloda rajini pathina arguments ellam correct..Rajini oru saatharana manushan pa..avaru thozhil "cinema" avlothan..So,Rajini arasiyaluku varuven nu sonna,athukappuram avaroda arasiyal arivai pathi naame allam pesuvom..athu varaikum moodikitu irupom..venumna avaroda cine skills mathi pesalam.Rajini ku nadika theriyathu,avaruku therinjathellam konjam than nu sollunga..tats good..athai vittutu avarai arasiyaluku izhupathu unga muttalthanam.
then avaroda cinemava vimarsanam pannunga,but athuthan avaroda real character nu ninaikathinga..This is for the one who said abt Rajni' "Ejamaan". apadi paartha,avaru niraya padathula villana nadichirukar..so villan ah nadipavan ellam villan,hero ellam hero ah? enna kodumai saravanan ithu
then..someone said abt his interview in "kumudam" yes he accepted tat he was doing mistakes..Gandhiyoda sathya sothanai padichurukingala?avunga appa saagirapo Gandhi parkama avaru wife madiyila paduthiruntharaam..(so don think am comparing Gandhi n Rajini,he is a mountain,Rajini is just a stone)..Gandhi kuda than unmaiya othukitaar..

Your analysis is right.I agree with many of your views on Shankar & Rajini.happy to see that many of my views are accepted by mnay bloggers & netizens.

But..comparing Kalam & Rajini is ridiculous...

Many of Rajini's fans live a dream life...

Thats not true of Kalam's fans/supporters/followers.They too live in dreams..but try to act positively to achieve positive dreams.

Shankar Shows wats happenin in the society....can u pin point an example given by you and it doesnt happen in the scoiety......

I think the truth happening in the scoiety when directly shown in movie pricks u.....
Is it not Mr.XXXX??? ( Sorry i dont kno ur name)

Jegath,

Now only I red this. as usual. very good. more over this film is not going well in TN. Example it has been relesed 2 theaters in Tirunelveli city. but after 3 weeks only one theatre.

unfortunately no media is ready to tell this.

இன்று இப்பதிவை மீண்டும் படித்தபோது 'ப்ரஹ்மம்' என்று தன் கருத்தை எழுதியிருக்கும் 'மண்டு' யாரென்று தெரிந்தது. (உபயம் 'கேரக்டர் அஸாசினேசன்')

ஜெகத், ஏன் தொடர்ந்து எழுதவில்லை. வேலைப்பளு காரணமாக இருந்தாலும், சிறிதேனும் நேரத்தை ஒதுக்கி பதிவிடுங்கள்.

நன்றி.

உங்கள் பதிவுகளை சீக்கிரமே எதிர்பார்க்கிறேன் (மிக ஆவலுடன்)

பின்னூட்டங்களை தாமதமாக வெளியிடுவதற்கு மன்னிக்கவும். கடந்த சில வாரங்களாக வேலையும் பொறுப்புகளும் சற்று அதிகமாகிவிட்டன. அடுத்த ஓரிரு வாரங்களில் பழைய நிலைக்குத் திரும்பிவிடுவேன் என்று எதிர்பார்க்கிறேன். கண்டிப்பாக எழுதுகிறேன். நன்றி.

nice very interesting

Slinging mud/cow dung on others is very very very very easy....can he(jegath and his goons)acchieve 1/1000000000 th of what Rajni or Shankar...
Jegath is born as noone and will die as noone...

don't start compare Rajni is famous so is Autoshankar is famous..veerappan is famous..
Autoshankar veerappan , saamiya pream are all also famous in destroying people unlike Rajni and Shankar...
in one thing Jegath is right is grouping Kalam and Rajani and Shankar because they are doing things positivly atleast trying...taht is why we(common man) love them..may be we are dumb..but i am happy to be dumb to trust them

1000 times you wrote this again and again but nobody will accept this because rajni never think he is the next chief minister so poda po go and do your duty and write about rajni and increase your popularity using our rajni's comments.he is not a selfish