மலையாளப் பதிவுகள் ஒரே இடத்தில், தமிழில்
அண்மைக்காலமாக வாசித்த தமிழ்ப்பதிவுகள் பெரும்பாலும் தமிழகத்தின் வெயிலையும் வறட்சியையும் நினைவூட்டும் விதமாக அமைந்திருந்ததால் தைவத்தின்றெ ஸ்வந்தம் நாட்டில் தணுத்த புழகளெயும் காயல்களெயும் ஒந்நு கண்டு வராமெந்நு தீர்மானிச்சு. வாயனக்கார் பேடிக்கண்டா. தமிழ்த்தாய்க்கு வீண்டும் ஸ்வாகதம். இரண்டு மாதங்களுக்கு முன் நான் உருவாக்கிய இனியன் கருவியைப் பயன்படுத்தி மலையாளப் பதிவுகளைத் தமிழ் எழுத்துக்களுக்கு மாற்றி வாசிக்கத் தொடங்கினேன். இந்த முறையைக் கையாண்டு மலையாளப் பதிவுகளை வாசிப்பதில் உள்ள ஒரு அடிப்படை சிக்கலை விரைவில் உணர்ந்தேன். ஒவ்வொருப் பதிவிலிருந்தும் இடுகைகளை வெட்டி எடுத்து இனியன் பக்கத்தில் ஒட்டி தமிழுக்கு மாற்றிய பின்பே அதில் என்ன எழுதப்பட்டிருக்கிறது என்றும் அதைப் வாசிப்பதா வேண்டாமா என்றும் ஒரு முடிவுக்கு வர முடியும். இப்படி ஒவ்வொரு இடுகையாக வெட்டி ஒட்டி வாசிப்பது விரைவிலேயே சோர்வடைய வைத்துவிடும்.
தமிழ்மணம், தேன்கூடு போல மலையாளப் பதிவுகளுக்கு என்று ஒரு தமிழ் திரட்டி இருந்தால் - அதாவது மலையாள இடுகைகளின் தலைப்புகளும் எழுதியவர்களது பெயர்களும் தமிழ் எழுத்துக்களில் ஒரே பக்கத்தில் தானியக்க முறையில் தோன்றினால் - எப்படி இருக்கும்? நன்றாகத் தான் இருக்கும். இன்னும் ஒருபடி மேலே போய் அதே பக்கத்திலேயே முழு இடுகையையும் - படங்கள் இருந்தால் அவற்றையும் சேர்த்து - தமிழிலேயே வாசிக்க முடிந்தால் எப்படி இருக்கும்? அடிபொளியாக இருக்கும்.
தேவைகளே கண்டுபிடிப்புகளின் தாய் என்பது தேய்பதமா என்று தெரியவில்லை. வேலையில் இறங்கினேன். சில வாரங்கள் செலவிட்டப் பின் மேலே சொல்லியிருப்பதைப் போன்ற ஒரு வலைப்பக்கத்தை உருவாக்க முடிந்தது. தனி வலைத்தளம், வழங்கி எல்லாம் இல்லாமல் முற்றிலும் கூகிள்/பிளாகர் நிறுவனம் அளிக்கும் இலவச சேவைகளைப் பயன்படுத்தியே இதை உருவாக்கியிருக்கிறேன். இது போன்ற முயற்சிகளில் ஆர்வம் உள்ளவர்களுக்காக கற்ற வித்தைகளைச் சுருக்கமாக செப்பிவிடுகிறேன்.
இதுபோன்ற ஒரு வலைப்பக்கத்தை உருவாக்கத் தேவையான நுட்பங்கள் மூன்று. அவையாவன:
1. திரட்டுதல் (Aggregation): நூறுக்கு மேற்பட்ட மலையாளப் பதிவுகளை கூகிள் ரீடர் மூலம் திரட்டுகிறேன். என் பதிவின் இடப்பக்கம் வருவது போல நமக்கு விருப்பமானப் பதிவுகளை மட்டும் கூகிள் ரீடர் மூலம் திரட்டி அவற்றை வலைப்பக்கங்களில் தானியக்க முறையில் பகிர்ந்துக்கொள்வது எப்படி என்று சில மாதங்களுக்கு முன்பு இங்கு எழுதியிருந்தேன். இப்படி திரட்டப்படும் பதிவுகளில் ஆக அண்மையில் எழுதப்பட்ட இடுகைகளை உள்ளடக்கிய ஒரு செய்தியோடையை XML கோப்பு வடிவில் பெறமுடியும்.
நுட்பச் சிக்கல்: தற்போது கூகிள் ரீடர் அளிக்கும் செய்தியோடையில் ஆக அண்மைய இருபது இடுகைகள் மட்டுமே உள்ளன. கொஞ்சம் முயன்றால் இந்த உச்சவரம்பை உடைத்துவிடலாம். ஒரு வழி: பதிவுகளைப் பல தொகுதிகளாகப் பிரித்துத் திரட்டுவதன் மூலம் ஒவ்வொருத் தொகுதியிலிருந்தும் இருபது இடுகைகளை எடுக்கலாம். நான் இதை இன்னும் செய்யவில்லை. ஏனென்றால் தமிழ்ப்பதிவுகளுடன் ஒப்பிடுகையில் ஒவ்வொரு நாளும் எழுதப்படும் மலையாள இடுகைகளின் எண்ணிக்கைக் குறைவே. மொக்கையாளர்களை அடையாளம் கண்டு திரட்டியிலிருந்து நீக்கிவிட்டால் இருபது தரமான இடுகைகள் கிடைப்பதற்கு இரண்டு மூன்று நாட்கள் கூட ஆகலாம்.
2. செய்தியோடைப் படித்தல் (Feed reading): கூகிள் ரீடர் தளத்திலிருந்து செய்தியோடையை XML கோப்பு வடிவில் பெற்று அதைப் பிரித்து மேய்வது எப்படி என்று இணையத்தில் தேடியபோது அஜாக்ஸ் (AJAX) என்ற புதிய நுட்பத்தைக் குறித்தும் அதன் பிரணவ மந்திரமான XMLHttpRequest என்பதைக் குறித்தும் அறிந்துக்கொண்டேன். விவரங்களுக்குள் போக விரும்பவில்லை. தேடுங்கள். கிடைக்கும்.
நுட்பச் சிக்கல்: இந்த XMLHttpRequest-ஐ பயன்படுத்தி ஒரு வலைத்தளத்தில் செயல்படும் Javascript மற்றொரு தளத்திலிருந்து தரவுகளைப் பெறமுடியும். (நான் பிளாக்ஸ்பாட் தளத்தில் ஓடும் Javascript மூலம் கூகிள் ரீடர் தளத்திலிருந்து தரவுகளைப் பெறுகிறேன்.) இந்த வசதியை "தீய சக்திகள்" தவறாகப் பயன்படுத்திக்கொள்ளும் வாய்ப்பு இருப்பதால் ஃபயர்ஃபாக்ஸ் உலாவி இதை அனுமதிப்பதில்லை. எனவே இந்த வலைப்பக்கம் ஃபயர்ஃபாக்ஸில் வேலை செய்யாது. இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் பயன்படுத்தலாம். ஆனால் அதன் Internet Options பகுதியில் ஒரு தேர்வை செய்துக்கொள்ளவேண்டும். இந்த தொல்லைகளைப் போக்க அஜாக்ஸில் ஒரு வழி இருப்பதாக அண்மையில் அறிந்தேன். நேரம் கிடைக்கும்போது அதை செயல்படுத்தலாம் என்றிருக்கிறேன்.
[பிற்சேர்க்கை - ஜூன் 4, 2007: இந்த பிரச்சனையை சரிசெய்துவிட்டேன். அதற்கான வழியைச் சுட்டிக்காட்டிய ஆனந்துக்கு நன்றி. இப்போது எல்லா உலாவிகளையும் பயன்படுத்தலாம். சிறப்புத் தேர்வு எதுவும் செய்யத் தேவையில்லை.]
3. எழுத்துப்பெயர்த்தல் (Transliteration): இதைப் பற்றி ஏற்கனவே விரிவாக விளக்கியிருக்கிறேன்.
நுட்பச் சிக்கல்: மலையாள எழுத்துமுறை கடந்த பல ஆண்டுகளாக சீர்திருத்தம் அல்லது எளிமைப்படுத்துதல் என்ற பெயரில் தொடர்ந்து சின்னாபின்னமாக்கப்பட்டு வந்திருக்கிறது. இதன் விளைவாக இணைய மலையாளிகளிடையேயும் மலையாளத் தட்டச்சு செயலிகளிடையேயும் சிலவற்றில் ஒற்றுமை இல்லை. குறிப்பாக குற்றியலுகரத்தில் முடியும் சொற்களை எப்படி எழுதுவது என்பதில். எடுத்துக்காட்டாக 'எனக்கு' என்பதைக் குறிக்கும் 'எனிக்கு' என்னும் சொல்லில் உள்ள 'கு' முழுமையான உகரம் அல்ல. அந்த சொல்லின் உண்மையான உச்சரிப்பு 'எனிக்' என்பதற்கும் 'எனிக்கு' என்பதற்கும் இடையில் எங்கோ உள்ளது. இதை சிலர் 'எனிக்' என்றே எழுதுகிறார்கள். சிலர் 'எனிக்கு' என்று எழுதி ஒரு சிறப்புக் குறியின் மூலம் அது குற்றியலுகரம் என்று உணர்த்துகிறார்கள். இதன் காரணமாகத் தமிழில் எழுத்துப் பெயர்த்து வாசிக்கும் போது சிறிது குழப்பம் நிலவும். எனவே தமிழில் வாசிக்கையில் மெய்யெழுத்தில் முடியும் ஒரு சொல் விளங்கவில்லையென்றால் அதனுடன் ஒரு உகரத்தைச் சேர்த்து வாசிக்கவேண்டும். (எ.கா: எந்த் -> எந்து)
இந்த பக்கத்தை சோதிக்க / பயன்படுத்த இங்கே சுட்டுங்கள். மலையாளத்தில் ஆர்வம் உள்ள நண்பர்கள் யாரேனும் இருந்தால் அவர்களுக்குப் பரிந்துரைக்கலாம்.
19 மறுமொழிகள்:
சிந்தனை ஆற்றலும், செயல் திறனும் ஒருங்கே அமைந்தவர் அய்யா நீர்...
அருமையாக கொண்டுவந்துள்ளீர்...
சிறப்பாக செயல்படுகிறது...!!!!!!
நன்று & நன்றி.
பாராட்ட வார்த்தை இல்லை !! அருமை. மலையருவி பெயரும் இனிமை !! எல்லாவற்றையும் பிளாகரிலேயே செய்து காட்டி இருப்பது இன்னும் அருமை !!
ஜெகத்,
இது பழத்தை உரிச்சுக் கைல தர்ரமாதிரி.. நன்றி! நன்றி!
மதுரைத்திட்டம் போல மலையாளத்தில் ஏதேனும் முயற்சிகள் இருக்கின்றனவா?
-மதி
அருமை!!.
நண்பர்கள் அனைவருக்கும் நன்றி.
மதி, தேடிப் பார்த்து ஏதும் தெரியவந்தால் சொல்கிறேன்.
வளர நன்னி சேட்டா :-)
ஜெகத்
நன்றி நன்றி நன்றி
அருமையாக இருக்கிறது. உங்களின் இனியன் வழியாகவே சில மலையாளப் பதிவுகளை வாசிக்க முயன்று கொண்டு இருந்தேன். இப்போது அழகாக நீங்களே தேடித்தந்து நேரடியாக வாசிக்கவும் வகை செய்திருக்கிறீர்கள்.
நன்றி
ஜெகத், அருமையோ அருமை. ரவி சொன்ன மாதிரி பெயரும் குளுமை!
நன்றி - சொ. சங்கரபாண்டி
ஜெகத்,
நன்றாக இருக்கிறது. அதுபோலவே தமிழில் எழுதி மலையாளத்தில் மொழிபெயர்க்கமுடியுமா?
ஊக்கமளித்த நண்பர்களுக்கு மீண்டும் நன்றி.
ஜோசப் சார், தமிழுக்கு மாற்றுவதை விட தமிழிலிருந்து மற்ற மொழிகளுக்கு - குறிப்பாக மலையாளத்துக்கு - மாற்றுவது எளிது. தற்போதைய நிரலில் சில மாற்றங்கள் செய்தால் அப்படி ஒரு கருவியை உருவாக்கிவிடலாம். ஆனால் அதை எத்தனை பேர் பயன்படுத்துவார்கள் என்று தெரியவில்லை.
தல... அசத்தல்!
உங்களின் இனியன் மூலமாக தொடர்ந்து சில மலையாளக்கவிதைகளை வாசித்து வந்தேன். இன்று தான் தங்களின் மலையருவி பக்கத்தினை பார்த்தேன். உடனே சேதித்தும் பார்த்து விட்டேன்.
மிகவும் நன்றாக வந்திருக்கிறது. ஆனாலும் மலையருவி மூலம் படிக்கக்கிடைப்பது எல்லாமே நீண்ட கட்டுரைகளௌம், கதைகளுமாகவே இருக்கிறது. கவிதைகளுக்கான இடம் எனக்கு தென்படவில்லை.
பிறமொழி படைப்புக்களை நம் மொழியில் அப்படியே எழுதி வாசிப்பதில் அயர்வு தோன்றுவது இயற்கை. அதிலும் அனைத்துப் படைப்புகளும் பெரிசா வேற இருக்குறது... ரொம்ப கொடுமை. கவிதைகளில் தொடங்கினால் தொடர்ந்து அடுத்த கட்டத்துக்கு நகர வாய்ப்புள்லதாக இருக்கும் தானே?
//ஆனால் அதை எத்தனை பேர் பயன்படுத்துவார்கள் என்று தெரியவில்லை.
//
அதுவும் சரிதான். ஆனாலும் அப்படி ஒரு வாய்ப்பை நீங்கள் ஏற்படுத்தினால்... நான் என் மலையாள நண்பர்களுக்கு சிபாரிசு செய்வேன். :)
முயற்சிகள் தொடரட்டும்.. வாழ்த்துக்கள்.
(தனிமெயிலில் தொடர்புகொள்கிறேன்)
//ஆனால் அதை எத்தனை பேர் பயன்படுத்துவார்கள் என்று தெரியவில்லை.
//
ஜெகத்,
துவக்கத்தில் அதிகம் பேர் பயன்படுத்துவது சிரமம்தான்..
ஆனால் அப்படி மொழிமாற்றம் செய்யப்பட்ட பதிவுகளுக்கு நாளடைவில் நம்முடைய மலையாள நண்பர்களுடைய கவனத்திற்கு கொண்டு வரலாம் என்று நினைக்கிறேன்..
என்னுடைய வங்கி நண்பர்களுக்கே அவற்றை அனுப்பி படிக்க சொல்லலாம். பலருக்கும் இப்படியொரு வசதி உள்ளதென்றே தெரியாது..
ஆகவே உங்களுக்கு நேரம் கிடைக்கும்போது இந்த முயற்சியில் இறங்கலாம்... என்னைப் போன்றவர்களுக்கு நிச்சயம் அது பயனுள்ளதாக இருக்கும்...
உடன் பதிலளித்தமைக்கு மிக்க நன்றி ஜெகத்...
ஜெகத், சில இடங்களில் necessity is the mother of invention, சில இடங்களில் daughterஆகவும் இருக்கலாம் :)
தமிழ்நாட்டில் வசிக்கும் தமிழ் படிக்கத் தெரியாத மலையாளிகள், வட நாட்டவர்களுக்கு உதவியாக தமிழ் - பிற இந்திய மொழி எழுத்துப்பெயர்ப்புக்கருவியை உருவாக்கலாமே? நிச்சயம் பயன்படும். அதுவும் குறைந்த அளவு நேரத்தில் இதை செய்யலாம் என்று நீங்கள் சொல்வதால் இதைக் கண்டிப்பாக செய்ய வேண்டும்.
ஜெகத்,
நீங்கள் கூகிளின் AJAX Feed APIs-ஐ முயற்சி செய்து பார்க்கலாமே..
எல்லா browser-களிலும் வேலை செய்யும். Security Concerns கிடையாது.
http://code.google.com/apis/ajaxfeeds/
முயற்சிக்கு பாராட்டுகள்..
ஆனந்த், நன்றி. பயனுள்ளதாகத் தெரிகிறது. முயற்சித்துப் பார்க்கிறேன்.
அருமையான வழியைச் சுட்டிக்காட்டிய ஆனந்துக்கு மீண்டும் நன்றி. நிரலில் மாற்றங்கள் செய்திருக்கிறேன். இப்போது மலையருவி எல்லா உலாவிகளிலும் வேலை செய்யும். எந்த சிறப்புத் தேர்வும் செய்ய வேண்டியதில்லை.
ஒரே பிரமிப்பா இருக்கு..!!!!
அருமை!!.