வெங்கட்டின் எதிர்வினையை முன்வைத்து

இரண்டு நாட்களுக்கு முன் (திரை)மறைவு அரசியல் என்று ஒரு பதிவு எழுதியிருந்தேன். அதற்கு ஒரு விரிவான எதிர்வினையை வெங்கட் தன் பதிவில் எழுதியிருந்தார் . நான் எழுதியதன் மீது அவர் வைக்கும் முக்கியமான விமரிசனங்கள்:

1. என் பார்வை முழுமையாக இல்லை. என் கருத்துடன் முரண்படும் தரவுகளைத் தவற விட்டிருக்கிறேன்.

2. என்னுடைய கருத்து தவறு என்பதை சில எதிர் உதாரணங்கள் மூலம் காட்டமுடியும்.

3. சில நடிகர்கள் அரசியலில் வெல்வதற்கும், வேறு சிலர் தோற்பதற்கும் அவர்களது திறமை அல்லது திறமையின்மை தான் காரணம். ஊடகங்கள் எந்த வகையிலும் காரணமாக முடியாது. ஊடகங்களின் சக்தியை மிகையாகச் சித்தரித்து, அவர்களிடம் இல்லாத தகுதியும் திறமையும் இருப்பதாக சொல்லுவது பேனைப் பெருமாளாக்குவது போல.

*****

என் கருத்துக்கு வலு சேர்க்கும் விதமாக, என் கருத்துடன் முரண்படும் சில தரவுகளைத் தவற விட்டிருக்கிறேன் என்பதற்கு ஆதாரமாக வெங்கட் சொல்வது கீழே நீலத்தில்.

"தற்செயலாகவோ, அல்லது தன் கருத்துக்கு வலுசேர்க்கவோ வீட்டில் தெலுகு பேசும் கருணாநிதியைத் தவறவிட்டிருக்கிறார். பின்னால் ஒப்புக்கு ஜெயலலிதாவுக்கும் இந்தத் தகுதிகள் எல்லாம் உண்டு என்று சொல்லி அவரைக்கூடப் புறனடையாகத்தான் காட்டியிருக்கிறார். எம்.ஜி.ஆர், ரஜினிகாந்த், விஜயகாந்த் - மூவரையும் ஒரு அணியில் வைத்து அவர்கள் ஊடகங்களால் ரட்சிக்கப்பட்டு ஜீவித்தவர்கள் என்று சொல்லும்பொழுது அதே திரைப்பின்னணி கொண்ட ஜெயலலிதாவை வேறுவிதமாகக் காட்டியும் கருணாநிதியை முற்றிலும் சுயதகுதிகளாலும் கடின உழைப்பாலும் (அல்லது ஊடகங்களின் சதியைத் தகர்த்தெரிந்து) முன்வந்தவராக உணர்த்தியிருப்பது அவரது பார்வையின் முழுமையின்மையைக் காட்டுகிறது."

"தமிழைத் தாய்மொழியாகக் கொள்ளாததால்தான் இந்தி எதிர்ப்பில் மும்மூர்த்திகளால் தீவிரம் காட்டமுடியாது என்று சொல்லும்பொழுது எதிரிடையாகக் காட்டப்பட்டிருக்கும் கருணாநிதிக்கும் அதே வேற்றுமொழிப் பின்னணியிருப்பது முரணாகத் தோன்றவில்லை?"

"அண்ணா, கருணாநிதி, எம்.ஜி.ஆர். ஜெயலலிதா என்று ஒரு தொகுப்பான திரை அரசியல் பார்வையைத் தவறவிட்டிருக்கிறார். அப்படியிருந்தால் மாநிலவாதம், இந்தி எதிர்ப்பு போன்றவற்றை ஒரே தட்டில் வைக்கமுடியாது."


"வீட்டில் தெலுகு பேசும் கருணாநிதி" என்பது எனக்கு செய்தி. குறைந்தபட்சம் நான் பயன்படுத்தியிருந்த 'சொல்லப்படுகிற/அறியப்படுகிற' போன்ற அடவுகளைக் கூட வெங்கட் பயன்படுத்தவில்லை ;-) கருணாநிதி வீட்டில் தெலுங்கு பேசுபவர் என்பதை சர்வ நிச்சயமாகவே சொல்கிறார். இதற்கு ஏதாவது ஆதாரம் உண்டா? எம்.ஜி.ஆர், ரஜினி, விஜய்காந்த் ஆகியோரது தாய்மொழி தமிழ் அல்ல என்பது ஊரறிந்த, வெகுஜன ஊடகங்களில் பேசப்பட்ட, அவர்களால் இதுவரை மறுக்கப்படாத விஷயம். ஆனால் கருணாநிதியின் தாய்மொழி தெலுங்கு என்பது அப்படியா? வெங்கட் சில பத்திகள் தாண்டி கன்னடியரையும், மலையாளியையும் நாகரீகமற்ற முறையில் அவர்களது பிறப்புப் பின்னணியை முன்னிருத்தி வசைபாடியவர் கலைஞர் என்கிறார். இப்படிப்பட்ட பிரச்சாரத்தை மேற்கொள்பவர் ஒரு தெலுங்கர் என்றுத் தெரிந்தால் எதிராளிகள் அதைச் சுட்டிக்காட்டாமல் இருந்திருப்பார்களா? நாயுடுக்கள் தெலுங்கு பேசுவதற்கான வரலாற்றுக் காரணங்கள் நமக்குத் தெரியும். காவிரிக்கரை இசைவேளாளர்கள் ஏன் தெலுங்குப் பேசப்போகிறார்கள்? (கருணாநிதி தமிழர் அல்ல என்று நிறுவ சிலர் கண்டிப்பாக முனைந்திருப்பார்கள் என்பது எனக்குத் தெரியும். ஆனால் அவர்களது நம்பகத்தன்மையும் அவர்கள் சொல்வது எந்த அளவுக்கு ஏற்றுக்கொள்ளப்படுகிறது என்பதும் முக்கியம். சில வாரங்களுக்கு முன்பு அண்ணாவின் தாயார் பெயர் பங்காரம்மா என்பதை ஆதாரமாகக் காட்டி அவரது பூர்வீகமும் தெலுங்கு தான் என்று திண்ணையில் மலர்மன்னன் எழுதினார். ஆனால் தமிழ்நாட்டவரில் 99 விழுக்காடு பேருக்கு மேல் அண்ணா தமிழர் என்று தான் சொல்வார்கள். ஆனால் எம்.ஜி.ஆர், ரஜினி, விஜய்காந்த் விஷயம் அப்படியல்ல.)

அடுத்து, ஜெயலலிதாவுக்கும் இந்தத் தகுதிகள் எல்லாம் உண்டு என்று "ஒப்புக்கு" போகிற போக்கில் குறிப்பிட்டதாகச் சொல்வது பற்றி. உண்மையில் எழுபதுகளில் எம்.ஜி.ஆர், எண்பதுகளில் ஜெயலலிதா, தொண்ணூறுகளில் ரஜினி, இப்போது விஜய்காந்த் என்று ஒரு வரிசையை நான் உருவாக்கியிருந்தால் அது என் கருத்துக்கு வலுசேர்க்கத்தானே செய்யும்? பின் ஏன் அவரைப் பட்டியலில் சேர்க்கவில்லை? அந்தக் கட்டுரையிலேயே சொல்லியிருக்கிறேன். மற்றவர்களுடன் ஒப்பிடுகையில் ஜெயலலிதாவின் அரசியல் வளர்ச்சியில் ஊடகங்களின் பங்கு குறைவானது என்று நான் கருதுவது தான் காரணம். ஜெயலலிதாவை வளர்த்துவிட்டது ஊடகங்களல்ல, எம்.ஜி.ஆர். பத்து ஆண்டுகளாக தன்னுடன் இருந்த இரண்டாம் நிலை தலைவர்களையெல்லாம் விட்டுவிட்டு எம்.ஜி.ஆர் புதிதாக வந்த ஜெயலலிதாவைக் கட்சியில் முதன்மைப்படுத்தினார். எம்.ஜி.ஆர் மறைவுக்குப் பின், ஓரிரு வருடங்கள் கடுமையாகப் போராடிய பிறகு, ஏற்கனவே நன்கு வளர்ந்திருந்தக் கட்சியை ஜெயலலிதா கைப்பற்றினார். அந்த வகையில் அவர் மற்றவர்களிடமிருந்து வேறுபடுவதால் தான் நான் ஜெயலலிதாவைக் குறித்து அதிகம் பேசவில்லை.

அண்ணா, கருணாநிதி ஆகியோரது அரசியலைத் திரை அரசியல் என்று வகைப்படுத்துவது எந்த அளவுக்கு பொருத்தமானது? அப்படியே அவர்களை நடிகர்களுடன் பட்டியலில் சேர்த்தாலும், மாநிலவாதம், இந்தி எதிர்ப்பு போன்றவற்றை ஒரே தட்டில் ஏன் வைக்கமுடியாது? பேஷாக வைக்கலாமே. தமிழ்நாட்டைச் சேர்ந்த அண்ணாவும் கருணாநிதியும் இந்தி எதிர்ப்பு, மாநிலவாதம் பேசினார்கள், வெளிமாநிலங்களை சேர்ந்த மற்ற இருவரும் அப்படி செய்யவில்லை என்று சொல்ல எவ்வளவு நேரமாகும்?

****

என்னுடைய கருத்தை தவறு என்று காட்டும் எதிர் உதாரணங்களாக வெங்கட் கூறுவது:

"ஜெகத்-தின் கண்ணோட்டத்தில் பார்த்தால் அவர்கள் அரசியலுக்குள் நுழைந்த காலகட்டத்தில் மிகப் பிரபலமாக இருந்த பாக்கியராஜ், டி.ராஜேந்தர் இருவரையும் எதிருதாரணமாகக் காட்ட முடியும். தமிழகத்தின் பெரும்பான்மை சாதிகளின் பின்னணி இல்லாமலிருந்தபொழுதும், ஆத்திக சிகாமணிகளாக இருந்தபொழுந்தும் இவர்களை ஊடகம் வளர்த்தெடுக்கவில்லை (அ) ஊடகத்தால் இயலாமற்போயிற்று."

பாக்கியராஜும், ராஜேந்தரும் எப்படி எதிர் உதாரணம் ஆவார்கள்? அவர்கள் தமிழல்லாத மொழியைத் தாய்மொழியாகக் கொண்டவர்களா என்றுத் தெரியவில்லை. (சில குறிப்பிட்ட அச்சு ஊடகங்களுக்குத் தமிழ் தேசியவாதத்தைக் குறித்து இருக்கும் அச்சத்தைப் பார்க்கும்போது மேலே வெங்கட் குறிப்பிட்டிருக்கும் இரண்டு 'தகுதிகளை' விட இது முக்கியமான ஒன்று என்றே சொல்லவேண்டும்.) அப்படியே அவர்களுக்கு நான் குறிப்பிட்ட 'தகுதிகள்' அனைத்தும் இருந்தும் ஊடகங்கள் அவர்களை வளர்த்தெடுக்கவில்லை என்று வைத்துக்கொண்டால் கூட தர்க்கப்படி நான் சொன்னது தவறாகாது. பன்னிரண்டாம் வகுப்பில் தேர்ச்சிப் பெற்றவர்களைத் தான் மருத்துவக்கல்லூரிகள் சேர்த்துக்கொள்ளும் என்று நான் சொன்னால், பன்னிரண்டாம் வகுப்பில் தேர்ச்சிப் பெற்றும் மருத்துவக்கல்லூரியில் சேர்த்துக்கொள்ளப்படாத சிலரை நீங்கள் "எதிர் உதாரணமாகக்" காட்டமுடியாது. பால் கண்டிப்பாக வெளுத்திருக்கும். ஆனால் வெளுத்ததெல்லாம் பால் அல்ல.

சில ஆண்டுகளுக்கு முன் ரஜினியை ஆதரித்த, இப்போது விஜய்காந்தை ஆதரிக்கும் தினமலர் பாக்கியராஜ் தனிக்கட்சித் தொடங்கியபோது அவரைக் கடுமையாகத் தாக்கியது. "எம்ஜிஆர் மக்கள் முன்னேற்றக் கழகம்" என்ற அவரது கட்சிப்பெயரை "எம"முக என்று கிண்டலடிப்பது, அவரை எம நடிகர் என்று குறிப்பிடுவது போன்ற மலிவான நையாண்டிகளை தினமலர்/வாரமலரில் பார்த்த நினைவிருக்கிறது. பாக்கியராஜுக்குக் கிடைக்காத தினமலரின் ஆதரவு விஜய்காந்துக்கு ஏன் கிடைக்கிறது?

*****

நான் நடிகர்களின் வெற்றித் தோல்விக்கு அவர்களது திறமை அல்லது திறமையின்மையைக் காரணமாக ஏற்க மறுத்து, ஊடகங்களை மட்டுமே காரணமாகச் சொல்வது போல் புரிந்துக்கொண்டு வெங்கட் எழுதியிருக்கிறார். உண்மையில் அப்படிச் சொல்லும் அளவுக்கு நான் முட்டாளில்லை. "தமிழக அரசியலில் நடிகர்கள் பெறும் முக்கியத்துவத்துக்கு பாமரத் தமிழர்களின் திரைப்பட வெறி மட்டும் காரணமல்ல. ஊடகங்களின் செயற்பாடுகளும் ஒரு முக்கிய காரணம்." என்று எழுதியிருக்கும் போதே ஒன்றுக்கு மேற்பட்டக் காரணங்கள் இருப்பதை நான் ஏற்றுக்கொள்கிறேன் என்று தானே அர்த்தம்? சில வருடங்களுக்கு முன் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோர் மீது தமிழர்களுக்கு இருக்கும் ஈர்ப்புக்கு அவர்களது தோற்றத்தையும் நிறத்தையும் ஒரு காரணமாக முன்வைத்து வாசந்தி இந்தியா டுடேயில் எழுதியிருந்தார். அதற்காக அவர்களது மற்றத் தகுதிகளை அவர் மறுக்கிறார் என்றாகிவிடுமா? ஒரு நடிகர் அரசியலில் பெறும் முக்கியத்துவத்துக்குப் பின்னால் எத்தனையோ காரணங்கள் இருக்கக்கூடும். ஊடக ஆதரவை அவற்றில் ஒன்றாக நான் முன்வைக்கிறேன். அவ்வளவே.

வெங்கட் சொல்லியிருப்பதைப் போல ஊடகங்கள் "ஐம்பது வருடங்களாக ஒருவித மூர்க்கத்தனமான துல்லியத்துடன் தமிழகத்தின் அரசியல்வாதிகளை வெள்ளித்திரையிலிருந்து கண்டெடுத்து அவர்களை மக்கள் மனதில் விதைத்து பின்னர் கோட்டையேற்றுவதாக" நானும் நம்பவில்லை. திரையுலகிலிருந்து பலரும் முதல்வர் கனவுடன் அரசியலில் நுழைகிறார்கள் அல்லது நுழைவதற்கு திட்டமிடுகிறார்கள். ஜெயகாந்தன் சொன்னது போல் இவர்களில் குதிரைகளும் உண்டு, கழுதைகளும் உண்டு, கோவேறுக் கழுதைகளும் உண்டு. இவற்றில் எந்த மாதிரியானக் குதிரைகளின் மீது சில ஊடகங்கள் பந்தயம் கட்டுகின்றன என்றுப் பார்த்தால் அவற்றிடையே சில ஒற்றுமைகள் இருப்பது தெரிகிறது. அதைத் தான் சொல்லியிருக்கிறேன். மற்றபடி இவர்கள் பந்தயம் கட்டி என்ன தான் "கமான், கமான்" என்றுக் கத்தினாலும் ஓடத் தெம்பில்லாதக் குதிரைகள் வெற்றிபெறாது என்பது எனக்குத் தெரியும்.

8 மறுமொழிகள்:

//வீட்டில் தெலுகு பேசும் கருணாநிதி" என்பது எனக்கு செய்தி.//
உண்மைதான் அது. எம்.ஜி.ஆரை எழுபதுகளில் ரொம்ப சீண்ட, அவர் கருணாநிதியின் சாதியை வைத்து அவரும் தெலுங்கு தாய் மொழிக்காரர் எனக் கூறினார். அதில் திக்குமுக்காடிப் போன கருணாநிதி கொஞ்ச நாளைக்கு அடக்கி வாசித்தார். அக்காலக் கட்டங்களில் இதை நான் படித்தவன்.

//காவிரிக்கரை இசைவேளாளர்கள் ஏன் தெலுங்குப் பேசப்போகிறார்கள்?//
திருவையாறில் வாழ்ந்த தியாகையர் தெலுங்கில் கீர்த்தனங்கள் போட்டதற்கான காரணமே அது. தெலுங்கு சோழர்கள், திருமலை நாயக்கன் ஆகியோர் ஆட்சி செய்த போது தெலுங்குதான் முன்னணியில் இருந்தது என்பதௌ ஒரு சரித்திர உண்மை.

அன்புடன்,
டோண்டு ராகவன்

டோண்டு அய்யா,

தெலுங்கு வீட்ல தாய்மொழிய இருக்குறத்கும் , அதிகார மொழிய இருக்குறதுல பாடுறதுத்கும் வித்தியாசம் இருக்குவோய்

FYI

There was no 'thelugu Cholo'. as I heared all cholo kings are tamils and Kallar community. Pallavas are Vanniyars.

MK is a tamilian. no doubt at all.

Backiya raj is a Naidu (telugu speaking). TR tamil. still many people beleiving that MGR is a tamil and last year kumudam made a article states that he is a tamil community man. (that was a big story).

anybody tell about JJ orgin? tamil or Kannada?

>>திருவையாறில் வாழ்ந்த தியாகையர் தெலுங்கில் கீர்த்தனங்கள் போட்டதற்கான காரணமே அது.>>

உங்க மொக்கை இருக்கே, உலக மொக்கை ஐயா,
தமிழ் திரைப் பாடல்களில் ஆங்கில வார்த்தைகள் அதிகமாய் இருப்பதற்கு
காரணம், தமிழ் பாடலாசிரியர்கள் எல்லம் ஆங்கில வழித்தோன்றல்கள் என்று ஒரு மொக்கை போடுங்கள், ஊரும் நம்பும்

தஞ்சாவூரில் இசை,கலைகளை ஆதரித்த அரசர்கள் இருந்ததால்
தஞ்சைக்கு இடம் பெயர்ந்த இசை வேளாளர்களில் ஒருவர் தான்
கருணாநிதி. இவர் தமிழர் என்பதில் சந்தேகமில்லை.

உங்களுடைய யூகம் சரிதான். மேலும் எம்ஜிஆரி ஆர்.எம்.வீ
ஜெயலலிதா இருவரையும் பேலன்ஸ் செய்து வந்தார். ஜெயலலிதா
மட்டுமே என் அரசியல் வாரிசு என்று அடையாளம் காட்டவில்லை
(கடைசி வரை.) இந்த இருவரில் ஊடகங்கள் ஜெயலலிதாவைத்தான்
ஆதரித்தது.

கருணாநிதி தெலுங்கு பேசுகிறவர் என்பது வேடிக்கையானது. அதைவிட விட வேடிக்கையானது தெலுங்குச் சோழர்கள் என்பது...

சிலர் கருணாநிதியை நாவிதர் என்று குறிப்பிடு கேலி செய்வதுமுண்டு.

இசைவேளாளர்கள் தங்கள் தொழில் முறையில் தெலுங்கை அறிந்திருப்பது இப்படி புரிந்துகொள்ளப்படுகிறது என்று நினைக்கிறேன்.

//எம்ஜிஆரி ஆர்.எம்.வீ
ஜெயலலிதா இருவரையும் பேலன்ஸ் செய்து வந்தார். ஜெயலலிதா
மட்டுமே என் அரசியல் வாரிசு என்று அடையாளம் காட்டவில்லை
(கடைசி வரை.) இந்த இருவரில் ஊடகங்கள் ஜெயலலிதாவைத்தான்
ஆதரித்தது. //

This is 100% true. JJ alos has mass appeal like cinema fame, women.

கருணாநிதி தெலுங்கே தான். அதான் தமிழ்நாட்டு OBC இடஒதுக்கீடு பட்டியலில் ஒரே இந்தி தெலுங்கு பேசும் சாதிகள். 'பாப்பான்' தமிழ் இல்லை...இவன் தமிழ் இல்லை...அவன் தமிழ் இல்லை என அடிக்கடி பேச்சு அளிப்பவர்...அவரே தமிழ் இல்லை என்பது நிசப்தமான உண்மை. அர்ஜுன் சிங், வி பி சிங், இந்த சிங், அந்த சிங் போன்ற இந்தி தலைவர்களை தலையில் தூக்கி புகழ்ந்து பாடும் பாங்கில் போய்ட்டார் மு க.