திரை(மறைவு) அரசியல்

சில ஆண்டுகளுக்கு முன் ஆர்னால்ட் ஸ்வாஸ்னேக்கர் கலிபோர்னியாவின் ஆளுநராகத் தேர்வு செய்யப்பட்டபோது, திரைத்துறையுடன் தொடர்புடையவர்களை, குறிப்பாக நடிகர்களை மட்டுமே அரசின் தலைவர்களாகத் தேர்ந்தெடுக்கும் இந்தியாவிலுள்ள தமிழ்நாடு என்னும் விசித்திர மாநிலத்தைப் பற்றியக் குறிப்புகள் சில அமெரிக்க இதழ்களில் இடம்பெற்றிருந்தன. அந்த அளவுக்கு தமிழ்நாட்டின் திரைத்துறைக்கும் அரசியலுக்கும் உள்ள தொடர்பு நன்கு அறியபட்டதாக இருக்கிறது. அண்டை மாநிலத்தவர்களுக்கு இது தமிழர்களை ஒட்டுமொத்தமாக மட்டம் தட்டுவதற்கு பயன்படும் ஒரு பேசுபொருள். திரைப்பட நடிகர்களுக்கு தமிழக அரசியலில் கிடைக்கும் வரவேற்பு மற்றும் வெற்றிக்கு பின்னால் பல்வேறு விதமான காரணங்கள் இருந்தாலும் இது குறித்து மேலோட்டமான புரிதல் உள்ளவர்கள் ஒரே ஒரு காரணத்தை மட்டுமே முன்வைக்கிறார்கள். பாமரத் தமிழர்களுக்கு திரையில் தெரியும் பிம்பத்தையும் நிஜ வாழ்வையும் வேறுபடுத்திப் பார்க்கும் பக்குவம் இல்லை என்பதே அது.

மேலே சொல்லப்பட்டிருக்கும் காரணத்தில் சிறிது உண்மை இருந்தாலும் தமிழக அரசியல் களத்தில் திரைப்பட நடிகர்களுக்கு கிடைக்கும் பெரும் ஆதரவுக்குப் பின்னால் வேறு ஒரு முக்கியமான காரணமும் இருக்கிறது. திரைத்துறையில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற பல நடிகர்கள் அரசியலில் ஈடுபட்டும் அனைவராலும் வெற்றிப்பெற முடியவில்லை. சிலர் முதலமைச்சர் ஆனார்கள், வேறு சிலரால் தேர்தலில் வைப்புத்தொகையை தக்கவைத்துக் கொள்ளக்கூட முடியவில்லை. ஒரு நடிகர் அரசியலில் எந்த அளவுக்கு வெற்றிப்பெறுவார் என்பதை முடிவு செய்வதில் அவரது திரை பிம்பத்துக்கு சற்றும் குறையாத வகையில் அவரது ஊடக பிம்பமும் முக்கிய பங்கு வகிக்கிறது. தமிழ்நாட்டு அரசியலின் கடந்த நாற்பதாண்டு கால வரலாற்றை நோக்கினால் தமிழக ஊடகங்களின் வலுவான ஒரு பிரிவு ஒவ்வொருக் காலகட்டத்திலும் ஏதாவது ஒரு நடிகரின் தலைக்குப் பின்னே ஒளிவட்டத்தை ஏற்படுத்தி அவரை ஒரு மிகப்பெரிய அரசியல் சக்தியாக உருவாக்க பெருமுயற்சி எடுத்துவந்திருப்பதைப் பார்க்கலாம். இதில் ஒரு வேடிக்கை என்னவென்றால் படித்தவர்கள் அரசியலுக்கு வந்தால் அனைத்துப் பிரச்சனைகளும் தீர்ந்துவிடும் என்ற மந்திரத்தை தொடர்ந்து ஓதிவரும் இந்த ஊடகப் பிரிவினர் தான் பாமர ரசிகர்களின் அறியாமையையே தங்கள் பலமாகக் கொண்ட நடிகர்களுக்கு கொம்புசீவி விடுபவர்கள்.

இந்த ஊடகங்கள் தாங்கள் வெறுக்கும் ஒருவகை அரசியலை - தமிழ் தேசியவாத சிந்தனை, 'உயர்'சாதி ஆதிக்க எதிர்ப்பு, கடவுள் மறுப்பு போன்ற கூறுகளை ஏதாவதொரு விகிதத்தில் கொண்ட அரசியலை - ஒழித்துக்கட்ட மற்ற அனைத்து வழிகளையும் கையாண்டுப் பார்த்து பலனில்லாத நிலையில் பாமர மக்களின் திரைப்பட மோகத்தை பயன்படுத்திக் கொள்கின்றன. இவர்களின் ஆதரவு எல்லா நடிகர்களுக்கும் கிடைப்பதில்லை, சில குறிப்பிட்டத் தகுதிகள் உள்ளவர்களுக்கு மட்டுமே கிடைக்கிறது.

1. ஆதரவு பெறும் நடிகர் எந்நிலையிலும் தமிழ் தேசியவாதம் பேச முடியாதவராக இருக்கவேண்டும். மலையாளத்தைத் தாய்மொழியாகக் கொண்ட எம்.ஜி.ஆரும், மராட்டியரான ரஜினிகாந்தும், வீட்டில் தெலுங்கு பேசுபவராக அறியப்படும் விஜய்காந்தும் ஒருபோதும் தமிழ் தேசியவாத அரசியலை முன்னெடுக்க முடியாது. மேலும் அவர்கள் தங்கள் பின்புலம் காரணமாக வரும் தமிழ் தேசியவாதிகளின் எதிர்ப்பை எதிர்கொள்ள இந்திய தேசிய அடையாளத்தை தீவிரமாக வலியுறுத்தவேண்டியக் கட்டாயத்துக்கு உள்ளாவார்கள். இந்தித் திணிப்பு எதிர்ப்பு, மாநில சுயாட்சி போன்ற நிலைபாடுகளைப் பொறுத்தவரை எழுபதுகளிலும் எண்பதுகளிலும் கருணாநிதி காட்டிய தீவிரத்தில் நூற்றில் ஒரு பங்கைக் கூட எம்.ஜி,ஆர் வெளிப்படுத்தியதில்லை. ஆட்சிக்கு வந்த உடனேயே தன் கட்சிப் பெயருக்கு முன்னால் 'அகில இந்திய' என்றொரு முன்னொட்டை சேர்த்துக்கொண்டார். ரஜினிகாந்தால் காவிரி நீருக்காக தமிழக நடிகர்கள் நடத்தும் ஒரு பேரணியில் கூட கலந்துக்கொள்ள முடியாது. விஜய்காந்த் தமிழக பள்ளிகளில் இந்தி கற்பிப்பதை ஆதரித்துப் பேசுகிறார். இரு வாரங்களுக்கு முன் ஒரு இணையக் கட்டுரையில் படித்ததைப் போல ஊடகங்களின் அமோக ஆதரவுடன் திமுகவை உடைத்து தனிக்கட்சி தொடங்கியவர்கள் அனைவருமே - ஈ.வி.கே சம்பத்(கன்னடம்), எம்.ஜி.ஆர்(மலையாளம்), வைகோ(தெலுங்கு) - தமிழல்லாத ஒரு மொழியைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள் என்பது தற்செயலானதா என்றுத் தெரியவில்லை.

2. பிற்படுத்தப்பட்டோருக்கு ஆதரவாக 'உயர்'சாதி ஆதிக்க எதிர்ப்பு அரசியலில் ஈடுபடும் வாய்ப்பு இல்லாதவர்களாக இருக்கவேண்டும். எண்ணிக்கைப் பலம் கொண்ட தேவர், வன்னியர், நாடார் போன்ற பிற்பட்டத் தமிழ் சாதிகளைச் சேர்ந்த நடிகர்கள் தங்கள் சமூக ஆதரவைத் தக்கவைத்துக்கொள்ள அத்தகைய அரசியலை மேற்கொள்வதற்கான வாய்ப்பு இருப்பதால், அவர்களுக்கு ஊடக ஆதரவு கிடைக்காது. எம்.ஜி.ஆருக்குக் கிடைத்த ஆதரவு 'என் தமிழ் என் மக்கள்' என்ற வசனத்துடன் தனிக்கட்சி தொடங்கி கள்ளர் சமூகத்தினர் பெரும்பான்மையாக உள்ள தொகுதியில் போட்டியிட்ட சிவாஜிக்கு கிடைக்காது. (எம்.ஜி.ஆர் ஆட்சிக்கு வந்த பின் 'உயர்'சாதியினருக்கு ஆதரவானதாக கருதப்பட்ட சில நடவடிக்கைகளை எடுத்தது கவனிக்கத்தக்கது. சாதி அடிப்படையிலான இடஒதுக்கீட்டு முறையை மாற்றி பொருளாதார அடிப்படையில் இடஒதுக்கீட்டை அமல்படுத்த முயன்றதை ஒரு எடுத்துக்காட்டாகச் சொல்லலாம். அதன் காரணமாக நாடாளுமன்ற தேர்தலில் மிக மோசமான தோல்வியை சந்தித்தப் பிறகே பிற்படுத்தப்பட்ட/தலித் மக்களுக்கான மொத்த இட ஒதுக்கீட்டை 69% ஆக உயர்த்தினார்.) தொண்ணூறுகளில் ரஜினிக்கு கிடைத்த ஆதரவும், கடந்த தேர்தலில் விஜய்காந்துக்கு கிடைத்த ஆதரவும் சரத்குமார், கார்த்திக் போன்றவர்கள் தனிக்கட்சி தொடங்கி தீவிர அரசியலில் இறங்கினால் கிடைக்காது.

3. கடவுள் மறுப்புக் கொள்கை உடைய நடிகர்களுக்கு இந்த ஊடகங்கள் ஒருபோதும் ஆதரவளிக்காது. ரகசியமாக மூகாம்பிகை கோயிலில் வழிபடுபவராக அறியப்பட்ட எம்.ஜி.ஆரும், இமயமலையில் இரண்டாயிரம் வயதுப் பெரியவர்களிடம் ஆன்மீகம் பயிலும் ரஜினியும், ஜோதிடர்களின் சொற்படி ஒவ்வொரு அடியையும் எடுத்துவைப்பதாக சொல்லப்படும் விஜய்காந்தும் பாதுகாப்பானவர்கள். கமலஹாசனோ சத்யராஜோ கட்சி ஆரம்பித்தால் ஊடக ஆதரவு கிடைப்பது சந்தேகமே.

மேலே உள்ள தகுதிகள் எல்லாம் ஜெயலலிதாவுக்கும் உண்டு என்றாலும் அவர் தன் திரைப் பிம்பத்தையும் ரசிகர்களையும் ஊடக ஆதரவையும் மட்டும் பயன்படுத்தி முன்னேறியவர் அல்ல. மாறாக எம்.ஜி.ஆரால் முன்னிலைப்படுத்தப்பட்டு அவரது மறைவுக்குப் பின் நன்கு வளர்ந்த நிலையில் இருந்த ஒரு கட்சியை கைப்பற்றிக் கொண்டவர்.

ஆக, தமிழக அரசியலில் நடிகர்கள் பெறும் முக்கியத்துவத்துக்கு பாமரத் தமிழர்களின் திரைப்பட வெறி மட்டும் காரணமல்ல. ஊடகங்களின் செயற்பாடுகளும் ஒரு முக்கிய காரணம். இன்னும் ஒரு பதினைந்து ஆண்டுகள் கழித்து வேறு ஏதாவது ஒரு நடிகருக்கு இதே ஊடகங்கள் கொம்புசீவிக் கொண்டிருந்தால் அவரும் மேலே சொன்ன தகுதிகளைக் கொண்டவராகத் தான் இருப்பார்.

[நேரமின்மை காரணமாக எழுத நினைத்த எல்லாவற்றையும் எழுத முடியவில்லை. மற்றவை நாளை.]

38 மறுமொழிகள்:

ஜெகத்

உங்கள் எழுத்துககளை தொடர்ந்து படித்து வருகிறேன். நீங்கள் நிறைய எழத வேண்டும்.

ரஜினியை தீவரமாக ஆதரித்த "சோ" விஜய்காந்தை ஆதரிப்பாரா என்று சந்தேகமே?!

சரத் - சாதிப் பற்று கொண்ட ஓர் நடிகர். சமீப காலங்களில் வெற்றி படங்களை என்ன கொடுத்தார் என்று எனக்கு தெரியவில்லை. இவர் சாதியை பின் புலத்தை வைத்துக் கொண்டு இவரால் சட்டமன்ற உறுப்பினர் கூட ஆக முடியாது.

தேவர் இனத்தை சேர்ந்த கார்த்திக் என்று எங்கே என்று கூட தெரியவில்லை!!!

நீங்கள் சொல்வது மிகச் சரி, ஊடகங்களுக்கு ஏதாவது தமிழ் தேசியம் பேசாத ஓர் நடிகர் வேண்டும்...

நன்றி
மயிலாடுதுறை சிவா...

Good, congrats for this week

நல்ல கட்டுரை ஜகத். இந்த கோணத்தில் இது வரை யோசித்ததில்லை. நீங்கள் சுட்டிய பிறகே இதன் பின்னணி புரிகிறது.

ஜெகத் ஊடகங்களின் நாடி பிடித்துச் சொல்லி இருக்கிறீர்கள் அதுவும் நெத்தியடியாக. தேவையான அரசியல் முன்னகர்வுகளை ஒழித்துக்கட்டுவதில் ஊடகங்கள் தொடர்ந்து முக்கியபங்காற்றியே வருகின்றன. முக்கியமாக அரசியல் சமூக விழிப்புணர்வு மக்களுக்கு வந்துவிடாம ல் இருக்க ஊடகங்கள் தங்களது ஜனநாயக கடமைகளை செய்தே வருகின்றன. ஊடகங்களுக்குத் தேவை போதையிலிருக்கும் மயக்க நிலையில் இருக்கும் மக்கள்.

நல்ல ஆழமான அலசல், வாழ்த்துக்கள்

excellent analysis!

"சரத் - சாதிப் பற்று கொண்ட ஓர் நடிகர்"

நல்ல ஜோக்! அப்படி ஒரு பற்று இருப்பது போல அவர் நடிக்கிறார். சுற்றியிருப்பவர்களும் அந்தப் 'பற்றி'னால் அவர் மீது பற்று கொண்டது போல இப்போதைக்கு நடிக்கிறார்கள். அவ்வளவுதான்

நிறைய இடைவெளி விட்டு எழுதினாலும் ஒவ்வொன்றிலும் தனி கவனம் எடுத்து எழுதுகிறீர்கள். நன்றி.

தமிழ்க அரசியல் நிலவரத்தை மிகச்சரியாக நாடி பிட்த்துப் பார்க்கும் நல்ல பதிவு.

நன்றாக அலசியிருக்கிறீர்கள்.

ஆனால் ஊடகத்தை மட்டும் குறை கூற முடியுமா என்று சொல்ல முடியவில்லை.

வைகோ திமுகவை விட்டு விலகியபோது அவரை ஆதரித்தவர்கள் இரு பெரும் அரசியல் தலைவர்களான எல்.ஜி மற்றும் செஞ்சி. இவர்கள் இருவருக்கும் சாதி ஓட்டு பலம் மற்றும் அரசியல் அனுபவம் இருக்கத்தான் செய்தது.

தொடர்ந்து 5 தொண்டர்கள் தீக்குளித்தார்கள்.

அதை விட அவருக்கு ஈழத் தமிழர்கள் ஆதரவு பெருமளவு இருந்தது. அதனாலேயே தமிழர்களுக்கு அவர்மேல் பெரும் பாசமும் இருந்தது / இன்னமும் இருக்கின்றது. அவரும் தனது நிலைப்பாட்டை மாற்றாமல்தான் இருக்கிறார் இன்று வரை.

ஊடகங்கள் இந்த நிகழ்வுகளை பெரிதாக பயன்படுத்திக் கொண்டன என்றுதான் தோன்றுகிறது.

ரஜினி 'வாய்ஸ்' விட்டதும், எத்தனை அரசியல் முனைப்பாளர்கள் 'துண்டு' பிடிக்க போட்டியிட்டார்கள்? வக்கீல் சங்கம், தொழிலாளர் சங்கம் என்று பல சங்கங்கள் முன் வந்தனவே.

ஊடகங்களில் ராமதாஸும், திருமாவளவனும், புதிய தமிழகம் கிருஷ்ணசாமியும் போன்றோரும் முன்னிறுத்தப்பட்டார்கள்.

அவரவர் செயல்பாடுகள்தான் ஒருவரை நீண்ட காலம் அரசியலில் நிலைத்திருக்க வைக்கிறது என்றுதான் எனக்குத் தோன்றுகிறது.

நீங்கள் சொல்லும் காரணங்கள் சரிதான்..இதையே வேறு கோணத்தில் நான் எழுதினேன்...புரட்சித் தலைவர், சூப்பர் ஸ்டார் எங்கள் ஜாதி ...! நேரம் கிடைக்கும் போது படித்து பாருங்கள்ள் !

எம்ஜிஆர் மலையாளி என்ற பிரச்சாரத்தையும், திமுகவினரின் வன்முறைகளையும் மீறி வளர்ந்த கட்சி அதிமுக.
1976ல் எம்ஜிஆர் அதன் பெயர் முன்னால் அனைத்திந்திய என்று சேர்த்த போது அதிமுக
ஆட்சியில் இல்லை.ஊடகங்களை நம்பி எம்ஜிஆர், ஜெயலலிதா கட்சி நடத்தவில்லை.
கருணாநிதிக்கு மாநிலசுயாட்சி, இந்தி எதிர்ப்புப் போன்றவை தேவைப்பட்டால்
பயன்படும் துண்டுகள். தேவையில்லாத போது அவை காணமல் போய்விடும். வைகோ
திமுகவில் பல ஆண்டுகள் இருந்தவர்தான்.இப்போதுதான் உங்களுக்கு அவர் தெலுங்கர்
என்று தெரிகிறது. ஊடகங்கள் என்று குறிப்பிடும் போது தமிழ் நாட்டில் அதிகம் விற்கும்
தினசரிகள் தினகரன், தினத்தந்தி, அதிகப் மக்களை சென்றடையும் தனியார் தொலைக்காட்சி
சன் குழும தொலைக்காட்சிகள். இவை யாரை ஆதரித்தன, ஆதரிக்கின்றன என்பது உலகறிந்த ஒன்று. திமுகவிற்கு தேவைப்படும் போது ரஜனி காந்த ஒருவிதமாகத் தோன்றுவார், அவர் அரசியல்
சார்பில்லை என்று சொன்னால் இன்னொருவிதமாகத் தோன்றுவார். ஆதரவு தரும் போது அவர் கன்னடர் என்பது தெரியாது. தமிழக மக்கள் எம்ஜிஆர் மலையாளி என்ற பிரச்சாரத்தினை
தூக்கி எறிந்து எம்ஜிஆரை மூன்று முறை முதல்வராக, அதுவும் பெரும்பான்மை பலத்துடன் ஆக்கினார்கள். அதற்கு எந்த ஊடகம் காரணம். உங்களைப் போன்ற திமுக அனுதாபிகளுக்கும்,
ஆதரவாளர்களுக்கும் எம்ஜிஆர் என்றால் கசக்கலாம். தமிழக மக்களைப் பொறுத்தவரை கருணாநிதியை விட அவருக்கே ஆதரவு அதிகம் என்பதை பல முறை நிரூபித்துக்காட்டி.
திமுகவிற்கும், தமிழ் தேசியத்திற்கும் என்ன தொடர்பு - 1989-
91, 96- 2001 - திமுக ஆட்சியில் இருந்த போது நெடுமாறன் உட்பட தமிழ்தேசியவாதிகள்
சிறையிலடைக்கப்பட்டனர். அதுதான் திமுகவின் தமிழ் தேசிய நிலைப்பாடு. அதிமுக பயன்படுத்திய உதவிய பொடாவை ஆதரித்து ஒட்டளித்தது திமுக.
"அவரவர் செயல்பாடுகள்தான் ஒருவரை நீண்ட காலம் அரசியலில் நிலைத்திருக்க வைக்கிறது என்றுதான் எனக்குத் தோன்றுகிறது. "
இந்த உண்மை சிலருக்கு உரைக்காது.

நல்ல அலசல்.

ஊடகங்களைக் குறை கண்டாலும் திட்டமிட்டு நடந்ததாக நான் நினைக்கவில்லை. அவை தங்கள் சந்தையின் வளர்ச்சிக்கு உதவிய பிம்பங்களை வளர்த்து விட்டார்கள். சமூக விழிப்புணர்ச்சிக்கு வித்திடவில்லை என்று வேண்டுமானால் சொல்லலாம். இன்றும் அவர்களின் பெரும்பாலான பயனர்கள் தமிழ் தேசியம், கடவுள் மறுப்பு, 'உயர்'சாதி ஆதிக்க மறுப்பு கொள்கைகளுக்கு அப்பாற்பட்டவர்களாகவே இருக்கிறார்கள்.

ஒருவிதத்தில் சினிமாவினால் சமூகம் கெட்டதா, சமூகத்தினால் சினிமா கெட்டதா போன்றது தான் இதுவும்.

பத்திரிக படிக்கிற பல பேர் ஒட்டுப் போடவே வரமாட்டாங்க. பத்திரிகை படிக்காத, ரேடியா கேக்கற, டிவி பார்க்கற சனங்கதான் ஒட்டுப் போட க்யுவில நிப்பாங்க. இதுதான் நடப்பு. இதைவிட்டு புட்டு ஊடகம் ஊடகம்ன்னும் கூவினா அது நிசமாயிருமாய்யா?

இது வரை இப்படி சிந்தித்தது இல்லை. நன்றி

"இரு வாரங்களுக்கு முன் ஒரு இணையக் கட்டுரையில் படித்ததைப் போல ஊடகங்களின் அமோக ஆதரவுடன் திமுகவை உடைத்து தனிக்கட்சி தொடங்கியவர்கள் அனைவருமே - ஈ.வி.கே சம்பத்(கன்னடம்), எம்.ஜி.ஆர்(மலையாளம்), வைகோ(தெலுங்கு) - தமிழல்லாத ஒரு மொழியைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள் என்பது தற்செயலானதா என்றுத் தெரியவில்லை."

ஈ.வே.ராவின் தாய் மொழியும் கன்னடம்தானே.சம்பத் அவருடைய
உறவினர்.ஈ.வெ.கிருஷ்ணசாமி (ஈ.வெ.ராவின் உட்னபிறப்பான) மகன் சம்பத். இளங்கோவன் (இப்போதைய மத்திய அமைச்சர்) சம்பத்தின் மகன்.சம்பத் சொல்லின் செல்வர் என்று அழைக்கப்பட்டவர். அண்ணாவால் பாராட்டப்பட்ட பேச்சாளர், கழகத்தின் முண்ணணி தலைவராக இருந்தவர். திமுக தனி நாடு கோரிய போது திமுகவில் இருந்தார் அவர்.

சம்பத் ஏன் தனிக் கட்சி துவங்கினார் என்பது உங்களுக்குத் தெரியுமா. அண்ணாவிற்கு நெருக்கமான சம்பத் விலகும் நிலையை ஏற்படுத்தியதில் யாருக்கு முக்கிய பங்கு என்பதையாவது நீங்கள் அறிவீர்களா.
கண்ணதாசனின் மனவாசம், மனவாசம் நூல்களைப் படித்தால் இதில் கலைஞர் ஆற்றிய 'பெரும்பணி' தெரியவரும். திமுகவில் அண்ணாவிற்கு நெருக்கமான சம்பத் விலகிய போது அண்ணா சம்பத் திரும்ப வருவதை விரும்பினார், அதை தெரிவித்தார்.

எம்.ஜி.ஆர், வைகோ இருவரும் திமுகவை விட்டு வெளியேற்றப்பட்டவர்கள். அவர்கள் திமுகவை உடைத்து புது கட்சி(கள்) ஆரம்பிக்கவில்லை. திமுகவிலிருந்து வெளியேற்றப்பட்ட நிலையில் அரசியலில் நிலைத்து நிற்க புதுக்கட்சி(கள்) ஆரம்பிக்கப்பட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டவர்கள். திமுக 1972ல் எம்.ஜி.ஆரை வெளியேற்றியது எதற்காக -
எம்ஜிஆர் கணக்கு கேட்டார், அதற்காக. தனக்கு நிகராக இன்னொருவர் வளர்வதை விரும்பாத கலைஞர்தான் சம்பத் விலக முக்கிய காரணம்.அவர்தான் எம்.ஜி.ஆர்,வைகோ வை கட்சியை விட்டு நீக்கினார்.

முதலில் தமிழக அரசியல் வரலாற்றைப் புரிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள்.
அப்புறம் உங்களுடைய தீர்ப்புகளை முன் வையுங்கள். அடிப்படை தகவல்களைக் கூட அறியாமல் தீர்ப்பு வழங்காதீர்கள்.

//சில ஆண்டுகளுக்கு முன் ஆர்னால்ட் ஸ்வாஸ்னேக்கர் கலிபோர்னியாவின் ஆளுநராகத் தேர்வு செய்யப்பட்டபோது,//
Have u forgotten Reagan?

GK

ஜகத் - முன்முடிபுடன் இதை நீங்கள் அனுகியிருப்பதாகத் தோன்றுகிறது. என் கருத்தை எழுத அது நீண்டு போனதால் என் பதிவில் இட்டிருக்கிறேன். என் பார்வை சரியா என்று கொஞ்சம் சொல்லுங்கள்.

http://domesticatedonion.net/tamil/?p=679

கண்ணதாசனின் மனவாசம், மனவாசம் நூல்களைப் படித்தால் இதில் கலைஞர் ஆற்றிய 'பெரும்பணி' தெரியவரும்.

கண்ணதாசனின் மனவாசம், வனவாசம் நூல்களைப் படித்தால் இதில் கலைஞர் ஆற்றிய 'பெரும்பணி' தெரியவரும்

பின்னூட்டங்களைத் தாமதமாக பிரசுரித்ததற்கு மன்னிக்கவும். சில திடீர் வேலைகள் காரணமாக காலையிலிருந்து கணினி பக்கமே வரமுடியவில்லை. கருத்துத் தெரிவித்த நண்பர்கள் அனைவருக்கும் நன்றி.

"ஊடகங்கள் மட்டுமே காரணம்" என்று சொவதற்கும் "ஊடகங்களும் ஒரு முக்கிய காரணம்" என்று சொல்வதற்கும் வேறுபாடு இருக்கிறது என்றே நினைக்கிறேன். அப்படி இல்லை என்றால் அந்த பழி எனக்குத் தமிழ் கற்பித்த ஆசிரியர்களை சேரட்டும். ஆனால் சில எதிர்வினைகள் நான் ஏதோ "ஊடகங்கள் மட்டுமே காரணம்" என்று சொல்வதுபோல் எழுதப்பட்டிருக்கின்றன.

அனானி:

//"1976ல் எம்ஜிஆர் அதன் பெயர் முன்னால் அனைத்திந்திய என்று சேர்த்த போது அதிமுக
ஆட்சியில் இல்லை."//

"அனைத்திந்திய" சேர்த்தது 1977-ல் என்று நினைத்து சரிபார்க்காமல் எழுதிவிட்டேன். தகவல் பிழையை சுட்டிக்காட்டியதற்கு நன்றி.

//"திமுகவிற்கும், தமிழ் தேசியத்திற்கும் என்ன தொடர்பு"//

இந்திக்கு முன்னுரிமை கொடுக்கிறது என்பதற்காக இந்திய அரசியல் சட்டத்தைக் கொளுத்தியதற்கும், 'தமிழச்சிகளைக் கற்பழித்துவிட்டு வரும் ராணுவம்' என்று சொல்லி சென்னையில் வந்திறங்கிய இந்திய ராணுவத்தை வரவேற்க மறுத்ததற்கும் காரணம் தமிழ் தேசியவாதமா, இந்திய தேசியவாதமா என்று உங்களைப் போன்ற ஒரு அறிஞர் சொன்னால் தமிழக அரசியல் வரலாற்றைப் பற்றிய அடிப்படைத் தகவல்களைக் கூட தெரியாத எனக்கு பயனுள்ளதாக இருக்கும்.

//"1989-91, 96- 2001 - திமுக ஆட்சியில் இருந்த போது நெடுமாறன் உட்பட தமிழ்தேசியவாதிகள் சிறையிலடைக்கப்பட்டனர்.//

போகிற போக்கில் கொளுத்திப் போட்டிருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன். "one is a tribal and the other is a Sikh" என்று கொஞ்ச நாள் முன்னால் கொளுத்திப்போட்டது போல. 1989-91, 96- 2001 - திமுக ஆட்சியில் இருந்த போது நெடுமாறன் உட்பட தமிழ்தேசியவாதிகள் எப்போது, எதற்காக சிறையிலடைக்கப்பட்டனர் என்று சொல்லமுடியுமா? தன்னை சிறையில் அடைத்த திமுக அரசின் சார்பாகத் தான் நெடுமாறன் வீரப்பனிடம் தூது போனாரா என்று அறிய ஆவல்.

சம்பத், எம்.ஜி.ஆர், வைகோ, ரஜினி, விஜய்காந்த் ஆகியோருக்கு தாய்மொழி தமிழ் அல்ல என்று சொன்னேன். அந்த தகவல் தவறு என்று நீங்கள் நினைத்தால் அதை மறுக்கலாம். அதை விட்டுவிட்டு எம்.ஜி.ஆர் மூன்று முறை ஜெயித்தார், சம்பத் பாராட்டப்பட்ட பேச்சாளர் என்று அடுக்கிக்கொண்டே போகிறீர்கள். நான் அதையெல்லாம் இல்லை என்று சொன்னேனா?

கடைசியாக ஒரு கேள்வி: Intellectual lilliputians-க்காக எழுதப்படும் recycled junk பதிவுக்கெல்லாம் ஏன் மாய்ந்து மாய்ந்து கருத்து எழுதுகிறீர்கள்?

வெங்கட்,

விரிவான எதிர்வினைக்கு நன்றி. நிறைய முரண்படுகிறேன். விரிவாக பதிலளிக்க விருப்பம். இந்த நட்சத்திர வாரத்தில் தினம் ஒரு இடுகை இடவேண்டிய கட்டாயம் காரணமாக உங்களுக்கான பதிலை இப்போதைக்கு எழுத முடியாத நிலை. கூடிய விரைவில் எழுதுகிறேன்.

வெங்கட்

ஜெகத்தா ஜகத்தா?

///1976ல் எம்ஜிஆர் அதன் பெயர் முன்னால் அனைத்திந்திய என்று சேர்த்த போது அதிமுக
ஆட்சியில் இல்லை.ஊடகங்களை நம்பி எம்ஜிஆர், ஜெயலலிதா கட்சி நடத்தவில்லை.
கருணாநிதிக்கு மாநிலசுயாட்சி, இந்தி எதிர்ப்புப் போன்றவை தேவைப்பட்டால்
பயன்படும் துண்டுகள். தேவையில்லாத போது அவை காணமல் போய்விடும். வைகோ
திமுகவில் பல ஆண்டுகள் இருந்தவர்தான்.இப்போதுதான் உங்களுக்கு அவர் தெலுங்கர்
என்று தெரிகிறது. ஊடகங்கள் என்று குறிப்பிடும் போது தமிழ் நாட்டில் அதிகம் விற்கும்
தினசரிகள் தினகரன், தினத்தந்தி, அதிகப் மக்களை சென்றடையும் தனியார் தொலைக்காட்சி
சன் குழும தொலைக்காட்சிகள். இவை யாரை ஆதரித்தன, ஆதரிக்கின்றன என்பது உலகறிந்த ஒன்று. திமுகவிற்கு தேவைப்படும் போது ரஜனி காந்த ஒருவிதமாகத் தோன்றுவார், அவர் அரசியல்
சார்பில்லை என்று சொன்னால் இன்னொருவிதமாகத் தோன்றுவார். ஆதரவு தரும் போது அவர் கன்னடர் என்பது தெரியாது. தமிழக மக்கள் எம்ஜிஆர் மலையாளி என்ற பிரச்சாரத்தினை
தூக்கி எறிந்து எம்ஜிஆரை மூன்று முறை முதல்வராக, அதுவும் பெரும்பான்மை பலத்துடன் ஆக்கினார்கள். அதற்கு எந்த ஊடகம் காரணம்.///

ANSWER PLEASE ???????????//

//1976ல் எம்ஜிஆர் அதன் பெயர் முன்னால் அனைத்திந்திய என்று சேர்த்த போது அதிமுக
ஆட்சியில் இல்லை.//

76-ல் பெயர்மாற்றம் செய்யப்பட்டதை 77-ல் மாற்றியதாக நினைத்து எழுதிவிட்டேன் என்று ஏற்கனவே சொல்லியாகிவிட்டது.

//"ஊடகங்களை நம்பி எம்ஜிஆர், ஜெயலலிதா கட்சி நடத்தவில்லை."//

ஊடகங்களை நம்பி எம்ஜிஆர், ஜெயலலிதா கட்சி நடத்துவதாக நான் எங்காவது எழுதியிருந்தால் அதற்கான சுட்டியைத் தரவும்.

//"கருணாநிதிக்கு மாநிலசுயாட்சி, இந்தி எதிர்ப்புப் போன்றவை தேவைப்பட்டால் பயன்படும் துண்டுகள். தேவையில்லாத போது அவை காணமல் போய்விடும்."

"..திமுகவிற்கு தேவைப்படும் போது ரஜனி காந்த ஒருவிதமாகத் தோன்றுவார், அவர் அரசியல்
சார்பில்லை என்று சொன்னால் இன்னொருவிதமாகத் தோன்றுவார். ஆதரவு தரும் போது அவர் கன்னடர் என்பது தெரியாது."//

கருணாநிதி தான் புனைபெயரில் இந்த பதிவை எழுதுகிறார் என்று நினைக்கிறீர்களோ என்னவோ. நான் அவரில்லை. IP ஆதாரம் ஏதும் இருந்தால் சொல்லுங்கள்.

//"வைகோ திமுகவில் பல ஆண்டுகள் இருந்தவர்தான்.இப்போதுதான் உங்களுக்கு அவர் தெலுங்கர் என்று தெரிகிறது."//

இதற்கு முன்னால் அவர் தெலுங்கர் என்று தெரியாது என்று உங்களிடம் எப்போது சொன்னேன்? இதையே சில வாரங்களுக்கு முன் திண்ணையில் ஒருவர் எழுதியிருந்தபோது அவரிடம் இப்போது தான் தெரியுமா இல்லா முந்தாநாள் ராத்திரியே தெரியுமா என்றெல்லாம் யாரும் கேட்டதாகத் தெரியவில்லை.

//"ஊடகங்கள் என்று குறிப்பிடும் போது தமிழ் நாட்டில் அதிகம் விற்கும் தினசரிகள் தினகரன், தினத்தந்தி, அதிகப் மக்களை சென்றடையும் தனியார் தொலைக்காட்சி சன் குழும தொலைக்காட்சிகள். இவை யாரை ஆதரித்தன, ஆதரிக்கின்றன என்பது உலகறிந்த ஒன்று."/

"தமிழக ஊடகங்களின் வலுவான ஒரு பிரிவு" என்று எழுதியிருக்கிறேன். தினகரன், தினத்தந்தியைக் குறிப்பிட்ட நீங்கள் தினமலரைக் குறிப்பிடாததற்கு சிறப்புக் காரணம் ஏதும் உண்டா? தினகரன் அதிகம் விற்பதெல்லாம் மாறன் அதை வாங்கிய பிறகுதான். அதற்கு முன்னால் தினகரனின் விற்பனை எவ்வளவு மோசமாக இருந்தது என்பதைக் குறித்து தமிழ் சசி ஒரு விரிவானக் கட்டுரை எழுதியிருந்ததாக நினைவு. சன் தொலைக்காட்சிக்கு இன்றிருக்கும் வலு தொண்ணூறுகளின் நடுப்பகுதி வரை இருந்ததில்லை. கடந்த தேர்தலின் போது சரத்குமாரை திமுகவிலிருந்து பிரித்து அதிமுக பக்கம் போகவைத்ததாகப் பலராலும் சொல்லப்பட்ட சிவந்தி ஆதித்தனின் தினத்தந்தி யாரை ஆதரித்தது/ஆதரிக்கிறது அன்று நீங்கள் தான் சொல்ல வேண்டும்.

//"தமிழக மக்கள் எம்ஜிஆர் மலையாளி என்ற பிரச்சாரத்தினை தூக்கி எறிந்து எம்ஜிஆரை மூன்று முறை முதல்வராக, அதுவும் பெரும்பான்மை பலத்துடன் ஆக்கினார்கள்."//

எம்.ஜி.ஆரின் தாய்மொழி மலையாளம் என்பது ஒரு தகவல். அதை ஆமோதிக்கலாம் அல்லது மறுக்கலாம். மற்றபடி அவர் மூன்று முறை முதல்வரானால் என்ன, முப்பது முறை ஆனால் என்ன? மூன்று முறை முதல்வரானால் தாய்மொழி மாறிவிடுமா?

//"அதற்கு எந்த ஊடகம் காரணம்"//

ஊடகங்கள் மட்டும் தான் காரணம் என்று சொல்லும் அளவுக்கு நான் மூளையில்லாமல் இல்லை. ஆனால் ஊடகங்களுக்கு இதில் அறவே பங்கில்லை என்று நீங்கள் நம்பினால் எதுவும் சொல்வதற்கில்லை. Wake up and smell the filter coffee என்பதைத் தவிர.

Jagath!

Excellent analysis!

You have been very specific on the grounds on which you have anchored your POV on, but some 'intellectua-belles' have despearately tried to digress the main point that you have articulated so well.

That they have failed miserably is so obvious, that they had to resort to run spin-mills on Kalaignar's Mother tongue as Telugu! ;)))) - says so much abt these creatures!

There is a 'post-modernist' gentleman who always jumps up and gets cranky whenever a negative opinion is expressed about the non-tamil (as mother tongue) persons aspiring to rule Tamilnadu - and this gentleman has sprinted to Venkat's this particular post too!

I wish to show my middle-finger to this gentleman who's been pushing things too far in this regard!

It's time that we stood up to these self-indulgent post-moderninst bullies!

Without tamils there wouldn't be any talk of Social Justice in this country, and the other dravidian brothers should remember they are always indebted to us! :)

'தமிழனுடைய காரியத்தில் மற்றவன் தலையிடுவதை எப்படியாகிலும் தடுத்துவிட வேண்டும்; வேறு எதை தடுத்தாவது இதைச் செய்துவிட வேண்டும்'

- தந்தை பெரியார் ( aka தோழன் பெரியார்!) ;))

கடைசியாக ஒரு கேள்வி: Intellectual lilliputians-க்காக எழுதப்படும் recycled junk பதிவுக்கெல்லாம் ஏன் மாய்ந்து மாய்ந்து கருத்து எழுதுகிறீர்கள்?

லில்லிப்புட்டியன் என்றால் என்ன. இடுகையில் இந்த வார்த்தையே இல்லை புரியும்படி சண்டை
போடுங்கப்பா :)

வெங்கட்: உங்களுக்கானப் பதிலைத் தனிப் பதிவாக இட்டிருக்கிறேன்.

நியோ, நன்றி.

//லில்லிப்புட்டியன் என்றால் என்ன. //

பிடிக்காதவர்களை pygmy என்று சொன்னால் பொதுமாத்து கிடைக்குமோ என்ற லேசான பயத்தின் காரணமாகப் பயன்படுத்தப்படும் வார்த்தை. (இவனிடம் போய் கேட்டோமே என்று முணுமுணுக்கிறீர்களா?!)

//புரியும்படி சண்டை போடுங்கப்பா :) //

புரியவேண்டியவர்களுக்குக் கண்டிப்பாகப் புரிந்திருக்கும். மற்றவர்களுக்கு விளக்கம் இங்கே.

இதுவரை நான் படித்த உங்கள் பதிவுகளிலேயே இதுதான் மிகவும் தட்டையான பதிவு. இதற்கு நான் மதிக்கும் வேறு சிலரிடமிருந்தும் பாராட்டுக்கள் வந்து விழுந்திருப்பது வியப்பளிக்கிறது. இருமொழிகளை (தமிழ்,மலையாளம்)அறிந்துகொள்வதற்கு வாய்ப்பு கிடைத்த உங்களால் "மொழி போன்ற கலாச்சாரக்கூறுகளின் அடிப்படையிலான விசுவாசம்" என்பதன் உளவியலை விளங்கிக்கொள்ள இயலாதது வியப்பாக உள்ளது. வளரும் பருவத்தில் மனிதனைப் பக்குவப்படுத்துவதில் வீட்டு மொழியை விட வீதிமொழியின்(அதாவது புழங்கும் சமூகத்தின் மொழியின்)தாக்கமே அதிகம். நீங்கள் குறிப்பிட்டிருக்கும் பெயர்களிலேயே வளரும் பருவத்தைத் தமிழ்ச்சமூகச் சூழலில் கழிக்காத ரஜிகாந்த் தவிர தமிழை தாய்மொழியாகக் கொண்டிராத வேறு யாருக்கும் தமிழ்மொழி சார்ந்த கலாச்சாரத்தின் தாக்கத்தைவிட அவர்களின் வீட்டுமொழி சார்ந்த கலாச்சாரத்தின் தாக்கம் அதிகமாக இருக்க வாய்ப்பில்லை. வெவ்வேறு காலகட்டத்தில் வெவ்வேறு புது அரசியல்வாதிகளை ஊடகங்கள் (பிராமணர்களின் ஆதிக்கத்தில் உள்ள ஊடகத்தைக் குறிப்பிடுவதாக எடுத்துக்கொள்கிறேன்)ஆதரிப்பதற்கு அடிப்படைக் காரணம் திராவிட அரசியலுக்கு எதிராக நிறுத்த அப்போதைக்கு ஏதாவது வகையில் பிரபலமாக உள்ள ஒருவர் தேவைப்படுகிறார். அந்த பிரபலம் சில நேரம் சினிமா மூலமும் கிடைக்கிறது. ஆனால் அந்த நபரின் வீட்டுமொழி ஒரு காரணியாக இருக்க வாய்ப்பு மிகமிகக் குறைவு. எம்.ஜி.ஆர். மலையாளி, விஜயகாந்த்/வைகோ ஆகியோர் தெலுங்குக்காரர்கள், பெரியார்/சம்பத்/இளங்கோவன்/ஜெயலலிதா ஆகியோர் கன்னடத்துக்காரர்கள் என்ற ரீதியிலான விளக்கம் மிகமிக எளிமைப்படுத்தப்பட்ட, மொழிப்பற்று என்பது ரத்தத்தில் (அதாவது மரபணுவில்) ஊறிய, மாற்ற இயலாத குணம் என்பதான கருத்து பாமரத்தனமான அடிப்படைவாதம்.

சுந்தரமூர்த்தி,

உங்கள் கருத்துக்கு நன்றி. இது கண்டிப்பாக ஆழமானப் பதிவு அல்ல. இதைக்குறித்து ஆழமாக எழுதமுடியும் என்றாலும் அதற்கான நேரம் இருக்கவில்லை. தமிழ்தேசிய / சமூகநீதி / நாத்திக அரசியலுக்கு மாற்றாக ஊடகங்களால் கடந்த நாற்பதாண்டுகளாக முன்வைக்கப்பட்ட நடிகர்களின் பட்டியலைப் பார்த்தபோது அவர்களிடையே சில ஒற்றுமைகள் இருப்பது தெரிந்தது. அவற்றை பட்டியலிட்டேன். பொழுது போகாத நேரங்களில் இப்படிப்பட்ட pattern recognition வேலைகளை ஒரு விளையாட்டு போல செய்வதுண்டு. எடுத்துக்காட்டாக, கடந்த 46 ஆண்டுகளாக உலகக்கோப்பைக் காற்பந்து போட்டி வெற்றியாளர்களிடையே ஒரு ஒழுங்கு இருக்கிறது என்பதைக் கவனித்திருக்கிறீர்களா? ஒருமுறை ஐரோப்பிய அணி வென்றால் அடுத்தமுறை சொல்லிவைத்தது போல் தென்னமெரிக்க அணி வெல்லும். கடந்த பன்னிரண்டு போட்டிகளாக இதுதான் நடக்கிறது.

தமிழகத்தில் மொழிவழி சிறுபான்மையினருக்கு இருக்கும் ஒருவித பாதுகாப்பின்மை, தமிழ் தேசியவாதம் குறித்து அவர்களுக்கு இருக்கும் அச்சம் ஆகியவற்றையெல்லாம் நீங்கள் கணக்கில் எடுத்ததாகத் தெரியவில்லை. தமிழகத்தில் பிறந்து வளர்ந்த குஜராத்தி / மார்வாரி இளைஞனுக்கு நீங்கள் சொல்வதுபோல வீதிமொழியானத் தமிழ்மொழியின் தாக்கமே அதிகமாக இருக்கலாம். திலீப்குமாரைப் போல தமிழில் கதைகள் எழுதும் அளவுக்கு தமிழில் ஈடுபாடு இருக்கலாம். ஆனாலும் "தமிழகம்: வந்தேறிகளின் வேட்டைக்காடு" என்று புத்தகம் எழுதும் நெடுமாறனைக் குறித்து அவனுக்கு ஒரு அச்சம் இருக்கத்தான் செய்யும். மலையாளத் தாக்கம் அதிகமாக இருக்கும், தமிழகத்தில் எங்குப் போனாலும் மலையாளிகள் என்று முத்திரைக் குத்தப்படும், குமரிமாவட்டத்தின் மேற்கு பகுதியினர் காங்கிரஸ், கம்யூனிஸ்ட், ஜனதா தளம், பாஜக என்று "தேசிய கட்சிகளை" மட்டுமே தேர்ந்தெடுத்துக் கருணாநிதியை "நெல்லை எங்கள் எல்லை, குமரி எங்களுக்குத் தொல்லை" என்று சொல்லவைப்பது ஏன் என்று யோசித்திருக்கிறீர்களா? சௌராஸ்டிரர்கள் போன்ற சிறுபான்மை மொழியினர் பெரும்பாலும் தீவிர இந்திய தேசியவாதிகளாக இருப்பதைக் கவனித்திருக்கிறீர்களா? ஈழப் போராட்டத்தைத் தீவிரமாக ஆதரிக்கும் வைகோ (பால் தாக்கரே கூட தான் ஆதரிக்கிறார்), ராமதாசைப் போலவோ, திருமாவளவனைப் போலவோ, ஏன் கருணாநிதியைப் போலவோ தமிழ் மொழியை மையமாக வைத்து அரசியல் செய்வதில்லை என்பதையும் பார்த்திருக்கிறீர்கள் தானே? எல்லாமே தற்செயலானதா? இதற்கு அவர்களது தாய்மொழிப் பற்று அறவே காரணமில்லை. (மொழிப்பற்றை நான் ஒரு காரணமாக சொல்லாமலிருந்தும் ரத்தம், மரபணு என்றெல்லாம் எங்கேயோ போய்விட்டீர்கள்.) மாறாக அவர்களது பாதுகாப்பின்மையும், இன்று ஒரு சில இனங்களை மட்டுமே வந்தேறிகளாகச் சொல்லும் தமிழ் தேசியவாதம் வெற்றி பெற்றுவிட்டால் தங்களையும் வந்தேறி என்று சொல்லி எதிர்க்கும் என்ற அச்சமும் தான் முக்கிய காரணங்கள்.

கேரள எல்லையோரப் பகுதியில் பிறந்து வளர்ந்த எனக்கு கேரளத்தில் வேர்களும் உறவுகளும் உண்டு. புவியியல் அடிப்படையில் மட்டுமல்ல, கலாச்சார அடிப்படையிலும் எங்களுக்கு மதுரையை விட திருவனந்தபுரம் பக்கம். சுதந்திரத்துக்குப் பிறகு பல வருடங்கள் குமரி மாவட்டம் கேரளத்தின் ஒரு பகுதியாக இருந்தது. என் இந்த பின்னணி மற்றும் பேச்சுவழக்கு காரணமாக தமிழகத்தின் பிற பகுதிகளில் வாழ்ந்தபோது மலையாளி என்று தொடர்ந்து முத்திரைக் குத்தப்பட்டு வந்திருக்கிறேன். இப்படிப்பட்ட என்னைப்போய் தமிழ் மொழி அடிப்படைவாதியாக வேறு யாராவது சித்தரித்திருந்தால் நான் என்ன சொல்லியிருப்பேனோ அதை உங்கள் மேல் இருக்கும் மதிப்புக் காரணமாக என்னால் சொல்ல முடியவில்லை.

//இயலாதது வியப்பாக உள்ளது. வளரும் பருவத்தில் மனிதனைப் பக்குவப்படுத்துவதில் வீட்டு மொழியை விட வீதிமொழியின்(அதாவது புழங்கும் சமூகத்தின் மொழியின்)தாக்கமே அதிகம். நீங்கள் குறிப்பிட்டிருக்கும் பெயர்களிலேயே வளரும் பருவத்தைத் தமிழ்ச்சமூகச் சூழலில் கழிக்காத ரஜிகாந்த் தவிர தமிழை தாய்மொழியாகக் கொண்டிராத வேறு யாருக்கும் தமிழ்மொழி சார்ந்த கலாச்சாரத்தின் தாக்கத்தைவிட அவர்களின் வீட்டுமொழி சார்ந்த கலாச்சாரத்தின் தாக்கம் அதிகமாக இருக்க வாய்ப்பில்லை//

கை குடுங்க சுந்தரமூர்த்தி.. இதைத்தான் இந்தத் திரியிலே எழுத வேண்டும் என்று இரண்டு நாளாக முட்டிக் கொண்டிரூக்கிறேன்.. ஆனால் சரியாகச் சொல்ல வரவில்லை என்பதால் அமைதியாக இருந்தேன்.

சுந்தரமூர்த்தியார் தெரிவித்த கருத்து - மொழிவெறி - வெறும் பேசும் மொழியைப் பற்றிய வறட்டு வெறியாளர்களுக்கு மட்டுமே பொருந்தும்; அதையும் அவர் ஒரு விளக்கம் போலத்தான் வைத்திருக்கிறார் - அதற்கு நீங்கள் சரியான விளக்கம் தந்து விட்டீர்கள்.

சமஸ்கிருத சதுக்கப் பூதங்களை அண்டிப் பிழைக்கும் மானங்கெட்ட ஜென்மங்களுக்கு இந்த இடத்தில் ஒரு வெங்காய வேலையும் இல்லை.

திராவிட இனத்தின் நலனை போற்றிப் பாதுகாப்பதிலும், தமிழரல்லாதோர் வாழ்வுரிமையைப் பேஎணுவதிலும் - தமிழரின் பணி மகத்தானது. எவரும் குறை சொல்ல முடியாதது.

இங்கே விவாத மையப் பொருள் - தமிழக அரசு உரிமையில் தமிழர் அல்லாதவர் கைவைக்கும் போது - ஊடகங்கள் (அதாவது பார்ப்பனர்கள் மிகுதியாக ஆதிக்கம் செலுத்தி வந்த - இப்போதும் அவ்வாறே இருக்கின்ற தமிழக ஊடகங்கள்) - அவ்வாறு - தமிழ் இன அடையாளத்தை நசுக்கும், அழிக்கும், அல்லது சிறுமைப்படுத்தும் விதமாக அரசியல் செய்வோரை - அதிகமாக ஆதரித்தன - என்று நிறுவுவது ஆகும்.

இதில் 'இனத்தூய்மை' காக்கும் முனைப்பை விடவும் - தமிழர்களின் பார்ப்பனீய எதிர்ப்பை மழுங்கச் செய்ய - எப்படி தமிழர் அல்லாதோரை ஆட்சிக்கு வர வைப்பதன் மூலம் மழுங்கடிக்க 'பார்ப்பனீய' ஊடகங்கள் முற்பட்டன என்பதே அதிகம் வலியுறுட்த்தப்படுகிறது என்பதே எனது பார்வை.

இதில் ஜெகத் சரியாகவே எழுதியுள்ளார்.

இதில் யார் 'நாவிதப் பயல்' (என்று கேவலமாக பார்ப்பனீய பன்றிகளால் இழிவு செய்யப்பாடுகிற) கருணாநிதியை - தோற்கடிக்க சரியான ஆள் என்று Strategise செய்து அவரை ஆதரிக்கிறார்கள் பார்ப்பனீய ஊடகங்கள்.

இதுதான் பொதுவான நடப்பாக இருந்திருக்கிறது.

இது போர்க்களமே - இங்கே வந்து போஸ்ட் மாடர்னிசம் பேசுவது பொருத்தமற்றது.

தமிழன் அல்லாதாவனை அரசியல் அதிகாரக் கட்டிலில் ஏற்றுவது தமிழ்நாட்டினுடைய சமூக அரசியல் சூழலை அழிக்கும் செயலே - என்று தமிழர்கள் சொன்னால் - அதனால் போஸ்ட் மாட்டர்னிஸ்ட்டுகளுக்கு (நான் சுந்தரமூர்த்தியாரைச் சொல்லவில்லை வேறு சிலரைச் சொல்கிறேன்) எங்காவது வலிக்கும் என்றால் - அவர்களுக்கு அந்த வலியை அடிக்கடி கொடுக்க தமிழர்கள் தயங்கப் போவதில்லை.

திராவிடம் என்று உயிரை விட்டுத் தூக்கிப் படிக்கும் தமிழனுக்கு - அதைச் சொல்லியே ஆட்சியதிகார மறுப்பை நியாயப் படுத்துவார்களென்றால் - தமிழன் இனியும் ஏமாளி அல்லன் என்று நினைவு செய்ய விரும்புகிறோம்.

Sundra Moorthy ayya,

It's not always correct to tell the person born & brought in tamil nadu is more attach with tamil than his mother tongue since he is non tamil.

I have seen many persons such people (born and brought in tamilnadu with other mother tongue)in outside tamil nadu. they are normally attached with their race. some people even hate us too. (this is true. i have plenty of examples too)

So, don't think like rajni says 'tamil naatill irukkum ellorum tamilar than' (those who residing tamil nadu are tamilians).

More over me too a nanjil (KK) man.

ஜெகத்,
//தமிழகத்தில் மொழிவழி சிறுபான்மையினருக்கு இருக்கும் ஒருவித பாதுகாப்பின்மை, தமிழ் தேசியவாதம் குறித்து அவர்களுக்கு இருக்கும் அச்சம் ஆகியவற்றையெல்லாம் நீங்கள் கணக்கில் எடுத்ததாகத் தெரியவில்லை. தமிழகத்தில் பிறந்து வளர்ந்த குஜராத்தி / மார்வாரி இளைஞனுக்கு நீங்கள் சொல்வதுபோல வீதிமொழியானத் தமிழ்மொழியின் தாக்கமே அதிகமாக இருக்கலாம். திலீப்குமாரைப் போல தமிழில் கதைகள் எழுதும் அளவுக்கு தமிழில் ஈடுபாடு இருக்கலாம். ஆனாலும் "தமிழகம்: வந்தேறிகளின் வேட்டைக்காடு" என்று புத்தகம் எழுதும் நெடுமாறனைக் குறித்து அவனுக்கு ஒரு அச்சம் இருக்கத்தான் செய்யும்.//

நான் இந்த புத்தகத்தை வாசிக்கவில்லை. பெங்களூர் குணாவின் "திராவிடத்தால் வீழ்ந்தோம்" மற்றும் "நவ தமிழ் தேசியவாதி" ராஜேந்திர சோழனின் "தமிழ் தேசியம்" இரண்டையும் வாசித்திருக்கிறேன். பெங்களூரையும், மும்பையையும் விட சென்னையில் இருக்கக்கூடிய மொழிச் சிறுபான்மையினருக்கு இருக்கக்கூடிய அச்சம் மிகமிகக் குறைவாகவே இருக்கும் என்பது என் கணிப்பு. இந்த நூல்கள் சராசரித் தமிழர்களை மொழிசிறுபான்மையினருக்கு எதிராக எந்த அளவுக்கு உசுப்பிவிடும் என்பது சந்தேகத்துக்குரியது.

//மலையாளத் தாக்கம் அதிகமாக இருக்கும், தமிழகத்தில் எங்குப் போனாலும் மலையாளிகள் என்று முத்திரைக் குத்தப்படும், குமரிமாவட்டத்தின் மேற்கு பகுதியினர் காங்கிரஸ், கம்யூனிஸ்ட், ஜனதா தளம், பாஜக என்று "தேசிய கட்சிகளை" மட்டுமே தேர்ந்தெடுத்துக் கருணாநிதியை "நெல்லை எங்கள் எல்லை, குமரி எங்களுக்குத் தொல்லை" என்று சொல்லவைப்பது ஏன் என்று யோசித்திருக்கிறீர்களா? சௌராஸ்டிரர்கள் போன்ற சிறுபான்மை மொழியினர் பெரும்பாலும் தீவிர இந்திய தேசியவாதிகளாக இருப்பதைக் கவனித்திருக்கிறீர்களா?//

மாறாக, வட தமிழ்நாட்டில், தெலுங்கர்கள் அதிகமாக வசிக்கும் ஆந்திர எல்லைப்பகுதிகளில் மாநிலக்கட்சிகள், குறிப்பாக திமுக, வலுவாக இருப்பதை எப்படி எடுத்துக்கொள்வது? இது மொழிவாரி மாநிலங்கள் அமைவதற்கு முன்பிருந்த மாகாணங்களின் அரசியலின் ஒரு தொடர்ச்சியாகத் தான் தெரிகிறது. ஒருங்கிணைந்த சென்னை மாகாணத்தில் இருந்த நீதிக்கட்சி அரசியலின் தொடர்ச்சியாகவே திராவிட அரசியலும் பார்க்கப்படுவதால் மொழிவாரி மாநிலங்கள் அமைந்த பிறகு கூட தேசிய அரசியல் கட்சிகளைக் காட்டிலும் திராவிடக் கட்சிகளின் ஆதிக்கமே தொடர்ந்து நிலவுகிறது. தெலுங்கர்கள் அதிகமாக வசிக்கும் திருத்தணிகையை தமிழகத்துடன் சேர்க்கப் போராடிய ம.பொ.சி. என்ற தேசியவாதி திராவிட அரசியலின் தீவிர எதிர்ப்பாளர் என்பதையும் கவனிக்க வேண்டும். சி.பி. சிற்றரசு தவிர குறிப்பிட்டு சொல்லும்படி தெலுங்கு பேசும் தலைவர்கள் யாரும் இப்பகுதிகளிலிருந்து உருவாகவுமில்லை. இப்பகுதிகளில் தெலுங்கு பேசுபவர்களில் கணிசமானோர் வைகோ, விஜயகாந்த் ஆதரவாளர்களாகவும் இருப்பதாகத் தெரியவில்லை. என்.டி.ஆர். கட்சி ஆரம்பித்த பிறகு "மதறாஸ் மனதே" என்று முழங்கியபோது வடசென்னை தெலுங்கர்களிடமும், பிற எல்லையோர மாவட்டத் தெலுங்கர்களிடமும் சிறு சலசலப்பு கூடத் தோன்றவில்லை. தெற்கில் குடியமர்ந்த தெலுங்கர்களைப் பற்றி கி.ராஜநாராயணன் கதைகளில் படித்ததைத் தாண்டி எனக்கு ஒன்றும் தெரியாது. ஆனால் வடக்கில் உள்ள தெலுங்கர்களுக்கு "தமிழ் தேசியம்" குறித்து எந்தவித அச்சமும் இருந்து நான் கண்டதில்லை.

ஆனால் நாஞ்சில் நாட்டின் அரசியல் வரலாறு இதிலிருந்து வேறுபட்டது. நீங்கள் குறிப்பிட்டபடி //சுதந்திரத்துக்குப் பிறகு பல வருடங்கள் குமரி மாவட்டம் கேரளத்தின் ஒரு பகுதியாக இருந்தது.// அதற்கு முன் திருவிதாங்கூர் சமஸ்தானமாக இருந்திருக்கிறது. ஆகவே அங்கு நீதிக்கட்சி/திராவிட அரசியலின் தாக்கம் குறைந்தும், தேசியக்கட்சிகளின் தாக்கம் அதிகமாகவும் இருக்கலாம். இதற்கு தமிழ் தேசியத்தின் மீது மலையாளிகளின் அச்சம் தான் இதற்குக் காரணம் என்பதை ஏற்றுக்கொள்ள இயலவில்லை. இப்பகுதிகளில் செல்வாக்கு பெற்ற தலைவர்கள் பெரும்பாலும் நாடார், பரதவர், வேளாளர் (பின்னிரண்டும் சரியா என்பதை நீங்கள் தான் உறுதிப்படுத்த முடியும்) சமூகங்களைச் சேர்ந்த தமிழர்களாக இருப்பதையும், அவர்கள் தேசியக் கட்சிகளைச் சேர்ந்தவர்களாகவும் இருப்பதையும் கவனிக்கவேண்டும். இங்கு மொழியைவிட வட்டார அரசியல், ஆரம்பகாலத் தலைவர்களின் சாதி மற்றும் அவர்களின் அரசியல் சார்புகள் போன்றவற்றின் தாக்கம் கணிசமாக இருக்க வேண்டும். எம்.ஜி.ஆர். இன் மலையாளப் பின்னணி கூட இதை மாற்றியதாகத் தெரியவில்லை.

// ஈழப் போராட்டத்தைத் தீவிரமாக ஆதரிக்கும் வைகோ (பால் தாக்கரே கூட தான் ஆதரிக்கிறார்), ராமதாசைப் போலவோ, திருமாவளவனைப் போலவோ, ஏன் கருணாநிதியைப் போலவோ தமிழ் மொழியை மையமாக வைத்து அரசியல் செய்வதில்லை என்பதையும் பார்த்திருக்கிறீர்கள் தானே? எல்லாமே தற்செயலானதா? இதற்கு அவர்களது தாய்மொழிப் பற்று அறவே காரணமில்லை.//

ராமதாஸ், திருமா, கருணாநிதி ஆகியோரைப் போல வைகோ தமிழ் மொழியை மையமாக வைத்து அரசியல் செய்வதில்லை என்கிற உங்கள் முடிவுக்கு அடிப்படை என்ன என்பது எனக்கு சுத்தமாக விளங்கவில்லை. அதே போல பதிவில் திமுகவிலிருந்து பிரிந்து புதுக்கட்சி ஆரம்பித்த ஈ.வி.கே. சம்பத், எம்.ஜி.ஆர்., வைகோ மூவரும் தமிழரல்லாதவர்களாக இருப்பது எதேச்சையானதல்ல என்றும் குறிப்பிட்டிருக்கிறீர்கள். வைகோவுக்கு முன்பே ம.தி.மு.க (மக்கள் திமுக) என்ற தனிக் கட்சியை ஆரம்பித்த நெடுஞ்செழியனை வசதியாக மறந்துவிட்டீர்கள். வைகோவின் தெலுங்குப் பின்னணி அவர் திமுக விலிருந்து விலகிய/விலக்கப்பட்டதற்கு பின் தான் முன்னிலைப்படுத்தப்படுகிறது. அவருடைய ஈழ ஆதரவு பால் தாக்கரேவின் ஆதரவுக்கு இணையாக வைக்கப்படுவதைக் குறித்து ஈழத்து நண்பர்கள் தான் கருத்து சொல்ல வேண்டும். அதேபோல கருணாநிதி-வைகோ அரசியலில் கருணாநிதி ஆதரவு நிலைப்பாடு எடுக்கும் என்னை விட வைகோ ஆதரவு நிலைப்பாடு எடுக்கும் சங்கரபாண்டி "வைகோ தமிழ் மொழியை வைத்து அரசியல் செய்கிறாரா இல்லையா" என்று கருத்து சொன்னால் சரியாக இருக்கும் :-)

//என் இந்த பின்னணி மற்றும் பேச்சுவழக்கு காரணமாக தமிழகத்தின் பிற பகுதிகளில் வாழ்ந்தபோது மலையாளி என்று தொடர்ந்து முத்திரைக் குத்தப்பட்டு வந்திருக்கிறேன்.//

என் நிலைமை நேர்மாறானது. வீட்டுமொழி வேறாக இருந்தாலும் கல்லூரி நாட்களிலிருந்தே எனக்கு தமிழ்வெறியன், தமிழ் தேசியவாதி முத்திரை குத்தப்பட்டு வந்திருக்கிறது.

//இப்படிப்பட்ட என்னைப்போய் தமிழ் மொழி அடிப்படைவாதியாக வேறு யாராவது சித்தரித்திருந்தால் நான் என்ன சொல்லியிருப்பேனோ அதை உங்கள் மேல் இருக்கும் மதிப்புக் காரணமாக என்னால் சொல்ல முடியவில்லை.//

உங்களை அப்படிக் குறிப்பிடுவதான தொனி இருந்தால் மன்னிக்கவும். அது பொதுவான குறிப்பு (நீங்கள் குறிப்பிடாத பெரியார், இளங்கோவன் பெயர்களை நான் சேர்த்திருப்பதை நீங்கள் கவனிக்கவில்லை போலுள்ளது). பெரியாரை கன்னடியராகவும், பணக்கார மார்வாடிகளிலிருந்து துப்புரவு தொழில் செய்யும் தெலுங்கு பேசும் அருந்ததியர்கள் வரை அனைவரையும் வந்தேறிகளாகப் பார்க்கும் பெங்களூர் குணா போன்ற தீவிர "தமிழ் தேசியம்" பேசுபவர்களைப் பற்றிய பொதுவான மதிப்பீடு.

சுந்தரமூர்த்தி,

எனக்கு இது குறித்து மிக விரிவாக எழுத விருப்பம். ஆனால் இந்த நட்சத்திர வாரத்தில் நிறைய எழுதவேண்டி இருப்பதால் அதற்கான நேரம் இல்லை. அதனால் கூடியமட்டும் விரிவாக சிலவற்றை சொல்லிவிடுகிறேன்.

//பெங்களூரையும், மும்பையையும் விட சென்னையில் இருக்கக்கூடிய மொழிச் சிறுபான்மையினருக்கு இருக்கக்கூடிய அச்சம் மிகமிகக் குறைவாகவே இருக்கும் என்பது என் கணிப்பு.//

ஒரு மாநிலத்தில் வாழும் மொழி சிறுபான்மையினருக்கு அங்குள்ள பெரும்பான்மை மொழியை அடிப்படையாகக் கொண்ட தேசியவாதத்தின் மீது இருக்கும் அச்சத்தை பெங்களூர், மும்பை விஷயத்தில் ஏற்றுக்கொள்கிறீர்கள் என்று நினைக்கிறேன். பெங்களூரில் மூன்று, நான்கு தலைமுறையாக வாழும் ஏராளமான தமிழ் குடும்பங்கள் வீட்டில் பேசும் ஒருவித அரைகுறைத் தமிழைத் தவிர மற்ற அனைத்து வகையிலும் வீதிமொழியான கன்னடத்தையும், உள்ளூர் கலாச்சாரத்தையும் ஏற்றுக்கொண்டவர்கள். இளையத் தலைமுறையினர் (சிலரை தனிப்பட்ட முறையில் அறிவேன் ) தங்களை கன்னடராகவே அடையாளப்படுத்திக் கொள்கிறார்கள். ஆனாலும் இவர்களுக்கு வட்டாள் நாகராஜ் போன்ற ஆட்களின் மீதும் கன்னட தேசியவாதத்தின் மீதும் மிகுந்த அச்சம் இருக்கிறது. இவர்கள் எந்த சூழ்நிலையிலும் அப்படிப்பட்ட ஒரு அரசியலை வளர்த்துவிட மாட்டார்கள் என்று உறுதியாகச் சொல்வேன். சென்னையில் இருக்கும் மொழி சிறுபான்மையினருக்கு இப்போது அத்தகைய அச்சம் இல்லாமல் இருக்கலாம். அதற்காக நீங்கள் குறிப்பிட்டது போல பெரியாரை கன்னடியராகவும், பணக்கார மார்வாடிகளிலிருந்து துப்புரவு தொழில் செய்யும் தெலுங்கு பேசும் அருந்ததியர்கள் வரை அனைவரையும் வந்தேறிகளாகப் பார்க்கும் பெங்களூர் குணா போன்றவர்களின் தீவிரத் தமிழ் தேசியம் வெற்றிப் பெறுவதைக் குறித்த அச்சம் இருக்காதா?

இவர்களால் சராசரித் தமிழர்களை மொழி சிறுபான்மையினருக்கு எதிராக உசுப்பிவிட முடியுமா என்பது சந்தேகம் என்கிறீர்கள். இன்றைக்கு இவர்கள் ஹிந்து தலையங்கங்கள் குறிப்பிடுவது போல fringe elements தான். ஆனால் நிலைமை மாறலாம். பொதுவாக மாற்றுமொழியினரை கிண்டல், கேலி என்ற பெயரில் இகழும் குணம் பெரும்பாலானவர்களுக்கு இயல்பாகவே இருக்கிறது. தமிழ்நாட்டில் 'கொல்டி'யும் ஆந்திராவில் 'அரவாடு'ம் மரியாதையானச் சொற்கள் அல்ல. ஒரு சத்யராஜ் படத்தில் கவுண்டமணி ஒரு மார்வாரிப் பாத்திரத்தை நோக்கி சொல்வார்: "நீ எங்க ஊருக்கு வந்து எத்தன வருசம்டா ஆகுது? இன்னும் நம்பள் நிம்பள்னு சொல்லிக்கிட்டிருக்க?" திரையரங்கே அதை ஆமோதித்து சிரித்தது. நாளைக்கு இதே நையாண்டி பலநூறு வருடங்கள் ஆனபின்னும் தங்கள் அடையாளத்தைத் தொலைத்து மொத்தமாக assimilate ஆகாத மற்ற மக்கள் மீதும் வைக்கப்படுவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. எனவே மொழி சிறுபான்மையினருக்கு தீவிர தமிழ் தேசியம் மீது இருக்கும் அச்சம் கற்பனையானதல்ல.

இந்தியாவில் மத சிறுபான்மையினருக்கு பெரும்பான்மை மதத்தினரின் இந்து கலாச்சார தேசியத்தின் மீது அச்சம் இருப்பதையும், சிறுபான்மை மதத்தைச் சேர்ந்த ஒரு அரசியல்வாதி அதிகாரத்தைப் பிடித்தால் ஒருபோதும் இந்துத்துவ அரசியலை மேற்கொள்ளமாட்டார் என்பதையும் ஏற்றுக்கொள்வீர்கள் என்று நினைக்கிறேன். அப்படியானால் மொழி சிறுபான்மையினர் தமிழ் தேசியவாத அரசியலை முன்னெடுக்க முடியாது என்று நான் எழுதியதை ஏன் ஏற்றுக்கொள்ளமுடியாது?

மொழி அடிப்படையிலான தேசியவாத அரசியல் செய்யும் ஒருவர் வேறொரு மொழியைத் தாய்மொழியாகக் கொண்டவர் என்பது தெரியவந்தால் அவர் தனக்கிருக்கும் ஆதரவை இழக்க நேரிடும். கன்னட தேசியவாதிகளின் ஆதர்ச நாயகனான ராஜ்குமார் தனது தமிழ் வேர்களை மிகக் கவனமாக மறைத்துவந்தது கவனிக்கத்தக்கது. அவர் கடத்தப்பட்டபோது அவரது மனைவி சரளமான தமிழில் வானொலியில் வீரப்பனுக்கு வேண்டுகோள் விடுத்தது கன்னட தேசியவாதிகளிடையே சலசலப்பை ஏற்படுத்தியது நினைவிருக்கிறது.

//அவருடைய ஈழ ஆதரவு பால் தாக்கரேவின் ஆதரவுக்கு இணையாக வைக்கப்படுவதைக் குறித்து ஈழத்து நண்பர்கள் தான் கருத்து சொல்ல வேண்டும்.//

வைகோ, தாக்கரே ஆகியோரது ஈழ ஆதரவை ஒரே தட்டில் வைத்துவிட்டது போன்றத் தோற்றத்தை ஏற்படுத்தும் வகையில் எழுதிவிட்டது என் தவறுதான். வைகோ தமிழ் தேசியவாத அரசியல் செய்பவர் என்பதற்கு ஆதாரமாக அவரது ஈழ ஆதரவை சுட்டி வரப்போகும் பின்னூட்டங்களை preempt செய்வதற்காகத் தான் தாக்கரேயைக் குறிப்பிட்டேன். ஈழ ஆதரவாளர்கள் அனைவரும் தமிழ் தேசியவாதிகள் அல்ல என்ற பொருளில். பால் தாக்கரே என்று எழுதியதைத் திரும்பப் பெற்றுக் கொள்கிறேன். அதற்கு பதில் இந்திரா காந்தி என்று வாசிக்கவும் ;-)

//ராமதாஸ், திருமா, கருணாநிதி ஆகியோரைப் போல வைகோ தமிழ் மொழியை மையமாக வைத்து அரசியல் செய்வதில்லை என்கிற உங்கள் முடிவுக்கு அடிப்படை என்ன என்பது எனக்கு சுத்தமாக விளங்கவில்லை. //

தமிழை செம்மொழி ஆக்குவது போன்ற கோரிக்கைகளை தமிழகத்தின் மற்றக் கட்சித் தலைவர்களைப் போல வைகோவும் வலியுறுத்தினார் என்பது எனக்கு தெரியும். ஆனால் நான் சொல்வது ஹிந்து போன்ற ஊடகங்களால் மொழிவெறி என்றும் தமிழ்தேசியவாதம் என்றும் முத்திரைக் குத்தப்படும் பிரச்சனைகளில் ராமதாஸ், திருமாவளவன், கருணாநிதி போன்றோர் எடுக்கும் நிலைபாடுகளிலிருந்து வைகோ வேறுபடுகிறார் என்பதே. ஈழ ஆதரவு, விவசாயிகள் பிரச்சனைகள் என்று பலவற்றுக்காகவும் ராமதாஸ், திருமாவளவன், நெடுமாறன் ஆகியோருடன் மேடையைப் பகிர்ந்துக்கொள்ளும் வைகோ இந்த மூவரும் இணைந்து நடத்தும் தமிழ் பாதுகாப்பு இயக்கத்தில் இணையவில்லை என்பதைச் சொல்லலாம். (தயவுசெய்து கவனிக்க: பங்கெடுக்கவேண்டும் என்று நான் சொல்லவில்லை). ஆங்கில படத்தலைப்புகளுக்கு எதிர்ப்பு, கடைகளில் தமிழ் பெயர்பலகைகள் வைக்கக்கோரும் போராட்டம், நீதிமன்றத்தில் தமிழ் போன்ற தமிழ் பாதுகாப்பு இயக்கத்தின் கொள்கைகளுக்கு ஓரளவு ஆதரவான நிலையையே கருணாநிதி எடுத்துவருகிறார். ஆனால் நான் அறிந்தவரை இவற்றில் வைகோ தீவிரம் காட்டவில்லை என்பதையே சொல்லியிருந்தேன்.

//தனிக் கட்சியை ஆரம்பித்த நெடுஞ்செழியனை வசதியாக மறந்துவிட்டீர்கள். //

வைகோவின் கட்சி பன்னிரண்டு ஆண்டுகளாகத் தாக்குப்பிடிக்கிறது. சம்பத்தைப் பற்றி நாம் இன்றுவரை பேசுகிறோம். திராவிட நாடு கோரிக்கையை நிராகரித்து அவர் வெளியேறியது தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு முக்கிய மைல்கல்லாகவே பார்க்கப்படுகிறது. ஆனால் நெடுஞ்செழியனின் தனிக்கட்சிக்கு எந்த அளவு ஆதரவு இருந்தது? (நான் முக்கியமாக ஊடக ஆதரவைக் குறித்து தான் இப்பதிவில் பேசியிருந்தேன்.) சுயேட்சையாக நின்ற எஸ்.வி.சேகரை விட குறைவான வாக்குகள் பெற்றுத் தோற்றவர் அவர். அவரை சம்பத், எம்ஜிஆர், வைகோ என்ற வரிசையில் சேர்ப்பது எனக்கு பொருத்தமானதாக தெரியவில்லை.

தமிழ் உணர்வு, திராவிட சிந்தாந்தந்தின் மீதான அனுதாபம் கொண்ட மிகச்சில பதிவர்கள் வரிசையில் வந்துள்ளீர்கள்.

நாகரீகமாக சாதியம் பேசும்,தம்மை தக்க வைக்க எந்த எல்லைக்கும் செல்ல தயங்காத ஆட்களும் இங்கே இருக்கிறார்கள்.அவர்கள் நடுநிலைமை என்ற ஆபாச வார்த்தையை உபயோகித்து உங்கள் கருத்துக்களை மொண்ணைப்படுத்துவார்கள்.சமாளியுங்கள்.ஆல் தி பெஸ்ட்.

//ஆனால் நாஞ்சில் நாட்டின் அரசியல் வரலாறு இதிலிருந்து வேறுபட்டது. நீங்கள் குறிப்பிட்டபடி //சுதந்திரத்துக்குப் பிறகு பல வருடங்கள் குமரி மாவட்டம் கேரளத்தின் ஒரு பகுதியாக இருந்தது.// அதற்கு முன் திருவிதாங்கூர் சமஸ்தானமாக இருந்திருக்கிறது. ஆகவே அங்கு நீதிக்கட்சி/திராவிட அரசியலின் தாக்கம் குறைந்தும், தேசியக்கட்சிகளின் தாக்கம் அதிகமாகவும் இருக்கலாம். இதற்கு தமிழ் தேசியத்தின் மீது மலையாளிகளின் அச்சம் தான் இதற்குக் காரணம் என்பதை ஏற்றுக்கொள்ள இயலவில்லை. இப்பகுதிகளில் செல்வாக்கு பெற்ற தலைவர்கள் பெரும்பாலும் நாடார், பரதவர், வேளாளர் (பின்னிரண்டும் சரியா என்பதை நீங்கள் தான் உறுதிப்படுத்த முடியும்) சமூகங்களைச் சேர்ந்த தமிழர்களாக இருப்பதையும், அவர்கள் தேசியக் கட்சிகளைச் சேர்ந்தவர்களாகவும் இருப்பதையும் கவனிக்கவேண்டும். இங்கு மொழியைவிட வட்டார அரசியல், ஆரம்பகாலத் தலைவர்களின் சாதி மற்றும் அவர்களின் அரசியல் சார்புகள் போன்றவற்றின் தாக்கம் கணிசமாக இருக்க வேண்டும். எம்.ஜி.ஆர். இன் மலையாளப் பின்னணி கூட இதை மாற்றியதாகத் தெரியவில்லை.//

Dear Ayya,

Nanjil people never like to have shown themselves as malayalies. Because they have been suppressed by the so called Malayalam speaking people in Thiruvidangoor king period. They didn't forget those scars. They are very much Tamils.

So, no question // even MGR can't change//.

As my observation the people fought for KK to tamilnadu are belonging to congress party, and that was continued until early 90's. and most of western part people like Kamaraj very much (might be he belongs to Nadar community) so less towards Dravidian parties (the famous nagercoil by election DMK couldn't succeed to defeat kamarajar and their enormous effort made negative impact towards DMK).

until late 80's janatha party was very popular. because people seen that is kamarajar's party.

early 80's Hindu munnani was formed, that too formed by Thanulinga nadar. he is a former congress man, Ex. MP. so, towards BJP.

FYI - in KK dist all non Tamils are strong supporters of BJP.

last 10, 20 years CPM did lot of ground work to secure Christian votes (after '82 riots). and made them to their strong vote bank.

but now days all parties having vote bank and leaders in western KK dist.

Like Mono thanga raj, Aasai thampi in DMK. Kumradhas, Thilak kumar in ADMK, Jayaraj in MDMK, jeganathan in DMDK.

Kulithurai and Padmanabapuram municipals chairman are DMK (both are in western part).

So, now the trend is changing, DMK Suresh rajan is a strong man in western parts too.

So, equal moving towards to all parties.

one more thing now days no policy based. 100% oppertunitisom.

தமிழை தாய்மொழியாகக் கொள்ளாதவர்கள் தமிழ் தேசியவாத அரசியலை மேற்கொள்ள முடியாது என்று எழுதிவிட்டு, ஏன் முடியாது என்பதற்கானக் காரணத்தை விளக்காமல் விட்டது என் தவறாக இருக்கலாம். நான் காரணத்தைச் சொல்லாத நிலையில், அவர்களுக்கு தமிழைவிட தங்கள் தாய்மொழி / வீட்டுமொழியின் மீது பற்று இருக்கும் என்ற எண்ணத்தில் நான் எழுதியதாக சுந்தரமூர்த்தி கருதியிருக்க வாய்ப்பிருக்கிறது. உண்மையில் அப்படி ஒரு காரணத்தை மனதில் வைத்துக்கொண்டு நான் எழுதவில்லை. தமிழகத்தில் பல தலைமுறைகளாக வாழும் மொழி சிறுபான்மையினருக்குத் தங்கள் தாய்மொழியை விட தமிழ் மீது பற்று அதிகமாக இருக்கும் என்றே நானும் நம்புகிறேன்.

இதற்கு நன்கு அறியப்பட்ட ஒருவரை உதாரணமாகச் சொல்வதென்றால், எங்கள் கிராமத்தைச் சேர்ந்தவரான ஜெயமோகனைச் சொல்லலாம். அவரது வீட்டுமொழி மலையாளம். வீதிமொழி தமிழ். அவரிடம் தன் தாய்மொழியின் தாக்கத்தைவிட தமிழின் தாக்கம் அதிகமாக இருப்பதாக அவரே பல இடங்களில் சொல்லியிருக்கிறார். படித்ததெல்லாம் தமிழில் தான். தமிழில் மிகுந்த பற்றும் ஈடுபாடும் உடையவர் என்பது அவரை வாசித்தவர்களுக்குத் தெரியும். அண்மையில் அவரது கொற்றவை நாவலின் சில பகுதிகளை வாசித்தேன். கிட்டத்தட்ட முற்றிலுமாக தூயத் தமிழ்ச்சொற்களைப் பயன்படுத்தி தனித்தமிழில் இப்படி ஒரு நெடிய நாவலை எழுதுவது தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட பெரும்பாலான எழுத்தாளர்களால் முடியாத ஒன்று.

ஆனால் ஜெயமோகனின் அரசியல் எப்படிப்பட்டது? மாநில / மொழி அடையாளங்களை முற்றாக மறுத்து தீவிர இந்திய தேசியத்தை வலியுறுத்தும் ஆர்.எஸ்.எஸ் பின்புலம் கொண்ட அவரைப் போல திராவிட இயக்கத்தையும், தமிழ் தேசியவாதிகளையும் கடுமையாக தாக்கியவர்கள் வெகு சிலரே இருக்கமுடியும். அதற்கு அவர் கொள்கை அடிப்படையிலானக் காரணங்களை முன்வைத்தாலும் தமிழ்நாட்டில் தன் மீது மலையாளி என்ற முத்திரை தொடர்ந்துக் குத்தப்படுவதைப் பற்றிய கோபம் அவருக்கு இருக்கத்தான் செய்கிறது. தன்னை வெளியாளாகக் காட்டக்கூடிய தமிழ் தேசியத்தை தீவிரமாக எதிர்த்து, இந்திய தேசியத்தை வலியுறுத்துவதன் மூலமே அவர் தான் பிறப்பின் அடிப்படையில் தாக்கப்படுவதை எதிர்கொள்ளமுடியும். தமிழ்நாட்டில் பெரும்பாலான பார்ப்பனர்கள் - தமிழ் மீது மிகுந்த ஈடுபாடும் பற்றும் கொண்டவர்கள் கூட - தமிழ் தேசியவாதத்தை தீவிரமாக எதிர்ப்பவர்களாகவும், தீவிர இந்திய தேசியவாதிகளாகவும் இருப்பதற்கும் இப்படி பிறப்பின் அடிப்படையில் குத்தப்படும் 'வெளியாள்' முத்திரையே முக்கிய காரணம் என்று நினைக்கிறேன். இந்த உளவியலின் அடிப்படையில் தான் திமுகவுக்கு மாற்றாக முன்வைக்கப்படும் எம்ஜிஆரும், ரஜினியும், விஜயகாந்த்தும் இந்திய தேசியத்தை வலியுறுத்தவேண்டிய கட்டாயத்துக்கு ஆளாவார்கள் என்று எழுதியிருந்தேன். என் பார்வையில் தமிழ் மொழி மற்றும் கலாச்சாரத்தின் மீது பற்று கொள்வதும், தமிழ் தேசியவாதத்தை ஆதரிப்பதும் வெவ்வேறானவை.

கைவசமுள்ள "தமிழ் தேசியம்" தொடர்பான நூல்களைத் துழாவிப் பார்த்தேன். நான் முந்தைய பின்னூட்டத்தில் குறிப்பிட்டது போல இராசேந்திர சோழனின் நூல் தலைப்பு "தமிழ் தேசியம்" அல்ல. "தீண்டாமை ஒழிப்பும் தமிழர் ஒற்றுமையும்". அதில் தமிழ் தேசியம் குறித்தும் பேசப்படுகிறது. தவறான தகவலுக்கு வருந்துகிறேன். தவிர கோவை ஞானி, கோ. கேசவன், தமிழ் தேசியம் குறித்து விரிவாக எழுதியுள்ள நூல்கள் சிலவும், தலித்துக்களின் தமிழ் அடையாளம் குறித்த ராஜ்கௌதமனின் நூல்களும் உள்ளன. இவர்கள் அனைவருமே மார்க்சிய அறிஞர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 90களில் தமிழ்நாட்டு, இந்திய, உலக அரசியலில் நிகழ்ந்த மாற்றங்கள் பல மார்க்சியர்களை திராவிட, தமிழ்தேசிய, தலித் கருத்தியல் பக்கம் செலுத்தியது. எனக்கும் இவற்றில் வைத்துள்ள கருத்தாக்கங்களை முன்வைத்து விவாதிக்க ஆர்வமிருந்தாலும் தற்போது அவகாசமில்லை.

குணா போன்றோர் முன்வைக்கும் உலகத்தில் உள்ள அனைத்துத் தமிழருக்கும் பொதுவான "தமிழ் தேசியம்" என்பது ஒன்று இல்லை. இந்தியச் சூழலில் தமிழ் தேசியம் குறித்த கருத்தாக்கம் தோன்றியதற்கும், ஈழத் தமிழ் தேசிய உருவாக்கத்திற்குமே பெரிய வரலாற்று, அரசியல் வேறுபாடுகள் உண்டு. ஈழத்தமிழ் தேசியம் கூர்மைடைந்ததற்குக் காரணமான பெரும்பான்மை மொழியினத்தின் ஒடுக்குமுறை இந்தியச் சூழலில் இல்லாத நிலையில் தமிழ்நாட்டில் "தமிழ் தேசியம்"த்திற்கான ஆதரவு--மொழிசிறுபான்மையினரை விடுங்கள்--தமிழர்களிடையே கூட செல்லுபடியாகும் என்று தோன்றவில்லை. வட இந்தியத் அரசியல் கட்சிகள் உருவாக்க முனைந்த (அதாவது "தேசிய"க் கட்சிகள்) "இந்தி தேசியம்" கடந்த 10-15 ஆண்டுகளாக சிதறுண்டு வருகையில் அதற்கு எதிராக வைக்கப்பட்ட தமிழ் தேசியம், இன்று அண்டை மாநில மொழியினருக்கு எதிராக திரும்பியிருக்கிறது. அதற்கும் நீர் பங்கீடு என்ற ஒற்றைக் காரணத்தைத் தவிர வேறெந்த கலாச்சார, பொருளாதார, அரசிய ஒடுக்குமுறைகள் காரணங்களாக இல்லை. இந்நிலையில் தமிழ் தேசியம் குறித்து இந்த அறிவுஜீவிகள் மூளையைக் குடைந்துக்கொண்டிருப்பதில் என்ன பயன் ஏற்படப்போகிறதென்று புரியவில்லை.

கல்வியில் சாதி அடிப்படையிலான இடஒதுக்கீட்டை மாற்றி பொருளாதார அடிப்படையில் அமல்படுத்த எம்ஜிஆர் தொடக்கக் காலத்தில் முயன்றதைக் குறித்து எழுதியிருந்தேன். இப்போது விஜய்காந்தும் அதே வழியில்.

DMDK not for caste-based reservation in education

"The Desiya Murpokku Dravida Kazhagam (DMDK) is against caste-based reservation in education and has advocated reservation for the economically weaker sections of society."

namma state la entha arasiyalvathi than nammakaga padu padran.kerala namaku thanner thara mattan aanal nam avanuku minsaram tharugirom

good research work nanba