நாப்பழக்கம்

நம்மூர் கருப்புத் துரைகளும் பழுப்புத் துரைகளும் கொரியாவில் உள்ள மஞ்சள் துரைகளுடன் ஒப்பிடுகையில் எவ்வளவோப் பரவாயில்லை என்று நினைக்கும்படியான ஒருச் செய்தியை சில மாதங்களுக்கு முன் படித்தேன். ஆங்கிலத்தின் மீதும் அமெரிக்கக் கலாச்சாரத்தின் மீதும் கிழக்காசிய நாடுகளில் தற்போது நிலவும் அதீதமான மோகத்தைப் பற்றி நான் நன்கு அறிந்திருந்தும் கொரியாவில் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் ஆங்கில மொழியைச் சரியாக உச்சரிக்கவேண்டும் என்பதற்காக அவர்களது நாக்கின் அடியில் உள்ள தசையை அறுத்து அகற்றும் ஒரு அறுவை சிகிட்சையை செய்விக்கிறார்கள் என்பதைப் படித்தபோது சற்றுத் திகைப்பாகத் தான் இருந்தது. இதற்கு முக்கியக் காரணம் மிகப் பெரும்பாலான கொரியர்களால் 'ர' என்ற எழுத்தை உச்சரிக்க முடியாது. அதற்குப் பதிலாக 'ல' என்றே உச்சரிப்பார்கள்.

கொரியர்களுக்கு மட்டும் தான் இத்தகைய உச்சரிப்புப் பிரச்சனை இருக்கிறது என்றில்லை. வேறு பல மொழிகளைப் பேசும் இனங்களுக்கும் தங்கள் மொழியில் பயன்படுத்தப்படாத ஒலிகளை உச்சரிக்க முடிவதில்லை. டோடோ பறவைக்கு நிகழ்ந்தது போல் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகப் பயன்படுத்தப்படாத ஒரு ஆற்றலை இனிமேல் பயன்படுத்த முடியாதபடி இவர்களுக்கு உடலியல் மாற்றங்கள் ஏதேனும் ஏற்பட்டிருக்கக்கூடுமா? மருத்துவர்களும், உயிரியலாளர்களும் இதை மறுக்கிறார்கள். சில ஒலிகளை உச்சரிக்க முடியாமல் இருப்பதற்குப் பயிற்சியின்மையேக் காரணம் என்கிறார்கள். நானும் அப்படித் தான் நினைக்கிறேன். சில எழுத்துக்களை உச்சரிக்க முடியாதவர்கள் என்றுக் கருதப்படும் இனங்களில் பிறந்திருந்தும் கூட சிறு வயதிலிருந்தே மற்ற மொழிகளுடன் பழக்கம் இருப்பவர்கள் அந்த எழுத்துக்களைச் சரியாக உச்சரிப்பதை பார்த்திருக்கிறேன்.

இந்தியாவில் அதிகமாக உச்சரிப்புச் சிக்கல்கள் உள்ள ஒரு இனம் என்றால் உடனே நினைவுக்கு வருவது வங்காளிகள் தான். எடுத்துக்காட்டாக அவர்களுக்கு 'ஸ' வராது. எப்போதும் 'ஷ' தான். 'அ' என்ற ஒலி வரும் சில இடங்களில் 'ஓ' என்று உச்சரிப்பார்கள். இதனால் மற்றவர்கள் 'ஸங்கீத்' (சங்கீதம்) என்பதை வங்காளிகள் 'ஷொங்கீத்' என்றேச் சொல்வார்கள். உலகை ஏதாவதுப் பேரழிவிலிருந்துக் காப்பாற்றுவது ஒரு வங்காளி 'வா' என்றுச் சொல்வதில் தான் இருக்கிறது என்ற நிலை வந்தாலும் கூட அவர்களால் அதை உச்சரிக்க முடியாது. 'பா' (ba) என்று தான் சொல்வார்கள். ஒரிசாவைச் சேர்ந்த என் நண்பர் ஒருவர் ஒருமுறை என்னுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். 'V' என்ற ஆங்கில எழுத்து 'பி' (bhi) என்று தான் உச்சரிக்கப்பட வேண்டும் என்பது அவரது நிலைபாடு. ஆரம்பப் பள்ளியிலிருந்தே அவருக்குப் படிப்பிக்கப்பட்டது அப்படித்தான். ஐந்தில் சரியாக வளைக்காததால் வந்த வினை என்று நினைத்துக் கொண்டேன். ஆனால் சில காலம் கழித்து அருமை, குருவி போன்றத் தமிழ்ச் சொற்கள் atumai, kutuvi என்றே உச்சtiக்கப்பட வேண்டும் என்று ஒருவர் இணையத்தில் எழுதியிருந்ததைப் படித்ததும் மேற்படி ஒரிய நண்பர் இருக்கும் திசை நோக்கி மானசீகமாக வணங்கினேன்.

வங்காளிகளுக்கும் மலையாளிகளுக்கும் பல்வேறு விஷயங்களில் ஒற்றுமை உண்டு. வழக்கத்துக்கு மாறான உச்சரிப்புக்களைக் கொண்டிருப்பதில் முன்னவர்களுக்குப் பின்னவர்கள் சளைத்தவர்கள் அல்ல. ஆங்கிலச் சொற்களில் 'O' என்ற எழுத்து வந்தால் மலையாளிகள் ஓணம் கொண்டாடிவிடுவார்கள் என்பதுத் தெரிந்ததே. ஆங்கிலச் சொற்களில் வரும் வேறு சில ஒலிகளையும் மலையாளிகள் வித்தியாசமான முறையிலேயே உச்சரிப்பார்கள். எடுத்துக்காட்டாக 'ர்ஸ்'(rs) என்னும் ஒலியை 'ழ்ஸ்' என்று ஒலிப்பது அவர்கள் வழக்கம். இன்றும் கூட குமரி மாவட்டத்தின் கேரள எல்லையோரப் பகுதிகளில் 'காளிதாஸ் & பிரதேழ்ஸ்' என்றுத் தமிழில் பெயர்ப்பலகை எழுதப்பட்டிருக்கும் கடைகளைக் காணலாம்.

தமிழ்நாட்டுத் தமிழர்களைப் பொறுத்தவரை அனைவருக்கும் பொதுவான உச்சரிப்புப் பிரச்சனை என்று எதுவும் இல்லை. ஆனால் பெரும்பான்மையானத் தமிழர்களுக்குப் - குறிப்பாகத் தமிழ் வழிக் கல்வி கற்றவர்களுக்கு - பிறமொழிச் சொற்களைச் சரியாக உச்சரிப்பது சிக்கலான ஒன்றாகவே இருக்கிறது. தமிழ் எழுத்துக்கள் தமிழ் சொற்களை எழுதுவதற்குப் போதுமானதாக இருந்தாலும், மற்ற இந்திய மொழிகளோடு ஒப்பிடுகையில் தமிழில் மெய்யெழுத்துக்கள் மிகக் குறைவாகவே இருக்கின்றன. க,ச,ட,த,ப ஆகிய ஐந்து மெய்யெழுத்துக்களில் ஒவ்வொன்றுக்கும் மற்ற இந்திய மொழிகளில் நான்கு வெவ்வேறு விதமான உச்சரிப்பும் எழுத்துக்களும் உண்டு. (இந்திய மொழிகளில் தமிழைத் தவிர வேறு எந்த மொழியையும் முற்றிலும் சமஸ்கிருதக் கலப்பில்லாமல் எழுதுவது சாத்தியமில்லை என்பதையும் இங்கேக் கவனத்தில் கொள்ளவேண்டும்.) இந்தியில் gadi, kadi, khadi ஆகிய மூன்றுச் சொற்களும் முற்றிலும் வெவ்வேறு பொருள் கொண்டவை. ஆனால் தமிழில் இவை மூன்றுமே கடி என்று எழுதப்படுவதால் பலத் தமிழர்களுக்கு இவற்றை வேறுபடுத்தி உச்சரிக்க முடிவதில்லை. (அதே நேரத்தில் களி, கழி, கலி ஆகியத் தமிழ்ச் சொற்களை இந்தியில் வேறுபடுத்தி எழுதமுடியாது.)

நான் வட இந்தியாவில் இருந்தபோது அங்கே சந்தித்தத் தமிழர்களை இரண்டு பிரிவுகளாகப் பிரிக்கலாம். ஒரு பிரிவினர் சரியான உச்சரிப்புடன் நன்றாக இந்திப் பேசுபவர்கள். மற்றவர்களுக்கு இந்திப் பேசத் தெரியாது அல்லது மிக மோசமான உச்சரிப்புப் பிழைகளுடன் பேசுவார்கள். இதில் சற்று ஆச்சரியமான ஒரு விஷயம் என்னவென்றால் முதல் பிரிவினரில் கிட்டத்தட்ட அனைவருமே சமஸ்கிருத அறிமுகம் உள்ளக் குடும்பப் பின்னணியைக் கொண்டிருப்பதோடு பெரும்பாலும் ஆங்கில வழிக் கல்விக் கற்றவர்களாகவும் இருப்பார்கள். இரண்டாவது பிரிவில் பெரும்பாலானவர்கள் தமிழ் வழிக் கல்வி பயின்றவர்கள். இவர்கள் இந்திப் பேச முடியாமல் இருப்பதற்கு அந்த மொழியிலுள்ள நுட்பமான உச்சரிப்பு வேறுபாடுகள் பிடிபடாமல் இருப்பதே முக்கியக் காரணம். என்னுடன் பணிபுரிந்த நண்பர் ஒருவர் இந்தப் பிரிவைச் சேர்ந்தவர். அவர் தன் வேலைக் காரணமாக நிறுவனத்தில் மற்றொருத் துறையை அடிக்கடித் தொடர்புக் கொள்ளவேண்டி இருந்தது. அந்தத் துறையில் இருந்த இருவரில் ஒருவர் பெயர் Pankaj மற்றொருவர் Bagga. நண்பர் தொலைபேசியில் தெள்ளத்தெளிவாகக் கேட்பார்: "கேன் ஐ ஸ்பீக் டு Bangaj ஆர் Pakka?". முதல் பெயரில் கடினமாக உச்சரிக்க வேண்டிய இரண்டு வல்லினங்களையும் மென்மையாகவும், அடுத்தப் பெயரில் மென்மையாக உச்சரிக்கவேண்டிய அதே வல்லினங்களை கடினமாகவும் உச்சரிக்கும் அவரதுத் திறனைக் காணும் இந்திக்காரர்கள் முடித்தலை நெரிக்கப்பட்டக் கனகவிசயரைப் போல் ஆகிவிடுவார்கள்.

ஏழு ஆண்டுகளுக்கு முன் சில்க் ஏர் விமானத்தில் முதல் முறையாக சிங்கப்பூருக்கு பயணம் செய்தபோது உலகப் புகழ்பெற்ற சிங்கப்பூர் ஆங்கில உச்சரிப்பைக் குறித்து எனக்கு எதுவும் தெரிந்திருக்கவில்லை. பயணத்தின் போது விமானப் பணிப்பெண் என்னருகே குனிந்து ஏதோக் கேட்டார். கேள்வி சுமார் ஒரு நிமிடம் நீடித்தது. ஆனால் காஃபி, ஜூஸ் ஆகிய இரண்டு வார்த்தைகளைத் தவிர்த்து வேறு எதுவுமேப் புரியவில்லை. அப்போதே எனக்கு அக்கரைச் சீமையில் என்ன எதிர்பார்ப்பது என்றுப் புரிந்துவிட்டது. பழக்கம் இல்லாதவர்களுக்கு பெரும்பாலான சிங்கப்பூரர்கள் பேசும் ஆங்கிலத்தைப் புரிந்துக் கொள்வதைவிட ஸ்வாஹிலியைப் புரிந்துக் கொள்வது எளிதாக இருக்கக்கூடும்.

இங்கு வந்தப் புதிதில் சில நாட்களுக்கு மிகவும் சிரமமாக இருந்தது. ஒருமுறை ஒரு உணவகத்தில் தேநீர் கேட்டேன். கல்லாவில் நின்றிருந்தப் பதின்ம வயதுப் பெண் "வி மி?" என்றாள். சுத்தமாகப் புரியவில்லை. இரண்டு முறை அதையேத் திரும்பச் சொல்லியும் பயனில்லை. அவள் முகத்தில் பொறுமையின்மையின் ரேகைகள் படரத் தொடங்கின. ஒருக் கோப்பைத் தேநீர் கேட்டால் என்னென்னக் கேள்விகள் எழக்கூடும் என்று என் மூளை brute force முறையில் தேடிக்கொண்டிருந்தது. யுரேகா! "யெஸ். வித் மில்க் ப்ளீஸ்" என்றேன். அன்று சிங்கப்பூர் உச்சரிப்பின் முக்கியமான பாலபாடம் ஒன்றைக் கற்றுக் கொண்டேன். ஏதாவது ஆங்கிலச் சொல் வல்லின ஒலியோடு முடிந்தால் அதை ஒலிக்காமல் விட்டுவிடுவது அவர்களது வழக்கம். மலாய் மொழியில் இது அதிகாரப்பூர்வமாகவே ஆக்கப்பட்டுவிட்டது. எழுதுவதற்கு ஆங்கில எழுத்துக்களையேப் பயன்படுத்தும் அந்த மொழியில் president, lift போன்றவற்றை presiden, lif என்றே எழுதுகிறார்கள். இந்த விதியைப் புரிந்துக்கொண்ட பின் சிங்கப்பூரர்களின் ஆங்கில உச்சரிப்பு ஓரளவுக்கு விளங்கத் தொடங்கியது. "மை கெஃப்ர ஈஸ் வெயிட்டிங் இன் த காப்பா" என்று சக ஊழியர் சொன்னால் அவரதுக் காதலி கார் நிறுத்துமிடத்தில் காத்திருப்பதைத் தான் சொல்கிறார் என்றுப் புரிந்தது.

சீனாவிலிருந்து இங்குப் படிக்கவோ வேலைக்கோ வருபவர்களின் ஆங்கில உச்சரிப்பு சிங்கப்பூர் சீனர்களின் உச்சரிப்பிலிருந்து வேறுபட்டது. நிறுத்தி நிதானமாகப் பேசுவதால் அவர்கள் பேசுவதைப் எளிதாகப் புரிந்துக் கொள்ளலாம். ஆனால் உச்சரிப்புச் சிக்கல்கள் முற்றிலுமாக இல்லாமல் இல்லை. பெரும்பாலானவர்களால் 'த' என்ற ஒலியை உச்சரிக்க முடியாது. "ஸேங்க் யூ" என்று தான் சொல்வார்கள். சீன மொழியில் உள்ள அனைத்துச் சொற்களும் மிகக் குறுகியக் கால அளவே ஒலிக்கக்கூடியவை. அப்படிப் பழகியவர்கள் நீளமான ஆங்கிலச் சொற்களை உச்சரிக்கையில் முக்கால்வாசித் தூரம் கடந்ததும் தளர்ந்துபோய் மீதியை விட்டுவிடுவார்கள். இதெல்லாம் தெரியாதவர்களுக்கு சிலச் சொற்களை விளங்கிக் கொள்வது சிரமமாக இருக்கும். எனக்குத் தெரிந்த ஒரு இந்தியத் தமிழர் இங்கு வந்தப் புதிதில் சீனாவைச் சேர்ந்த சக மாணவர் ஒருவர் ஏதோப் பாடத்தை அவருக்கு விளக்குகையில் சொல்லியிருக்கிறார்: "தீஸ் டு வெக்டர்ஸ் ஆர் அஸோகன்". அவருக்கு விளங்கவில்லை. சீனர் எம்.ஜி.ஆர் படமெல்லாம் பார்த்திருக்க வாய்ப்பில்லையே, அப்படியே அசோகனைத் தெரிந்திருந்தாலும் வெக்டர்களுக்கும் அவருக்கும் என்ன தொடர்பு என்றெல்லாம் பலவாறுக் குழம்பியிருக்கிறார். பிறகு தான் தெரிந்திருக்கிறது அது orthogonal என்று.

நான் சிங்கப்பூர் வந்து ஒன்றிரண்டு ஆண்டுகள் ஆனபின் இங்கு உள்ளவர்களின் உச்சரிப்பெல்லாம் எனக்கு அத்துப்படி என்றுப் பெருமைப்பட்டுக் கொண்டேன். ஆனால் இத்தனை இறுமாப்பு ஆகாது என்று விரைவிலேயே உணர வேண்டி வந்தது. நூலகத்தில் புத்தகங்களைத் திருப்பிக் கொடுக்கையில் அங்கிருந்தப் பெண் ஊழியர் "நோனீக்கா" என்றார். கர்வம் அழிந்ததடி என்பது போலப் புரியாமல் பார்த்துக் கொண்டிருந்தேன். இரண்டாம் முறை விளக்கியப் பிறகு தான் விளங்கியது. (நூலக) அட்டைத் தேவையில்லை என்பதை "நோ நீட் கார்ட்" என்று சிங்கிலத்தில் பெயர்த்து போதாக்குறைக்கு அதன்மேல் உச்சரிப்பு வன்கொடுமையைச் செலுத்தினால் அது "நோனீக்கா" என உருமாறும் என்பதறிக.