ஜெயமோக தரிசனம்

நேற்று முன்தினம் முதன்முதலாக ஜெயமோகனை நேரில் காணவும் அவர் பேச்சைக் கேட்கவும் வாய்ப்புக் கிடைத்தது. சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் சங்க ஆண்டு விழாவில் "இலக்கியம் எதற்காக?" என்றத் தலைப்பில் பேசினார். விழாவின் மற்றொரு சிறப்பு விருந்தினரான வைரமுத்துவின் பேச்சைக் கேட்க வந்தவர்கள் நிரம்பியிருந்த அரங்கத்தில் பேசத் தொடங்குவதற்கு முன் ஜெயமோகன் சொன்னார்: "நான் அடிப்படையில் ஒரு பேச்சாளன் அல்ல. என் ஊடகம் எழுத்து. உங்களில் பெரும்பாலானவர்களை மகிழ்விக்கக் கூடிய ஒரு உரையை என்னால் அளிக்க முடியாது. அதற்காக முதலிலேயே வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன்." இப்படி சொல்லிவிட்டு சுமார் அரை மணி நேரம் மிக அழகாக, தமிழ் மேடைப்பேச்சுகளுக்கு உரிய தோரணைகள் எதுவும் இல்லாமல் மெல்லியக் குரலில் பேசினார். என் நினைவிலிருந்து சில பகுதிகள். (ஜெயமோகன் பயன்படுத்திய சொற்கள் சற்று மாறுபட்டிருக்கலாம்.)

"இங்கே எத்தனையோ நாற்காலிகள் இருக்கின்றன. ஆனால் நான் ஒரு நேரத்தில் ஒரு நாற்காலியில் தான் அமர முடியும். அதுபோல் உலகத்தில் வாழ சாத்தியமான எத்தனையோ வாழ்க்கைகள் இருக்கும்போது நாம் ஒரு வாழ்க்கையை மட்டுமே வாழ முடியும். மனித வாழ்வின் மிகப்பெரிய துயரமே இதுதான்" என்று தன் குரு நித்ய சைதன்ய யதியை மேற்கோள் காட்டிவிட்டு, வாழமுடியாத எத்தனையோ வாழ்க்கை அனுபவங்களை இலக்கியத்தின் மூலம் அடையலாம் என்றார். இதை மேலும் விளக்குகையில் சொன்னார்: "என் சிறுவயதில் எனக்கு நிறைய புத்தகங்கள் படிக்கக் கிடைத்தன. அதன் மூலம் நான் செயிண்ட் பீட்டர்ஸ்பர்க் சாலைகளில் அலைந்தேன், நோட்ரடேம் சர்ச்சில் அமர்ந்திருந்தேன், பாரிஸ் தெருக்களில் சுற்றித் திரிந்தேன். இலக்கியத்தின் மூலம் தேசங்களையும் காலத்தையும் கடந்து செல்ல முடிந்தது."

"யாருக்கு இலக்கியமும் கற்பனையும் தேவையில்லை? ஒரு முச்சந்தி வியாபாரிக்குத் தேவையில்லை. முழுமையாக விடுதலையடைந்த மனிதர்களுக்கும் தேவையில்லை (காந்தி டால்ஸ்டாயின் ஒன்றிரண்டுச் சிறுகதைகளைத் தவிர வேறு இலக்கியம் எதையும் படித்ததில்லை.) இந்த இரண்டு எல்லைகளுக்கும் நடுவில் இருப்பவர்களுக்கு இலக்கியம் தேவை"

"என் இளம் வயதில் வைக்கம் முகமது பஷீர் போன்ற பெரும் இலக்கியவாதிகளை சந்தித்து இலக்கியத்தின் அடிப்படையான பயன் என்ன என்று கேட்டிருக்கிறேன். அவர்கள் அனைவருமே "a sense of justice", "ethics" போன்ற பதில்களையே தந்தார்கள். அறம் தான் இலக்கியத்துக்கு அடிப்படையானது. ஒவ்வொரு மனதிலும் அறம் என்ற விதை இருக்கிறது. கொஞ்சம் ஈரம் கிடைத்தால் கூட அது முளைத்துவிடும். நல்ல இலக்கியம் அந்த ஈரத்தை அளிக்கும். என் புத்தகங்களில் எந்தப் பக்கங்களில் எல்லாம் வாசகனின் கண்ணீர் துளி விழுந்திருக்கிறதோ அங்கெல்லாம் நான் அறத்தைத் தான் சொல்லியிருக்கிறேன்".

அறத்தைப் பற்றிப் ஜெயமோகன் பேசுகையில், தன்னுடைய பத்தொன்பதாம் வயதில் தன் பெற்றோர் தற்கொலை செய்துக்கொண்ட பின்னர் ஒரு துறவியாக கையில் காசில்லாமல் இந்தியா முழுக்க அலைந்தபோது எத்தனையோ பெண்கள் தனக்கு உணவளித்ததை சொன்னதும் என் பக்கத்து இருக்கைகளில் அதுவரை அரட்டையடித்துக் கொண்டிருந்த இரண்டு பெண்கள் 'உச்' கொட்டியபடிக் கூர்ந்து கவனிக்கலானார்கள்.

*****

தமிழில் வேறு எந்த எழுத்தாளருக்கும் இல்லாத ஒரு சிறப்பு ஜெயமோகனுக்கு இருக்கிறது என்பதை அவரைப் பற்றிய இணைய விவாதங்களிலும் நேர்ப்பேச்சுகளிலும் பலமுறை கண்டிருக்கிறேன். அவரது (சமூக / இலக்கிய) அரசியலை கடுமையாக எதிர்ப்பவர்களில் பலரும் கூட (இதில் நானும் அடக்கம்) அவர் ஒரு மிகச்சிறந்த படைப்பாளி என்பதை ஏற்றுக்கொள்கிறார்கள். ஜெயமோகனை நிராகரிக்கலாம். அவர் படைப்புகளை எளிதாக நிராகரிக்க முடியாது. இப்படிப்பட்ட ஒருவருக்குத் தமிழ் பெரும்போக்குக் கலாச்சாரத்தில் உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை என்ற உண்மை மேற்படி விழாவில் மீண்டும் ஒருமுறை உறுதிப்பட்டது. ஜெயமோகன் தன் மனைவியுடன் அரங்கினுள் நுழைந்தபோது சலனமற்று இருந்தக் கூட்டம் சில நிமிடங்கள் கழித்து வைரமுத்து நுழைந்தபோது எழுந்து நின்று பலத்த கரவொலி எழுப்பியது. பெரும்பாலானவர்கள் ஜெயமோகனைப் பற்றி எதுவுமே அறிந்திருக்கவில்லை என்று தோன்றியது.

சிங்கப்பூரில் சமீபகாலமாக தமிழகத்திலிருந்து வரும் பேச்சாளர்களுக்கு என ஒரு ரசிகர் கூட்டம் உருவாகியிருக்கிறது. வைரமுத்து, வலம்புரி ஜான், சாலமன் பாப்பையா, சுகி சிவம் போன்றவர்கள் வந்தபோது நுழைவுக் கட்டணம் அதிகமாக இருந்தும் கூட்டம் அலைமோதியது. டாலரைத் துரத்திச் சோர்ந்திருப்பவர்களின் தசைகளைப் பிடித்துவிடுவது போலப் பேச்சு இருக்கும். வைரமுத்துவுக்கு அலங்கார மேடைத்தமிழ் பலமென்றால் பாப்பையாவுக்கு நையாண்டி கலந்த கிராமிய பேச்சு. இப்படி பழகிவிட்டக் கூட்டத்தில் ஜெயமோகன் போன்றவர்கள் சொல்லும் விஷயங்களுக்கு குறிப்பிடும்படியான வரவேற்பு இல்லாமல் இருப்பது எதிர்பார்க்கத்தக்கதே.

தன்னால் பலமுறைக் கடுமையாக விமர்சிக்கப் பட்டவரான வைரமுத்துவை ஜெயமோகன் எப்படி எதிர்கொள்கிறார் என்பதைக் காண எனக்கு ஒரு அற்பத்தனமான ஆர்வம் இருந்தது. முதல்முறைப் பார்த்துக்கொண்ட போது இருவரும் வணக்கம் தெரிவித்துக்கொண்டு ஓரிரு வார்த்தைகள் பேசிக்கொண்டனர். தன்னையும் கலைஞரையும் இலக்கியவாதிகளே இல்லை என்றுச் சொல்லி சர்ச்சையைக் கிளப்பிய ஜெயமோகனுக்கு பதிலடி கொடுக்கவேண்டும் என்று வைரமுத்து நினைத்தாரோ என்னவோ ஜெயமோகன் சொன்ன ஒருக் கருத்து முட்டாள்தனமானது என்பது போல் சித்தரித்து கைத்தட்டல் வாங்கிக்கொண்டார்.

ஜெயமோகன் பேசும்போது வெள்ளைக்காரர்கள் (பிரித்தானியர்கள்) இந்தியா போன்ற ஒரு பெரிய நாட்டை தங்கள் ஆதிக்கத்தின் கீழ் வைத்திருந்தது வெறும் இராணுவ பலத்தால் மட்டும் அல்ல, அவர்களுடைய அறவுணர்வும் காரணம் என்றார். கி.ராஜநாராயணனின் கோபல்ல கிராமம் கதையில், முன்பு படையெடுத்து வந்தவர்களைப் போல் பெண்களை வன்புணர்வதிலோ வென்ற ஊர்களைக் கொள்ளையிடுவதிலோ வெள்ளைக்காரப் படைகள் ஈடுபடுவதில்லை என்று அறிந்ததும் ஊர் மக்கள் அவர்களை வரவேற்கும் பகுதியை விவரித்தார். பிரித்தானியரை விட மேலான அறத்தை காந்தி முன்வைத்தப் பிறகே அந்த கிராம மக்கள் சுதந்திரப் போராட்டத்தில் இணைந்தனர் என்று சொன்னார். வைரமுத்து பேசும்போது வெள்ளைக்காரர்கள் செவ்விந்தியர்களுக்குச் செய்தக் கொடுமைகளையும், இந்தியாவில் வாள் மட்டுமே வைத்துப் போரிட்ட இனங்களின் மீது பீரங்கித் தாக்குதல் நடத்தியதையும் விவரித்து "இதுதான் ஜெயமோகன் சொல்லும் அறமா?" என்று rhetorical-ஆக கேட்டபோது கூட்டம் தொடர்ந்துக் கைத்தட்டியது.

என் வாசிப்பில் ஜெயமோகன் - 2

ஜெயமோகனின் நாவல்கள் மற்றும் சிறுகதைகளைப் படித்து அவர் மீது ஏற்பட்ட மதிப்பின் காரணமாக அவருடைய புனைவு அல்லாத எழுத்துக்களையும் தேடிப் படிக்கத் தொடங்கினேன். திண்ணை மற்றும் மரத்தடி இணையதளங்களில் அவர் எழுதியிருந்த ஏராளமான கட்டுரைகள்/கடிதங்கள், 'சங்கச்சித்திரங்கள்', 'வாழ்விலே ஒரு முறை' ஆகிய கட்டுரைத் தொகுப்புகள் போன்றவை இதில் அடங்கும். அவரது உழைப்பும், வாசிப்பின் அளவும் சொல்ல வரும் சிக்கலானக் கருத்துக்களைக் கூட மிகத் தெளிவாக வெளிப்படுத்தும் எழுத்தாற்றலும் பிரமிப்பூட்டுவதாக இருந்தாலும் அவரது பல கருத்துக்களும் நிலைபாடுகளும் என்னால் ஏற்றுக்கொள்ள முடியாதவையாகவே இருக்கின்றன.

*****

மரத்தடி இணையதளத்தில், மாய யதார்த்தப் பாணியில் தமிழில் எழுதப்பட்டப் படைப்புகளைக் குறித்துக் கேட்ட ஒரு வாசகருக்கு ஜெயமோகன் பதிலளிக்கையில், கோணங்கி, எஸ். ராமகிருஷ்ணன் மற்றும் சிலர் இந்த பாணியில் எழுதிய கதைகளைப் பட்டியலிட்டுவிட்டு "இவற்றை ஒட்டுமொத்தமாக அவற்றின் காகித மதிப்புக்கூட இல்லாத குப்பைகள் என்றே சொல்வேன்" என்கிறார். (பின்னர் இந்த இணைய விவாதங்கள் 'எதிர்முகம்' என்ற பெயரில் புத்தகமாக வந்தபோது சில சொற்களை நுட்பமான முறையில் மாற்றி இந்த வாக்கியத்தின் கடுமையைக் குறைக்க முயன்றிருப்பதைக் கவனித்தேன்). சக எழுத்தாளனின் பலநாள் உழைப்பில் உருவான ஒரு ஆக்கத்தை குப்பை என்றுக் குரூரமாகத் தூற்றுவதைப் பற்றி ஜெயமோகனிடம் கேட்டால் ஒரு திறனாய்வாளன் 'கறாராக' 'சமரசமற்று' இருக்கவேண்டும் என்றுச் சொல்லக்கூடும். ஆனால் இலக்கியப் படைப்புகளைப் பொறுத்தவரை குப்பை எது கோமேதகம் எது என்றுப் பகுத்தறிய அவர் என்ன அளவுகோல் வைத்திருக்கிறார் என்பதே முக்கியமானக் கேள்வி.

இலக்கியக் கருத்துக்கள் அகவயமானவை என்றும் அவற்றை புறவய நிரூபண முறைகளைப் பயன்படுத்தி உண்மையென நிரூபிக்கவோ பொய்ப்பிக்கவோ முடியாது என்றும் ஜெயமோகன் எழுதியிருக்கிறார். வேறு தளங்களுக்கும் இது பொருந்தும். ஐஸ்வர்யா ராயை விட நந்திதா தாஸ் அழகானவர் என்ற கருத்து பெரும்பாலானவர்களின் நம்பிக்கைக்கு எதிரானதாக இருந்தாலும் அந்தக் கருத்தைக் கொண்டிருக்கவும் விவாதங்களில் முன்வைக்கவும் எனக்கு உரிமை உண்டு. ஆனால் அந்தக் கருத்து முற்றிலும் அகவயமானது என்பதையும் அதை ஒருபோதும் நிரூபிக்க முடியாதென்பதையும் நான் அறிந்திருக்கும் நிலையில் என்னுடன் முரண்படுவோர் அறிவிலிகள் என்றோ அவர்களுடையக் கருத்துக்கள் குப்பை என்றோ நான் மட்டம் தட்டக்கூடாது. ஆனால் இலக்கியப் படைப்புகளைக் குறித்த விவாதங்களில் ஜெயமோகன் அதைத் தான் செய்கிறார்.

தன்னுடைய நாவல்கள் தவிர்த்து தமிழில் இதுவரை எழுதப்பட்ட அனைத்து நாவல்களிலும் முதன்மையானதாக ஜெயமோகன் அடையாளம் காட்டுவது ப. சிங்காரத்தின் புயலிலே ஒரு தோணி நாவலை. தமிழ் தேசியவாதத்தை நையாண்டி செய்யும் பல பகுதிகளை உள்ளடக்கிய இந்த நாவல் வெளிவந்து முப்பத்தைந்து ஆண்டுகளுக்கு மேலாகியும் சமீபகாலம் வரை எந்த கவனிப்பையோ அங்கீகாரத்தையோ பெற்றிருக்கவில்லை. ஜெயமோகனுக்கு இப்போது இந்த நாவலைக் கொண்டாடுவதில் உள்ள ஒரு சிரமம் என்னவென்றால் அவர் கடந்த காலங்களில் இந்த நாவலை தட்டையான சாகச நாவல் என்று பலமுறை நிராகரித்திருக்கிறார். முதன்முறை வாசித்தபோது உருவான இக்கருத்து பின்பு "நாவல்" என்ற நூலை எழுதுவதற்காக அதை மறுபடி படித்தபோது மீண்டும் உறுதிப்பட்டதாக எழுதியிருக்கிறார். தமிழின் முதன்மையான நாவலை இரண்டு முறை (அதுவும் நாவல் என்ற வடிவத்துக்கு இலக்கணம் எழுதுமளவுக்குத் தன்னம்பிக்கை பெற்றப் பிறகு) வாசித்தும் நிராகரிக்கும் அளவிற்குத் தான் அவரது திறனாய்வு அளவுகோலின் நம்பகத்தன்மை இருக்கிறதென்றால் ஒரு படைப்பைக் "காகித மதிப்புக்கூட இல்லாத குப்பை" என்றுக் கரி பூசுவதற்கு முன் சற்று யோசித்திருக்கவேண்டாமா?

கறாராக விமர்சிக்கிறேன் என்ற பேரில் பெரிதும் மதிக்கப்படும் படைப்பாளிகளைக் குறித்து துச்சமாக ஏதாவது சொல்வதை ஜெயமோகன் ஒரு வழக்கமாகவே வைத்திருக்கிறார். உண்மையில் தமிழில் இதுவரை எழுதியவர்களில் தன்னை விடச் சிறந்த எழுத்தாளர் எவரும் இல்லையென்று ஜெயமோகன் உறுதியாக நம்புவது போல் தான் தெரிகிறது. கடந்த நூறாண்டுகளுக்கு மேலாகத் தமிழில் எழுதப்பட்ட நாவல்களில் ஆகச் சிறந்ததாக விஷ்ணுபுரத்தையும் அதற்கு அடுத்தபடியாக பின் தொடரும் நிழலின் குரலையுமே அவர் முன்வைக்கிறார். மலையாளத்திலும் எழுதிவரும் அவர் அங்குள்ளது போல் ஒரு அறிவுச் சூழல் தமிழில் உருவாகவில்லை என்கிறார். இது உண்மையாகவே இருக்கலாம். அதற்காக தமிழ் சூழலில் தன்னுடன் முரண்படுவோர் அனைவரையும் (குறிப்பாக முற்போக்குவாதிகள், திராவிட இயக்க சார்புடையவர்கள்) ஜமுக்காளத்தில் வடிகட்டிய முட்டாள்கள் என்ற ரீதியில் மட்டம் தட்டி எழுதுவதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

ஜெயமோகன் "பாமரத் தமிழ் மனம்" என்ற ஒரு கருத்தாக்கம் கைவசம் வைத்திருக்கிறார். தன்னுடைய கொள்கைகள், ரசனைகள், மதிப்பீடுகள் ஆகியவற்றோடு முரண்படும் தமிழர்களைப் புரிந்துக்கொள்ள அதைப் பயன்படுத்துகிறார் போலும். சில சமயங்களில் ஃப்ராய்ட் பிச்சை வாங்கும் அளவுக்கு இந்த பாமரத் தமிழ் மனதின் உளவியலை அவர் ஆராய்வதுண்டு. எடுத்துக்காட்டாக, இங்கே லியோனியின் பட்டிமன்றங்கள் தமிழ்நாட்டில் பெரும் வரவேற்பைப் பெற்றிருப்பது ஏன் என்று விளக்குகிறார்:

"அறிவார்ந்தது , முக்கியமானது ,பிரபலமானது என கருதப்படும் விஷயங்களையெல்லாம் திண்டுக்கல் லியோனி தூக்கிப்போட்டு உடைக்கும்போது பாமரத்தமிழ் மனம் மகிழ்ச்சி அடைகிறது. இந்த மனத்தின் உளவியலை நாம் கவனிக்கவேண்டும். இவர்கள் எதையும் உழைத்து தெரிந்துகொள்வதிலோ சிந்திப்பதிலோ ஆர்வமற்றவர்கள். அந்த அறியாமை காரணமாக தாழ்வுணர்ச்சி கொண்டவர்கள். ஆகவே அறிவார்ந்ததோ அங்கீகாரம் பெற்றதோ ஆன எந்த செயலையும் ஒருவகை எரிச்சலுடனோ நக்கலுடனோ பார்ப்பவர்கள். சமூகசேவகிக்கு விருது என்றோ விஞ்ஞானிக்கு பரிசு என்றோ தினத்தந்தியில் படித்ததுமே அதே டீக்கடையில் உட்கார்ந்து அதை கடுமையாக விமரிசிக்க ஆரம்பித்துவிடுபவர்கள். எல்லா இடத்திலும் இவர்கள் உண்டு என்றாலும் தமிழ்நாட்டில் இவர்கள் எண்ணிக்கையில் மிக அதிகம். அறியாமையையே தங்கள் தகுதியாக எண்ணிக் கொண்டிருப்பவர்கள் இவர்கள்."

ஜெயமோகனுடைய புனைவு ஆக்கங்களில் ஊறியவர்களுக்கு "ஜகன்மித்யை" சிறுகதையில் வரும் கதைசொல்லியின் அறைத்தோழன் பாத்திரம் நினைவுக்கு வரக்கூடும். நீட்சே பற்றியும் தத்துவம் பற்றியும் பேச ஆரம்பிக்கும் நம்பூதிரியை முதலில் நக்கல் செய்யும் அவன் பிறகு அவர் நிரந்தரச் சுழற்சி, எல்லையற்ற காலவெளி என்றெல்லாம் தன் தலைக்குமேலே பேசுவதைக் கண்டு மிரண்டு நெற்றியில் விபூதி பூசி ஜாதகக்கட்டைத் தூக்கிவருகிறான். "சாமி, குடும்பத்தில ஒரே கஷ்டம். நீங்க தான் பார்த்துச் சொல்லணும்". ஜெயமோகன் "அறியாமையையே தங்கள் தகுதியாக எண்ணிக் கொண்டிருப்பவர்கள்" தமிழ்நாட்டில் மிக அதிகம் என்ற முடிவுக்கு (கணக்கெடுப்பு ஏதும் நடத்தாமலே) எப்படி வந்தார் என்று யூகிப்பது கடினமல்ல.

தமிழர்களின் அறிவாற்றல் மற்றும் நாகரிகம் குறித்த ஒரு தாழ்வான எண்ணம் கேரளத்தில் பரவலாக உள்ளது நன்கு அறியப்பட்ட ஒன்று. என் பார்வையில், இதற்கு இரண்டு முக்கியக் காரணங்கள். நடிகைக்குக் கோயில் கட்டுதல், தலைவனுக்காகத் தீக்குளித்தல், தலைவிக்காக நாக்கை அறுத்து உண்டியலில் போடுதல் போன்ற செய்திகள் தொடர்ந்து அவர்களைச் சென்றடைவது ஒரு காரணம். இன்னொன்று கேரளமெங்கும் பரவியுள்ள ஏராளமான நாடோடி தமிழ் கூலித்தொழிலாளர்கள் தங்கள் ஏழ்மை மற்றும் அறியாமைக் காரணமாக வாழும் அவல வாழ்க்கை. தமிழர்கள் குறித்த இத்தகைய மனப்போக்கை வெளிப்படுத்திய மலையாளிகளுக்கு தான் பலமுறை எதிர்வினையாற்றியதாக ஜெயமோகன் சொன்னாலும் தமிழ் அறிவுச் சூழலைப் பற்றி ஒரு மட்டமான எண்ணத்தையே அவரும் கொண்டிருக்கிறார். தமிழின் ஆகச் சிறந்தப் பத்து நாவல்கள் என்று அவர் முன்வைத்த தரவரிசைப் பட்டியலில் ஆறு நாவல்கள் மலையாள மொழியையும் இலக்கியத்தையும் நன்கறிந்தத் தென் திருவிதாங்கூர்காரர்களால் எழுதப்பட்டவை என்பது இந்த மனப்போக்கின் அனிச்சையான வெளிபாடு எனலாம்.

*****

சரி, மாய யதார்த்த பாணியில் தமிழில் எழுதப்பட்டக் கதைகளை ஏன் குப்பை என்கிறார்? ஏன் இவ்வளவு கோபம்? அதே பதிலில் ஜெயமோகன் எழுதுகிறார்:

"மாய யதார்த்தம் ஒரு நிலப்பகுதியின், மொழியின் பண்பாட்டுப் பின்புலம் கொண்டது. அதை ரசிக்கலாம். இறக்குமதி செய்வது அபத்தம். பீட்சா சென்னையில் செய்யப்பட்டாலும் இத்தாலிய உணவே. நமது உணவு தோசைதான். நமது நாட்டார் மரபு, புராண மரபு ஆகியவற்றிலிருந்தே நம் மிகுபுனைவு வரமுடியும். என் ஆக்கங்களான விஷ்ணுபுரமும், நாகமும் புராண அழகியலில் இருந்து உருவானவை, படுகை நாட்டார் அழகியலில் இருந்து."

அப்படியானால் நூற்று முப்பது ஆண்டுகளுக்கு முன் ஐரோப்பாவிலிருந்துத் தமிழுக்கு இறக்குமதியான நாவல் என்ற வடிவத்தை ஏன் பயன்படுத்துகிறார் என்ற கேள்வியை விட்டுவிடுவோம். தான் புராண அழகியலிலிருந்து உருவாக்கியதாக ஜெயமோகன் சொல்லும் விஷ்ணுபுரத்தில் லத்தீன் அமெரிக்க மாய யதார்த்த நாவலிலிருந்து குறியீடுகளை இறக்குமதி செய்திருப்பது ஏன் என்ற கேள்வியைக் கூட விட்டுவிடுவோம். இலக்கியத்துக்கு நிலப்பகுதி, மொழி, பண்பாடு ஆகியவற்றின் அடிப்படையிலான எல்லைகள் உண்டு என்பதில் ஜெயமோகன் உறுதியாக இருக்கிறாரா என்பதே கேள்வி. அதே இணையதளத்தில் தலித் இலக்கியம், பெண்ணிய இலக்கியம் போன்ற தனி இலக்கிய பிரிவுகள் இந்திய சூழலில் தேவையா தேவையற்றதா என்று ஒரு வாசகர் கேட்டபோது அப்படி தனி அடையாளங்கள் தேவையில்லை என்று மறுத்து ஜெயமோகன் பதில் எழுதுகிறார்:

"தலித் அனுபவம் பிறருக்குச் சிக்காது என்று கொள்வோம். தலித்துக்களின் வாழ்க்கை அனுபவங்கள், அதன் விளைவான அந்தரங்க உணர்வுநிலைகள் அவர்கள் மட்டுமே அறியக்கூடியவை என்பதுதான் அதற்கான வாதம் இல்லையா? இதே வாதத்தை விரித்தெடுப்போம். வெள்ளையனின் அனுபவம் கருப்பனுக்குச் சிக்காது. மேலைநாட்டு அனுபவம் கீழை நாட்டுக்குச் சிக்காது. கன்னடனின் அனுபவம் தமிழனுக்குச் சிக்காது. செம்புல நிலப்பகுதி அனுபவம் கரிசல்மண்காரனுக்குச் சிக்காது. வறண்ட திருப்பத்தூரின் எழுத்து, பசுமை மண்டிய குமரிமாவட்டக்காரனுக்குப் புரியாது. அப்படியேப் போனால் என் அண்டைவீட்டானின் உணர்வு எனக்குப் புரியக்கூடாது. மனித மனம் எவ்வளவு பூடகமானது என நாம் ஒவ்வொருவரும் அறிவோம். எவருமே தங்கள் பகற்கனவுகளைப் பிறிதொரு உயிருக்குச் சொல்லியிருக்க மாட்டார்கள். ஆகவே கணவனின் உலகம் மனைவிக்குப் புரியாது. ஒரு மனிதனின் அந்தரங்கம் பிற எவருக்குமே புரியாது. ஆகவே இலக்கியம் என்பதே பொய்--அப்படித்தானா?

... தூந்திரப் பிரதேச மக்களின் வாழ்க்கையைப்பற்றி யூரி பலாயன் எழுதினால் குளிர்சாதனப்பெட்டிக்குள் மட்டுமே உறைபனியைக் கண்ட எனக்கு அது புரியும். இந்தச் சாத்தியத்திலிருந்தே இலக்கியம் உருவாகி நிலைநிற்கிறது. சங்ககால வாழ்வின் ஒரு தடயம்கூட எஞ்சாத இன்றும் கபிலன் என் ஆத்மாவுடன் பேசுகிறான். பின்லாந்தின் பழங்குடிமொழியில் கபிலனை மொழிபெயர்த்தால் இதே உணர்வை அவன் அங்கும் உருவாக்குவான். பேரிலக்கியங்கள் நாகரீகங்களை, மொழிகளை, காலங்களைத் தாண்டிச் சென்று தொடர்புறுத்தும் என்பது இருபதாம் நூற்றாண்டில் நிறுவப்பட்டுவிட்ட ஒன்று."

கனியன் பூங்குன்றனே கூட இதைவிடத் தெளிவாகச் சொல்லியிருக்கமுடியாது. சரி, துந்திரப் பிரதேச வாழ்க்கை தமிழனுக்குப் புரியும். கபிலனை பின்லாந்துக்கு ஏற்றுமதி செய்யலாம். அப்படியானால் லத்தீன் அமெரிக்க மாய யதார்த்த பாணியில் தமிழில் எழுதினால் மட்டும் அது ஏன் குப்பை ஆகிவிடுகிறது? மாய யதார்த்த பாணியைப் பயன்படுத்தி எழுதப்பட்டிருக்கும் எஸ். ராமகிருஷ்ணனின் நெடுங்குருதி நாவலைப் படிக்கும் போது நம் மனக்கண் முன் விரிவது இராமநாதபுரம் பக்கத்துக் கரிசல்காடா அல்லது கொலம்பியாவா? இதே மாய யதார்த்த யுத்தியை கையாண்டு எழுதப்பட்ட ருஷ்டியின் நள்ளிரவின் குழந்தைகளுக்கு இணையாக இந்தியாவைப் பேசிய இன்னொரு நாவல் இருப்பதாக தெரியவில்லை.

உண்மையில் இங்கே ஜெயமோகனின் நோக்கம் தலித் என்ற தனி அடையாளம் தேவையில்லை என்று மறுப்பதே. இது காந்தியார் காலத்திலிருந்தே கடைபிடிக்கப்படும் அரசியல் தான். தலித்துக்களுக்கென்று ஒரு தனி அரசியல் அடையாளத்தை நிலைநாட்ட அம்பேத்கார் முயன்றபோதெல்லாம் காந்தி அதைக் கடுமையாக (சாகும்வரை உண்ணாநோன்பு போன்ற வழிகளில்) எதிர்த்து முறியடித்திருக்கிறார். இன்று தலித் மக்கள் காந்தியை எப்படிப் பார்க்கிறார்கள் என்பதை தங்களுக்குச் அவர் சூட்டிய 'ஹரிஜன்' என்ற பெயரைத் தூக்கியெறிந்ததில் இருந்தே தெரிந்துக் கொள்ளலாம். (மாயாவதி: "நாங்கள் கடவுளின் மக்கள் என்றால் நீங்கள் என்ன சாத்தானின் மக்களா?")

*****

மேலே சுட்டியக் கேள்வி-பதில்கள் எதிர்முகம் என்ற பெயரில் அச்சில் வந்தபோது அதன் முன்னுரையில் ஜெயமோகன் இணையம் குறித்தும் இணையவிவாதங்களில் பங்கேற்போர் குறித்தும் தன் அதிருப்தியைப் பதிவு செய்திருக்கிறார். இணையத்தில் விவாதிக்க வருபவர்களின் பொதுவான தரம் விகடன் போன்ற பெரிய இதழ்கள் வழியாக அறிமுகமாகும் வாசகர்களை விடவும் குறைவானது என்கிறார். முழுநேர அரசுப்பணியில் இருந்துகொண்டே பெருநாவல்கள் பலவற்றை எழுதிய (விஷ்ணுபுரத்தில் கோபிலப்பட்டர்: "பத்து நாள் போதாதா ஒரு மகாகாவியம் எழுத?") ஜெயமோகன் சொல்கிறார்:

"இணைய வாசகர்களில் மிகப் பெரும்பாலானவர்கள் ஏதேனும் துறையில் பயிற்சி பெற்றவர்கள். சில சமயம் நிபுணர்கள். அவர்கள் உண்மையான சவாலை எதிர்கொள்வதும் உழைப்பதும் அத்துறையில் தான். இலக்கியம் அவர்களுக்கு இளைப்பாறுதலுக்காக மட்டுமே."

அவர் மேலும் சொல்கையில் தமிழ்ச் சிற்றிதழ்களின் வாசகர்களாக வரும் கிராமத்து கீழ்மட்ட இளைஞர்களின் கோபமும் தீவிரமும் இணைய வாசகர்களிடம் இல்லை என்கிறார். உண்மையில் ஜெயமோகனின் பல கருத்துக்களுக்கு இணையத்தில் எழுந்த எதிர்வினைகளின் தொனி அவர் சொல்லும் கிராமத்து கீழ்மட்ட இளைஞர்களின் இயல்பிலிருந்து மாறுபட்டதாயிருக்கலாம். இணைய வாசகர்களில் பலரும் கல்வி, பொருளாதாரம் போன்ற தளங்களில் சராசரிக்கு அதிகமான வெற்றிப் பெற்றவர்கள் என்பதால் அவர்களிடம் வெளிப்படும் (சில நேரங்களில் சற்று எல்லை மீறிய) தன்னம்பிக்கை ஜெயமோகனை எரிச்சல்படுத்தியிருக்கலாம். இணைய விவாதங்களில் தன் கருத்துக்கு எதிராக ஏதாவது தகவலோ மேற்கோளோ முன்வைக்கப்பட்டால் "கூகிள் தான் போதிவிருட்சம்" போன்ற எள்ளல்களால் ஜெயமோகன் அதை எதிர்கொள்வது வழக்கம். இணையத்தின் மூலம் ஏற்படும் அறிவு/தகவல் பரவலாக்கமும் அதன் ஜனநாயகத் தன்மையும் ஜெயமோகனுடைய விருப்பத்துக்குரியதாக இல்லை என்பது உணரக்கூடியதாக இருக்கிறது.

இந்தியச் சூழலில் கடந்த காலங்களில் ஞானம் என்பது பொத்திப் பாதுகாக்க வேண்டிய ஒன்றாகவே பார்க்கப்பட்டு வந்திருக்கிறது. 'தகுதி' உள்ள சிலரைத் தவிர்த்து ஏனைய சாமானியர்களை ஞானம் சென்றடைந்து மலிந்துவிடாமல் தடுப்பதற்காக போடப்பட்ட எத்தனையோ வேலிகளை சுட்டமுடியும். அறிவுப் பீடங்களுக்கு ஏகபோக உரிமைக் கொண்டாடுபவர்கள் ஊடகப் புரட்சிகளை அஞ்சுவர் என்பதற்கு வரலாற்றில் சான்றுகள் உண்டு. ஐரோப்பாவில் ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக நிலவிய கத்தோலிக்க மத அமைப்பின் ஆதிக்கத்தை முடிவுக்குக் கொண்டுவர அச்சு இயந்திரத்தின் கண்டுபிடிப்பு ஒன்றே போதுமானதாக இருந்தது. இன்று இணையம் ஆற்றும் பங்கும் ஒருவகையில் இதுபோன்றதே. எடுத்துக்காட்டாக நோயாளிகளின் தகவல் பெறும் உரிமையை எடுத்துக்கொண்டால் இன்றும் கூட பெரும்பாலான இந்திய மருத்துவர்கள் தன்னுடைய நோய் மற்றும் சிகிட்சை குறித்த நோயாளியின் கேள்விகளுக்கு விரிவானப் பதிலை தருவதில்லை. ஆனால் அடிப்படைக் கல்வியும் ஆங்கில அறிவும் உடைய ஒருவர் இணையத்தில் சில மணி நேரங்களை செலவிட்டால் அந்த நோய் பற்றி மருத்துவர்களால் எழுதப்பட்டு வல்லுநர்களால் திறனாய்வு செய்யப்பட்ட எத்தனையோ ஆய்வுக்கட்டுரைகளைப் படித்து புரிந்துக்கொள்ள முடியும். அது ஒரு மருத்துவரின் அனுபவ அறிவுக்கு ஈடாகாது தான். ஆனால் சமீபகால ஆய்வுமுடிவுகளுக்கு எதிராக ஒரு சிகிட்சையை பரிந்துரைக்கும் மருத்துவரை எதிர்கொள்ள அது உதவும்.

ஜெயமோகனை அறியத் தொடங்கிய நாட்களில் அவர் தனக்கு நான்கு வரிகளில் கடிதம் எழுதும் வாசகருக்குக் கூட பதினைந்துப் பக்க பதில் கடிதம் எழுதக்கூடியவர் என்பதை அறிந்தபோது இந்த அளவுக்கு வாசகர்களை மதிக்கிறாரே என்று வியப்பாக இருந்தது. ஆனால் இணைய விவாதங்களில் தன் கருத்துக்களை மறுக்க துணிந்தவர்களை ஜெயமோகன் எதிர்கொள்ளும் விதம் ஒரு ஐந்தாம் வகுப்புப் பையனுடன் விவாதிக்க வேண்டியக் கட்டாயத்திற்கு உள்ளான கல்லூரி பேராசிரியரின் தோரணையை நினைவூட்டும். எதிராளியின் தரம், வாசிப்பு, கல்வி, ரசனை ஆகியவை முடிந்தவரை மட்டம் தட்டப்படும். பல சமயங்களில் தன்னை நோக்கிக் கேள்வி எழுப்பியவருக்குத் தான் சொல்வதைப் புரிந்துக்கொள்ளத் தேவையான அடிப்படை தகுதிகள் கூட இல்லாததால் விவாதிக்க விரும்பவில்லை என்று முடித்துக் கொள்வார். அப்படியானால் எளிய தொடக்கநிலை வாசகருக்குக் கூட நீண்ட பதில் கடிதங்களை நேரம் செலவிட்டு எழுதுவது ஏன்? என் புரிதலை விஷ்ணுபுர மொழியில் சொல்வதானால் குருவிடம் ஞானம் வேண்டி நிற்கும் வித்யாபேக்ஷியாகத் தான் தொடக்க வாசகர்கள் அவருடன் உரையாட முடியும்.

இது ஒருவிதக் கலாச்சார இடைவெளி எனலாம். கல்லூரியிலிருந்து வெளியேவந்து சில மாதங்களே ஆன ஒரு இளைஞன் தான் பணிபுரியும் துறையில் இருபதாண்டு அனுபவம் உள்ள ஒருவரைப் பெயர் சொல்லி அழைத்து சரிநிகர் சமானமாக விவாதிக்கும் மேற்கத்தியக் கலாச்சாரம் தொடக்கத்தில் எனக்கு சற்று அன்னியமாகவே இருந்தது. இந்தியாவில் நான் படித்த, பணிபுரிந்த இடங்களில் அது சாத்தியமில்லை. மூத்தவர்களை பெயர் சொல்லி அழைப்பதோ அவர்களுடன் கைக்குலுக்குவதோ இந்திய மரபல்ல. காலில் விழுவது அல்லது வேறு விதமாக வணங்குவதே மரபு. வாழ்வின் கணிசமான பகுதியை மடங்களிலும் குருகுலங்களிலும் செலவிட்டு இந்திய ஞானமரபைக் கற்றதாக அறியப்படும் ஜெயமோகன் விவாதங்களில் ஈடுபடுவோரின் தகுதிக்குக் கொடுக்கும் முக்கியத்துவம் புரிந்துக்கொள்ளத் தக்கதே. விஷ்ணுபுரம் ஞானசபையில் விவாதம் தொடங்குவதற்கு முன் யாரெல்லாம் அமர்ந்து பேசலாம், யார் நின்றுக்கொண்டுப் பேசலாம், யாருக்கு சபைக்குள் நுழைவதற்கு அனுமதியில்லை என்பதெல்லாம் அந்தக்கால 'தகுதி' அடிப்படையில் முடிவுசெய்யப்பட்டு அறிவிக்கப்படும். இணையத்தில் அத்தகைய விதிகளை அமல்படுத்துவது எளிதல்ல.

[சற்றே தடம் விலகல்: யோசிக்கையில் நமது மொழிகளில் சமத்துவமான உரையாடல்களே சாத்தியமில்லையோ என்று தோன்றுகிறது. ஒற்றை வாக்கியம் பேசினாலும் பேசுபவரின் தகுதியும் பேசப்படுபவரின் தகுதியும் பெரும்பாலும் வெளிப்பட்டுவிடுகிறது. வீரப்பன் வந்தான், பிரேமானந்தா வந்தார். அம்மா சொன்னாள், அப்பா சொன்னார். ஆங்கிலத்தில் இந்தச் சிக்கல் இல்லை. அதே வேளையில் இது தமிழ் மொழியின் அமைப்பு என்று சொல்லவும் முடியாது. சங்கப் பாடல்களில் தலைவனானாலும் மன்னனானாலும் இறைவனானாலும் 'அவன்' என்று ஒருமையிலேயே குறிக்கப் படுகிறார்கள். அனைவருக்கும் ஒரே மரியாதை எனும்போது மரியாதைக் குறைவு என்ற பேச்சுக்கு இடம் இருந்திருக்காது.]

*****

தமிழில் ஜெயமோகன் அளவுக்கு மரபுவாதம் பேசிய எவரையும் நான் படித்ததில்லை. இந்திய மரபுசார்ந்த கருத்து என்று அவர் முன்வைப்பதை மறுப்பவர்கள் மீது "வெள்ளையன் கருத்தை உணடு கக்குவதே சிந்தனை என்று நம்புபவர்கள்" போன்ற முத்திரைகள் குத்தப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். ஜெயமோகனுடைய இந்த மனப்போக்கை சுந்தர ராமசாமியைப் பற்றிய அவர் எழுதிய இந்த வரிகள் பிரதிபலிக்கின்றன.

"மரபின்மீதான முழுமையான அறியாமை, அதன் விளைவான உதாசீனம், அதேசமயம் மேற்கு தன் மரபில் இருந்து உருவாக்கிய கருத்துக்கள் மற்றும் வடிவங்கள் மீது விமரிசனமற்ற மோகம் ஆகியவற்றுக்கு தமிழில் மிக உச்ச கட்ட முன்னுதாரணம் சு.ரா தான் என்பது பலமுறை அவரிடமும் நான் சொன்ன கருத்து. மரபை ஒட்டுமொத்தமாக விமரிசித்த அவருக்கு மரபை இம்மிகூட தெரியாது, ஆர்வம் சற்றும் இல்லை. தத்துவத்தின் அர்த்தமின்மை பற்றி பேசிய அவருக்கு தத்துவம் மீதும் பயிற்சி இல்லை."

தர்க்க பூர்வமான மேற்கத்திய அணுகுமுறை மற்றும் உள்ளுணர்வு சார்ந்த கீழை நாட்டு அணுகுமுறை என்ற ஒரு பிரிவினையை ஜெயமோகன் பல இடங்களில் பயன்படுத்தி வருகிறார். எனக்கு இவ்விஷயங்களில் பயிற்சி குறைவு என்றாலும் ஜெயமோகன் இதைப் பற்றி எழுதிய கட்டுரைகளை முடிந்தவரை தேடிப் படித்து அவர் சொல்ல வருவதைப் புரிந்துக்கொள்ள முயன்றிருக்கிறேன். தர்க்கம், கற்பனை, உள்ளுணர்வு என்ற மூன்று அறிதல்முறைகளை அவர் முன்வைக்கிறார். தர்க்கத்தைப் பற்றி சொல்கையில்:

"அறிந்தவற்றில் இருந்து பெற்ற தர்க்கத்தை வைத்து அறியாதவற்றை வகுத்துக் கொள்ள முயல்வது (தர்க்க பூர்வ அணுகுமுறை). பழம் சிவப்பாக இருக்கும் ,ஆகவே சிவப்பான காய் பழம் என்பது ஒரு தருக்கம். தருக்கம் மட்டுமே உலகத்தை அறிய போதுமானதல்ல என்ற உணர்வு எல்லா தரப்பிலும் உண்டு . இன்றைய அறிவியலாளர்களில் பலர் தருக்கம் மட்டுமே தனித்து ஒருபோதும் இயங்க முடியாது என எண்ணுகிறவர்கள்."

அறிவியலாளர்களைத் துணைக்கு அழைப்பதும், தர்க்க பூர்வ அணுகுமுறையை மேலை நாடுகளோடு தொடர்புப்படுத்துவதும் ஏன் என்பது புரிந்துக்கொள்ளக் கூடியதே. இன்று அன்றாட வாழ்வுக்கும் மிகவும் இன்றியமையாததான நூறு அறிவியல் / மருத்துவ / தொழில்நுட்பக் கண்டுபிடிப்புகளைப் பட்டியலிட்டால் ஒன்றுவிடாமல் அத்தனையும் மேலை நாட்டினருடைய தர்க்க பூர்வ அணுகுமுறையின் விளைவுகள் என்பது தெளிவாகும். ஆனால் ஜெயமோகன் இதை முழுக்க ஒப்புக்கொள்வதாகத் தெரியவில்லை. அவர் சொல்வது:

"பெரும்பாலான அறிவியல்கண்டுபிடிப்புகள் ஒன்று கனவுகளாக வெளிப்பட்டவை. அல்லது ஒரு பொருளை பார்த்து அதை ஒரு படிமமாகப் பார்க்கும் மனத் தூண்டல் பெற்று அதன்வழியாகப் பெறப்பட்டவை. ஐன்ஸ்டீன் சோப்பு குமிழிகளை பார்த்து அகத்தூண்டலை அடைந்ததாக சொல்வார்கள்."

நியுட்டன் அளவுக்கு படிப்பும் பயிற்சியும் தர்க்க ரீதியாக சிந்திக்கும் திறனும் இல்லாத ஒரு மனிதனின் முன்பு தினசரி நூறு ஆப்பிள்கள் விழுந்தாலும் புவியீர்ப்பு விசை பற்றிய புரிதல் ஏற்பட்டிருக்குமா? ஜெயமோகன் "தருக்க அறிவை விட கற்பனை மேலும் ஆழமானது" என்கிறார்.

"தருக்க அறிவு மனத்தின் மேல்த்தளமான பிரக்ஞையை மட்டும் சார்ந்தது. பிரக்ஞை நமது அகத்தின் மிகச்சிறிய ஒரு பகுதியை மட்டுமே ஆள்வது. அது அலை. கடல் பின்னால் உள்ளது. ஆழ்மனம் [நனவிலி /Unconscious.] அது படிமங்களினாலானது.[இமேஜ்]. நாமறியாதவற்றையும் நமது கனவு அறியும். ...இலக்கியம் தர்க்கத்தால் ஆனதல்ல. கற்பனையால் உருவாக்கப்பட்டதும், கற்பனையை தூண்டுவதுமான படிமங்களால் ஆனது."

இலக்கியத்தில் கற்பனையின் முக்கியத்துவத்தைப் பற்றி மாற்றுக் கருத்தில்லை. ஆனால் பிற அறிவுத்துறைகளில் கற்பனையை தர்க்கத்துக்கு நிகரான ஒரு அறிதல்முறையாக முன்வைப்பது ஆரோக்கியமானதல்ல. இது இலக்கியம், ஆன்மீகம் போன்றத் தளங்களோடு நிறுத்திக்கொள்ளவேண்டிய விஷயங்களை அறிவியல் போன்ற தளங்களுக்கு இறக்குமதி செய்யும் ஜோஷித்தனமான அணுகுமுறைக்கு வழிவகுக்கக்கூடியது. (இன்றிருப்பதைப் போன்ற விமானங்கள் புராண காலத்தில் புஷ்பக விமானங்கள் என்ற பெயரில் உண்மையிலேயே இருந்தன என்றும், அஸ்திரங்கள் எனப்படுவது இன்றைய ஏவுகணைகளே என்றும், பழங்கால இந்தியாவிலிருந்து கொண்டு சென்ற அறிவினால் தான் ஜெர்மனியும் ஜப்பானும் இன்று முன்னேறுகின்றன என்று சிலகாலம் முன்பு இந்திய துணை ஜனாதிபதி ஷெகாவத் பேசியதை இங்கே சுட்டலாம்.) "அணுவினைச் சத கூறிட்ட.." என்ற கம்பனின் பாடல் வரி ஒரு இலக்கியக் கற்பனை. அணுகுண்டு தயாரிக்க அந்த 'அறிதல்' போதாது. ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் வாழும் மனிதர்களைப் பற்றியக் கற்பனை காலங்காலமாக இருந்தும் என்ன பயன்? வருங்காலத்தில் அதை சாத்தியமாக்குவது தர்க்க பூர்வமான ஆராய்ச்சிகள் மூலம் மட்டுமே இயலும். அப்படி ஒருவேளை சாத்தியமானால் "எங்காள் இதை அப்பவே சொன்னான்" என்று மார்தட்டுவது எத்தனை அபத்தம்.

தர்க்கம், கற்பனை ஆகிய அறிதல்முறைகளைக் காட்டிலும் பல மடங்கு நுட்பமான அறிதல்களை உள்ளுணர்வால் அடையமுடியும் என்கிறார் ஜெயமோகன். உள்ளுணர்வு சார்ந்த அறிதல் முறையை இப்படி விளக்குகிறார்:

"ஒரு குழந்தை எப்படி மொழியின் அல்லது இசையின் சிக்கலான பாதையை தன் புது மூளையின் புதிய சாத்தியங்கள் மூலம் சட்டென்று பிந்தொடர்ந்துவிடுகிறதோ அப்படி மனிதமூளை பிரபஞ்ச இயக்கத்தின் சிக்கல்களை முற்றிலும் புதிய ஒருவழியில் சென்று தொட்டுவிட முடியும். உள்ளுணர்வை மனிதன் வளர்த்துக்கொள்ள முடியும், பயில முடியும்."

குழந்தை மொழியைக் கற்பதோ இசை அறிமுகம் உள்ளவர்கள் ராகங்களை அடையாளம் கண்டுக் கொள்வதோ தர்க்கத்தைப் பயன்படுத்தாமல் நிகழும் உள்ளுணர்வு சார்ந்த அறிதலாகப் பார்க்கப்படலாம். உள்ளுணர்வு அல்லது மனத்தாவல் மூலம் நிகழ்வதாகக் கருதப்படும் பல அறிதல்களும் உண்மையில் நன்கு புரிந்துக்கொள்ளப்பட்ட 'ஒழுங்கு அறிதல்' (pattern recognition) முறைப்படியே நிகழ்கின்றன. தர்க்கத்தைப் பயன்படுத்தி அந்நிகழ்வை விளக்கவும் அந்த அறிதலை முற்றிலும் தர்க்கத்தின் மூலமாக நிகழ்த்திக் காட்டவும் பயிற்சியுள்ளவர்களால் முடியும். எடுத்துக்காட்டாக, ஒரு பாடலின் ஒற்றை வரியைக் கேட்டவுடனேயே பாடுவது ஜேசுதாஸா, பாலசுப்ரமணியமா, ஜெயச்சந்திரனா என்று நம்மில் பலரால் சொல்லிவிட முடியும். மூளை இதுபோன்றவற்றை எப்படி சாதிக்கிறது என்ற தெளிவான புரிதல் இல்லாத நிலையில் "புதிய சாத்தியங்கள் மூலம்" என்ற சொற்றொடரை ஜெயமோகன் பயன்படுத்துகிறார். உண்மையில் ஃபொரியர் (Fourier), காஸ் (Gauss) போன்ற கணிதமேதைகள் முன்வைத்த தர்க்க பூர்வமாக வழிமுறைகளைப் பயன்படுத்தி ஒரு நிரல் எழுதி கணினியில் இட்டால் குரலை வைத்து ஆளை அடையாளம் காணும் ஒரு இயந்திரத்தை உருவாக்கிவிட முடியும் என்பது என் அனுபவத்தின் மூலம் நான் உறுதிப் படுத்திக்கொண்ட ஒன்று. முன்னூறு ஆண்டுகளுக்கு முன் தர்க்கத்துக்கு அப்பாற்பட்டதாகக் கருதப்பட்ட எத்தனையோ விஷயங்களுக்கு இன்று தர்க்க பூர்வமான விளக்கங்கள் கிடைத்திருக்கின்றன.

உள்ளுணர்வின் மூலம் பிரபஞ்ச இயக்கத்தின் சிக்கல்களை தொடுவது பற்றியெல்லாம் எனக்கு சற்றும் தெரியாது என்பதால் அதைப் பற்றி ஒன்றும் சொல்வதற்கில்லை. ஆனால் இன்னொன்று சொல்லாம். தர்க்க ரீதியான அறிதல்முறைகளுக்கு பதிலாக வேறு அறிதல்முறைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் ஒரு சமூகத்தில் போலிகள் புகுந்து விளையாடுவதை தவிர்க்கமுடியாது. தர்க்கத்தின் மூலம் ஒருவர் அறிந்துக்கொண்ட ஒன்றை மற்றவர்களால் புரிந்துக்கொள்ளவும் சரிபார்க்கவும் முடியும். ஆனால் உள்ளுணர்வின் மூலம் அறிந்துக்கொண்ட ஞானத்தை ஒருவர் சொல்லும் போது அங்கே தர்க்கத்துக்கு இடம் இல்லாததால் சொல்பவரின் தகுதியைப் பொறுத்தே அது ஏற்றுக்கொள்ளப்படுவதும் நிராகரிக்கப்படுவதும் அமையும். மரியாதைக்குரியவர்கள் என்றும் அறிவாளிகள் என்றும் கருதப்படுபவர்கள் சொல்லுவதெல்லாம் ஆராயாமல் ஏற்றுக்கொள்ளப்படும். காலப்போக்கில் அத்தகைய சமூகத்தின் ஒட்டுமொத்த அறிவு வீழ்ச்சி தவிர்க்கமுடியாதது என்பதே வரலாறு.

எனக்கு மறுபடியும் விஷ்ணுபுர ஞானசபை நினைவுக்கு வருகிறது. பாரதவர்ஷத்தின் ஆகச்சிறந்த ஞானிகளெல்லாம் கூடியிருக்கும் சபையின் தலைவராக வீற்றிருக்கும் மகாவைதீகர் பவதத்தர் பிரபஞ்ச உற்பத்திக் குறித்த தன் தரிசனத்தை விளக்குகையில் "பூரணத்திலிருந்து பூரணத்தை எடுத்துக்கொண்ட பின்னும் பூரணமே எஞ்சுகிறது" என்கிறார். சபையிலிருந்து இதற்கு மறுப்பாக ஒரு முனகல் கூட எழவில்லை. (விவாதத்தின் பிற்பகுதியில் பவதத்தர் இதை மறுபடிச் சொல்லும்போது தான் "இது அதர்க்கம்" என்று ஒரு பௌத்த துறவி சொல்கிறார். இன்று இந்தியாவில் பௌத்தம் இருந்த இடம் தெரியவில்லை.) ஒருவேளை பவதத்தர் மேற்படி சூத்திரத்தை ஞானசபையில் சொல்லாமல் தன் வலைப்பதிவில் எழுதியிருந்தால் "என்னய்யா இந்த algebra படு அபத்தமாக இருக்கிறதே" என்ற ரீதியில் பின்னூட்டங்கள் வந்திருக்கும். அவரும் கடுப்பேறி வெள்ளையன் கருத்தை உண்டு கக்குபவர்களுக்குக் கடும் எதிர்வினையாற்றியிருக்கக் கூடும்.

(ஜெயமோகனாயணம் தொடரும்)

புயலிலே ஒரு தோணி

(நான் எழுதிக்கொண்டிருந்த ஒரு பதிவின் நடுவே 'புயலிலே ஒரு தோணி' நாவல் பற்றிய ஒரு சிறு விவரிப்பு தேவையாயிருந்தது. எழுதத் தொடங்கியபின் அது பல பத்திகள் நீண்டு அந்தப் பதிவின் போக்கைக் குலைப்பதாகத் தோன்றியதால் இங்கே தனியாக இடுகிறேன். நாவல் கையில் இல்லாததால் நினைவிலிருந்தே எழுதுகிறேன். தகவல் பிழைகள் இருந்தால் சொல்லுங்கள்.)

ப. சிங்காரத்தின் 'புயலிலே ஒரு தோணி' நாவல் தமிழின் மிகச்சிறந்த நாவல்களில் ஒன்று என்றக் கருத்து அண்மைக்காலமாக முக்கிய (அல்லது அதிக கவனம் பெறும்)இலக்கியவாதிகள் சிலரால் முன்வைக்கப் படுகிறது. தமிழின் முதல் புலம்பெயர் நாவல் என்ற சிறப்பும் இதற்குண்டு. நாற்பதாண்டுகளுக்கு முன் எழுதப்பட்ட இந்த நாவல் அக்காலகட்டத் தமிழ் நாவல்களிலிருந்து மிகவும் வேறுபட்ட சாயலைக் கொண்டதெனப் பலரும் சொல்லியிருக்கிறார்கள். இதற்கான காரணம் ப. சிங்காரத்தின் வாழ்க்கைக் குறிப்பைப் படிக்கும்போது புரிகிறது. மிக இளம் வயதிலேயே இந்தோனேசியாவுக்கு வேலைக்குச் சென்ற அவருக்குத் தமிழ் இலக்கியத்தோடு மிகக் குறைவான அறிமுகமே இருந்திருக்கிறது. அவரது இலக்கியப் பார்வை ஹெமிங்வேயையும் டால்ஸ்டாயையும் வேறு மேற்கத்திய எழுத்தாளர்களையும் படித்து உருவானது.

புயலிலே ஒரு தோணியின் நாயகன் பாண்டியனும் சிங்காரத்தைப் போலவே இளம்வயதில் வட்டிக்கடையில் வேலைச் செய்வதற்காக இந்தோனேசியாவுக்குக் கப்பல் ஏறியவன். தென்கிழக்காசிய நாடொன்றில் பல ஆண்டுகளாக வாழும் தமிழன் என்ற முறையில் (பலருக்கும் அன்னியமாகத் தோன்றும்) இந்த நாவலின் களம் எனக்கு நெருக்கமானதே. என்னுடைய வாசிப்பின் அடிப்படையில் இந்த நாவலை மூன்று பகுதிகளாகப் பார்க்கிறேன். முதலாவது பாண்டியன், ஆவன்னா போன்ற புலம்பெயர்ந்த தமிழர்களின் நினைவுகள் வழியாகச் சித்தரிக்கப்படும் எழுபதாண்டுகளுக்கு முந்தைய (தென்) தமிழக கிராம/சிறுநகர வாழ்க்கை. (நினைவுக்கு வரும் ஒரு இடம்: தங்கள் பரம்பரையிலேயே முதன்முறையாக பள்ளிக்கூடம் செல்லும் பையன்களிடம் "எம் பேருக்கு என்னடா இங்கிலீசுல?" என்றுக் கேட்டு அவர்கள் ஆங்கில அறிவைச் சோதிக்கும் தந்தையர்கள்.) செட்டியார்களின் வாழ்க்கை மற்றும் மொழிக் குறித்த துல்லியமான விவரிப்புகளையும் (எ.கா: "வாவன்னாகேனாவானா என்று அழைக்கப்படும் வாழ்ந்துக் கெட்ட வள்ளியப்பச் செட்டியார்") இதோடு சேர்த்துக் கொள்ளலாம்.

நாவலின் மற்றொரு பகுதியாக நான் காண்பது பாண்டியன் மனதிலும் அவன் நண்பர்களுக்கிடையேயும் நாவல் முழுக்க விட்டுவிட்டு நிகழும் தத்துவ விவாதங்கள் மற்றும் ஒழுக்கம், அறம், அறிவு போன்ற அடிப்படைகளைப் பற்றியக் கேள்விகள். (எ.கா: "மூடநம்பிக்கை மதத்திற்கும் அறிவுநம்பிக்கை விஞ்ஞானத்துக்கும் என்ன வேறுபாடு?... அணுவைப் பிளந்து என்ன? பிளவாமல் இருந்து என்ன?".) இத்தகைய விவாதங்களில் பல இடங்களில் பழம்பெரும் நூல்கள் நையாண்டிச் செய்யப்பட்டிருக்கின்றன. குறிப்பாகப் பாலியல் தொழில் நடக்கும் விடுதியை விவரிக்க கலிங்கத்துப்பரணியை பயன்படுத்துவதையும் வெள்ளையர்களை வெறுப்பேற்ற விவிலியத்தின் மொழியைப் பகடி செய்து கே.கே.ரேசன் 'தீர்க்கத்தரிசி' ஆற்றும் உரையையும் சொல்லலாம்.

நாவலின் பலவீனமான அம்சம் என்றால் அது ஜேம்ஸ் பாண்ட் கூனிக் குறுகும் அளவுக்கு பாண்டியன் நடத்தும் சாகசங்கள் நம்பமுடியாத வகையில், நாவலின் மற்ற யதார்த்தமான பகுதிகளுடன் ஒட்டாமல் இருப்பதுதான். இது ஒருவிதமான அதீதக் கற்பனை (fantasy) போலவே எனக்குப் படுகிறது. ஜேம்ஸ் பாண்ட் படங்களில் வருவதுபோலவே பாண்டியனைக் காணும் பெண்களெல்லாம் மயங்கி மனதைப் பறிகொடுக்கிறார்கள். நாவலின் தொடக்கத்தில் வட்டிக்கடைத் தொழிலாளியாக வரும் பாண்டியன் சிலப் பக்கங்களுக்குப் பிறகு ஜப்பானிய இராணுவ அதிகாரியோடு சரிக்கு சமமாக அமர்ந்து போர்க் கைதிகளை எப்படி நடத்தவேண்டும் என்று அறிவுரைச் சொல்கிறான். பிறகு ஜப்பானிய உளவுத்துறையின் மூத்த அதிகாரியைத் தீர்த்துக்கட்டி நேதாஜிக்குக் கெடுதல் விளைவிக்ககூடிய கடிதத்தைக் கைப்பற்றி வருகிறான். முன்னாள் தோழர்களைக் காட்டிக்கொடுப்பவனுக்கு உளவியல் வழிமுறைகளைக் கையாண்டு மாரடைப்பு ஏற்படுத்துகிறான். பிறகு இந்தோனேசிய மக்களால் 'காட்டு ராஜா' எனப்போற்றப்படும் சுதந்திரப் போராட்டத் தலைவனாகி போரில் மடிகிறான். இந்த சாகசங்களையெல்லாம் தவிர்த்துவிட்டு நோக்கினால் இது ஒரு மிகச் சிறந்த நாவலே.

என் வாசிப்பில் ஜெயமோகன் - 1

நான் ஜெயமோகனை வாசித்த அளவிற்கு வேறு எந்த எழுத்தாளரையும் வாசித்ததில்லை. அவரது புனைவு ஆக்கங்கள் குறித்தும், அவரது சமூக/அரசியல் பார்வைகள் குறித்தும் எனக்கு இரு மாறுபட்டக் கருத்துக்களே உள்ளன. புனைவுகளைப் பொறுத்தவரை ஜெயமோகனின் எழுத்து என்னைக் கவர்ந்த அளவிற்கு தமிழில் வேறு எவருடைய எழுத்தும் கவர்ந்ததில்லை. ஆனால் அவரது புனைவல்லாத ஆக்கங்களில் அவர் முன்வைக்கும் அரசியலும் அவரது சார்புநிலைகளும் என்னால் ஏற்றுக்கொள்ள முடியாதவை.

இரண்டு ஆண்டுகளுக்கு முன் வரையில் ஜெயமோகனுடைய எந்தப் படைப்பையும் (தொண்ணூறுகளில் இந்தியா டுடேயில் படித்த ஒன்றிரண்டு சிறுகதைகள் நீங்கலாக) வாசித்திருக்கவில்லை. ஊடகங்கள் வழியாக அவரைப் பற்றி உருவாகியிருந்த பிம்பம் (காவி மை கலந்து எழுதுபவர், இடதுசாரி/திராவிட இயக்கத்தினரை கடுமையாக எதிர்ப்பவர், சர்ச்சைகள் மூலம் விளம்பரம் தேடுபவர்..) வாசிக்கத் தூண்டுவதாக இருக்கவில்லை. இப்படி இருந்த எனக்கு அவருடைய எழுத்தில் ஒரு தீவிரமான ஆர்வம் ஏற்படக் காரணமாக இருந்தது இலக்கியத்துக்கோ அரசியலுக்கோ அப்பாற்பட்ட ஒன்று. அதற்கான தமிழ் சொல் இன்னும் என் சிற்றறிவிற்கு எட்டவில்லை. ஆங்கிலத்தில் nostalgia.

ஒருமுறை நூலகத்தில் ஆங்கிலப் பகுதியில் ஏதோ தேடிக்கொண்டிருந்தபோது யாரோ வரிசைமாற்றி வைத்துவிட்டுப் போயிருந்த ஜெயமோகனின் காடு நாவல் கண்ணில் பட்டது. எடுத்து தற்போக்காக ஒரு பக்கத்தை திறந்து வாசித்தேன். அது ரெசாலம் மேஸ்திரியும் வேலை செய்யும் பெண்களும் உரையாடிக் கொண்டிருக்கும் பகுதி. எனக்கு இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்னால் போனது போல ஒரு உணர்வு. நான் என் வாழ்வின் முதல் எட்டு வருடங்களைக் கழித்த என் சொந்த ஊரான அந்த மலையடிவாரக் கிராமம் எனக்கு நினைவுக்கு வந்தது. காடு நாவலில் இடம்பெற்றிருந்த அந்த பேச்சுமொழி அந்த ஊரிலும் அதன் சுற்றுவட்டாரங்களிலும் மட்டுமே வழக்கிலுள்ளதென்பது எனக்கு நன்றாகத் தெரியும். அந்த மண்ணில் வாழ்ந்து அந்தக் காற்றை சுவாசித்த ஒரு மனிதனால் மட்டுமே அதை இத்தனை துல்லியமாக பதிவு செய்யமுடியும் என்று எனக்குத் தோன்றியது.

என் யூகம் சரியே என பின்னர் அறிந்துக்கொண்டேன். ஜெயமோகனும் நானும் ஒரே கிராமத்தைச் சொந்த ஊராகக் கொண்டவர்கள். அவரது பல கதைகளுக்குக் களமாக அமைந்துள்ள இந்த கிராமம் தற்போது சுற்றுலா தலமாக மாறிவிட்ட திர்பரப்பு அருவிக்கு மிக அருகே உள்ளது. ஒருகாலத்தில் இந்தப் பகுதி முழுவதும் காடுகளால் சூழப்பட்டிருக்கக் கூடும். இப்போது எங்கு பார்த்தாலும் ரப்பர் மரங்கள். ஒருவேளை நான் சிறுவனாக இருந்தபோது பதின்ம வயது ஜெயமோகனைக் கண்டிருக்கக்கூடும். என் சிறுவயது நினைவுகள் பலவற்றை அவரது எழுத்தில் அடையாளம் கண்டுக்கொள்வது ஒரு சுகமான அனுபவமாக இருந்தது. ஒரு கட்டுரையில் (சங்கச்சித்திரங்கள்) தன் இளமைக் காலத்தில் ஊரில் நடந்த ஒரு கிராமத்து 'சர்க்கஸ்' குறித்து விவரித்திருந்தார். இந்த நிகழ்ச்சியில் ஒரு வித்தைக்காரன் நிலத்தில் கால் படாமல் ஏழு நாட்கள் தொடர்ந்து சைக்கிள் ஓட்டியதையும் சட்டை அணியாத ஒருவனின் முதுகில் குழல்விளக்குகள் அடித்து நொறுக்கப்பட்டதையும் என்னுடைய ஐந்தாவதோ ஆறாவதோ வயதில் மிகுந்த வியப்புடன் பார்த்துக்கொண்டிருந்தது இன்னும் நினைவிருக்கிறது.

காடு நாவலை வீட்டிற்கு எடுத்துவந்து ஒரே மூச்சில் படித்து முடித்தேன். அது என்னை மிகவும் கவர்ந்தது என்று தான் சொல்லவேண்டும். பெரும்பாலான கதாபாத்திரங்கள் மிகத் துல்லியமாகவும் முழுமையாகவும் (லங்காதகனம் கதையில் எந்த வேஷக்குறையும் இல்லாமல் ஆட வரும் ஆசானைப்போல) சித்தரிக்கப் பட்டிருந்தன. குறிப்பாக கிரிதரனுடன் காட்டில் வசிக்கும் குட்டப்பன், குரிசு, ரெசாலம் போன்ற பாத்திரங்கள். "குறுக்கில ஒரேபோக்கு நொம்பலம். வல்ல சோக்கேடுங் காணும்" என்று பேசும் இப்பகுதி மக்களின் வட்டார வழக்கின் நெளிவுசுளிவுகளை குமரி மாவட்டத்துக்காரர்களான சுந்தர ராமசாமியாலோ நாஞ்சில் நாடனாலோ கூட பதிவு செய்யமுடியாது. (மேற்படி வசனம் புரியாதவர்களுக்கு: "முதுகில் தீராத வலி. ஏதாவது நோயாக -சுகக்கேடு- இருக்கலாம்"). இளம்வயது கிரிதரன் சில இடங்களில் வயதுக்கு மீறிய முதிர்ச்சியுடன் கதை சொல்லுவதுபோல் தோன்றினாலும், உண்மையில் அவன் மூத்து நரைத்து கிழவனான பின்பே கதை சொல்லப்படுகிறது என்பது கவனிக்கத்தக்கது. காடு என் ஆவலைத் தூண்டிய பிறகு வாசித்தது ரப்பர் நாவல். ஜெயமோகனின் முதல் நாவலான இது காடு போலவே குமரிமாவட்டத்தின் மேற்குப் பகுதியை (திருவட்டார், திர்பரப்பு, குலசேகரம்..) களமாகக் கொண்டது. என் பார்வையில் இந்த நாவலில் ஜெயமோகனின் சார்புநிலைகள், கோட்பாடுகள் எல்லாம் அதிகமாக வெளிப்படுகின்றன. ரப்பர் நாவல் குறித்த என் புரிதலை அடுத்தப் பகுதியில் எழுதுகிறேன்.

சில எழுத்தாளர்களைப் படிக்கத் தொடங்கினால் நிறுத்தமுடியாதென்று சொல்வார்கள். ஜெயமோகன் விஷயத்தில் எனக்கு அப்படித்தான் ஆனது. அவரது நான்கு சிறுகதைத் தொகுதிகளையும் குறுநாவல் தொகுதியையும் விரைவிலேயே வாசித்து முடித்தேன். பெரும்பாலானவை பிடித்திருந்தன. சில சிறுகதைகள் மறக்கமுடியாதவை. சொல்லியே ஆகவேண்டிய ஒன்று டார்த்தீனியம். இந்த கதையைப் படிக்கும் எவருமே பாதிப்படையாமல் இருக்கமுடியாது என்பது என் எண்ணம். மிகவும் மகிழ்ச்சியான சூழலில் வாழும் ஒரு சிறுக் குடும்பம் அந்த குடும்பத் தலைவனுக்கு ஏற்படும் ஒரு விடுபட இயலாத இச்சையின் (obsession) காரணமாக எப்படி சிதிலமடைந்து சின்னாபின்னமாகிறது என்பது தான் கரு. ஆனால் இது பாசமலர் பாணி tear jerker எல்லாம் இல்லை. ஒரு மிகப்பெரிய சோகத்தை மிகநுட்பமான முறையில் சொல்லியிருப்பார். மிகவும் கவர்ந்த இன்னொரு கதை "பிரம்ம சங்க்யா" நம்பூதிரியைப் பற்றிய ஜகன் மித்யை என்ற சிறுகதை. நீட்சே, ஐன்ஸ்டீன், ஜடத்தையும் காலத்தையும் இணைக்கும் சமன்பாடுகள், சுழற்சித் தத்துவம் போன்ற விஷயங்கள் கதையில் இடம்பெற்றிருந்தாலும் இவற்றில் பயிற்சியில்லாதவர்கள் கூடப் ஆர்வத்தோடு வாசிக்கும் வகையில் கதை எழுதப்பட்டிருக்கிறது. குறிப்பிடத்தக்க இன்னொரு சிறுகதை மாடன் மோட்சம். ஒருபக்கம் மதமாற்றங்களினாலும் இன்னொரு பக்கம் சமஸ்கிருதமயமாக்கலாலும் அடித்தட்டு மக்களின் சிறுதெய்வ வழிபாடு அழிந்து வருவதாகச் சித்தரிக்கும் கதை. ஜெயமோகன் ஒரு இந்துத்துவாதி அல்ல என்று நிறுவ முனைவோர் இன்றளவும் சுட்டிக்காட்டும் கதை இதுதான்.

சுந்தர ராமசாமியின் சில கதைகளில் காணப்படும் அங்கதம் ஜெயமோகன் எழுத்தில் பொதுவாக காணமுடிவதில்லை. ஆனால் மடம் என்ற குறுநாவல் இதற்கு சற்று விதிவிலக்கு எனலாம். மாட்டு வைத்திய புத்தகம் ஒன்றைப் படித்து "ஞானம்" பெற்ற ஒரு பனையேறி சாமியாரைப் பற்றிய கதை. சாமியார் மிகப்பெரிய ஞானி என நம்பும் கனபாடிகள், சாமியார் மறைந்த பிறகு அவர் ஞானம் பெறக்காரணமான ஆதார நூல் எது என்றுத் தேடி அலைகிறார். சாமியாரின் பூர்வாசிரம மனைவியான கிழவிக்கு சாராயம் வாங்கிக் கொடுத்து அவளிடமிருந்து ஆதார நூல் பற்றிய ரகசியத்தை அறிய கனபாடிகள் முயல்வதும், அவருடைய கேள்விகளுக்கு கிழவியின் பதில்களும் ("என்னெளவ படிச்சானோ? எந்த அம்மெதாலி அறுத்தானோ?") அந்த தேடலின் பின் உள்ள அபத்தத்தை வெளிப்படுத்துகின்றன. படுகை, லங்காதகனம், மண், கிளிக்காலம் போன்ற வேறு சில சிறுகதைகளும் மறக்கமுடியாதவை.

காடு மற்றும் ரப்பர் நாவல்கள் எனக்குப் பிடித்திருந்த அளவிற்கு, ஜெயமோகன் தன் நாவல்களில், ஏன் தமிழில் இதுவரை எழுதப்பட்ட எல்லா நாவல்களிலும், முதன்மையானதாக அடையாளம் காட்டும் விஷ்ணுபுரம் மற்றும் பின் தொடரும் நிழலின் குரல் ஆகியவை என்னை அவ்வளவாக கவரவில்லை. உண்மையில் இவ்விரண்டு நாவல்களில் விஷ்ணுபுரம் மட்டுமே முழுமையாகப் படித்தேன். சில பகுதிகள் பிடித்திருந்தன. பின் தொடரும் நிழலில் சில பக்கங்கள் மேய்ந்துவிட்டு வேண்டாமென விட்டுவிட்டேன். காடு, ரப்பர் ஆகிய நாவல்கள் ஜெயமோகன் நன்கறிந்த மண்ணையும், மனிதர்களையும் அவர்களது வாழ்க்கையையும் சொல்வதால் அவற்றில் ஒரு உயிர்த்தன்மை இருக்கிறது. ஆனால் பௌராணிக/அரசியல் சாயல் கொண்ட அவரது பெருநாவல்கள் அவர் கண்டோ, வாழ்ந்தோ அறியாத, அவரது கற்பனையில் மட்டுமே உருவான களங்களையும் (விஷ்ணுபுரம், ஸ்டாலின் கால சோவியத் ரஷ்யா), மனிதர்களையும் பற்றியவை. ஒரு சாதாரண வாசகனாக என் விருப்பம் ஜெயமோகனின் பெரும்பாலான ரசிகர்களிடமிருந்து மாறுபட்டது என்று நினைக்கிறேன். ஜெயமோகன் (அவரே "ஆழிசூள் உலகு" நாவலின் விமரிசனத்தில் குரூஸ் சாக்ரடாஸ் என்ற எழுத்தாளருக்குச் சொன்னது போல்) அவரால் மட்டுமே எழுத சாத்தியமான தென் திருவிதாங்கூர் மக்களின் தனித்தன்மையுடைய வாழ்க்கை, பண்பாடு, வரலாறு ஆகியவற்றைப் பற்றி நிறைய எழுதவேண்டும். (நினைவுக்கு வரும் சினிமா பாடல்: "அக்கம் பக்கம் பாரையா, சின்ன ராசா! ஆகாச பார்வை என்ன சொல்லு ராசா!")

* * * * *

இந்திய தத்துவ மரபில் பயிற்சி உடையவர்களாலேயே விஷ்ணுபுரம் நாவலின் சிறப்பை முழுமையாக உணரமுடியும் என்று ஜெயமோகனும் அவரது ரசிகர்களும் சொல்கிறார்கள். அத்தகைய பயிற்சி ஏதும் இல்லாத எனக்கு அந்நாவல் புரியாமல் போனதில் வியப்பேதுமில்லை. விஷ்ணுபுரத்தின் இறுதிப்பகுதியை வாசிக்கும் போது எனக்கு கபிரியல் கார்சியா மார்கெஸின் "நூறாண்டு தனிமை" நாவலுக்கும் விஷ்ணுபுரத்துக்கும் பரந்த நோக்கில் பார்க்கும் போது சில மேலோட்டமான ஒற்றுமைகள் இருப்பதுபோல் தோன்றியது.

"நூறாண்டு தனிமை" நாவலில் ஒருவித அறிவுதேடலில் ஈடுபட்டிருப்பவனாகச் சித்தரிக்கப்பட்டிருக்கும் ஜோஸ் ஆர்காடியோ பியுண்டியா என்ற மனிதன் பெயர் தெரியாத ஏதோவொரு ஊரிலிருந்து வந்து மெகாண்டோ என்ற நகரை நிறுவுகிறான். நாவல் பல தலைமுறைகளைத் தாண்டி மெகாண்டோ மற்றும் பியுண்டியாவின் வாரிசுகளின் கதையைச் சொல்கிறது. நாவலின் பின்பகுதியில் மெகாண்டோ சிதிலமடைந்துக் கைவிடப்பட்டநிலையில் இருக்கிறது. இறுதியில் இயற்கைச் சீற்றத்தால் அந்நகரம் அழிகிறது. மெகாண்டோவின் வரலாறும் அழிவும் ஒரு நூலில் ஏற்கனவே முன்னுரைக்கப் பட்டிருக்கிறது. அந்த நூலின் ஆசிரியரும் நாவலில் ஒரு கதாபாத்திரமாக வருகிறார். மேலே உள்ளதில் மெகாண்டோவுக்கு பதிலாக விஷ்ணுபுரம் என்றும், பியுண்டியாவுக்கு பதிலாக அக்னிதத்தன் என்றும் போட்டுக்கொள்ளலாம்.

பிரபஞ்ச ரகசியங்களைக் குறித்து ஆராயும் பியுண்டியாவின் ("The earth is round, like an orange") தலைமுறையில் வரும் இறுதி வாரிசு மிருக அம்சத்துடன் (பன்றி வால்) பிறக்கிறது. அதேபோல் பிரபஞ்ச உற்பத்திக் குறித்த தன்னுடைய தத்துவத்தை நிலைநாட்டும் அக்னிதத்தனின் இறுதி வாரிசான தேவதத்தன் மனித அம்சங்கள் ஏதுமின்றி ஒரு தவளை போலவே இருக்கிறான். கோவில் ஓவியங்களிலும் விஷ்ணுபுரத்தின் இறுதி மகாவைதீகன் தவளை போலவே சித்தரிக்கப்பட்டிருக்கிறான்.

அழிவை எதிர்நோக்கியிருக்கும் மெகாண்டோவில் ஒருக் கட்டத்தில் பறவைகள் கூட்டம் கூட்டமாக சுவர்களில் மோதித் தற்கொலை செய்துக் கொள்கின்றன. (இது விவிலியத்தின் பழைய ஏற்பாட்டுடன் தொடர்புடைய ஒரு குறியீடு என்று எங்கோ படித்த நினைவிருக்கிறது) ஊரில் உள்ளவர்கள் இறந்த பறவைகளைத் தூக்கி ஆற்றில் கொட்டுகிறார்கள். ஊர் பாதிரியார் அது பிரளயத்துக்கான அறிகுறி என்கிறார். விஷ்ணுபுரத்திலும் அதேபோல் பறவைகள் கூட்டம் கூட்டமாக சுவர்களில் மோதித் தற்கொலை செய்துக் கொள்கின்றன. எடுத்து ஆற்றில் போடுகிறார்கள். ("சாஸ்திரப்படி சோனாவில் கொட்டவேண்டும்"). பண்டிதர் அது பிரளயத்தின் அறிகுறி என்கிறார்.

நூறாண்டு தனிமையில் வினோதமான உருவம் கொண்ட ஒரு கன்றுக்குட்டி அழிவுடன் தொடர்புடையதாக உருவகப்படுத்தப்பட்டிருக்கிறது. விஷ்ணுபுரத்திலும் அழிவுகாலத்தில் இதேபோல ஒரு அசாதாரண உருவம் கொண்ட ஒரு கன்றுக்குட்டியின் பிறப்பு ஒரு குறியீடு போல் சொல்லப்பட்டிருப்பதை வாசித்த நினைவிருக்கிறது.

மேலே உள்ளவற்றை வெறுமனே தகவல் சுவாரசியத்துக்காகத் தான் இங்கே தந்திருக்கிறேன். மற்றபடி காவ்யா விஸ்வநாதன் அளவுக்கெல்லாம் ஏதும் இல்லை. மார்க்கெஸும் ஜெயமோகனும் தத்தம் நாவல்களில் சொல்ல வந்த விஷயங்கள் வேறுவேறானவை. உண்மையிலேயே ஜெயமோகனிடம் ஒரு மேற்கத்திய எழுத்தாளரின் பாதிப்பு இருக்கிறதென்றால் நான் அறிந்தவரையில் அது தாஸ்தாவெஸ்கி தான். கரமசோவ் சகோதரர்களை மூன்று முறைப் படித்ததாக ஜெயமோகன் ஒரு புத்தக முன்னுரையில் சொல்கிறார்.

மனித மனத்தின் செயல்பாடுகளை மிக நுட்பமாகச் சித்தரிக்கும் தாஸ்தாவெஸ்கி பாணியே ஜெயமோகன் படைப்புகளிலும் சிறப்பம்சமாக இருக்கிறது. தாஸ்தாவெஸ்கிக்கு ஒருவிதமான நரம்புச் சிக்கல் இருந்ததும் அதை அவருடைய பல படைப்புகளிலும் வெளிப்படுத்தியிருப்பதும் (எ.கா. குற்றமும் தண்டனையுமில் ராஸ்கால்னிக்கோவ், கரமசோவ் சகோதரர்களில் இவான் கரமசோவ்) நன்கு அறியப்பட்ட ஒன்று. ஜெயமோகனின் உணர்ச்சிகரமான எழுத்துமுறையைப் பற்றி "இது ஒருவகையான நரம்புச் சிக்கல்" என்று சுந்தர ராமசாமி சொன்னாரென்றும் அது உண்மை தான் என்றும் அவரே சொல்கிறார்.

தாஸ்தாவெஸ்கியின் பல கதாபாத்திரங்கள் மீது அவர்களது மனமே மிகப்பெரிய வன்முறையை நிகழ்த்துகிறது. கரமசோவ் சகோதரர்களில் வரும் டிமிட்ரி மற்றும் இவான் ஆகியோர் ஒருவிதமான குற்ற உணர்வினால் பெரும் சித்திரவதைக்கு உள்ளாகிறார்கள். விஷ்ணுபுரத்தில் வரும் பிங்கலன், சங்கர்ஷணன் போன்ற பாத்திரங்களும் இதேப்போன்ற அவஸ்தையில் உழல்வதைக் காணலாம். தாஸ்தாவெஸ்கி சிறுவயதில் தன் கொடுமைக்கார அப்பாவின் மரணத்தை ரகசியமாக விரும்பியதாகவும், பின்னால் அவருடைய அப்பா மோசமான முறையில் இறந்தபிறகு மிகுந்தக் குற்றவுணர்வு அடைந்ததாகவும் வரலாற்றாசிரியர்கள் சொல்கிறார்கள். பிராய்ட் இதைப் பற்றி ஒருக் கட்டுரை எழுதியிருக்கிறாராம். (நூலகத்தில் தேடிப் பார்த்தேன். கிட்டவில்லை.) தன் தகப்பனின் கொலைக்குப் பின் இவான் (அவரது மரணத்தை விரும்பியதற்காக) அடையும் குற்றவுணர்வை தாஸ்தாவெஸ்கி மிகத்துல்லியமாகச் சித்தரித்திருப்பது கவனிக்கத்தக்கது. ஜெயமோகனின் ஒரு பெயர் நினைவில்லாத (குழந்தையை 'அப்பா' என்றுச் சொல்ல வைக்க முயலும் தகப்பன் பற்றிய) சிறுகதையில் இதேபோல அப்பாவின் மரணத்தை ரகசியமாக விரும்பி அதனால் குற்றவுணர்வடையும் பாத்திரம் வருகிறது. விஷ்ணுபுரத்தில் சங்கர்ஷணன் தன் மகனின் மரணத்தை தான் விரும்பியதாக நினைத்துத் தன்னை வதைத்துக் கொள்கிறான்.

தாஸ்தாவெஸ்கி அறிமுகப்படுத்தும் மனித மனத்தின் வினோதங்களில் ஒன்று, மற்றவர்கள் தன்னைப் பார்த்து அருவருத்து முகம் சுழிப்பதுபோல் பேசவும் நடந்துக்கொள்ளவும் செய்து அதன் மூலம் ஒருவிதமான இன்பம் அடையும் மனிதர்களைப் பற்றி. (எ.கா. பியோடர் கரமசோவ் மற்றும் குற்றமும் தண்டனையுமில் வரும் மெர்மலடோவ்) கொஞ்சம் யோசித்தால் இதுபோன்ற மனிதர்களை நாமும் சந்தித்திருக்கிறோம் என்பது தெரியவரும். ஜெயமோகனின் ரப்பரில் வரும் குளம்கோரி பாத்திரம் இத்தகையதே. பின் தொடரும் நிழலில் ஒரு கடிதத்தில் பின்வரும் பொருளுடைய ஒரு வரி வருகிறது (நினைவிலிருந்து எழுதுகிறேன். சொற்கள் சற்று மாறியிருக்கலாம்): "மற்றவர்களை தன்னைப் பற்றி இழிவாக எண்ணவைத்து அதில் சுகம் அடைபவர்கள் இருக்கிறார்கள். தான் உண்மையிலேயே இழிவானவன் அல்ல. அது ஒரு தோற்றம் மட்டுமே என்று ரகசியமாக அறிவதிலிருந்தே அந்த சுகம் வருகிறது".

தாஸ்தாவெஸ்கியின் எழுத்தில் கடவுளும் ஆன்மீகமும் முக்கியப் பங்கு வகிக்கிறார்கள். மனிதன் கடவுள் நம்பிக்கையை இழந்தால் தனது அனைத்து நல்லியல்புகளையும் ஒழுக்கநெறிகளையும் இழந்து "அனைத்தும் அனுமதிக்கப்பட்டதே" என்ற மனநிலைக்கு வந்துவிடுவான் என்று தாஸ்தாவெஸ்கி நம்பினார். ஜெயமோகனுக்கும் அப்படி ஒரு எண்ணம் இருப்பது போல தான் தெரிகிறது. சுனாமியின் போது மத அமைப்புகளைச் சார்ந்தவர்கள் மட்டுமே மீட்பு பணியில் இறங்கினார்கள் என்று அவர் எழுதியதைச் இங்கே சுட்டலாம்.

நல்லவேளை வைரமுத்து, அப்துல் ரகுமான் போல ஜெயமோகன் தி.மு.க ஆதரவாளராக இல்லை. இருந்திருந்தால் கழக மேடைகளில் "தென்னாட்டு தாஸ்தாவெஸ்கி அண்ணன் ஜெயமோகன் அவர்களே!" என்ற விளியை நாம் கேட்கவேண்டியிருந்திருக்கும்.

(அடுத்தப் பகுதி)

நாகர்கோவில்காரர்களும் நவீன இலக்கியமும்

முதலில் ஒரு சிறு விளக்கம். தமிழ் இலக்கியத்தைப் பொறுத்தவரை நான் ஒரு தொடக்கநிலை வாசகன் மட்டுமே. இலக்கிய விவாதங்களில் பங்கேற்பதற்கான பயிற்சியோ புரிதலோ எனக்கில்லை. இருந்தாலும் நான் படிக்கும் நூல்களைப் பற்றிய என் எண்ணங்கள் இப்பதிவுகளில் இடம்பெறக்கூடும். தவறுகள் இருப்பின் இலக்கிய உஸ்தாதுகள் பொறுத்தருள்வார்களாக.

எண்பதுகளின் பிற்பாதியில் நாகர்கோவிலிலிருந்துப் புறப்பட்டுப்போய் சென்னை பள்ளியொன்றில் விடுதியில் தங்கிப் படிக்கத் தொடங்கியபோது நிறையப் புது அனுபவங்கள். அதில் ஒன்று என் பேச்சுமொழியும் உச்சரிப்பும் கேலிக்குள்ளானது. சென்னைப் பையன்கள் நான் பேசுவது தமிழே அல்ல என்றார்கள். ஒருமுறை வழியை மறித்துக்கொண்டிருந்த ஒரு சக மாணவனிடம் "கொஞ்சம் நீங்கு" என்றதும், அவன் சற்று நேரம் மலங்க மலங்க விழித்துவிட்டு "ஓ, மூவ் பண்ண சொல்றியா?" என்று 'தமிழில்' திருப்பிக் கேட்டதும் இன்றும் நினைவிருக்கிறது. சென்னைக்காரர்கள் பேசுவதைவிட குமரி மாவட்டத்தவர் தமிழை சரியாகவே பேசுகிறார்கள் என்றும் பழந்தமிழ் இலக்கியங்களில் உள்ள பல சொற்கள் எங்கள் அன்றாட பேச்சுவழக்கில் இருப்பதையும் சுட்டிக்காட்ட நான் மேற்கொண்ட முயற்சிகள் படுதோல்வியடைந்தன. தமிழ்ப் பாடத்தில் முதலாவதாக வந்தும் இந்த நிலை மாறவில்லை. ஏதோ கொஞ்சம் தமிழ் தெரிந்த ஒரு மலையாளி என்பதே பொதுவான எண்ணமாக இருந்தது.

ஒரு பத்து பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு வரை (இப்போதைய நிலைமை வேறு) தமிழ்நாட்டின் மற்ற பகுதிகளுக்குப் படிக்கவோ வேலைக்காகவோ போகும் குமரி மாவட்டத்துக்காரர்கள் 'மலையாளிகள்' என முத்திரைக் குத்தப்படுவது வெகு சகஜம். கடந்த இருபத்தைந்து ஆண்டுகளாக சென்னையில் வாழும், மலையாளத்தில் பிழையின்றி ஒரு வாக்கியம் கூடப் பேசத்தெரியாத என் உறவினர் ஒருவரை அவரது தெருவாசிகள் 'மலையாளத்தம்மா' என்று தான் அழைக்கிறார்கள். நாகர்கோவில் எஸ். கிருஷ்ணனை திருமணம் செய்ய மதுரம் முடிவெடுத்தபோது அவரது தாயார் எச்சரித்தாராம் "அவன் மலையாளத்தான். மந்திரம் போட்டிருவான் ஜாக்கிரதை!".

சில ஆண்டுகளுக்கு முன் ஒருமுறை குமுதத்தில் (அப்போதெல்லாம் தமிழில் என் வாசிப்பு பெரும்பாலும் குமுதம், விகடன் என்ற அளவிலேயே இருந்தது) கேள்வி-பதில் பகுதியை மேய்ந்துக்கொண்டிருந்தப்போது ஒரு பதில் வழக்கமான 'அரசு'த்தனங்களையும் தாண்டி அபத்தமாகப் பட்டது. குமுதத்தில் இலக்கியத்தரமான படைப்புகள் ஏன் வெளியாவதில்லை என்பது போன்ற ஒரு கேள்விக்கு அரசுவின் பதில் "உங்களுக்கு சொந்த ஊர் நாகர்கோவிலா?" என்றிருந்தது. சிறிதுகாலம் கழித்து ஒரு புத்தகத்தை வாசித்துக் கொண்டிருந்தப்போது தான் அந்த எள்ளலின் பொருள் விளங்கியது. அது சாகித்ய அகாடமி வெளியிட்டிருந்த "நவீனத் தமிழ் சிறுகதைகள்" என்றத் தொகுப்பு. கடந்த நாற்பது வருடங்களாகத் தமிழில் எழுதியவர்களில் முக்கியமான முப்பத்தைந்துப் பேரைத் தேர்ந்தெடுத்து ஆளுக்கு ஒரு சிறுகதை விகிதம் தொகுத்திருந்தார்கள். ஆசிரியர் குறிப்புப் பக்கங்களைப் புரட்டியபோது குறைந்தது ஏழுபேராவது குமரி மாவட்டத்தவர் எனபது தெரிந்தது. சுந்தர ராமசாமி, ஜெயமோகன், நாஞ்சில் நாடன், தோப்பில் மீரான் போன்ற எனக்குக் கொஞ்சம் அறிமுகமானப் பெயர்களைத் தவிர நான் அதுவரை அறிந்திராத சிலரும் அப்பட்டியலில் இருந்தார்கள். தமிழக மக்கட்தொகையில் இரண்டு விழுக்காடே உள்ள, மலையாளிகளென முத்திரையிடப்பட்ட இந்த மாவட்டத்தினர் மத்தியில் ஒப்புநோக்க இத்தனை அங்கீகரிக்கப்பட்ட தமிழ் எழுத்தாளர்கள் இருப்பது கொஞ்சம் வியப்பை ஏற்படுத்தியது.

உண்மையில் இதில் ஆச்சரியம் ஏதும் இல்லையென்று தான் சொல்ல வேண்டும். குமரி மாவட்டம் கல்வியறிவில் தமிழகத்திலேயே முதலாவதாக இருப்பது எங்கள் ஊர்காரர்கள் வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் தம்பட்டம் அடிக்கும் ஒரு விஷயம். இதன் பின்னுள்ள காரணங்களும் ஏற்கனவே நன்கு அறியப்பட்டவை தான். மிகக் கடுமையான சமூக அடக்குமுறைகளையும், அவற்றுக்கெதிரான சமூக இயக்கங்களையும் நேரடிப் போராட்டங்களையும் கண்ட மாவட்டம் என்பதால் இங்கே பொதுவாக விழிப்புணர்வு சற்று அதிகம். அடித்தட்டு மக்களிடம் வாசிக்கும் பழக்கத்தை வளர்த்ததில் பொதுவுடைமைக் கட்சிகளுக்கு நிறைய பங்கு உண்டு. முற்போக்குச் சிந்தனையுடைய சில திருவிதாங்கூர் அரசர்களையும் / அரசிகளையும் காரணமாகச் சொல்லலாம். மாவட்டமெங்கும் நிறைந்துள்ள கிறிஸ்தவக் கல்வி நிறுவனங்களுக்கும் கல்வி வளர்ச்சியில், குறிப்பாக பெண்கள் கல்வியில், முக்கிய பங்கு உண்டு.

குமரிமாவட்டத்தில் கல்வியும் இலக்கியமும் செழிக்கிறதென்றால் அதற்கு மேற்படி காரணங்களுக்கு நிகரான இன்னொன்று இங்குள்ள செழிப்பான நிலப்பரப்பு என்று எனக்குத் தோன்றுகிறது. மதுரையிலிருந்து நாகர்கோவிலை நோக்கி பேருந்தில் பயணம் செய்யும்போது முதல் நான்கு மணி நேரங்களுக்கு காணக் கிட்டும் வறண்ட வானம் பார்த்த பூமியில் ஆங்காங்கே சில ஒற்றைப் பனைகளையும் முட்செடிகளையும் தவிர்த்து வேறு தாவரங்களையோ நீர்நிலைகளையோ காண்பது அரிது. ஆனால் குமரி மாவட்ட எல்லையான ஆரல்வாய்மொழி கணவாயைத் தாண்டியவுடன் வயல்கள், வாழைமரங்கள், குளங்கள் என திடீரென நிலக்காட்சியில் ஏற்படும் மாற்றம் பிரமிப்பூட்டக்கூடியது. குறிஞ்சி, முல்லை, மருதம் நெய்தல் என்று நால்வகை நிலங்களும் குமரி மாவட்டத்தில் உண்டு. செழிப்பான நிலத்தில் தான் கலையும் நாகரிகமும் வளரும் என்று படிப்பித்த நதிக்கரை நாகரிகம் பற்றிய பள்ளிப்பாடம் நினைவுக்கு வருகிறது. தமிழ்நாட்டில் இலக்கியத்திலும், இசையிலும் ஏனையக் கலைகளிலும் சாதனைப் புரிந்தவர்களில் ஒப்புநோக்க அதிகமானவர்கள் காவிரிக்கரைக்காரர்கள் என்பது கவனிக்கக்கூடியதாக இருக்கிறது.

நாகர்கோவில் - விண்ணின்று


திரவியம் தேடுகிறோமோ இல்லையோ, திரைகடலோடிய பிறகு தான் சொந்த ஊரின் ஈர்ப்பு அதிகரிக்கிறது. சிறு வயதிலிருந்து எத்தனையோ முறை பார்த்த இடங்கள் தான் என்றாலும் கூகுள் எர்த் மூலம் ஒரு முற்றிலும் புதியக் கோணத்தில் பார்த்தபோது வியப்பாகயிருந்தது.

நேரம் வாய்த்தால் நாகர்கோவிலைக் குறித்து ஒரு பதிவிடலாமென எண்ணம்.

ஒருவழியாக...

எழுதும் ஆசை யாரைத் தான் விட்டது? (கழுதை மேய்ப்பதைப் பற்றிய பழமொழி ஏன் அசந்தர்ப்பமாக நினைவுக்கு வருகிறது?)

தமிழில் கடைசியாக இரண்டு வரிகள் எழுதி ஆண்டுகள் பல ஆகின்றன. பிழையில்லாமல் ஒரு பத்தியாவது எழுத முடியுமா? சந்திப்பிழைகள் சந்தி சிரிக்க வைத்துவிடுமா? அதெல்லாம் போகட்டும். உலகின் முதல் பத்து சோம்பேறிகள் பட்டியலில் 'படுத்துக்கொண்டே' இடம்பிடிக்கக்கூடிய என்னால் தொடர்ந்து எழுத முடியுமா?

இருந்தாலும் ஒரு நப்பாசை தான். முயற்சி செய்து தான் பார்ப்போமே!