மகாகனமும் மடியிலுள்ள கனமும்

இந்தியாவில் நடுத்தர வர்க்கம் என்று பொத்தாம்பொதுவாக குறிக்கப்படும் மக்களைப் பொறுத்தவரை நீதிபதிகள், குறிப்பாக உச்சநீதிமன்ற நீதிபதிகள், அலகிலா புனிதத்தன்மை கொண்டவர்கள். மகாகனம் பொருந்திய நீதிபதிகள் நெறி தவறுவதோ சுயநலத்துடன் செயல்படுவதோ நினைத்துப் பார்க்கக்கூட முடியாத ஒன்று. பெரும்பாலானவர்கள் நேர்மையற்றவர்களாகவும், சுயலாபத்திற்காக விதிகளையும் அறநெறிகளையும் மீறத் தயங்காதவர்களாகவும் இருக்கும் ஒரு நாட்டில் நீதிபதிகள் மட்டும் களங்கமற்றவர்களாக இருப்பார்கள் என்று நம்புவதிலுள்ள அபத்தத்தை சுட்டுவதாக சில அண்மைய நிகழ்வுகள் அமைந்திருக்கின்றன.

சில மாதங்களுக்கு முன் வரை இந்தியாவின் தலைமை நீதிபதியாக இருந்து ஓய்வுபெற்ற நீதிபதி ஒய். கே. சபர்வாலை எளிதில் மறந்துவிடமுடியாது. பாராளுமன்ற ஒப்புதல் அளிக்கப்பட்ட அரசின் இடஒதுக்கீடு கொள்கைகளுக்கு எதிரான சில முக்கியமான சர்ச்சைக்குள்ளான தீர்ப்புகள் இவரது தலைமையிலான நீதிபதிகள் குழுக்களால் வழங்கப்பட்டன. குறிப்பாக கிழே உள்ள இரண்டு வழக்குகளில் உச்சநீதிமன்றம் தன் அதிகார எல்லையைத் தாண்டி செயல்பட்டிருக்கிறது என்று பல்வேறு சட்ட வல்லுனர்களும் ஓய்வுபெற்ற நீதிபதிகளும் தெரிவித்திருக்கிறார்கள்.

1. தலித் மற்றும் பழங்குடியினருக்கு வழங்கப்படும் இடஒதுக்கீட்டிலிருந்து "க்ரீமி லேயர்" எனப்படும் "முன்னேறிய" பிரிவினரை விலக்கவேண்டும் என்னும் தீர்ப்பு. இது பற்றிய சட்ட வல்லுனர்களின் கருத்து இங்கே.

2. தமிழகத்தின் 69% இடஒதுக்கீடு சட்டம் உட்பட பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையினரின் ஒப்புதலுடன் அரசமைப்புச் சட்டத்தின் ஒன்பதாவது அட்டவணையில் இணைக்கப்பட்ட சட்டங்களை ஆராய்ந்து ரத்து செய்யும் உரிமை உச்சநீதிமன்றத்துக்கு உண்டு என்னும் முக்கியமான தீர்ப்பு. இது பற்றிய ஒரு விமரிசனப் பார்வை இங்கே.

இந்த தீர்ப்புகளை விமரிசித்து என் பழைய பதிவொன்றில் சில கருத்துக்களை எழுதியிருந்தேன். அவற்றைப் படித்த சட்ட "அறிஞர்" ஒருவர் கோபத்துடன் எதிர்வினையாற்றியது மட்டுமல்லாமல் இப்படி தீர்ப்புகளையும் நீதிபதிகளையும் விமரிசிக்கும் தமிழ் வலைப்பதிவர்களை நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் உள்ளே தள்ளுவதற்கான வழிமுறைகளைக் கேட்ட உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாட்டின் தேசபக்தர்கள் சிலருக்கு இலவச சட்ட ஆலோசனை வழங்கிய கூத்தெல்லாம் நடந்தேறியது.

கடந்த சில நாட்களாக நீதிபதி சபர்வாலின் பெயர் மீண்டும் செய்திகளில் அடிபடுகிறது. ஆனால் இம்முறை இடஒதுக்கீட்டுக்கு எதிரான "மைல்கல்" தீர்ப்பு எதையும் வழங்கியதற்காக அல்ல. மாறாக அவர் மீது சில கடுமையானக் குற்றச்சாட்டுகளை தகுந்த ஆதாரங்களுடன் வெளியிட்ட மிட்-டே நாளிதழின் நான்கு செய்தியாளர்களுக்கு நீதிமன்றத்தை அவமதித்தக் குற்றத்துக்காக நான்கு மாத சிறைத்தண்டனை வழங்கப்பட்டிருப்பதால். நீதிபதி சபர்வால் மீது எழுப்பப்பட்டிருக்கும் குற்றச்சாட்டுக்கள் கீழே. (மூத்த வழக்கறிஞர் பிரஷாந்த் பூஷன் மற்றும் அருந்ததி ராய் ஆகியோர் அவுட்லுக் தளத்தில் எழுதியிருக்கும் கட்டுரைகளின் அடிப்படையில் எழுதுகிறேன்.)

1. ஆடை ஏற்றுமதி வணிகம் செய்துவந்த நீதிபதி சபர்வாலின் இரண்டு மகன்கள் 2004-ம் ஆண்டு இறுதியில் பெரும் வணிகக் கட்டடங்கள் கட்டி விற்கும் 'ரியல் எஸ்டேட்' தொழிலில் முன்னணியில் இருந்த காபுல் சாவ்லா என்பவருடன் பங்குத்தாரராக இணைந்து அத்தொழிலில் ஈடுபட்டனர். இந்த காலகட்டத்தில் முறையான அனுமதி பெறாமல் டில்லியின் குடியிருப்புப் பகுதிகளில் இருந்து பல ஆண்டுகளாக செயல்பட்டுக்கொண்டிருந்த ஆயிரக்கணக்கானக் கடைகளையும் தொழிலகங்களையும் மூடுவது குறித்த வழக்கு ஒன்று உச்ச நீதிமன்றத்தின் முன் இருந்தது. அந்த வழக்கு தன் முன் நடத்தப்பட வேண்டும் என்று நீதிபதி சபர்வால் மார்ச் 2005-ல் உத்தரவிட்டார். அக்டோபர் 2005-ல் நீதிபதி சபர்வாலின் மகன்கள் வணிக மையங்கள் கட்டி விற்கும் தொழிலில் முன்னணியில் இருந்த மற்றொருவரான பகேரியா என்பவரை தங்கள் புது நிறுவனம் ஒன்றில் பங்குத்தாரராக இணைத்தார்கள். பிப்ரவரி 2006-ல் நீதிபதி சபர்வால் மேற்படி வழக்கில் அனுமதி பெறாத கடைகள் மற்றும் தொழிலகங்கள் இடிக்கப்பட/மூடப்பட வேண்டும் என்று உத்தரவிட்டார். பின்னர் உச்சநீதிமன்றம் இந்த ஆணையின் அமலாக்கத்தில் அசாதாரணமான அக்கறை எடுத்துக்கொண்டு பாதிக்கப்பட்டவர்களின் எதிர்ப்புக் காரணமாக தயக்கம் காட்டிய டில்லி அரசுக்கு கடும் நெருக்கடி கொடுத்து வந்தது. "சீலிங் டிரைவ்" என்று அழைக்கப்பட்ட இந்த நடவடிக்கையால் ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் கடைகளையும் வருமானத்தையும் இழந்து கடும் பாதிப்புக்குள்ளானார்கள். இவர்களில் ஓரளவு வசதி உடையவர்கள் தங்கள் கடைகளை புதிதாகக் கட்டப்பட்ட வணிகமையங்களுக்கு மாற்ற விரைந்ததால் அத்தகைய மையங்களில் இடத்தின் விலை பலமடங்கு அதிகமானது. இதன் காரணமாக நீதிபதி சபர்வாலின் மகன்களின் பொருளாதார நிலையும் பலமடங்கு உயர்ந்தது. 2004-ல் வெறும் ஒரு லட்சம் ருபாய் என்று மதிப்பிடப்பட்ட அவர்களது நிறுவனத்தின் பங்கு மூலதனம் 2006-ல் முன்னூறு மடங்கு அதிகரித்தது. தற்போது அந்த நிறுவனம் நொய்டாவில் 56 கோடி ருபாய் மதிப்பில் ஒரு தகவல் தொழில்நுட்ப வணிக மையத்தை (IT Mall) கட்டி வருகிறது.

2. தான் வழங்கும் தீர்ப்பின் காரணமாகத் தன் மகன்கள் ஆதாயமடைய வாய்ப்பிருக்கிறது என்ற நிலையில் இந்த வழக்கு தனக்கு அளிக்கப்பட்டிருந்தாலும் கூட நீதிபதி சபர்வால் தன்னை அதிலிருந்து விடுவித்துக் கொண்டிருப்பதே முறை. ஆனால் அவரோ தானாகவே இந்த வழக்கைக் கேட்டுப் பெற்றுக் கொண்டிருக்கிறார். (அப்போது தலைமை நீதிபதி ஆகியிராத அவருக்கு அப்படி தானாக வழக்கைத் தேர்ந்தெடுக்கும் அதிகாரம் இருக்கவில்லை என்பது கூடுதல் செய்தி.)

3. குடியிருப்புப் பகுதிகளிலிருந்து செயல்பட்டதற்காக ஏராளமானவர்களின் கடைகளை மூட உத்தரவிட்டு அவர்களது வாழ்வாதாரங்களை இழக்க வைத்த நீதிபதி சபர்வாலின் மகன்களது நிறுவனங்கள் அவரது அதிகாரப்பூர்வ இல்லத்தை பதிவுசெய்யப்பட்ட அலுவலகமாகக் கொண்டு செயல்பட்டு வந்தன.

4. நீதிபதி சபர்வாலின் மகன்களின் நிறுவனத்திற்கு இந்திய யூனியன் வங்கி எவ்வித உண்மையான பாதுகாப்பு உத்தரவாதங்களும் இல்லாமல் 28 கோடி ருபாய் கடன் வழங்கியது.

5. எவ்வித முன் அனுபவமும் இல்லாத, ஒரு ருபாய்க்கு கூட வணிகம் செய்திராத (Nil turnover) இந்த நிறுவனத்துக்கு உத்தரபிரதேசத்தின் சமாஜ்வாதி அரசாங்கம் நொய்டாவில் மொத்தம் 24000 சதுர மீட்டர் அளவுள்ள மிகப் பெரிய மனைகளை மிகக் குறைந்த விலையில் ஒதுக்கியிருக்கிறது. இந்த காலக்கட்டத்தில் நீதிபதி சபர்வால் சமாஜ்வாதி தலைவர் அமர் சிங்குக்கும் இந்தி நடிகைகள் உள்ளிட்ட பலருக்கும் இடையே நடந்த உரையாடல்களின் ஒலிநாடாக்களை ஊடகங்கள் வெளியிட தடை விதித்து அந்த வழக்கை விசாரித்து வந்தார்.

6. இந்த ஆண்டு மார்ச் மாதம் நீதிபதி சபர்வாலின் மகன்கள் டில்லியில் 15.46 கோடி ருபாய்க்கு ஒரு பெரிய வீட்டை வாங்கியிருக்கிறார்கள். இந்த பணம் எங்கிருந்து வந்தது என்பது விளக்கப்படவில்லை. மேலும் இந்த விற்பனை பத்திரத்தில் தாங்கள் நீதிபதி சபர்வாலின் மகன்கள் என்பதை மறைக்கும் விதமாக அவரது முழுப்பெயரைக் குறிப்பிடாமல் வெறுமனே யோகேஷ் குமார் என்று எழுதியிருக்கிறார்கள்.

இந்த குற்றச்சாட்டுகளுக்கு உச்சநீதிமன்றத்தின் பக்தர்கள் எப்படி எதிர்வினையாற்றுவார்கள் என்று தெரியவில்லை. நீதிபதியின் செயல்பாடுகள் பற்றிய விவாதத்தில் தேவையில்லாமல் அவரது மகன்களை இழுக்கும் நெறிப்பிறழ்வைக் யாராவது சுட்டிக்காட்டக் கூடும். வேறு சிலர் ஒரு தனிமனிதரின் தவறுக்காக ஒரு அமைப்பையே குறை சொல்வது தகுமோ முறையோ தர்மம்தானோ என்றெல்லாம் கேட்கலாம். ஆனால் ஒரு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியின் மீது கடுமையான முறைகேடுகளில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டப்படுவது இது முதன்முறையல்ல. சில ஆண்டுகளுக்கு முன்னால் இந்தியாவின் தலைமை நீதிபதியாக இருந்த நீதிபதி ஆனந்த் மீது பல்வேறு குற்றச்சாட்டுக்கள் கூறப்பட்டும் இன்றுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மாறாக அந்த குற்றச்சாட்டுக்களை முன்வைத்தவர்களுக்கு நீதிமன்ற அவமதிப்புக்காக தண்டனை வழங்கப்பட்டது.

இந்தியாவில் நீதிபதிகள் மீது குற்றம் சுமத்துபவர்களுக்கு என்ன கதி நேரும் என்பது மிட்-டே செய்தியாளர்களுக்குத் தெரியாமல் இருக்காது. இருந்தும் அவர்கள் இந்த முறைகேடுகளை துணிந்து வெளிப்படுத்தியிருக்கிறார்கள் என்றால் அதற்குக் காரணம் நீதிபதி சபர்வால் மீது வைக்கப்பட்டிருக்கும் குற்றச்சாட்டுகளில் உள்ள ஒவ்வொரு வரிக்கும், ஒவ்வொரு தகவலுக்கும் அசைக்கமுடியாத, அதிகாரப்பூர்வமான ஆதாரங்கள் இருப்பது தான். ஆதாரங்களுடன் உண்மையை சொல்லும் ஒருவருக்கு நீதிமன்ற அவமதிப்புக்காக தண்டனை அளிக்க முடியாது என்பதையே தங்களது தற்காப்பு வாதமாக மிட்-டே செய்தியாளர்கள் வைத்திருக்கிறார்கள். நீதிபதி சபர்வால் மீதான இந்த குற்றச்சாட்டுக்கள் விசாரிக்கப்படவேண்டும் என்று முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதிகள் உள்ளிட்ட முக்கிய குடிமக்கள் பலரும் தெரிவித்திருக்கிறார்கள்.

****

என்னைப் பொறுத்தவரை தன் குடும்பம் பொருளாதார ரீதியாக ஆதாயம் பெறும்வகையில் நீதிபதி சபர்வால் வழங்கியதாக சொல்லப்படும் தீர்ப்புக்கள் மட்டுமல்லாது இடஒதுக்கீட்டுக்கு எதிராக அவர் வழங்கிய தீர்ப்புக்களும் மறு ஆய்வு செய்யப்படவேண்டியவையே. அண்மைக்காலமாக இடஒதுக்கீட்டுடன் தொடர்புடைய பல்வேறு வழக்குகளின் போது சில நீதிபதிகள் தெரிவித்தக் கருத்துக்களிலிருந்து அவர்கள் சித்தாந்த அடிப்படையில் இடஒதுக்கீட்டின் தீவிர எதிர்ப்பாளர்களே என்பது மிகத் தெளிவாகத் தெரிகின்றது. இதில் வியப்படைய ஏதுமில்லை. வட இந்திய 'உயர்'குடியினருக்கு இட ஒதுக்கீட்டின் மீதும் அதனால் பயன்பெறுவோர் மீதும் எந்த அளவுக்கு இழிவான எண்ணமும் காழ்ப்பும் இருக்கிறது என்று அறியவேண்டுமானால் ரீடிஃப்.காம் போன்ற தளங்களில் இட ஒதுக்கீடு பற்றிய விவாதங்களில் வட இந்திய 'துவிஜன்' பையன்கள் எழுதும் வசைகளைக் கொஞ்சம் படித்துப்பாருங்கள்.

சமூக நீதி குறித்த புரிதலில் வடமாநிலங்களுக்கும் தென்னிந்தியாவுக்கும் இடையே மிகப் பெரிய வேறுபாடு இருப்பது வெளிப்படை. பல வரலாற்றுக் காரணங்களால் தென்னிந்தியர்களில் பெரும்பாலானவர்கள் இடஒதுக்கீட்டின் நன்மைகளை உணர்ந்திருக்கிறார்கள். தான், தன் சுற்றம் என்ற வட்டத்தைத் தாண்டி சிந்திக்க இயலாத சிலரைத் தவிர்த்துவிட்டு நோக்கினால் இடஒதுக்கீட்டினால் பாதிப்படையக்கூடிய சமூகங்களைச் சேர்ந்தவர்கள் கூட தீவிர இடஒதுக்கீடு ஆதரவாளர்களாக இருக்கிறார்கள் என்பதற்கு தமிழ் இணையத்திலிருந்தே பல எடுத்துக்காட்டுக்களை சொல்லமுடியும். உச்சநீதிமன்ற நீதிபதிகளிடையேயும் இந்த வேறுபாட்டைக் காண முடிகிறது. மண்டல் கமிஷன் வழக்கில் இடஒதுக்கீட்டின் தேவையை வலியுறுத்தும் உறுதியானக் கருத்துக்களுடன் தீர்ப்பெழுதிய நீதிபதி ரத்னவேல் பாண்டியன் உட்பட தென்னிந்திய நீதிபதிகள் எண்ணிக்கையில் குறைவானவர்களாக இருப்பினும் சமூக நீதிக்கு ஆதரவான நிலைபாடுகளையே எடுத்து வந்திருக்கிறார்கள். கடந்த சில ஆண்டுகளில் முதன்முறையாக உச்சநீதிமன்றம் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவாக சில கருத்துக்களைத் தெரிவித்த இந்த செய்தியைப் பார்த்தால் ஐந்து நீதிபதிகள் அடங்கிய குழுவில் இருந்த இரண்டு தென்னக நீதிபதிகள் மட்டுமே அக்கருத்துக்களை தெரிவித்திருக்கிறார்கள் என்பதைக் காணலாம். குறிப்பாக "Should the government wait for years and years before the exercise of identification of OBCs is completed?" என்ற நீதிபதி ரவீந்திரனின் கேள்வியுடன் "You waited for 57 years, why not 6 more months?" என்ற நீதிபதி அரிஜித் பசாயத்தின் கேள்வியை பொருத்திப்பாருங்கள்.

உச்சநீதிமன்ற நீதிபதிகளுக்கும் அரசியல்/சித்தாந்த சாய்வுகள் உண்டு எனபதையும் அந்த சாய்வுகள் அவர்கள் எடுக்கும் முடிவுகளை பாதிக்கவல்லவை என்பதையும் மூடிமறைப்பது முட்டாள்தனம். இதன் காரணமாகத் தான் அமெரிக்க உச்சநீதிமன்றத்துக்கு நியமிக்கப்படும் நீதிபதிகளின் பின்னணி, கடந்த காலங்களில் முக்கியமான பிரச்சனைகளில் எடுத்த நிலைபாடுகள், முன்னர் நீதிபதியாக பணியாற்றியபோது வழங்கியத் தீர்ப்புகள் என்று அனைத்தும் அலசி ஆராயப்பட்ட பின்பே செனட் அவர்களது நியமனத்தை உறுதிப்படுத்தவோ நிராகரிக்கவோ செய்கிறது. அமெரிக்க அதிபரின் கட்சிக்கு செனட்டில் பெரும்பான்மை இருந்தும் அவரால் நியமனம் செய்யப்பட்டவர்களின் சித்தாந்த சாய்வுகள் ஏற்றுக்கொள்ள முடியாதவையாக இருந்ததால் அந்த நியமனங்கள் தோல்வி அடைந்திருக்கின்றன.

இந்திய உச்சநீதிமன்றத்தில் நலிந்த பிரிவினருக்கு உரிய பிரதிநித்துவம் வழங்கப்படாமல் இருப்பதும் சீர்செய்யவேண்டிய ஒன்று. தற்போது உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக இருக்கும் இருபத்திரண்டு பேரில் ஒரு பெண் கூட இல்லை. ஒருவர் மட்டுமே இஸ்லாமியர். சுதந்திரத்துக்கு பின்னான முதல் ஐம்பது ஆண்டுகளில் மூன்று தலித் நீதிபதிகள் மட்டுமே உச்சநீதிமன்றத்துக்கு நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். தகுதியானவர்கள் பலர் இருந்தும் வாய்ப்புகள் தொடர்ந்து மறுக்கப்படுவது குறித்த தன் வேதனையை முன்னாள் குடியரசுத் தலைவர் நாராயணன் அழுத்தமாக வெளிப்படுத்திய பிறகே தற்போதைய தலைமை நீதிபதி பாலகிருஷ்ணன் பரிந்துரைக்கப்பட்டார். பரிந்துரைக்கப்பட்ட பிறகும் கூட அவரது தேர்வுக்கு அப்போதைய தலைமை நீதிபதி ஆனந்த உட்பட பலரால் முட்டுக்கட்டை இடப்பட்டது.

நீதித்துறையில் சமூகநீதி குறித்து ஃபிரண்ட்லைன் இதழில் வி. வெங்கடேசன் இப்படி எழுதுகிறார்: "As the judiciary becomes over-protective of its powers vis-a-vis the executive, the nature of its social base causes concern." அண்மைக்காலமாக இடஒதுக்கீடு குறித்த பல்வேறு வழக்குகளை விசாரித்த நீதிபதிகள் குழுக்களில் கிட்டத்தட்ட முழுமையாக 'உயர்'சாதி நீதிபதிகளே இருந்திருக்கிறார்கள். எடுத்துக்காட்டாக தமிழகத்தின் 69% இடஒதுக்கீடு சட்டம் உள்ளிட்ட ஒன்பதாவது அட்டவணை சட்டங்களைப் பற்றிய வழக்கை விசாரித்த ஒன்பது நீதிபதிகள் அடங்கிய குழுவில் நான் அறிந்தவரை பிற்படுத்தப்பட்டவரோ தலித்தோ எவரும் இல்லை. தன் குடும்பம் ஆதாயம் பெறுவதற்காக ஒரு தலைமை நீதிபதி ஆயிரக்கணக்கான மக்களின் வாழ்வாதாரத்தை அழித்து அவர்களை தெருவில் இறக்கினார் என்ற குற்றச்சாட்டு ஆதாரங்களுடன் முன்வைக்கப்படும் இவ்வேளையில் எனக்கு எழும் கேள்வி இதுதான். இப்படிப்பட்ட நீதிபதிகள் இடஒதுக்கீடு தொடர்பான வழக்குகளில் எப்படி தங்கள் குடும்பம் மற்றும் சுற்றத்தின் நலன்களை கருதாமல் செயல்படுவார்கள்?

*****

எனக்குத் தெரிந்தவரை ஒரு ஜனநாயக நாட்டில் சட்டங்களை உருவாக்குவது மக்கள் பிரதிநிதிகளின் மன்றமாகிய பாராளுமன்றத்தின் பணி. சட்டங்களை அமல்படுத்துவது அரசாங்கத்தின் பணி. சட்டங்களை ஆராய்ந்து, எது சட்டப்படி சரி, எது சட்டப்படி தவறு என்று தீர்மானிப்பது நீதிமன்றங்களின் பணி. ஆனால் கடந்த பல ஆண்டுகளாக இந்திய உச்சநீதிமன்றம் பாராளுமன்றம், அரசாங்கம் ஆகியவற்றின் பணிகளையும், அதிகாரங்களையும் தனதாக்கிக் கொள்வதையே தன் முழுநேரப் பணியாகக் கொண்டுள்ளது.

புதிய சட்டங்களை இயற்றவோ, சட்டங்களில் திருத்தம் செய்யவோ அறவே அதிகாரம் இல்லாத உச்சநீதிமன்றம் அந்த வேலைகளை மறைமுகமாக செய்து வருகிறது. எடுத்துக்காட்டாக உச்சநீதிமன்றம் தானாகவே உருவாக்கி அரசாங்கத்தின் மீது திணிக்கும் "க்ரீமி லேயர்", "50% உச்சவரம்பு" ஆகியவற்றுக்கு அரசமைப்பு சட்டத்தில் எவ்வித அடிப்படையும் இல்லை என்று பல சட்ட வல்லுனர்கள் தெரிவித்திருக்கிறார்கள். இப்படி அரசமைப்புச் சட்டத்தில் இல்லாதவற்றை உருவாக்கும் அதே வேளையில் அரசமைப்புச் சட்டத்தில் ஏற்கனவே இருக்கும் ஒன்பதாவது அட்டவணைச் சட்டங்களை ரத்து செய்யும் அதிகாரம் உச்சநீதிமன்றத்துக்கு உண்டு என்னும் "மைல்கல்" தீர்ப்பை நீதிபதி சபர்வால் வழங்கிச்சென்றிருக்கிறார். பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்ட சட்டங்களை யாருக்கும் பதில் சொல்லக் கடமைப்படாத, யாராலும் விமரிசிக்க முடியாத (மீறி விமரிசித்த அருந்ததி ராய் போன்றவர்களை சிறையில் அடைக்கத் தயங்காத) ஒன்பது நீதிபதிகள் ஆய்வு செய்து தங்களுக்கு ஒவ்வாததை நிராகரிக்கலாம் என்றால் பின் உலகின் மிகப்பெரிய ஜனநாயகம் என்று பீற்றுவதில் என்ன அர்த்தம் இருக்கமுடியும்? இந்த இடத்தில் சில மேதாவிகள் நாளைக்கு பாராளுமன்றம் அத்தனை பேரும் மொட்டைபோடவேண்டும் என்று சட்டம் இயற்றிவிட்டால் என்ன செய்வது என்றெல்லாம் கிலியூட்டுவார்கள். கவலை வேண்டாம். ஜனநாயக நாட்டில் அராஜகச் சட்டங்களைத் திரும்பப்பெற வைப்பது எப்படி என்று மக்களுக்குத் தெரியும். ஜெயலலிதாவின் கிடாவெட்டுச் சட்டத்தையும் மதமாற்றத் தடை சட்டத்தையும் தூக்கியெறிய தமிழக மக்களுக்கு ஒரு தேர்தல் தான் தேவைப்பட்டது.

இந்த அத்துமீறலை உச்சநீதிமன்றம் நியாயப்படுத்தியிருக்கும் விதம் சுவாரசியமானது. அதாவது ஒன்பதாவது அட்டவணையில் உள்ள சட்டங்கள் ஏதாவது அடிப்படை உரிமையை மீறியிருந்தால் அவை ரத்து செய்யப்படுமாம். பெரும்பாலான சட்டங்களும் அரசின் முற்போக்கு நடவடிக்கைகளும் சிலருடைய அடிப்படை உரிமையை மீறுவதாக காட்டமுடியும். எடுத்துக்காட்டாக இடஒதுக்கீடு 'உயர்'சாதியினரின் சமத்துவமாக பாகுபாடின்றி நடத்தப்படுவதற்கான அடிப்படை உரிமையை (fundamental right to equality and non-discrimination) மீறுவதாகச் சொல்லலாம். இவற்றில் எந்த வகையான உரிமைகளைக் காப்பாற்றுவது, எவற்றை கண்டுக்கொள்ளாமல் விடுவது என்று முடிவு செய்யும் உரிமை உச்சநீதிமன்றத்திடம் இருக்கிறது. நர்மதா அணைக்காக குருவிக்கூட்டை பிய்த்து எறிவது போல் லட்சக்கணக்கான பழங்குடி மக்களின் வாழ்விடங்களை சிதைப்பதை தடுக்க கோரும் மனுவை நிராகரிக்கும் உச்சநீதிமன்றம் தான் வேறு சிலரின் மத நம்பிக்கைகளைக் காப்பாற்ற கால்வாய் திட்டத்திற்கு தடை விதிக்கிறது. இரண்டு குழந்தைகளுக்கு மேல் உள்ளவர்கள் (பெரும்பாலும் அடித்தட்டு கிராம மக்கள்) உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் உரிமையை சில மாநிலங்கள் சட்டம் இயற்றிப் பறித்தபோது "தேசநலன்" கருதி உருவாக்கப்பட்ட அந்த சட்டம் எந்த அடிப்படை உரிமையையும் மீறவில்லை என்று தீர்ப்பளிக்கும் அதே நீதிமன்றம் தான் உயர்கல்வி நிறுவனங்களில் நீக்கமற நிறைந்திருப்பதற்கான உயர்சாதியினரின் "உரிமை"யைக் காப்பாற்றுகிறது.

இந்திய உச்சநீதிமன்றம் படித்த நகர்புற நடுத்தரவர்க்கத்தினர், மேட்டுக்குடியினர், 'உயர்'சாதியினர் ஆகியோரின் நலன்களைப் பாதுகாப்பதும், மற்றவர்களின் அடிப்படை உரிமைகளை அடித்து நொறுக்குவதும் கண் இருப்பவர்கள் அனைவரும் காணக்கூடியதாக இருக்கிறது. ஒடுக்கப்பட்ட மக்கள் தங்களிடம் இருக்கும் ஒரே ஆயுதமான ஓட்டுச்சீட்டைப் பயன்படுத்தி தங்களுக்கு சாதகமான அரசுகளை ஏற்படுத்த முயல்வதை "வாக்கு வங்கி அரசியல்" என்றுத் தூற்றுகிறார்கள் காலங்காலமாக தங்கள் நலனையே தேசநலனாக முன்னிறுத்திப் பழகிவிட்டக் கனவான்கள். அப்படிப்பட்ட அரசுகளின் அதிகாரத்தை உச்சநீதிமன்றம் பறித்துக்கொள்வதை ஆதரித்து ஊக்குவிப்பதும் இவர்கள் தான்.

பொதுக் கொள்கை வகுப்பது அரசாங்கத்தின் வேலை என்றிருந்த நிலை மாறி இன்று பொதுக் கொள்கைகள் குறித்தும், அரசுத் திட்டங்கள் குறித்தும் இறுதி முடிவெடுக்கும் அதிகார மையமாக உச்சநீதிமன்றம் உருவாகியிருக்கிறது. சாலைகள் விரிவாக்கம், குடிசைப்பகுதிகளை அகற்றுதல், கடைகளை இழுத்து மூடுதல், சுற்றுச்சூழல் திட்டங்கள், நுழைவுத்தேர்வு நடத்துதல், பாடப்புத்தகங்களின் உள்ளடக்கத்தைத் தீர்மானித்தல் என்று எல்லாவற்றிலும் உச்சநீதிமன்றத்தின் இறுதி முடிவே அமல்படுத்தப்படுகிறது. இந்தப் போக்கின் பரிணாம வளர்ச்சியாகத் தான் நேற்று யாருக்கும் பதில் சொல்லக் கடமைப்படாத ஒரு நீதிபதி கோடிக்கணக்கான மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அரசைக் கலைத்துவிடுவேன் என்று மலைக்கவைக்கும் ஆணவத்துடன் எச்சரித்திருக்கிறார். ஒத்துழையாமை இயக்கமும், சத்தியாகிரகமும் நடத்திப் பெறப்பட்ட "சுதந்திரம்" இன்னும் இருப்பதாகச் சொல்லப்படும் ஒரு நாட்டில் அமைதியான முறையில் தங்கள் எதிர்ப்பை தெரிவிப்பவர்கள் "நெருப்போடு விளையாடாதே" என்று மிரட்டப்படுகிறார்கள். அருந்ததி ராய் தன் கட்டுரையில் எழுதியிருப்பது போல நமக்கு ஒத்துக்கொள்வதற்கு கடினமாக இருந்தாலும் நாம் தற்போது ஒருவித நீதிமன்ற சர்வாதிகாரத்தின் கீழ் வாழ்கிறோம் என்பதே உண்மை.