அழிவின் நினைவுகள்

பங்குனிக்கு ஒருமுறை, பவுர்ணமிக்கு ஒருமுறை பதிவெழுதிக் கொண்டிருந்த நான் கடந்த மே மாதம் இட்ட சிறு இடுகைக்குப் பின் இந்தப் பக்கமே வரவில்லை. இணையத்தில் தமிழ் தளங்களை வாசிப்பதையும் வெகுவாகக் குறைத்துக்கொண்டேன். அந்த மே மாத நிகழ்வுகள் ஏற்படுத்திய பாதிப்பும் கசப்பான உணர்வுகளை மீண்டும் மீண்டும் வரவழைத்து தன்னைத்தானே வதைத்துக்கொள்ள விரும்பாததும் அதற்கான காரணங்களில் சில. இந்நிலையில் கடந்த வாரம் திரையரங்கு ஒன்றில் புலிப்படை தோற்று, அவமானப்படுத்தப்பட்டு அதன் தலைவன் கடற்கரையில் மடியும் அந்தக் காட்சியைக் கண்டபோது மீண்டும் அதே உணர்வுகள் எழுந்ததைத் தவிர்க்கமுடியவில்லை.

சென்றவாரம் முத்துக்குமாரின் நினைவு நாளை ஒட்டி தமிழகத்தின் பல பகுதிகளிலும் நடந்த நிகழ்வுகள் எதிர்பார்த்ததுபோலவே ஊடகங்களில் இருட்டடிக்கப்பட்டிருக்கின்றன. சென்ற ஆண்டு முத்துக்குமாரின் தியாகத்துக்குப் பின் தமிழகத்தில் உருவான எழுச்சி பரவாமல் தடுத்ததில் ஊடகங்களின் இருட்டடிப்புக்கு முக்கியமான பங்கு உண்டு. ஒரு ஜனநாயக நாட்டில் அரசின் செயல்பாடுகளுக்கு வேறு எந்த வகையில் எதிர்ப்பைக் காட்டியும் பயனில்லை என்ற நிலையில் ஒரு இளைஞன் தன்னைத்தானே கொளுத்திக்கொள்கிறான் என்றால் அது எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கவேண்டும்? வியட்நாமில் ஒரு பௌத்த துறவி இதை செய்தபோது அது உலகின் மனசாட்சியையே உலுக்கியது. ஆனால் நம் ஊடகங்கள் நடிகர் நடிகைகளின் மணமுறிவு பற்றிய செய்திகளுக்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தைக் கூட முத்துக்குமாரின் இறப்புக்கோ அதன் பிந்தைய நிகழ்வுகளுக்கோ அளிக்கவில்லை.

ஈழப்போரின் போது பல நேரங்களில் தமிழக ஊடகங்கள் தமிழகத்தில் ஈழத்தமிழர்களுக்கான ஆதரவை நீர்த்துப்போக செய்யவேண்டும் என்ற அதிகாரவர்க்கத்தின் நோக்கத்திற்கு சுயமாகவோ கட்டாயத்தின் பேரிலோ துணைபோயிருப்பதை நாம் காணமுடியும். எடுத்துக்காட்டாக செஞ்சோலை போன்ற இடங்களில் அப்பாவி மக்களின் மீது இலங்கை இராணுவம் நடத்திய கொடூரத் தாக்குதல்களுக்குப் பிறகு பெரும்பாலான தமிழக மக்கள் தமிழீழத்துக்கும் புலிகளுக்கும் ஆதரவான நிலைக்கு மாறினார்கள். (இதை பின்பு எடுக்கப்பபட்ட சில கருத்துக்கணிப்புகள் உறுதிசெய்தன.) இந்நிலையில் 2007-ஆம் ஆண்டு ஐந்து தமிழக மீனவர்களை நடுக்கடலில் சுட்டுக்கொன்றதும், பன்னிரண்டு மீனவர்களை கடத்திசென்றதும் புலிகள் தான் என்று இந்திய/தமிழக அரசு அதிகாரிகள் அறிவித்தனர். இதைக்குறித்து அதிகாரப்பூர்வமாக சொல்லப்பட்ட சிறுபிள்ளைத்தனமான கதையில் எத்தனையோ ஓட்டைகள் இருந்தும் யாரும் அதைக் கேள்வி கேட்கவில்லை. திரும்பி வந்த மீனவர்களுக்கு செய்தியாளர்களிடம் பேசக்கூடாது என்று கடுமையான வாய்ப்பூட்டு போடப்பட்டிருந்த நிலையில் அந்த மீனவர்கள் குழுவில் இருந்த சிறுவன் தங்களைக் கடத்தியது 'நேவி' தான் என்று தெளிவாகச் சொன்னதையும், மற்ற மீனவர்கள் சிறுவனைப் பேசவிடாமல் தடுத்ததையும் மக்கள் தொலைக்காட்சி மட்டுமே ஒளிபரப்பியது. இதுகுறித்து மூச்சுவிடும் துணிவுகூட மற்ற தமிழ் ஊடகங்களுக்கு இருக்கவில்லை. அதன் பிறகு அந்த மீனவர்களை சந்தித்து நடந்த உண்மைகளை அறிந்துக்கொள்ளும் முயற்சியில் யாரும் இறங்கியதாக தெரியவில்லை. இதுதான் நம் ஊடக சுதந்திரத்தின் அறிவிக்கப்படாத எல்லை. இறையாண்மை பூச்சாண்டி காட்டப்பட்டால் அதை மீறும் துணிவு மிகப்பெரும்பாலானவர்களுக்கு இல்லை என்பதே உண்மை.

இந்தியாவின் வெளிவிவகாரத்துறை மற்றும் பாதுகாப்புத் துறையில் தலைமைப் பதவிகளையெல்லாம் ஒரு சிறு இனக்குழுவைச் சேர்ந்த அதிகாரிகள் மொத்தமாகக் குத்தகைக்கு எடுத்திருப்பது குறித்தோ ஈழத்தமிழர் மீதான இனப்படுகொலையில் இவர்களது பங்கு குறித்து எழுப்பப்பட்டுள்ளக் குற்றச்சாட்டுகள் குறித்தோ ஊடகங்களில் ஒரு சிறு விவாதம் கூட சாத்தியமில்லை. மலையாளி என்று பலருக்கும் தெரியாத ஜே.என்.தீக்சித்துக்கு பின் எம்.கே.நாராயணன் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக வருகிறார். நாராயணனுக்குப் பிறகு அந்த இடத்துக்கு இப்போது சிவசங்கர் மேனன் வந்திருக்கிறார். வெளியுறவுச் செயலர் பதவியிலிருந்து சிவசங்கர் மேனன் விலகினால் அந்தப் பதவி நிருபமா மேனன் ராவ் என்ற மற்றொரு மலையாளிக்கே செல்கிறது. இவர்களில் நாராயணன் தவிர மற்ற மூவரும் இலங்கைக்கான இந்திய தூதராக இருந்தவர்கள் என்பதும் அப்படி இருந்தபோது வெளிப்படையான தமிழர்-எதிர்ப்பு நிலைப்பாட்டைக் கொண்டிருந்தவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. மலையாளிகளின் குழு உணர்வைக் குறித்து முன்பு நண்பர்கள் சிலர் பேசியபோது அத்தகைய பொதுமைப்படுத்தலுக்கு எதிராக நான் விவாதித்திருக்கிறேன். ஆனால் பல துறைகளிலும் இந்தப் போக்கையே காணமுடிகிறது. ஒரு அண்மைய எடுத்துக்காட்டைச் சொல்வதென்றால் மாதவன் நாயருக்குப் பிறகு இந்திய விண்வெளி ஆய்வுக்கழகத்தின் தலைவராக ராதாகிருஷ்ணன் வந்திருப்பதைச் சொல்லலாம். 'திறமைவாதிகள்' இதையெல்லாம் சற்றும் கண்டுக்கொள்ளாமல் இருப்பது ஆச்சரியம் தான்.

சென்ற ஆண்டு ஈழத்தில் குழந்தைகள் பெண்கள் உட்பட ஆயிரக்கணக்கானத் தமிழர்கள் கொன்றொழிக்கப்பட்ட நேரத்தில் தமிழரல்லாத இந்தியர்கள் வெளிப்படுத்திய அசாதாரணமான அக்கறையின்மையை இன்னும் ஐம்பது ஆண்டுகள் ஆனாலும் கூட மறக்கவோ மன்னிக்கவோ முடியாது. எவ்வித அரசியல் உணர்வோ பொது அக்கறையோ இல்லாதவர்கள் என்று நான் நினைத்திருந்த பல தமிழர்கள் கூட ஈழத்து நிகழ்வுகளால் கடும் மனச்சோர்வுக்கு உள்ளானதை அறிவேன். குழந்தைகள் கூட்டம் கூட்டமாக செத்துக் கிடக்கும் காட்சிகளைப் பார்த்த சிலருக்கு இரவில் உறங்குவது சாத்தியமில்லாமல் ஆனது. தமிழ்நாட்டில் பத்துக்கு மேற்பட்டவர்கள் தற்கொலை செய்துக்கொண்டார்கள். ஆனால் மற்ற இந்தியர்களிடம் இதுகுறித்து ஒரு சிறு சலனம் கூட எழவில்லை. இத்தகைய பேரழிவு நிகழ்ந்துக்கொண்டிருக்கும் போது இந்திய கிரிக்கெட் அணி இலங்கைக்கு சென்று விளையாடுவது குறித்த நெருடல் கூட எவருக்கும் இருக்கவில்லை. அருந்ததி ராய் கூட மிகவும் காலங்கடந்து ஒரு கட்டுரை எழுதிவிட்டு பின்பு வந்தவேகத்தில் பின்வாங்கினார். சென்னையிலுள்ள அவரது நண்பர்கள் சிலர் அவரைத் தடுத்தாட்கொண்டிருக்கக்கூடும். குஜராத்தில் முஸ்லீம்கள் கொல்லப்பட்டபோது, முஸ்லீம்கள் மட்டும் தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்திக்கொண்டிருக்க மற்றவர்கள் யாருமே கண்டுக்கொள்ளாமல் இருந்திருந்தால் எப்படி இருந்திருக்கும்? தமிழர்கள் ஆயிரக்கணக்கில் கொல்லப்பட்டுக்கொண்டிருந்தபோது மற்ற இந்தியர்கள் அதைத்தானே செய்தார்கள்?

பெரும்பாலான தமிழரல்லாத இந்தியர்களைப் பொறுத்தவரை இலங்கையில் உள்ள ஒரே பிரச்சனை தமிழ் பயங்கரவாதம் மட்டுமே. அங்கு வேறு எந்த பிரச்சனையும் இல்லை. அவர்களுக்குத் தொடர்ந்து சொல்லப்படுவது அதுதான். அது தவிர தமிழர்கள் மொழிவெறி பிடித்தவர்கள் என்ற சித்திரம் கடந்த ஒரு தலைமுறையாக அங்கே வலுவாகிவருகிறது என்பதை வடக்கே பல ஆண்டுகள் வாழ்ந்தவன் என்ற முறையில் என்னால் சொல்லமுடியும். பல வட இந்தியர்கள் இந்தி பேசத்தெரியாதத் தமிழர்களையும் வடகிழக்கை சேர்ந்தவர்களையும் சக இந்தியர்களாக ஏற்றுக்கொள்வதில்லை. அங்குள்ள ஊடகங்களுக்கு தமிழர்கள் குறித்து இருக்கும் இழிவான பார்வையும் தமிழர்கள் பற்றிய செய்திகளுக்கு அவர்கள் அளிக்கும் முக்கியத்துவமும் இந்திய ஆங்கிலத் தொலைக்காட்சிகளைத் தொடர்ந்து பார்ப்பவர்களுக்குத் தெரிந்திருக்கும். ஆஸ்திரேலியாவில் படிக்கப்போன பஞ்சாபி பையன்கள் தடுக்கி விழுந்தால் கூட இனவெறித் தாக்குதல் என்று மணிக்கணக்காக ஓலமிடும் இந்த தொலைக்காட்சிகள் இலங்கை கடற்படையால் சுட்டுக்கொல்லப்பட்ட நூற்றுக்கணக்கான தமிழக மீனவர்களுக்காக மொத்தம் எத்தனை நிமிடங்களை ஒதுக்கியிருக்கிறார்கள்? ஈழம் குறித்த செய்திகள் அபூர்வமாக இடம்பெறும் போது தமிழர்களுக்கு ஆதரவான குரல்களுக்கு மிகப்பெரும்பாலும் வாய்ப்பளிக்கப்படுவது இல்லை. சொல்லப்போனால் சோ ராமசாமியிடமோ இந்து ராமிடமோ சுப்பிரமணியம் சுவாமியிடமோ கருத்துக் கேட்கப்படாத ஈழப்பிரச்சனை குறித்த ஒரு செய்தித்தொகுப்பை நான் இந்திய ஆங்கிலத் தொலைக்காட்சிகளில் இதுவரைக் கண்டதே இல்லை.

நான் என்னை ஒரு தமிழ் தேசியவாதியாக எண்ணியதில்லை. இருந்தாலும் இன்று இலங்கையின் போர்க்குற்றங்கள் குறித்த வலுவான ஆதாரங்கள் மேலைநாடுகளிடம் இருந்தும் அவர்கள் ஒரு சிறு நடவடிக்கையைக் கூட எடுக்காமல் இருப்பதற்கு இலங்கைக்கு இந்தியா அரசதந்திர ரீதியாக வழங்கும் பாதுகாப்பே காரணம் என்று வரும் செய்திகளைப் படிக்கும்போது எழும் வெறுப்பைக் கட்டுப்படுத்த முடியவில்லை. கடந்த ஆண்டின் நிகழ்வுகள் நான் அறிந்த பல தமிழர்களைப் போலவே எனக்கும் தமிழனா இந்தியனா என்ற அடையாளச் சிக்கலை எல்லாம் என்றென்றைக்குமாக தீர்த்துவைத்திருக்கின்றன.