ராமசேஷனின் கதை
[எதிர்பாராமல் ஏற்பட்டுவிட்ட சில வேலை அழுத்தங்கள் காரணமாக நேற்று எழுதுவதாகச் சொல்லியிருந்த திரை/ஊடக அரசியல் குறித்தக் கட்டுரையின் தொடர்ச்சியை எழுத முடியவில்லை. அதற்குப் பதிலாக முன்பே எழுதிவைத்திருந்த இந்த கட்டுரையை இடுகிறேன்.]
இணையத்தில் தமிழ்ப் பக்கங்களை மேய்வதால் விளையும் விரல் விட்டு எண்ணக்கூடிய நற்பயன்களில் ஒன்று தமிழில் உள்ள நல்ல நாவல்களின் பெயர்களை எல்லாம் ஓரளவுக்குத் தெரிந்து வைத்திருப்பது. நூலகத்தில் தமிழ் வரிசையில் இலக்கின்றித் தேடிக்கொண்டிருக்கும் போது கண்ணில் படும் ஒரு புத்தகம் ஏதாவது வலைப்பதிவிலோ இணைய இதழிலோ சிலாகிக்கப்பட்டது நினைவுக்கு வந்தால் ஒரு ஐந்து நிமிடம் புரட்டிப் பார்த்துவிட்டுப் பெரும்பாலும் வீட்டிற்கு எடுத்துவருவேன். அண்மையில் இப்படி எடுத்துவந்தது ஆதவனுடைய "என் பெயர் ராமசேஷன்".
இந்த நாவலைப் பற்றிய ஒரு விவரிப்பை இங்கே பதிவு செய்யலாம் என்று தோன்றியது. நான் எடுத்துவந்த பிரதியில் கடைசிப் பத்துப் பக்கங்கள் இல்லை என்பது தாமதமாகத் தான் தெரிந்தது. ஏற்கனவே படித்துவிட்டவர்கள் நாவலின் முடிவைக் குறித்து ஒரு பின்னூட்டம் எழுதினால் நூலகத்திற்கு போய் இன்னொரு பிரதி இருக்கிறதா என்றுத் தேடும் வேலை எனக்கு மிச்சமாகும்.
இது "ஒரு நகர்ப்புற மத்தியதர இளைஞனின் கண்களின் வழியே நவீன வாழ்நிலையின் பாசாங்குகளும் முகமூடிகளும் வேட்கைகளும் சித்தரிக்கப்படும்" நாவல் என்று பின்னட்டைச் சொல்கிறது. எழுபதுகளில் எழுதப்பட்ட இந்த நாவலில் அண்மைக்கால நாவல்களைப் போலப் பின்நவீனத்துவ வாசனை ஏதும் இல்லை. பல்வேறு நிலைகளையும், குணாதிசயங்களையும் பிரதிநிதிக்கும், ஒன்றோடொன்று முரண்படும் பாத்திரங்களை உருவாக்கி அவற்றைக் கதைவெளியில் உலவவிட்டு அதன்மூலம் எழுத்தாளன் தான் சொல்ல விரும்புவதை எல்லாம் "விளக்கும்" வழமையான யுத்தியே இங்குக் கையாளப்பட்டிருக்கிறது. நாவல் முழுக்க எதிர் எதிர் நிலைகளில் இருக்கும் கதைமாந்தர்களிடையே உள்ள முரண்கள் உளவியல் ரீதியாக அலசப்படுகிறது. குறிப்பாக,
நடுத்தட்டு (ராமசேஷன் குடும்பம்) - மேல்தட்டு (ராவ் குடும்பம்)
மரபு/மதம் சார்ந்த வாழ்வுமுறை (ராமசேஷனின் அப்பா) - நவீன வாழ்வுமுறை (பெரியப்பா)
பழமைவாத/சராசரிப் பெண்கள் (ராமசேஷனின் அம்மா, புரொபசரின் மனைவி) - நவீன / அறிவு ஜீவிப் பெண்கள் (பிரேமா, பெரியம்மா)
நாவலின் தொடக்கத்தில் ராமசேஷனின் குடும்பச் சூழல் விவரிக்கப்படுகிறது. எல்லாராலும் பந்தாடப்படும் ஒரு சம்பிரதாயப் பிச்சு மற்றும் கோழை என்று அறிமுகப்படுத்தப்படும் அப்பா "இயற்கையோடியைந்த வாழ்க்கைமுறை, மதமும் அனுஷ்டானமும் சிறப்பிடம் பெறும் கல்வி முறை, பெண்களுக்கு அதிக சுதந்திரம் கொடுப்பதால் நேரும் ஆபத்துக்கள்" போன்ற சில விஷயங்களில் உறுதியானக் கருத்துக்கள் கொண்டவர். தன் வீடு மற்றும் வேலையிடத்தில் உள்ள அழுத்தங்களைத் தாங்க முடியாமல் ஒரு கட்டத்தில் நகரில் உள்ள வெவ்வேறு பூங்காக்களுக்குச் சென்று ஏதாவதொரு மரத்தடியில் படுத்துக்கொள்ளத் தொடங்குகிறார். ராமசேஷனின் அம்மா "ஏதோ ஒரு வேஷத்தை ஒவ்வொரு நாளும் அணிந்துக்கொண்டு அதை உண்மையென்று ஆவேசத்துடன் நம்புபவள்."
"அந்தந்த தினத்து அதிருப்தியின் பரிமாணத்தை ஒட்டி, அவளுடைய அன்றைய வேஷம் அமையும். ஓரளவு இது அவள் முந்தின தினம் சந்தித்த நபரையும் பொறுத்தது. முந்தின தினம் அவள் ஒரு ஐ.ஏ.எஸ் ஆபிசரின் 'ராங்கி பிடித்த' (அவளுக்குப் புலப்பட்டதுபோல) போஸ்ட் கிராஜுவேட் மனைவியைச் சந்தித்திருந்தால், அதற்கடுத்த நாள் அவள் ஒரு அ-இன்டலெக்சுவலாக, பால்காரி, வேலைக்காரியாக, படிப்பினால் களங்கப்படாத தூய பிறவியாக விளங்குவாள். முந்தின நாள் தன்னைவிட நகைகளும் புடவைகளும் அதிகமுள்ளவளும், இவற்றைப் பற்றிப் பீற்றிக்கொண்டவளுமான ஒரு மாமியைச் சந்தித்திருந்தால், அடுத்த நாள் அவள் ஒரு இன்டலெக்சுவலாக மாறி நகை, புடவை என்ற மாயைகளில் உழலும் கிணற்றுத் தவளைகளை விளாசுவாள்."
ராமசேஷன் வீட்டு மனிதர்கள் - குறிப்பாகப் பெண்கள் - நுட்பமான முறையில் மற்றவர்களைக் காயப்படுத்துவதைப் பற்றிய விவரிப்புகள் நாவலில் நிறைய உள்ளன.
"நான் இப்படிக் கூச்சலிட்டபோது அப்பாவும் அதே அறையில்தான் இருந்தார். அவர் எதுவுமே காதில் விழாதது போல பூணூலால் முதுகைச் சொறிந்துகொண்டு சுவரிலிருந்த காலண்டர் எதிரே போய் நின்று அதை உற்றுப் பார்க்கத் தொடங்கினார். 'எப்படி சத்தம் போடறான் பார்த்தேளா? காலேஜுக்குப் போகிறானோல்லியா.. என்னையும் உங்களையும் மாதிரியா?' என்று சுருதியை மாற்றிக்கொண்டு அம்மா தன் கோட்டைக்குள் (சமையல்-கம்-பூஜை அறை) நுழைந்தாள். அதாவது இன்டலெக்சுவல் ரீதியாக அவளும் அப்பாவும் ஒன்றாம்! அப்பாவுக்கு இதைவிட வேறென்ன அவமானம் வேண்டும்? காலேஜுக்குப் போயிராத அவரை இவ்வாறு நுட்பமாக அவமதித்ததன் மூலம் எனக்கு ஒரு குற்ற உணர்ச்சியை அளிப்பதிலும் அவள் வெற்றியடைந்துவிட்டாள். ஒரு பாவமுமறியாத அவர் எங்கள் போரில் காயமடைய நேர்ந்ததே என்ற குற்ற உணர்ச்சி."
இது கணவனை இழந்து தம்பி வீட்டில் இருக்கும் ராமசேஷனின் அத்தை மற்றும் அவன் அம்மா ஆகியோரிடையே நிலவும் பனிப்போர் குறித்து:
"என் அம்மா சுறுசுறுப்பாக இருக்கும் நேரங்களில் அத்தைக்குத் தளர்ச்சியாகவும், அம்மா தளர்ச்சியாக இருக்கும் நேரங்களில் அத்தைக்குச் சுறுசுறுப்பாகவும் இருக்கும். அம்மா தூக்கத்திலோ ஒரு பக்கத்து வீட்டு மாமியுடன் சம்பாஷணையிலோ ஒரு பகல் நேரத்தைக் கழிக்க முற்பட்டால், அத்தை அன்றைக்கு நிச்சயம் ரவையைச் சலித்து வறுப்பாள் அல்லது வடாம் இட்டு உலர்த்துவாள், அல்லது காலியாய்ப் போன இன்ஸ்டண்ட் காஃபி, ஹார்லிக்ஸ் குப்பிகளை மறு உபயோகத்துக்காகக் கழுவி வைக்கத் தொடங்குவாள், அல்லது நாலு நாட்களுக்கு வேண்டிய அரிசியைச் சேர்ந்தாற் போலப் பொறுக்க உட்காருவாள். அம்மா இதெல்லாம் தன் குற்ற உணர்ச்சியைத் தூண்டுவதற்காகத்தான் என்பதை உணர்ந்து நறநறவென்று பற்களைக் கடித்துக்கொள்வாள்."
இப்படி ஒரு சூழலில் வளரும் ராமசேஷனுக்கு ராவ் என்னும் பணக்கார கல்லூரி நண்பன் மூலம் ஒரு மேல்தட்டுக் குடும்பத்தின் வாழ்வுமுறையை அருகிலிருந்துப் பார்க்கும் வாய்ப்புக் கிடைக்கிறது. ராவின் தங்கை மாலாவுடன் அவனுக்கு பாலியல் ரீதியான நெருக்கம் ஏற்பட்டு விரைவிலேயே அந்த உறவு முடிவுக்கு வருகிறது.
"அவளுடைய கேள்விகள் பலவற்றில் 'என்னுடைய கீழ்மட்டத்துச் சூழலை' நாசூக்காகச் சீண்டுகிற பாவம் தொனிப்பதாக எனக்குத் தோன்றும். அதாவது என் எல்லைகள் ராகம், தாளம், பல்லவிக்குள்ளும் சட்னி சாம்பாருக்குள்ளும் அடங்கிவிடுகிறவை. அவள் தொட்டிலில் கிடந்தபோதே சாச்சாச்சாவுக்குக் காலை உதைத்தவள், ஃப்ரூட் ஜெல்லியை நக்கினவள்... நான் இதேபோல, வேறு துறைகளில் அவளைவிட அதிகமாக எனக்கிருந்த பொது அறிவைப் பயன்படுத்தி அவளை மடக்க முயன்றால், அவள் உடனே தளுக்காக சம்பாஷணைத் தொனியை மாற்றி என்னை ஒரு dry professional type ஆக உணரச் செய்வாள். அப்பாவுடன் வெளியே போய்விட்டு வந்த குழந்தை தான் கண்ட அதிசயங்களை விவரிக்கும்போது அம்மா அதனிடம் காட்டுவது போன்ற ஒர் பாசாங்கு ஆர்வத்தையும் பரபரப்பையும் காட்டி, 'என் கண்ணு!' என்று தட்டிக் கொடுப்பாள். குழந்தைத்தனமானவள், பக்குவம் பெறாதவள் என்று நான் அவளைச் சொன்னால் உடனே தாத்தா, ஹாஸ்ய உணர்ச்சியில்லாத ஜடம், என்று அவள் என்னைச் சொல்லுவாள். இதெல்லாம் எனக்குச் சலித்துப் போகத் தொடங்கியிருந்தது."
இதற்குள் கல்லூரியில் காஸனோவா என்று பெயெரெடுத்துவிட்ட ராமசேஷன் அறிவுஜீவி காதலியைத் தேடும் ஒரு நண்பனுக்கு சொல்லும் மதியுரை:
"உடலுறவு பற்றிய உன்னுடைய குற்ற உணர்ச்சியிலிருந்து தப்பித்துக்கொள்வதற்காக, அல்லது நீ புழங்கும் சூழ்நிலையில் ஆரோக்கியமான ஸெக்ஸ் அனுபவங்களுக்கான வாய்ப்புகள் இல்லாததையே ஒர் virtueவாகக் காண்கிற முயற்சியில், ஆண்-பெண் இன்டலெக்சுவல் பரிமாற்றங்களைப் பற்றிய பெரிதுப்படுத்தப்பட்ட கற்பனைகளில் நீ திளைக்கிறாய் - உன்னுடைய தரத்துக்கு எந்தப் பெண்ணும் வராதது போலவும், எனவே உன் இயலாமை மன்னிக்கப்படுவது போலவும்! இது உன்னை நீயே ஏமாற்றிக்கொள்வதே தவிர வேறில்லை...லுக், உன்னை ஒரு பெண் நேசிக்க வேண்டுமென்றால் உனக்கு எஸ்கிமோக்களைப் பற்றியும் சூரியப் பொட்டுகள் பற்றியும் தெரியுமென்று அவளிடம் நிரூபிக்க முயல்வதால் எந்தப் பிரயோஜனமுமில்லை... பேசாமல் ஒரு தனியிடத்துக்கு அவளை எப்படியாவது அழைத்திச் சென்று, எனக்கு உன்னை ரொம்பப் பிடித்திருக்கிறது, எனக்கு உன்னைத் தவிர இந்த உலகத்தில் வேறெதுவும் வேண்டியதில்லை என்று சொல்லு. நீ ரொம்ப அழகாயிருக்கிறாய், உன்னுடைய எல்லாமே அழகாயிருக்கிறது என்று அவளுடைய மாரை அமுக்கு..."
பிறகு ராமசேஷன் தன் 'சிமோன் டி புவா'வை சந்திக்கிறான். "ஆசாரமான மத்தியதரப் பிராம்மணக் குடும்பத்தில் பிறந்தவளாயிருந்தும் அச்சூழலின் சின்னத்தனம், போலித்தனம், அசட்டுத்தனம் ஆகியவற்றுக்கப்பால் மன வளர்ச்சியடைந்து விடுதலையடைந்துள்ள இன்டலெக்சுவலான" பிரேமா என்ற கல்லூரித் தோழியுடன் நெருக்கமாகிறான். விரைவிலேயே அவனுக்கு அந்த உறவும் சலிக்கத் தொடங்குகிறது.
"அவளுடைய கறுப்பு நிறமும் உயரக் குறையும் அவளுக்கு ஒர் இன்ஸெக்யூரிட்டியைக் கொடுத்தது. மரபுக்கெதிரான அவளுடைய பாய்ச்சல்களுக்கு இந்த இன்ஸெக்யூரிட்டிதான் காரணமென்பதைப் பின்னால் நான் புரிந்துக்கொண்டு அவள்மீது அனுதாபப்படக் கற்றுக்கொண்டேன். ஆனால் அந்த ஆரம்ப நாட்களில், ஏற்கனவே சொன்னதுபோல, சராசரித் தமிழ் பிராமணர்களின் மீது அவள் காட்டிய தீவிர வெறுப்பையும், பொழிந்த கனமான வசைமாரியையும் நான் புரிந்துக்கொள்ள முடியாமல் திணறினேன். பௌதிக ஆகிருதியையும் தோற்றத்தையுமே செலாவணியாகக் கொண்ட சராசரிப் பெண் வர்க்கம், சராசரி ஆண் வர்க்கம், இரண்டிடையேயும் தான் மிகக் குறைந்த மதிப்பெண்களே பெறுவோமென்பதை உணர்ந்து, தான் இவர்களால் ஒதுக்கப்படுமுன் இவர்களைத் தான் ஒதுக்கும் உபாயமாகவே (அதாவது ஒரு பழிப்புக் காட்டலாக) அவள் தன் இன்டலெக்சுவல் திறன்களை ஆவேசமாக வலியுறுத்தவும் தூக்கலான மோஸ்தர்களிலும் நிறங்களிலும் அனாசாரமான உடைகளை அணியவும் செய்தாளென்பதை அப்போது உணராத நான், அதாவது இவை அவளுடைய தன்னைப் பற்றிய பிம்பத்துக்கு (அல்லது ஈகோவுக்கு) எவ்வளவு நெருக்கமானவையென்பதை உணராத நான், இவற்றை அவளுடைய துடுக்கான சேஷ்டைகளாக நினைத்து இந்தத் துடுக்குத்தனத்தை ஆரவாரமாக ரசித்தேன், என்னுடைய நுட்பமான ரசனையின் நிரூபணமாக. என் ரசிப்பை தன்னுடைய 'முரண்படுகிற இன்டலெக்சுவல்-கம்-சமூக விமரிசகை' பிம்பத்தின் அங்கீகாரமாகவே எடுத்துக்கொண்ட அவள், இந்தப் பிம்பத்தை மேன்மேலும் வலியுறுத்தியவாறு இருந்தாள், எனக்கு அது சலிக்கத் தொடங்கும் வரை."
ஆண்- பெண் இடையே உள்ள அறிவுரீதியான பொருத்தம் அல்லது பொருத்தமின்மை பல இடங்களில் அலசப்படுகிறது. ராமசேஷனின் பெரியப்பா தோழமையற்றத் திருமணம் குறித்து அவனை எச்சரிக்கிறார்: "ஸோ ராம், beware of a marriage without companionship." அறிவார்ந்த தளங்களில் இயங்கும் - அல்லது இயங்குவதாகக் காட்டிக்கொள்ளும் - கணவன், அவற்றில் சற்றும் நாட்டமில்லாத - அவன் பார்வையில் அசட்டுத்தனமாகத் தெரியும் - மனைவி, அதன் காரணமாக திருமண வாழ்வில் ஏற்படும் கசப்பு என்று இந்த சிக்கல் எத்தனையோ எழுத்தாளர்களால் கையாளப்பட்ட ஒன்றுதான். ஒருவேளை எழுத்தாளர்களுக்கு நிஜவாழ்வில் இத்தகைய இணைகளைப் பார்க்கும் வாய்ப்பு மற்றவர்களைவிட அதிகமாகக் கிட்டுகிறது போலும். ஜெயமோகன் ஒரு கட்டுரையில் எழுதியிருந்தார்: "இலக்கிய அன்பர்களின் மனைவிகள் வீட்டுக்கு வரும் எழுத்தாளர்களை கஞ்சா விற்பவர்களைப் போல் பார்ப்பது தமிழ்நாட்டில் சகஜம்."
இந்த நாவலில் அறிவுத்தேடலில் அல்லது அதுபோன்ற பாசாங்குகளில் ஈடுபட்டிருக்கும் கல்லூரி மாணவர்களுக்கு வழிகாட்டிகளாக இருக்கும் இரண்டு பாத்திரங்களுமே (தன்னை "சார்த்தரின் வாரிசாகக்" காட்டிக்கொள்ளும் ப்ரொபசர் மற்றும் இலக்கிய விமரிசகர் ராமபத்திரன்) தோழமையற்றத் திருமணத்தின் காரணமாக அவதிப்படுபவர்களாக இருக்கிறார்கள்.
"ப்ரொபசரின் மனைவி ஒரு சராசரித் தமிழ்ப் பிராமண மனைவி - 'ஆம்படையாள்': இந்த நூற்றாண்டின் நாகரிக முன்னேற்றத்தின் மேலோட்டமான பாதிப்புகள், ஒரு பெரிய நகரத்தின் cosmopolitanism பல வருடங்களாக அவள் மேல் நெருடி நெருடி ஏற்படுத்தியுள்ள பாதிப்புகள் ஆகியவற்றினால் சற்றே புடமிடப்பட்டிருந்தாலும், இந்த coatingஐச் சுரண்டிப் பார்த்தால் தன்னுடைய பாட்டியிடமிருந்தோ அந்தப் பாட்டியின் பாட்டியிடமிருந்தோ அதிகம் வேறுபடாதவள்."
"...ஒரு தடவை மூர்த்தியுடன் ராமபத்ரன் வீட்டுக்குப் போயிருந்தபோது அவருடைய மனைவியின் 'லெவலை'ப் பற்றி பிரேமா சொன்னது நிஜந்தான் என்பதை உணர்ந்தேன். எனக்கு அவள் மீதும் ராமபத்ரன் மீதும் மிகவும் அனுதாபமாக இருந்தது. தான் தன் மனைவியின் சராசரித்தனத்தின் கூட்டாளி இல்லை, தான் அவளைவிட நாசூக்கான ருசிகளும் தேட்டங்களும் உள்ளவன் என்று சதா நிரூபித்தவண்ணமிருப்பது ராமபத்ரனுக்கு ஒரு obsessionஆக ஆகியிருக்க வேண்டும்..."
மேலே உள்ள மேற்கோள்களிலிருந்து ஆதவனின் நடையைப் பற்றிய ஒரு புரிதலைப் பெறமுடியும். நாவல் முழுவதும் ஒரு லேசான ரசிக்கத்தக்க எள்ளல் தொடர்ந்து வருகிறது. "நகர்புற மத்தியதர வர்க்கத்தை" பற்றிய கதை என்பதாலோ என்னவோ எழுத்தில் அதீதமான ஆங்கிலக் கலப்பு. ஆதவன் அதிர்ச்சி மதிப்பீட்டுக்காக எழுதக்கூடியவர் என்ற குற்றச்சாட்டில் உண்மை இருக்கிறதோ என்று எண்ணவைக்கும் சிலபகுதிகளும் நாவலில் உண்டு.
நாவலைப் படித்து முடிக்கையில் தான் ஒரு விஷயத்தை கவனித்தேன். கதையில் வரும் அனைத்து பாத்திரங்களும் - ஓரிரு முறை அறைக்கு தேநீர் எடுத்துவரும் நாயர் பையன் நீங்கலாக, ராமசேஷனின் நண்பர்கள், காதலிகள், வழிகாட்டிகள் என்று அனைவருமே அவனது சமூகத்தை சேர்ந்தவர்களாகவே அடையாளப்படுத்தப்பட்டிருக்கிறார்கள். கொஞ்சம் யோசித்தபோது சிறுவயதில் படித்த பல ஆனந்தவிகடன் தொடர்கதைகள், பாலகுமாரனின் நாவல்கள் எல்லாமே இப்படித்தான் இருந்தன என்பதை உணர்ந்தேன். தலித் இலக்கியம், கரிசல் இலக்கியம் போல ஏன் இவையெல்லாம் அக்ரகார இலக்கியம் என்று கு(றி/று)க்கப்படவில்லை? ஆனால் இதை நான் ஒரு குறையாகக் காணவில்லை. பெரும்பாலான எழுத்தாளர்களால் தான் பழகி அறிந்த மனிதர்களையும் அவர்களது வாழ்வையும் பற்றி மட்டுமே யதார்த்தமாக எழுதமுடியும். நான் ஜெயமோகனின் படைப்புகளை விரும்புவதற்கு பல்வேறு சமூகப் பின்னணிகளைக் கொண்ட பாத்திரங்களை வழக்கமான பொதுமைப்படுத்தல்களைத் தாண்டி துல்லியமாக சித்தரிக்கும் அவரது ஆற்றலும் ஒரு காரணம். ஜெயமோகனின் நாவலில் அய்யரும் வருவார், கண்டன் புலையனும் வருவார். நாடார்களும் வருவார்கள், நாயர்களும் வருவார்கள். ஒருவேளை ஜெயமோகனின் சுற்றம் பல தலைமுறைகளாக ஊரோடு கலக்காமல் ஒதுங்கி தனியே வாழ்ந்திருந்தால் அவரும் காரணவர்களையும் கடலை பிரதமனையும் பற்றி மட்டுமே எழுதிக்கொண்டு இருந்திருப்பாரோ என்னவோ.
ராமசேஷனின் சமூகத்துக்கு வெளியே இருப்பவர்கள் அவனது கதையில் தான் வரவில்லை. அவனது மொழியில் வருகிறார்கள். நாவலில் இருந்து சில வரிகள் கீழே. இந்த வரிகள் ஏதோ ஒரு பாத்திரம் பேசுவதுபோல் அமைந்தவை அல்ல. மாறாக 'இன்டலெக்சுவலான' கதைசொல்லியின் மொழி இது.
"ராவின் செருப்பு ரிப்பேராயிருந்தால் இவன்தான் சக்கிலியனைக் கூப்பிடுவான், பேரம் பேசுவான்."
"முந்தா நாள் வேலைக்காரி தோட்டிச்சியிடம் சொல்கிறாளாம், 'ஐயா நல்லவரு, அம்மாதான் கொஞ்சம் ஒருமாதிரி' என்று."
"ராமபத்ரன் உடனே குளித்துவிட்டுக் கோயிலுக்குப் போய்கொண்டிருக்கும் பழங்காலத்துப் பிராமணரொருவர் எதிரே வரும் பறையனை எப்படிப் பார்த்திருப்பாரோ அப்படி என்னைப் பார்த்துவிட்டு..."
ம்... இலக்கியம் படிக்கும்போது சமூக/அரசியல் தலைச்சுமைகளை இறக்கிவைத்துவிட்டு தான் படிக்கவேண்டும் போல.
*****
ஒரு நாவலை படித்து முடித்தபின் இணையத்தில் அது குறித்த விமரிசனம் ஏதாவது இருக்கிறதா என்று தேடி அதைப் படித்த மற்றவர்கள் எப்படி உணர்ந்திருக்கிறார்கள் என்று அறிந்துகொள்வது அண்மைகாலமாக என் வழக்கமாக இருக்கிறது. அப்படி தேடியபோது ஆதவனைக் குறித்து திருப்பூர் கிருஷ்ணன் எழுதிய ஒரு கட்டுரை கண்ணில் பட்டது. ஆதவனின் அகால மரணத்தைக் குறித்து இப்படி எழுதுகிறார்:
"காலமான ஓரிரு நாட்களில் அம்பத்தூரிலிருந்து லா.ச.ரா. என்னைத் தேடி வந்தார். விபத்தில் மரணமடைந்த செய்தியை நானும் அவரும் பகிர்ந்துகொண்டோம். சற்று நேரம் மௌனமாக இருந்தார் லா.ச.ரா. என் மேசைமேல் ஜே.கிருஷ்ணமூர்த்தி படம் ஒன்று வைத்திருந்தேன். அந்தப் படத்தை விரலால் தட்டியவாறு சொன்னார்: 'அவனும் அழகனய்யா!' ஆமாம். அழகான எழுத்தாளர்கள் என்று நா.பா. தொடங்கிச் சிலரைப் பட்டியலிட்டால் அந்தப் பட்டியலில் கட்டாயம் இடம்பெறக் கூடியவர்."
மண்டையில் ஏதோ மணியடித்தது. சுந்தர ராமசாமி காலமானபோது ஜெயமோகன் எழுதிய கட்டுரை நினைவுக்கு வந்தது. அதிலிருந்து:
"(சுந்தர ராமசாமி) ஈடுபாட்டுடன் பேசிக் கொண்டிருந்தபோது அவரையே கூர்ந்து நோக்கி அமர்ந்திருந்த எம். யுவன் அபாரமான பிரியத்துடன் என் காதில் மெல்ல 'அழகன்யா...' என்றார்."
சாரு நிவேதிதா இந்த வரியைப் படித்தபோது தன் மீது யாரோ வாந்தியெடுத்து விட்டதைப் போல் அருவருப்பாக உணர்ந்தாராம். எனக்கு அத்தகைய அதீத உணர்ச்சிகள் ஏதும் ஏற்படவில்லை என்றாலும் ஒரு படைப்பாளியின் 'அழகை' மற்றொரு படைப்பாளி சிலாகிப்பதின் பின்னால் உள்ள உளவியல் சுவாரசியமான ஒன்றாகத்தான் இருக்கவேண்டும் என்று தோன்றுகிறது.
6 மறுமொழிகள்:
நல்லாயிருக்கு உங்க ரிவ்யூ.
//ஜே.கிருஷ்ணமூர்த்தி படம் ஒன்று வைத்திருந்தேன். அந்தப் படத்தை விரலால் தட்டியவாறு சொன்னார்: 'அவனும் அழகனய்யா!' ஆமாம். //
இதைப் படித்தவுடன் எனக்கு ஜெயமோகன் எழுதியது, சாரு நிவேதிதாவின் எதிர் வினையும் தோன்றியது. கீழே நீங்களும் எழுதியிருக்கிறீர்கள். :-)))
பெண் எழுத்தாளர்கள் ஒருவருக்கொருவர் பாராட்டிக் கொண்டால் நாம் அதை பெண்ணீயத்தின் கூறாக பார்ப்போம். ஆண் எழுத்தாளர்கள் என்று வரும்போது சாதி, வாந்தி, பேதி எல்லாம்தான் வருகிறது :-))
நீங்கள் ஜெயமோகனை பற்றி எழுதியிருந்தது மிக நன்றாக இருக்கிறது. நல்லதொரு வாசிப்பனுபவம்.
//ஏற்கனவே படித்துவிட்டவர்கள் நாவலின் முடிவைக் குறித்து ஒரு பின்னூட்டம் எழுதினால்//
சான்சே இல்லை... புத்தகத்தைத் தேடிப் பிடித்துப் படிங்க... :-)
தொடர்புள்ள சுட்டி1, சுட்டி2
//பெண் எழுத்தாளர்கள் ஒருவருக்கொருவர் பாராட்டிக் கொண்டால் நாம் அதை பெண்ணீயத்தின் கூறாக பார்ப்போம். //
ஸ்ரீதர், பெண் எழுத்தாளர்கள் ஒருவருக்கொருவர் அழகிகள், நல்ல வடிவான உடல் என்று பாராட்டிக்கொண்டாலும் இதே விமர்சனத்தை வைக்கலாம். அதைப் பெண்ணியம் என்று பார்க்குமளவு இன்னும் நிலைமை மோசமாகிவிடவில்லை. இதைப் பெண்ணியம் என்று யார் அழைக்கப்போகிறார்கள்.
உங்கள் கட்டுரை நல்லதொரு வாசிப்பனுபவத்தைத் தந்தது. சமூகத்தின் பாசாங்கைக் கேலிசெய்வதுபோன்றதொரு தொனி நாவலின் நெடுகிலும் வருவதை நானும் உணர்ந்தேன்.
\\ஒரு படைப்பாளியின் 'அழகை' மற்றொரு படைப்பாளி சிலாகிப்பதின் பின்னால் உள்ள உளவியல் சுவாரசியமான ஒன்றாகத்தான் இருக்கவேண்டும்\\
என்பதை வாசித்தபோது ஒன்று தோன்றியது. சக மனிதர்களால் சொல்லப்படும் வார்த்தைகளை நாம் ஏன் தலைக்குள் காவித் திரிகிறோம் எனத் தோன்றியது. 'அழகன்'என்று இன்னொருவரைப் பார்த்துச் சொல்வதற்குக்கூட ஒரு நல்ல இதயம் இருக்கவேண்டும். (அது தோற்றத்தினால் ஏற்பட்டதாக இருந்தாலும் நடத்தை மற்றும் அறிவால் உருவானதெனினும்)உதிர்க்கப்படும் வார்த்தைகளின் மீதெல்லாம் விமர்சனம் வைப்பதென்பதுகூட 'அறிவுஜீவி'த்தனமாகத்தான் தோன்றுகிறது. இயல்பாக நடக்கும் ஒரு நதியைக் கிளைகளாகப் பிரித்து அதன் அழகைக் கெடுத்துவிடுவதைப்போல என்றும் சொல்லலாம். (இந்த உதாரணத்தில் தவறு இருக்கலாம். ஒரு முன் ஜாமீனாகச் சொல்லிவைக்கிறேனாம்:)
மிகவும் மகிழ்ச்சி அளிகும் விதத்தில் அமைந்த பதிவு ஜெகத். நன்றி!