திரையேற்றம்

ஆடிக்கொரு முறை அமாவாசைக்கு ஒரு முறை என்று எழுதிக் கொண்டிருந்தவனை நட்சத்திரமாக்கி ஒரே வாரத்தில் ஏழு இடுகைகள் எழுதச் சொன்னால் சில விளைவுகளைத் தவிர்க்க முடியாது. எழுத வேண்டும் என்று நீண்ட நாட்களாக நினைத்திருந்த தலைப்புகளை ஒத்திப்போட்டுவிட்டு வேறு தலைப்புகளைக் குறித்து எழுதும்படி ஆகிவிட்டது. எழுதத் திட்டமிட்டிருந்தக் கட்டுரைகளில் பெரும்பாலானவற்றுக்கு நூலகத்திலோ இணையத்தேடலிலோ சில மணி நேரங்களை செலவிடவேண்டியிருக்கும் என்பதே காரணம். இப்போது அதற்கான கால அவகாசம் இல்லாததால் நினைவில் உள்ள தகவல்களை வைத்தே எழுதிவிடக்கூடிய சில தலைப்புகளைக் குறித்து அடுத்த ஏழு நாட்களுக்கு எழுதலாம் என்று இருக்கிறேன். பதிவு எழுதத் தொடங்கி பத்து மாதங்களாகியும் இன்னும் திரைப்படங்களைப் பற்றி ஒரு இடுகை கூட இடாமல் இருந்தால் நான் தமிழன் தானா என்ற நியாயமான ஐயப்பாடு சிலருக்கு எழக்கூடும் என்பதால் இந்த இடுகை.

முன்னொரு காலத்தில் படங்கள் பார்ப்பது எனக்கு மிகவும் விருப்பத்துக்குரியதாக இருந்தது. எண்பதுகளின் இறுதியிலும் தொண்ணூறுகளின் முதற்பாதியிலும் வெளிவந்தப் பெரும்பாலானத் தமிழ் படங்களைப் பார்த்திருப்பேன். இப்போதெல்லாம் ஒரு வருடத்தில் ஐந்தாறு தமிழ் படங்களை பார்ப்பதே அதிகம். அறிவுஜீவி முத்திரை குத்தப்படும் அபாயம் இருந்தாலும் பெரும்பாலான தமிழ் படங்களைப் பார்க்கும்போது அவை அறிவு முதிர்ச்சி அடையாத பார்வையாளர்களுக்காக உருவாக்கப்பட்டதைப் போல் உணர்வதை சொல்லித்தான் ஆகவேண்டும். அது உண்மைதான் என்று இரண்டு ஆண்டுகளுக்கு முன் தொலைக்காட்சியில் ஒரு இயக்குநரின் பேட்டியைக் கண்ட போது தெரிந்தது. ஒரு சில வணிகரீதியிலான வெற்றிப்படங்களை அளித்திருந்த அந்த இயக்குநர் சொன்னார்: "படித்தவர்கள், நடுத்தர வர்க்கத்தினர் படங்களை சிடி மூலமாகப் பார்த்துவிடுவதால் திரையரங்குகளுக்கு வருவதில்லை. பெண்கள் தொலைக்காட்சித் தொடர்களே கதி என்று இருப்பதால் அவர்களும் முன்பு போல் வருவதில்லை. திரையரங்குகளுக்கு அதிகம் வருவது பதினான்கிலிருந்து இருபத்திநான்கு வயதுவரை உள்ள சிறுவர்கள்/இளைஞர்கள். இவர்களது ரசனைக்கு ஏற்றவாறு எடுக்கப்படும் படங்கள் தான் வெற்றிபெறும் என்ற நிலை. அதனால் தான் குத்துப்பாட்டு, பஞ்ச் வசனம் என்றுத் தமிழ் படங்களின் போக்கு மாறி வருகிறது." வியாபாரக் கட்டாயங்களினால் முதிர்ச்சியற்ற விடலைப்பையன்களின் ரசனை ("யூத் லைக் பண்றாங்க") ஒட்டுமொத்த தமிழ் சமூகத்தின் ரசனையாக உருமாறுவது எப்படிப் பார்த்தாலும் ஆரோக்கியமான ஒன்றல்ல.

மிகையான சித்தரிப்புகள் இல்லாத யதார்த்த பாணி படங்களே என் விருப்பத்துக்குரியவை. அந்த வகையில் தமிழில் அண்மைக்காலமாக பாலா, சேரன், அமீர், தங்கர் பச்சான் ஆகியோரின் படங்களை பெரும்பாலும் பார்த்துவிடுகிறேன். இவர்களது படங்களும் வணிக கட்டாயங்களிலிருந்தும் வெகுஜன ரசனைக்குத் தீனிபோடவேண்டிய தேவையிலிருந்தும் முற்றிலுமாக விடுபட்டவை அல்ல என்றாலும் இந்தப் படங்களை வணிக 'மசாலா' படங்களுக்கும் கலைப்படங்களுக்கும் இடைப்பட்ட 'நடுவழி' படங்கள் எனலாம். தமிழக வாழ்வு, குறிப்பாக கிராமப்புற, சிறுநகர மக்களின் வாழ்வு இந்த இயக்குநர்களின் படங்களில் தான் கூடியமட்டும் யதார்த்தமாக சித்தரிக்கப்படுவதாக உணர்கிறேன். இவற்றில் பெரும்பாலான படங்கள் வணிகரீதியாகவும் வெற்றிப்பெறுவதைக் காணும்போது தமிழ் திரையுலகில் ஒரு ஆரோக்கியமான மாற்றம் ஏற்பட்டு வருகிறது என்ற நம்பிக்கை ஏற்படுகிறது. கூடவே இந்த போக்கு நீடிக்காது, நீடிக்க விடமாட்டார்கள் என்ற அவநம்பிக்கையும்.

தமிழிலும், இந்தியிலும் இதற்கு முன்பும் இதுபோன்ற நடுவழி படங்கள் நல்ல அங்கீகாரத்தைப் பெற்றிருந்த ஒரு காலகட்டம் இருந்திருக்கிறது. எழுபதுகளின் இறுதியில் தமிழில் பாலுமகேந்திரா, மகேந்திரன், பாரதிராஜா போன்ற இயக்குநர்கள் யதார்த்த பாணியில் அமைந்த தரமான படங்களை அளித்தனர். Superstar என்று சொல்லத்தக்க எந்த நடிகரும் களத்தில் இல்லாத அந்த காலகட்டத்தில் இயக்குநர்களுக்காக படம் பார்க்கும் நிலை இருந்தது. இந்தியிலும் ரிஷிகேஷ் முகர்ஜி போன்ற இயக்குநர்கள் உருவாக்கிய மசாலா அம்சங்கள் இல்லாத குறைந்த பொருட்செலவில் எடுக்கப்பட்ட யதார்த்த பாணி படங்கள் நல்ல வரவேற்பை பெற்றன. நசிருதீன் ஷா, அமொல் பாலேகர், ஃபருக் ஷேக், ஷபானா ஆஸ்மி போன்ற திறமையான நடிகர்கள் முன்னிலையில் இருந்த காலகட்டம் அது. ஆனால் எண்பதுகளின் தொடக்கத்தில் நிலைமை தலைகீழாக மாறியது. (பெரிய தயாரிப்பு நிறுவனங்கள் திட்டமிட்டு இந்த போக்கை மாற்றின என்று சொல்பவர்களும் உண்டு.) சர்வ வல்லமை படைத்தவனாக சித்தரிக்கப்படும் கதாநாயகனை மையமாக வைத்து எடுக்கப்படும் அப்பட்டமான மசாலாப் படங்கள் ஆதிக்கம் செலுத்த தொடங்கின. அதுவரை பல நடுவழி படங்களில் திறமையான நடிப்பை வெளிப்படுத்தியிருந்த ரஜினிகாந்தும் அமிதாப் பச்சனும் superstar-களாக மாற்றப்பட்டு மூளையை கழற்றிவைத்துவிட்டு நடித்துவிடக் கூடிய வேடங்களில் நடிக்கத் தொடங்கினர்.

ஆனால் அதே காலகட்டத்தின் மலையாளத் திரையுலகில் இதற்கு நேர்மாறான ஒரு மாற்றம் நடந்தது. எழுபதுகளின் இறுதியில் நாடகத்தன்மை வாய்ந்த மசாலா படங்கள் வந்துகொண்டிருந்த நிலை மாறி எண்பதுகள் மலையாளத் திரையுலகின் பொற்காலம் என்று சொல்லும் அளவுக்கு மிகச் சிறந்த யதார்த்த பாணி படங்கள் வரத்தொடங்கின. பல்வேறு துறைகளில் மிகச்சிறந்த திறனாளர்கள் பலர் உச்சத்தில் இருந்த காலகட்டம் அது. கேரளத்துக்கு வெளியே நடிப்புத் திறமைக்காக நன்கு அறியப்பட்ட மோகன்லால், மம்முட்டி தவிர துணை வேடங்களில் நடிப்பதற்கும் நெடுமுடி வேணு, திலகன் போன்ற உலகத்தரமான நடிகர்களும் இருந்தனர். ஸ்ரீனிவாசன், பத்மராஜன் போன்ற சிறந்த கதாசிரியர்கள்/இயக்குநர்கள் பல அருமையான படங்களை உருவாக்கினர். மிகச்சிறந்த இலக்கிய படைப்புகள் வெற்றிகரமாக படமாக்கப்பட்டன. எண்பதுகளிலும் தொண்ணூறுகளின் தொடக்கத்திலும் வந்த பல மலையாளப் படங்களை எனக்கு எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காது. கேரளத்தின் சமூக, குடும்ப வாழ்வு மிகவும் யதார்த்தமான முறையில் சித்தரிக்கப்பட்டிருப்பதும் நடிகர்களின் இயல்பான நடிப்பும் இதற்கு முக்கிய காரணங்கள். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக இந்த போக்கு மாறிவிட்டது. இன்றைய மலையாளப்படங்கள் தமிழ் வணிகப் படங்களில் மோசமான நகல்களாக இருக்கின்றன.

மலையாளப்படங்களில் என்னைக் கவர்ந்த மற்றொரு அம்சம் இயல்பான மிகையற்ற நகைச்சுவை. இன்னும் சொல்லப்போனால் அதுவும் யதார்த்தத்தின் பிரதிபலிப்பு தான். கிண்டலும் கேலியும் மலையாளிகளின் பேச்சுவழக்கிலிருந்து பிரிக்கமுடியாதவை. Mimicry மற்றும் parody பாடல்களைக் கொண்ட ஒலிநாடாக்கள் கேரளத்தில் மிகவும் பிரபலம். அவற்றில் கருணாகரனும், ஆன்டனியும், அச்சுதானந்தனும் படும் பாட்டைப் பார்த்தால் அங்குள்ள சகிப்புத்தன்மை விளங்கும். ஜெகதி ஸ்ரீகுமார், இன்னசென்ட் போன்ற சிறந்த நகைச்சுவை நடிகர்கள் எண்பதுகளிலும் தொண்ணூறுகளிலும் ஏராளமானப் படங்களில் தங்கள் திறமையை வெளிப்படுத்தினர். நகைச்சுவைக்காக தனியாகக் கிளைக்கதை அமைத்து வசனம் எழுதும் வழக்கம் மலையாளத்தில் இருந்ததில்லை. நகைச்சுவை நடிகர்கள் படத்தில் முக்கியமான பாத்திரங்களில் வருவார்கள். பல நகைச்சுவை காட்சிகளின் வசனங்களை மட்டும் தனியே எடுத்துப் பார்த்தால் அதில் சிரிப்பதற்கு எதுவும் இருக்காது. ஒரு எடுத்துக்காட்டாக காட்ஃபாதர் என்னும் படத்தில் வரும் ஒரு காட்சியை சொல்லலாம். கல்லூரி மாணவனாக வரும் ஜெகதீஷ் எதோ முட்டாள்தனமானக் காரியம் செய்து இன்னசென்டிடம் மாட்டிக்கொள்கிறார். அவர்களிடையே நடக்கும் சிறு உரையாடல் தமிழில்:

"நீ எதுக்குப் படிக்கிறே?"
"பி.எல்"
"அதில்ல. நீ எதுக்கு படிக்கிறேன்னு கேட்டேன்."

இதை வாசிக்கும்போது இதில் சிரிக்க என்ன இருக்கிறது என்றுத் தோன்றும். ஆனால் படத்தில் இந்தக் காட்சியைப் பார்ப்பவர்கள் தரையில் உருளாதக் குறையாக சிரிப்பார்கள். இன்னசென்ட் இரண்டாவது முறை கேட்கும் போது அவரது முகத்தில் தெரியும் எரிச்சலையும், 'எதுக்கு' என்ற இடத்தில் கொடுக்கும் அழுத்தத்தையும், மேல்நோக்கி திருப்பிய இடது உள்ளங்கையில் வலது உள்ளங்கையை அடித்து தேய்க்கும் அந்த செய்கையையும் பார்த்தால் சிரிக்காமல் இருக்க முடியாது.

மலையாளப் படங்களின் நகைச்சுவை தமிழர்களின் வெளிப்படையான, மிகையான, ஆரவாரமான பாணி நகைச்சுவையிலிருந்து (கமலஹாசனின் சில படங்கள் இதற்கு விதிவிலக்கு) வேறுபட்டிருப்பதாலோ என்னவோ, மலையாளப் படங்களை - குறிப்பாக நகைச்சுவை படங்களை - தழுவி தமிழில் எடுக்கப்பட்ட படங்கள் மூலப் படத்தில் இருந்த நகைச்சுவையை முழுவதுமாக இழந்துக் காணப்படுகின்றன. எண்பதுகளில் மோகன்லால் நடித்து வெளிவந்த "சன்மனசுள்ளவர்க்கு சமாதானம்" என்ற அருமையான படம் தமிழில் இல்லம் என்ற பெயரில் வந்தபோது அதில் மருந்துக்குக் கூட நகைச்சுவை இல்லை. மோகன்லாலும், ஸ்ரீனிவாசனும் வெளுத்துக்கட்டிய நகைச்சுவை வேடங்களுக்கு சிவகுமாரையும் சந்திரசேகரையும் தேர்வு செய்தவரை கடந்த நூற்றாண்டின் மிக மோசமான casting விருதுக்கு பரிந்துரைக்கலாம். மோகன்லால், சோபனா நடித்த "தேன்மாவின் கொம்பத்து" என்ற படம் தமிழில் முத்துவாக சீரழிக்கப்பட்டது. (நெடுமுடி வேணு சோபனாவிடம் காதல் வசப்படும் காட்சிகளையும் அவற்றைத் தமிழில் சரத்பாபு செய்திருப்பதையும் பார்த்தால் விளங்கும்.) சந்திரமுகியில் ரஜினிக்குப் பொருந்தியது போல மணிச்சித்திரதாழில் மோகன்லாலுக்கு நகைச்சுவை வேடம் பொருந்தவில்லை என்றும் மோகன்லால் சொதப்பி இருக்கிறார் என்றும் அண்மையில் ஒரு தமிழ் பதிவர் எழுதியிருந்ததைப் படித்து ஓரிரு நாட்களுக்கு மனம் ஆறவேயில்லை. இப்படி ஒரு சிந்தனை கூட சாத்தியம்தானா என்று எண்ணிக்கொண்டிருந்தேன்.

எண்பதுகளிலும் தொண்ணூறுகளிலும் வந்த மலையாளப் படங்களிலிருந்து காட்சிகளையும் சில நேரங்களில் முழுப்படத்தையும் திருடுவது தமிழில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. சிதம்பரத்தில் ஒரு அப்பாசாமியில் கதாநாயகி இருட்டில் குழந்தைகளுடன் பேசும் முதல் காட்சியைக் கண்ட உடனேயே அது ஸ்ரீனிவாசனின் "சிந்தாவிஷ்தயாய ஷியாமளா" என்ற படத்தின் நகல் என்று தெரிந்துவிட்டது. (படத்தின் உரிமையை வாங்கித் தான் எடுத்திருப்பார் என்று முதலில் நினைத்தேன். இல்லை என்று பின்னர் அறிந்தேன்.) கஜினி படத்தில் வரும் பல காட்சிகள் (துணை நடிகை பணக்காரனைத் தன் காதலனாக சொல்லிக்கொள்வது, அதனால் கதாநாயகியாக்கப்படுவது, பிறகு அவன் யாரென்றுச் சொல்லாமலே அவளுடன் பழகுவது..) "தீம்தரிகிட" என்ற ப்ரியதர்ஷனின் பழையப் படத்திலிருந்து எடுக்கப்பட்டவை. மலையாளத்தில் மிகச்சிறந்த நகைச்சுவைப் படங்கள் பலவற்றை அளித்த ப்ரியதர்ஷன் இப்போது அந்தப் படங்களை இந்தியில் வெற்றிகரமாக மறு ஆக்கம் செய்து வருகிறார்.

தமிழில் இருபது வருடங்களுக்கு முன்னால் தங்கள் தனி பாணியில் அமைந்த வெற்றிப்படங்களை தொடர்ந்து அளித்துக்கொண்டிருந்த பாரதிராஜா, பாலுமகேந்திரா, பாலசந்தர் போன்ற இயக்குநர்கள் அண்மைக்காலமாக எவ்வளவோ முயன்றும் தொடர் தோல்விகளை சந்தித்து வருவது பல கேள்விகளை எழுப்புகிறது. படைப்பூக்கம் என்பது ஒரு குறிப்பிட்ட காலத்துக்கு பிறகு காலியாகிவிடுமா என்பது அவற்றில் ஒன்று. எனக்கு என்ன தோன்றுகிறதென்றால் இந்த இயக்குநர்களது தனித்தன்மைகள் ஒரு காலத்தில் பெரும் வரவேற்பை பெற்றிருந்தாலும் இன்று அவை அவற்றின் புதுமைத்தன்மையை இழந்து சலிப்பை ஏற்படுத்துவதாக மாறிவிட்டன. மேலும் அவர்கள் கையாண்ட விஷயங்களை அவர்களைவிட சிறப்பாக செய்யும் புது இயக்குநர்களும் உருவாகியிருக்கிறார்கள். பாரதிராஜா உச்சத்தில் இருந்தக் காலத்தில் தென்மாவட்டங்களில் தேவர்களின் வாழ்வை பின்புலமாகக் கொண்ட பல வெற்றிப்படங்களை அளித்தார். (பிறகு பசும்பொன் போன்ற படங்களில் சாதிப்பெருமை வெளிப்படையாக ஒலிக்க ஆரம்பித்தது.) இன்று அதற்கு பாரதிராஜா தேவையில்லை. வெயில், பருத்திவீரன் போன்ற அண்மையப் படங்களில் அந்த வாழ்வும் கலாச்சாரமும் மிகவும் யதார்த்தமாக சித்தரிக்கப்பட்டிருக்கிறது. பாலுமகேந்திரா மனநோயாளிகளைப் பற்றிய பல படங்களை (மூடுபனி, மூன்றாம்பிறை..) எடுத்தார். அவரது உதவியாளாராக இருந்த பாலா இன்று அதே விஷயங்களை வெற்றிகரமாகப் படமாக்குகிறார்.

பாலசந்தர் படங்களை நோக்கும்போது அவர் ஒவ்வொரு படத்திலும் வித்தியாசமாக ஏதாவது செய்யவேண்டும் என்று நிறைய மெனக்கெட்டிருக்கிறார் என்பது தெரிகிறது. ஆனால் இந்த வித்தியாசத் தாகம் பல நேரங்களின் அளவுக்கதிகமானதாகவும் செயற்கையானதாகவும் மாறிவிடுகிறது. எடுத்துக்காட்டாக காதலன்-காதலி உறவுக்கும் பெற்றோர்-பிள்ளை உறவுக்கும் முடிச்சு போட்டு குழப்புவதை எத்தனையோ படங்களில் செய்திருக்கிறார். அபூர்வ ராகங்களில் ஒரு இளைஞன் நடுத்தர வயது பெண்ணைக் காதலிக்க, அந்த பெண்ணின் மகள் இளைஞனின் அப்பாவைக் காதலிக்கிறாள். மூன்று முடிச்சு படத்தில் கதாநாயகி தன்னை விரும்பும் வில்லனின் தந்தையை மணந்து அவனை மகனாக்கிக் கொள்கிறாள். வானமே எல்லையில் காதலர்களை பிரிப்பதற்காக அவனது தந்தையும் அவளது தாயும் திருமணம் செய்து அவர்களை சகோதன்-சகோதரி ஆக்கிவிடுகிறார்கள். அவள் ஒரு தொடர்கதையில் அடிக்கடி படாபட் என்று சொல்லும் பெண்ணும் அவளது தாயும் ஒரே ஆணைக் காதலித்து ஏமாறுகிறார்கள். இது ஏதாவது ஃபிராய்டிய சிக்கலின் வெளிப்பாடோ என்னவோ.

எண்பதுகளில் தொடர்ந்து வெற்றிப்படங்களைக் கொடுத்த மற்றொருவர் மணிரத்தினம். பள்ளி நாட்களில் மணிரத்தினத்தின் படங்களை - குறிப்பாக நாயகன், இதயத்தைத் திருடாதே போன்ற படங்களை - மிகவும் விரும்பிப் பார்த்திருக்கிறேன். இன்று அவரது பழைய படங்களைப் பார்க்கும்போது அவருடைய அழகுணர்ச்சியும் தொழில்நுட்ப நேர்த்தியும் மட்டுமே தெரிகிறது. மற்றபடி நடுத்தர வர்க்கத்தின் உளவியலையும், ரசனைகளையும் நுட்பமாகத் தெரிந்து வைத்துக்கொண்டு அதற்கேற்றவாறு படங்களை எடுத்து வெற்றிபெற்ற ஒரு தேர்ந்த வணிக இயக்குநராகவே மணிரத்தினத்தை இப்போது பார்க்கிறேன். எடுத்துக்காட்டாக எந்த சம்பிரதாயத்தையும் மீறத் துணிவில்லாத, குனிய சொன்னால் சாஷ்டாங்க நமஸ்காரமே செய்து விடும் நடுத்தர வர்க்க குமாஸ்தாக்களுக்கு சட்டத்துக்கும் சம்பிரதாயத்துக்கும் கட்டுப்படாத எதிர் நாயகனின் (anti-hero) மீதும் துடுக்குத்தனமான நவீன கதாநாயகியின் மீதும் ஒரு ரகசிய ஈர்ப்பு இருக்கவே செய்யும். ரோஜாவுக்கு முந்தைய மணிரத்தினத்தின் பெரும்பாலான படங்களில் இந்த அம்சங்கள் இருக்கும். ரோஜா படத்திலும் அதன் பிறகும் ஏதாவது ஒரு தேசிய பிரச்சனையை எடுத்துக்கொண்டு அதே நடுத்தர வர்க்கத்தின் ருசிகளுக்கு ஏற்றவாறு உப்புமா கிண்டுவதை வழக்கமாக்கிக் கொண்டார்.

பெரும்பாலானத் தமிழர்களைப் போல என்னுடைய இசை ரசனையும் தமிழ் திரையிசையைச் சார்ந்தது. சிறு வயதில் வீட்டில் பெரும்பாலும் எம்.எஸ்.விஸ்வநாதனின் பாடல்களும் இளையராஜாவின் ஆரம்பக்கால பாடல்களும் ஒலித்துக்கொண்டிருக்கும். அதனாலோ என்னவோ எனக்கு இன்றும் அதுபோன்ற மென்மையான பாடல்களே பிடித்தவையாக இருக்கின்றன. மேலும் இசைப்பாடல்கள் மிகச்சிறந்த அழகுணர்வுடன் கோர்க்கப்பட்ட சொற்களின் தோரணமாக இருப்பதைவிட உணர்வுகளை வெளிப்படுத்துவதாக இருக்கவேண்டும் என்பது என் எண்ணம். "உண்ணும் அழகைப் பார்த்திருப்பாயே, உறங்க வைத்தே விழித்திருப்பாயே.." என்ற வரிகளில் உள்ள சொற்கள் எளிமையானவையாக இருந்தாலும் அந்த வரி கேட்பவருக்கு ஒருவித மன நெகிழ்வை அளிக்ககூடியது. கண்ணதாசனின் பெரும்பாலான பாடல்களும் வைரமுத்துவின் ஆரம்பக்காலப் பாடல்களும் இப்படித்தான் இருந்தன.

ஆனால் கடந்த பத்து, பதினைந்து வருடங்களாக - ரஹ்மானுடன் இணைந்த பிறகு என்று சொல்லலாம் - வைரமுத்துவின் பாடல்களில் இத்தகைய உணர்ச்சி வெளிப்பாட்டை என்னால் காணமுடியவில்லை. மாறாக அவரது மேதமையை, அபாரமான தொழித்திறனை மட்டும் தான் காணமுடிகிறது. கண்ணுக்கு மை அழகு போன்ற பாடல்களின் வெற்றிக்குப் பிறகு வைரமுத்து அதுபோன்ற template பாடல்களை எழுதத்தொடங்கியதிலிருந்து தான் இந்த சரிவு ஏற்பட்டது என்று நினைக்கிறேன். (கண்ணதாசன் வெகு அபூர்வமாகத் தான் இதுபோன்ற பாடல்களை எழுதிருக்கிறார். எ.கா: காலங்களில் அவள் வசந்தம், கலைகளிலே அவள் ஓவியம்..) Template பாடல்கள் ஒருவித இயந்திரத்தன்மைக் கொண்டவை. முதல் வரியை முடிவு செய்துவிட்டால் ஓரிரு மணிநேரங்களில் அதைப்போல முன்னூறு வரிகளை எழுதிவிடலாம். உன் சமையலறையில் நான் உப்பா, சர்க்கரையா என்று முதல் வரியை எழுதிவிட்டால் அடுத்து உன் சாப்பாட்டில் நான் பாகற்காயா பாயாசமா, உன் தெருவோரத்தில் நான் பெட்டிக்கடையா, பெருமாள்கோயிலா என்று எழுதிக்கொண்டே போகலாம். பிறகு அவற்றிலிருந்து கொஞ்சம் அழகுணர்வு உள்ள சில வரிகளை எடுத்துக்கொண்டால் பாடல் தயார். இப்படி உணர்ச்சியில்லாமல் வெற்று அலங்கார வார்த்தைகளைப் போட்டு நிரப்பும் முறையில் நன்கு பழகிவிட்டதால் தான் வைரமுத்து உலகம் முழுவதும் மரண ஓலம் ஒலித்துக் கொண்டிருந்த ஒரு நாளில் தொலைக்காட்சியில் தோன்றி "ஏ சுனாமி, நீ மரணத்தின் பினாமி" என்று ஆபாசக் கவிதை வாசித்தார்

தமிழ் திரையுலகைக் குறித்துப் பேசிவிட்டு அதிலிருந்து பிரிக்கமுடியாத அரசியலைக் குறித்துப் பேசாமல் இருக்க முடியாது. நாளை பேசுகிறேன்.

26 மறுமொழிகள்:

நட்சத்திர வாழ்த்துகள், ஜெகத், பதிவு நன்றாக வந்திருக்கின்றது

ஜெகத்!

நட்சத்திர வாரத்திற்கு வாழ்த்துக்கள். இந்தவாரம் எங்களுக்கு இனிய வாரம்தான், அதுபோலே உங்களுக்கும் அமையட்டும்.

நட்சத்திர வாழ்த்து(க்)கள்.

நம்ம வாழ்விலிருந்து பிரிக்க முடியாத அம்சத்தை கையில் எடுத்துட்டீங்க.:-)))))

சபாஷ். சரியான இலக்கு.

ஜெகத்,
வாழ்த்துக்கள்.

நட்சத்திரவார பதிவுகளுக்கு வாழ்த்துக்கள்!

இந்த வார நட்சத்திரத்திற்கு வாழ்த்துக்கள்

// பதிவு எழுதத் தொடங்கி பத்து மாதங்களாகியும் இன்னும் திரைப்படங்களைப் பற்றி ஒரு இடுகை கூட இடாமல் இருந்தால் நான் தமிழன் தானா என்ற நியாயமான ஐயப்பாடு சிலருக்கு எழக்கூடும் என்பதால் இந்த இடுகை.//

அது சரி... :))

மற்றபடி பதிவு, நல்லா அலசி காயப்போட்டிருக்கீங்க :)))

டெல்லியிலிருந்து
சென்ஷி

பதிவு நன்றாக வந்திருக்கிறது நட்சத்திர வாழ்த்துக்கள்.

வாழ்த்துக்கள் ஜெகத்.

அய்ய்ய்... இந்த வாரம் நீங்கள் தானா?

நட்சத்திர வாழ்த்துக்கள் தல..

கலக்குங்க!

ஜெகத், நட்சத்திர வாழ்த்துக்கள். உங்கள் இடுகை சிந்தனையைத் தூண்டுகிறது. அதிலே நீங்கள் தொட்டிருக்கும் பல விஷயங்கள், வெவ்வேறு தளங்களில் வைத்து ஆராயப்பட வேண்டியவை. அவகாசம் கிடைப்பின், இம்மாதக் காலச்சுவடு இதழில் வெளியாகியிருக்கும் தியோடர் பாஸ்கரனின் நீண்ட செவ்வியை வாசித்து விடுங்கள்.

நீங்கள் எழுதியிருக்கும் பல விஷயங்களில் எனக்கு உடன்பாடு இல்லை.

இது ஒரு மிகையான கற்பனைதான்.... இருந்தாலும் எழுதுகிறேன்.

நான் எங்காவது

ஒரு காலத்திலே இந்தியாவின் கல்விச் சூழல் பிரமாதமாக இருந்தது. மிகச் சிறந்த கல்வியாளர்கள் தமிழகத்தில் இருந்தும், தென்னிந்தியாவின் பிற பகுதிகளில் இருந்தும் வந்தனர். ஐஐடி. ஐஐஎஸ்சி போன்ற கல்வி நிறுவனங்கள், தரமான கல்வியை போதித்து, நல்ல ஆராய்ச்சியாளர்களையும் கார்ப்பரேட் லீடர்களையும் உருவாக்கின.

இன்றைக்கு இந்தியாவின் முன்னணி நிறுவனங்களை எடுத்துக் கொண்டால், அந்த நிறுவனங்களில் உயர் பதவியில்
இருக்கும் பெரும்பான்மையானோர், மேற் சொன்ன கல்வி நிலையங்களில் இருந்து வந்தவர்கள் தான். ஆனால்
இப்போது நிலைமை என்ன? ஆளாளுக்கு பொறியியல் கல்லூரியை திறந்து வைத்து, மானாவரியாக
எஞ்சினியர்களை உற்பத்தி செய்வதால் , ப்ரொஃபஷனல் கல்லூரிகளின் தரம் தாழ்ந்து விட்டது. ஏட்டுப்படிப்பை முடித்து விட்டு வெளியே வரும் மாணவர்களுக்கு குறைந்த பட்ச அறிவு கூட இருப்பதில்லை. ஒரு சில கல்லூரிகள்
மட்டும் தான் தேறுகின்றன. ஆனாலும் அவை கன்சிஸ்ட்டண்டாக இருப்பதில்லை. எழுபது எண்பதுகள் தான் பொறியியல் படிப்பின் பொற்காலம்.


என்று எழுதினால், அதற்கு எப்படி உங்கள் ரீயாக்ஷன் இருக்குமோ, அப்படித்தான்.

முன்னொரு காலத்தில் படங்கள் பார்ப்பது எனக்கு மிகவும் விருப்பத்துக்குரியதாக இருந்தது. எண்பதுகளின் இறுதியிலும் தொண்ணூறுகளின் முதற்பாதியிலும் வெளிவந்தப் பெரும்பாலானத் தமிழ் படங்களைப் பார்த்திருப்பேன். இப்போதெல்லாம் ஒரு வருடத்தில் ஐந்தாறு தமிழ் படங்களை பார்ப்பதே அதிகம். அறிவுஜீவி முத்திரை
குத்தப்படும் அபாயம் இருந்தாலும் பெரும்பாலான தமிழ் படங்களைப் பார்க்கும்போது அவை அறிவு முதிர்ச்சி
அடையாத பார்வையாளர்களுக்காக உருவாக்கப்பட்டதைப் போல் உணர்வதை சொல்லித்தான் ஆகவேண்டும்


என்று நீங்கள் எழுதிய இதை வாசித்த உடன் என் ரீயாக்ஷன் இருந்தது.

நேரம் கிடைத்தால்,

நீங்கள் எழுதியிருக்கும் விஷயங்கள் பற்றி - யதார்த்த பாணி படங்கள், தமிழ் vs மலையாளக் காமெடி, தமிழ்
மக்களின் ஆரவாரக் காமெடி ரசனை, வெயில் பருத்தி வீரன் என்கிற 'யதார்த்த பாணிப் படங்கள்', பாலச்சந்தர் படங்களின் ஃப்ராய்டியச் சிக்கல், இளையராஜா இன்ன பிற - என் பதிவிலே எழுதுகிறேன்.

ஜெகத் தயார் செய்யாமல் எழுதுகிறேன் அன்று ஆரம்பித்து...வியக்க வைக்கும் அளவிற்கு ஆராய்ந்து எழுதி இருக்கிறீர்கள். திரை துறை பற்றி நீங்கள் எழுதியது அனைத்தில் எனக்கு மாற்றுக் கருத்து இல்லை.

நடசத்திர வாழ்த்துக்கள் !

பின்னூட்டம் அளித்த நண்பர்கள் அனைவருக்கும் நன்றி.

பிரகாஷ் நீங்கள் தவறாகப் புரிந்துக்கொள்ளும்படி தெளிவில்லாமல் எழுதிவிட்டேனோ என்று தோன்றுகிறது. "எண்பதுகளின் இறுதியிலும் தொண்ணூறுகளின் முதற்பாதியிலும் வெளிவந்தப் பெரும்பாலானத் தமிழ் படங்களைப் பார்த்திருப்பேன்." என்று எழுதியிருக்கிறேனே தவிர அந்த படங்கள் சிறந்தவை என்றோ, அந்த காலகட்டம் பொற்காலம் என்றோ ஒருபோதும் சொல்லமாட்டேன். அன்று - என் பதின்ம வயதில் - எனக்கிருந்த ரசனையின் காரணமாக மிக மோசமானவையாக இப்போது படும் படங்களைக் கூட பலமுறை விரும்பிப் பார்த்திருக்கிறேன். இன்று என்னால் அவற்றை ரசிக்க முடியவில்லை.

மற்றபடி, எழுபதுகளின் இறுதியில் தமிழிலும் இந்தியிலும் சில (என் தற்போதைய பார்வையில்) நல்ல படங்கள் வந்ததென்றும், எண்பதுகள் மலையாளத் திரையுலகின் பொற்காலம் என்று சொல்லியிருக்கிறேன். இந்தப் படங்களில் பெரும்பாலானப் படங்களை என் இருபத்தைந்து வயதுக்கு மேல் தான் பார்த்தேன் என்பதையும் சொல்லவேண்டும்.

நல்ல பதிவு. நட்சத்திர வாழ்த்துகள்.

முதலில் தமிழ்மணத் தாரகைக்கு வாழ்த்துகள்.

நீளமான பதிவெனினும் ஈர்த்த நடை இழுக்கவும் வழுக்கவும் இறுதிவரை படித்தாயிற்று. நல்ல அலசல் வியக்கவைத்தது, தமிழ்த்திரையின் பாராட்டுதலுக்குரிய அம்சங்களையும் விரிவாகச் சொல்லியிருக்கலாமே என்று எண்ண வைத்தாலும்!

நட்சத்திர வாரத்திற்கு வாழ்த்துக்கள்.

// பதிவு எழுதத் தொடங்கி பத்து மாதங்களாகியும் இன்னும் திரைப்படங்களைப் பற்றி ஒரு இடுகை கூட இடாமல் இருந்தால் நான் தமிழன் தானா என்ற நியாயமான ஐயப்பாடு சிலருக்கு எழக்கூடும் என்பதால் இந்த இடுகை.//

;)

நட்சத்திர வாழ்த்துகள், ஜெகத்

வாழ்த்து ஜெகத். இந்தவாரத்தில் உங்களிடமிருந்து நிறையப் பதிவுகளை எதிர்பார்க்கலாம் என்ற நம்பிக்கையோடு...:-).

வாழ்த்துக்கள் ஜெகத்!

உங்கள் எழுத்து நடை எப்போதும் போல் சிறப்பு - வைரமுத்து-வின் மீது வைத்த குற்றச்சாட்டு முழுமையாக ஆராய்ந்து சொன்னதாகத் தெரியவில்லை. 'டெம்ப்பிளேட்' கவிஞர் என்பது 'புனிதப்பசுக்களின்' பிரச்சாரம்! ( பிரகாஷ்-க்கு உங்களின் இந்தக்கருத்தில் மட்டும் மாறறுக்கருத்து இருக்காதென நினைக்கிறேன்! ;))

" ஆனால் என்ன சொன்னாலும் இள்ளையராஜா-வைரமுத்து இணைந்து செய்த பாடல்கள் போல வராதூய்யா" என்றுதான் நானும் பல நேரங்களில் எண்ணுகிறேன். இதுவும் ஒருவிதமான 'time warp' -ஆக இருக்கலாம்! :)

நட்சத்திர வாரத்திற்கு வாழ்த்துகள்!!!

ஜெகத்

உங்களின் அறிமுகமே ஒரு அழகான பதிவாக இருக்கின்றது. உங்கள் ரசனைகளை உள்வாங்கிக்கொண்டேன்.

இந்த வார நட்சத்திரத்திற்கு முதலில் வாழ்த்துக்கள்.
பதிவு நன்றாக இருக்கின்றது.

ஜெகத், நட்சத்திர வாரத்திற்கு வாழ்த்துக்கள். பெருமளவில் உங்கள் கருத்துக்களுடன் உடன்படுகிறேன். குறிப்பாக மலையாளம்-தமிழ் திரைப்படங்களைப் பற்றிய ஒப்பீடு மிகச்சரியென நினைக்கிறேன். நீங்கள் எழுதிய விதமும் நன்று.

பிரகாஷ் கொஞ்சம் உணர்ச்சிவசப் பட்டிருக்கிறார் என்றாலும் (:-)) அவர் கொடுத்துள்ள ஒப்பீட்டீல் வலுவில்லையென்றாலும் (இன்னும் சொல்லப் போனால் பிரகாஷ் தான் சொல்வது போன்று கற்பனையாக எழுதியதில் ஒன்றும் தவறாகப் படவில்லை எனக்கு - வணிக நோக்கு ஒன்றையே குறிக்கோளாக கொண்டுள்ள பெருவாரியான தனியார் பொறியியல் கல்லூரிகளுக்கு அவ்விமர்சனம் பொருந்தாமலில்லை) கூட, அவர் சொல்லியுள்ள கருத்தில் ஒரு உண்மையிருக்கிறது. தரமும், இரசனையும் மாறுபடக் கூடியது, பரிணாம வளர்ச்சிக்குள்ளாகக் கூடியது என்ற அடிப்படையில். எம்.ஜி.ஆர். படத்தையும், இரஜினி படத்தையும் இரசிப்பவர்களிடம் திரைப்படங்களுக்கான நோக்கமே பொழுது போக்கு என்ற அடிப்படையிலானது. அதற்காக அவற்றை சிறந்த திரைப்படங்கள் என்று கொண்டாட முடியாது. அவற்றை "அறிவு முதிர்ச்சி
அடையாத பார்வையாளர்களுக்காக உருவாக்கப்பட்டவை" என்று நீங்கள் சொல்வதை அப்படங்களின் மீதான விமர்சனமாகப் பார்க்காமல் அப்படத்தை இரசித்துப் பார்ப்பவர்களின் மீதான விமர்சனமாக எடுத்துக் கொள்ளும் அபாயம் இருக்கிறது.

குமுதமும், குங்குமமும் மலினச் சரக்கை அடைத்து விற்பது போலானதுதான் இது. அவற்றையும், பிரகாஷ் இங்கு சுட்டியுள்ள காலச்சுவட்டையும் ஒப்பீடு செய்வது போன்றுதான் இங்கு ஜெகத் செய்கிறார். காலச்சுவட்டையும் படித்து விட்டு நொறுக்குத்தீனிக்காக குமுதமும், குங்குமமும் படித்தேன் என்றால் பரவாயில்லை. அல்லது என்னுடைய கல்வியறிவின் அடிப்படையில் எளிதில் புரிந்து கொள்ளும்படியாக குமுதம் எழுத்துக்கள் எளிமையாக இருக்கிறது என்றால் கூட பரவாயில்லை. ஆங்கிலத்தில் ஆழமான விசயங்களை மேலும் மேலும் வாசிக்கும் என்னுடைய வாசகத்திறன் தமிழில் மட்டும் அடுத்த கட்டத்துக்கு பரிணாம வளர்ச்சியடையாமல் நடிகைகளின் அங்கங்களில் ஆறு வித்தியாசம் பார்ப்பதிலேயே நின்று போனதை மற்றவர்கள் சிலாகிக்க வேண்டும் என்று எதிர்பார்க்க முடியாது.

நன்றி - சொ. சங்கரபாண்டி

மிக அருமையான விமர்சனம். மிக நன்றாக எழுதியிருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்.

இருபது இருபத்தைந்து வருடங்களுக்கு முன்னர் மோகன்லால் / ப்ரியதர்ஷன் கூட்டனியில் வந்த படங்கள் (உ-ம்: போயிங் போயிங். மிகச் சமீபத்தில் ஹிந்தியில் கரம் மசாலா என்று எடுக்கப்பட்டு நன்றாகவே ஓடியது)

ஹரா பெரி, ஹங்காமா, சுப்கே சுப்கே பொன்ற மிகப்பெரிய பட்டியலே இருக்கிறது.

இதில் காமெடி என்னவென்றால் அவரின் சில படங்கள் தமிழில் மாற்றப்பட்டு தோற்றும் போயிருக்கிறது.

ப்ரியதர்ஷன், சிங்கிதம் போன்ற நல்ல நகைச்சுவை உணர்வு மிக்க இயக்குனர்கள் தமிழில் குறைவு என்றுதான் சொல்ல வேண்டும்.

வாழ்த்துக்கள் ஜெகத்!

பின்னூட்டங்களுக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி.

//"அறிவு முதிர்ச்சி அடையாத பார்வையாளர்களுக்காக உருவாக்கப்பட்டவை" என்று நீங்கள் சொல்வதை அப்படங்களின் மீதான விமர்சனமாகப் பார்க்காமல் அப்படத்தை இரசித்துப் பார்ப்பவர்களின் மீதான விமர்சனமாக எடுத்துக் கொள்ளும் அபாயம் இருக்கிறது."//

உண்மைதான். அப்படி யாராவதுப் புரிந்துக்கொண்டு என்மேல் பாய்ந்துவிடுவதற்கு முன் ஒரு சிறு விளக்கம். "அறிவு முதிர்ச்சி அடையாத பார்வையாளர்களுக்காக உருவாக்கப்பட்டவை" என்ற வரி அதை தொடர்ந்து வரும் வரிகளுடன் (பதினான்கிலிருந்து இருபத்திநான்கு வயதுவரை உள்ளவர்களின் ரசனைக்கு ஏற்றவாறு படங்கள் எடுக்கப்படுவதாக இயக்குநர் சொல்வது) சேர்த்து வாசிக்கப்படவேண்டும்.

ஸ்ரீதர் வெங்கட்:

ஆம், ப்ரியதர்ஷன் தன் பழைய மலையாளப் படங்களை இந்தியில் சிறப்பாக மொழிமாற்றம் செய்கிறார். அண்மையில் 'பூச்சைக்கொரு மூக்குத்தி'யின் இந்தி வடிவத்தைப் பார்த்தேன். நன்றாக வந்திருந்தது. வேடிக்கை என்னவென்றால் ப்ரியதர்ஷன் இந்திப்படங்களிலிருந்து காட்சிகளையும் கதையையும் எடுத்து தான் தன் ஆரம்பக்கால மலையாளப் படங்களை உருவாக்கினார். அவர் இயக்கிய 'ஓடரது அம்மாவா ஆளறியாம்' என்ற படம் (சங்கர், முகேஷ், ஸ்ரீனிவாசன் நடித்தது) இந்தியில் ஃபருக் ஷேக், தீப்தி நாவல் நடித்த 'சஷ்மே புத்தூர்' படத்தின் நகல்.

மிக அருமையான அலசல்.அசத்தல் நடை. வாழ்த்துக்கள்.