தமிழ் வழியே மலையாளம்

மலையாள மொழி ஓரளவுக்கு நன்றாகப் புரிகிற, ஆனால் மலையாள எழுத்துக்களை வாசிக்கத் தெரியாத தமிழர்கள் லட்சக்கணக்கில் இருப்பார்கள் என்று நினைக்கிறேன். மலையாளம் வாசிக்கக் கற்றுக்கொள்வது எளிதானதல்ல என்பது அந்த முயற்சியை மேற்கொண்டவர்களுக்குத் தெரியும். தமிழைவிட மிக அதிகமான மெய்யெழுத்துக்கள், அந்த மெய்யெழுத்துக்கள் ஒன்றோடொன்று சேரும்போது தோன்றும் சீரற்ற வடிவம் கொண்ட நூற்றுக்கணக்கானக் கூட்டெழுத்துக்கள் என்று எல்லாம் சேர்ந்து தலை சுற்ற வைத்துவிடும். நிறைய நேரமும் உழைப்பும் செலவிடத் தயாராக இருப்பவர்களால் மட்டுமே மலையாள எழுத்துக்களை வசப்படுத்த முடியும். அப்படி முடியாதவர்களுக்காக அண்மையில் நான் ஒரு கருவியை உருவாக்கினேன். அதன் மூலம் இணையத்தில் உள்ள மலையாள ஆக்கங்களை தமிழ் எழுத்துக்களுக்கு மாற்றிப் படிக்கலாம்.

இணையத்தில்/கணினியில் ஏற்றப்படாத சிறந்த மலையாளப் படைப்புகளை எப்படிப் படிப்பது? மொழிபெயர்ப்புகள் மூலம் படிப்பது ஒரு வழி. ஆனால் மலையாள மொழியையும் கலாச்சாரத்தையும் நன்கு அறிந்த ஒருவர் மலையாளத்தின் சிறந்த நாவல்களின் தமிழ் மொழிபெயர்ப்பைப் படித்தால் அது பிடிக்காமல் போவதற்கான வாய்ப்புகள் அதிகம். தகழியின் செம்மீன் நாவலை சுந்தர ராமசாமியின் மொழிபெயர்ப்பில் படித்தபோது மிகவும் செயற்கையாக உணர்ந்து இனி எந்த மலையாள நாவலின் மொழிபெயர்ப்பையும் படிப்பதில்லை என்று முடிவு செய்தேன். இது ஒருவித உளவியல் சிக்கல். தால்ஸ்தாயையும் தாஸ்தாவ்ஸ்கியையும் ஆங்கில மொழிபெயர்ப்பில் படிக்கும் போது நான் எந்தக் குறையையும் உணர்வதில்லை. ரஷ்ய மொழியையும் கலாச்சாரத்தையும் அறியாத என்னால் மொழிபெயர்ப்பில் உள்ள குறைகளை உணரமுடியாததே காரணம். ஆனால் மலையாள நாவல்களின் தமிழ் மொழிபெயர்ப்பைப் படிப்பது அப்படியல்ல. தில்லானா மோகனாம்பாள் படத்தை ஆங்கிலத்தில் பார்ப்பது போல இருக்கும்.

வேறு வழி? என்னை மாதிரி கிறுக்கு சிந்தனையுடைய யாராவது பதிப்பகம் நடத்திக்கொண்டிருந்தால் அவர்களுக்கு ஒரு யோசனை சொல்கிறேன். சிறந்த மலையாள நாவல்களை அப்படியே தமிழ் எழுத்துக்களைக் கொண்டு அச்சிட்டு வெளியிடுங்கள். கடினமான சொற்களுக்கு மட்டும் கீழே அடிக்குறிப்பு இட்டு பொருள் தரலாம். இந்தி போன்ற மொழிகளை எழுதுவதற்கு தமிழ் எழுத்துக்கள் போதுமானதாக இல்லாமல் இருக்கலாம். ஆனால் மலையாள மொழியை எழுதுவதற்கு அவை போதும். மணிக்கொடி காலத்து மணிப்பிரவாள நடையைத் தமிழ் எழுத்துக்களைக் கொண்டு எழுதுவதற்கும் மலையாளத்தை எழுதுவதற்கும் அதிக வேறுபாடில்லை. மலையாள மொழியோடு எந்த அறிமுகமும் இல்லாதத் தமிழர்கள் கூட சிறிது முயன்றால் தமிழ் எழுத்துக்களைக் கொண்டு எழுதப்பட்ட மலையாளப் படைப்புகளை வாசித்துப் புரிந்துக்கொள்ளலாம். அதற்கு உதவக்கூடிய சிலத் தகவல்களை கீழே தருகிறேன்.

ஒரு மொழி மற்றொரு மொழியின் கலப்பின் காரணமாக உருமாறும் போது பெரும்பாலும் அதன் அடிப்படைச் சொற்கள் அப்படியே தான் இருக்கும். மலையாளத்தில் வடமொழிச் சொற்கள் அதிக அளவில் கலந்திருந்தாலும் மிகப் பெரும்பாலான அடிப்படைச் சொற்கள் தமிழ் சொற்களே. சில எடுத்துக்காட்டுகளை கீழே தந்திருக்கிறேன்.

உறுப்புகள்: தல, கண்ணு, மூக்கு, நாக்கு, வாய், பல்லு, கழுத்து, நெஞ்சு, கை, காலு.

வினைகள்: வா, போ, நட, ஓடு, குடி, குளி, அடி, கடி, கொடு.

இடப்பெயர்கள்/சுட்டுப்பெயர்கள்: ஞான், நீ, அவன், அவள், அவர், அது, இது, எது.

பருவங்கள்: மழ, வெயில், காற்று, மின்னல், இடி.

திசைகள்: வடக்கு, தெக்கு, கிழக்கு, இடத்து, வலத்து.

எண்கள்: கால், அர, முக்கால், ஒந்நு, ரண்டு, மூந்நு, நாலு, அஞ்சு, ஆறு...

நிறங்கள்: கறுப்பு, வெளுப்பு, நீலம், சுவப்பு, பச்ச, மஞ்ஞ.

உலோகங்கள்: இரும்பு, செம்பு, ஈயம், வெள்ளி, வெங்கலம்.

கிழமைகள்: ஞாயர், திங்கள், சொவ்வ, புதன், வ்யாழம், வெள்ளி, சனி

விலங்குகள்/பறவைகள்: ஆன, பசு, எரும, ஆடு, பன்னி, மயில், குயில், காக்க, கோழி.

இன்றைய தமிழ் பேச்சுவழக்கில் அதிகம் பயன்படுத்தப்படாத, ஆனால் எழுத்துத்தமிழில் இடம்பெறும் ஏராளமான சொற்கள் மலையாளப் பேச்சு வழக்கில் வழங்கி வருகின்றன. கீழே தமிழ் பேச்சுவழக்கில் பயன்படுத்தப்படும் சில சொற்களையும் அவற்றுக்கான மலையாளச் சொற்களையும் எடுத்துக்காட்டுகளாகத் தருகிறேன்.

காது - செவி, உள்ளே - அகத்து, வெளியே - புறத்து, பக்கத்தில் - அரிகில், கூப்பிடு - விளி, வெட்கம் - நாணம், வேலை - பணி, சண்டை - பிணக்கு, பார் - நோக்கு, எப்படி - எங்ஙனெ (எங்ஙனம்)

வேறு சில அடிப்படைச் சொற்கள் தமிழல்லாதது போல் தோன்றினாலும், அவையும் தமிழ் சொற்களிலிருந்து தோன்றியவை என்பதை பழந்தமிழ் சொற்களோடு அறிமுகம் உள்ள ஒருவரால் கண்டறியமுடியும். மலையாளத்தில் நேற்று என்பதைக் குறிக்கும் இன்னலெ என்ற சொல் அதே பொருளுடைய பழந்தமிழ் சொல்லான நென்னல் என்பதன் திரிபு என்பதை ஒரு பழைய பதிவில் எழுதியிருந்தேன். இன்னொரு எடுத்துக்காட்டு தருவதென்றால் மற்ற மூன்று திசைகளையும் குறிக்க மலையாளத்தில் கிழக்கு, வடக்கு, தெக்கு என்ற சொற்கள் பயன்படுத்தப்படும் போது மேற்கு என்பதை மட்டும் "படிஞ்ஞாறு" என்று சொல்கிறார்கள். முதல் பார்வையில் அன்னியமாகத் தெரியும் இந்த சொல் "சூரியன் மறையும் திசை" என்பதைக் குறிக்கும் "படுவான்" என்ற தமிழ் சொல்லுடன் (அகராதியில் இருக்கிறது) தொடர்புடையது. படுஞாயிறு என்பதே படிஞ்ஞாறு என்று ஆகியிருக்கவேண்டும். இலங்கையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஒரு ஏரியின் கிழக்குப்பகுதியை "எழுவான்கரை" என்றும் மேற்குப்பகுதியை "படுவான்கரை" என்றும் அழைக்கிறார்கள். தெலுங்கில் மேற்கு என்பதைக் குறிக்கும் "படமதி" என்ற சொல் இதனுடன் தொடர்புடையது என்று நினைக்கிறேன்.

தமிழ் சொற்கள் மலையாளத்தில் எப்படித் திரியும் என்பதற்கான விதிகளைப் புரிந்து வைத்திருப்பதும் மலையாளத்தை வாசிக்க உதவும். பெரும்பாலும் தமிழின் வல்லின ஒலிகள் மலையாளத்தில் மென்மையாக ஒலிக்கும். வே. வேங்கடராஜுலு அவர்கள் எழுதிய "தமிழ் சொல்லமைபு" என்ற நூலிலிருந்து சில விதிகளை கீழே தருகிறேன்.

'ன்ற' ஓலி 'ன்ன' என்று மாறும்: ஒன்று-ஒன்னு, தென்றல்-தென்னல்

'ந்த' ஒலி 'ந்ந' என்று மாறும்: வந்து-வந்நு, சந்தனம்-சந்நனம்

'ங்க' ஒலி 'ங்ங' என்று மாறும்: மாங்காய்-மாங்ங, நீங்கள்-நிங்ஙள்

'ஞ்ச' ஒலி 'ஞ்ஞ' என்று மாறும்: மஞ்சு-மஞ்ஞு, கஞ்சி-கஞ்ஞி

'ந்த' ஒலி 'ஞ்ஞு' என்று மாறும்: அறிந்து-அறிஞ்ஞு, தேய்ந்து-தேய்ஞ்ஞு

'த்த' ஒலி 'ச்ச' என்று மாறும்: அடித்து-அடிச்சு, பித்தளை-பிச்சள

ஐகாரம் அகரம் ஆகும்: மலை-மல, தலை-தல, வாழை-வாழ

எண்பது ஆண்டுகளுக்கு முன்னால் தமிழகத்தில் பயன்படுத்தப்பட்ட மணிப்பிரவாள நடையை விட சற்று அதிகமான அளவுக்கு மலையாளத்தில் வடமொழிச் சொற்கள் கலந்திருக்கின்றன. மணிப்பிரவாள நடையை முழுவதுமாகப் புரிந்துக்கொள்ள முடியாதத் தமிழர்கள் கூட இன்று தமிழில் வழக்கிலிருக்கும் ஏராளமான வடமொழிச் சொற்களை மலையாளத்தில் அடையாளம் கண்டு புரிந்துக்கொள்ளமுடியும். (எ.கா: ஸந்தோஷம், ஆனந்தம், ஸ்நேகம், ப்ரேமம், இஷ்டம், விரோதம், தேஹம், திவஸம்..) தமிழில் தமிழ் இலக்கண விதிகளின் படி எழுதப்படும் பல வடமொழிச் சொற்கள் மலையாளத்தில் (மணிப்பிரவாளத்தைப் போல) எந்த மாற்றமும் இல்லாமல் அப்படியே எழுதப்படும் என்பதையும் நினைவில் வைத்திருக்கவேண்டும். (எ.கா: சுதந்திரம் - ஸ்வதந்திரம், உதாரணம்-உதாஹரணம், அட்சரம்-அக்ஷரம், சிங்கம் - ஸிம்ஹம், சுபாவம் - ஸ்வபாவம்..) அறிமுகமில்லாதவை போல் தோன்றும் பெரும்பாலான வடமொழிச் சொற்களையும் கொஞ்சம் கற்பனைத் திறனைப் பயன்படுத்தி முயன்றால் புரிந்துக்கொள்ளமுடியும். எடுத்துக்காட்டாக 'தக்ஷிணேந்திய' என்று ஒரு சொல் வருகிறது என்று வைத்துக்கொள்வோம் சொற்களின் புணர்ச்சி விதிகளை வைத்து அதை "தக்ஷிணம் + இந்திய" என்று பிரிக்கலாம். தக்ஷிணம் என்னும் சொல் தமிழில் இல்லையென்றாலும் தென்னாடுடைய சிவனை தக்ஷிணாமூர்த்தி என்று சொல்வது நினைவுக்கு வந்தால் 'தக்ஷிணேந்திய' என்பதன் பொருள் 'தென்னிந்திய' என்பது விளங்கும்.

26 மறுமொழிகள்:

Good Work.Let me try this and comment on this
Mahehsh.

dear sirs,
Fantastic. it worked very well.I tried this song ente Kalblela from class mates. The lyrics are same as in the malayalam.
Thanks a lot

வணக்கம் ஜெகத்

எனக்கு இயல்பாகவே கேரளத்துப் பண்பாடு மீதான அதீத ஆர்வம் இந்தப் பதிவில் இன்னும் நேசத்தை உண்டுபண்ணியிருக்கிரது. நீங்கள் உருவாக்கிய கருவியை அடிக்கடி பயன்படுத்தும் ஆட்களில் நானும் ஒருவனாக இருக்கப்போகிறேன்.

ஈழத்துப் பிரதேச வழக்கியலின் மொழி, உணவுப்பழக்கம், பண்பாடு போன்ற கூறுகளில் அதிக ஒற்றுமை கேரளத்தவர்களோடு இருக்கிறது என்பதை நேரிலும் படைப்புக்கள் வாயிலாகவும் அறிந்துகொண்டேன்.

பறைதல் என்பது இன்னும் புழக்கத்தில் இருக்கும் உதாரணமாக காட்டும் ஈழமொழிவழக்கு, ஈழத்தில் பல ஊர்கள் கேரளத்து ஊர்ப்பெயருடன் இருப்பதை ஒத்திசைவு கண்டு அதற்கான பதிவு போடும் முயற்சியில் கூட உள்ளேன்.

உங்களின் நல்ல முயற்சிக்கு வாழ்த்துக்கள். பெரும்பாலும் பேச்சு நடையில் உணர்ந்ததை மிக அழகிய கோர்வையாக எழுதுகிறீர்கள். வாழ்த்துக்கள்.

ராயர் காபி க்ளப் குழுமத்தில் வெகு நாள்களுக்கு முன்பு இரா.முருகன் இப்படி ஒரு முயற்சியைச் செய்தார். மலையாளத்தில் உள்ள ஒரு நாவலை ஒவ்வொரு அத்தியாயமாக அப்படியே தமிழில் தட்டி, அதற்கான தமிழ் மொழிபெயர்ப்பையும் தந்தார். சில அத்தியாயங்கள் முயற்சியுடன் அது நின்று போனது.

உங்கள் 'எழுத்துப்பெயர்ப்பு' கருவியை இன்னும் உபயோகித்துப் பார்க்கவில்லை. பார்த்துவிட்டு எழுதுகிறேன்.

ஜெகத்,

நீங்கள் தயாரித்த கருவியின் மூலம் தெலுகு மற்றும் மலையாள மொழி தளங்களை படிக்க முடிகிறது. அதற்கு என் நன்றிகள்.

நீங்கள் கூறிய இந்த வழிமுறையும் சரியாகவே இருக்கும் என்ற போதும், ஒரு முழு நாலலையோ புதினத்தையோ இவ்வாறு எழுத்துமாற்றி வாசிக்கமுடியுமா என்ற சந்தேகமாக இருக்கிறது. ஒருவேளை ஒரு 10 - 20 பக்க சிறுகதையை வாசித்த பிறகு என் சந்தேகம் தீரலாம்.

-யு.எஸ்.தமிழன்

Hi,

Your transliteration is impressive. I am a CTO of tamil.net.
I need your collaboration regarding your transliteration.
Would you be able to gtalk to me.
My gmail id is: amalasingh at the rate of gmail.com

Very intersesting article/analysis. I too had learnt Malayalam within 4 months wihout anybody's help, when I was in Kottayam by reading name boards and comparing the Malayalm words with Tamil.Malayalee friends used to tell that Tamils will not take pain to learn Malayalam and speak only in Tamil and leave Kerala without learning Malyalam. That statement made me to learn Malayalam. Kindly continue to give such tips.

Kannada
From Simple English Wikipedia, the free encyclopedia
(Redirected from Kannada language)
Jump to: navigation, search
Kannada (ಕನ್ನಡ) is a language. Most people in the Indian state of Karnataka speak Kannada. Do not confuse it with Canada.

Kannada is a Dravidian language. It is more than 1600 years old. Many words in Kannada are taken from Sanskrit. Kannada has gone through changes several times during the years. Kannada has been adaptive to include many other languages. The flavour of this language changes at North karnataka and South Karnataka. The regional languages marathi, telugu and Hindi are changing this modern kannada language. Word Kannada may have been derived from word 'Karnatika' (good to listen).

நீங்கள் உருவாக்கிய கருவியைக்கொண்டு திராவிட மொழிக்குழு, தமிழ் போன்றவற்றைப் பற்றி மற்ற மொழிக்காரர்கள் என்ன நினைக்கிறார்கள் என்று விக்கிபீடியாவில் அறிய முற்பட்டேன். அப்போது சிக்கியது மேலே கண்டது. இதில் நிறைய கன்னட வார்த்தைகள் சமஸ்கிருதத்திலிருந்து எடுக்கப்பட்டவை என்று வருகிறது. நானறிந்தவரை கன்னடத்தில் தமிழ் வார்த்தைகள் அதிகம். தமிழ் என்று வேண்டாம் மூல திராவிடமொழி என்றாவது சொல்லி இருக்கலாமே. சமஸ்கிருதத்தின் மீதுள்ள மோகம் தமிழை தீண்டத்தகாத மொழி போன்று அவர்களை எண்ண வைக்கிறது. இந்த பின்னூட்டம் இந்த இடுகைக்கு தேவையற்றதுதான். இருந்தாலும் எங்காவது சொல்ல வேண்டுமென்று தோன்றியது அதனால் இங்கு சொல்கிறேன்.

வளரே நன்னாயிட்டுண்டு, ஈ பதிவு.

ஆஇனியனை பரிசோதிச்சுட்டுப் பறயாம் கேட்டோ.

நன்னி

வாழ்த்துக்கள் ஜெகத். நட்சத்திர வாரம் பயனுள்ள பல கட்டுரைகளோடு நன்றாகச்செல்கிறது.

ஜெகத் மிகவும் பயனுள்ள இடுகை ..மலையாள சூழலில் வாழும் என்போன்றோர்க்கு மிகவும் உதவியாயிருக்கும் ..

ஜெகத்,
அடடா, இப்பதான் இப்பதிவு கண்ணில்பட்டது. நல்ல அருமையான பதிவு. மலையாளத்தை தமிழில் படிக்கக் கூடிய வாய்ப்பை ஏற்படுத்தித் தந்தமைக்கு மிக்க நன்றி. எனக்குப் பல மலையாள நண்பர்கள் இருக்கிறார்கள்.

நீங்கள் இன்றும் மலையாளத்தில் புழங்கப்படும் பழம்தமிழ்ச் சொற்கள் என வரிசைப்படுத்தியுள்ள சொற்கள் ஈழத்திலும் இன்றும் புழங்கப்படுகின்றன.
அதற்கு பல வரலாற்றுக் காரணங்களும்
உண்டு.

ஜெகத்,

நான் கொச்சியிலும் திருச்சூரிலும் ஐந்தாண்டுகாலம் பணியாற்றியும் மலையாளம் எழுத படிக்க முயன்றதில்லை. ஆனால் பேசுவேன்.

என்னுடைய வங்கி கேரளத்தை சார்ந்தது என்பதால் மலையாளம் பேசாமல் முடியாது...

ஆனால் மலையாளம் வாசிக்க தேவைப்படாததால் முயற்சி செய்யவில்லை..

உங்களுடைய பதிவைப் படித்ததும் முயற்சி செய்திருக்கலாமே என்று தோன்றுகிறது..

Search in தமிழ் http://www.yanthram.com/ta/

ஜெகத்,

பழைய பதிவா இது, ஆனாலும் அருமையான ஆக்கம் கொண்ட ஒன்று இப்போத்தான் பார்க்கிறேன், அப்படியே நீங்களே தமிழில் மளையாளம் சொல்லி தர ஒரு தொடர் இடுகையும் போடலாமே, இணையத்தில் உலாவுவதில் கிடைத்த பயனாக இருக்கும், இன்னொரு திராவிட மொழியையும் அறிந்துக்கொள்ள உதவும்!

உங்கள் கருவியையும் பயன்படுத்திபார்க்கிறேன்.

>>> நீங்களே தமிழில் மளையாளம் சொல்லி தர ஒரு தொடர் இடுகையும் போடலாமே, இணையத்தில் உலாவுவதில் கிடைத்த பயனாக இருக்கும், இன்னொரு திராவிட மொழியையும் அறிந்துக்கொள்ள உதவும் <<<

yes please.. most of the readers would find it very usefull...

i've been interested in learning a new indian language but never found a online resource for it..

மிக பயனுள்ள கட்டுரை. நிறைய மலையாளத் திரைப்படங்கள் பார்க்கும் எனக்கு மிக உதவியாக இருந்தது. நன்னி.

ஜெகத்

பதிவு போட்டு கிட்டத்தட்ட ஒரு வருடம் கழித்து இன்றுதான் கண்ணில் பட்டது! :(

அருமையான விளக்கங்கள். உங்களின் அயராத முயற்சிக்குப் பாராட்டுகள். கருவிகளைப் பயன்படுத்திப் பார்த்துவிட்டுச் சொல்கிறேன்.

மலையாளம் கற்கவேண்டுமென்பது நீண்ட காலக் கனவு. என் போன்று தொலைதேசத்தில் இருப்பவர்களுக்கு மலையாளம் கற்க வழியிருக்கிறதா? உங்களுக்கு தமிழ் வழியே மலையாளம் கற்றுக்கொடுக்கும் உத்தேசம் இருக்கிறதா?

மிக்க நன்றிகள்.

very nice keep it up. I will try

thanks

suresh

நான் கேரளத்தில் ஏழு வருடங்கள் பணியாற்றியபோது,ஒரு வருடம் ஆசிரியர் வைத்து கற்றுக்கொள்ள முயற்சி செய்தும் முடியவில்லை.இப்பொழுது திரைப்பட சுவரொட்டி படிக்கமுடிகிறது.கடைசிவரை பிடிபடவேயில்லை.

நல்ல பதிவு ,நான் ஒரு ஈழ தமிழன்,அதனால் எமக்கு மலையாளம் பற்றிய அறிமுகம் குறைவு.ஆனால் இப்பொது எனக்கு ஒரு ஈர்ப்பு வந்திருக்கு.மலையாளம் இலகுவாக கதைக்க கூடிய மொழி தமிழர்களுக்கு.ஈழ தமிழர்களின் உணவில்,பேச்சு வழக்கில் மலையாள பழக்க வழக்கங்கள் உண்டு.பிட்டு என்பது யாழ்ப்பாணத்தின் ஒரு பிரதான உணவு,இது இந்தியாவில் கேரளாவில் மட்டுமே இருக்கிறது .மற்றும் உணவில் தேங்காய் அதிகம் சேர்ப்பது.பேச்சு வழக்கில் "பறையும்,அதிகளவான "ஒரு"என்ற பிரயோகம் போன்ற பல .இவை சில ஒற்றுமை .எனவே இவை பற்றி அறிய ஆவலுடன் உள்ளேன்!

நல்லதொரு முயற்சி.அதுபோல தமிழிலிருந்து மலையாளத்துக்கு மாற்றும் வசதி எதாவது உண்டா?

vazhara ishtamanu malaiyalam

its fabulous .i have tried it with almost half of the indian languages -everyone had really worked. Thanks for your great work-which would lead man tamils to able to read and study any indian languages without having prior knowledge in it.

அன்புடையீர்
வணக்கம். இந்த அகராதி நன்றாக உள்ளது. மலையாள இலக்கியங்களையும் கவிதைகளையும் நேரடியாக உங்கள் மொழிபெயர்ப்பி மூலம் படிக்க முடிகிறது.
ஆனால், இணைய இணைப்பு இல்லாத நேரங்களில் என்ன செய்வது?
மலையாளம் - தமிழ் மொழிபெயர்ப்பியை, ஆஃப்லைனில் டெஸ்க்டாப்பில் நிறுவிப் பயன்படுத்தும் அளவில் இந்த மென்பொருளை வடிவமைக்க முடியுமா?
அப்படி செய்தால், நீங்கள் தமிழுக்குச் செய்த மிகப்பெரிய தொண்டாக இருக்கும்.