பின் தொடரும் நரியின் ஊளை

பழம்பெரும் இலக்கியங்களை குறுக்கித் திரித்து வசைபாடுவதே வழக்கமாகிவிட்ட தமிழ் சூழலில் பாட்டி வடை சுட்ட கதையின் உண்மையான இலக்கிய மதிப்பீட்டை முன்வைப்பது எளிதல்ல. எதையுமே உழைத்துத் தெரிந்துக்கொள்ள வேண்டியதில்லை, பழிப்புக் காட்டினாலே போதும் என்ற எண்ணம் இங்கு வேரூன்றியிருக்கிறது. இந்திய தான்தோன்றிவாதச் சிந்தனையாளர்களில் முதன்மையானவரான ஒடுக்கத்தெ கேசவன் பிள்ளையை நான் முதன்முதலில் சந்தித்தபோது எதையும் ஆராயாமல் நிராகரிக்கக்கூடாது என்பதே அந்த பேராசான் எனக்குச் சொன்ன முதல் அறிவுரை. [மலமானாலும் கிளறிப் பார்த்துவிட வேண்டும்.] இதை நான் விமரிசகர் உறக்கப்பரம்பில் வர்கீஸிடம் தொலைபேசியில் சொன்னபோது அவர் ஒரு சிறு மௌனத்திற்குப் பின் சொன்னார், "உண்மைதான், நாற்றத்தைப் பார்த்தால் முடியாது".

நுண்ணுணர்வற்ற வாசகர்களால் பாட்டி வடை சுட்ட கதை ஒரு எளிய நீதிக்கதையாகக் குறுக்கப்பட்டுவிட்டது. இது கதையின் மேற்பரப்பை மட்டுமே வாசிக்கும் எளிய வாசக மனப்பான்மையின் விளைவு. உண்மையில் இலக்கியம் பல அடுக்குகளைக் கொண்டது. ஒவ்வொரு அடுக்கும் ஒவ்வொருவிதமானக் கதையைச் சொல்லிச் செல்லும். இது பல்லடுக்குப் பரப்படிவாதம் (multiplexed subterraneanism) எனப்படுகிறது. தமிழில் ஒன்றேமுக்கால் அடுக்குக்கு மேற்பட்ட சிறுகதை எழுதப்பட்டதில்லை என்று முன்பு நான் ஒரு விரிவானக் கட்டுரை எழுதினேன். அடுத்த இரண்டு மாதத்தில் மட்டும் அதற்கு நாற்பத்தி இரண்டு எதிர்வினைகள் வெளியாயின. இவற்றில் முப்பத்தி ஒன்பது அக்கப்போர் மொழியில் எழுதப்பட்ட வசைக்கட்டுரைகள். அவற்றை நான் படிப்பதோ பொருட்படுத்துவதோ இல்லை. எண்ணிக்கையை கணக்கு வைத்திருப்பதோடு சரி.

இக்கதையின் துவக்கம் முற்றிலும் யதார்த்தத்தன்மை உடையதாக இருக்கிறது. [அன்இமேஜினபிள் ரியலிசம் என்பார் இந்திர குமாரசாமி.] தனியே வடை சுட்டுக்கொண்டிருக்கும் பாட்டி ஒரு ஆழமானப் படிமம். ஒருவகையில் அது பழமையின், இயற்கை சார்ந்த வாழ்வுமுறையின் குறியீடு. அத்தகைய வாழ்வுமுறை இயற்கையை எதிர்த்து வெற்றிக்கொள்ளத் துடிக்கும் மானிட இயக்கத்தின் முன் தோல்வியுறுவதே பாட்டியின் இழப்பின் மூலம் உருவகப்படுத்தப்படுகிறது என்பதை தேர்ந்த வாசகன் அகவயமாக உணர்ந்துக்கொள்ளமுடியும். வாசகனுக்கு மட்டுமல்லாமல் படைப்பாளிக்கும் மன நெகிழ்ச்சியை அளிக்கத்தக்க இடம் அது. ஜூலியட் தற்கொலை செய்துக் கொள்ளும் கட்டத்தில் ஷேக்ஸ்ப்பியர் மேசையில் தலையை முட்டி அழுதிருப்பார். அது அப்படித்தான் இருக்கமுடியும். வேறு வழியில்லை.

கதையில் நரிக்கும் காகத்துக்கும் இடையே நிகழும் உரையாடல் யதார்த்தவாதத் தளத்திற்கு ஒவ்வாத மிகைத்தன்மை கொண்டதாக இருக்கிறது என்று பொதுவாக சொல்லப்படுவதுண்டு. இங்குள்ள முற்போக்காளர்கள் உடனே அதை தென்னமெரிக்க மாய யதார்த்தவாதத்துடன் முடிச்சு போடுவார்கள். அவர்களுக்குப் படிக்கக் கிடைத்த ஐரோப்பியத் துண்டுப் பிரசுரங்கள் மூலம் அவர்கள் அந்த முடிவுக்கே வரமுடியும். உண்மையில் பாட்டி வடை சுட்ட கதை நம் காவிய மரபில் உறுதியாக காலூன்றி நின்று நம்முடன் பேசுகிறது. பெரும்பாலும் யதார்த்தத் தளத்தில் நிகழும் நம் காவியங்கள் சில உச்சத் தருணங்களில் மட்டும் சாகச, மாயாஜாலத் தளங்களுக்குச் சென்றுத் திரும்புவதை நாம் பார்க்கலாம். கிழக்கு ஐரோப்பிய பூடகவாத எழுத்தாளர்களான டிமிட்ரி காரசேவ், ஹென்ரிக் சீவல், ஸ்லோபடோன் பூந்தி ஆகியோரது சில கதைகளிலும் இந்தப் போக்கைப் பார்க்கலாம். கறாரானத் தர்க்கவாதியான விமரிசகர் ஆதி குலோத்துங்கன் மற்றொரு கோணத்தை முன்வைக்கிறார். நரி பேசியது என்பதை அப்படியே பொருள் கொள்வது புனைவு உண்மையை பொது உண்மையாக எண்ணும் போக்கு என்கிறார் அவர். நரி உண்மையில் ஊளையின் மூலமே பேசியிருக்கவேண்டும். [அவ்வ்வ்வ்வ் ம்ம்ங்ஊஊஊய்ய்ய் - நீ ரொம்ப அழகா இருக்கே]

எல்லையற்றக் காலப் பெருவெளியின் முன் மானிட முயற்சிகள் எத்தனை அற்பமானவை என்பதையே இக்கதை உணர்த்தும் உச்சத் தரிசனமாக நான் காண்கிறேன். கிருஷ்ணநகரத்தில் அவ்வப்போது எட்டிப்பார்க்கும் கரிய நாயைப் போல இக்கதையில் நரி காலத்தின் குறியீடாகவே வருகிறது. நரி ஓடிப் போய்க்கொண்டிருப்பதாகச் சொல்லி கதையை முடிப்பது அகத்தூண்டலை ஏற்படுத்தும் பலம் வாய்ந்த புனைவு உத்தி. யுகம் யுகமாக முடிவின்மையை பின்தொடர்ந்து செல்கிறது நரி. கூடவே அதன் ஊளையும்.

29 மறுமொழிகள்:

:))

அய்யோ. தாங்கல. :)

-மதி

rasiththen :)

குறைந்தது ஆறு மலையாள விமர்சகர்கள், கவிஞர்கள்
பெயர் இல்லாமல் எழுதினால் ஜெமோ
பாணி இலக்கிய விமர்சனமே அல்ல
என்பது உங்களுக்குப் புரியவில்லை :).

:)))

உண்மையில் இதுதான் அங்கதம். அருமை.

Excellent!

Strange that Nagarjunan has written on the fox and the crow story..

http://nagarjunan.blogspot.com/2008/02/blog-post_28.html

ஜெ.மோ வசைக்கடிதங்களை கணக்காகச் சொல்வதுபோல், அவரை விமர்சிக்க அவரை கவனமாக பிந்தொடருவது தெரிகிறது..ஆனாலும் சூப்பருங்க..:)

ஜெயமோகனை பகடி செய்வது சரி.ஆனால் அவர் இந்த விவாதங்களை தாண்டி தொடர்ந்து
எழுதுகிறார், விவாதிக்கிறார். அவர் எங்கோ போனாலும் நீங்கள் அதே புள்ளியில் நிற்கிறீர்கள்.
இதை எத்தனை நாள் செய்ய முடியும்.
இத்துடன் இந்த சர்ச்சையை விடுவிடலாமே.

முழுக்கமுழுக்க விளம்பர தேய்வழக்குகளினாலான ஒரு கட்டுரையை சுஜாதா ஒருமுறை எழுதினார் என்று ஜெ.மோ.வின் பதிவில் படித்து சற்று அதிகப்படியாக அகத்தூண்டல் பெற்றுவிட்டதன் விளைவாக ஜெ,மோ.வின் தேய்பதங்களையும் தேய் அடவுகளையும் கொண்டு ஒரு கட்டுரை எழுதிப்பார்க்கலாம் என்ற எண்ணத்தில் எழுதியது இது. பின்னூட்டங்களைப் பார்க்கும்போது பிடித்தது ஒரேயடியாக குரங்காகிவிடவில்லை என்று தோன்றுகிறது. கருத்து தெரிவித்த நண்பர்களுக்கு நன்றி.

//ஆனால் அவர் இந்த விவாதங்களை தாண்டி தொடர்ந்து எழுதுகிறார், விவாதிக்கிறார். அவர் எங்கோ போனாலும் நீங்கள் அதே புள்ளியில் நிற்கிறீர்கள்.//

அவரையும் என்னையும் ஒப்பிட்டு நீங்கள் எழுதுவதைப் பார்த்தால் சிரிப்பு தான் வருகிறது. நான் எழுத்தாளனோ, விமரிசகனோ, தத்துவ ஆர்வலனோ அல்ல. இத்துறைகளில் ஜெ.மோ.வின் உழைப்பையும் அனுபவத்தையும் ஒருபோதும் மறுக்கமுடியாது. என் வாசிப்பின் அளவு மிகக் குறைவானது. ஒரு வருடத்தில் இலக்கியம் என்று வகைப்படுத்தத்தக்க இருபத்தைந்துப் புத்தகங்களை நான் படித்தால் அதுவே அதிகம். ஜெயமோகன் அடைந்துவிட்ட / அடையப்போகும் இலக்குகளை அடையவேண்டும் என்ற எண்ணமெல்லாம் எனக்கு அறவே இல்லை. இணையத்தில் எழுதுவது எனக்கு ஒருவித இளைப்பாறல் மட்டுமே.

//ஜெ.மோ வசைக்கடிதங்களை கணக்காகச் சொல்வதுபோல், அவரை விமர்சிக்க அவரை கவனமாக பிந்தொடருவது தெரிகிறது..ஆனாலும் சூப்பருங்க..:)//

இளவெண்ணிலா எம்கேகுமார் சொல்வதை நான் வழிமொழிகிறேன்.

என்னத்தச் சொல்ல அண்ணாச்சி, தமிழ்ல பகடிப் புனைவுக்கு ஒரு கொறச்சலும் இல்லேன்னு நிரூபிச்சிட்டிய :-)

42 எதிர்வினைகள்தானா?

அபப்டியே இதையும் கொஞ்சம் பாருங்க
http://asifmeeran.blogspot.com/2004/12/blog-post_21.html

அருமையா இருக்கு.
//ஜூலியட் தற்கொலை செய்துக் கொள்ளும் கட்டத்தில் ஷேக்ஸ்ப்பியர் மேசையில் தலையை முட்டி அழுதிருப்பார். அது அப்படித்தான் இருக்கமுடியும். வேறு வழியில்லை.// இந்த இடம் வர்ரப்ப என்னால சிரிப்பை அடக்க முடியலை.. :)

//நுண்ணுணர்வற்ற வாசகர்களால் பாட்டி வடை சுட்ட கதை ஒரு எளிய நீதிக்கதையாகக் குறுக்கப்பட்டுவிட்டது. இது கதையின் மேற்பரப்பை மட்டுமே வாசிக்கும் எளிய வாசக மனப்பான்மையின் விளைவு. உண்மையில் இலக்கியம் பல அடுக்குகளைக் கொண்டது. ஒவ்வொரு அடுக்கும் ஒவ்வொருவிதமானக் கதையைச் சொல்லிச் செல்லும். இது பல்லடுக்குப் பரப்படிவாதம் (multiplexed subterraneanism) எனப்படுகிறது. தமிழில் ஒன்றேமுக்கால் அடுக்குக்கு மேற்பட்ட சிறுகதை எழுதப்பட்டதில்லை என்று முன்பு நான் ஒரு விரிவானக் கட்டுரை எழுதினேன். அடுத்த இரண்டு மாதத்தில் மட்டும் அதற்கு நாற்பத்தி இரண்டு எதிர்வினைகள் வெளியாயின. இவற்றில் முப்பத்தி ஒன்பது அக்கப்போர் மொழியில் எழுதப்பட்ட வசைக்கட்டுரைகள். அவற்றை நான் படிப்பதோ பொருட்படுத்துவதோ இல்லை. எண்ணிக்கையை கணக்கு வைத்திருப்பதோடு சரி.//

:) சிரிச்சு வயிறு வலிக்குது ஜெகத்!

(ஜெயமோகன் என்ற சிங்கத்தைப்) பின் தொடரும்
(ஜெகத் என்ற)
நரியின் ஊளை -
நன்றாக பொருந்துகிறது.
நரி ஊளைதான் இடும், அதால் சிங்கம் போல் கர்ஜிக்கவா முடியும்.

அருமையான அங்கதம். எனக்கும் ஆசீப் எழுதிய கதைக்குதான் விமர்சனம் எழுதி இருக்கிறீர்களோ எனத் தோன்றியது ;-)

Friend,

Pinnutom idavae pidikatha ennaiyum pinnutom ida vaithu vittergal.

Je.Mo vin theveera vasargal kuda Ithai padithu rasika mudiyum.

Ilakiya Tharamana Nagaisuvai.

Guna

அற்புதமான பகடி.

திரு ஒரு பெரியாரிய அடிப்படைவாதி,
ஜெமொ ஒரு பெரியாரியஎதிர்ப்பு அடிப்படைவாதி- இருவரும் தடாலடியாக எழுதுபவர்கள்,
ஜல்லியடிப்பார்கள். இருவரும் குமரி
மாவட்டத்துக்காரர்கள்.
இன்னும் 4 ஒற்றுமை பிறகு :)

// Anonymous எழுதியது:
திரு ஒரு பெரியாரிய அடிப்படைவாதி,//

:)) சிரித்தேன் அனானி! வேற ஒண்ணும் இல்லீங்களா?

அருமையா எழுதியிருக்கீங்க. அவர் தளத்தில் எடுத்துப் போட்டால் அவர் சீரியசாக எழுதியது போலவே தோன்றிவிடும். இருங்க கேட்டு சொல்றேன்.

:)

நல்ல கட்டுரை ஜெகத். வாழ்த்துகக்ள். என் குடும்பம் பற்றிய ஒருவரியும் இருந்திருந்தால் பூரணமாகியிருக்கும். கட்டுரைகலில் அதையும் என்னால் தவிர்க்க முடிவதில்லை. மீண்டும் வாழ்த்துகக்ள். நல்ல நகைச்சுவையை ரசிக்கும் பண்பட்ட் வாசகரக்ளும் உங்களுக்கு அமைந்திருக்கிறார்கள்.

அருமையான பகடி ஜெகத். ஆபிஸ்ல ஒரு அளவுக்கு மேல சிரிக்க முடியாதுங்கறதால ரொம்ப கஷ்டப்பட்டு அடக்கறேன்.

//இதை நான் விமரிசகர் உறக்கப்பரம்பில் வர்கீஸிடம் தொலைபேசியில் சொன்னபோது அவர் ஒரு சிறு மௌனத்திற்குப் பின் சொன்னார், “உண்மைதான், நாற்றத்தைப் பார்த்தால் முடியாது”.//

//இது பல்லடுக்குப் பரப்படிவாதம் (multiplexed subterraneanism) எனப்படுகிறது.//

//அது அப்படித்தான் இருக்கமுடியும். வேறு வழியில்லை.//

//யுகம் யுகமாக முடிவின்மையை பின்தொடர்ந்து செல்கிறது நரி. கூடவே அதன் ஊளையும்//

அப்படியே ஜெமோ தான். :))

ஜெமோ கொடுத்த பின்னூட்டம் மூலமா தான் கட்டுரைக்கு வந்தேன்.

இந்தப் பதிவு பலருக்கும் பிடித்திருப்பது குறித்து மகிழ்ச்சி. கருத்து தெரிவித்த நண்பர்கள் அனைவருக்கும் நன்றி.

யாருடைய நடையை பகடி செய்து (அல்லது செய்வதாக நினைத்துக்கொண்டு) எழுதினேனோ அவரே இதைப் பாராட்டியிருப்பது நான் எதிர்பார்க்காத ஒன்று. அதற்காகவும் மலையாளப் பதிவுகளுக்காக நான் உருவாக்கிய மலையருவி இணையப்பக்கத்தை தன் வாசகர்களுக்குப் பரிந்துரைத்திருப்பதற்காகவும் ஜெயமோகனுக்கு நன்றி.

http://nayanam.blogspot.com/2008/03/blog-post_17.html

நீங்கள் என்ன சொல்லப்போகிறீர்கள்?

அன்புள்ள ஜெதத்
ஜெயமோகன் அவர்களின் பதிவின் ஒரு சுட்டியில் இருந்து உங்கள் பதிவைக் கண்டேன். ஜெயமோகன் அவர்களை நையாண்டி செய்து நீங்கள் எழுதியிருந்த அந்த பதிவு - சுஜாதாவின் பாஷையில் - "தூள் வாத்தியாரே". எனக்கு ஜெயமோகன் அவர்களின் எழுத்து மிகவும் பிடிக்கும். ஒரு கவர்ச்சி ஈர்ப்பு அவர் கதைகளில் உண்டு.
அவரைப் பற்றிய இவ்வளவு விரிவான ஆராய்ச்சி - ஜெயமோகன் அவர்களைப் பற்றிய உங்களின் நுண்ணிய அவதானிப்பு - என்னை வியக்க வைக்கிறது. நன்றாக எழுதுகிறீர்கள். தொடர்ந்து எழுதுங்கள்.
வாழ்த்துக்களுடன்
கார்த்திக். சு

புத்தம் புதிய தமிழ் திரட்டி உலவு.காம்
தமிழ் வலைப்பூகள் / தளங்களின் சங்கமம் உலவு.காம்
www.ulavu.com
(ஓட்டுபட்டை வசதிஉடன் )
உங்கள் வலைப்பூவை இணைத்து உங்கள் ஆதரவைதருமாறு வேண்டுகிறோம் ....

இவண்
உலவு.காம்

மிகவும் அருமையான பகடி.ஜூலியட் ஒரு வரியை எடுத்துவிட்டு இன்னும் நூறு வார்த்தைகள் இதே போல் எழுதி(அஜிதன், நாஞ்சில் நாடன்,சு.ரா- அங்கங்கே சேர்த்துக் கொள்ளவும்)அவரது இணைய தளத்திலேயே போட்டால் கேள்வி கேட்டு பின்னூட்டமும் வரும் அவரும் மெனக்கெட்டு பதில் சொல்லிக்கொண்டு இருப்பார்.

:))

அய்யோ. தாங்கல. :)


மிகவும் அருமையான பகடி.