ஜெயமோக தரிசனம்

நேற்று முன்தினம் முதன்முதலாக ஜெயமோகனை நேரில் காணவும் அவர் பேச்சைக் கேட்கவும் வாய்ப்புக் கிடைத்தது. சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் சங்க ஆண்டு விழாவில் "இலக்கியம் எதற்காக?" என்றத் தலைப்பில் பேசினார். விழாவின் மற்றொரு சிறப்பு விருந்தினரான வைரமுத்துவின் பேச்சைக் கேட்க வந்தவர்கள் நிரம்பியிருந்த அரங்கத்தில் பேசத் தொடங்குவதற்கு முன் ஜெயமோகன் சொன்னார்: "நான் அடிப்படையில் ஒரு பேச்சாளன் அல்ல. என் ஊடகம் எழுத்து. உங்களில் பெரும்பாலானவர்களை மகிழ்விக்கக் கூடிய ஒரு உரையை என்னால் அளிக்க முடியாது. அதற்காக முதலிலேயே வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன்." இப்படி சொல்லிவிட்டு சுமார் அரை மணி நேரம் மிக அழகாக, தமிழ் மேடைப்பேச்சுகளுக்கு உரிய தோரணைகள் எதுவும் இல்லாமல் மெல்லியக் குரலில் பேசினார். என் நினைவிலிருந்து சில பகுதிகள். (ஜெயமோகன் பயன்படுத்திய சொற்கள் சற்று மாறுபட்டிருக்கலாம்.)

"இங்கே எத்தனையோ நாற்காலிகள் இருக்கின்றன. ஆனால் நான் ஒரு நேரத்தில் ஒரு நாற்காலியில் தான் அமர முடியும். அதுபோல் உலகத்தில் வாழ சாத்தியமான எத்தனையோ வாழ்க்கைகள் இருக்கும்போது நாம் ஒரு வாழ்க்கையை மட்டுமே வாழ முடியும். மனித வாழ்வின் மிகப்பெரிய துயரமே இதுதான்" என்று தன் குரு நித்ய சைதன்ய யதியை மேற்கோள் காட்டிவிட்டு, வாழமுடியாத எத்தனையோ வாழ்க்கை அனுபவங்களை இலக்கியத்தின் மூலம் அடையலாம் என்றார். இதை மேலும் விளக்குகையில் சொன்னார்: "என் சிறுவயதில் எனக்கு நிறைய புத்தகங்கள் படிக்கக் கிடைத்தன. அதன் மூலம் நான் செயிண்ட் பீட்டர்ஸ்பர்க் சாலைகளில் அலைந்தேன், நோட்ரடேம் சர்ச்சில் அமர்ந்திருந்தேன், பாரிஸ் தெருக்களில் சுற்றித் திரிந்தேன். இலக்கியத்தின் மூலம் தேசங்களையும் காலத்தையும் கடந்து செல்ல முடிந்தது."

"யாருக்கு இலக்கியமும் கற்பனையும் தேவையில்லை? ஒரு முச்சந்தி வியாபாரிக்குத் தேவையில்லை. முழுமையாக விடுதலையடைந்த மனிதர்களுக்கும் தேவையில்லை (காந்தி டால்ஸ்டாயின் ஒன்றிரண்டுச் சிறுகதைகளைத் தவிர வேறு இலக்கியம் எதையும் படித்ததில்லை.) இந்த இரண்டு எல்லைகளுக்கும் நடுவில் இருப்பவர்களுக்கு இலக்கியம் தேவை"

"என் இளம் வயதில் வைக்கம் முகமது பஷீர் போன்ற பெரும் இலக்கியவாதிகளை சந்தித்து இலக்கியத்தின் அடிப்படையான பயன் என்ன என்று கேட்டிருக்கிறேன். அவர்கள் அனைவருமே "a sense of justice", "ethics" போன்ற பதில்களையே தந்தார்கள். அறம் தான் இலக்கியத்துக்கு அடிப்படையானது. ஒவ்வொரு மனதிலும் அறம் என்ற விதை இருக்கிறது. கொஞ்சம் ஈரம் கிடைத்தால் கூட அது முளைத்துவிடும். நல்ல இலக்கியம் அந்த ஈரத்தை அளிக்கும். என் புத்தகங்களில் எந்தப் பக்கங்களில் எல்லாம் வாசகனின் கண்ணீர் துளி விழுந்திருக்கிறதோ அங்கெல்லாம் நான் அறத்தைத் தான் சொல்லியிருக்கிறேன்".

அறத்தைப் பற்றிப் ஜெயமோகன் பேசுகையில், தன்னுடைய பத்தொன்பதாம் வயதில் தன் பெற்றோர் தற்கொலை செய்துக்கொண்ட பின்னர் ஒரு துறவியாக கையில் காசில்லாமல் இந்தியா முழுக்க அலைந்தபோது எத்தனையோ பெண்கள் தனக்கு உணவளித்ததை சொன்னதும் என் பக்கத்து இருக்கைகளில் அதுவரை அரட்டையடித்துக் கொண்டிருந்த இரண்டு பெண்கள் 'உச்' கொட்டியபடிக் கூர்ந்து கவனிக்கலானார்கள்.

*****

தமிழில் வேறு எந்த எழுத்தாளருக்கும் இல்லாத ஒரு சிறப்பு ஜெயமோகனுக்கு இருக்கிறது என்பதை அவரைப் பற்றிய இணைய விவாதங்களிலும் நேர்ப்பேச்சுகளிலும் பலமுறை கண்டிருக்கிறேன். அவரது (சமூக / இலக்கிய) அரசியலை கடுமையாக எதிர்ப்பவர்களில் பலரும் கூட (இதில் நானும் அடக்கம்) அவர் ஒரு மிகச்சிறந்த படைப்பாளி என்பதை ஏற்றுக்கொள்கிறார்கள். ஜெயமோகனை நிராகரிக்கலாம். அவர் படைப்புகளை எளிதாக நிராகரிக்க முடியாது. இப்படிப்பட்ட ஒருவருக்குத் தமிழ் பெரும்போக்குக் கலாச்சாரத்தில் உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை என்ற உண்மை மேற்படி விழாவில் மீண்டும் ஒருமுறை உறுதிப்பட்டது. ஜெயமோகன் தன் மனைவியுடன் அரங்கினுள் நுழைந்தபோது சலனமற்று இருந்தக் கூட்டம் சில நிமிடங்கள் கழித்து வைரமுத்து நுழைந்தபோது எழுந்து நின்று பலத்த கரவொலி எழுப்பியது. பெரும்பாலானவர்கள் ஜெயமோகனைப் பற்றி எதுவுமே அறிந்திருக்கவில்லை என்று தோன்றியது.

சிங்கப்பூரில் சமீபகாலமாக தமிழகத்திலிருந்து வரும் பேச்சாளர்களுக்கு என ஒரு ரசிகர் கூட்டம் உருவாகியிருக்கிறது. வைரமுத்து, வலம்புரி ஜான், சாலமன் பாப்பையா, சுகி சிவம் போன்றவர்கள் வந்தபோது நுழைவுக் கட்டணம் அதிகமாக இருந்தும் கூட்டம் அலைமோதியது. டாலரைத் துரத்திச் சோர்ந்திருப்பவர்களின் தசைகளைப் பிடித்துவிடுவது போலப் பேச்சு இருக்கும். வைரமுத்துவுக்கு அலங்கார மேடைத்தமிழ் பலமென்றால் பாப்பையாவுக்கு நையாண்டி கலந்த கிராமிய பேச்சு. இப்படி பழகிவிட்டக் கூட்டத்தில் ஜெயமோகன் போன்றவர்கள் சொல்லும் விஷயங்களுக்கு குறிப்பிடும்படியான வரவேற்பு இல்லாமல் இருப்பது எதிர்பார்க்கத்தக்கதே.

தன்னால் பலமுறைக் கடுமையாக விமர்சிக்கப் பட்டவரான வைரமுத்துவை ஜெயமோகன் எப்படி எதிர்கொள்கிறார் என்பதைக் காண எனக்கு ஒரு அற்பத்தனமான ஆர்வம் இருந்தது. முதல்முறைப் பார்த்துக்கொண்ட போது இருவரும் வணக்கம் தெரிவித்துக்கொண்டு ஓரிரு வார்த்தைகள் பேசிக்கொண்டனர். தன்னையும் கலைஞரையும் இலக்கியவாதிகளே இல்லை என்றுச் சொல்லி சர்ச்சையைக் கிளப்பிய ஜெயமோகனுக்கு பதிலடி கொடுக்கவேண்டும் என்று வைரமுத்து நினைத்தாரோ என்னவோ ஜெயமோகன் சொன்ன ஒருக் கருத்து முட்டாள்தனமானது என்பது போல் சித்தரித்து கைத்தட்டல் வாங்கிக்கொண்டார்.

ஜெயமோகன் பேசும்போது வெள்ளைக்காரர்கள் (பிரித்தானியர்கள்) இந்தியா போன்ற ஒரு பெரிய நாட்டை தங்கள் ஆதிக்கத்தின் கீழ் வைத்திருந்தது வெறும் இராணுவ பலத்தால் மட்டும் அல்ல, அவர்களுடைய அறவுணர்வும் காரணம் என்றார். கி.ராஜநாராயணனின் கோபல்ல கிராமம் கதையில், முன்பு படையெடுத்து வந்தவர்களைப் போல் பெண்களை வன்புணர்வதிலோ வென்ற ஊர்களைக் கொள்ளையிடுவதிலோ வெள்ளைக்காரப் படைகள் ஈடுபடுவதில்லை என்று அறிந்ததும் ஊர் மக்கள் அவர்களை வரவேற்கும் பகுதியை விவரித்தார். பிரித்தானியரை விட மேலான அறத்தை காந்தி முன்வைத்தப் பிறகே அந்த கிராம மக்கள் சுதந்திரப் போராட்டத்தில் இணைந்தனர் என்று சொன்னார். வைரமுத்து பேசும்போது வெள்ளைக்காரர்கள் செவ்விந்தியர்களுக்குச் செய்தக் கொடுமைகளையும், இந்தியாவில் வாள் மட்டுமே வைத்துப் போரிட்ட இனங்களின் மீது பீரங்கித் தாக்குதல் நடத்தியதையும் விவரித்து "இதுதான் ஜெயமோகன் சொல்லும் அறமா?" என்று rhetorical-ஆக கேட்டபோது கூட்டம் தொடர்ந்துக் கைத்தட்டியது.

7 மறுமொழிகள்:

pathiviRku nanRi jekath.

ஜெமோ வின் பன்முக தரிசனத்தை இங்கு பகிர்ந்து கொண்டதற்கு நன்றி !

கவரேஜுக்கு நன்றி

//வைரமுத்து பேசும்போது வெள்ளைக்காரர்கள் செவ்விந்தியர்களுக்குச் செய்தக் கொடுமைகளையும், இந்தியாவில் வாள் மட்டுமே வைத்துப் போரிட்ட இனங்களின் மீது பீரங்கித் தாக்குதல் நடத்தியதையும் விவரித்து "இதுதான் ஜெயமோகன் சொல்லும் அறமா?" என்று rhetorical-ஆக கேட்டபோது கூட்டம் தொடர்ந்துக் கைத்தட்டியது.//

யார் எந்த நிலையிலிருந்து, தளத்திலிருந்து பேசுகிறார்கள் என்பதை எளிதாய் கண்டுபிடிக்க முடிகிறது.

கூட்டத்துக்காக பேசும்வைரமுத்துவும் கலைஞரே ஆனாலும் கருத்தைதயங்காமல் சொல்லும் செயமோகனும் வேறு துருவங்கள்.

செயமொகன் சொல்லும் வாழ்வியல்/ஆன்மீக தத்துவங்களுக்கும் 'ஊரத் தெரிஞ்சுக்கிட்டேன்' வகை தத்துவங்களுக்கும் என்ன வித்தியாசம் என்பது கண்டுபிடிக்க கடினமானதா?

நல்ல பதிவு ஜெகத்.

நான் வைரமுத்துவுக்கு வாக்காலத்து வாங்கவில்லை.ஆனால் தளங்களை பற்றியும் வாழ்வியல் தத்துவம் ஆன்மீக தத்துவம் என்றெல்லாம் வரும்போது இதை கேட்கவேண்டியதாகிறது.

வைரமுத்து சொன்னதில் என்ன தப்பு?

சொன்னதில் தப்பில்லை... (சப்பைக்கட்டு?) ஆனால் ஒரு நிகஷ்வை, வரலாற்றை இருவர் இருவேறு கோணங்களில் புரிந்திருக்கிறார்கள் என்பதை ஆராயலாம். இருவரின் பேச்சிலும் நியாயமிருக்கிறது.

'ஊரைத்தெரிஞ்சுக்கிட்டேனு'ம் தத்துவம்தான் 'மாயா'வும் தத்துவம்தான்.

வைரமுத்து கைதட்டலுக்குப் பேசிப் பழகிவிட்டார் - இது தப்பில்லை ஆனால் ஒரு நிலைப்பாடு. செயமோகன் இன்னொரு (எதிர்) நிலையில் நிற்கிறார். இதைத்தான் சுட்டிக்காட்டுகிறேன்.

இந்த விஷயத்தை பொறுத்தவரை இந்த நிலைகளை தெளிவாக விளக்கமுடியுமா சிறில்? எனக்கு கொஞ்சம் குழப்பமே