என் வாசிப்பில் ஜெயமோகன் - 2

ஜெயமோகனின் நாவல்கள் மற்றும் சிறுகதைகளைப் படித்து அவர் மீது ஏற்பட்ட மதிப்பின் காரணமாக அவருடைய புனைவு அல்லாத எழுத்துக்களையும் தேடிப் படிக்கத் தொடங்கினேன். திண்ணை மற்றும் மரத்தடி இணையதளங்களில் அவர் எழுதியிருந்த ஏராளமான கட்டுரைகள்/கடிதங்கள், 'சங்கச்சித்திரங்கள்', 'வாழ்விலே ஒரு முறை' ஆகிய கட்டுரைத் தொகுப்புகள் போன்றவை இதில் அடங்கும். அவரது உழைப்பும், வாசிப்பின் அளவும் சொல்ல வரும் சிக்கலானக் கருத்துக்களைக் கூட மிகத் தெளிவாக வெளிப்படுத்தும் எழுத்தாற்றலும் பிரமிப்பூட்டுவதாக இருந்தாலும் அவரது பல கருத்துக்களும் நிலைபாடுகளும் என்னால் ஏற்றுக்கொள்ள முடியாதவையாகவே இருக்கின்றன.

*****

மரத்தடி இணையதளத்தில், மாய யதார்த்தப் பாணியில் தமிழில் எழுதப்பட்டப் படைப்புகளைக் குறித்துக் கேட்ட ஒரு வாசகருக்கு ஜெயமோகன் பதிலளிக்கையில், கோணங்கி, எஸ். ராமகிருஷ்ணன் மற்றும் சிலர் இந்த பாணியில் எழுதிய கதைகளைப் பட்டியலிட்டுவிட்டு "இவற்றை ஒட்டுமொத்தமாக அவற்றின் காகித மதிப்புக்கூட இல்லாத குப்பைகள் என்றே சொல்வேன்" என்கிறார். (பின்னர் இந்த இணைய விவாதங்கள் 'எதிர்முகம்' என்ற பெயரில் புத்தகமாக வந்தபோது சில சொற்களை நுட்பமான முறையில் மாற்றி இந்த வாக்கியத்தின் கடுமையைக் குறைக்க முயன்றிருப்பதைக் கவனித்தேன்). சக எழுத்தாளனின் பலநாள் உழைப்பில் உருவான ஒரு ஆக்கத்தை குப்பை என்றுக் குரூரமாகத் தூற்றுவதைப் பற்றி ஜெயமோகனிடம் கேட்டால் ஒரு திறனாய்வாளன் 'கறாராக' 'சமரசமற்று' இருக்கவேண்டும் என்றுச் சொல்லக்கூடும். ஆனால் இலக்கியப் படைப்புகளைப் பொறுத்தவரை குப்பை எது கோமேதகம் எது என்றுப் பகுத்தறிய அவர் என்ன அளவுகோல் வைத்திருக்கிறார் என்பதே முக்கியமானக் கேள்வி.

இலக்கியக் கருத்துக்கள் அகவயமானவை என்றும் அவற்றை புறவய நிரூபண முறைகளைப் பயன்படுத்தி உண்மையென நிரூபிக்கவோ பொய்ப்பிக்கவோ முடியாது என்றும் ஜெயமோகன் எழுதியிருக்கிறார். வேறு தளங்களுக்கும் இது பொருந்தும். ஐஸ்வர்யா ராயை விட நந்திதா தாஸ் அழகானவர் என்ற கருத்து பெரும்பாலானவர்களின் நம்பிக்கைக்கு எதிரானதாக இருந்தாலும் அந்தக் கருத்தைக் கொண்டிருக்கவும் விவாதங்களில் முன்வைக்கவும் எனக்கு உரிமை உண்டு. ஆனால் அந்தக் கருத்து முற்றிலும் அகவயமானது என்பதையும் அதை ஒருபோதும் நிரூபிக்க முடியாதென்பதையும் நான் அறிந்திருக்கும் நிலையில் என்னுடன் முரண்படுவோர் அறிவிலிகள் என்றோ அவர்களுடையக் கருத்துக்கள் குப்பை என்றோ நான் மட்டம் தட்டக்கூடாது. ஆனால் இலக்கியப் படைப்புகளைக் குறித்த விவாதங்களில் ஜெயமோகன் அதைத் தான் செய்கிறார்.

தன்னுடைய நாவல்கள் தவிர்த்து தமிழில் இதுவரை எழுதப்பட்ட அனைத்து நாவல்களிலும் முதன்மையானதாக ஜெயமோகன் அடையாளம் காட்டுவது ப. சிங்காரத்தின் புயலிலே ஒரு தோணி நாவலை. தமிழ் தேசியவாதத்தை நையாண்டி செய்யும் பல பகுதிகளை உள்ளடக்கிய இந்த நாவல் வெளிவந்து முப்பத்தைந்து ஆண்டுகளுக்கு மேலாகியும் சமீபகாலம் வரை எந்த கவனிப்பையோ அங்கீகாரத்தையோ பெற்றிருக்கவில்லை. ஜெயமோகனுக்கு இப்போது இந்த நாவலைக் கொண்டாடுவதில் உள்ள ஒரு சிரமம் என்னவென்றால் அவர் கடந்த காலங்களில் இந்த நாவலை தட்டையான சாகச நாவல் என்று பலமுறை நிராகரித்திருக்கிறார். முதன்முறை வாசித்தபோது உருவான இக்கருத்து பின்பு "நாவல்" என்ற நூலை எழுதுவதற்காக அதை மறுபடி படித்தபோது மீண்டும் உறுதிப்பட்டதாக எழுதியிருக்கிறார். தமிழின் முதன்மையான நாவலை இரண்டு முறை (அதுவும் நாவல் என்ற வடிவத்துக்கு இலக்கணம் எழுதுமளவுக்குத் தன்னம்பிக்கை பெற்றப் பிறகு) வாசித்தும் நிராகரிக்கும் அளவிற்குத் தான் அவரது திறனாய்வு அளவுகோலின் நம்பகத்தன்மை இருக்கிறதென்றால் ஒரு படைப்பைக் "காகித மதிப்புக்கூட இல்லாத குப்பை" என்றுக் கரி பூசுவதற்கு முன் சற்று யோசித்திருக்கவேண்டாமா?

கறாராக விமர்சிக்கிறேன் என்ற பேரில் பெரிதும் மதிக்கப்படும் படைப்பாளிகளைக் குறித்து துச்சமாக ஏதாவது சொல்வதை ஜெயமோகன் ஒரு வழக்கமாகவே வைத்திருக்கிறார். உண்மையில் தமிழில் இதுவரை எழுதியவர்களில் தன்னை விடச் சிறந்த எழுத்தாளர் எவரும் இல்லையென்று ஜெயமோகன் உறுதியாக நம்புவது போல் தான் தெரிகிறது. கடந்த நூறாண்டுகளுக்கு மேலாகத் தமிழில் எழுதப்பட்ட நாவல்களில் ஆகச் சிறந்ததாக விஷ்ணுபுரத்தையும் அதற்கு அடுத்தபடியாக பின் தொடரும் நிழலின் குரலையுமே அவர் முன்வைக்கிறார். மலையாளத்திலும் எழுதிவரும் அவர் அங்குள்ளது போல் ஒரு அறிவுச் சூழல் தமிழில் உருவாகவில்லை என்கிறார். இது உண்மையாகவே இருக்கலாம். அதற்காக தமிழ் சூழலில் தன்னுடன் முரண்படுவோர் அனைவரையும் (குறிப்பாக முற்போக்குவாதிகள், திராவிட இயக்க சார்புடையவர்கள்) ஜமுக்காளத்தில் வடிகட்டிய முட்டாள்கள் என்ற ரீதியில் மட்டம் தட்டி எழுதுவதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

ஜெயமோகன் "பாமரத் தமிழ் மனம்" என்ற ஒரு கருத்தாக்கம் கைவசம் வைத்திருக்கிறார். தன்னுடைய கொள்கைகள், ரசனைகள், மதிப்பீடுகள் ஆகியவற்றோடு முரண்படும் தமிழர்களைப் புரிந்துக்கொள்ள அதைப் பயன்படுத்துகிறார் போலும். சில சமயங்களில் ஃப்ராய்ட் பிச்சை வாங்கும் அளவுக்கு இந்த பாமரத் தமிழ் மனதின் உளவியலை அவர் ஆராய்வதுண்டு. எடுத்துக்காட்டாக, இங்கே லியோனியின் பட்டிமன்றங்கள் தமிழ்நாட்டில் பெரும் வரவேற்பைப் பெற்றிருப்பது ஏன் என்று விளக்குகிறார்:

"அறிவார்ந்தது , முக்கியமானது ,பிரபலமானது என கருதப்படும் விஷயங்களையெல்லாம் திண்டுக்கல் லியோனி தூக்கிப்போட்டு உடைக்கும்போது பாமரத்தமிழ் மனம் மகிழ்ச்சி அடைகிறது. இந்த மனத்தின் உளவியலை நாம் கவனிக்கவேண்டும். இவர்கள் எதையும் உழைத்து தெரிந்துகொள்வதிலோ சிந்திப்பதிலோ ஆர்வமற்றவர்கள். அந்த அறியாமை காரணமாக தாழ்வுணர்ச்சி கொண்டவர்கள். ஆகவே அறிவார்ந்ததோ அங்கீகாரம் பெற்றதோ ஆன எந்த செயலையும் ஒருவகை எரிச்சலுடனோ நக்கலுடனோ பார்ப்பவர்கள். சமூகசேவகிக்கு விருது என்றோ விஞ்ஞானிக்கு பரிசு என்றோ தினத்தந்தியில் படித்ததுமே அதே டீக்கடையில் உட்கார்ந்து அதை கடுமையாக விமரிசிக்க ஆரம்பித்துவிடுபவர்கள். எல்லா இடத்திலும் இவர்கள் உண்டு என்றாலும் தமிழ்நாட்டில் இவர்கள் எண்ணிக்கையில் மிக அதிகம். அறியாமையையே தங்கள் தகுதியாக எண்ணிக் கொண்டிருப்பவர்கள் இவர்கள்."

ஜெயமோகனுடைய புனைவு ஆக்கங்களில் ஊறியவர்களுக்கு "ஜகன்மித்யை" சிறுகதையில் வரும் கதைசொல்லியின் அறைத்தோழன் பாத்திரம் நினைவுக்கு வரக்கூடும். நீட்சே பற்றியும் தத்துவம் பற்றியும் பேச ஆரம்பிக்கும் நம்பூதிரியை முதலில் நக்கல் செய்யும் அவன் பிறகு அவர் நிரந்தரச் சுழற்சி, எல்லையற்ற காலவெளி என்றெல்லாம் தன் தலைக்குமேலே பேசுவதைக் கண்டு மிரண்டு நெற்றியில் விபூதி பூசி ஜாதகக்கட்டைத் தூக்கிவருகிறான். "சாமி, குடும்பத்தில ஒரே கஷ்டம். நீங்க தான் பார்த்துச் சொல்லணும்". ஜெயமோகன் "அறியாமையையே தங்கள் தகுதியாக எண்ணிக் கொண்டிருப்பவர்கள்" தமிழ்நாட்டில் மிக அதிகம் என்ற முடிவுக்கு (கணக்கெடுப்பு ஏதும் நடத்தாமலே) எப்படி வந்தார் என்று யூகிப்பது கடினமல்ல.

தமிழர்களின் அறிவாற்றல் மற்றும் நாகரிகம் குறித்த ஒரு தாழ்வான எண்ணம் கேரளத்தில் பரவலாக உள்ளது நன்கு அறியப்பட்ட ஒன்று. என் பார்வையில், இதற்கு இரண்டு முக்கியக் காரணங்கள். நடிகைக்குக் கோயில் கட்டுதல், தலைவனுக்காகத் தீக்குளித்தல், தலைவிக்காக நாக்கை அறுத்து உண்டியலில் போடுதல் போன்ற செய்திகள் தொடர்ந்து அவர்களைச் சென்றடைவது ஒரு காரணம். இன்னொன்று கேரளமெங்கும் பரவியுள்ள ஏராளமான நாடோடி தமிழ் கூலித்தொழிலாளர்கள் தங்கள் ஏழ்மை மற்றும் அறியாமைக் காரணமாக வாழும் அவல வாழ்க்கை. தமிழர்கள் குறித்த இத்தகைய மனப்போக்கை வெளிப்படுத்திய மலையாளிகளுக்கு தான் பலமுறை எதிர்வினையாற்றியதாக ஜெயமோகன் சொன்னாலும் தமிழ் அறிவுச் சூழலைப் பற்றி ஒரு மட்டமான எண்ணத்தையே அவரும் கொண்டிருக்கிறார். தமிழின் ஆகச் சிறந்தப் பத்து நாவல்கள் என்று அவர் முன்வைத்த தரவரிசைப் பட்டியலில் ஆறு நாவல்கள் மலையாள மொழியையும் இலக்கியத்தையும் நன்கறிந்தத் தென் திருவிதாங்கூர்காரர்களால் எழுதப்பட்டவை என்பது இந்த மனப்போக்கின் அனிச்சையான வெளிபாடு எனலாம்.

*****

சரி, மாய யதார்த்த பாணியில் தமிழில் எழுதப்பட்டக் கதைகளை ஏன் குப்பை என்கிறார்? ஏன் இவ்வளவு கோபம்? அதே பதிலில் ஜெயமோகன் எழுதுகிறார்:

"மாய யதார்த்தம் ஒரு நிலப்பகுதியின், மொழியின் பண்பாட்டுப் பின்புலம் கொண்டது. அதை ரசிக்கலாம். இறக்குமதி செய்வது அபத்தம். பீட்சா சென்னையில் செய்யப்பட்டாலும் இத்தாலிய உணவே. நமது உணவு தோசைதான். நமது நாட்டார் மரபு, புராண மரபு ஆகியவற்றிலிருந்தே நம் மிகுபுனைவு வரமுடியும். என் ஆக்கங்களான விஷ்ணுபுரமும், நாகமும் புராண அழகியலில் இருந்து உருவானவை, படுகை நாட்டார் அழகியலில் இருந்து."

அப்படியானால் நூற்று முப்பது ஆண்டுகளுக்கு முன் ஐரோப்பாவிலிருந்துத் தமிழுக்கு இறக்குமதியான நாவல் என்ற வடிவத்தை ஏன் பயன்படுத்துகிறார் என்ற கேள்வியை விட்டுவிடுவோம். தான் புராண அழகியலிலிருந்து உருவாக்கியதாக ஜெயமோகன் சொல்லும் விஷ்ணுபுரத்தில் லத்தீன் அமெரிக்க மாய யதார்த்த நாவலிலிருந்து குறியீடுகளை இறக்குமதி செய்திருப்பது ஏன் என்ற கேள்வியைக் கூட விட்டுவிடுவோம். இலக்கியத்துக்கு நிலப்பகுதி, மொழி, பண்பாடு ஆகியவற்றின் அடிப்படையிலான எல்லைகள் உண்டு என்பதில் ஜெயமோகன் உறுதியாக இருக்கிறாரா என்பதே கேள்வி. அதே இணையதளத்தில் தலித் இலக்கியம், பெண்ணிய இலக்கியம் போன்ற தனி இலக்கிய பிரிவுகள் இந்திய சூழலில் தேவையா தேவையற்றதா என்று ஒரு வாசகர் கேட்டபோது அப்படி தனி அடையாளங்கள் தேவையில்லை என்று மறுத்து ஜெயமோகன் பதில் எழுதுகிறார்:

"தலித் அனுபவம் பிறருக்குச் சிக்காது என்று கொள்வோம். தலித்துக்களின் வாழ்க்கை அனுபவங்கள், அதன் விளைவான அந்தரங்க உணர்வுநிலைகள் அவர்கள் மட்டுமே அறியக்கூடியவை என்பதுதான் அதற்கான வாதம் இல்லையா? இதே வாதத்தை விரித்தெடுப்போம். வெள்ளையனின் அனுபவம் கருப்பனுக்குச் சிக்காது. மேலைநாட்டு அனுபவம் கீழை நாட்டுக்குச் சிக்காது. கன்னடனின் அனுபவம் தமிழனுக்குச் சிக்காது. செம்புல நிலப்பகுதி அனுபவம் கரிசல்மண்காரனுக்குச் சிக்காது. வறண்ட திருப்பத்தூரின் எழுத்து, பசுமை மண்டிய குமரிமாவட்டக்காரனுக்குப் புரியாது. அப்படியேப் போனால் என் அண்டைவீட்டானின் உணர்வு எனக்குப் புரியக்கூடாது. மனித மனம் எவ்வளவு பூடகமானது என நாம் ஒவ்வொருவரும் அறிவோம். எவருமே தங்கள் பகற்கனவுகளைப் பிறிதொரு உயிருக்குச் சொல்லியிருக்க மாட்டார்கள். ஆகவே கணவனின் உலகம் மனைவிக்குப் புரியாது. ஒரு மனிதனின் அந்தரங்கம் பிற எவருக்குமே புரியாது. ஆகவே இலக்கியம் என்பதே பொய்--அப்படித்தானா?

... தூந்திரப் பிரதேச மக்களின் வாழ்க்கையைப்பற்றி யூரி பலாயன் எழுதினால் குளிர்சாதனப்பெட்டிக்குள் மட்டுமே உறைபனியைக் கண்ட எனக்கு அது புரியும். இந்தச் சாத்தியத்திலிருந்தே இலக்கியம் உருவாகி நிலைநிற்கிறது. சங்ககால வாழ்வின் ஒரு தடயம்கூட எஞ்சாத இன்றும் கபிலன் என் ஆத்மாவுடன் பேசுகிறான். பின்லாந்தின் பழங்குடிமொழியில் கபிலனை மொழிபெயர்த்தால் இதே உணர்வை அவன் அங்கும் உருவாக்குவான். பேரிலக்கியங்கள் நாகரீகங்களை, மொழிகளை, காலங்களைத் தாண்டிச் சென்று தொடர்புறுத்தும் என்பது இருபதாம் நூற்றாண்டில் நிறுவப்பட்டுவிட்ட ஒன்று."

கனியன் பூங்குன்றனே கூட இதைவிடத் தெளிவாகச் சொல்லியிருக்கமுடியாது. சரி, துந்திரப் பிரதேச வாழ்க்கை தமிழனுக்குப் புரியும். கபிலனை பின்லாந்துக்கு ஏற்றுமதி செய்யலாம். அப்படியானால் லத்தீன் அமெரிக்க மாய யதார்த்த பாணியில் தமிழில் எழுதினால் மட்டும் அது ஏன் குப்பை ஆகிவிடுகிறது? மாய யதார்த்த பாணியைப் பயன்படுத்தி எழுதப்பட்டிருக்கும் எஸ். ராமகிருஷ்ணனின் நெடுங்குருதி நாவலைப் படிக்கும் போது நம் மனக்கண் முன் விரிவது இராமநாதபுரம் பக்கத்துக் கரிசல்காடா அல்லது கொலம்பியாவா? இதே மாய யதார்த்த யுத்தியை கையாண்டு எழுதப்பட்ட ருஷ்டியின் நள்ளிரவின் குழந்தைகளுக்கு இணையாக இந்தியாவைப் பேசிய இன்னொரு நாவல் இருப்பதாக தெரியவில்லை.

உண்மையில் இங்கே ஜெயமோகனின் நோக்கம் தலித் என்ற தனி அடையாளம் தேவையில்லை என்று மறுப்பதே. இது காந்தியார் காலத்திலிருந்தே கடைபிடிக்கப்படும் அரசியல் தான். தலித்துக்களுக்கென்று ஒரு தனி அரசியல் அடையாளத்தை நிலைநாட்ட அம்பேத்கார் முயன்றபோதெல்லாம் காந்தி அதைக் கடுமையாக (சாகும்வரை உண்ணாநோன்பு போன்ற வழிகளில்) எதிர்த்து முறியடித்திருக்கிறார். இன்று தலித் மக்கள் காந்தியை எப்படிப் பார்க்கிறார்கள் என்பதை தங்களுக்குச் அவர் சூட்டிய 'ஹரிஜன்' என்ற பெயரைத் தூக்கியெறிந்ததில் இருந்தே தெரிந்துக் கொள்ளலாம். (மாயாவதி: "நாங்கள் கடவுளின் மக்கள் என்றால் நீங்கள் என்ன சாத்தானின் மக்களா?")

*****

மேலே சுட்டியக் கேள்வி-பதில்கள் எதிர்முகம் என்ற பெயரில் அச்சில் வந்தபோது அதன் முன்னுரையில் ஜெயமோகன் இணையம் குறித்தும் இணையவிவாதங்களில் பங்கேற்போர் குறித்தும் தன் அதிருப்தியைப் பதிவு செய்திருக்கிறார். இணையத்தில் விவாதிக்க வருபவர்களின் பொதுவான தரம் விகடன் போன்ற பெரிய இதழ்கள் வழியாக அறிமுகமாகும் வாசகர்களை விடவும் குறைவானது என்கிறார். முழுநேர அரசுப்பணியில் இருந்துகொண்டே பெருநாவல்கள் பலவற்றை எழுதிய (விஷ்ணுபுரத்தில் கோபிலப்பட்டர்: "பத்து நாள் போதாதா ஒரு மகாகாவியம் எழுத?") ஜெயமோகன் சொல்கிறார்:

"இணைய வாசகர்களில் மிகப் பெரும்பாலானவர்கள் ஏதேனும் துறையில் பயிற்சி பெற்றவர்கள். சில சமயம் நிபுணர்கள். அவர்கள் உண்மையான சவாலை எதிர்கொள்வதும் உழைப்பதும் அத்துறையில் தான். இலக்கியம் அவர்களுக்கு இளைப்பாறுதலுக்காக மட்டுமே."

அவர் மேலும் சொல்கையில் தமிழ்ச் சிற்றிதழ்களின் வாசகர்களாக வரும் கிராமத்து கீழ்மட்ட இளைஞர்களின் கோபமும் தீவிரமும் இணைய வாசகர்களிடம் இல்லை என்கிறார். உண்மையில் ஜெயமோகனின் பல கருத்துக்களுக்கு இணையத்தில் எழுந்த எதிர்வினைகளின் தொனி அவர் சொல்லும் கிராமத்து கீழ்மட்ட இளைஞர்களின் இயல்பிலிருந்து மாறுபட்டதாயிருக்கலாம். இணைய வாசகர்களில் பலரும் கல்வி, பொருளாதாரம் போன்ற தளங்களில் சராசரிக்கு அதிகமான வெற்றிப் பெற்றவர்கள் என்பதால் அவர்களிடம் வெளிப்படும் (சில நேரங்களில் சற்று எல்லை மீறிய) தன்னம்பிக்கை ஜெயமோகனை எரிச்சல்படுத்தியிருக்கலாம். இணைய விவாதங்களில் தன் கருத்துக்கு எதிராக ஏதாவது தகவலோ மேற்கோளோ முன்வைக்கப்பட்டால் "கூகிள் தான் போதிவிருட்சம்" போன்ற எள்ளல்களால் ஜெயமோகன் அதை எதிர்கொள்வது வழக்கம். இணையத்தின் மூலம் ஏற்படும் அறிவு/தகவல் பரவலாக்கமும் அதன் ஜனநாயகத் தன்மையும் ஜெயமோகனுடைய விருப்பத்துக்குரியதாக இல்லை என்பது உணரக்கூடியதாக இருக்கிறது.

இந்தியச் சூழலில் கடந்த காலங்களில் ஞானம் என்பது பொத்திப் பாதுகாக்க வேண்டிய ஒன்றாகவே பார்க்கப்பட்டு வந்திருக்கிறது. 'தகுதி' உள்ள சிலரைத் தவிர்த்து ஏனைய சாமானியர்களை ஞானம் சென்றடைந்து மலிந்துவிடாமல் தடுப்பதற்காக போடப்பட்ட எத்தனையோ வேலிகளை சுட்டமுடியும். அறிவுப் பீடங்களுக்கு ஏகபோக உரிமைக் கொண்டாடுபவர்கள் ஊடகப் புரட்சிகளை அஞ்சுவர் என்பதற்கு வரலாற்றில் சான்றுகள் உண்டு. ஐரோப்பாவில் ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக நிலவிய கத்தோலிக்க மத அமைப்பின் ஆதிக்கத்தை முடிவுக்குக் கொண்டுவர அச்சு இயந்திரத்தின் கண்டுபிடிப்பு ஒன்றே போதுமானதாக இருந்தது. இன்று இணையம் ஆற்றும் பங்கும் ஒருவகையில் இதுபோன்றதே. எடுத்துக்காட்டாக நோயாளிகளின் தகவல் பெறும் உரிமையை எடுத்துக்கொண்டால் இன்றும் கூட பெரும்பாலான இந்திய மருத்துவர்கள் தன்னுடைய நோய் மற்றும் சிகிட்சை குறித்த நோயாளியின் கேள்விகளுக்கு விரிவானப் பதிலை தருவதில்லை. ஆனால் அடிப்படைக் கல்வியும் ஆங்கில அறிவும் உடைய ஒருவர் இணையத்தில் சில மணி நேரங்களை செலவிட்டால் அந்த நோய் பற்றி மருத்துவர்களால் எழுதப்பட்டு வல்லுநர்களால் திறனாய்வு செய்யப்பட்ட எத்தனையோ ஆய்வுக்கட்டுரைகளைப் படித்து புரிந்துக்கொள்ள முடியும். அது ஒரு மருத்துவரின் அனுபவ அறிவுக்கு ஈடாகாது தான். ஆனால் சமீபகால ஆய்வுமுடிவுகளுக்கு எதிராக ஒரு சிகிட்சையை பரிந்துரைக்கும் மருத்துவரை எதிர்கொள்ள அது உதவும்.

ஜெயமோகனை அறியத் தொடங்கிய நாட்களில் அவர் தனக்கு நான்கு வரிகளில் கடிதம் எழுதும் வாசகருக்குக் கூட பதினைந்துப் பக்க பதில் கடிதம் எழுதக்கூடியவர் என்பதை அறிந்தபோது இந்த அளவுக்கு வாசகர்களை மதிக்கிறாரே என்று வியப்பாக இருந்தது. ஆனால் இணைய விவாதங்களில் தன் கருத்துக்களை மறுக்க துணிந்தவர்களை ஜெயமோகன் எதிர்கொள்ளும் விதம் ஒரு ஐந்தாம் வகுப்புப் பையனுடன் விவாதிக்க வேண்டியக் கட்டாயத்திற்கு உள்ளான கல்லூரி பேராசிரியரின் தோரணையை நினைவூட்டும். எதிராளியின் தரம், வாசிப்பு, கல்வி, ரசனை ஆகியவை முடிந்தவரை மட்டம் தட்டப்படும். பல சமயங்களில் தன்னை நோக்கிக் கேள்வி எழுப்பியவருக்குத் தான் சொல்வதைப் புரிந்துக்கொள்ளத் தேவையான அடிப்படை தகுதிகள் கூட இல்லாததால் விவாதிக்க விரும்பவில்லை என்று முடித்துக் கொள்வார். அப்படியானால் எளிய தொடக்கநிலை வாசகருக்குக் கூட நீண்ட பதில் கடிதங்களை நேரம் செலவிட்டு எழுதுவது ஏன்? என் புரிதலை விஷ்ணுபுர மொழியில் சொல்வதானால் குருவிடம் ஞானம் வேண்டி நிற்கும் வித்யாபேக்ஷியாகத் தான் தொடக்க வாசகர்கள் அவருடன் உரையாட முடியும்.

இது ஒருவிதக் கலாச்சார இடைவெளி எனலாம். கல்லூரியிலிருந்து வெளியேவந்து சில மாதங்களே ஆன ஒரு இளைஞன் தான் பணிபுரியும் துறையில் இருபதாண்டு அனுபவம் உள்ள ஒருவரைப் பெயர் சொல்லி அழைத்து சரிநிகர் சமானமாக விவாதிக்கும் மேற்கத்தியக் கலாச்சாரம் தொடக்கத்தில் எனக்கு சற்று அன்னியமாகவே இருந்தது. இந்தியாவில் நான் படித்த, பணிபுரிந்த இடங்களில் அது சாத்தியமில்லை. மூத்தவர்களை பெயர் சொல்லி அழைப்பதோ அவர்களுடன் கைக்குலுக்குவதோ இந்திய மரபல்ல. காலில் விழுவது அல்லது வேறு விதமாக வணங்குவதே மரபு. வாழ்வின் கணிசமான பகுதியை மடங்களிலும் குருகுலங்களிலும் செலவிட்டு இந்திய ஞானமரபைக் கற்றதாக அறியப்படும் ஜெயமோகன் விவாதங்களில் ஈடுபடுவோரின் தகுதிக்குக் கொடுக்கும் முக்கியத்துவம் புரிந்துக்கொள்ளத் தக்கதே. விஷ்ணுபுரம் ஞானசபையில் விவாதம் தொடங்குவதற்கு முன் யாரெல்லாம் அமர்ந்து பேசலாம், யார் நின்றுக்கொண்டுப் பேசலாம், யாருக்கு சபைக்குள் நுழைவதற்கு அனுமதியில்லை என்பதெல்லாம் அந்தக்கால 'தகுதி' அடிப்படையில் முடிவுசெய்யப்பட்டு அறிவிக்கப்படும். இணையத்தில் அத்தகைய விதிகளை அமல்படுத்துவது எளிதல்ல.

[சற்றே தடம் விலகல்: யோசிக்கையில் நமது மொழிகளில் சமத்துவமான உரையாடல்களே சாத்தியமில்லையோ என்று தோன்றுகிறது. ஒற்றை வாக்கியம் பேசினாலும் பேசுபவரின் தகுதியும் பேசப்படுபவரின் தகுதியும் பெரும்பாலும் வெளிப்பட்டுவிடுகிறது. வீரப்பன் வந்தான், பிரேமானந்தா வந்தார். அம்மா சொன்னாள், அப்பா சொன்னார். ஆங்கிலத்தில் இந்தச் சிக்கல் இல்லை. அதே வேளையில் இது தமிழ் மொழியின் அமைப்பு என்று சொல்லவும் முடியாது. சங்கப் பாடல்களில் தலைவனானாலும் மன்னனானாலும் இறைவனானாலும் 'அவன்' என்று ஒருமையிலேயே குறிக்கப் படுகிறார்கள். அனைவருக்கும் ஒரே மரியாதை எனும்போது மரியாதைக் குறைவு என்ற பேச்சுக்கு இடம் இருந்திருக்காது.]

*****

தமிழில் ஜெயமோகன் அளவுக்கு மரபுவாதம் பேசிய எவரையும் நான் படித்ததில்லை. இந்திய மரபுசார்ந்த கருத்து என்று அவர் முன்வைப்பதை மறுப்பவர்கள் மீது "வெள்ளையன் கருத்தை உணடு கக்குவதே சிந்தனை என்று நம்புபவர்கள்" போன்ற முத்திரைகள் குத்தப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். ஜெயமோகனுடைய இந்த மனப்போக்கை சுந்தர ராமசாமியைப் பற்றிய அவர் எழுதிய இந்த வரிகள் பிரதிபலிக்கின்றன.

"மரபின்மீதான முழுமையான அறியாமை, அதன் விளைவான உதாசீனம், அதேசமயம் மேற்கு தன் மரபில் இருந்து உருவாக்கிய கருத்துக்கள் மற்றும் வடிவங்கள் மீது விமரிசனமற்ற மோகம் ஆகியவற்றுக்கு தமிழில் மிக உச்ச கட்ட முன்னுதாரணம் சு.ரா தான் என்பது பலமுறை அவரிடமும் நான் சொன்ன கருத்து. மரபை ஒட்டுமொத்தமாக விமரிசித்த அவருக்கு மரபை இம்மிகூட தெரியாது, ஆர்வம் சற்றும் இல்லை. தத்துவத்தின் அர்த்தமின்மை பற்றி பேசிய அவருக்கு தத்துவம் மீதும் பயிற்சி இல்லை."

தர்க்க பூர்வமான மேற்கத்திய அணுகுமுறை மற்றும் உள்ளுணர்வு சார்ந்த கீழை நாட்டு அணுகுமுறை என்ற ஒரு பிரிவினையை ஜெயமோகன் பல இடங்களில் பயன்படுத்தி வருகிறார். எனக்கு இவ்விஷயங்களில் பயிற்சி குறைவு என்றாலும் ஜெயமோகன் இதைப் பற்றி எழுதிய கட்டுரைகளை முடிந்தவரை தேடிப் படித்து அவர் சொல்ல வருவதைப் புரிந்துக்கொள்ள முயன்றிருக்கிறேன். தர்க்கம், கற்பனை, உள்ளுணர்வு என்ற மூன்று அறிதல்முறைகளை அவர் முன்வைக்கிறார். தர்க்கத்தைப் பற்றி சொல்கையில்:

"அறிந்தவற்றில் இருந்து பெற்ற தர்க்கத்தை வைத்து அறியாதவற்றை வகுத்துக் கொள்ள முயல்வது (தர்க்க பூர்வ அணுகுமுறை). பழம் சிவப்பாக இருக்கும் ,ஆகவே சிவப்பான காய் பழம் என்பது ஒரு தருக்கம். தருக்கம் மட்டுமே உலகத்தை அறிய போதுமானதல்ல என்ற உணர்வு எல்லா தரப்பிலும் உண்டு . இன்றைய அறிவியலாளர்களில் பலர் தருக்கம் மட்டுமே தனித்து ஒருபோதும் இயங்க முடியாது என எண்ணுகிறவர்கள்."

அறிவியலாளர்களைத் துணைக்கு அழைப்பதும், தர்க்க பூர்வ அணுகுமுறையை மேலை நாடுகளோடு தொடர்புப்படுத்துவதும் ஏன் என்பது புரிந்துக்கொள்ளக் கூடியதே. இன்று அன்றாட வாழ்வுக்கும் மிகவும் இன்றியமையாததான நூறு அறிவியல் / மருத்துவ / தொழில்நுட்பக் கண்டுபிடிப்புகளைப் பட்டியலிட்டால் ஒன்றுவிடாமல் அத்தனையும் மேலை நாட்டினருடைய தர்க்க பூர்வ அணுகுமுறையின் விளைவுகள் என்பது தெளிவாகும். ஆனால் ஜெயமோகன் இதை முழுக்க ஒப்புக்கொள்வதாகத் தெரியவில்லை. அவர் சொல்வது:

"பெரும்பாலான அறிவியல்கண்டுபிடிப்புகள் ஒன்று கனவுகளாக வெளிப்பட்டவை. அல்லது ஒரு பொருளை பார்த்து அதை ஒரு படிமமாகப் பார்க்கும் மனத் தூண்டல் பெற்று அதன்வழியாகப் பெறப்பட்டவை. ஐன்ஸ்டீன் சோப்பு குமிழிகளை பார்த்து அகத்தூண்டலை அடைந்ததாக சொல்வார்கள்."

நியுட்டன் அளவுக்கு படிப்பும் பயிற்சியும் தர்க்க ரீதியாக சிந்திக்கும் திறனும் இல்லாத ஒரு மனிதனின் முன்பு தினசரி நூறு ஆப்பிள்கள் விழுந்தாலும் புவியீர்ப்பு விசை பற்றிய புரிதல் ஏற்பட்டிருக்குமா? ஜெயமோகன் "தருக்க அறிவை விட கற்பனை மேலும் ஆழமானது" என்கிறார்.

"தருக்க அறிவு மனத்தின் மேல்த்தளமான பிரக்ஞையை மட்டும் சார்ந்தது. பிரக்ஞை நமது அகத்தின் மிகச்சிறிய ஒரு பகுதியை மட்டுமே ஆள்வது. அது அலை. கடல் பின்னால் உள்ளது. ஆழ்மனம் [நனவிலி /Unconscious.] அது படிமங்களினாலானது.[இமேஜ்]. நாமறியாதவற்றையும் நமது கனவு அறியும். ...இலக்கியம் தர்க்கத்தால் ஆனதல்ல. கற்பனையால் உருவாக்கப்பட்டதும், கற்பனையை தூண்டுவதுமான படிமங்களால் ஆனது."

இலக்கியத்தில் கற்பனையின் முக்கியத்துவத்தைப் பற்றி மாற்றுக் கருத்தில்லை. ஆனால் பிற அறிவுத்துறைகளில் கற்பனையை தர்க்கத்துக்கு நிகரான ஒரு அறிதல்முறையாக முன்வைப்பது ஆரோக்கியமானதல்ல. இது இலக்கியம், ஆன்மீகம் போன்றத் தளங்களோடு நிறுத்திக்கொள்ளவேண்டிய விஷயங்களை அறிவியல் போன்ற தளங்களுக்கு இறக்குமதி செய்யும் ஜோஷித்தனமான அணுகுமுறைக்கு வழிவகுக்கக்கூடியது. (இன்றிருப்பதைப் போன்ற விமானங்கள் புராண காலத்தில் புஷ்பக விமானங்கள் என்ற பெயரில் உண்மையிலேயே இருந்தன என்றும், அஸ்திரங்கள் எனப்படுவது இன்றைய ஏவுகணைகளே என்றும், பழங்கால இந்தியாவிலிருந்து கொண்டு சென்ற அறிவினால் தான் ஜெர்மனியும் ஜப்பானும் இன்று முன்னேறுகின்றன என்று சிலகாலம் முன்பு இந்திய துணை ஜனாதிபதி ஷெகாவத் பேசியதை இங்கே சுட்டலாம்.) "அணுவினைச் சத கூறிட்ட.." என்ற கம்பனின் பாடல் வரி ஒரு இலக்கியக் கற்பனை. அணுகுண்டு தயாரிக்க அந்த 'அறிதல்' போதாது. ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் வாழும் மனிதர்களைப் பற்றியக் கற்பனை காலங்காலமாக இருந்தும் என்ன பயன்? வருங்காலத்தில் அதை சாத்தியமாக்குவது தர்க்க பூர்வமான ஆராய்ச்சிகள் மூலம் மட்டுமே இயலும். அப்படி ஒருவேளை சாத்தியமானால் "எங்காள் இதை அப்பவே சொன்னான்" என்று மார்தட்டுவது எத்தனை அபத்தம்.

தர்க்கம், கற்பனை ஆகிய அறிதல்முறைகளைக் காட்டிலும் பல மடங்கு நுட்பமான அறிதல்களை உள்ளுணர்வால் அடையமுடியும் என்கிறார் ஜெயமோகன். உள்ளுணர்வு சார்ந்த அறிதல் முறையை இப்படி விளக்குகிறார்:

"ஒரு குழந்தை எப்படி மொழியின் அல்லது இசையின் சிக்கலான பாதையை தன் புது மூளையின் புதிய சாத்தியங்கள் மூலம் சட்டென்று பிந்தொடர்ந்துவிடுகிறதோ அப்படி மனிதமூளை பிரபஞ்ச இயக்கத்தின் சிக்கல்களை முற்றிலும் புதிய ஒருவழியில் சென்று தொட்டுவிட முடியும். உள்ளுணர்வை மனிதன் வளர்த்துக்கொள்ள முடியும், பயில முடியும்."

குழந்தை மொழியைக் கற்பதோ இசை அறிமுகம் உள்ளவர்கள் ராகங்களை அடையாளம் கண்டுக் கொள்வதோ தர்க்கத்தைப் பயன்படுத்தாமல் நிகழும் உள்ளுணர்வு சார்ந்த அறிதலாகப் பார்க்கப்படலாம். உள்ளுணர்வு அல்லது மனத்தாவல் மூலம் நிகழ்வதாகக் கருதப்படும் பல அறிதல்களும் உண்மையில் நன்கு புரிந்துக்கொள்ளப்பட்ட 'ஒழுங்கு அறிதல்' (pattern recognition) முறைப்படியே நிகழ்கின்றன. தர்க்கத்தைப் பயன்படுத்தி அந்நிகழ்வை விளக்கவும் அந்த அறிதலை முற்றிலும் தர்க்கத்தின் மூலமாக நிகழ்த்திக் காட்டவும் பயிற்சியுள்ளவர்களால் முடியும். எடுத்துக்காட்டாக, ஒரு பாடலின் ஒற்றை வரியைக் கேட்டவுடனேயே பாடுவது ஜேசுதாஸா, பாலசுப்ரமணியமா, ஜெயச்சந்திரனா என்று நம்மில் பலரால் சொல்லிவிட முடியும். மூளை இதுபோன்றவற்றை எப்படி சாதிக்கிறது என்ற தெளிவான புரிதல் இல்லாத நிலையில் "புதிய சாத்தியங்கள் மூலம்" என்ற சொற்றொடரை ஜெயமோகன் பயன்படுத்துகிறார். உண்மையில் ஃபொரியர் (Fourier), காஸ் (Gauss) போன்ற கணிதமேதைகள் முன்வைத்த தர்க்க பூர்வமாக வழிமுறைகளைப் பயன்படுத்தி ஒரு நிரல் எழுதி கணினியில் இட்டால் குரலை வைத்து ஆளை அடையாளம் காணும் ஒரு இயந்திரத்தை உருவாக்கிவிட முடியும் என்பது என் அனுபவத்தின் மூலம் நான் உறுதிப் படுத்திக்கொண்ட ஒன்று. முன்னூறு ஆண்டுகளுக்கு முன் தர்க்கத்துக்கு அப்பாற்பட்டதாகக் கருதப்பட்ட எத்தனையோ விஷயங்களுக்கு இன்று தர்க்க பூர்வமான விளக்கங்கள் கிடைத்திருக்கின்றன.

உள்ளுணர்வின் மூலம் பிரபஞ்ச இயக்கத்தின் சிக்கல்களை தொடுவது பற்றியெல்லாம் எனக்கு சற்றும் தெரியாது என்பதால் அதைப் பற்றி ஒன்றும் சொல்வதற்கில்லை. ஆனால் இன்னொன்று சொல்லாம். தர்க்க ரீதியான அறிதல்முறைகளுக்கு பதிலாக வேறு அறிதல்முறைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் ஒரு சமூகத்தில் போலிகள் புகுந்து விளையாடுவதை தவிர்க்கமுடியாது. தர்க்கத்தின் மூலம் ஒருவர் அறிந்துக்கொண்ட ஒன்றை மற்றவர்களால் புரிந்துக்கொள்ளவும் சரிபார்க்கவும் முடியும். ஆனால் உள்ளுணர்வின் மூலம் அறிந்துக்கொண்ட ஞானத்தை ஒருவர் சொல்லும் போது அங்கே தர்க்கத்துக்கு இடம் இல்லாததால் சொல்பவரின் தகுதியைப் பொறுத்தே அது ஏற்றுக்கொள்ளப்படுவதும் நிராகரிக்கப்படுவதும் அமையும். மரியாதைக்குரியவர்கள் என்றும் அறிவாளிகள் என்றும் கருதப்படுபவர்கள் சொல்லுவதெல்லாம் ஆராயாமல் ஏற்றுக்கொள்ளப்படும். காலப்போக்கில் அத்தகைய சமூகத்தின் ஒட்டுமொத்த அறிவு வீழ்ச்சி தவிர்க்கமுடியாதது என்பதே வரலாறு.

எனக்கு மறுபடியும் விஷ்ணுபுர ஞானசபை நினைவுக்கு வருகிறது. பாரதவர்ஷத்தின் ஆகச்சிறந்த ஞானிகளெல்லாம் கூடியிருக்கும் சபையின் தலைவராக வீற்றிருக்கும் மகாவைதீகர் பவதத்தர் பிரபஞ்ச உற்பத்திக் குறித்த தன் தரிசனத்தை விளக்குகையில் "பூரணத்திலிருந்து பூரணத்தை எடுத்துக்கொண்ட பின்னும் பூரணமே எஞ்சுகிறது" என்கிறார். சபையிலிருந்து இதற்கு மறுப்பாக ஒரு முனகல் கூட எழவில்லை. (விவாதத்தின் பிற்பகுதியில் பவதத்தர் இதை மறுபடிச் சொல்லும்போது தான் "இது அதர்க்கம்" என்று ஒரு பௌத்த துறவி சொல்கிறார். இன்று இந்தியாவில் பௌத்தம் இருந்த இடம் தெரியவில்லை.) ஒருவேளை பவதத்தர் மேற்படி சூத்திரத்தை ஞானசபையில் சொல்லாமல் தன் வலைப்பதிவில் எழுதியிருந்தால் "என்னய்யா இந்த algebra படு அபத்தமாக இருக்கிறதே" என்ற ரீதியில் பின்னூட்டங்கள் வந்திருக்கும். அவரும் கடுப்பேறி வெள்ளையன் கருத்தை உண்டு கக்குபவர்களுக்குக் கடும் எதிர்வினையாற்றியிருக்கக் கூடும்.

(ஜெயமோகனாயணம் தொடரும்)

13 மறுமொழிகள்:

மிகச் சிறப்பான ஆய்வு...

ஜெயமோகனாயணத்தின் அடுத்த அத்தியாயத்திற்கு காத்திருக்கிறேன் :)

I am a big fan of vishnupuram and sanga chithirangal.

Your articles are intersting.

Keep writing

Hi,

You are a very perceptive reader, and you have done quite a good analysis.

http://muthuvintamil.blogspot.com/2006/05/blog-post_114683963185076683.html


http://muthuvintamil.blogspot.com/2005/11/blog-post_28.html

jagath,

நான் இவர்களைப்பற்றி எழுதிய பதிவு மேலே..சில புள்ளிகளில் நாம் ஒத்துப்போகிறோம்.

http://muthuvintamil.blogspot.com/2005/11/blog-post_28.html

jagath,

குருவை மிஞ்சிய சிஷ்யன் என்று சு.ரா வை ஒப்பிட்டு ஜெ.மோ சொல்லுவதை கவனியுங்கள்..நினைவின் நதியில்..

http://muthuvintamil.blogspot.com/2006/05/blog-post_114683963185076683.html

முத்து,

பின்னூட்டங்களைத் தாமதமாக உள்ளிடுவதற்கு மன்னிக்கவும். வார இறுதியில் இணையம் பக்கமே வரமுடியாத சூழல்.

சுட்டிகளுக்கு நன்றி. சிறப்பாக எழுதியிருக்கிறீர்கள். ஜெயமோகனின் விமர்சன அணுகுமுறை குறித்த உங்கள் கருத்துக்களோடு முழுமையாக ஒத்துப்போகிறேன்.

கப்பி / ennamenathu / பத்ரி,

வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி.

Dear writer of EN VASIPPIL:
your intelligence and language and analysis are excellent. I am delighted. I wish you continue to write on all matters of interest. Hope more and more people will come, grow and understand the truth and will enable themselves and empower others to succeed.
Anbudan Radhakrishnan

Very clear thinking.

I admire Jeyamohan and think he is a genius writer no doubt. Ability to bring a million facts in a single story, writing without plots and formulae and letting the world write itself mark him as a new kind of writer (Era.Murugan is another.) I read his recent short story (Iru Kalaignargal) and was amazed by how deep his imagination is that he is able to conjure up a real happening and make us believe it happened and he was watching it. The word 'Gnanakkan' came to my mind. Interestingly, this itself became subject matter of discussion here! :)

On the other hand, brushing off scientific method is a wrong thing. Einstein says, "Compared to what the world is, what we know through science is very very negligible amount and incomplete", but he adds immediately, "but it is the best we have". (these are only my memory of his words, i will try to locate the actual words).

Even though most scientific discoveries came as flashes of intuition there are two important distinctions: (i) Most of these occurred AFTER long deliberate reasoning effort. Einstein again describes this as thinking through ideas in random combinations until an insight occurs. In a nutshell, reasoning forms the basis for intuition.
(ii) The second distinction is that the real value of science is not in its ability to reason or intuit, but to test the so-called insights and intuition systematically with experiments and letting data tell us the truth. And opening out the data, the thought process to everyone, to make sure one is not deluded oneself.
In this perspective, science is not just a systematic collection of useful facts derived through data collection and experimentation, but is the method of doing that and a truth-seeking environment of sharing human beings. Even when facts of science may be re-written with new precisions and perspectives, the process of letting truth to be tested is the one that distinguishes science from religion where faith cannot be questioned. In a nutshell, science is the method of actively seeking contradictory data that will disprove one's own theory. Because the end is quest for 'what is true' not for 'what will make one popular'.

Your writings bring this underlying distinction very well.

Indian philosophy claims supra-rationality (Reasoning without conscious reasoning) and uses the word intuition. Zen buddhism also points out that such intuition operates almost constantly within us - for instance how words and ideas continuously form within ourselves as we write, but it is safer to take the path of science which aims to reach 'Certainty through Doubt' rather than faith on a Guru. Jeyamohan may be trying to communicate the value of super-intuition that just occurs because one has fine-tuned one's fearless and compromise-less expression and impression of truth, but he should be careful not to de-mean the real value of science, because in Einstein's words, "It is the best we have". I would add, the best we have that can be shared objectively without arguments.

ஜெயமோகன் குறித்த உங்கள் பார்வை மிகவும் தெளிவாகவும் ஆழமாகவும் உள்ளது..ஜெயமோகனை இந்த அளவு யாரும் புரிந்துகொண்டு, ஆக்கபூர்வமாக விமர்சித்து நான் படித்ததில்லை...அவர் எழுத்துக்களை எல்லாம் படித்து ரசித்து வரும் எனக்கும் அவருடைய எழுத்து மற்றும் கருத்துகளை மாறுபட்ட கோணத்தில் பார்க்க உங்கள் கட்டுரை உதவுகிறது..

விமரிசகர்களை அவர்கள் தகுதி காரணங்காட்டி அலட்சியம் ஒதுக்கி விடுவதை நான் சரியென்றே நினைக்கிறேன்..ஏனெனில் விமர்சனம் என்ற பெயரில் வெறும் வசைகள்,மனநோயாளி போன்ற பட்டங்கள், அவர் கதைகளில் வரும் ஒரு வார்த்தை,ஒரு வரி போன்றவற்றை பிடித்துக் கொண்டு மதவெறியன்,கர்வம் பிடித்தவன்,முட்டாள் இப்படி எதையாவது நிறுவ முயல்வது, இது தான் இதுவரை நான் பார்த்தது..
அவர் சொல்லுவதுபோல் தமிழில் அவர் எழுத்துக்களைப் பற்றிய பொருட்படுத்தத்தக்க விமர்சனம் இதுவரை வரவில்லை என்பதுதான் என் கருத்தும்..

வைரமுத்துக்கு கிடைக்கும் மரியாதை கூட சபையில் அவருக்கு கிடைப்பதில்லை என்பது வருத்தமாக இருக்கிறது...

உங்கள் கட்டுரையை ஜெயமோகன் பார்வைக்குக் கண்டிப்பாக கொண்டு செல்லவும்..

வருந்த மாட்டார்..உள்ளூற மகிழ்வார் என்றே தோன்றுகிறது...:):)

மன்னிக்கவும் நீண்ட பின்னோட்டத்திற்க. முதலில் பதிவாக இடலாம் என்கிற எண்ணத்தில்தான் எழதினேன். திரும்பவும் மறு சுற்று வேண்டாமே என்று நீங்கள் எழுத தூண்டியதால் குறைந்த பட்சம் உங்களுக்கே பின்னோட்டமாக போட்டுவிட்டேன்.

'குருபீடங்களும் கோவணத்தாண்டிகளும்' என்கிற தலைப்பில் விஷ்ணுபுர விமர்சனத்திற்கான குறிப்புகளை தொகுத்து வைத்துள்ளேன். மீண்டும் அந்த நாவலை வாசிக்க வாய்ப்பில்லாமல் ஒரு 'இருள்நகரில்' மாட்டிக் கொண்டு விட்டேன். கைவசம் நாவலும் இல்லை. அதை கடன்வாங்கி எழுதிவிட்டு கொடுத்துவிடலாம் என்கிற ஒரு நண்பரின் அக்கறையான அறிவரையால் காசு கொடுத்தும் வாங்கவில்லை. இனி ஊருக்கு வந்துதான் அந்த நாவலை மறுமுறை வாசிக்க வேண்டும். அதன்பின்தான் எழுத துவங்க வேண்டும். காரணம் உங்களைப்போல தர்க்கப்பூர்வமாகவும் அழகாகவும் அந்த விமர்சனத்தை முன்வைக்க வேண்டும் என்பது ஏற்படுத்தும் உணர்வின் அல்லது அச்சத்தின் அல்லது நானே எனக்குள் கட்டமைத்துக் கொண்டிருக்கும் 'பிம்பு-பால்வினை நோயி'-ன் (இந்த நோய் குறித்த வேறொரு சந்தர்ப்பத்தில் விரிவாக பேசலாம்) விளைவாக இருக்கலாம்.

அவரது எழுத்தாளர் வரிசையை வாங்கி வைத்துள்ளேன். படிக்கத் துவங்கினால் எழுத்தாளர்கள் பெயரும் அவர்களது நாவல்கள் பெயரும் மட்டுமே மாறி உள்ளன மற்றபடி உள்ளே ஒரே விஷயத்தையே பேசிவருகிறார். அவர் விமர்சன முறையை 'ரசனைவாத அழகியல் முறை' என்பதாகச் சொல்லிக் கொள்கிறார். அந்தக்காலத்தில் டிகேசி இப்படித்தான் மாலைநேரக் கூட்டங்களில் இலக்கிய அழகியல் ஆடைகளை ஒவ்வொன்றாக விவரித்து இலக்கிய ராணிக்கு, ரசனை என்னும் ஆடை உடுத்தி அழுகு பார்ப்பாராம். ஏற்கனவே ஆடை உருவப்பட்டு அம்மணப்படுத்தப்பட்டுள்ள நமக்கோ நிர்வாணமாக பார்ப்பதே அழகு என்ன செய்ய? இந்த அழகியல் ரசனைவாதம் என்பதெல்லாம் என்னைப் பொறுத்தவரை அரசியல் முக்கியத்துவமான சொல்லாடல்கள். (இது குறித்து 'அழகிய மையங்களும் ஆதிக்க விளிம்புகளும்' என்று ஒரு கட்டுரை எனது நூலில் உள்ளது) தத்தவத்தின் மீதும் அரசியலின் மீதும் பூட்டப்பட்டிருக்கம் அலங்காரங்கள். ஆக. ஜெயமோகனின் அரசியல்தான் அவை. அதை அவரே இன்று வெட்ட வெளிச்சமாக்கிவிட்டார்.

நீங்கள் உங்களது அசாத்தியமான வாசிப்பின் மூலம் கண்டடைந்துள்ள அவரது மும்மைக் கொள்கையான தர்க்கம், கற்பனை, உள்ளுணர்வு என்பது இந்திய தத்தவ மரபின் மும்மை என்கிற மாய எண்ணைச் சார்ந்தது (மாஜிகல் நம்பர்). அதாவது அறம், பொருள்,இன்பம் - சத், சித், ஆணந்தா - முத்தமிழ் - அனுமானம், பிரமாணம், பிரதட்சயம் - சைவத்தில் உள்ள மும்மலங்கள் ராஜஸ, தாமஸ, சத்வம் - திரி ரத்ணா என்கிற பெளத்தம் இப்படியாக இந்த 3 என்பது இந்திய தத்தவ தரிசனத்தின் ஒரு மாய எண் எனலாம். மேற்கத்தியம் இருமை எதிர்வு (binary opposition) என்றால் கீழைத்தெய மரபு என்பது மும்மை இணைவைச் (trinary synthesis) சேர்ந்தது. இந்த மும்மை இணைவில் நின்றுகொண்டு கொஞ்சம் ஆழமாக அடித்தால் உள்ளுணர்வு என்கிற ஊற்றைப் பொத்துக்கொண்டு இந்த கற்பனையும் தர்க்கமும் பீய்ச்சி அடிக்கும். அது 3000-ம் 4000-ம் பக்கங்களைத் தாண்டிச் செல்லலாம். யாரோ ஒருவர் ஒரு பின்னொட்டத்தில் குறிப்பிட்டதைப் போல படுக்கையும் இதனுடன் சேர்த்து பதிப்பாளர் அனுப்புவாரா? என்பதை தவிர வேறு என்ன இருக்கும் அதனை தாண்டி என்றும் புரியவில்லை? பக்கங்கள் புனைவைத் தீர்மாணிக்கும் காலம் இது.

இந்த பீய்ச்சல்தான் இந்திய தத்துவ மரபு தனக்குள் ஆழமாக ஓடியிருப்பதாகக் கூறுவதன் பொருள். ஆயிரம் தத்துவ மரபுகளைப் படித்து பற்றிப் பிடித்து அவனுக்கு தகுயில்லை இவனுக்கு தகுதியில்லை என்பது என்ன ஞானம்? இந்தியாவின் எந்த ஞானி தகுதிப் பார்த்தான். ஞானத்தின் பாலபாடம் மெளனம் என்று எங்கோ படித்திருக்கிறேன். சக உயிரியை சமமாகப் பார்க்காமல், தகுதி பார்ப்பவரிடம் ஞானம் எப்படிக் கைக்கூடும் என்று அதே பாணியில் நாமும் கேட்கலாம். அப்புறம் ஞானத்தை நாமும் பற்றிப் பிடித்து பக்கத்து வீட்டு 'ஞானத்தின்' கணவனிடம் வாங்கிக் கட்டிக்கொள்ள முடியாது. அதனால் 'ஞானத்தை' உங்களைப் போலவே நானும் தொடவிரும்பவில்லை. அவரவர் ஞானத்தை அவரவர் காப்பாற்றிக் கொள்ளட்டும். குறைந்தபட்சம் பிறத்தியான் ஞானத்தையாவது தூற்றாது இருப்போமாக ஆமின்.

அன்புடன்
ஜமாலன்.

தமிழில் மாய யதார்த்தவாதக் கதைகளை 80களிலேயே எழுதியவர் விமலாதித்த மாமல்லன். தாஸில்தாரின் நாற்காலி, சிறுமி கொண்டுவந்த மலர், முடவன் வளர்த்த வெள்ளைப் புறாக்கள், உயிர்த்தெழுதல், குல்லா என சொல்லிக்கொண்டே போகலாம். படித்துப் பாருங்கள். ஜெயமோகன் ஒருபோதும் சொல்லமாட்டார், ஏனெனில் உண்மையான சவால் மாமல்லன்தான், 'புரியாத' கோணங்கியோ 'வண்ணதாச' எஸ்.ராமகிருஷ்ணனனோ அல்ல. துரதிருஷ்டவசமாக அவர் எழுதுவதே இல்லை.

எனக்கு ஒன்றும் தெரியாது என பத்திக்குப் பத்தி சொல்லியபடி உண்டு இல்லையென ஜெமோவை உலுக்குகிரீரே உண்மையிலேயே நீர் யார் சாமி? ஜெமோவையும் சாநியையும் படிப்பதைவிட உமது தர்க்கம் தரமாகவே உள்ளது. வேண்டாமே இந்த தன்னடக்கம் (ஒரு அளவைத்தாண்டினால் போலித்தோற்றம் வந்துவிடும்! கவனம்!!)