புயலிலே ஒரு தோணி

(நான் எழுதிக்கொண்டிருந்த ஒரு பதிவின் நடுவே 'புயலிலே ஒரு தோணி' நாவல் பற்றிய ஒரு சிறு விவரிப்பு தேவையாயிருந்தது. எழுதத் தொடங்கியபின் அது பல பத்திகள் நீண்டு அந்தப் பதிவின் போக்கைக் குலைப்பதாகத் தோன்றியதால் இங்கே தனியாக இடுகிறேன். நாவல் கையில் இல்லாததால் நினைவிலிருந்தே எழுதுகிறேன். தகவல் பிழைகள் இருந்தால் சொல்லுங்கள்.)

ப. சிங்காரத்தின் 'புயலிலே ஒரு தோணி' நாவல் தமிழின் மிகச்சிறந்த நாவல்களில் ஒன்று என்றக் கருத்து அண்மைக்காலமாக முக்கிய (அல்லது அதிக கவனம் பெறும்)இலக்கியவாதிகள் சிலரால் முன்வைக்கப் படுகிறது. தமிழின் முதல் புலம்பெயர் நாவல் என்ற சிறப்பும் இதற்குண்டு. நாற்பதாண்டுகளுக்கு முன் எழுதப்பட்ட இந்த நாவல் அக்காலகட்டத் தமிழ் நாவல்களிலிருந்து மிகவும் வேறுபட்ட சாயலைக் கொண்டதெனப் பலரும் சொல்லியிருக்கிறார்கள். இதற்கான காரணம் ப. சிங்காரத்தின் வாழ்க்கைக் குறிப்பைப் படிக்கும்போது புரிகிறது. மிக இளம் வயதிலேயே இந்தோனேசியாவுக்கு வேலைக்குச் சென்ற அவருக்குத் தமிழ் இலக்கியத்தோடு மிகக் குறைவான அறிமுகமே இருந்திருக்கிறது. அவரது இலக்கியப் பார்வை ஹெமிங்வேயையும் டால்ஸ்டாயையும் வேறு மேற்கத்திய எழுத்தாளர்களையும் படித்து உருவானது.

புயலிலே ஒரு தோணியின் நாயகன் பாண்டியனும் சிங்காரத்தைப் போலவே இளம்வயதில் வட்டிக்கடையில் வேலைச் செய்வதற்காக இந்தோனேசியாவுக்குக் கப்பல் ஏறியவன். தென்கிழக்காசிய நாடொன்றில் பல ஆண்டுகளாக வாழும் தமிழன் என்ற முறையில் (பலருக்கும் அன்னியமாகத் தோன்றும்) இந்த நாவலின் களம் எனக்கு நெருக்கமானதே. என்னுடைய வாசிப்பின் அடிப்படையில் இந்த நாவலை மூன்று பகுதிகளாகப் பார்க்கிறேன். முதலாவது பாண்டியன், ஆவன்னா போன்ற புலம்பெயர்ந்த தமிழர்களின் நினைவுகள் வழியாகச் சித்தரிக்கப்படும் எழுபதாண்டுகளுக்கு முந்தைய (தென்) தமிழக கிராம/சிறுநகர வாழ்க்கை. (நினைவுக்கு வரும் ஒரு இடம்: தங்கள் பரம்பரையிலேயே முதன்முறையாக பள்ளிக்கூடம் செல்லும் பையன்களிடம் "எம் பேருக்கு என்னடா இங்கிலீசுல?" என்றுக் கேட்டு அவர்கள் ஆங்கில அறிவைச் சோதிக்கும் தந்தையர்கள்.) செட்டியார்களின் வாழ்க்கை மற்றும் மொழிக் குறித்த துல்லியமான விவரிப்புகளையும் (எ.கா: "வாவன்னாகேனாவானா என்று அழைக்கப்படும் வாழ்ந்துக் கெட்ட வள்ளியப்பச் செட்டியார்") இதோடு சேர்த்துக் கொள்ளலாம்.

நாவலின் மற்றொரு பகுதியாக நான் காண்பது பாண்டியன் மனதிலும் அவன் நண்பர்களுக்கிடையேயும் நாவல் முழுக்க விட்டுவிட்டு நிகழும் தத்துவ விவாதங்கள் மற்றும் ஒழுக்கம், அறம், அறிவு போன்ற அடிப்படைகளைப் பற்றியக் கேள்விகள். (எ.கா: "மூடநம்பிக்கை மதத்திற்கும் அறிவுநம்பிக்கை விஞ்ஞானத்துக்கும் என்ன வேறுபாடு?... அணுவைப் பிளந்து என்ன? பிளவாமல் இருந்து என்ன?".) இத்தகைய விவாதங்களில் பல இடங்களில் பழம்பெரும் நூல்கள் நையாண்டிச் செய்யப்பட்டிருக்கின்றன. குறிப்பாகப் பாலியல் தொழில் நடக்கும் விடுதியை விவரிக்க கலிங்கத்துப்பரணியை பயன்படுத்துவதையும் வெள்ளையர்களை வெறுப்பேற்ற விவிலியத்தின் மொழியைப் பகடி செய்து கே.கே.ரேசன் 'தீர்க்கத்தரிசி' ஆற்றும் உரையையும் சொல்லலாம்.

நாவலின் பலவீனமான அம்சம் என்றால் அது ஜேம்ஸ் பாண்ட் கூனிக் குறுகும் அளவுக்கு பாண்டியன் நடத்தும் சாகசங்கள் நம்பமுடியாத வகையில், நாவலின் மற்ற யதார்த்தமான பகுதிகளுடன் ஒட்டாமல் இருப்பதுதான். இது ஒருவிதமான அதீதக் கற்பனை (fantasy) போலவே எனக்குப் படுகிறது. ஜேம்ஸ் பாண்ட் படங்களில் வருவதுபோலவே பாண்டியனைக் காணும் பெண்களெல்லாம் மயங்கி மனதைப் பறிகொடுக்கிறார்கள். நாவலின் தொடக்கத்தில் வட்டிக்கடைத் தொழிலாளியாக வரும் பாண்டியன் சிலப் பக்கங்களுக்குப் பிறகு ஜப்பானிய இராணுவ அதிகாரியோடு சரிக்கு சமமாக அமர்ந்து போர்க் கைதிகளை எப்படி நடத்தவேண்டும் என்று அறிவுரைச் சொல்கிறான். பிறகு ஜப்பானிய உளவுத்துறையின் மூத்த அதிகாரியைத் தீர்த்துக்கட்டி நேதாஜிக்குக் கெடுதல் விளைவிக்ககூடிய கடிதத்தைக் கைப்பற்றி வருகிறான். முன்னாள் தோழர்களைக் காட்டிக்கொடுப்பவனுக்கு உளவியல் வழிமுறைகளைக் கையாண்டு மாரடைப்பு ஏற்படுத்துகிறான். பிறகு இந்தோனேசிய மக்களால் 'காட்டு ராஜா' எனப்போற்றப்படும் சுதந்திரப் போராட்டத் தலைவனாகி போரில் மடிகிறான். இந்த சாகசங்களையெல்லாம் தவிர்த்துவிட்டு நோக்கினால் இது ஒரு மிகச் சிறந்த நாவலே.

2 மறுமொழிகள்:

ஜெகத், புய்லிலே ஒரு தோணி பற்றிய குறிப்புக்களுக்கு நன்றி. சுயவிளம்பரம் என்றபோதும் இங்கே- உங்களைப் போலவே நாவல் அருகில்ல்லாது - சில குறிப்புக்கள் முன்னொருபொழுது எழுதியிருக்கின்றேன்.
.....
சாகசங்கள் சற்று அதிகப்படியாய் இந்நாவலில் இருந்தாலும், போர்க்காலங்களில் நடைபெறும் சிறுவிடயங்கள் கூட, மிகப்பிரமாண்டமானவையாக சித்தரிக்கப்படும் என்பதை நேரில் அனுபவித்திருந்ததால், சாகசப்பகுதிகளை இலகுவாய் எடுத்துக்கொள்ளமுடிந்தது. ஈழத்தில் போர்க்காலங்களில் வாழ்ந்தபோது, எங்கள் கிராமத்துக்குப் பக்கத்தில் பக்கத்தில் இராணுவத்தை தரை இறக்குகின்றார்கள் என்பதையறிந்து மேலே சட்டை கூட போடாமல் துவக்குகளைத் தூக்கிக்கொண்டு சாரத்துடன் (கைலி?) ஓடி சென்ற போராளிகள் பற்றிய கதைகள் பலவருடங்களாய் சிலாகித்துப் பேசப்பட்டது நினைவுண்டு. .அதேபோன்று ஒரு போராளி தாக்குதலில் நிறைய இராணுவவீரர்களைச் சுட்டுக்கொன்றார் என்று கேட்டபோது, மகாபாரதத்தின் பீமன் போல அவரை என் மனதில் இருத்திக்கொண்டதும், ஏதோ ஒரு தாக்குதலில் அந்தப்போராளி முன்னேறிச்செல்ல காயமடைந்து இருந்த இராணுவ வீரன் பின்னாலிருந்து சுட்டதை அறிந்தபோது, அப்போராளியை வாலியாக (நேருக்கு நேர் சமர் செய்து கொல்லமுடியாது) உருவகித்து வைத்திருந்ததும் (இப்போது கூட அந்த நினைவுகளை முற்றாக கலைத்துவிட முடியவில்லை)..... அந்த நீட்சியில்தான் ப.சிங்காரத்தின் நாவலின் சாகச நாயகனையும் என்னாலும் ஏற்றுக்கொள்ளமுடிந்தது.

டிசே,

புயலிலே ஒரு தோணி குறித்து உங்கள் பதிவில் நீங்கள் எழுதியதை முன்பே படித்திருக்கிறேன். இந்த நாவல் மீதான விமர்சனம் ஏதாவது இணையத்தில் இருக்கிறதா என்று சில மாதங்களுக்கு முன் தேடியபோது உங்கள் பதிவு மட்டுமே அகப்பட்டது.

சாகசங்களைக் குறித்த உங்கள் கருத்துக்கள் எனக்கு ஏற்புடையவை தான். நம்மவர்கள் பழங்கதைகளைச் சொல்லும் போது சில ஆளுமைகளை மிகையுணர்ச்சியோடு விவரிப்பது உண்மையே. இந்த நாவலில் கூட தன்னுடைய முன்னாள் முதலாளியான செட்டியாரின் பெருமைகளை ஆவன்னா சொல்லும் இடத்தில் இந்தப் போக்கைக் காணலாம். காவியக் கதைகளிலும் பொன்னியின் செல்வன் போன்ற நாவல்களிலும் வரும் நம்புவதற்குக் கடினமான சாகசங்கள் மனதை நெருடுவதில்லை. புயலிலே ஒரு தோணி யதார்த்த பாணியில் அமைந்த நவீன நாவல் என்ற எண்ணம் எப்படியோ மூளையில் ஏறிவிட்டதாலோ என்னவோ நாவலில் வரும் நிகழ்வுகளின் நம்பகத்தன்மை முக்கியமாகப் படுகிறது.