பிளாகர்: தமிழில் நாளும் நேரமும்

நாளையும் நேரத்தையும் தமிழில் மாற்றுவது எப்படி என்று மணியன் கேட்டிருந்தார். உண்மையில், மாதத்தையும் கிழமையையும் தமிழில் மாற்றுவதற்கான நிரலை சிலப் பதிவர்கள் ஏற்கனவேப் பயன்படுத்தி வருகிறார்கள். நான் அதோடு நேரத்தில் AM/PM என்று இருப்பதை தமிழில் காலை/மதியம்/மாலை/இரவு என்று மாற்றுவதற்கான சில வரிகளையும் சேர்த்திருக்கிறேன். புது பிளாகரில் புது வார்ப்புருவுடன் பயன்படுத்தக்கூடிய இந்த நிரல் எப்படி செயல்படுகிறது என்பதற்கு சில எடுத்துக்காட்டுகள் கீழே:

1. நாள் காட்டும் இடத்தில் January அல்லது Jan என்று இருந்தால் அதை ஜனவரி என்றும், Sunday அல்லது Sun என்று இருந்தால் அதை ஞாயிறு என்றும் மாற்றிவிடும்.

2. நேரம் 3:15 PM என்றோ 08:45:00 PM என்றோ இருந்தால் அதை முறையே மதியம் 3:15 அல்லது இரவு 08:45:00 என்று மாற்றிவிடும். (குறிப்பு: உங்கள் பதிவில் நேரம் காட்டும் இடத்தில் AM, PM ஆகிய எழுத்துத்தொடர்கள் இல்லாவிட்டால் - 2:35 PM என்பது 14:35 என்று இருந்தால் - இந்த நிரல் அதை ஏதும் செய்யாமல் அப்படியே விட்டுவிடும். நேரம் காட்டப்படும் முறையை நீங்கள் உங்கள் Settings பக்கத்தின் மூலம் மாற்றிக் கொள்ளலாம்.)

நிரலை அப்படியேப் பயன்படுத்த விரும்புவோர் கீழே உள்ள வழிமுறைகளைப் பின்பற்றினால் போதும். ஏதாவது சிறப்பு மாற்றங்கள் செய்ய விரும்புபவர்கள் நிரல் துண்டை Notepad, Wordpad போன்ற ஒரு Text Editor-ல் வைத்து வேண்டிய மாற்றங்களைச் செய்தபின் வார்ப்புருவில் இடலாம். எடுத்துக்காட்டாக கீழே உள்ள மாற்றங்களை நீங்கள் செய்ய விரும்பலாம்.

(அ) மாதத்தையும் கிழமையையும் மட்டும் மாற்றிவிட்டு நேரத்தை அப்படியே விட்டுவிட நினைப்பவர்கள் நிரலில் <!-- Time starts --> என்னும் வரியிலிருந்து <!-- Time ends --> என்னும் வரி வரை உள்ளவற்றை அகற்றிவிடலாம்.

(ஆ) ஆங்கில மாதங்களை ஈழத்தமிழ் (யாழ்ப்பாணத் தமிழ்?) முறையில் எழுத விரும்புவோர் யூலை, ஒக்ரோபர் என்று வேண்டிய மாற்றங்களைச் செய்துக் கொள்ளலாம். (டகரமா ரகரமா என்றப் பட்டிமன்றத்தை மீண்டும் தொடங்கி அரைத்து அரைத்து விழுதான மாவை மறுபடியும் அரைக்க வேண்டாம் என்று அனைவரையும் கரம் கூப்பிக் கேட்டுக்கொள்கிறேன்.)

நீங்கள் செய்ய வேண்டியது:

1. வார்ப்புருவின் Edit HTML tab-க்கு செல்லுங்கள். மாற்றங்கள் செய்வதற்கு முன் வார்ப்புருவின் நகலை சேமித்து வைத்துக் கொள்ளுங்கள். கீழே உள்ள நிரல் துண்டை வெட்டி </HEAD> என்ற இடத்துக்கு மேலே ஒட்டுங்கள்.

<script>
<!-- Script by Jagad (http://kaiman-alavu.blogspot.com) -->
function tamilize(stg)
{
EList = new Array("Sunday", "Monday", "Tuesday", "Wednesday", "Thursday", "Friday", "Saturday", "January", "February", "March", "April", "May", "June", "July", "August", "September", "October", "November", "December");

EList2 = new Array("Sun", "Mon", "Tue", "Wed", "Thu", "Fri","Sat", "Jan", "Feb", "Mar", "Apr", "May", "Jun", "Jul", "Aug", "Sep", "Oct", "Nov", "Dec");

TList = new Array("ஞாயிறு", "திங்கள்", "செவ்வாய்", "புதன்", "வியாழன்", "வெள்ளி", "சனி", "ஜனவரி", "பிப்ரவரி", "மார்ச்", "ஏப்ரல்", "மே", "ஜூன்", "ஜூலை", "ஆகஸ்ட்", "செப்டம்பர்", "அக்டோபர்", "நவம்பர்", "டிசம்பர்");

<!-- Time starts -->
is_pm = 0;
is_am = 0;
has_ampm = 0;
hr_msd = 0;
hr_lsd = 0;
hr = 0;
dp = "";
blanko = "";
colonfound = 0;
i = 1;
while( i &lt; stg.length) {
if(stg.charCodeAt(i) == 77 &amp;&amp; stg.charCodeAt(i-1) == 80)
is_pm = 1;
if(stg.charCodeAt(i) == 77 &amp;&amp; stg.charCodeAt(i-1) == 65)
is_am = 1;
if(stg.charCodeAt(i) == 58 &amp;&amp; colonfound == 0){
colonfound = 1;
hr_lsd = stg.charCodeAt(i-1)-48;
if(i &gt;= 2 &amp;&amp; stg.charCodeAt(i-2) != 32) {
hr_msd = stg.charCodeAt(i-2)-48;
start_pos = i - 2;}
else {
start_pos = i - 1;}
hr = hr_msd*10 + hr_lsd;
if(stg.charCodeAt(i+3) == 58)
end_pos = i + 5;
else
end_pos = i + 2;}
i++;}
has_ampm = is_am + is_pm;
if (has_ampm == 1){
if (is_pm == 0){
if (hr == 12)
{dp = "இரவு ";}
else if (hr &gt;= 4)
{dp = "காலை ";}
else
{dp = "இரவு ";}
stg = stg.replace("AM", blanko);}
else {
if (hr == 12)
{dp = "மதியம் ";}
else if (hr &gt;= 8)
{dp = "இரவு ";}
else if (hr &gt;= 4)
{dp = "மாலை ";}
else
{dp = "மதியம் ";}
stg = stg.replace("PM", blanko);}
slice = stg.substring(start_pos,end_pos);
dp = dp + slice;
stg = stg.replace(slice,dp);}
<!-- Time ends -->

for (i=0;i &lt; 19;i++){
stg = stg.replace(EList[i], TList[i]);
stg = stg.replace(EList2[i], TList[i]);}
return stg;
}
</script>


2. வார்ப்புருவில் <data:post.dateHeader/> என்று இருக்கும் இடத்தைக் கண்டுபிடித்து அதை அகற்றிவிட்டு கீழே உள்ளதை இடுங்கள்.

<script>document.write(tamilize('<data:post.dateHeader/>'))</script>

3. <data:post.timestamp/> என்று எங்காவது இருக்கிறதா என்றுப் பாருங்கள். (சிலருக்கு இருக்காது.) இருந்தால் அதைக் கீழே உள்ளவாறு மாற்றுங்கள்.

<script>document.write(tamilize('<data:post.timestamp/>'))</script>

4. வார்ப்புருவில் <data:comment.timestamp/> என்று இருக்கும் இடத்தைக் கண்டுபிடித்து அதை அகற்றிவிட்டு கீழே உள்ளதை இடுங்கள்.

<script>document.write(tamilize('<data:comment.timestamp/>'))</script>

5. வார்ப்புருவில் <data:i.name/> என்று எங்கெல்லாம் இருக்கிறதோ அங்கெல்லாம் அதைக் கீழே உள்ளவாறு மாற்றுங்கள். (சிலருக்கு இருக்காது. மற்றவர்களுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் இருக்கக்கூடும்.)

<script>document.write(tamilize('<data:i.name/>'))</script>

6. வார்ப்புருவைச் சேமியுங்கள்.

இப்போது மாதம், கிழமை, நேரம் எல்லாம் தமிழில் தெரியும். பதிவில் ஒற்றை ஆங்கில எழுத்தைக் கூட சகித்துக் கொள்ளமுடியாத தனித்தமிழ் வெறியர் என்று உங்களை யாராவது நினைத்துக் கொண்டால் நான் பொறுப்பல்ல :-)

புது ப்ளாகரில் பழைய பின்னூட்டங்கள் - தீர்வு

முன்குறிப்பு: சொந்தக்கதை கேட்க விரும்பாதவர்கள் அடுத்த மூன்று பத்திகளை விட்டுவிடலாம்.

என் பதிவின் வார்ப்புரு நீளமான இடுகைகளை வாசிப்பதற்கு வசதியாக இல்லை என்று நலம் விரும்பிகள் சிலர் தெரிவித்ததால் வழக்கமாக இம்மாதிரி விஷயங்களில் எனக்கு இருக்கும் சோம்பலை ஒரங்கட்டிவிட்டு புது ப்ளாகருக்கு மாறினேன். அப்படியே புது ப்ளாகர் அளிக்கும் புது வார்ப்புருவுக்கும் மேம்படுத்திக் கொண்டேன். மாறிய பின் பழைய பதிவுகளைப் பார்த்தால் பின்னூட்டம் இட்டவர்களது பெயர்கள் தமிழில் இருந்தால் அவை சரியாகத் தெரியவில்லை. இது குறித்து ப்ளாகர்/கூகிள் நிறுவனத்துக்கு முன்பே அறிவிக்கப்பட்டுவிட்டது என்றும் அவர்கள் தற்போது எதுவும் செய்வதற்கு இல்லை என்று கையை விரித்து விட்டதாகவும் அறிந்தேன்.

இந்நிலையில் தமிழ்மண முகப்பில் சுட்டி அளிக்கப்பட்டிருந்த கோபியின் பதிவைப் பார்த்தேன். அவர் இந்தப் பிரச்சனைக்குத் தீர்வாக ஒரு நிரல் துண்டை அளித்திருந்தார். அதை வெட்டி என் வார்ப்புருவில் இட்ட பின் வார்ப்புருவை சேமிக்க முடியவில்லை. மர்மமான XML Error அறிவிப்புகள் வந்துக் கொண்டிருந்தன. XML, Javascript போன்றவற்றில் எவ்வித அறிமுகமும் இல்லாத எனக்கு (நான் தொழில்முறை மென்பொருளாளன் அல்ல) அவற்றை விளங்கிக் கொள்வது கடினமாக இருந்தது. பிறகு ஒருவழியாக error தகவலுக்கான காரணத்தைக் கண்டறிந்தேன். (XML-ல் <, >, & போன்ற சில சிறப்புக் குறிகளை அப்படியே நிரலில் (script) பயன்படுத்துவது குழப்பத்தை விளைவிக்குமாம். அவற்றுக்குப் பதில் முறையே &lt;, &gt;, &amp; என்று எழுதவேண்டும்.)

இவற்றை எல்லாம் சரிசெய்த பின்னும் பழையப் பின்னூட்டங்களை இட்டவர்களது பெயர்கள் தெரியவில்லை. பிறகு கோபியின் பதிவில் அவரது பின்னூட்டங்களைப் பார்த்தபோது அவர் புது ப்ளாகருக்கு மாறிய பின்னும் Classic Template எனப்படும் பழைய வார்ப்புருவையே பயன்படுத்துகிறார் என்பது தெரிந்தது. அப்படி பழைய வார்ப்புருவைப் பயன்படுத்துவோருக்கு அவரது நிரல் தீர்வாக அமையக் கூடும். ஆனால் பெரும்பாலானாவர்கள் புது ப்ளாகருக்கு மாறியபின் புது வார்ப்புருவுக்கு மேம்படுத்திக் கொண்டுவிட்டனர். அவர்களுடைய பதிவில் இந்த நிரல் துண்டு வேலை செய்யாது என்பதை சில மணிநேரங்கள் மெனக்கெட்ட பின் சர்வ நிச்சயமாக அறிந்துக்கொண்டேன். ஏன் வேலை செய்யாது என்பதும் புரிந்தது. வேலை செய்யக்கூடிய ஒரு நிரல் துண்டை நாமே எழுதிவிடலாம் என்ற எண்ணம் மூளையில் ஏறியது. அப்படி எழுதியது சரியாகச் செயல்படுகிறது என்பதற்கு என் பழையப் பதிவுகளில் உள்ள பின்னூட்டங்களில் அட்சர சுத்தமாகத் தெரியும் பெயர்களே ஆதாரம்.

இந்த நிரல் புது ப்ளாகரில் புது வார்ப்புருவுக்கு மேம்படுத்திக் கொண்டவர்களுக்கு மட்டுமே. பின்னூட்டமிட்டவரது பெயர் ஆங்கிலம், தமிழ் அல்லாத வேறு மொழிகளில் இருந்தால் தெரியாது. இந்த தீர்வு தமிழ் பெயர்களுக்கு மட்டுமே.

நீங்கள் செய்யவேண்டியது:

1. வார்ப்புருவின் Edit HTML tab-க்கு செல்லுங்கள். "Expand Widget Templates" என்றக் கட்டத்தை தேர்வு செய்துக் கொள்ளுங்கள். கீழே உள்ள நிரல் துண்டை வெட்டி உங்கள் வார்ப்புருவில் </HEAD> என்ற இடத்துக்கு மேலே ஒட்டுங்கள்.

<script>
function to_unicode(stg)
{
ostg = &quot;&quot;;
i = 0;
while(i &lt; stg.length)
{
if(stg.charCodeAt(i) == 224)
{
if(stg.charCodeAt(i+1) == 38)
{
secondchar = (stg.charCodeAt(i+3)-48)*100 + (stg.charCodeAt(i+4)-48)*10 + (stg.charCodeAt(i+5)-48);
if(stg.charCodeAt(i+7) == 38)
{
mainchar = (stg.charCodeAt(i+9)-48)*100 + (stg.charCodeAt(i+10)-48)*10 + (stg.charCodeAt(i+11)-48);
i += 13;
}
else
{
mainchar = stg.charCodeAt(i+7);
i += 8;
}
}
else
{
secondchar = stg.charCodeAt(i+1);
if(stg.charCodeAt(i+2) == 38)
{
mainchar = (stg.charCodeAt(i+4)-48)*100 + (stg.charCodeAt(i+5)-48)*10 + (stg.charCodeAt(i+6)-48);
i += 8;
}
else
{
mainchar = stg.charCodeAt(i+2);
i += 3;
}
}
mainchar += 2816;
if (secondchar == 175)
mainchar += 64;
ostg += String.fromCharCode(mainchar);
}
else
{
ostg += String.fromCharCode(stg.charCodeAt(i));
i++;
}
}
return ostg;
}
</script>

2. வார்ப்புருவில் இரண்டு இடங்களில் <data:comment.author/> என்று இருக்கும். அதை அகற்றிவிட்டு அந்த இடங்களில் கீழே உள்ளதை இடுங்கள்.

<script>document.write(to_unicode('<data:comment.author/>'))</script>

3. வார்ப்புருவை சேமியுங்கள். பழைய பின்னூட்டங்களை இட்டவர்களது பெயர்கள் இப்போது சரியாகத் தெரியும்.

பி.கு: இந்த தகவல்களை நீங்கள் தாராளமாக எங்கு வேண்டுமானாலும் மறு பிரசுரம் செய்யலாம்.

நடை

எழுதத் தொடங்கிய சில காலத்துக்குப் பின்னரே தன் நடை பற்றிய பதற்றம் முழுமையாக விலகியது என்ற பொருளில் ஜெயமோகன் ஏதோ ஒரு புத்தக முன்னுரையிலோ இணையக் கட்டுரையிலோ எழுதியிருந்தார். (ஜெயமோகன் பெயரைக் குறிப்பிடாமல் தொடர்ந்து இரண்டு பதிவுகள் எழுத முடியாமல் செய்யும் ஜெமோனோமேனியா எனும் விசித்திர வியாதி எப்போது விலகும் என்றுத் தெரியவில்லை.) எனக்கும் ஒரு காலத்தில் நடை பற்றிய பதற்றம் இருந்தது. வலதுத் தோளை லேசாகக் கீழே சாய்த்து நடப்பது தவிர்க்கவேண்டிய ஒருக் குறைபாடாக சிறுவயதிலிருந்தே சுட்டிக் காட்டப்பட்டு வந்ததால் ஏற்பட்ட பதற்றம் அது. பின்னாளில் அறிமுகமான ஒரு மலையாளி நண்பர் "நீங்கள் மோகன்லால் ரசிகரா?" என்றுக் கேட்டுச் சிரித்தார். புரியவில்லை. மோகன்லால் ஒரு தோளை கீழே சாய்த்து நடந்து வந்து "எடா மோனே தினேஷா" என்று வசனம் பேசும் அந்த அடவுக்குப் பாதிக் கேரளமே அடிமை என்றும் நிறைய இளைஞர்கள் அவரைப் போலவே ஒருத் தோளை கீழே சாய்த்து நடக்கிறார்கள் என்றும் நண்பர் விளக்கினார்.

ம்.. இந்த "நடை"யைப் பற்றி ஒருப் பதிவு எழுதும் அளவுக்கு கையிருப்பு இன்னும் காலியாகவில்லை. அதே நேரத்தில் கடந்த இரண்டு பதிவுகளில் sidebar கடுகாய் சிறுக்கும் அளவுக்கு எழுதிய நடை உடை பாவனைகளைப் பற்றி மேற்கொண்டு எதுவும் எழுதும் எண்ணமும் இல்லை. உண்மையில் சென்றப் பதிவின் நீளத்தைப் பார்த்துவிட்டு "படிக்கிறவங்கள ஏன் இப்படிப் போட்டுக் கொல்லுறீங்க?" என்று என் மனைவி வினவியது நீளமும் அழுத்தமும் குறைந்த ஒரு பதிவையாவது எழுதவேண்டும் என்ற அழுத்தத்தை எனக்கு ஏற்படுத்திவிட்டது. இந்தப் பதிவு எழுத்து நடையைப் பற்றியது தான்.

நான் எழுதுவதையெல்லாம் எழுத்து என்று ஒத்துக்கொள்வதானால், சொல்ல வருவதை எந்த வரிசையில் அடுக்கலாம் என்று முடிவு செய்ய சற்று நேரம் செலவிடுவதுண்டே தவிர நடையைப் பற்றியெல்லாம் கவலைப்படுவதில்லை. இன்பச் சுற்றுலாவைக் குறித்து இருநூறு வார்த்தைகளுக்கு மிகாமல் எழுதும் நடை எட்டிப் பார்த்துவிடக் கூடாது என்பதில் மட்டும் கொஞ்சம் கவனம் இருக்கும்.

சிலரை நடைக்காகவே படிக்கலாம். எழுத்தில் புதிய தகவல்களோ கருத்துக்களோ ஏதும் இல்லாமல் இருந்தாலும் படிக்கத் தொடங்கினால் "நடையா, இது நடையா?" என்றுப் படித்துக்கொண்டே இருக்கலாம். வேறு சிலர் நடமாடும் பல்கலைக் கழகங்களாக இருப்பார்கள். ஆனால் நடை எப்போதோ படித்த Asterix படக்கதைகளில் வரும் Julius Monotonus பாத்திரத்தை நினைவுப் படுத்தும். நாம் அதிகம் ரசிக்கும் எழுத்தாளர்களின் பாதிப்பு நம்முடைய நடையில் இருப்பது தவிர்க்க முடியாதது. ஏ.ஆர்.ரஹ்மான் ஒரு பேட்டியில் சொன்னார்: "மற்ற இசையமைப்பாளர்களின் சாயல் என் இசையில் வந்துவிடக் கூடாது என்பதற்காக நான் அவர்களுடைய இசையை அதிகம் கேட்பதில்லை". நானும் அவரது இசை சுத்த சுயம்புவானது என்று தான் நினைத்திருந்தேன். நுஸ்ரத் ஃபத்தே அலி கானின் கவ்வாலியைக் கேட்கும் வரை.

தமிழ் பதிவுலகைப் பொறுத்தவரை இரண்டு வகையான நடைகள் அதிக வரவேற்பைப் பெறுவதாக உணர்கிறேன். ஒன்று கலக நடை. மற்றொன்று அங்கத நடை.

கலக நடை மரபுவாதிகளின் முகச்சுழிப்பை தன் முக்கிய நோக்கங்களில் ஒன்றாகக் கொள்ளவேண்டும் என்று ஒருக் கருத்து நிலவுகிறது. அந்த வகையில் இடக்கர் அடக்கலுக்கோ, இன்னபிற அடக்கல்களுக்கோ அடங்காமல் எழுதும் வல்லமை கலக நடைக்கு முக்கியம். "மனிதக் கழிவை அகற்றுதல்" என்று ஆசாரம் பேணுவதெல்லாம் கலக நடைக்கு உதவாது. "பீ அள்ளுவது" என்றுச் சாற்றுவதே சாலச் சிறந்தது. அதே போல பொதுமைப்படுத்துதல், ஸ்டீரியோடைப்பிங் போன்ற பெரிய பெரிய வார்த்தைகளைக் கொண்டு நீங்கள் வாக்கியம் அமைத்தால் அது வெறும் உரைநடையாக இருக்குமே தவிர உறைக்கும் நடையாக இருக்காது. ஆனால் "டீ.ராஜேந்தர் அடுக்கு மொழியில்தான் **விடுவார் என்று எண்ணுவது போல்" (நன்றி: ரோசாவசந்த்) என்பது போன்ற உவமைகளைப் பயன்படுத்தினால் பசுமரத்தாணியின் மண்டையிலேயே போட்ட மாதிரி இருக்கும். கலக நடையில் அதிகப்பட்சமாக எந்த அளவுக்கு இடக்கர் கலந்து இடக்காக எழுதலாம் என அறிய விரும்புவோர் சிலுக்கு ஸ்மிதாவுக்கு அர்ப்பணிக்கப்பட்ட சாரு நிவேதிதாவின் சிறுகதைத் தொகுப்பில் இடம்பெற்றுள்ள "பிரஸ்ஸில் இருக்கிறது" போன்றக் கதைகளைப் படிக்கலாம்.

இணையத்தில் உள்ள அங்கத எழுத்தாளர்கள் பொதுவாக ஏதாவது ஒரு சாரியில் இருந்துக்கொண்டு எதிர் சாரியில் இருப்போரை நையாண்டி செய்வதை வழக்கமாக வைத்திருப்பார்கள். சென்னைத் தமிழ், நெல்லைத் தமிழ், கோவைத் தமிழ் என்றுப் பன்மொழிப் புலமை இருப்பது அங்கத எழுத்துக்குப் பலம் சேர்க்கும். இவர்கள் பெரும்பாலும் முகத்திரைக்கு பின்னால் இருந்து தான் எழுதுவார்கள். அங்கதக்காரர்கள் கையில் கிடைத்தால் அவர்களை அங்கம் அங்கமாக பிரித்தெடுக்க ஒருக் கூட்டம் எப்போதும் தயாராக இருப்பது இதற்குக் காரணமாக இருக்கக்கூடும். இவர்களது முகத்திரையைக் கிழித்துவிட்டு தான் மறுவேலை என்று சிலர் களம் இறங்குவதும், இவர்கள் "பர்தே மே ரெஹ்னே தோ" என்று ஆஷா போன்ஸ்லேயை மிஞ்சும் விதத்தில் சிணுங்குவதும் எழுத்துக்கு அப்பாற்பட்டக் கூடுதல் நகைச்சுவை.

இணையத்தில் அதிகம் காணமுடியாத ஒருவகை நடை இருக்கிறது. அந்த நடையை எதிர்கொள்ளும்போது என் சிறுவயதில் எங்கள் ஊரில் கிழிந்த அழுக்கு உடைகளோடு திரிந்த ஒரு மனிதர் நினைவுக்கு வருவார். ஒருவித சித்த விகாரக் கலக்கத்தில் இருப்பதாக நம்பப்பட்ட அவரது வாய் ஒயாமல் சொல் மாரி பொழிந்துக் கொண்டே இருக்கும். சொற்கள் ஒன்றோடு ஒன்று தொடர்பற்று சித்தம் தெளிவாக இருப்பவர்களால் அறவே பொருள் விளங்கிக்கொள்ள முடியாமல் இருக்கும். சில நிமிடங்கள் தொடர்ந்துக் கேட்டுக்கொண்டு இருந்தால் probability விதிகளின் படி அவ்வப்போது சில பொருள் உள்ள வாக்கியங்கள் கிடைக்கும். இன்னும் அதிக நேரம் பொறுமையுடன் கேட்பவர்களுக்கு அட என்றுப் புருவம் உயர்த்த வைக்கும் கவித்துவமான வரிகளும் சில நேரங்களில் வாழ்வியல் தத்துவங்களும் கூட கிடைப்பதாக பேசிக்கொண்டார்கள்.

ஆமாம், தானியக்க எழுத்தைத் தான் சொல்கிறேன். இந்த வகை எழுத்தைப் படிப்பதில் உள்ள தடைகளைத் தாண்டி உள்ளே நுழைந்துவிட நான் எத்தனையோ முறை முயற்சி செய்தும் ஒவ்வொரு முறையும் அந்த நடை அகநானூற்றுத் தோழியைப் போல வாயில் மறுத்துவிடுகிறது. விலக்கப்பட்ட கனி மீது ஏற்படும் தவிர்க்க முடியாத ஈர்ப்பை போல தானியக்க எழுத்தின் மீதான ஆர்வம் தொடர்கிறது.

யாராவது நண்பர்களுடன் - குறிப்பாக ஆனந்தவிகடனுக்கு அப்பால் நகராத பெரும்போக்கு நண்பர்களுடன் - நூலகத்துக்குச் செல்ல நேர்ந்தால் ஒரு விளையாட்டில் ஈடுபடுவதுண்டு. தமிழ் வரிசையிலிருந்து முற்றிலும் தானியக்க நடையில் எழுதப்பட்ட ஒருப் புத்தகத்தை எடுத்துக் கொடுத்து இதைப் படித்திருக்கிறீர்களா என்றுக் கேட்பேன். அவரும் வாங்கி "கோணங்கி... ஆத்தர் பேரு வித்தியாசமா இருக்கே.." என்றவாறு புத்தகத்தைத் தற்போக்காகத் திறந்து ஒரு - ஒரே ஒரு - வாக்கியத்தைப் படிக்க முயல்வார்.

"நாமறியாத கிரகத்தில் சுழலும் பாதரஸ ஓநாய்களின் நரம்புகள் மெய்யெழுத்தொலியாய் நீண்டுவர ஒலி அலகுகளில் வளையும் கமகங்கள் கிரக இடை சூன்யத்தில் ஆலாபிக்க வேறு இருகால அடுக்கில் பின் முன்மொழிமாற காலத்துகள் நுண்மையாய் சேரும் பொழுதுகள் புலர்ந்து பச்சிலைகளின் அகர வரிசை பதினாயிரம் இசைக்குறிப்புகளாய் பெருகி உயிர்மெய் சுருள்வில் ரசாயன அகராதியில் அணுக்கவைகள் புரண்டு மனிதப்பேச்சைவிடவும் புலனுக்கு எட்டாத நுண் ஒலிகள் மட்டும் பாதரஸ ஓநாய்கள் தொனிக்க வேதியிலை நரம்புகளின் பரிபாஷை ஓநாய்களின் உரையாடலாய் பச்சை உலகின் அந்தரங்க நுரையீரலில் சரமூச்சு திருகி அதிரும் ஓநாய்களின் மண்ணீரல் சவ்வுகளில் பரவிய துடிப்பறையில் பாலைநில எயினர் விரல் அலகுத்துடி மாற செந்நாய் தோன்றி மைவரைமேல் நின்று ஊளையிட்டது உருவற்று."

படித்து முடித்துவிட்டு திகிலும், மருட்சியும், "ஒருவேளை இவனுக்கு இதெல்லாம் புரிகிறதோ" என்றக் கொடிய சந்தேகமுமாய் நிமிரும் நண்பரின் பேயறைந்த முகத்தைப் பார்ப்பது வாழ்க்கையை வாழ லாயக்கானதாக மாற்றும் நானூற்று முப்பத்து ஏழு வகை அற்ப சந்தோஷங்களில் ஒன்று.