ஈழம், கேரளம், குமரிமாவட்டம் - 2
இலங்கையில் தமிழ் பேசும் மக்களிடையே சேரநாடு என்று முன்னர் அறியப்பட்ட தற்போதைய கேரளத்தின் பண்பாட்டுத் தாக்கம் மிக அதிகமாக இருப்பதை எண்ணற்றத் தரவுகள் மூலம் அறிந்துக்கொள்ள முடிகிறது. தென் குமரி முதல் வட வேங்கடம் வரையிலான பண்டையத் தமிழகத்துக்கும் இலங்கைத் தீவிற்கும் இடையேயான தொடர்புகளை ஆராயும் வரலாற்றாசிரியர்கள் ஒருகாலத்தில் இலங்கை முழுவதும் பரவியிருந்த கண்ணகி வழிபாட்டை ஒரு முக்கியக் கண்ணியாக கருதுகின்றனர். தமிழர்கள் மட்டுமல்லாது "பத்தினி தெய்வோ" என்ற பெயரில் சிங்களர்களும் கண்ணகியை வழிபட்டு வந்தனர். கண்ணகி வழிபாடு சேரநாட்டில் செங்குட்டுவனால் தொடங்கப்பட்டதாகவும், கண்ணகி கோயிலின் தொடக்க நிகழ்ச்சியில் இலங்கை அரசன் கஜபாகு கலந்துக்கொண்டதாகவும் சிலப்பதிகாரம் சொல்கிறது. கேரளத்தில் கண்ணகி வழிபாடு இன்றுவரை தொடர்வது கேரளத்திற்கும் இலங்கைக்கும் பண்பாட்டுப் பரிமாற்றங்கள் தொன்றுதொட்டு இருந்து வந்திருக்கின்றன என்பதற்கு ஒரு சான்று எனலாம்.
வரலாற்று ரீதியாகப் பார்க்கும்போது கேரளத்தின் தனித்தன்மைகளில் ஒன்றாகத் தாய்வழி சமூகமுறை இருக்கிறது. திருமணத்திற்கு பின் ஆண் தன் மனைவியின் குடும்பத்தில் ஒரு உறுப்பினராக வாழும் மருமக்கத்யம் முறை கேரளத்தில் பல்வேறு சாதியினரிடையே சில தலைமுறைகள் முன்பு வரை நிலவி வந்தது. ஈழத்தில் குறிப்பாக மட்டக்களப்பை ஒட்டிய கிழக்குப் பகுதிகளில் அதிக எண்ணிக்கையிலுள்ள சில சாதியினரிடையேயும் இம்முறை (மனைவியின் 'குடி'யில் கணவன் இணைவது) வழக்கில் இருந்துவந்திருக்கிறது. கண்ணகி வழிபாடும் கிழக்குப் பகுதித் தமிழரிடையே தான் மிக அதிகமாக இருந்தது என்று பேரா. கார்த்திகேசு சிவத்தம்பி ஒரு ஆய்வுக்கட்டுரையில் குறிப்பிடுகிறார். மொத்தத்தில் கேரளப் பண்பாட்டின் தாக்கம் இலங்கையின் கிழக்கு மாகாணத் தமிழர் மற்றும் தமிழ் பேசும் இஸ்லாமியரிடையே தான் மிக அதிகமாக காணப்படுகிறது.
அதே கட்டுரையில் பேரா. சிவத்தம்பி இலங்கைத் தமிழர்களின் உணவுமுறை தமிழக உணவுப் பழக்கங்களிலிருந்து வேறுப்பட்டிருப்பதை (எடுத்துக்காட்டாக தேங்காய், மிளகு அதிகமாகவும், தயிர், மோர் ஆகியவை குறைவாகவும் பயன்படுத்துதல்) சுட்டுகிறார். இது கேரள உணவுமுறையை ஒத்திருக்கிறது. மேலும் இந்தியாவிலேயே தலித் மக்கள் நீங்கலாக மாட்டிறைச்சி உண்ணுவதைக் குறித்து எவ்விதத் தயக்கமும் மனத்தடையும் இல்லாத ஒரே இந்து சமூகமென்றால் அது மலையாளிகள் தான் என்று நினைக்கிறேன். ஈழத்தமிழரிடையே - குறைந்தபட்சம் மட்டக்களப்புத் தமிழர்களிடையே - மாட்டிறைச்சி உண்ணுவதைக் குறித்தத் தயக்கங்கள் அறவே இல்லை என்று அப்பகுதியைச் சேர்ந்த நண்பர் ஒருவர் சொன்னார்.
கிழக்கு மாகாணத்தில் அதிக எண்ணிக்கையில் வாழும் முக்குவர்கள் ஈழத்தமிழருக்கும் கேரளத்துக்கும் இடையே இருந்த வரலாற்றுத் தொடர்புகளுக்கு ஒரு முக்கிய சான்றாக இருக்கிறார்கள். முக்குளித்தல், முங்குதல் போன்றத் தமிழ் சொற்களிலிருந்து தான் முக்குவர் என்ற பெயர் தோன்றியிருக்கக் கூடும் என்று நம்பப்படுகிறது. கேரளத்திலும் குமரிமாவட்டத்திலும் மீன்பிடித்தலையே தங்கள் முக்கியத் தொழிலாகக் கொண்டு வாழ்ந்துவந்த/வரும் இவர்கள் பழங்காலத்தில் முக்குளிப்பவர்களாக இருந்திருக்க வாய்ப்பிருக்கிறது. (ஆனால் முக்குவர்களை மட்டக்களப்புப் பகுதியைத் தோற்றுவித்த மூத்தக்குடிகளாகச் சித்தரிக்கும் "மட்டக்களப்பு மான்மியம்" எனும் பழைய நூல் அவர்களை 'முற்குகர்' என்று விளிப்பதோடு மட்டுமல்லாமல் அவர்கள் அயோத்தியிலிருந்து படையெடுத்து வந்ததாகச் சொல்லி இராமாயணத்தோடு முடிச்சு போடப் படாதபாடு படுகிறது. சாதிப்பெயரை விருப்பப்படித் திரித்துப் பெருமை பேசுவது - எ.கா. சாணார் -> சான்றோர் - எல்லா இடங்களிலும் இருக்கத்தான் செய்கிறது.)
இலங்கையின் வரலாற்றில் முக்குவர்களைப் பற்றிய ஏராளமானக் குறிப்புகள் காணப்படுகின்றன. பதின்மூன்றாம் நூற்றாண்டில் இலங்கையில் புத்தளம், மட்டக்களப்புப் பகுதிகளில் முக்குவத் தலைவர்கள் குறுநில மன்னர்களைப் போல செயல்பட்டார்கள் என்பதற்குப் பல சான்றுகள் இருக்கின்றன. கிட்டத்தட்ட அதே காலகட்டத்தில் கேரளக் கரையோரத்திலிருந்துப் படையெடுத்து வந்த முக்குவர்கள் இலங்கையின் மேற்குக் கரையிலுள்ள புத்தளம் பகுதியைக் கைப்பற்றிக் குடியேறினர் என்று 'முக்கர ஹட்டண' என்னும் சிங்கள ஓலைச்சுவடி சொல்கிறது. இதன் காரணமாக அப்போதைய சிங்கள அரசன் தமிழகத்தின் நாகப்பட்டினம் பகுதியிலிருந்துக் கரையர்களைத் திரட்டி அவர்கள் உதவியுடன் முக்குவர்களுடன் போரிட்டு வெற்றிபெற்று, பின் கரையர்களைப் புத்தளம் பகுதியில் குடியமர்த்தியதாக அந்த ஓலைச்சுவடி தெரிவிக்கிறது. இப்படிக் புத்தளத்தில் குடியமர்ந்த தமிழ் கரையர்கள் காலப்போக்கில் 'கரவே' என்ற பெயரில் சிங்களம் பேசும் சாதியாக மாறிப்போனது மொழி அடையாளத்தை இழப்பது எத்தனை எளிது என்பதைக் காட்டுகிறது. ஆனால் அப்பகுதியில் நீர்கொழும்பு போன்ற இடங்களில் வாழும் கரையர்களில் பலர் தங்கள் தமிழ் அடையாளத்தை இன்னும் இழக்காமல் இருக்கின்றனர். சரளமாக சிங்களம் பேசும் இவர்களில் பெரும்பாலானோர் இன்றும் தங்களுக்குள் இலக்கணம் சிதைந்த ஒருவிதத் தமிழில் (எ.கா. நான் போகிறேன் என்பதற்கு நான் போறா) தான் பேசிக்கொள்கிறார்கள்.
முக்குவர்கள் முதன்முதலில் மட்டக்களப்புப் பகுதியில் நுழைந்தபோது அங்கு ஏற்கனவே வாழ்ந்துவந்த திமிலர் என்னும் மீனவ சாதியினரோடு அவர்களுக்கு மோதல் ஏற்பட்டு, பின் இஸ்லாமியர்களின் துணையுடன் திமிலர்களை வென்று அப்பகுதியைக் கைப்பற்றினார்கள் என்று கருதப்படுகிறது. முக்குவர்களுக்கும் இஸ்லாமியருக்கும் இடையே வரலாற்று ரீதியாக இருந்த நெருக்கமான உறவு சுவாரசியமானது மட்டுமல்ல கேரளத்துடன் ஈழத்துக்கு உள்ள தொடர்பைக் காட்டுவதாகவும் இருக்கிறது. கேரளக் கரையோரத்தில் மிகப் பழங்காலத்திலிருந்தே வணிகம் செய்து வந்த அரபு வணிகர்களுக்கும் உள்ளூர் மீனவ (முக்குவ) பெண்களுக்கும் இடையேயான திருமண/சம்பந்த உறவுகளை உள்ளூர் அரசர்கள் ஊக்குவித்ததால் நாளடைவில் முக்குவப் பெண்களுக்கும் அரபு ஆண்களுக்கும் பிறந்த ஒரு இனம் உருவானது. தங்கள் பெண்களைத் திருமணம் செய்துகொண்ட அரபு வணிகர்களை உள்ளூர்காரர்கள் மாப்பிள்ளைகள் என்று அழைத்ததால் இந்த கலப்பு இனத்துக்கு மாப்பிளாக்கள் (Mappila/Moplah) என்ற பெயர் வந்தது என்று பல வரலாற்றாசிரியர்கள் தெரிவிக்கிறார்கள். (ஆனால் இன்றைய மாப்பிளாக்கள் இந்த வரலாற்றை மறைத்து மாப்பிளா என்பது 'அம்மா பிள்ளை' என்பதிலிருந்து வந்தது என்ற மொக்கையான விளக்கத்தை விக்கிப்பீடியா வரைக் கொண்டு போயிருக்கிறார்கள்.) மாப்பிளா என்பது ஒரு தனி சமூகமாக உருவான பின்னும் கூட அந்த சமூக ஆண்கள் முக்குவப் பெண்களுடன் உறவு வைத்துக்கொண்டு அப்படி பிறக்கும் ஆண் குழந்தைகளில் சிலர் மாப்பிளா சமூகத்திடம் கையளிக்கப்படும் முறை நிலவியது என்று தர்ஸ்ட்டன் தன்னுடைய புகழ்பெற்ற Castes and Tribes of South India நூலில் குறிப்பிடுகிறார். அரபுகளிடம் இருந்த நெருங்கிய தொடர்பு காரணமாக முக்குவர்களில் பலர் இஸ்லாமிய மதத்திற்கு மாறி மாப்பிளா சமூகத்தில் இணைந்தனர். இதை வைத்து நோக்கும் போது இலங்கையின் கிழக்குப் பகுதியில் தாங்கள் தமிழர்கள் அல்ல என்றும் அரபு வம்சாவழியினர் என்றும் சொல்லிக் கொள்ளும் தமிழ் பேசும் இஸ்லாமியர்களின் வரலாறும் இதுபோன்றதாகத் தான் இருக்கும் என்று தோன்றுகிறது. கேரளத்திலிருந்து முக்குவர்களுடன் இஸ்லாமைப் பின்பற்றும் மாப்பிளாக்கள் வந்திருக்கவும் வாய்ப்பிருக்கிறது.
கேரளத்திலிருந்து இலங்கையில் அதிக அளவில் குடியேறிய மக்கள் சமூகத்தின் அடித்தட்டைச் சேர்ந்தவர்கள் என்பது அவர்களது மொழி மற்றும் பண்பாடு குறித்து சிலவற்றை விளங்கிக்கொள்ள உதவுகிறது. முன்னர் குறிப்பிட்ட பேரா. கார்த்திகேசு சிவத்தம்பியின் கட்டுரையில் முக்குவர்கள் வாழும் கிழக்குப்பகுதிக்கும் யாழ்ப்பாணத்துக்கும் உள்ள வேற்றுமைகளாக சிலவற்றை சொல்கிறார். மட்டக்களப்பு இந்துக்களின் மதச்சடங்குகள் ஆகம விதிகளைப் பின்பற்றாததாகவும் பார்ப்பனர்களின் தாக்கம் இல்லாததாகவும் இருப்பதாகவும் அங்கு முருகன் கோயில்களே அதிகம் இருப்பதாகவும் தெரிவிக்கிறார். மேலும் யாழ்ப்பாணத்தில் சிறுதெய்வ வழிபாடு என்ற நிலையில் அதிக முக்கியத்துவம் இல்லாமல் உள்ள கண்ணகி அம்மன், திரௌபதி அம்மன் வழிபாடுகளுக்கு மட்டக்களப்பில் முக்கியமான இடம் அளிக்கப்படுகிறது என்றும் சொல்கிறார். இவற்றின் மூலமும் மாட்டிறைச்சி உண்ணுதல் போன்ற பழக்கங்களின் மூலமும் இப்பகுதியில் குடியேறியவர்கள் சமஸ்கிருதமயமாக்கல் மற்றும் பார்ப்பனிய சடங்குகளின் தாக்கத்துக்கு வெளியே இருந்தவர்கள் என்பது தெளிவாகிறது.
பதினாறாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இலங்கையில் நுழைந்த போர்த்துக்கீசியர்களும் அவர்களுக்குப் பின் வந்த மற்ற ஐரோப்பியர்களும் அங்கு வாழ்ந்து வந்த தமிழ் பேசும் மக்களை ஒரு தவறானப் புரிதலின் காரணமாக மலபார்கள் என்றே அழைத்தனர். (மலபார் என்பது கேரளத்தைக் குறிக்கும் சொல்.) போர்த்துகீசியர் வருகைக்கு முன்பே கேரளத்திலிருந்து மக்கள் இலங்கையில் குடியேறியதற்கு வலுவான சான்றுகள் இருந்தாலும் பதினாறாம் நூற்றாண்டில் கேரளக் கரையோரமும் இலங்கை கடற்கரைப்பகுதிகளும் போர்த்துக்கீசியர் கட்டுப்பாட்டில் இருந்தக் காலத்தில் அவற்றிடையே கடல் வணிகமும், குடியேற்றங்களும், பண்பாட்டுப் பரிமாற்றங்களும் அதிகமாக இருந்திருக்கவேண்டும். மலையாள மொழியில் ஐரோப்பியர் வருகைக்குப் பின் புகுந்ததாகக் கருதப்படும் பல சொற்கள் ஈழத்தமிழிலும் இடம்பெற்றிருப்பதைப் பார்க்கமுடிகிறது. எடுத்துக்காட்டாக மலையாளத்தில் உள்ள கசேர(நாற்காலி), தோக்கு(துப்பாக்கி), குசினி(சமையலறை) ஆகிய சொற்கள் ஈழத்தமிழில் முறையே கதிரை, துவக்கு, குசினி என்று வழங்குகின்றன.
*****
இந்த இடத்தில் ஒரு கேள்வி எழலாம். கேரளத்திலிருந்து பல்வேறு காலகட்டங்களில் மக்கள் பெருமளவில் இலங்கையில் குடியேறினர் என்றால் இலங்கையில் ஏன் மலையாளம் பேசப்படவில்லை? மலையாள மொழியில் சமஸ்கிருத சொற்கள் மிக அதிக அளவில் கலந்திருக்கும் போது ஈழத்தமிழில் ஏன் சமஸ்கிருதக் கலப்பு மிகக் குறைவாகவே இருக்கிறது? இந்தக் கேள்வியும் அதற்கான பதிலும் முக்கியமானவை.
சமூகங்களில் பிறமொழி கலப்பும் தாய்மொழி அழிப்பும் மேலிருந்துக் கீழாகவே நடைபெறும் என்பதற்கு உலக வரலாற்றில் எத்தனையோ சான்றுகளைப் பார்க்கலாம். தால்ஸ்தாயின் 'போரும் அமைதியும்' படிக்கும்போது பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ரஷ்யாவில் அடித்தட்டு மக்கள் யாவரும் ரஷ்ய மொழி பேசிக்கொண்டிருக்க ரஷ்ய மேட்டுக்குடியினர் தங்களுக்குள் பெரும்பாலும் பிரெஞ்சு மொழியிலேயே பேசிக்கொண்டார்கள் என்பது தெரிகிறது. இன்று தமிழ்நாட்டில் பேசப்படும் தமிங்கிலத்தின் வேர்களை ஆராய்ந்தாலும் இந்தக் கருத்து உண்மைதான் என்பது புலப்படும். கேரளத்திலும் இதுதான் நடந்தது.
கேரளத்தில் (சேர நாட்டில்) சுமார் எண்ணூறு ஆண்டுகளுக்கு முன் வரைத் தமிழே பேச்சுமொழியாகவும் ஆட்சிமொழியாகவும் இருந்த நிலையில் அதற்கு சில நூற்றாண்டுகளுக்கு முன் வடநாட்டிலிருந்து வந்துக் குடியேறிய நம்பூதிரி பார்ப்பனர்கள் சமூகத்தில் முதன்மைப் பெற்றதால் தமிழுடன் சமஸ்கிருதச் சொற்களை அதிகமாகக் கலக்கும் மணிப்பிரவாள நடை தோன்றி நாளடைவில் அது மலையாளமாக உருமாறியது. ஆனால் மணிப்பிரவாளமும் மலையாளமும் 'உயர்'சாதியினரின் மொழியாகவும், அவர்கள் ஆதிக்கம் செலுத்திய அரசுகளில் ஆட்சிமொழியாகவும் இருந்தாலும் அடித்தட்டு மக்கள் தமிழ் மொழியின் வட்டார வழக்குகளையே தொடர்ந்துப் பேசி வந்தனர். தீண்டாமை என்பது 'காணாமை'யாக பரிமாண வளர்ச்சி அடையும் அளவுக்கு இங்கே சாதி அமைப்பு இறுக்கமடைந்துவிட்ட நிலையில் அடித்தட்டு மக்களுக்கு மலையாளம் பேசிய 'உயர்'சாதியினருடன் நேரடி தொடர்புகள் இல்லாததாலும், கல்வி மறுக்கப்பட்டதாலும் அவர்கள் மலையாளிகளாக மாறுவது அண்மைக்காலம் வரை நிகழவில்லை. இன்றும் கூட தனி சமூகமாக வாழும் கேரளப் பழங்குடியினரின் மொழி மலையாளத்தை விட்டு விலகியதாகவும் சமஸ்கிருதக் கலப்பற்றதாகவும் இருக்கிறது.
கேரளத்தில் கடந்த எண்பது ஆண்டுகளில் அனைவருக்கும் (மலையாள வழி) கல்வி என்ற நிலை ஏற்பட்டு சாதிகளிடையே ஊடாடல் அதிகரித்த பிறகே தமிழை மிகவும் ஒத்திருக்கும் பேச்சுவழக்குகளைக் கொண்டிருந்த பின்தங்கிய சமூகங்கள் செம்மையான மலையாளம் பேசத் தொடங்கினர். பல நூற்றாண்டுகளாக திருவிதாங்கூர் அரசில் இடம்பெற்றிருந்தக் குமரி மாவட்டத்தில் ஆதிக்க சாதியாக இருந்த நாயர்கள் மலையாளம் பேசுபவர்களாக இருக்க பின்தங்கிய சமூகங்களைச் சேர்ந்த நாடார்கள், மீனவர்கள், தலித்துக்கள் ஆகியோர் தமிழையே பேசிவந்தனர் என்பது கவனிக்கத்தக்கது. குமரி மாவட்டம் தமிழ்நாட்டோடு இணைக்கப்படாமல் கேரளத்துடன் தொடர்ந்து இருந்திருந்தால் இம்மக்கள் அனைவருமே தற்போது முழு மலையாளிகளாக மாறி இருப்பர் என்பது உறுதி. நானும் இதைத் தமிழில் எழுதிக்கொண்டிருக்க மாட்டேன்.
கேரளத்திலும் இலங்கையிலும் தற்போது வாழும் ஒரே சாதியான முக்குவர்களை எடுத்துக்கொண்டால் அவர்கள் தமிழ் பேசுபவர்களாகவே இருந்திருக்கிறார்கள். கேரளத்தில் பதினாறாம் நூற்றாண்டின் இவர்களிடையே மதமாற்றத்தை மேற்கொண்ட போர்த்துக்கீசிய/இஸ்பானிய பாதிரிகள் அதற்கு தமிழ் மொழியையேப் பயன்படுத்தியதாகப் பதிவு செய்திருக்கிறார்கள். கேரளத்தின் தென்பகுதியில் வாழ்ந்த முக்குவர்கள் சுமார் அறுபது ஆண்டுகளுக்கு முன்வரை குமரிமாவட்டத்தில் பேசப்படுவது போன்ற தமிழையே பேசிவந்தனர். அவர்களிடையே சில குடும்பங்களை நான் நேரடியாக அறிவேன். வீடுகளுக்குப் போனால் வயதானவர்கள் சரளமானத் தமிழில் பேசுவார்கள். இளையவர்களுக்கு தமிழ் புரியும் என்றாலும் பேசவராது. தகழியின் புகழ்பெற்ற நாவலை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டு பல விருதுகளை வென்ற செம்மீன் திரைப்படம் கேரள முக்குவர்களின் வாழ்க்கையைப் பற்றியது. முக்கியப் பாத்திரங்களின் பெயர்களிலிருந்தே (கருத்தம்மா, பழனி) அவர்களது தமிழ் மரபு விளங்கும். இப்படத்தில் வரும் பாடல்கள் - குறிப்பாக பெண்ணாளே, பெண்ணாளே என்னும் பாடல் - மிகவும் புகழ்பெற்றவை. திருமணத்தின் போது மணப்பெண்ணை நோக்கி மற்றப் பெண்கள் பாடும் இந்த பாடல் கடலுக்குப் போகும் மீனவனின் மனைவி நெறி தவறினால் கடலம்மா அவனைக் கொண்டு போய்விடுவாள் என்ற மீனவர்களது நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்டது. (பாடலில் வரும் அரயன்/அரயத்தி ஆகிய சொற்கள் முக்குவரில் ஒரு பிரிவினைக் குறிப்பவை. படிஞ்ஞாறு என்பது மேற்குத் திசையைக் குறிக்கும் 'படு ஞாயிறு' என்னும் பழந்தமிழ் சொல்லின் திரிபு என்று நினைக்கிறேன்.)
பெண்ணாளே பெண்ணாளே,
கரிமீன் கண்ணாளே கண்ணாளே!
கன்னி தாமர பூமோளே!
பண்டொரு முக்குவன் முத்தினு போயி
படிஞ்ஞாறாம் காற்றத்து முங்கி போயி
அரயத்தி பெண்ணு தபசிருந்நு
அவனெ கடலம்ம கொண்டு வந்நே!
அரயன் தோணியில் போயாலே
அவனு காவலு நீயாணே!
மலையாளப் படங்களில் பெரும்பாலும் 'தரவாட்டு' பின்னணி உடையவர்களாகக் காட்டப்படும் நாயகனும் நாயகியும் பாடும் பாடல்களில் எந்த அளவுக்கு சமஸ்கிருத சொற்கள் கலந்திருக்கும் என்பதை அறிந்தவர்களுக்கு இந்தப் பாடல் கிட்டத்தட்ட முழுமையாகத் தமிழ் சொற்களைக் கொண்டே அமைந்திருப்பது புலப்படும். தமிழில் வாசிப்பதற்கு வசதியாக லேசாக செம்மைப்படுத்தி கீழே இடுகிறேன்.
பெண்ணாளே பெண்ணாளே,
கருமீன் கண்ணாளே கண்ணாளே!
கன்னித் தாமரைப் பூமகளே!
பண்டு ஒரு முக்குவன் முத்துக்காக போனான்
மேற்குக் காற்றில் முங்கி(மூழ்கி) போனான்
அரயத்திப் பெண் தவமிருந்தாள்
அவனைக் கடலம்மா கொண்டு வந்தாள்!
அரயன் தோணியில் போனால்
அவனுக்குக் காவல் நீதான்!
24 மறுமொழிகள்:
நிறைய பயனுள்ள தகவல்கள். இலங்கைக்கு கேரள பகுதியில் இருந்த தமிழ் மக்கள் இடம் பெயர்ந்த பிறகே, தென்னிந்தியாவில் வடமொழியின் தாக்கம் ஆரம்பமாகி இருக்கிறது என்பது இந்த கட்டுரை வழி தெரிந்து கொண்டேன். ஆதிக்க சக்திகளின் கைக்கு எட்டும் தொலைவில் இல்லாததால் இலங்கைத் தமிழ் மலையாளமாக மாறிப் போய்விடவில்லை.
:)
அருமையான பதிவு ..இது குறித்து மேலும் பல உங்களிடமிருந்து எதிர்பார்க்கிறேன்.
குறிப்பாக முக்குவர்கள் பற்றி இதுவரை நான் அறியாத பல தகவல்கள் கிடைத்தன. மொழி நடை உணவு பழக்க வழக்கம் போன்றவற்றில் ஈழத்தவருக்கும் முக்குவருக்கும் இடையே உள்ள நெருக்கத்தை பார்த்திருக்கிறேன் .குமரி மாவட்ட முக்குவர்கள் சமையலறையை 'குசினி' என்று ஈழத்தவர் சொல்வது போல சொல்வது ஒரு உதாரணம்.
தொடர்ந்து எழுதுங்கள்.
ஜெகத்,
நல்ல பதிவு. நான் அறிந்திராத பல தகவல்களும் அடங்கிய பதிவு. இப் பதிவுக்கு நான் பின்னூட்டமிட்டால் உங்களின் பதிவை விட நீண்டு விடும். அந்தளவுக்கு பல சங்கதிகளைச் சொல்ல வைக்கும் பதிவு.
நேரமின்மையால் சில கருத்துக்களை மட்டும் இப்போது சொல்கிறேன்.
/* கண்ணகி வழிபாடு சேரநாட்டில் செங்குட்டுவனால் தொடங்கப்பட்டதாகவும், கண்ணகி கோயிலின் தொடக்க நிகழ்ச்சியில் இலங்கை அரசன் கஜபாகு கலந்துக்கொண்டதாகவும் சிலப்பதிகாரம் சொல்கிறது. */
ஈழத்தில் எனது ஊர் கரையோரக் கிராமம். எனது ஊரின் வழியாகத்தான் கஜபாகு கண்ணகி சிலையையும், காற்சிலம்பும் கொண்டு வந்ததாக செவிவழிக் கதையுண்டு. அதனால்தான் எனது ஊரின் பெயர் மாதகல் = மாது[கண்ணகி] + கல்[சிலை] வந்தது எனவும் கூறுவர்.
இதை யாழ்ப்பாண பல்கலைக் கழக முன்னாள் பேராசிரியர் பாலசுந்தரம் அவர்கள் தனது நூலொன்றிலும் குறிப்பிட்டுள்ளார்.
/* கண்ணகி வழிபாடும் கிழக்குப் பகுதித் தமிழரிடையே தான் மிக அதிகமாக இருந்தது என்று பேரா. கார்த்திகேசு சிவத்தம்பி ஒரு ஆய்வுக்கட்டுரையில் குறிப்பிடுகிறார். */
கண்ணகி வழிபாடு யாழ்ப்பாணாத்திலும் ஒரு காலத்தில் பிரபலமான வழிபாடாக இருந்ததற்குப் பல ஆதாரங்கள் உண்டு. ஆனால் கண்ணகி வழிபாட்டை
யாழ்ப்பாணத்தின் ஆறுமுக நாவலர் எதிர்த்தார். அதனால் யாழ்ப்பாணத்தில் பிற்காலத்தில் கண்ணகி வழிபாடு இல்லையென்று சொல்லுமளவுக்கு வந்துவிட்டது.
ஆறுமுக நாவலைரைப் பொறுத்த வரையில் தமிழ்மக்களின் மதம் சைவம். கண்ணகி சமண சமயத்தைச் சேர்ந்தவர் என்பதாலும் அவர் ஒரு மனிதப் பெண் எனவே தனிமனித வழிபாடு கூடாது எனும் காரணங்களுக்காக ஆறுமுக நாவலர் எதிர்த்தார். அன்று யாழ்ப்பாணத்தில் ஆறுமுக நாவலர் கையசைத்தால் பிணமும் தலையாட்டும் என்ற நிலையே இருந்தது. அதனால் நாவலரின் கோரிக்கையினால் கண்ணகி வழிபாடு யாழ்ப்பாணத்தில் அருவிவிட்ட போதும் இன்றும் சில இடங்களில் கண்ணகிக்கு கோயில்கள் உண்டு[ஒன்று அல்லது இரண்டு].
திரெளபதி வழிபாட்டைப் பொறுத்தவரை, நான் அறிந்த வரையில் திரெளபதிக்கு யாழ்ப்பாணத்தில் எங்கும் கோயில்கள் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை.[அறிந்த ஈழத்தவர்கள் சொல்வார்கள் என நினைக்கிறேன்.]
ஆனால் மட்டக்களப்பில் திரெளபதிக்கு ஆலயங்கள் உண்டு. அதில் ஒரு ஆலயம் மிகவும் பிரசித்தி பெற்றது.
/*முக்குவப் பெண்களுக்கும் அரபு ஆண்களுக்கும் பிறந்த ஒரு இனம் உருவானது. தங்கள் பெண்களைத் திருமணம் செய்துகொண்ட அரபு வணிகர்களை உள்ளூர்காரர்கள் மாப்பிள்ளைகள் என்று அழைத்ததால் இந்த கலப்பு இனத்துக்கு மாப்பிளாக்கள் (Mappila/Moplah) என்ற பெயர் வந்தது என்று பல வரலாற்றாசிரியர்கள் தெரிவிக்கிறார்கள். */
இதுபற்றி இன்னும் ஆய்வுகள் செய்ய வேண்டும் என்றே நான் நினைக்கிறேன். இதுபற்றி இன்னும் சரியான தகவல்கள்/முடிவுகள் வந்துள்ளதாக நான் இதுவரை அறிந்திருக்கவில்லை. ஆனால் பல செவிவழிக் கதைகள் நீங்கள் சொல்வது போல உண்டு. மாப்பிளாக்கள் என நீங்கள் சொல்வது போல இன்னொரு கலப்பு இனமும் இருந்ததாகச் சொல்வார்கள். "தொம்பி" என அழைக்கப்படும் இக் கலப்பினமும் தென்னிந்தியாவிலிருந்து வந்த சோனக [முஸ்லிம்கள்]ஆண்களுக்கும் தமிழ் பெண்களுக்கும் பிறந்த சந்ததி எனச் சொல்வார்கள்.
இலங்கை அரசியலில் ஈடுபட்டிருந்த J.R.ஜெயவர்த்தனாவும் "தொம்பி" இனத்தைச் சேர்ந்தவர் என அவரின் அரசியல் எதிரிகள் துண்டுப்பிரசுரங்கள் மூலமும் , மேடைப்பிரச்சாரங்கள் மூலமும் சிங்கள மக்களுக்குப் பிரச்சாரம் செய்தனர் என J.R.ஜெயவர்த்தனாவின் உத்தியோகபூர்வ சுயசரிதப் புத்தகத்தில் சொல்லப்பட்டுள்ளது.
ஆனால் J.R.ஜெயவர்த்தனாவின் முன்னோர்கள் தென்னிந்திய செட்டி சாதியைச் சேர்ந்தவர்கள். J.R.ஜெயவர்த்தனாவின் முன்னோர்கள் ஒல்லாந்தர் ஆட்சியின் போதுதான் இலங்கைக்கு வந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதே போல சாவகத்திலிருந்து [Java] வர்த்தகர்களாகவும், கொலைப் படைகளாகவும்[mercenary armies] வந்து குடியேறியவர்களுக்கும் தமிழ் பெண்களுக்கும் நடந்த கலப்பில் பிறந்தவர்கள் சாவகர்கள் என அழைக்கப்பட்டனர். இவர்கள் யாழ்ப்பாணத்தில் ஒரு குறிப்பிட்ட பகுதியிலேயே குடியேற்றப்பட்டனர். அவ்விடம் இன்று சாவகச்சேரி என அழைக்கப்படுகிறது.
பின்னர் மீண்டும் வருகிறேன்.
பதினாறாம் நூற்றாண்டில் மட்டுமல்ல இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்திலும் தென் தமிழகமும் இலங்கையும் காலனியாதிக்கத்தின் விளைவாக பல வர்த்தக தொடர்புகளை கொண்டிருந்தது. அதன் மூலமாகவும் பல சொற்பிரயோகங்கள் பரிமாறப்பட்டிருக்க கூடும் என்பதை கணக்கிலெடுத்துக் கொள்ள வேண்டும். குசினி (kitchen), சப்பாத்து (shoe) போன்ற போர்த்துக்கீசிய வார்த்தைகள் கேரளாவில் மட்டுமின்றி, குமரி மாவட்ட முக்குவர் சமூகத்தில் மட்டுமின்றி, நெல்லை/தூத்துக்குடி மாவட்ட பரவர் சமூகத்திலும் புழங்குகின்றன. ஒரு வேளை இராமநாதபுரம் கடற்கரையோர மக்களிடம் கூட புழங்கலாம். இச் சொற்கள் இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் தென் தமிழக பரவர் குல மக்கள் இலங்கையோடு கொண்ட வர்த்தக தொடர்பு காரணமாகவே என்று கேள்விப்பட்டிருக்கிறேன்.
புவியலமைப்பு, தட்பவெப்ப நிலை, செய்யும் தொழில் முதலானவையும் சொற்பிரயோகங்களையும், பேசும் விதத்தையும் தீர்மானிக்கின்றன. உதாரணமாக, பனையேறும் நாடார்களும், மீன்பிடிக்கும் பரவர்களும் நீட்டி முழக்கிப் பேசுவதற்கான காரணம்: முதல் தரப்பு பெரும் பரப்பில், உயரத்தில் இருந்து கொண்டு கீழே இருப்பவர் அல்லது பக்கத்து மரத்தில் இருப்பவரோடு உரையாட; இரண்டாவது தரப்பு அலைகளின் பேரிரைச்சலுக்கு நடுவில் உரையாட; என்ற கருத்து பரவலாக இருக்கிறது.
கேரளாவிலும், ஈழத்திலும் சொற்பிரயோகங்கள் ஒன்றுபடுகின்றன என்பதை எடுத்துக் காட்டுவது ஒன்று. அவை இந்த, இந்தக் காரணங்களால்தான் தீர்மானிக்கப்பட்டன என்று உறுதியாக சொல்வது இன்னொன்று. பின்னதை செய்ய சுயேச்சையான 2-3 ஆதாரங்களாவது தேவைப்படும். அந்தப் பொறுப்பை ஆராய்ச்சியாளர்களுக்கு விட்டு விட்டு நீங்கள் தொடர்ந்து எழுதுங்கள். வாசிக்க அருமையாக உள்ளது உங்கள் எழுத்து.
அருமையான தகவல் நிறைந்த பதிவு.
ஜெகத்!
அருமையான பல தகவல் கொண்ட ஆய்வு இது. நீங்கள் இக்கட்டுரையில் குறிப்பிட்டுள்ள, ஈழத்தின் கிழக்குப் பகுதி குறித்த பல தகவல்கள் சரியாகவே உள்ளன. அந்தப்பகுதியில் வாழ்ந்தவன் எனும் வகையில் மேலும் சில தகவல்கள்...
நீங்கள் குறிப்பிட்டுள்ள சமய வழிபாட்டுப் பாராம்பரியம் நிச்சயமாக ஈழத்தின் வடக்குக்கும் கிழக்குக்கும் பெருமளவில் வேறுபாடுடையதே. வடக்கில் திரெளபதி வழிபாடு இல்லலேயில்லை. ஆனால் கிழக்கிலும், புத்தளப்பகுதியிலும், இவ்வழிபாட்டுமுறைமை இன்றும் உண்டு.இதில் மட்டக்களப்பில் பாண்டிருப்பிலும், புத்தளத்தில் உடப்பு எனும் இடத்திலும் இன்றும் பிரசித்திபெற்ற திரெளளபதி கோவில்கள் உண்டு. இந்த சக்திவழிபாட்டுக்கு அடுத்ததாக இப்பகுதிகளில் காணப்படுவது முருக வழிபாடே. இக்கோவில்களின் வழிபாட்டுமுறைமைகள் ஆகமமயப்பட்டதல்ல. பூசகர்கள் பிராமணர்களும் அல்ல.
சிங்களவர்களில் கரையோரச் சிங்களவர்களுக்கும், நாட்டுச் சிங்களவர்களுக்கும்மிடையில் பல வேறுபாடுகள் உண்டு. இன்றளவும் இவர்களுக்கிடையில் திருமண உறவுகள் நிகழ்வது குறைவாகவே உள்ளது. இவர்களது விகாரைகளுக்கும், கேரள சிவாலயங்களுக்கும், கட்டக்கலையில் பெருமளவில் வித்தியாசம் காணமுடியாது. சிங்களவர்களின் கிராமியக்கலைவடிவங்கள் பலவற்றிலும் கேரளத்தின் சாயலை நிரம்பவே காணலாம். இன்றும் அவர்களது பிரதான வாத்தியக்கருவிகளில், கேரளக் குழல்வகையும், சங்குகளும், முக்கிய இடம்பிடிக்கின்றன. அதுபோல எல்லாவித கொண்டாட்டங்களிலும், தென்னம்பாளை அலங்காரம் முக்கியத்துவம் பெறும்.
கிழக்குத் தமிழர்கள், சிங்களர், கேரள மலையாளிகளில் ஒத்துப்போகும் மற்றுமொரு முக்கிய விதயம், உடைஅலங்காரம். குறிப்பாக பெண்களின் ஆடையமைப்பு ஏறக்குறைய ஒரேமாதிரியாகவே இருக்கும்.
மேலும், முக்குவர், திமிலர், ஆகிய சாதியப்பிரிவுகள் ஈழத்தின் வடகரையிலும் சில பகுதிகளில் வழக்கிலிருந்ததென்றே நினைக்கின்றேன்.
பதிவை மறுபடியும் வாசிக்க வேண்டும். வாசித்தபின் மீண்டும் தேவையாயின் வருகின்றேன்.
ஆழமான உங்கள் ஆய்வுப் பதிவுக்கு நன்றி.
நல்ல பதிவு.
சந்தேகமேயில்லாமல் தமிழில் இருந்துதான் மலையாளம் தோன்றியது என்பதை மலையாளிகளே ஒப்புக் கொண்டாலும் சமஸ்கிருதத்தில் இருந்துதான் மலையாளம் வந்தது என்று அடம்பிடிக்கும் மலையாளிகளே அதிகம்.
அங்கும் இது குறித்து இரண்டு கருத்துக்கள் நிலவுகின்றன. தமிழ் சார்ந்த மலையாளப் போக்கை முன்னெடுப்பவர்களை விடவும், சமஸ்கிருதம் சார்ந்த மலையாளத்தினை ஆதரிக்கும் போக்கை பிற்காலத்தில் முற்படுத்தியதில் சாதீய, சமூகப் பின்னணிகள் நிறையவே உண்டு.
மேல் சாதி, கீழ்சாதி கட்டமைப்புகளின் கயமைகளுக்குள் தமிழ் அங்கே மாற்றாள் மொழியாகப் போனதிலும் உயர்சாதியினரின் கை அதிகம் என்பது உள்ளங்கை நெல்லிக்கனி. இன்று தமிழ் சார்ந்த மலையாளப் போக்கு ஆதரிக்கப்படாததற்கு சமூக, அரசியல் பிரச்னைகளும் காரணம் என்பதும் தெளிவு.
ஆனால், கேரளத்திற்கும் ஈழத்திற்கும் இடையில் ஒரு தொடர்பை நான் சிந்தித்ததில்லை. இப்படி ஒரு தொடர்புக்கான வாய்ப்பை மறுப்பதற்கும் இல்லையென்று உங்கள் கட்டுரை கண்டபின் தோன்றுகிறது. இது குறித்து சில கேரளத்து நண்பர்களுடன் கதைத்து விட்டு வேறேதேனும் தகவ்ல் கிடைத்தால் பகிர்ந்து கொள்கிறேன்.
இந்தக் கண்ணாளே பாடல் ஒரு எளிய உதாரணம். ஆத்யத்த கண்மணி ஆணாயிரிக்கணும் என்ற பாடலும் இதே போன்ற எளிமை கொண்டதுதான். இவ்வகை பாடல்களில் தமிழின் கலவையே அதிகமாக இருக்கும். இராம.கி ஐயா, இரா.முருகன் ஆகியோர் சில காலத்துக்கு முன்னால் இப்படி தமிழாக்கிய பாடல் ஒன்றை என் பதிவிலும் இட்டிருந்திருக்கிறேன்
நிறைவான பதிவுக்கு நன்றி ஜெகத்
ஆசிப் மீரான்
நிறைய புதுத்தகவல்கள் அறிந்து கொள்ள முடிந்தது. குறிப்பாக கேரளத்திலும், ஈழத்திலும் முக்குவர்களுக்கிடையேயான தொடர்பு நான் அறியாதது.
சிறு தகவலுக்காகச் சொல்ல வந்தது - திருநெல்வேலி மாவட்டத்திலும் குஸ்னி (சமையற்கட்டு), சப்பாத்து (ஷூ) போன்ற சொற்கள் வழங்கப் பட்டு வந்தன. குறிப்பாக 'சப்பாத்து' என்றே சிறுபிள்ளையாயிருக்கும் போது எங்கள் வீட்டில் சொல்லிக் கொடுத்திருந்தார்கள்.
மேலும், திருநெல்வேலியில் திரௌபதை அம்மன் கோயில் இன்றும் இருக்கிறது. பள்ளிப் பருவத்தில் தீமிதித் திருவிழாவுக்கும் இரண்டு மூன்று முறை சென்றிருக்கிறேன். ஆனால் இதுபற்றி ஆராய்ந்தது இல்லை.
கேரளத்தில் சில பகுதிகளில் முஸ்லீம் குடும்பங்களில் (குடி பெயர்ந்தவர்கள் அல்ல) தமிழில் பேசுவதாக என்னுடைய நண்பர் மூலம் அறிந்திருக்கிறேன்.
தொடர்ந்து பதியுங்கள், அதன் மூலம் நினைவில் வரும் புள்ளிகளையும் கோட்டில் இணைக்க முடியுமா எனப் பார்க்கலாம்.
நன்றி - சொ. சங்கரபாண்டி
நிறைய புதியத் தகவல்களுடன் விரிவானப் பின்னூட்டங்கள் அளித்த வெற்றி, ஏவிஸ், மலைநாடான், ஆசிப், சங்கரபாண்டி ஆகியோர்க்கு நன்றி.
கண்ணன், ஜோ, ஜெஸிலா: பொறுமையாக வாசித்து கருத்துத் தெரிவித்து ஊக்கமளித்ததற்கு நன்றி.
முன்பு எப்போதோ படித்த கட்டுரைகளை இணையத்தில் தேடி மீண்டும் படிப்பதிலும் பதிவை எழுதுவதிலும் கடந்த இரண்டு நாட்களில் அதிக நேரத்தை செலவிட்டுவிட்டதால் இன்று செய்யவேண்டிய வேலைகள் அதிகமாகிவிட்டன. அதனால் விரிவாக பதில் எழுதமுடியாத நிலை.
ஜெகத்,
குமரி மாவட்ட முக்குவர்கள் அனைவரும் ஒரே மதத்தை பின்பற்றுகிறவர்கள் (குமரி மாவட்டத்தை ஒட்டிய கேரளப்பகுதியில் இருக்கும் முக்குவர்களையும் சேர்த்து) .இலங்கையில் இருக்கும் முக்குவர்கள் இதில் வேறுபடுகிறார்களா ?
ஜோ,
விக்கிப்பீடியாவிலிருந்து:
"Most of the members of this community in India are Roman Catholics due to the missionary activities of St. Xavier and other Jesuits. Many of them have also converted to Evangelical Christianity in the recent years. Significant minority in India are Hindus. In eastern Sri Lanka majority of them are Hindus."
http://en.wikipedia.org/wiki/Mukkuvar
கேரளம் அல்லது தமிழகத்திலிருந்து இலங்கைக்கு குடியேறிய முக்குவர்கள் 1544-க்கு முன்பே போயிருக்கவேண்டும் என்பது இதிலிருந்து தெரிகிறது. பல்வேறு வரலாற்று சான்றுகள் இதை உறுதிப்படுத்துகின்றன. முக்கியமாக 1215-ம் ஆண்டு கலிங்கத்திலிருந்து (ஒரிசா) மகா என்னும் அரசன் இலங்கையின் சிங்களப் பகுதிகளைக் கைப்பற்றி அடுத்த நாற்பது ஆண்டுகளுக்கு ஆண்டபோது முக்குவர்கள் அவனது படையில் இணைந்துப் போரிட்டதும் அதன் காரணமாக முக்குவத் தலைவர்கள் புத்தளம் மற்றும் மட்டக்களப்புப் பகுதிகளில் குறுநில மன்னர்களாக நியமிக்கப்பட்டதற்கும் நிறைய சான்றுகள் இருக்கின்றன.
"During the time of Magha, his allies and supporters secured power in most of these chieftaincies. The Mukkuvar who served in his armies settled in the eastern and western coastal regions. Military fiefs granted to their leaders became the nucleus of the Mukkuva chieftaincies of Batticaloa and Puttalam."
http://www.tamilcanadian.com/tools/print.php?id=1978
இஸ்லாமியருக்குப் பெண் கொடுக்கும் முக்குவர்களின் வழக்கம் இலங்கையிலும் தொடர்ந்தது என்னும் ஒரு இஸ்லாமியரின் கட்டுரை:
"The Mukkuvars forcibly got a large number of these Muslims to settle down by giving them brides from their clan. So says Mattakalapu Manmiam by F.X.J. Nadarajah, a respected Tamil author of the area."
http://www.tamilcanadian.com/page.php?cat=232&id=2079
ஆறுமுக நாவலர் கையசைத்தால் பிணமும் தலையாட்டும் என்ற நிலையே இருந்தது. அதனால் நாவலரின் கோரிக்கையினால் கண்ணகி வழிபாடு யாழ்ப்பாணத்தில் அருவிவிட்ட போதும் இன்றும் சில இடங்களில் கண்ணகிக்கு கோயில்கள் உண்டு [ஒன்று அல்லது இரண்டு].//
யாழ்ப்பாணம், மற்றும் வன்னி பகுதியில்
ஒன்று இரண்டு அல்ல பல இருக்கிறன. ஆனால் பல கண்ணகி அம்மன் கோயில்கள் துர்க்கையின் மறுவடிவமாக ஆகம விதிகளுக்கு உட்பட்ட கோயில்களாக மற்றப்பட்டு விட்டன, அல்லது மாற்றம் நடந்து கொண்டிருக்கிறது. இதனால் தற்போதைய சந்ததியால் கண்ணகி அம்மன் கோயில்களாக அவை அறியப்பட முடியதிருக்கலாம்.
1. பன்றிதலைச்சி அம்மன் கோவில் - 2. இலஞ்சியாரணியம் கண்ணகை அம்மன் கோயில்
3. சுட்டிபுரம்
4. கச்சாய்
5. விடத்தற்பளை
6. கொடிகாமம்
7. நவாலி
மேலே உள்ள 7உம் யாழ்ப்பாணத்தில் உள்ளவை.
8. பூனகரி
9. வற்றாப்பளை
இறுதி இரண்டும் வன்னி பெரு நிலத்தில் இருப்பவை.
இவற்றை விட எனக்கு தெரியாத இன்னும் வேறு கோயில்கள் இருக்கலாம் !.
http://viriyumsirakukal.blogspot.com/2007/03/blog-post_10.html
மலைநாடான்,வி.ஜெ.சந்திரன்,
மிக்க நன்றிகள். உங்களின் பின்னூட்டங்களில் இருந்து ஈழம் பற்றி மேலும் பல தகவல்கள் அறிந்து கொள்ளக் கூடியதாக இருந்தது.
/* யாழ்ப்பாணம், மற்றும் வன்னி பகுதியில் ஒன்று இரண்டு அல்ல பல இருக்கிறன. ஆனால் பல கண்ணகி அம்மன் கோயில்கள் துர்க்கையின் மறுவடிவமாக ஆகம விதிகளுக்கு உட்பட்ட கோயில்களாக மற்றப்பட்டு விட்டன, அல்லது மாற்றம் நடந்து கொண்டிருக்கிறது. இதனால் தற்போதைய சந்ததியால் கண்ணகி அம்மன் கோயில்களாக அவை அறியப்பட முடியதிருக்கலாம். */
சந்திரன், உங்களின் கருத்து ஏற்புடையதே. நானும் சில ஆலயங்கள் இப்படி மாற்றப்பட்டதைப் பார்த்திருக்கிறேன்.
எனது அயல் ஊரான அல்வாயிலும் ஒரு கண்ணகி கோயில் உண்டு. பல காலமாக கைவிடப்பட்ட நிலையில் அந்த கோயில் இருக்கின்றது. எல்லோராலும் கண்ணகை அம்மன் கோயில் என அழைக்கப்படும் கோயில் யுத்தத்தாலும் வேறு சில உள்ளூர் பிரச்சனைகளாலும் பூட்டப்பட்ட நிலையிலேயே உள்ளது. இதேபோல் வல்வெட்டித்துறைக்கு போகும் வழியிலும் ஒரு கோயில் இருக்கின்றது கோயிலின் பெயர் இடத்தின் பெயர் அனைத்தும் மறந்துவிட்டேன். கிட்டத்தட்ட 15 ஆண்டுகளாக சொந்த மண்ணில் நான் இல்லை.
இலங்கையில் தான் தற்போதைய பிரபல நபர் இராமனின் மனைவி சீதாவுக்கும் கோயில் உண்டு.
ஜெகத், நிறைய விடயங்களை அறிந்துகொள்ளக்கூடியதாக இருந்தது. நன்றி.
.....
/ஆறுமுக நாவலர் கையசைத்தால் பிணமும் தலையாட்டும் என்ற நிலையே இருந்தது. அதனால் நாவலரின் கோரிக்கையினால் கண்ணகி வழிபாடு யாழ்ப்பாணத்தில் அருவிவிட்ட போதும்..../
வெற்றி, அப்படியென்றால் நல்லூர் கந்தசாமி கோயில் இருந்த இடத்தில் மண்மூடி பெருவிருட்சமல்லவா தோன்றியிருக்கும்?
/* வெற்றி, அப்படியென்றால் நல்லூர் கந்தசாமி கோயில் இருந்த இடத்தில் மண்மூடி பெருவிருட்சமல்லவா தோன்றியிருக்கும்? */
DJ, வணக்கம். ஹிஹிஹி...சிவசத்தியமாய் நீங்கள் என்ன சொல்கிறீங்கள் எண்டு எனக்கு விளங்கேல்லை. நான் சொன்ன கருத்திற்கு ஏதோ மாற்றுக் கருத்துச் சொல்லியிருக்கிறீங்கள் என்பது விளங்குது. DJ, ஆட்சேபனை இல்லையெண்டால் தயவு செய்து கொஞ்சம் விளக்கமாகச் சொல்லுவீங்களோ? அப்பதான் நான் என் கருத்தைச் சொல்ல வசதியாக இருக்கும். அல்லது நான் சொன்னதில் பிழையிருந்தால் திருத்திக் கொள்ள முடியும். DJ, நேரம் கிடைக்கும் போது கொஞ்சம் விளக்கமாகச் சொல்வீர்கள் என எதிர்பார்க்கிறேன். நன்றி.
அருமையான கட்டுரை.
தொடர்ந்து எழுதுங்கள்.
இல்லை வெற்றி....ஆறுமுக நாவலர் விரலசைப்பில்தான் எல்லாம் ஒருகாலத்தில் கட்டுப்பட்டிருந்ததன என்ற பொருள்பட எழுதியிருந்தீர்கள். அதனாற்றான் ஆறுமுக நாவலர் -விக்கிர வழிப்பாட்டைக் காரணங்காட்டி (இன்னும் பிறவும்) கோபித்துக்கொண்டுபோன நல்லூர்க் கந்தசாமி கோயில் இப்போதும் உயிர்த்திருக்கின்றதே; அழிபடவில்லையே என்று சொல்லவந்தேன்.
/* ஆறுமுக நாவலர் விரலசைப்பில்தான் எல்லாம் ஒருகாலத்தில் கட்டுப்பட்டிருந்ததன என்ற பொருள்பட எழுதியிருந்தீர்கள். அதனாற்றான் ஆறுமுக நாவலர் -விக்கிர வழிப்பாட்டைக் காரணங்காட்டி (இன்னும் பிறவும்) கோபித்துக்கொண்டுபோன நல்லூர்க் கந்தசாமி கோயில் இப்போதும் உயிர்த்திருக்கின்றதே; அழிபடவில்லையே என்று சொல்லவந்தேன். */
DJ, உண்மைதான், உங்களின் கருத்துடன் உடன்படுகிறேன். நீங்கள் சொல்வது போல பல விடயங்களில் நாவலர் சில மாற்றங்களைச் செய்ய முயன்ற போது ஆதிக்கசாதியான வெள்ளாளர்கள்/கரையார் போன்றோர் அவரை எதிர்த்தனர் என வாசித்திருக்கிறேன். அதுமட்டுமல்ல, தமிழகத்தில் உள்ள சிதம்பரத்திலும் இவர் அங்குள்ள முறைகளை எதிர்த்து அதை மாற்றியமைக்க வாதிட்டதாகவும் முயற்சி பலனளிக்கவில்லை எனவும் படித்திருக்கிறேன். ஆக, ஆறுமுகம் என்ற பெயரில் உள்ளவர்களுக்கும் சிதம்பரத்திற்கும் எட்டாம் பொருத்தம் போல.:-)) அன்று ஈழத்து ஆறுமுகம் பிரச்சனை பட்டது போல இன்று தமிழகத்தில் உள்ள ஆறுமுகம் சிதம்பர நிர்வாகிகளோடு மோதுகிறார்.:-))
நிற்க. DJ, நீங்கள் சுட்டிக்காட்டியது போல, நான் சொன்னது தவறுதான். நாவலருக்குச் செல்வாக்கு இருந்தது உண்மை. அவரின் செல்வாக்கை நான் தான் மிகைப்படுத்திக் கூறிவிட்டேன். சுட்டிக்காட்டியமைக்கு நன்றி. தவறான தகவலுக்கு மன்னித்துக் கொள்ளவும்.
நல்லதொரு பதிவை படித்தேன். நிறைய விசயங்களை அறிந்து கொண்டேன்.
வன்னி பெரு நிலப்பரப்பு குறித்து ஒரு தகவல். வன்னியில் பழய குடிகள் எனப்படுபவர்கள் பழைய வன்னியர் என அழைக்கப்படுவார்கள். இப்போது எல்லாப்பாகத்தில் இருந்தும் கலந்து விட்ட மக்களே வன்னியில் உள்ளனர்.
வன்னியின் காட்டுப்பகுதிகள் எங்கும் நூற்றுக்கணக்கான சிதைந்த குளங்கள் காணப்படும். சிறு சிறு குளங்கள் அமைத்து விவசாயம் செய்திருக்கின்றார்கள் என்பது தெரியவருகின்றது. எனினும் அந்த பூர்வ குடிகள் பற்றிய ஆராய்ச்சிகள் எதுவும் இல்லை.
அவர்கள் வழிபட்டில் மரங்களுக்கு கீழ் முனி என்ற தெய்வத்தை தான் வழிபட்டனார். வழிபாட்டு முறையும் வேறானது. கோழி வெட்டுதல் ஆடு வெட்டுதல் போன்ற பலவும் அடங்கும். முனி , முனியப்பர், சடையர், சடா முனி, சொத்தி முனி, நாவல் முனி, என்று பல முனிக்கோயில்கள் உண்டு. தற்போது அவைகளில் பெரும்பாலானவை பிள்ளையார் கோவில் தூக்கை அம்மன் என்று மாறிவிட்டது. இருந்தும் வயதான பழையவன்னி சமூகத்தை சார்ந்த பல பெரியவர்கள் தற்போதையை கோயில்களை ஏறெடுத்தும் பார்பதில்லை. வன்னி பெருநிலப்பரப்பில் ஏனைய பிரதேச மக்கள் கலந்தது காலனித்துவ காலத்தின் பின்பகுதியில். அவ்வாறு குடியேறிய ஏனைய பிரதேச மக்களுக்கு அரசு அமைத்து கொடுத்த வீடுகள் காலனி வீடுகள் என்றே அழைக்கப்பட்டது.
ஆங்கில மற்றும் சமஸ்கிருத கலப்பில்லாத தமிழ். நாட்டு மருத்துவம். வேளண்மை வேட்டைத்தொழில். என்பன பிரதானமாக இருந்தது. வேளாண்மை செய்வததால் பின்னர் பழைய வன்னி சமூகம் வெள்ளாளர் என்று சாதிவாரியாக மாறியது இருந்தும் சாதியம் நீண்ட காலமாக இருந்ததுக்கு அடயாளம் எதுவும் பழைய வன்னி சமூகத்திடம் இல்லை. வன்னியில் ஒவ்வொரு திக்கிலும் உள்ள குளங்களின் கீழ் விவசாயம் செய்யும் மக்களுக்கிடையில் தொடர்புள்ளவராக சொந்தக்காரராக இரப்பார்கள். அவர்கள் வன்னி பெருநிலப்பரப்பை தாண்டி சொந்தம் என்று யாழ்பாணமோ அல்லது தென் பக்கமோ செல்பவர்கள் இல்லை. தற்போது எல்லாம் கலந்து விட்ட ஒரு நிலமையே காணப்படுகின்றது.
"காரணியின் கொடை வாழ்வணிகர்
காதல் மிகுந்ததோர் கோவலனார்
பிறயிற் திரு மாமணி மங்கை
செல்வி குலக் கொடி தோன்றினாளே"என இன்றும் ஈழத்தின் கிழக்கு மாவட்டங்களில் உடுக்கடித்து கண்ணகியை வழிபடும் பழக்கம் இருக்கிறது..நண்பரே மிக நல்ல பதிவு...
கேரளம் மற்றும் குமரி மாவட்ட கரையோரங்களில் வாழும் முக்குவ இன மக்களுக்கும் இலங்கை தமிழருக்குமான தொடர்பை வழக்காறுகளின் மூலம் ஒப்புமை படுத்தி எழுதியிருக்கிறீர்கள்....நல்லது முக்குவ மக்களிடம் உள்ள வழக்காறு போலவே ஈழ மக்களுக்கும் பரதவர்களுக்கும் கூட சொல் ஒற்றுமை உள்ளது..
உதாரணத்திற்கு,
அடுக்களை-குசினி
அரை டிரவுசரை-கல்சம்
கப்-லோட்டா
குமரிகள்-குமரு
என்றூ நினைவில் நிற்பதை மட்டும் சொல்ல முடிகிறது....ஆனால் முக்குவர்கள் முத்துக் குளிப்பவர்களா என்பது தெரியவில்லை.தூத்துக்குடியை தலைமையிடமாக கொண்ட பரதவ பட்டங்கட்டிகளின் கட்டுபாஅட்டில் வாழ்ந்த பரதவர்களின் குலத்தொழில் முத்துக்குழிப்பது...தவ்றவும் முக்குவர்கள் பற்றி சங்க இலக்கியங்களில் குறிப்புகள் ஏதேனும் இருக்கிறதா?முக்குவர்கள் பற்றியும் பரதவர்கள் பற்றியும் சமீப காலத்தில் எழுதப்படுவது சந்தோசமளிக்கிறது..
அரபிக்கடலில் கரையோரத்தில் வாழும் முக்குவ மக்களும் (குமரி மாவட்டத்தில் பரதவர்களும்)ஏன் திருமண உறவு வைத்துக் கொள்ளவில்லை.....சாதி மருமக்கட்தாய முறை தாண்டி வேறூ ஏதேனும் காரணாங்கள் உள்ளனவா?எட்கர் தர்ட்சனின் தென் இந்திய குலங்களும் குடிகளும் நூலிலேயே முக்குவ குழந்தைகளை நாயர்கள் பலியிட தூக்கி சென்றதாக படித்த நினைவு,தவறாக இருந்தால் அந்த குறிப்பு பேராசிரியர் ஜாய் ஞானதாசன் எழுதிய ''மறைக்கப்பட்ட வரலாறு"என்கிற நூலில் இருக்கும் என நினைக்கிரேன்....அது பற்றி ஆயவும்.இதை உறுதிப்படுத்தி கொடுக்கிறேன்...
பின்னர் சுகி ஜெயகரன் தன் குமரி நில நீட்சி நூலில்''இராமேஸ்வரமும் மன்னாரும் நிலப்பரப்பால் இணைக்கப்படிருந்தன.மன்னாருக்கு தெற்கே சுமார் 30 கி.மீ அகன்றிருந்த கடற்கரை இல்லங்கையின் வட மேற்கிலுள்ள கரடிக்குழி வரை வியாபித்திருந்தது"என்று எழுதுபவர் தொடர்ந்து,
"கடல் மட்டம் தொடர்ந்து உயர்ந்து கொண்டிருந்தது ஏறத்தாழ ஆறாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் தென்னிந்திய கடற்கரை இன்றைய நிலையை அடைந்த போது இலங்கை ஒரு தீவாக பரிணமித்தது"என ஆதாரங்களை அடுக்கிறார் சு.கி.ஜெயகரன்.இந்த நூலில் நில அமைப்பு ரீதியாக ஜெயகரன் வைத்த நியாங்கள் நியாயமாக மயக்கமற்றைவைகளாக எனக்கு பட்டது....ஈழத்துக்கும் நமக்குமான தொடர்பு இடப்பெயர்வால் நடந்ததல்ல இயர்க்கையாய் நடந்தது..கடலால் பிரிந்தோம் என்பதாக எனக்கு தோன்றுகிறது.....
அருமையான பதிவு, ஜெகத்! இதே போல் சிங்களத்திற்கும் தமிழுக்கும் உள்ளத் தொடர்பைப் பற்றி யாழ்மக்கள் எழுதினால் மகிழ்வேன்!
___________________________________________________
நானும் மலையாளத்திற்கும் ஈழத்தமிழுக்கும் உள்ள தொடர்பை எண்ணி வியந்திருக்கிறேன் - உண்மையில் இன்றைய மலையாளம் தமிழின் மற்றொரு வழக்கு மொழி தான், ஆனால் மலையாளிகள் அதை ஒப்புக்கொள்வதில்லை. அவர்கள் மலையாளம் மூலதிராவிடத்திலிருந்து வந்ததாகத் தான் சொல்கிறார்கள். திராவிடன் என்கிற வார்த்தைக்கு மூலமே தமிழன் என்கிற வார்த்தை தான் என்று ஒரு நூலில் படித்திருக்கிறேன். இன்றைக்கும் பொதுவாக இந்தியர்கள் அயலிடங்களில் சந்திக்கும் போது தத்தமது தாய்மொழிகளிலிலேயே பேசிக் கொள்கின்றனர்; தமிழர்களைத் தவிர்த்து! (ஈழத்தமிழர்கள் இதில் விலக்கு) இதற்கான காரண காரியங்களை வலையில் தேடும் போது தான் உங்கள் பதிவையும் அதன் பின்னூட்டங்களையும் படிக்க நேர்ந்தது. நிறைவான பதிவு! நிறைவான பின்னூட்டங்கள்! இன்னும் நிறைய இது போன்ற பதிவுகளை எதிர்பார்க்கிறேன்!
இப்படியே போனால், தமிங்கலம் என்றொரு மொழி ஆங்கில்த்திலிருந்து வந்தது எனும் நிலை வரப்போகிறது, சேரநாட்டு மணிப்பிரவாளத் தமிழ் மலையாளம் ஆகிப் போனது போல!
ஒரு சிறந்த வரலாற்றாய்வு. பாராட்டுக்குறிய பதிவு.
மிக்க நன்றி.
பின்னூட்டத்தின் ஊடாக கருத்துக்களை தெரிவித்திருபோருக்கும் நன்றிகள்.
//தூத்துக்குடியை தலைமையிடமாக கொண்ட பரதவ பட்டங்கட்டிகளின் கட்டுபாஅட்டில் வாழ்ந்த பரதவர்களின் குலத்தொழில் முத்துக்குழிப்பது...தவ்றவும் முக்குவர்கள் பற்றி சங்க இலக்கியங்களில் குறிப்புகள் ஏதேனும் இருக்கிறதா?// அன்னியன் சொல்வதுபோல் அல்லாமல் தூத்துக்குடி பரதவர்களுக்கு, முக்குவர்கள் முத்து குளிக்கும் முறையை பயிற்றுவித்தார்கள் என்பது செவி வழி செய்தி. எடுத்துகாட்டாக சமீப காலம் வரைக்கும் குமரி மாவட்ட சங்கு குளியாளிகள்(முக்குவர்), தூத்துக்குடியில் முத்து குளிப்பதை வழக்கமாக கொண்டிருந்தனர் என்பதிலிருந்தே அறியலாம்.