ஈழம், கேரளம், குமரிமாவட்டம் - 2

இலங்கையில் தமிழ் பேசும் மக்களிடையே சேரநாடு என்று முன்னர் அறியப்பட்ட தற்போதைய கேரளத்தின் பண்பாட்டுத் தாக்கம் மிக அதிகமாக இருப்பதை எண்ணற்றத் தரவுகள் மூலம் அறிந்துக்கொள்ள முடிகிறது. தென் குமரி முதல் வட வேங்கடம் வரையிலான பண்டையத் தமிழகத்துக்கும் இலங்கைத் தீவிற்கும் இடையேயான தொடர்புகளை ஆராயும் வரலாற்றாசிரியர்கள் ஒருகாலத்தில் இலங்கை முழுவதும் பரவியிருந்த கண்ணகி வழிபாட்டை ஒரு முக்கியக் கண்ணியாக கருதுகின்றனர். தமிழர்கள் மட்டுமல்லாது "பத்தினி தெய்வோ" என்ற பெயரில் சிங்களர்களும் கண்ணகியை வழிபட்டு வந்தனர். கண்ணகி வழிபாடு சேரநாட்டில் செங்குட்டுவனால் தொடங்கப்பட்டதாகவும், கண்ணகி கோயிலின் தொடக்க நிகழ்ச்சியில் இலங்கை அரசன் கஜபாகு கலந்துக்கொண்டதாகவும் சிலப்பதிகாரம் சொல்கிறது. கேரளத்தில் கண்ணகி வழிபாடு இன்றுவரை தொடர்வது கேரளத்திற்கும் இலங்கைக்கும் பண்பாட்டுப் பரிமாற்றங்கள் தொன்றுதொட்டு இருந்து வந்திருக்கின்றன என்பதற்கு ஒரு சான்று எனலாம்.

வரலாற்று ரீதியாகப் பார்க்கும்போது கேரளத்தின் தனித்தன்மைகளில் ஒன்றாகத் தாய்வழி சமூகமுறை இருக்கிறது. திருமணத்திற்கு பின் ஆண் தன் மனைவியின் குடும்பத்தில் ஒரு உறுப்பினராக வாழும் மருமக்கத்யம் முறை கேரளத்தில் பல்வேறு சாதியினரிடையே சில தலைமுறைகள் முன்பு வரை நிலவி வந்தது. ஈழத்தில் குறிப்பாக மட்டக்களப்பை ஒட்டிய கிழக்குப் பகுதிகளில் அதிக எண்ணிக்கையிலுள்ள சில சாதியினரிடையேயும் இம்முறை (மனைவியின் 'குடி'யில் கணவன் இணைவது) வழக்கில் இருந்துவந்திருக்கிறது. கண்ணகி வழிபாடும் கிழக்குப் பகுதித் தமிழரிடையே தான் மிக அதிகமாக இருந்தது என்று பேரா. கார்த்திகேசு சிவத்தம்பி ஒரு ஆய்வுக்கட்டுரையில் குறிப்பிடுகிறார். மொத்தத்தில் கேரளப் பண்பாட்டின் தாக்கம் இலங்கையின் கிழக்கு மாகாணத் தமிழர் மற்றும் தமிழ் பேசும் இஸ்லாமியரிடையே தான் மிக அதிகமாக காணப்படுகிறது.

அதே கட்டுரையில் பேரா. சிவத்தம்பி இலங்கைத் தமிழர்களின் உணவுமுறை தமிழக உணவுப் பழக்கங்களிலிருந்து வேறுப்பட்டிருப்பதை (எடுத்துக்காட்டாக தேங்காய், மிளகு அதிகமாகவும், தயிர், மோர் ஆகியவை குறைவாகவும் பயன்படுத்துதல்) சுட்டுகிறார். இது கேரள உணவுமுறையை ஒத்திருக்கிறது. மேலும் இந்தியாவிலேயே தலித் மக்கள் நீங்கலாக மாட்டிறைச்சி உண்ணுவதைக் குறித்து எவ்விதத் தயக்கமும் மனத்தடையும் இல்லாத ஒரே இந்து சமூகமென்றால் அது மலையாளிகள் தான் என்று நினைக்கிறேன். ஈழத்தமிழரிடையே - குறைந்தபட்சம் மட்டக்களப்புத் தமிழர்களிடையே - மாட்டிறைச்சி உண்ணுவதைக் குறித்தத் தயக்கங்கள் அறவே இல்லை என்று அப்பகுதியைச் சேர்ந்த நண்பர் ஒருவர் சொன்னார்.

கிழக்கு மாகாணத்தில் அதிக எண்ணிக்கையில் வாழும் முக்குவர்கள் ஈழத்தமிழருக்கும் கேரளத்துக்கும் இடையே இருந்த வரலாற்றுத் தொடர்புகளுக்கு ஒரு முக்கிய சான்றாக இருக்கிறார்கள். முக்குளித்தல், முங்குதல் போன்றத் தமிழ் சொற்களிலிருந்து தான் முக்குவர் என்ற பெயர் தோன்றியிருக்கக் கூடும் என்று நம்பப்படுகிறது. கேரளத்திலும் குமரிமாவட்டத்திலும் மீன்பிடித்தலையே தங்கள் முக்கியத் தொழிலாகக் கொண்டு வாழ்ந்துவந்த/வரும் இவர்கள் பழங்காலத்தில் முக்குளிப்பவர்களாக இருந்திருக்க வாய்ப்பிருக்கிறது. (ஆனால் முக்குவர்களை மட்டக்களப்புப் பகுதியைத் தோற்றுவித்த மூத்தக்குடிகளாகச் சித்தரிக்கும் "மட்டக்களப்பு மான்மியம்" எனும் பழைய நூல் அவர்களை 'முற்குகர்' என்று விளிப்பதோடு மட்டுமல்லாமல் அவர்கள் அயோத்தியிலிருந்து படையெடுத்து வந்ததாகச் சொல்லி இராமாயணத்தோடு முடிச்சு போடப் படாதபாடு படுகிறது. சாதிப்பெயரை விருப்பப்படித் திரித்துப் பெருமை பேசுவது - எ.கா. சாணார் -> சான்றோர் - எல்லா இடங்களிலும் இருக்கத்தான் செய்கிறது.)

இலங்கையின் வரலாற்றில் முக்குவர்களைப் பற்றிய ஏராளமானக் குறிப்புகள் காணப்படுகின்றன. பதின்மூன்றாம் நூற்றாண்டில் இலங்கையில் புத்தளம், மட்டக்களப்புப் பகுதிகளில் முக்குவத் தலைவர்கள் குறுநில மன்னர்களைப் போல செயல்பட்டார்கள் என்பதற்குப் பல சான்றுகள் இருக்கின்றன. கிட்டத்தட்ட அதே காலகட்டத்தில் கேரளக் கரையோரத்திலிருந்துப் படையெடுத்து வந்த முக்குவர்கள் இலங்கையின் மேற்குக் கரையிலுள்ள புத்தளம் பகுதியைக் கைப்பற்றிக் குடியேறினர் என்று 'முக்கர ஹட்டண' என்னும் சிங்கள ஓலைச்சுவடி சொல்கிறது. இதன் காரணமாக அப்போதைய சிங்கள அரசன் தமிழகத்தின் நாகப்பட்டினம் பகுதியிலிருந்துக் கரையர்களைத் திரட்டி அவர்கள் உதவியுடன் முக்குவர்களுடன் போரிட்டு வெற்றிபெற்று, பின் கரையர்களைப் புத்தளம் பகுதியில் குடியமர்த்தியதாக அந்த ஓலைச்சுவடி தெரிவிக்கிறது. இப்படிக் புத்தளத்தில் குடியமர்ந்த தமிழ் கரையர்கள் காலப்போக்கில் 'கரவே' என்ற பெயரில் சிங்களம் பேசும் சாதியாக மாறிப்போனது மொழி அடையாளத்தை இழப்பது எத்தனை எளிது என்பதைக் காட்டுகிறது. ஆனால் அப்பகுதியில் நீர்கொழும்பு போன்ற இடங்களில் வாழும் கரையர்களில் பலர் தங்கள் தமிழ் அடையாளத்தை இன்னும் இழக்காமல் இருக்கின்றனர். சரளமாக சிங்களம் பேசும் இவர்களில் பெரும்பாலானோர் இன்றும் தங்களுக்குள் இலக்கணம் சிதைந்த ஒருவிதத் தமிழில் (எ.கா. நான் போகிறேன் என்பதற்கு நான் போறா) தான் பேசிக்கொள்கிறார்கள்.

முக்குவர்கள் முதன்முதலில் மட்டக்களப்புப் பகுதியில் நுழைந்தபோது அங்கு ஏற்கனவே வாழ்ந்துவந்த திமிலர் என்னும் மீனவ சாதியினரோடு அவர்களுக்கு மோதல் ஏற்பட்டு, பின் இஸ்லாமியர்களின் துணையுடன் திமிலர்களை வென்று அப்பகுதியைக் கைப்பற்றினார்கள் என்று கருதப்படுகிறது. முக்குவர்களுக்கும் இஸ்லாமியருக்கும் இடையே வரலாற்று ரீதியாக இருந்த நெருக்கமான உறவு சுவாரசியமானது மட்டுமல்ல கேரளத்துடன் ஈழத்துக்கு உள்ள தொடர்பைக் காட்டுவதாகவும் இருக்கிறது. கேரளக் கரையோரத்தில் மிகப் பழங்காலத்திலிருந்தே வணிகம் செய்து வந்த அரபு வணிகர்களுக்கும் உள்ளூர் மீனவ (முக்குவ) பெண்களுக்கும் இடையேயான திருமண/சம்பந்த உறவுகளை உள்ளூர் அரசர்கள் ஊக்குவித்ததால் நாளடைவில் முக்குவப் பெண்களுக்கும் அரபு ஆண்களுக்கும் பிறந்த ஒரு இனம் உருவானது. தங்கள் பெண்களைத் திருமணம் செய்துகொண்ட அரபு வணிகர்களை உள்ளூர்காரர்கள் மாப்பிள்ளைகள் என்று அழைத்ததால் இந்த கலப்பு இனத்துக்கு மாப்பிளாக்கள் (Mappila/Moplah) என்ற பெயர் வந்தது என்று பல வரலாற்றாசிரியர்கள் தெரிவிக்கிறார்கள். (ஆனால் இன்றைய மாப்பிளாக்கள் இந்த வரலாற்றை மறைத்து மாப்பிளா என்பது 'அம்மா பிள்ளை' என்பதிலிருந்து வந்தது என்ற மொக்கையான விளக்கத்தை விக்கிப்பீடியா வரைக் கொண்டு போயிருக்கிறார்கள்.) மாப்பிளா என்பது ஒரு தனி சமூகமாக உருவான பின்னும் கூட அந்த சமூக ஆண்கள் முக்குவப் பெண்களுடன் உறவு வைத்துக்கொண்டு அப்படி பிறக்கும் ஆண் குழந்தைகளில் சிலர் மாப்பிளா சமூகத்திடம் கையளிக்கப்படும் முறை நிலவியது என்று தர்ஸ்ட்டன் தன்னுடைய புகழ்பெற்ற Castes and Tribes of South India நூலில் குறிப்பிடுகிறார். அரபுகளிடம் இருந்த நெருங்கிய தொடர்பு காரணமாக முக்குவர்களில் பலர் இஸ்லாமிய மதத்திற்கு மாறி மாப்பிளா சமூகத்தில் இணைந்தனர். இதை வைத்து நோக்கும் போது இலங்கையின் கிழக்குப் பகுதியில் தாங்கள் தமிழர்கள் அல்ல என்றும் அரபு வம்சாவழியினர் என்றும் சொல்லிக் கொள்ளும் தமிழ் பேசும் இஸ்லாமியர்களின் வரலாறும் இதுபோன்றதாகத் தான் இருக்கும் என்று தோன்றுகிறது. கேரளத்திலிருந்து முக்குவர்களுடன் இஸ்லாமைப் பின்பற்றும் மாப்பிளாக்கள் வந்திருக்கவும் வாய்ப்பிருக்கிறது.

கேரளத்திலிருந்து இலங்கையில் அதிக அளவில் குடியேறிய மக்கள் சமூகத்தின் அடித்தட்டைச் சேர்ந்தவர்கள் என்பது அவர்களது மொழி மற்றும் பண்பாடு குறித்து சிலவற்றை விளங்கிக்கொள்ள உதவுகிறது. முன்னர் குறிப்பிட்ட பேரா. கார்த்திகேசு சிவத்தம்பியின் கட்டுரையில் முக்குவர்கள் வாழும் கிழக்குப்பகுதிக்கும் யாழ்ப்பாணத்துக்கும் உள்ள வேற்றுமைகளாக சிலவற்றை சொல்கிறார். மட்டக்களப்பு இந்துக்களின் மதச்சடங்குகள் ஆகம விதிகளைப் பின்பற்றாததாகவும் பார்ப்பனர்களின் தாக்கம் இல்லாததாகவும் இருப்பதாகவும் அங்கு முருகன் கோயில்களே அதிகம் இருப்பதாகவும் தெரிவிக்கிறார். மேலும் யாழ்ப்பாணத்தில் சிறுதெய்வ வழிபாடு என்ற நிலையில் அதிக முக்கியத்துவம் இல்லாமல் உள்ள கண்ணகி அம்மன், திரௌபதி அம்மன் வழிபாடுகளுக்கு மட்டக்களப்பில் முக்கியமான இடம் அளிக்கப்படுகிறது என்றும் சொல்கிறார். இவற்றின் மூலமும் மாட்டிறைச்சி உண்ணுதல் போன்ற பழக்கங்களின் மூலமும் இப்பகுதியில் குடியேறியவர்கள் சமஸ்கிருதமயமாக்கல் மற்றும் பார்ப்பனிய சடங்குகளின் தாக்கத்துக்கு வெளியே இருந்தவர்கள் என்பது தெளிவாகிறது.

பதினாறாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இலங்கையில் நுழைந்த போர்த்துக்கீசியர்களும் அவர்களுக்குப் பின் வந்த மற்ற ஐரோப்பியர்களும் அங்கு வாழ்ந்து வந்த தமிழ் பேசும் மக்களை ஒரு தவறானப் புரிதலின் காரணமாக மலபார்கள் என்றே அழைத்தனர். (மலபார் என்பது கேரளத்தைக் குறிக்கும் சொல்.) போர்த்துகீசியர் வருகைக்கு முன்பே கேரளத்திலிருந்து மக்கள் இலங்கையில் குடியேறியதற்கு வலுவான சான்றுகள் இருந்தாலும் பதினாறாம் நூற்றாண்டில் கேரளக் கரையோரமும் இலங்கை கடற்கரைப்பகுதிகளும் போர்த்துக்கீசியர் கட்டுப்பாட்டில் இருந்தக் காலத்தில் அவற்றிடையே கடல் வணிகமும், குடியேற்றங்களும், பண்பாட்டுப் பரிமாற்றங்களும் அதிகமாக இருந்திருக்கவேண்டும். மலையாள மொழியில் ஐரோப்பியர் வருகைக்குப் பின் புகுந்ததாகக் கருதப்படும் பல சொற்கள் ஈழத்தமிழிலும் இடம்பெற்றிருப்பதைப் பார்க்கமுடிகிறது. எடுத்துக்காட்டாக மலையாளத்தில் உள்ள கசேர(நாற்காலி), தோக்கு(துப்பாக்கி), குசினி(சமையலறை) ஆகிய சொற்கள் ஈழத்தமிழில் முறையே கதிரை, துவக்கு, குசினி என்று வழங்குகின்றன.

*****

இந்த இடத்தில் ஒரு கேள்வி எழலாம். கேரளத்திலிருந்து பல்வேறு காலகட்டங்களில் மக்கள் பெருமளவில் இலங்கையில் குடியேறினர் என்றால் இலங்கையில் ஏன் மலையாளம் பேசப்படவில்லை? மலையாள மொழியில் சமஸ்கிருத சொற்கள் மிக அதிக அளவில் கலந்திருக்கும் போது ஈழத்தமிழில் ஏன் சமஸ்கிருதக் கலப்பு மிகக் குறைவாகவே இருக்கிறது? இந்தக் கேள்வியும் அதற்கான பதிலும் முக்கியமானவை.

சமூகங்களில் பிறமொழி கலப்பும் தாய்மொழி அழிப்பும் மேலிருந்துக் கீழாகவே நடைபெறும் என்பதற்கு உலக வரலாற்றில் எத்தனையோ சான்றுகளைப் பார்க்கலாம். தால்ஸ்தாயின் 'போரும் அமைதியும்' படிக்கும்போது பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ரஷ்யாவில் அடித்தட்டு மக்கள் யாவரும் ரஷ்ய மொழி பேசிக்கொண்டிருக்க ரஷ்ய மேட்டுக்குடியினர் தங்களுக்குள் பெரும்பாலும் பிரெஞ்சு மொழியிலேயே பேசிக்கொண்டார்கள் என்பது தெரிகிறது. இன்று தமிழ்நாட்டில் பேசப்படும் தமிங்கிலத்தின் வேர்களை ஆராய்ந்தாலும் இந்தக் கருத்து உண்மைதான் என்பது புலப்படும். கேரளத்திலும் இதுதான் நடந்தது.

கேரளத்தில் (சேர நாட்டில்) சுமார் எண்ணூறு ஆண்டுகளுக்கு முன் வரைத் தமிழே பேச்சுமொழியாகவும் ஆட்சிமொழியாகவும் இருந்த நிலையில் அதற்கு சில நூற்றாண்டுகளுக்கு முன் வடநாட்டிலிருந்து வந்துக் குடியேறிய நம்பூதிரி பார்ப்பனர்கள் சமூகத்தில் முதன்மைப் பெற்றதால் தமிழுடன் சமஸ்கிருதச் சொற்களை அதிகமாகக் கலக்கும் மணிப்பிரவாள நடை தோன்றி நாளடைவில் அது மலையாளமாக உருமாறியது. ஆனால் மணிப்பிரவாளமும் மலையாளமும் 'உயர்'சாதியினரின் மொழியாகவும், அவர்கள் ஆதிக்கம் செலுத்திய அரசுகளில் ஆட்சிமொழியாகவும் இருந்தாலும் அடித்தட்டு மக்கள் தமிழ் மொழியின் வட்டார வழக்குகளையே தொடர்ந்துப் பேசி வந்தனர். தீண்டாமை என்பது 'காணாமை'யாக பரிமாண வளர்ச்சி அடையும் அளவுக்கு இங்கே சாதி அமைப்பு இறுக்கமடைந்துவிட்ட நிலையில் அடித்தட்டு மக்களுக்கு மலையாளம் பேசிய 'உயர்'சாதியினருடன் நேரடி தொடர்புகள் இல்லாததாலும், கல்வி மறுக்கப்பட்டதாலும் அவர்கள் மலையாளிகளாக மாறுவது அண்மைக்காலம் வரை நிகழவில்லை. இன்றும் கூட தனி சமூகமாக வாழும் கேரளப் பழங்குடியினரின் மொழி மலையாளத்தை விட்டு விலகியதாகவும் சமஸ்கிருதக் கலப்பற்றதாகவும் இருக்கிறது.

கேரளத்தில் கடந்த எண்பது ஆண்டுகளில் அனைவருக்கும் (மலையாள வழி) கல்வி என்ற நிலை ஏற்பட்டு சாதிகளிடையே ஊடாடல் அதிகரித்த பிறகே தமிழை மிகவும் ஒத்திருக்கும் பேச்சுவழக்குகளைக் கொண்டிருந்த பின்தங்கிய சமூகங்கள் செம்மையான மலையாளம் பேசத் தொடங்கினர். பல நூற்றாண்டுகளாக திருவிதாங்கூர் அரசில் இடம்பெற்றிருந்தக் குமரி மாவட்டத்தில் ஆதிக்க சாதியாக இருந்த நாயர்கள் மலையாளம் பேசுபவர்களாக இருக்க பின்தங்கிய சமூகங்களைச் சேர்ந்த நாடார்கள், மீனவர்கள், தலித்துக்கள் ஆகியோர் தமிழையே பேசிவந்தனர் என்பது கவனிக்கத்தக்கது. குமரி மாவட்டம் தமிழ்நாட்டோடு இணைக்கப்படாமல் கேரளத்துடன் தொடர்ந்து இருந்திருந்தால் இம்மக்கள் அனைவருமே தற்போது முழு மலையாளிகளாக மாறி இருப்பர் என்பது உறுதி. நானும் இதைத் தமிழில் எழுதிக்கொண்டிருக்க மாட்டேன்.

கேரளத்திலும் இலங்கையிலும் தற்போது வாழும் ஒரே சாதியான முக்குவர்களை எடுத்துக்கொண்டால் அவர்கள் தமிழ் பேசுபவர்களாகவே இருந்திருக்கிறார்கள். கேரளத்தில் பதினாறாம் நூற்றாண்டின் இவர்களிடையே மதமாற்றத்தை மேற்கொண்ட போர்த்துக்கீசிய/இஸ்பானிய பாதிரிகள் அதற்கு தமிழ் மொழியையேப் பயன்படுத்தியதாகப் பதிவு செய்திருக்கிறார்கள். கேரளத்தின் தென்பகுதியில் வாழ்ந்த முக்குவர்கள் சுமார் அறுபது ஆண்டுகளுக்கு முன்வரை குமரிமாவட்டத்தில் பேசப்படுவது போன்ற தமிழையே பேசிவந்தனர். அவர்களிடையே சில குடும்பங்களை நான் நேரடியாக அறிவேன். வீடுகளுக்குப் போனால் வயதானவர்கள் சரளமானத் தமிழில் பேசுவார்கள். இளையவர்களுக்கு தமிழ் புரியும் என்றாலும் பேசவராது. தகழியின் புகழ்பெற்ற நாவலை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டு பல விருதுகளை வென்ற செம்மீன் திரைப்படம் கேரள முக்குவர்களின் வாழ்க்கையைப் பற்றியது. முக்கியப் பாத்திரங்களின் பெயர்களிலிருந்தே (கருத்தம்மா, பழனி) அவர்களது தமிழ் மரபு விளங்கும். இப்படத்தில் வரும் பாடல்கள் - குறிப்பாக பெண்ணாளே, பெண்ணாளே என்னும் பாடல் - மிகவும் புகழ்பெற்றவை. திருமணத்தின் போது மணப்பெண்ணை நோக்கி மற்றப் பெண்கள் பாடும் இந்த பாடல் கடலுக்குப் போகும் மீனவனின் மனைவி நெறி தவறினால் கடலம்மா அவனைக் கொண்டு போய்விடுவாள் என்ற மீனவர்களது நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்டது. (பாடலில் வரும் அரயன்/அரயத்தி ஆகிய சொற்கள் முக்குவரில் ஒரு பிரிவினைக் குறிப்பவை. படிஞ்ஞாறு என்பது மேற்குத் திசையைக் குறிக்கும் 'படு ஞாயிறு' என்னும் பழந்தமிழ் சொல்லின் திரிபு என்று நினைக்கிறேன்.)

பெண்ணாளே பெண்ணாளே,
கரிமீன் கண்ணாளே கண்ணாளே!
கன்னி தாமர பூமோளே!
பண்டொரு முக்குவன் முத்தினு போயி
படிஞ்ஞாறாம் காற்றத்து முங்கி போயி
அரயத்தி பெண்ணு தபசிருந்நு
அவனெ கடலம்ம கொண்டு வந்நே!
அரயன் தோணியில் போயாலே
அவனு காவலு நீயாணே!


மலையாளப் படங்களில் பெரும்பாலும் 'தரவாட்டு' பின்னணி உடையவர்களாகக் காட்டப்படும் நாயகனும் நாயகியும் பாடும் பாடல்களில் எந்த அளவுக்கு சமஸ்கிருத சொற்கள் கலந்திருக்கும் என்பதை அறிந்தவர்களுக்கு இந்தப் பாடல் கிட்டத்தட்ட முழுமையாகத் தமிழ் சொற்களைக் கொண்டே அமைந்திருப்பது புலப்படும். தமிழில் வாசிப்பதற்கு வசதியாக லேசாக செம்மைப்படுத்தி கீழே இடுகிறேன்.

பெண்ணாளே பெண்ணாளே,
கருமீன் கண்ணாளே கண்ணாளே!
கன்னித் தாமரைப் பூமகளே!
பண்டு ஒரு முக்குவன் முத்துக்காக போனான்
மேற்குக் காற்றில் முங்கி(மூழ்கி) போனான்
அரயத்திப் பெண் தவமிருந்தாள்
அவனைக் கடலம்மா கொண்டு வந்தாள்!
அரயன் தோணியில் போனால்
அவனுக்குக் காவல் நீதான்!

ஈழம், கேரளம், குமரிமாவட்டம் - 1

ஈழ எழுத்தாளர் ஒருவர் எழுதிய நாவல் ஒன்றைப் படிக்கும் வாய்ப்பு சில மாதங்களுக்கு முன்பு தான் கிடைத்தது. படித்தது ஷோபாசக்தியின் கொரில்லா. பெரும்பாலும் யாழ்ப்பாணத்தை ஒட்டியத் தீவுப் பகுதிகளைக் கதைக்களமாகக் கொண்ட இந்த நாவலை வாசித்தபோது நான் எதிர்பார்த்திராத ஒரு அனுபவத்தைப் பெற்றேன். தமிழ்நாட்டில் கன்னியாகுமரி மாவட்டத்தின் கேரள எல்லையோரப் பகுதியில் பிறந்து வளர்ந்த நான், அந்த வட்டாரத்தைக் களமாகக் கொண்ட காடு, ரப்பர் போன்ற நாவல்களை வாசிக்கும்போது கதைமாந்தர்களுடன் எப்படி நெருக்கமாக உணர்ந்தேனோ, அது போன்ற ஒரு உணர்வு கொரில்லா நாவலை வாசிக்கும்போது ஏற்பட்டது. இதற்கு பல காரணங்கள் இருக்கக்கூடும் என்றாலும் நாவலில் வரும் பாத்திரங்களின் பேச்சுமொழிக்கும் குமரி மாவட்டத்தின் தற்போது அருகி வரும் வட்டார வழக்குக்கும் உள்ள ஒற்றுமைகளை முதன்மையானக் காரணமாக சொல்லலாம்.

தமிழ்நாட்டின் பிற பகுதிகளைச் சேர்ந்தவர்களால் பொருள் விளங்கிக்கொள்ளமுடியாத நூற்றுக்கணக்கான சொற்கள் குமரி மாவட்ட வழக்கில் உண்டு. இவற்றில் பலவும் ஈழத்திலும் வழக்கில் இருக்கின்றன என்பதைக் கடந்த சில ஆண்டுகளாக இணையத்தில் ஈழத்தவர் எழுத்துக்களை வாசித்துவருவதாலும் சில ஈழத்தமிழர்களுடன் பேசிப் பழகும் வாய்ப்பை பெற்றிருப்பதாலும் அறிந்திருக்கிறேன். இருந்தாலும் எனக்குப் பரிச்சயமான நிறைய சொற்களை இந்த நாவலில் தான் முதன்முறையாக அடையாளம் கண்டுக்கொண்டேன். அவற்றைப் பட்டியலிடுவது என் நோக்கமில்லை. அண்மைக் காலங்களில் வலைப்பதிவுகளில் விவாதிக்கப்பட்ட சில 'ஈழத்து' சொற்களை மட்டும் இங்கே எடுத்துக்காட்டுகளாக இடுகிறேன். பெரும்பாலான தமிழகப் பதிவர்களுக்கு அறிமுகமில்லாத இந்தச் சொற்கள் குமரி மாவட்ட வழக்கில் உள்ளவை.

பரிசு கேடு: இழிவு, கேவலம், அவமானம் என்றப் பொருளில் கொரில்லா நாவலில் பல இடங்களில் பயன்படுத்தப்படும் இந்தச் சொல்லைக் குறித்து வெற்றி தன் பதிவில் எழுதியிருந்தார். குமரி மாவட்டத்தில் - குறைந்தப்பட்சம் மீனவக் கிராமங்களில் - பரிகேடு என்ற சொல் இதேப் பொருளில் பயன்படுத்தப்படுகிறது. சொற்களிலுள்ள வல்லினங்களை விழுங்குவது குமரி மாவட்டத்தினர் வழக்கம் (நாகர்கோயில் -> நாரோயில்) என்பதால் பரிசு கேடு தான் பரிகேடு என்று மருவியிருக்கும் என்று நிச்சயமாகச் சொல்லலாம்.

கடகம்: கடகம் என்பதற்கு விகடனில் சுஜாதா தவறானப் பொருள் சொன்னதையடுத்து வலைப்பதிவுகளில் ஒரு விரிவான விவாதம் நடந்தது. பதிவர்கள் யோகன், வசந்தன் ஆகியோர் இது குறித்து பல தகவல்களை அளித்தனர். பனை ஓலை அல்லது நாரால் செய்யப்பட்டப் பெட்டியை கடவம் அல்லது கடவப்பெட்டி என்றே குமரி மாவட்டத்தில் சொல்வார்கள். ('க', 'வ' என்று மாறுவதும் இங்கே இயல்பு தான்: போகாது -> போவாது).

காவாலி: பொறுக்கி, ஒழுக்கமற்றவன் என்றப் பொருளில் ஈழத்தமிழர் பயன்படுத்தும் இந்த சொல் குறித்து ஒரு பதிவில் விவாதிக்கப்பட்டபோது அது குமரி மாவட்டத்திலும் பயன்பாட்டில் உள்ளதை ஜோ சுட்டிக்காட்டியதாக நினைவு.

இப்படி சொற்களில் உள்ள ஒற்றுமை மட்டுமல்லாமல் உச்சரிப்பிலும், ஏற்ற இறக்கங்களுடன் பேசும் முறையிலும் கூட ஒற்றுமைகள் இருப்பதைக் காணலாம். சிலவற்றை நுட்பமாக கவனித்தால் மட்டுமே உணரமுடியும். எடுத்துக்காட்டாக தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் தொடர்ந்து பேசும்போது வாக்கியங்களுக்கிடையே உள்ள இடைவெளியை நிரப்ப "வந்து" என்பது போன்ற சொற்களை (filler words) பயன்படுத்துவர். ஈழத்தின் சில பகுதிகளைச் சேர்ந்தவர்கள் பேசுகையில் இப்படி இடைவெளியை நிரப்ப "மற்றது" என்ற சொல்லைப் பயன்படுத்துவதை முதலில் கேட்டபோது வியப்பாக இருந்தது. காரணம் குமரிமாவட்டத்தின் மேற்குப் பகுதியைச் சேர்ந்த பழையத் தலைமுறையினரில் நானறிந்த பலர் இப்படித்தான் பேசுவார்கள்.

பாரம்பரிய உணவுமுறை மற்றும் உடைகள், சமூக அமைப்பு ஆகியவற்றின் அடிப்படையிலும் ஈழத்துக்கும் குமரி மாவட்டத்துக்கும் ஒற்றுமைகள் உண்டு. குமரி மாவட்ட சமூக அமைப்பை தமிழகத்தின் மற்றப் பகுதிகளிலிருந்து வேறுபடுத்தும் ஒரு முக்கிய அம்சம் என்னவென்றால் இங்கே பார்ப்பனர்களுக்கு சமூகத்தில் முதன்மையான இடம் இருந்ததில்லை. எண்ணிக்கையில் மிகக் குறைவாக இருக்கும் பார்ப்பனர்களுக்கு மதச்சடங்குகள் செய்யும் தொழிலாளர்கள் என்பதைத் தாண்டி சிறப்பு அந்தஸ்து ஏதும் அளிக்கப்பட்டதில்லை. இங்கே சாதி ரீதியாக ஆதிக்கம் செலுத்தியது நாஞ்சில் நாடு என்று அழைக்கப்படும் கிழக்குப் பகுதியில் வெள்ளாளர்களும் கேரளத்தை ஒட்டிய மேற்குப் பகுதியில் நாயர்களுமே ஆவார்கள். (இவ்விரு சாதிகளுக்கும் இடையே சிலநேரங்களில் திருமண உறவுகள் இருந்திருக்கின்றன. குமரி மாவட்ட நாயர்களில் சிலர் பெயருக்குப் பின்னால் பிள்ளை என்ற விகுதியை வைத்திருப்பதும் உண்டு.) தமிழகத்தின் வடமாவட்டங்களில் உள்ள பிற்படுத்தப்பட்ட சமுகத்தினரிடையே பார்ப்பன எதிர்ப்பு பரவலாகக் காணப்படுவது போல நாஞ்சில் நாட்டில் முன்பு அடக்குமுறைக்கு உள்ளான நாடார்களிடையே வெள்ளாளர்கள் மீது ஒருவித 'தலைமுறைக்கோபம்' நிலவுவதை இன்றும் பார்க்கலாம். (இதற்கு சில சுவாரசியமான எடுத்துக்காட்டுகளைத் தமிழ் இணையத்திலேயே கண்டுக்கொள்ளமுடியும்.) ஈழ சமூகத்திலும் இதுபோல வெள்ளாள ஆதிக்கம் நிலவியது நன்கு அறியப்பட்டதாக இருக்கிறது. மேலும் பார்ப்பனர்களுக்கு சமூகத்தில் அளிக்கப்படும் இடமும் குமரி மாவட்டத்தைப் போன்றதாகவே இருக்கிறது. (ஆனால் இதற்கு ஒன்றுடன் ஒன்று தொடர்பற்ற இரண்டு வெவ்வேறு வரலாற்றுக் காரணங்கள் இருக்கலாம் என்பதையும் அறிந்திருக்கிறேன்.)

குமரி மாவட்டத்தில் எண்ணிக்கையில் அதிகமாக இருக்கும் நாடார் சமூகத்தினருக்கு மற்றவர்களிடமிருந்து வேறுபட்ட ஒரு 'சாதிவழக்கு' உண்டு. (ஒருவேளை இது இங்குள்ள வேறு சில பின்தங்கிய சமூகத்தினருக்கும் பொதுவானதாக இருக்கலாம்.) தற்போது கல்வியறிவு பெற்ற நகர்புற நாடார்களால் கவனமாகத் தவிர்க்கப்படும் இந்த மொழிக்கு யாழ்ப்பாணத் தமிழர்களின் பேச்சுமொழியுடன் அசாதாரணமான ஒற்றுமைகள் இருக்கின்றன. எடுத்துக்காட்டாக இங்கே, இவர்கள், வருவார்கள், வந்தீர்கள் ஆகிய சொற்கள் குமரிமாவட்ட நாடார்களின் வழக்கில் இஞ்ச, இவிய, வருவினம்/வருவாவ, வந்திய(ள்) என்று வரும். மேலும் முன்பிருந்த நாடார்களின் பனை சார்ந்த வாழ்க்கைமுறை யாழ்ப்பாண மக்களில் சிலரின் வாழ்வுமுறையை ஒத்திருக்கிறது.

நாடார்களுக்கு அடுத்தபடியாக குமரி மாவட்டத்தில் மீனவர்கள் அதிக எண்ணிக்கையில் வாழ்கிறார்கள். இவர்களில் முக்குவர், பரவர் என்று இரு பிரிவினர் உண்டு. ஓரிரு விதிவிலக்குகள் நீங்கலாக கன்னியாகுமரிக்கு கிழக்கே தூத்துக்குடியை நோக்கி செல்லும் கடற்கரையிலுள்ள அனைத்து ஊர்களிலும் பரவர்கள் வாழ்கிறார்கள். எண்ணிக்கையில் அதிகமாக இருக்கும் முக்குவர்கள் கன்னியாகுமரிக்கு மேற்கே கேரளத்தை நோக்கிச் செல்லும் கடற்கரையிலுள்ள அனைத்து ஊர்களிலும் பல உள்நாட்டுக் கிராமங்களிலும் வாழ்கிறார்கள். ஈழத்துக்கும் பண்டையத் தமிழகத்துக்கும் உள்ள தொடர்புகளைக் குறித்து அறிவதற்கு முக்குவர்களின் வரலாறு மற்றும் பண்பாடு குறித்த தகவல்கள் மிகவும் உதவியாக இருக்கும். (இதுபற்றி அடுத்தப் பகுதியில்). கடலோர முக்குவர்களின் பேச்சுவழக்கு - குறிப்பாக மிகுந்த ஏற்ற இறக்கங்களுடன் இழுத்துப் பேசும் முறை - ஈழத்தமிழர்களின், குறிப்பாக மட்டக்களப்புத் தமிழர்களின் மொழியை மிகவும் ஒத்திருக்கும் ஒன்று. (மட்டக்களப்பு மாவட்டத்தில் மிக அதிக அளவில் முக்குவர்கள் வாழ்ந்து வருகிறார்கள் என்பது சில ஆண்டுகளுக்கு முன்பு இணையத்தில் வாசிக்கும் வரை எனக்குத் தெரியாது.) குமரி மாவட்ட முக்குவர்களில் பழையத் தலைமுறையினர் 'ஆமாம்' என்பதற்கு 'ஓம்' என்றுதான் சொல்வார்கள். இப்படி நிறைய உண்டு. ஐம்பது ஆண்டுகளுக்கு முன் வெளிநாடு ஒன்றில் குடியேறிய இந்த சமூகத்தைச் சேர்ந்த ஒருப் பெண்மணியிடம் பேசிக்கொண்டிருந்தபோது பழங்காலத்தில் இவர்களது வழக்கு எந்த அளவுக்கு ஈழத்தை ஒத்திருந்தது என்பது விளங்கியது. 'பையன்' என்பதற்கு 'பெடியன்' என்றார் அவர்.

சோகம் என்னவென்றால் குமரி மாவட்டத்துக்கே உரிய, அதன் மரபிலிருந்து பிரிக்கமுடியாத சொற்களை (இவற்றில் பல பழந்தமிழ் இலக்கியங்களில் பயன்படுத்தப்பட்டவை) பேசுவதை இழிவாகக் கருதி அவற்றைத் தவிர்த்து தொலைக்காட்சியில் வரும் சென்னை மேட்டுக்குடியினரைப் போல ஆங்கிலம் கலந்து பேசுவது தான் நாகரிகம் என்றுக் கருதும் ஜமுக்காளத்தில் வடிகட்டிய முட்டாள்தனத்தை தற்போதைய தலைமுறை செய்துவருவது தான். லேசாக இதுபோன்ற மனப்போக்கைக் கொண்ட மனைவியிடம் வேண்டுமென்றே ஊர்வழக்கில் பேசி வெறுப்பேற்றுவது என் விருப்ப பொழுதுபோக்குகளில் ஒன்று ;-)

ஈழத்தின் மொழிக்கும் அதற்கு மிக அருகாமையில் இருக்கும் தமிழகத்தின் நாகப்பட்டினம், இராமேஸ்வரம் பகுதிகளின் வட்டார வழக்குக்கும் குறிப்பிட்டுச் சொல்லத்தக்க ஒற்றுமைகள் ஏதும் இல்லாத நிலையில் ஒப்புநோக்க அதிக தொலைவில் இருக்கும் குமரி மாவட்டத்தின் மொழி ஈழத்தை மிகவும் ஒத்திருப்பது முதற்பார்வையில் சற்று விந்தையாகத் தெரியலாம். ஆனால் இலங்கைத் தமிழர்களின் வரலாறு மற்றும் வாழ்வியல் குறித்த பல்வேறு தகவல்களை ஆராய்ந்தால் இந்த தொடர்புக்கான காரணங்களைக் குறித்து ஓரளவுக்கு அறிய முடிகிறது. அவற்றை அடுத்தப் பகுதியில் எழுதுகிறேன்.