நடை

எழுதத் தொடங்கிய சில காலத்துக்குப் பின்னரே தன் நடை பற்றிய பதற்றம் முழுமையாக விலகியது என்ற பொருளில் ஜெயமோகன் ஏதோ ஒரு புத்தக முன்னுரையிலோ இணையக் கட்டுரையிலோ எழுதியிருந்தார். (ஜெயமோகன் பெயரைக் குறிப்பிடாமல் தொடர்ந்து இரண்டு பதிவுகள் எழுத முடியாமல் செய்யும் ஜெமோனோமேனியா எனும் விசித்திர வியாதி எப்போது விலகும் என்றுத் தெரியவில்லை.) எனக்கும் ஒரு காலத்தில் நடை பற்றிய பதற்றம் இருந்தது. வலதுத் தோளை லேசாகக் கீழே சாய்த்து நடப்பது தவிர்க்கவேண்டிய ஒருக் குறைபாடாக சிறுவயதிலிருந்தே சுட்டிக் காட்டப்பட்டு வந்ததால் ஏற்பட்ட பதற்றம் அது. பின்னாளில் அறிமுகமான ஒரு மலையாளி நண்பர் "நீங்கள் மோகன்லால் ரசிகரா?" என்றுக் கேட்டுச் சிரித்தார். புரியவில்லை. மோகன்லால் ஒரு தோளை கீழே சாய்த்து நடந்து வந்து "எடா மோனே தினேஷா" என்று வசனம் பேசும் அந்த அடவுக்குப் பாதிக் கேரளமே அடிமை என்றும் நிறைய இளைஞர்கள் அவரைப் போலவே ஒருத் தோளை கீழே சாய்த்து நடக்கிறார்கள் என்றும் நண்பர் விளக்கினார்.

ம்.. இந்த "நடை"யைப் பற்றி ஒருப் பதிவு எழுதும் அளவுக்கு கையிருப்பு இன்னும் காலியாகவில்லை. அதே நேரத்தில் கடந்த இரண்டு பதிவுகளில் sidebar கடுகாய் சிறுக்கும் அளவுக்கு எழுதிய நடை உடை பாவனைகளைப் பற்றி மேற்கொண்டு எதுவும் எழுதும் எண்ணமும் இல்லை. உண்மையில் சென்றப் பதிவின் நீளத்தைப் பார்த்துவிட்டு "படிக்கிறவங்கள ஏன் இப்படிப் போட்டுக் கொல்லுறீங்க?" என்று என் மனைவி வினவியது நீளமும் அழுத்தமும் குறைந்த ஒரு பதிவையாவது எழுதவேண்டும் என்ற அழுத்தத்தை எனக்கு ஏற்படுத்திவிட்டது. இந்தப் பதிவு எழுத்து நடையைப் பற்றியது தான்.

நான் எழுதுவதையெல்லாம் எழுத்து என்று ஒத்துக்கொள்வதானால், சொல்ல வருவதை எந்த வரிசையில் அடுக்கலாம் என்று முடிவு செய்ய சற்று நேரம் செலவிடுவதுண்டே தவிர நடையைப் பற்றியெல்லாம் கவலைப்படுவதில்லை. இன்பச் சுற்றுலாவைக் குறித்து இருநூறு வார்த்தைகளுக்கு மிகாமல் எழுதும் நடை எட்டிப் பார்த்துவிடக் கூடாது என்பதில் மட்டும் கொஞ்சம் கவனம் இருக்கும்.

சிலரை நடைக்காகவே படிக்கலாம். எழுத்தில் புதிய தகவல்களோ கருத்துக்களோ ஏதும் இல்லாமல் இருந்தாலும் படிக்கத் தொடங்கினால் "நடையா, இது நடையா?" என்றுப் படித்துக்கொண்டே இருக்கலாம். வேறு சிலர் நடமாடும் பல்கலைக் கழகங்களாக இருப்பார்கள். ஆனால் நடை எப்போதோ படித்த Asterix படக்கதைகளில் வரும் Julius Monotonus பாத்திரத்தை நினைவுப் படுத்தும். நாம் அதிகம் ரசிக்கும் எழுத்தாளர்களின் பாதிப்பு நம்முடைய நடையில் இருப்பது தவிர்க்க முடியாதது. ஏ.ஆர்.ரஹ்மான் ஒரு பேட்டியில் சொன்னார்: "மற்ற இசையமைப்பாளர்களின் சாயல் என் இசையில் வந்துவிடக் கூடாது என்பதற்காக நான் அவர்களுடைய இசையை அதிகம் கேட்பதில்லை". நானும் அவரது இசை சுத்த சுயம்புவானது என்று தான் நினைத்திருந்தேன். நுஸ்ரத் ஃபத்தே அலி கானின் கவ்வாலியைக் கேட்கும் வரை.

தமிழ் பதிவுலகைப் பொறுத்தவரை இரண்டு வகையான நடைகள் அதிக வரவேற்பைப் பெறுவதாக உணர்கிறேன். ஒன்று கலக நடை. மற்றொன்று அங்கத நடை.

கலக நடை மரபுவாதிகளின் முகச்சுழிப்பை தன் முக்கிய நோக்கங்களில் ஒன்றாகக் கொள்ளவேண்டும் என்று ஒருக் கருத்து நிலவுகிறது. அந்த வகையில் இடக்கர் அடக்கலுக்கோ, இன்னபிற அடக்கல்களுக்கோ அடங்காமல் எழுதும் வல்லமை கலக நடைக்கு முக்கியம். "மனிதக் கழிவை அகற்றுதல்" என்று ஆசாரம் பேணுவதெல்லாம் கலக நடைக்கு உதவாது. "பீ அள்ளுவது" என்றுச் சாற்றுவதே சாலச் சிறந்தது. அதே போல பொதுமைப்படுத்துதல், ஸ்டீரியோடைப்பிங் போன்ற பெரிய பெரிய வார்த்தைகளைக் கொண்டு நீங்கள் வாக்கியம் அமைத்தால் அது வெறும் உரைநடையாக இருக்குமே தவிர உறைக்கும் நடையாக இருக்காது. ஆனால் "டீ.ராஜேந்தர் அடுக்கு மொழியில்தான் **விடுவார் என்று எண்ணுவது போல்" (நன்றி: ரோசாவசந்த்) என்பது போன்ற உவமைகளைப் பயன்படுத்தினால் பசுமரத்தாணியின் மண்டையிலேயே போட்ட மாதிரி இருக்கும். கலக நடையில் அதிகப்பட்சமாக எந்த அளவுக்கு இடக்கர் கலந்து இடக்காக எழுதலாம் என அறிய விரும்புவோர் சிலுக்கு ஸ்மிதாவுக்கு அர்ப்பணிக்கப்பட்ட சாரு நிவேதிதாவின் சிறுகதைத் தொகுப்பில் இடம்பெற்றுள்ள "பிரஸ்ஸில் இருக்கிறது" போன்றக் கதைகளைப் படிக்கலாம்.

இணையத்தில் உள்ள அங்கத எழுத்தாளர்கள் பொதுவாக ஏதாவது ஒரு சாரியில் இருந்துக்கொண்டு எதிர் சாரியில் இருப்போரை நையாண்டி செய்வதை வழக்கமாக வைத்திருப்பார்கள். சென்னைத் தமிழ், நெல்லைத் தமிழ், கோவைத் தமிழ் என்றுப் பன்மொழிப் புலமை இருப்பது அங்கத எழுத்துக்குப் பலம் சேர்க்கும். இவர்கள் பெரும்பாலும் முகத்திரைக்கு பின்னால் இருந்து தான் எழுதுவார்கள். அங்கதக்காரர்கள் கையில் கிடைத்தால் அவர்களை அங்கம் அங்கமாக பிரித்தெடுக்க ஒருக் கூட்டம் எப்போதும் தயாராக இருப்பது இதற்குக் காரணமாக இருக்கக்கூடும். இவர்களது முகத்திரையைக் கிழித்துவிட்டு தான் மறுவேலை என்று சிலர் களம் இறங்குவதும், இவர்கள் "பர்தே மே ரெஹ்னே தோ" என்று ஆஷா போன்ஸ்லேயை மிஞ்சும் விதத்தில் சிணுங்குவதும் எழுத்துக்கு அப்பாற்பட்டக் கூடுதல் நகைச்சுவை.

இணையத்தில் அதிகம் காணமுடியாத ஒருவகை நடை இருக்கிறது. அந்த நடையை எதிர்கொள்ளும்போது என் சிறுவயதில் எங்கள் ஊரில் கிழிந்த அழுக்கு உடைகளோடு திரிந்த ஒரு மனிதர் நினைவுக்கு வருவார். ஒருவித சித்த விகாரக் கலக்கத்தில் இருப்பதாக நம்பப்பட்ட அவரது வாய் ஒயாமல் சொல் மாரி பொழிந்துக் கொண்டே இருக்கும். சொற்கள் ஒன்றோடு ஒன்று தொடர்பற்று சித்தம் தெளிவாக இருப்பவர்களால் அறவே பொருள் விளங்கிக்கொள்ள முடியாமல் இருக்கும். சில நிமிடங்கள் தொடர்ந்துக் கேட்டுக்கொண்டு இருந்தால் probability விதிகளின் படி அவ்வப்போது சில பொருள் உள்ள வாக்கியங்கள் கிடைக்கும். இன்னும் அதிக நேரம் பொறுமையுடன் கேட்பவர்களுக்கு அட என்றுப் புருவம் உயர்த்த வைக்கும் கவித்துவமான வரிகளும் சில நேரங்களில் வாழ்வியல் தத்துவங்களும் கூட கிடைப்பதாக பேசிக்கொண்டார்கள்.

ஆமாம், தானியக்க எழுத்தைத் தான் சொல்கிறேன். இந்த வகை எழுத்தைப் படிப்பதில் உள்ள தடைகளைத் தாண்டி உள்ளே நுழைந்துவிட நான் எத்தனையோ முறை முயற்சி செய்தும் ஒவ்வொரு முறையும் அந்த நடை அகநானூற்றுத் தோழியைப் போல வாயில் மறுத்துவிடுகிறது. விலக்கப்பட்ட கனி மீது ஏற்படும் தவிர்க்க முடியாத ஈர்ப்பை போல தானியக்க எழுத்தின் மீதான ஆர்வம் தொடர்கிறது.

யாராவது நண்பர்களுடன் - குறிப்பாக ஆனந்தவிகடனுக்கு அப்பால் நகராத பெரும்போக்கு நண்பர்களுடன் - நூலகத்துக்குச் செல்ல நேர்ந்தால் ஒரு விளையாட்டில் ஈடுபடுவதுண்டு. தமிழ் வரிசையிலிருந்து முற்றிலும் தானியக்க நடையில் எழுதப்பட்ட ஒருப் புத்தகத்தை எடுத்துக் கொடுத்து இதைப் படித்திருக்கிறீர்களா என்றுக் கேட்பேன். அவரும் வாங்கி "கோணங்கி... ஆத்தர் பேரு வித்தியாசமா இருக்கே.." என்றவாறு புத்தகத்தைத் தற்போக்காகத் திறந்து ஒரு - ஒரே ஒரு - வாக்கியத்தைப் படிக்க முயல்வார்.

"நாமறியாத கிரகத்தில் சுழலும் பாதரஸ ஓநாய்களின் நரம்புகள் மெய்யெழுத்தொலியாய் நீண்டுவர ஒலி அலகுகளில் வளையும் கமகங்கள் கிரக இடை சூன்யத்தில் ஆலாபிக்க வேறு இருகால அடுக்கில் பின் முன்மொழிமாற காலத்துகள் நுண்மையாய் சேரும் பொழுதுகள் புலர்ந்து பச்சிலைகளின் அகர வரிசை பதினாயிரம் இசைக்குறிப்புகளாய் பெருகி உயிர்மெய் சுருள்வில் ரசாயன அகராதியில் அணுக்கவைகள் புரண்டு மனிதப்பேச்சைவிடவும் புலனுக்கு எட்டாத நுண் ஒலிகள் மட்டும் பாதரஸ ஓநாய்கள் தொனிக்க வேதியிலை நரம்புகளின் பரிபாஷை ஓநாய்களின் உரையாடலாய் பச்சை உலகின் அந்தரங்க நுரையீரலில் சரமூச்சு திருகி அதிரும் ஓநாய்களின் மண்ணீரல் சவ்வுகளில் பரவிய துடிப்பறையில் பாலைநில எயினர் விரல் அலகுத்துடி மாற செந்நாய் தோன்றி மைவரைமேல் நின்று ஊளையிட்டது உருவற்று."

படித்து முடித்துவிட்டு திகிலும், மருட்சியும், "ஒருவேளை இவனுக்கு இதெல்லாம் புரிகிறதோ" என்றக் கொடிய சந்தேகமுமாய் நிமிரும் நண்பரின் பேயறைந்த முகத்தைப் பார்ப்பது வாழ்க்கையை வாழ லாயக்கானதாக மாற்றும் நானூற்று முப்பத்து ஏழு வகை அற்ப சந்தோஷங்களில் ஒன்று.

9 மறுமொழிகள்:

சொல்ல வேண்டுமோ என்றுத் தோன்றியதால்: மேற்படி வாக்கியம் நான் இட்டுக்கட்டியதல்ல. "பாதரஸ ஓநாய்களின் தனிமை" என்ற சிறுகதையிலிருந்து ஒரு எழுத்து பிசகாமல் எடுத்து இட்டது. கோணங்கியின் எழுத்தைப் பகடி செய்வது என் நோக்கமில்லை. புரியவில்லை என்பதனால் மட்டுமே எதையும் புறக்கணிக்கலாகாது என்ற புரிதல் ஏற்பட்டு பல ஆண்டுகள் ஆகிவிட்டது. உண்மையில், "புரியவில்லை" என்றாலும் கோணங்கியின் எழுத்தை வாசிப்பது சில நேரங்களில் எனக்கு விருப்பமானதாகவே இருக்கிறது. எங்கே போகிறது என்றுத் தெரியாத பேருந்தில் எவ்வித இலக்கும் இன்றி பயணிப்பதைப் போல.

பதிவு ஏன் நீளமாய் இருக்கின்றது என்று கேட்கப்படும்போது, நானா எழுதுகிறேன், எதுவோ என்னை எழுதச்செய்கின்றது என்று குறிப்புக்கொடுத்து - ஜெயமோகன் பாணியிலே- தப்பித்துக்கொள்ளலாம் :-).
.....
நீங்கள் குறிப்பிட்ட ஜெயமோகனின் முன்னுரை, 'கூந்தல்' சிறுகத்தை தொகுப்பில் இருக்கின்றது என்று நினைவு.
நேனோவில் இருக்கும் சாருவின் 'பிரஸ்சில் இருக்கிறது' எனக்கும் பிடித்தமான ஒரு கதை.

படித்து முடித்துவிட்டு திகிலும், மருட்சியும், "ஒருவேளை இவனுக்கு இதெல்லாம் புரிகிறதோ" என்றக் கொடிய சந்தேகமுமாய் நிமிரும் நண்பரின் பேயறைந்த முகத்தைப் பார்ப்பது வாழ்க்கையை வாழ லாயக்கானதாக மாற்றும் நானூற்று முப்பத்து ஏழு வகை அற்ப சந்தோஷங்களில் ஒன்று// :-))))))))))

ஜெகத்: நீளமாக எழுதுகிறீர்கள் என்று சொல்பவர்களுக்காக மட்டும் சுருக்கமாக எழுதாதீர்கள், நீங்கள் எழுதும் விஷயங்களை ஒன்றிரண்டு பத்திகளுக்குள் எழுதமுடியுமென்று தோன்றினால் மட்டும் அப்படி எழுதுங்கள் என்பது என் வேண்டுகோள்.

புரியாத எழுத்துக்களைக் குறித்தெனில், ambiguity is richness என்பதை ஒத்துக்கொள்ள முடிகிறதா இல்லையா என்பதைப்பொறுத்து அவரவர் அனுபவம் வேறுபடும் என்று நினைக்கிறேன். உத்தேசமான ஒரு காலகட்டத்தில் ஒரு ஐம்பது அறுபது burger-flipper ஆக்கங்களை தொடர்ந்து வாசித்து முடித்தபின் ஏற்படும் அலுப்பை, மைய நீரோட்டத்திலிருந்து வலிந்து விலகியிருக்கும் எழுத்துக்கள்/பார்வைகள்தான் ஓரளவாவது போக்குகின்றன.

//படித்து முடித்துவிட்டு திகிலும், மருட்சியும், \"ஒருவேளை இவனுக்கு இதெல்லாம் புரிகிறதோ\" என்றக் கொடிய சந்தேகமுமாய் நிமிரும் நண்பரின் பேயறைந்த முகத்தை//

:-) LOL!!

நீங்கள் எழுதியிருப்பது புரியக் கடினமாகவிருக்கிறது;-)

நடை குறித்து: நேற்றிரவுதான் 'நடை' என்றொரு சிறுகதையைப் படித்தேன். சு.வேணுகோபால் எழுதியது. நீங்கள் ஆரம்பத்தில் எழுதியதுபோல physical walk குறித்தது. கூர்மையான பார்வையோடிருந்தது.

இடுகைகளின் நீளம் குறித்து: காலையில் அவசரமாக எழுதிய பின்னூட்டம் கிடைத்திருக்குமென நம்புகிறேன். I would love to help you out in any way.

எழுத்தின் நடை குறித்து: தமிழில் அவ்வளவாய் வாசிப்பு அனுபவம் இல்லாத என்னை முதலில் ஈர்ப்பது நடைதான். அம்மட்டில் ஜெயமோகன் ஈர்த்தார். புரிந்தே ஆகவேண்டும் என்ற கட்டாயம் இல்லாத தானியக்க நடையில் இப்போது பெரிய ஈர்ப்பு இருக்கிறது. கோணங்கியை வைத்துச் சிலாகித்துக்கொண்டிருக்கிறேன். புரிகிறதா இல்லையா என்று அலட்டிக்கொள்ளாமல். :)

தமிழ்ப்பதிவுகளில் மூன்று பேரை அவர்களுடைய நடைக்காகவே ரொம்பவும் பிடிக்கும். எனக்கு அறிமுகமான வரிசையில்..

சித்தார்த்த சே குவாரா என்ற புனைப்பெயர் கொண்ட இரமணீதரன் கந்தையா -

http://wandererwaves.blogspot.com இப்போது எழுதாமல் படங்காட்டிக்கொண்டிருப்பது வருத்தம் கொடுக்கும் விதயம்.

அவருடைய புனைவுகளை வாசிக்க: http://punaivu.blogspot.com

வலைப்பதிவுகளில் இப்போது பெயரிலியாக அறியப்படுவதற்குக் காரணமாக 'பெயரிலி' அவதாரப் பதிவுகள் - http://peyarili.blogdrive.com தொடக்கத்திலிருந்து படித்துப்பாருங்கள். ரகளையாகவிருக்கும். தொடக்கம் இங்கே: http://peyarili.blogdrive.com/archive/cm-01_cy-2004_m-01_d-06_y-2004_o-0.html

2004, ஜனவரி 6ம் தேதி தொடங்கியிருக்கிறார். படிப்பதற்கு திஸ்கி எழுத்துரு வேண்டும். அடுத்தடுத்த இடுகைகளைப் படிப்பதற்குப் இடது மேல் மூலையிலிருக்கும் நாட்காட்டியைப் பயன்படுத்துங்கள்.


Montressor (எ) தமிழ்ப்பாம்பு என்ற நாமகரணத்தோடு ஆட்டத்தைத் தொடங்கிய சன்னாசி: http://dystocia.weblogs.us

பொடிச்சி: http://peddai.net

-மதி

மதி: நன்றி. நீங்கள் குறிப்பிட்ட மூவரில் பொடிச்சியின் பதிவு அண்மையில் அவரது நட்சத்திர வாரத்தில் தான் அறிமுகமானது. சமூக அக்கறையுடன், படிக்கத் தூண்டும் நடையில் எழுதுகிறார். மற்ற இருவரையும் சில காலமாகவே விரும்பிப் படித்து வருகிறேன். நேரம் கிடைக்கும்போது பழைய இடுகைகளை எல்லாம் படிக்கவேண்டும் என்று ஒவ்வொரு முறையும் நினைப்பதுண்டு. நீங்கள் பெயரிலியின் பழைய சுட்டிகளை அளித்திருப்பது எனக்கு மட்டுமல்ல மற்றவர்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும். அண்மையில் ஒரு கூகிள் தேடலின் போது அறைத்தோழருடன் சமையல் செய்வதைப் பற்றிய அவரது கவிதை ஒன்றை உங்கள் பழைய பதிவில் கண்டு பலமுறை படித்து ரசித்தேன். அப்படி ஒரு நடை.

புதிய ப்ளாகருக்கு மாறும்போது டெம்ப்லேட் மாற்றிவிடலாம் என்று நினைத்திருந்தேன். கூடிய விரைவில் செய்கிறேன்.

பெயரிலி: உங்களுக்கே புரியவில்லை என்றால் வேறு யாருக்குப் புரியப் போகிறது? :-)

டிசே, உஷா, சன்னாசி: உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.

//ஜெமோனோமேனியா எனும் விசித்திர வியாதி எப்போது விலகும் என்றுத் தெரியவில்லை

//என்பது போன்ற உவமைகளைப் பயன்படுத்தினால் பசுமரத்தாணியின் மண்டையிலேயே போட்ட மாதிரி இருக்கும்

//சொற்கள் ஒன்றோடு ஒன்று தொடர்பற்று சித்தம் தெளிவாக இருப்பவர்களால் அறவே பொருள் விளங்கிக்கொள்ள முடியாமல் இருக்கும்

//படித்து முடித்துவிட்டு திகிலும், மருட்சியும், "ஒருவேளை இவனுக்கு இதெல்லாம் புரிகிறதோ" என்றக் கொடிய சந்தேகமுமாய் நிமிரும் நண்பரின் பேயறைந்த முகத்தைப் பார்ப்பது வாழ்க்கையை வாழ லாயக்கானதாக மாற்றும் நானூற்று முப்பத்து ஏழு வகை அற்ப சந்தோஷங்களில் ஒன்று.

வாய்விட்டுச் சிரித்தேன். ஆமாம் கடைசி பேரா உங்களுக்கு புரிந்ததா? உண்மையைச் சொல்லுங்கள்? சூப்பர் பதிவு.

முத்து, நன்றி.

/*உங்களுக்கு புரிந்ததா? உண்மையைச் சொல்லுங்கள்?*/

அதை எழுதியவருக்கே இப்போது படித்தால் புரியுமா என்பது எனக்கு சந்தேகமே :-)