சுதந்திரம்


நேற்று இணையத்தில் பார்த்த இந்த நிழற்படம் வெகுநேரத்திற்கு மனதைவிட்டு அகலவில்லை. பிரேசிலில் அமேசான் நதியோரக் காடுகளில் வாழும் இதுவரை அறியப்படாத பழங்குடி ஒன்று முதன்முதலாக விமானத்திலிருந்து நிழற்படம் எடுக்கப்பட்டதைப் பற்றிய செய்தியைப் படித்தேன். காடுகள் தொடர்ந்து அழிக்கப்படுவதால் தங்கள் வாழ்விடங்களை இழந்து அழிவின் விளிம்பில் இருக்கும் அவர்கள் வெளியுலகத்தினரின் தொடர்பை எந்த அளவுக்கு அஞ்சுகிறார்கள் என்பதை படங்கள் உணர்த்தின. ஐநூறு ஆண்டுகளுக்கு முன் வரை அமெரிக்கக் கண்டம் முழுவதும் பரவியிருந்த பழங்குடியினருக்கு வேற்று மனிதர்களின் தொடர்பால் கிடைத்தது அழிவைத் தவிர வேறெதுவும் இல்லை. விலங்குகளைப் போல் அவர்களை வேட்டையாடிய ஐரோப்பியர்கள் ஒருபுறம் என்றால், அவர்களுக்கு 'நாகரிகம்' கற்றுத்தருவதாக நினைத்துக்கொண்டு அவர்கள் வாழ்வுமுறையையும் பண்பாட்டையும் அழித்தொழித்தவர்கள் மற்றொருபுறம். மேலும் அவர்களுக்கு எதிர்ப்பு சக்தி அறவே இல்லாத புது நோய்களால் பீடிக்கப்பட்டு அழியும் ஆபத்தும் உண்டு.

பயிற்சியாலும் தொழிலாலும் ஒரு நுட்பவியலாளனாக இருந்தாலும் மனதளவில் நான் ஒரு Luddite என்றே உணர்கிறேன். அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தின் அதிவேக வளர்ச்சியால் பல நன்மைகள் விளைந்திருந்தாலும் அது மனிதனுக்கும் இயற்கைக்கும் இடையிலான உறவை பெரிதும் நாசம் செய்துவிட்டது என்பது என் எண்ணம். நவீன நாகரிக வளர்ச்சிகளால் அதிகம் தீண்டப்படாத ஒரு பகுதியில் இயற்கை சார்ந்த வாழ்வு வாழ்வதைப் பற்றிய கற்பனைகள் எனக்குண்டு. (என் குழந்தைப்பருவம் முழுவதும் அப்படிப்பட்ட வாழ்வுமுறையைக் கொண்ட, காடும் மலையும் சூழ்ந்த ஒரு குக்கிராமத்தில் கழிந்ததும் இதற்கு காரணமாக இருக்கலாம்.) பல மாநகரங்களில் பல ஆண்டுகள் வாழ்ந்திருக்கிறேன் என்றாலும் எப்போதும் ஒரளவு அமைதியான புறநகர் பகுதிகளிலேயே வாழவும் வேலை செய்யும்படியும் அமைந்தது என் நல்லூழ் என்று தான் சொல்லவேண்டும். நெரிசலும் இரைச்சலும் நிறைந்த, மருந்துக்குக் கூட மரங்களோ தாவரங்களோ இல்லாத நகரங்களில் - குறிப்பாக இந்திய மாநகரங்களில் - வாழ்வது எனக்கு சகிக்கமுடியாத ஆக்கினை.

இத்தகைய மனப்போக்குகள் கொண்ட எனக்கு இயற்கையோடு இணைந்து வாழும் பழங்குடியினரின் வாழ்வை மற்றவர்கள் புகுந்து கலைப்பது ஒரு கொடூரச்செயலாகவே தோன்றுகிறது. நல்லவேளையாக பிரேசில் அரசாங்கத்தின் கொள்கை - இத்தகைய அறியப்படாத பழங்குடியினரை எந்தவகையிலும் தொடர்புகொள்ளாமல் அவர்கள் போக்கிலேயே வாழவிடுவதே அவர்கள் கொள்கை - ஆறுதலளிப்பதாக இருக்கிறது. அந்த எளிய மனிதர்களுக்கு தங்கள் வாழ்வை தங்கள் விருப்பப்படி அமைத்துக்கொள்வதற்கு உள்ள சுதந்திரத்தை ஒரு பலம் வாய்ந்த அரசு அங்கீகரிப்பது போற்றுதலுக்குரியது. இந்த இடத்தில் இந்தியாவில் அணைகள் கட்டுவதற்காகவும் மற்ற 'வளர்ச்சித்' திட்டங்களுக்காகவும் லட்சக்கணக்கான பழங்குடியினரை எந்த இழப்பீடும் கொடுக்காமல் அவர்கள் வாழ்விடங்களிலிருந்து அகற்றும் அரசுகளும் இந்த அநீதிக்கு துணைபோகும் 'நீதி'மன்றங்களும் நினைவுக்கு வருவதைத் தவிர்க்க முடியவில்லை.

****************

கடந்த சில மாதங்களாக ஊடகங்களில் அதிக கவனம் பெற்றுவரும் திபெத் மக்களின் சுய உரிமைப் போராட்டம் முக்கியமான ஒரு கேள்வியை எழுப்புகிறது. மொழி, இனம், பண்பாடு, பாரம்பரிய வாழ்விடம் என்று ஒரு தேசத்திற்குரிய அனைத்து தனி அடையாளங்களும் உடைய ஒரு சமூகம் இராணுவ, பொருளாதார பலம் வாய்ந்த ஒரு அரசால் ஆக்கிரமிக்கப்படும்போது அதை எதிர்த்து தார்மீக அடிப்படையில் அகிம்சை முறையில் போராடுவதில் ஏதாவது பலன் உண்டா என்பதே கேள்வி. திபெத்தியர்களின் பக்கம் உள்ள நியாயத்தை அங்கீகரித்து அவர்களுக்குத் தார்மீக ஆதரவு அளித்து வந்த நாடுகள் தற்போது அவர்களை கைகழுவும் நிலையில் இருக்கின்றன. வல்லான் வகுத்ததே வாய்க்கால் என்பதன்படி சீனாவின் விருப்பப்படி நடந்துக்கொள்ளுமாறு திபெத்தியர்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள். இத்தனைக்கும் திபெத்தியர்கள் முழு சுதந்திரம் கேட்கவில்லை. தங்கள் பண்பாடு மற்றும் வாழ்வுமுறையைப் பாதுகாக்கும் வகையில் தன்னாட்சி அதிகாரங்களுடன் சீனாவின் ஒரு பகுதியாக இருப்பதே அவர்கள் கோரிக்கை.

இப்பிரச்சினையில் ஹிந்து குழுமத்தின் அப்பட்டமான சீன ஆதரவு, திபெத் எதிர்ப்பு நிலைபாடு அதன் சிங்கள ஆதரவு, தமிழர் எதிர்ப்பு நிலைக்கு சற்றும் குறையாததாக இருக்கிறது. தலாய் லாமாவை ஒசாமா பின் லேடனுடனும் அயத்தொல்லா கொமேனியுடனும் ஒப்பிட்டு ஹிந்துவில் எழுதப்படும் கட்டுரைகள் ஈழத்தமிழர்கள் வன்முறையை நாடாமல் உப்பு சத்தியாகிரகம் முதலான அகிம்சை வழிகளில் போராடியிருந்தால் ஹிந்துவும் இந்திய பெரியமனிதர்களும் ஆதரித்திருப்பார்கள் என்று சொல்லிக்கொண்டிருக்கும் கனவான்களின் 'முகத்தின் மீது கையை வைக்கும்' விதமாக இருக்கின்றன. ஒரு ஊடகவியலாளருக்குள்ள தார்மீக விதிகள் அனைத்தையும் துறந்து ஊரெல்லாம் தன் பெயர் நாறுவதைப் பற்றியக் கவலை சற்றும் இல்லாமல் என். ராம் நேரடியாக களத்தில் இறங்கி எழுதியிருக்கும் நீண்டக் கட்டுரைகளில் வெளிப்படும் திபெத்தியர் மீதான வெறுப்பைக் காணும்போது அவர் சீனரத்னமாலை சூடும் நாள் வெகுதொலைவில் இல்லை என்று தோன்றுகிறது.

என். ராமை வழக்கமாக எதிர்க்கும் இந்துத்துவாதிகளில் சிலர் அவரது திபெத் எதிர்ப்பு நிலையோடு ஒத்துப்போவது இடதுசாரி, வலதுசாரி என்ற வேடங்களுக்கு அப்பால் இவர்கள் இணையும் புள்ளிகள் பல உண்டு என்பதை உணர்த்துகிறது. திபெத்தியர்கள் வெற்றிப் பெற்றுவிட்டால் அது காஷ்மீரிகளுக்கு ஊக்கமளித்துவிடுமாம். இவர்களுக்கு இத்தகைய அச்சம் இருப்பதால் சுய நிர்ணய உரிமைக்காகப் போராடும் எந்த மக்களையும் அவர்களது போராட்டத்தில் எவ்வளவுதான் தார்மீக நியாயம் இருந்தாலும் ஆதரிக்கமாட்டார்கள். அண்மையில் கொசோவா சுதந்திரப் பிரகடனம் செய்தபோது அதை எதிர்த்த நாடுகளின் பட்டியல் - சீனா, இந்தியா, ரஷ்யா, இலங்கை - சுவாரசியமானது. இந்த நாடுகள் அனைத்துமே சிறுபான்மை இனங்களின் சுய உரிமைப் போராட்டங்களை இராணுவ பலத்தால் எதிர்கொண்டுவருபவை. இந்நாடுகளின் குடிமக்களில் பெரும்பான்மையானவர்கள் சுய நிர்ணய உரிமை என்னும் கருத்தாக்கத்துக்கு எதிராக தீவிரமாக மூளைச்சலவை செய்யப்பட்டவர்கள். சாந்த சொரூபியான ஒரு சீன சக ஊழியருடன் திபெத்தியரின் சுய நிர்ணய உரிமைப் பற்றிப் பேசி அவர் சன்னதம் ஆடக் கண்ட அனுபவம் நினைவுக்கு வருகிறது.

8 மறுமொழிகள்:

//அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தின் அதிவேக வளர்ச்சியால் பல நன்மைகள் விளைந்திருந்தாலும் அது மனிதனுக்கும் இயற்கைக்கும் இடையிலான உறவை பெரிதும் நாசம் செய்துவிட்டது என்பது என் எண்ணம்.//

மிகவும் உண்மையான நல்ல கருத்து ஜெகத்.

Good post! Thanks a lot!!

ஜெகத்,
நல்லூழ்-அதிர்ஷ்டம். கேள்விப்பட்ட சொல்தான் என்றாலும் இப்படி பயன்படுத்தலாம் என்று உங்களால் புரிந்துகொண்டேன் நன்றி.

/*என். ராமை வழக்கமாக எதிர்க்கும் இந்துத்துவாதிகளில் சிலர் அவரது திபெத் எதிர்ப்பு நிலையோடு ஒத்துப்போவது */

Can u list a few names of those "hindutvas"?

/*இந்த நாடுகள் அனைத்துமே சிறுபான்மை இனங்களின் சுய உரிமைப் போராட்டங்களை இராணுவ பலத்தால் எதிர்கொண்டுவருபவை. */

"சுய உரிமை' என்ற சொல்லிற்க்கு உங்களின் வரையறை என்ன? தனி நாடா?

>>>Can u list a few names of those "hindutvas"?

I have been following the reaction to N. Ram's articles on Tibet in the English blogs and remember seeing comments such as the one below. Some Hindutva sympathizers known to me personally too have similar views.

"all indian hindus should uphold the principle of one china, and that anti-nationals and secessionist forces should not be encouraged. think what our mohammedans will be encouraged to do if tubet were ever to break away from china. disaster."

I did not say that all Hindutvadis are with N. Ram on this. Only some.

>>>"சுய உரிமை' என்ற சொல்லிற்க்கு உங்களின் வரையறை என்ன? தனி நாடா?"

தனிநாடுதான் என்றில்லை. அதிகபட்ச அதிகாரங்கள் உடைய தன்னாட்சியாகவும் (maximum autonomy) இருக்கலாம். தலாய் லாமா தனிநாடு கேட்கவில்லை.

சுப்பிரமண்யன் சுவாமியும் திபேத் விவகாரத்தில் சீனாவை ஆதரிப்பவர்,
என்.ராமைப் போல். திபேத் தனி நாடானால் இந்தியாவிலும் அது போல்
கோரிக்கைகள் எழும் என்ற அச்சம் காரணமாக சில ஹிந்த்துவவாதிகள் திபேத் குறித்து சீன நிலைப்பாட்டினை ஆதரிப்பதில் வியப்பில்லை.மாற்றுக்
கருத்துள்ள ஹிந்த்துவ்வாதிகளும்
இருக்கிறார்கள்.பாஜகவைப் பொருத்தவரை ஆட்சியிலிருந்த
போது சீனாவுடன் நல்லுறவைப்
பேணியது, திபெத் பிரச்சினை
அதற்கு தடையாக இல்லை.
திபெத் குறித்து தி.க, தி.மு.க,
பா.ம.க, ம.தி.மு.க ஒன்றும்
சொல்வதாகத் தெரியவில்லை.

ஜகத்,

பரந்த வாசிப்பும் சரளமான நடையும் உங்கள் எழுத்தை வசிகரமாக்குகின்றன. விமர்சனத்தைக் காட்டிலும் புனைவு எழுதுவது சற்று அபாயம்தான் எனினும் நீங்கள் அந்த எல்லையைக் கடந்து விட்டதாக நான் நினைக்கிறேன்.

அனுஜன்யா

மதக்காரர்கள் இந்த ஆதிவாசி மக்களுக்கு கடவுளின் செய்தியை இந்நேரம் சேர்த்திருப்பார்கள் என நம்புவோம்