ஈழம், கேரளம், குமரிமாவட்டம் - 1

ஈழ எழுத்தாளர் ஒருவர் எழுதிய நாவல் ஒன்றைப் படிக்கும் வாய்ப்பு சில மாதங்களுக்கு முன்பு தான் கிடைத்தது. படித்தது ஷோபாசக்தியின் கொரில்லா. பெரும்பாலும் யாழ்ப்பாணத்தை ஒட்டியத் தீவுப் பகுதிகளைக் கதைக்களமாகக் கொண்ட இந்த நாவலை வாசித்தபோது நான் எதிர்பார்த்திராத ஒரு அனுபவத்தைப் பெற்றேன். தமிழ்நாட்டில் கன்னியாகுமரி மாவட்டத்தின் கேரள எல்லையோரப் பகுதியில் பிறந்து வளர்ந்த நான், அந்த வட்டாரத்தைக் களமாகக் கொண்ட காடு, ரப்பர் போன்ற நாவல்களை வாசிக்கும்போது கதைமாந்தர்களுடன் எப்படி நெருக்கமாக உணர்ந்தேனோ, அது போன்ற ஒரு உணர்வு கொரில்லா நாவலை வாசிக்கும்போது ஏற்பட்டது. இதற்கு பல காரணங்கள் இருக்கக்கூடும் என்றாலும் நாவலில் வரும் பாத்திரங்களின் பேச்சுமொழிக்கும் குமரி மாவட்டத்தின் தற்போது அருகி வரும் வட்டார வழக்குக்கும் உள்ள ஒற்றுமைகளை முதன்மையானக் காரணமாக சொல்லலாம்.

தமிழ்நாட்டின் பிற பகுதிகளைச் சேர்ந்தவர்களால் பொருள் விளங்கிக்கொள்ளமுடியாத நூற்றுக்கணக்கான சொற்கள் குமரி மாவட்ட வழக்கில் உண்டு. இவற்றில் பலவும் ஈழத்திலும் வழக்கில் இருக்கின்றன என்பதைக் கடந்த சில ஆண்டுகளாக இணையத்தில் ஈழத்தவர் எழுத்துக்களை வாசித்துவருவதாலும் சில ஈழத்தமிழர்களுடன் பேசிப் பழகும் வாய்ப்பை பெற்றிருப்பதாலும் அறிந்திருக்கிறேன். இருந்தாலும் எனக்குப் பரிச்சயமான நிறைய சொற்களை இந்த நாவலில் தான் முதன்முறையாக அடையாளம் கண்டுக்கொண்டேன். அவற்றைப் பட்டியலிடுவது என் நோக்கமில்லை. அண்மைக் காலங்களில் வலைப்பதிவுகளில் விவாதிக்கப்பட்ட சில 'ஈழத்து' சொற்களை மட்டும் இங்கே எடுத்துக்காட்டுகளாக இடுகிறேன். பெரும்பாலான தமிழகப் பதிவர்களுக்கு அறிமுகமில்லாத இந்தச் சொற்கள் குமரி மாவட்ட வழக்கில் உள்ளவை.

பரிசு கேடு: இழிவு, கேவலம், அவமானம் என்றப் பொருளில் கொரில்லா நாவலில் பல இடங்களில் பயன்படுத்தப்படும் இந்தச் சொல்லைக் குறித்து வெற்றி தன் பதிவில் எழுதியிருந்தார். குமரி மாவட்டத்தில் - குறைந்தப்பட்சம் மீனவக் கிராமங்களில் - பரிகேடு என்ற சொல் இதேப் பொருளில் பயன்படுத்தப்படுகிறது. சொற்களிலுள்ள வல்லினங்களை விழுங்குவது குமரி மாவட்டத்தினர் வழக்கம் (நாகர்கோயில் -> நாரோயில்) என்பதால் பரிசு கேடு தான் பரிகேடு என்று மருவியிருக்கும் என்று நிச்சயமாகச் சொல்லலாம்.

கடகம்: கடகம் என்பதற்கு விகடனில் சுஜாதா தவறானப் பொருள் சொன்னதையடுத்து வலைப்பதிவுகளில் ஒரு விரிவான விவாதம் நடந்தது. பதிவர்கள் யோகன், வசந்தன் ஆகியோர் இது குறித்து பல தகவல்களை அளித்தனர். பனை ஓலை அல்லது நாரால் செய்யப்பட்டப் பெட்டியை கடவம் அல்லது கடவப்பெட்டி என்றே குமரி மாவட்டத்தில் சொல்வார்கள். ('க', 'வ' என்று மாறுவதும் இங்கே இயல்பு தான்: போகாது -> போவாது).

காவாலி: பொறுக்கி, ஒழுக்கமற்றவன் என்றப் பொருளில் ஈழத்தமிழர் பயன்படுத்தும் இந்த சொல் குறித்து ஒரு பதிவில் விவாதிக்கப்பட்டபோது அது குமரி மாவட்டத்திலும் பயன்பாட்டில் உள்ளதை ஜோ சுட்டிக்காட்டியதாக நினைவு.

இப்படி சொற்களில் உள்ள ஒற்றுமை மட்டுமல்லாமல் உச்சரிப்பிலும், ஏற்ற இறக்கங்களுடன் பேசும் முறையிலும் கூட ஒற்றுமைகள் இருப்பதைக் காணலாம். சிலவற்றை நுட்பமாக கவனித்தால் மட்டுமே உணரமுடியும். எடுத்துக்காட்டாக தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் தொடர்ந்து பேசும்போது வாக்கியங்களுக்கிடையே உள்ள இடைவெளியை நிரப்ப "வந்து" என்பது போன்ற சொற்களை (filler words) பயன்படுத்துவர். ஈழத்தின் சில பகுதிகளைச் சேர்ந்தவர்கள் பேசுகையில் இப்படி இடைவெளியை நிரப்ப "மற்றது" என்ற சொல்லைப் பயன்படுத்துவதை முதலில் கேட்டபோது வியப்பாக இருந்தது. காரணம் குமரிமாவட்டத்தின் மேற்குப் பகுதியைச் சேர்ந்த பழையத் தலைமுறையினரில் நானறிந்த பலர் இப்படித்தான் பேசுவார்கள்.

பாரம்பரிய உணவுமுறை மற்றும் உடைகள், சமூக அமைப்பு ஆகியவற்றின் அடிப்படையிலும் ஈழத்துக்கும் குமரி மாவட்டத்துக்கும் ஒற்றுமைகள் உண்டு. குமரி மாவட்ட சமூக அமைப்பை தமிழகத்தின் மற்றப் பகுதிகளிலிருந்து வேறுபடுத்தும் ஒரு முக்கிய அம்சம் என்னவென்றால் இங்கே பார்ப்பனர்களுக்கு சமூகத்தில் முதன்மையான இடம் இருந்ததில்லை. எண்ணிக்கையில் மிகக் குறைவாக இருக்கும் பார்ப்பனர்களுக்கு மதச்சடங்குகள் செய்யும் தொழிலாளர்கள் என்பதைத் தாண்டி சிறப்பு அந்தஸ்து ஏதும் அளிக்கப்பட்டதில்லை. இங்கே சாதி ரீதியாக ஆதிக்கம் செலுத்தியது நாஞ்சில் நாடு என்று அழைக்கப்படும் கிழக்குப் பகுதியில் வெள்ளாளர்களும் கேரளத்தை ஒட்டிய மேற்குப் பகுதியில் நாயர்களுமே ஆவார்கள். (இவ்விரு சாதிகளுக்கும் இடையே சிலநேரங்களில் திருமண உறவுகள் இருந்திருக்கின்றன. குமரி மாவட்ட நாயர்களில் சிலர் பெயருக்குப் பின்னால் பிள்ளை என்ற விகுதியை வைத்திருப்பதும் உண்டு.) தமிழகத்தின் வடமாவட்டங்களில் உள்ள பிற்படுத்தப்பட்ட சமுகத்தினரிடையே பார்ப்பன எதிர்ப்பு பரவலாகக் காணப்படுவது போல நாஞ்சில் நாட்டில் முன்பு அடக்குமுறைக்கு உள்ளான நாடார்களிடையே வெள்ளாளர்கள் மீது ஒருவித 'தலைமுறைக்கோபம்' நிலவுவதை இன்றும் பார்க்கலாம். (இதற்கு சில சுவாரசியமான எடுத்துக்காட்டுகளைத் தமிழ் இணையத்திலேயே கண்டுக்கொள்ளமுடியும்.) ஈழ சமூகத்திலும் இதுபோல வெள்ளாள ஆதிக்கம் நிலவியது நன்கு அறியப்பட்டதாக இருக்கிறது. மேலும் பார்ப்பனர்களுக்கு சமூகத்தில் அளிக்கப்படும் இடமும் குமரி மாவட்டத்தைப் போன்றதாகவே இருக்கிறது. (ஆனால் இதற்கு ஒன்றுடன் ஒன்று தொடர்பற்ற இரண்டு வெவ்வேறு வரலாற்றுக் காரணங்கள் இருக்கலாம் என்பதையும் அறிந்திருக்கிறேன்.)

குமரி மாவட்டத்தில் எண்ணிக்கையில் அதிகமாக இருக்கும் நாடார் சமூகத்தினருக்கு மற்றவர்களிடமிருந்து வேறுபட்ட ஒரு 'சாதிவழக்கு' உண்டு. (ஒருவேளை இது இங்குள்ள வேறு சில பின்தங்கிய சமூகத்தினருக்கும் பொதுவானதாக இருக்கலாம்.) தற்போது கல்வியறிவு பெற்ற நகர்புற நாடார்களால் கவனமாகத் தவிர்க்கப்படும் இந்த மொழிக்கு யாழ்ப்பாணத் தமிழர்களின் பேச்சுமொழியுடன் அசாதாரணமான ஒற்றுமைகள் இருக்கின்றன. எடுத்துக்காட்டாக இங்கே, இவர்கள், வருவார்கள், வந்தீர்கள் ஆகிய சொற்கள் குமரிமாவட்ட நாடார்களின் வழக்கில் இஞ்ச, இவிய, வருவினம்/வருவாவ, வந்திய(ள்) என்று வரும். மேலும் முன்பிருந்த நாடார்களின் பனை சார்ந்த வாழ்க்கைமுறை யாழ்ப்பாண மக்களில் சிலரின் வாழ்வுமுறையை ஒத்திருக்கிறது.

நாடார்களுக்கு அடுத்தபடியாக குமரி மாவட்டத்தில் மீனவர்கள் அதிக எண்ணிக்கையில் வாழ்கிறார்கள். இவர்களில் முக்குவர், பரவர் என்று இரு பிரிவினர் உண்டு. ஓரிரு விதிவிலக்குகள் நீங்கலாக கன்னியாகுமரிக்கு கிழக்கே தூத்துக்குடியை நோக்கி செல்லும் கடற்கரையிலுள்ள அனைத்து ஊர்களிலும் பரவர்கள் வாழ்கிறார்கள். எண்ணிக்கையில் அதிகமாக இருக்கும் முக்குவர்கள் கன்னியாகுமரிக்கு மேற்கே கேரளத்தை நோக்கிச் செல்லும் கடற்கரையிலுள்ள அனைத்து ஊர்களிலும் பல உள்நாட்டுக் கிராமங்களிலும் வாழ்கிறார்கள். ஈழத்துக்கும் பண்டையத் தமிழகத்துக்கும் உள்ள தொடர்புகளைக் குறித்து அறிவதற்கு முக்குவர்களின் வரலாறு மற்றும் பண்பாடு குறித்த தகவல்கள் மிகவும் உதவியாக இருக்கும். (இதுபற்றி அடுத்தப் பகுதியில்). கடலோர முக்குவர்களின் பேச்சுவழக்கு - குறிப்பாக மிகுந்த ஏற்ற இறக்கங்களுடன் இழுத்துப் பேசும் முறை - ஈழத்தமிழர்களின், குறிப்பாக மட்டக்களப்புத் தமிழர்களின் மொழியை மிகவும் ஒத்திருக்கும் ஒன்று. (மட்டக்களப்பு மாவட்டத்தில் மிக அதிக அளவில் முக்குவர்கள் வாழ்ந்து வருகிறார்கள் என்பது சில ஆண்டுகளுக்கு முன்பு இணையத்தில் வாசிக்கும் வரை எனக்குத் தெரியாது.) குமரி மாவட்ட முக்குவர்களில் பழையத் தலைமுறையினர் 'ஆமாம்' என்பதற்கு 'ஓம்' என்றுதான் சொல்வார்கள். இப்படி நிறைய உண்டு. ஐம்பது ஆண்டுகளுக்கு முன் வெளிநாடு ஒன்றில் குடியேறிய இந்த சமூகத்தைச் சேர்ந்த ஒருப் பெண்மணியிடம் பேசிக்கொண்டிருந்தபோது பழங்காலத்தில் இவர்களது வழக்கு எந்த அளவுக்கு ஈழத்தை ஒத்திருந்தது என்பது விளங்கியது. 'பையன்' என்பதற்கு 'பெடியன்' என்றார் அவர்.

சோகம் என்னவென்றால் குமரி மாவட்டத்துக்கே உரிய, அதன் மரபிலிருந்து பிரிக்கமுடியாத சொற்களை (இவற்றில் பல பழந்தமிழ் இலக்கியங்களில் பயன்படுத்தப்பட்டவை) பேசுவதை இழிவாகக் கருதி அவற்றைத் தவிர்த்து தொலைக்காட்சியில் வரும் சென்னை மேட்டுக்குடியினரைப் போல ஆங்கிலம் கலந்து பேசுவது தான் நாகரிகம் என்றுக் கருதும் ஜமுக்காளத்தில் வடிகட்டிய முட்டாள்தனத்தை தற்போதைய தலைமுறை செய்துவருவது தான். லேசாக இதுபோன்ற மனப்போக்கைக் கொண்ட மனைவியிடம் வேண்டுமென்றே ஊர்வழக்கில் பேசி வெறுப்பேற்றுவது என் விருப்ப பொழுதுபோக்குகளில் ஒன்று ;-)

ஈழத்தின் மொழிக்கும் அதற்கு மிக அருகாமையில் இருக்கும் தமிழகத்தின் நாகப்பட்டினம், இராமேஸ்வரம் பகுதிகளின் வட்டார வழக்குக்கும் குறிப்பிட்டுச் சொல்லத்தக்க ஒற்றுமைகள் ஏதும் இல்லாத நிலையில் ஒப்புநோக்க அதிக தொலைவில் இருக்கும் குமரி மாவட்டத்தின் மொழி ஈழத்தை மிகவும் ஒத்திருப்பது முதற்பார்வையில் சற்று விந்தையாகத் தெரியலாம். ஆனால் இலங்கைத் தமிழர்களின் வரலாறு மற்றும் வாழ்வியல் குறித்த பல்வேறு தகவல்களை ஆராய்ந்தால் இந்த தொடர்புக்கான காரணங்களைக் குறித்து ஓரளவுக்கு அறிய முடிகிறது. அவற்றை அடுத்தப் பகுதியில் எழுதுகிறேன்.

27 மறுமொழிகள்:

அருமை . . . .

ஆழமான பார்வை. அடுத்த பகுதிக்கு ஆவலுடன் காத்திருக்கிறேன்.

ஜெகத்,

நலமா?

பல நாட்களுக்குப்பிறகு உங்களுடைய இடுகை வந்திருப்பதை கூகுள் ரீடரில் பார்த்ததுமே சந்தோஷமாகவிருந்தது. இடுகையின் பேசு பொருளைப்படித்ததும் உற்சாகம் தாங்கவில்லை! ;) முக்கியமாக நீங்கள் இடுகையின் தொடக்கத்தில் எழுதியிருந்த தீவுப்பகுதியைச் சேர்ந்த ஆளாக. :)

அடுத்த பாகத்தை மிகவும் ஆர்வத்துடன் எதிர்பார்க்கிறேன்.

மற்றும்படிக்கு, சட்டெனத் தமிழில் பேசவேண்டுமானால் இந்தியத் தமிழே பெரும்பாலும் வருகிறது. முந்தி இருந்ததற்கு இப்ப கொஞ்சம் பரவாயில்லை. எங்கட ஊர்த்தமிழும் மறந்துபோகாமல் வருகிறது. ஆனால், நிறைய சொற்களைக் கொஞ்சம் கொஞ்சமாக மறந்து போவது உறுத்துகிறது. மைக்கேல் ஒண்டாச்சியின் ஒரு கவிதையில் இதை அருமையாக எழுதியிருப்பார். கதையோடு கதையாக அந்தக் கவிதையையும் இங்கே தர்ரேன். ;)

The last Sinhala word I lost
was vatura.
The word for water.
Forest water. The water in a kiss. The tears
I gave to my ayah Rosalin on leaving
the first home of my life

More water for her than any other
that fled my eyes again
this year, remembering her,
a lost almost-mother in those years
of thirsty love

No photograph of her, no meeting
since the age of eleven,
not even knowledge of her grave.

Who abandoned who, I wonder now.

நிறையச் சொல்லவேண்டும் பேச வேண்டும் போலிருக்கிறது. பிறகு..

-மதி

மாயா, பெத்த ராயுடு: நன்றி.

மதி: நலமே. நன்றி. இது குறித்து எழுத நிறைய இருக்கிறது. நேரம் தான் அவ்வளவாகக் கிடைப்பதில்லை. யாரும் படிக்கிறார்களோ இல்லையோ எழுதுவது ஒருவித திருப்தியை தரத்தான் செய்கிறது என்பதை பல நாட்களுக்குப் பிறகு மீண்டும் உணர்ந்தேன். மீதியையும் விரைவிலேயே எழுதுகிறேன்.

welcome back...nice to read you after a long time...

ஜெகத்,
அருமையான பதிவு. மிகவும் உன்னிப்பாக அவதானித்து எழுதியிருக்கிறீர்கள்.

எடுத்துக்காட்டாக பழந் தமிழ்ச் சொல்லான "பறைதல்" எனும் சொல் இன்றும் ஈழத்தின் பல பகுதிகளிலும் கேரளாவிலும் புழங்கப்படுகிறது. ஆனால் பல தமிழகத்தவர் அச் சொல்லை மலையாளச் சொல் என சொல்லக் கேட்டுள்ளேன்.

எ.கா :- யான் மலையாளம் பறையும்.

இச் சொல்லை ஈழத்தில், "யாருக்கும் பறைஞ்சு [சொல்லாதை] போடாதை"

என்றும் "நீ சும்மா பறையாமல்[பேசாமல்/கதைக்காமல்] இரு"

என பலவிதமாகப் புழங்குவர். "பறை சாற்றுதல்" எனும் பழம் தமிழ்ச் சொல்லின் திரிபே இச் சொல்.

மட்டக்களப்புப் பகுதியிலும் கேரள மக்கள் குடியேறினர் என்பது வரலாறு. யாழ்ப்பாணத்தில் ஆதிக்க சாதி வெள்ளாளர் போல மட்டக்களப்பின் ஆதிக்க சாதி முக்குவர்.

தெலுங்குச் சொற்களும் யாழ்ப்பாணத்தின் வடமாராட்சிப் பகுதியில் இன்றும் புழங்கப்படுகிறது.
இப் பகுதியில் வந்து குடியேறிய தெலுங்கர்கள் பின் தமிழ்மக்களுக்குள் உள்வாங்கப்பட்டுவிட்டனர்.அவர்கள் பின்னர் "வடுகர்" எனும் சாதியாகக் கருதப்பட்டனர். அச் சாதியும் பின்னர் வெள்ளாளர்[வேளாளர்] சாதிக்குள் உள்வாங்கப்பட்டு விட்டனர். இந்த வடுகர்களால் சில கிருஸ்ணர் ஆலயங்கள் யாழ்ப்பாணத்தில் கட்டப்பட்டது.

ஜெகத், இதில் இன்னுமொரு சுவாரசியமான சங்கதி என்னவென்றால், தமிழகம், கேரளா, மற்றும் ஆந்திராவில் இருந்து வந்த மக்கள் குறிப்பிட்ட பகுதிகளில் செறிவாகக் குடியேறி, தமது தனித்துவத்துடன் வாழ்ந்து வந்தனர்.

குறிப்பாக இக் குழுவினர் மற்றக் குழவினருடன் திருமண உறவுகள் போன்றன வைத்துக் கொள்ளவில்லை.

இன்றும் யாழ்ப்பாணத்தில் உள்ள தீவுப் பகுதியினரோடு மற்றைய யாழ்ப்பாணப் பகுதியினர் திருமணங்கள் செய்து கொள்வது மிகவும் அரிது. "தீவார்" என அவர்கள் மற்றைய பகுதியினரால் அழைக்கப்படுவர்.

பிரிட்டிசாரின் ஆட்சியின் பின்னர், குறிப்பாக சிங்களவர்கள் தமிழ்மண்ணைப் பறிக்க எடுத்த நடவடிக்கைகள் பல பகுதியில் வாழ்ந்த தென்னிந்திய வழித்தோன்றல்களை தமிழர் எனும் அடையாளத்தில் இணைத்தது.

அடுத்த பகுதியை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.

வணக்கம்.

மனதை கவர்ந்துவிட்டதால் நாஞ்சில் நாடனின் 'நாஞ்சில்நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை' ஐ இரண்டாவது தடவையாக படித்துக் கொண்டுள்ளேன்.

உங்களுடைய இந்த பதிவு புத்தகத்தோடு சம்பந்தபட்டுள்ளது சுவராசியமாக உள்ளது. மேலும் எழுதுங்கள். தமிழ்நாட்டின் பலபகுதிகள் பற்றியும் இனிமேல்தான் தெரிந்து கொள்ள வேண்டும்.

நன்றி.

நல்ல பதிவு ஜெகத். தொடர்ந்து எழுதிக்கொண்டிருங்கள் அவ்வப்போதாவது:))

செறுக்காதே
வெப்ராளபடாதே
வெசனம்
நாதாந்துட்டுதோ

இந்த வார்த்தைகளையும் ஞாபகப்படுத்துகிறேன்.

இப்படிப்பட்ட பதிவுகள் அதிகமாக வரவேண்டியிருக்கின்றது. வட்டார மொழி பேசுபவர்களை இழிவாகவே பார்க்கும் வழக்கம் அனைவரிடமும் இருப்பது மிகவும் ஆபத்தான நிலைதான். தமிழ் விருப்பர்கள்கூட வட்டார மொழி பேசும் மக்களை சற்று இறக்கியே பார்க்கிறார்கள் என்பது இன்னும் வேதனையை அதிகரிக்கிறது.

வட்டார மொழிவழக்கு மொழி வளர்ச்சிக்கு பாதை வகுக்கும் என்பதை கருத்தில் கொள்ள வேண்டும்.

உயிரின பல்வகைமை பாதுகாப்பை அனைவரும் வலியுறுத்துவதைப்போல வட்டார மொழி பாதுகாப்பையும் வலியுறுத்த வேண்டும். அதற்கு வட்டார மொழியில் பேசுவது கேவலம் எனும் எண்ணத்தை தவிர்க்க வேண்டும். தமிழில் பேசுவதே கேவலம் எனும் நிலையில் வட்டார மொழியை பாதுகாக்க எடுக்கபடவேண்டிய செயல்பாடுகள் தீவிரப்படவேண்டும். குமரிமாவட்டத்தில் காஞ்சாம்புறம் எனும் ஊருக்கு அருகில் உள்ள ஆலங்கோடு எனும் ஊரில் பகத்சிங் நூல் நிலையம் ஒன்று உள்ளது. அதனுடைய ஆண்டுவிழா இந்த ஆண்டு நடைபெற்றபோது அங்கே வட்டார மொழிவழக்கு பேச்சு போட்டி நடைபெற்றது. இப்படிபட்ட சிறு முயற்சிகள் சற்று ஆறுதலாகவே இருக்கின்றன.

பதிவுகளை தொடர்ந்து எதிர்பார்க்கிறேன்.

நன்றிகளுடன்

இரா. அரிகரசுதன், நாகர்கோவில், குமரிமாவட்டம்

"தமிழகத்தின் நாகப்பட்டினம், இராமேஸ்வரம் பகுதிகளின் வட்டார வழக்குக்கும் குறிப்பிட்டுச் சொல்லத்தக்க ஒற்றுமைகள் ஏதும் இல்லாத நிலையில்" என்று எழுதியிருந்தீர்கள்; அப்படியெல்லாம் சட்டென்று சொல்லிவிட முடியாது. ஓரொரு வட்டாரத்திற்கும் ஓரொரு விதப்பு உண்டு. அதைக் கூர்ந்து அவதானிக்க வேண்டும். சிவகங்கை, இராமநாதபுரம், புதுக்கோட்டை மாவட்டத்து மக்களின் சொற்களுக்கும் ஈழத்துச் சொற்களுக்கும் பல ஒப்புமைகள் உண்டு. அவ்வப்போது எழுதியிருக்கிறேன். இப்பொழுது நீங்கள் குறித்த
மூன்று சொற்களுமே கூட அதே பொருளில் தான் இந்தப் பக்கங்களிலும் கையாளப் படுகின்றன. (நெல்லையும் இந்தச் சொற்களில் ஒன்றுபடும் என்றே எண்ணுகிறேன். நெல்லைக்காரர்கள் யாராவது உறுதி செய்தால் நல்லது.)

பரிசு கெடுதல் = சீரழிவு (பரிசு = சீர், பெருமை) தென்மாவட்டங்களில் பரிசம் போடுதல் என்று சொல்லப்படும் "ஆண் பெண்ணுக்கு முலைவிலை கொடுக்கும் வழக்கத்தை" இங்கு நினைவுக்குக் கொண்டுவாருங்கள். பரிசம் = சீர் என்பது தான். வடமொழி என்று பலரும் நினைத்துக் கொள்ளும் சீதனம் என்ற சொல் கூடத் தமிழ்மூலம் காட்டும் சீர்தனம் தான். (சீர்தனம் தலைகீழான வழக்கம். பெண்ணுக்குப் பெண்வீட்டார் கொடுக்கும் பணம்.)

கடகம் = பனையோலைப் பெட்டி; பனையிருக்கும் வறண்ட பகுதி (சிவகங்கை, புதுக்கோட்டை, இராமநாதபுரம் பகுதி)களில் கடகம் பின்னத் தெரியாத பெண்மகள், ஒரு 30 ஆண்டுகளுக்கு முன் இருக்க மாட்டாள். நெல்லையிலும் இந்தப் பழக்கம் உண்டு.

காவாலி = பொறுக்கி, ஒழுக்கமற்றவன் (அவன் கிடகான், காவாலிப்பயல் என்பது மிக எளிதாக வரும் பேச்சு. காவுதல் = தாங்குதல். காவுகின்ற அடி காவடி. ஒழுங்கு முறைகளைக் காவ மாட்டாதவன் காவாலி..)

தென் தமிழ்நாட்டின் பல வட்டாரங்களுக்கும், ஈழத்திற்கும் பல ஒற்றுமைகளைச் சொல்ல முடியும். ஆய்வுகள் துல்லியப்பட வேண்டும்.

அன்புடன்,
இராம.கி.

இடுகையைக் காண மகிழ்ச்சியாக இருக்கிறது.
தொடருங்கள்.

//யாரும் படிக்கிறார்களோ இல்லையோ எழுதுவது ஒருவித திருப்தியை தரத்தான் செய்கிறது என்பதை பல நாட்களுக்குப் பிறகு மீண்டும் உணர்ந்தேன். மீதியையும் விரைவிலேயே எழுதுகிறேன்.//
ஜெகத்,
உங்கள் பதிவை நிறைய பேர் படிக்கிறார்கள் என்றுதான் நான் நினைக்கிறேன். உங்கள் பதிவை நான் எனது கூக்ள் ரீடரில் போட்டு வைத்திருக்கிறேன். நான் உங்கள் புதிய இடுகைகளை தொடர்ந்து படித்துதான் வருகிறேன். நாள் கழித்து எழுதினாலும் எங்களை போன்றவர்கள் உங்கள் கட்டுரைகளை படிக்க காத்துக்கொண்டிருக்கிறோம்

ஜெகத்!

அடுக்க பகுதியைக் காணும் ஆவலோடு உள்ளேன். :)

ஜெகத்,

மற்றுமொரு நல்ல இடுகை (தொடர்)!

கடவம் அல்லது கடவப்பெட்டி, காவாலி போன்ற சொற்கள் திருநெல்வேலி மாவட்டத்திலும் வழக்கில் இருக்கின்றன. இவற்றையெல்லாம் மறந்து போய்க்கொண்டிருக்கும் எனக்கும் நினைவு படுத்தினர். இப்பொழுதெல்லாம் ஊருக்குப் போனாலும் கூட ஒரிரு நாட்களே செலவிட முடிவதால், ஊரிலுள்ள பலரிடம் உரையாட வாய்ப்பதில்லை.

//இலங்கைத் தமிழர்களின் வரலாறு மற்றும் வாழ்வியல் குறித்த பல்வேறு தகவல்களை ஆராய்ந்தால் இந்த தொடர்புக்கான காரணங்களைக் குறித்து ஓரளவுக்கு அறிய முடிகிறது. அவற்றை அடுத்தப் பகுதியில் எழுதுகிறேன்.//

ஆறிப்போகும் முன் விரைவில் எழுதுங்கள். படிக்க ஆவல்.

//
குமரிமாவட்டத்தில் காஞ்சாம்புறம் எனும் ஊருக்கு அருகில் உள்ள ஆலங்கோடு எனும் ஊரில் பகத்சிங் நூல் நிலையம் ஒன்று உள்ளது.

இரா. அரிகரசுதன், நாகர்கோவில், குமரிமாவட்டம்//

சுதன்,

இதைப் பற்றியெல்லாம் கொஞ்சம் எழுதலாமே!

பத்து நாட்களுக்கு முன் நாகர்கோயில் வந்த பொழுது உதயக்குமாருடன் உங்களையும் சந்திக்க முடியும் என நினைத்தேன். நீங்களும் வேறு வேலையால் வரமுடியவில்லை போலும் என்றார். தொலை பேச வேண்டும் என்றெண்ணி மறந்து விட்டேன். மின்னஞ்சல் அனுப்புகிறேன்.

நன்றி - சொ. சங்கரபாண்டி

பிரபு, வாசன், செல்வநாயகி, வசந்தன், உமையணன், மலைநாடான்: வரவிற்கும், ஊக்கமளிக்கும் வார்த்தைகளுக்கும் நன்றி.

வெற்றி: விரிவானக் கருத்துக்கு நன்றி. உங்கள் பின்னூட்டத்திலிருந்து சில புதிய தகவல்களை அறிந்துக்கொண்டேன்.

அரிகரசுதன்: பின்னூட்டத்திற்கு நன்றி. சங்கரப்பாண்டி சொன்னது போல நீங்கள் எழுதலாமே? குமரி மாவட்டத்தின் கிழக்குப் பகுதியின் (அகஸ்தீஸ்வரம், தோவாளை தாலூக்கா) மொழி, பண்பாடு குறித்து ஓரளவுக்காவது தமிழில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது (எ.கா: மேலே வாசன் குறிப்பிட்ட நாஞ்சில் நாடனின் நூல்). ஆனால் மேற்குப் பகுதியை (விளவங்கோடு, கல்குளம் தாலூக்கா) குறித்து தமிழில் வாசிப்பதே அபூர்வம். அதனால் தான் ஜெயமோகன் காப்பியங்கள் இயற்றுவதை மூட்டைக் கட்டிவிட்டு காடு, ரப்பர் மாதிரி நாவல்களை எப்போது எழுதுவார் என்று காத்திருக்கவேண்டியிருக்கிறது. ஜெயமோகனுக்கு இணையாகப் இப்பகுதியின் வட்டார வழக்கைக் கையாண்ட மற்றொருத் தமிழ் எழுத்தாளரை அண்மையில் படித்தேன். அவரது பெயர் குமாரசெல்வா.

சங்கரபாண்டி: வருகைக்கும், கருத்துக்கும் நன்றி. நான் சிறுவயதிலிருந்தே வெளியூர்களில் வாழ்வதால் எனக்கும் வட்டாரச் சொற்களெல்லாம் மெல்ல மறந்துப் போய்க்கொண்டுதான் இருக்கின்றன. ஆனால் அவற்றை எங்காவது எழுத்தில் எதிர்கொள்ளும் போது கிடைக்கும் சுகமே தனி தான். யோசித்துப் பார்த்தால் nostalgia தான் என் பெரும்பாலான ரசனைகளைத் தீர்மானிக்கிறது என்றே தோன்றுகிறது.

இராம.கி அய்யா: பல தகவல்கள் அடங்கிய பின்னூட்டத்திற்கு நன்றி. நாகப்பட்டினம், இராமேஸ்வரம் பகுதிகளின் வட்டார வழக்கைக் குறித்து அதிகம் தெரியாத நிலையில் நான் அப்படித் திட்டவட்டமாக எழுதியது தவறுதான். குமரி மாவட்டத்தில் மட்டுமே வழங்கும் சொற்கள் என்று நான் நினைத்திருந்த சொற்கள் பலவும் மற்றத் தென்மாவட்டங்களில் உண்டு என்பதைக் கி.ரா-வின் எழுத்துக்கள் மூலமாக அறிந்துக் கொண்டிருக்கிறேன். நான் இங்கே வலைப்பதிவுகளிலிருந்து எடுத்து இட்ட சொற்கள் தென்மாவட்டங்களில் வழக்கில் இருந்தாலும் தமிழகத்தின் வேறு எந்தப் பகுதியிலும் பேசப்படாத ஈழத்துச் சொற்களும் (குறிப்பாக மலையாளம் என்றுக் கருதப்படும் பழந்தமிழ் சொற்கள்) குமரி மாவட்டத்தில் நிறைய இருக்கும் என்றே நம்புகிறேன்.

மேலும் இராமநாதபுரம், நெல்லை வழக்குகளைப் போலல்லாது மலையாளத்தைப் போன்ற உச்சரிப்பைக் கொண்ட குமரி மாவட்டப் பேச்சுவழக்கை தமிழகத்தைச் சேர்ந்த மற்றவர்கள் புரிந்துக்கொள்ள சிரமப்படுவார்கள் என்பதைப் பலமுறை நேரடியாகக் கண்டிருக்கிறேன். ஜெயமோகனின் மாடன் மோட்சம் கதையில் மாடனுக்கும் பூசாரி அப்பிக்கும் இடையே நடக்கும் உரையாடலை மதியின் பதிவிலிருந்து எடுத்து இங்கே இடுகிறேன். வாசிக்கும்போது பெரும்பாலானவர்களுக்குப் புரிந்துவிடும். ஆனால் பேசப்படும் போது வேற்றுமொழியைக் கேட்பதுபோல் இருக்கும்.

****

'செரி, ஒனக்க இஷ்டம் ' என்றபடி மாடன் அமர்ந்தது. 'யெக்கப்போ . . . நடுவு நோவுதுடோய் அப்பி . . . இருந்து கொற காலமாச்சுல்லா. '

'செல்லும் வேய்; என்னவாக்கும் காரியங்க? ' என்றான் அப்பி.

'என்னாண்ணு சென்னா, இப்பம் வரியம் மூணு ஆவுது கொடயாட்டு வல்லதும் கிட்டி. '

அப்பி திடுக்கிட்டு, 'அடப்பாவி . . . உள்ளதுதேன், நானும் மறந்துல்லா போனேன் ' என்றான்.

'பூசெ வல்லதும் நடத்துத எண்ணம் உண்டுமா? '

'என்னை என்னெளவுக்குக் கேக்குதீரு? நான் அங்க வந்து மோங்குயதுக்கு பகரம் நீரு இஞ்ச வந்து கண்ணீரு விடுதீராக்கும்? இஞ்ச இன்னத்த கோப்பு இருக்க, கொடை நடத்துயதுக்கு? '

'ஒனக்க கிட்ட ஆரு பிலேய் கேட்டது? நமம பிரஜைகளுக்குச் செல்லிப்போடு. '

'என்னது பிரஜைகளா? ஆருக்கு, ஒமக்கா? எளவுக்க கததேன் . . . '

'ஏம்பிலேய்? ' என்றது மாடன் அதிர்ச்சியடைந்து.

'அடக் கூறுகெட்ட மாடா ' என்று பூசாரி சிரித்தான். புகையிலையை அதக்கியபடி. 'அப்பம் ஒமக்கு காரியங்களுக்க கெடப்பொண்ணும் அறிஞ்சூடாமெண்ணு செல்லும்.'

ஜெகத்,

//ஜெயமோகனுக்கு இணையாகப் இப்பகுதியின் வட்டார வழக்கைக் கையாண்ட மற்றொருத் தமிழ் எழுத்தாளரை அண்மையில் படித்தேன். அவரது பெயர் குமாரசெல்வா.//

குமாரசெல்வாவைப்பற்றியும் அவரது புத்தகங்கள் பற்றியும் கொஞ்சம் எழுதுங்களேன்.

கவிஞர் என்.டி.ராஜ்குமாரின் கவிதைகளில் வரும் சில வார்த்தைகளை மலையாளம் என்று நினைத்திருந்தேன். தவறென்று புரிகிறது.

-மதி

மதி,

காலச்சுவடு வெளியிட்ட ஒரு சிறுகதைத் தொகுப்பில் குமாரசெல்வாவின் ஒரு சிறுகதையைப் படித்ததைத் தவிர அவரைக் குறித்து எனக்கு அதிகம் தெரியாது. அந்தக் கதையை இந்தியா டுடே இலக்கிய மலரில் வெளியிடுவதற்காக அதிலுள்ள சில "கெட்ட வார்த்தை"களை நீக்கிவிட்டுத் தருமாறுக் கேட்டபோது அவர் மறுத்து விட்டார் என்றக் குறிப்பு தொகுப்புரையில் இருந்தது. சுகுணா திவாகர் ஒரு பதிவில் அவரை "தமிழ்நாட்டின் முக்கியமான எழுத்தாளர்களில் ஒருவர்" என்றுக் குறிப்பிடுகிறார். மற்றோர் பதிவில் குமாரசெல்வா 'நிறப்பிரிகை'ப் பள்ளியில் உருவானவர் என்றும் இப்போது எழுதுவதை நிறுத்திவிட்டார் என்றும் சொல்கிறார்.

மலையாளம் என்றுக் கருதப்படும் பெரும்பாலான சொற்கள் தமிழே. மேலே அரிகரசுதன் குறிப்பிட்ட 'செறுக்காதே' என்ற சொல்லையே ஒரு உதாரணமாக எடுத்துக்கொள்ளலாம். எங்கள் ஊர் வழக்கில் 'செறுத்து' என்றால் 'வழிமறித்து' அல்லது 'எதிர்த்து நின்று' என்று பொருள். இந்த சொல் இதேப் பொருளில் ஏராளமானப் பழந்தமிழ் பாடல்களில் இடம்பெற்றிருக்கிறது என்பதை ஒரு கூகிள் தேடலில் தெரிந்துக்கொள்ளலாம்.

//எண்ணிக்கையில் அதிகமாக இருக்கும் முக்குவர்கள் கன்னியாகுமரிக்கு மேற்கே கேரளத்தை நோக்கிச் செல்லும் கடற்கரையிலுள்ள அனைத்து ஊர்களிலும் பல உள்நாட்டுக் கிராமங்களிலும் வாழ்கிறார்கள். //

கன்னியாகுமரிக்கு மேற்கே நீரோடி வரையுள்ள சுமார் 45 ஊர்களில் 6 ஊர்களில் பரவர்களும் ,ஒரு ஊரில் (முட்டம்) முக்குவர் ,பரவர் இருவரும் ,மற்ற அனைத்து ஊர்களிலும் முக்குவரும் வாழ்கின்றனர்.

மீண்டும் உங்கள் எழுத்தைக் காண மகிழ்ச்சி. இராம. கி சொன்னது போல் கடகம், காவாலி போன்ற சொற்கள் புதுகையில் இன்றும் வழக்கில் உண்டு.

ஒரு தெள்ளியப்பார்வை உங்கள் ஆக்கதில் தென்படுகின்றது.

நன்றி

தமிழில் இருந்து தானே மலையாளம்,தெலுங்கு ஆகிய மொழிகள் பிறந்தது. எப்படியப்பா தமிழ் சொற்களை
மலையாளம்,தெலுங்கு என்கிறீர்கள்?. பறையிற என்கிற சொல் ஈழத்திலே பொதுவாக தேவைகள் இல்லாமல் அரட்டை அடித்து கதைப்பதற்கு பாவிக்கப் படுகின்றது என்பது தான் பொருத்தமானது. நிலத்திலே தேங்கி நிற்பதையே “வெள்ளம்” என்கிறோம்.இதையே மலையாளத்தில் நீர் என்பதற்கு பாவிக்கிறார்கள்.

Friend , we miss u , pl com e back

hi there!
if you go and read out this ebook you'll get more information http://www.forgottenbooks.com/readbook/The_Mukkuva_Law_1000326926#13

if you go and read this ebook you may get more informationhttp://www.forgottenbooks.com/readbook/The_Mukkuva_Law_1000326926#13

யாழ்ப்பாணத்தின் தீவுப் பகுதிகளில் முக்குவரும் (முக்கியர்) வாழ்கின்றனர். கடகம், காவாலி, வடுகச் சாதி, பரிசு கேடு, என்ர மோள், என்ர மோன், என்ன பறையினம், சும்மாடு - தண்ணீர்க் குடத்தை தலையில் வைத்து சுமப்பதற்கு பயன்படுவது,

முக்குவர் யாழ்ப்பாண தீவுப் பகுதிகளிலும் கணிசமான அளவில் வாழ்கின்றனர். ஏலவே(ஏற்கனவே மேலே) குறிப்பிட்ட சொற்கள் தீவுப் பகுதியில் புழக்கத்தில்(பாவனையில்) உள்ளவையே. மேலும் சும்மாடு - தண்ணீர்க் குடத்தை தலையில் வைத்து சுமப்பதற்கு உதவும் பொருள், வடுகச் சாதியென ஓர் பிரிவினர் வேளாளரில் உள்ளனர். இதை விட வேளாளரில் சாண்டாரும் அடங்குகின்றரே? சாண்டார் என்போர் யார்? தயவு செய்து விளக்கம் தருக

நான் குமரி கரையோரத்துக் காரன். என் ஊர் அருகே வாழும் முக்குவ ம்ககளுக்கும் கிழக்கிலங்கையில் முக்குகற் என்றழைக்கப்படும் மக்களும் ஒரே சாதியினர். பேச்சு வழக்கில் ஏராளாமான தொடர்புகள் உண்டு. உதாரணத்திற்கு பெட்ட’ ஓமு.. என்று பலதும் உண்டு. அது போல இங்குள்ள பரதவர்களுக்கும். இலங்கை பரதவர்களும் ஒன்றே/.
டி.அருள் எழிலன்.