எல்லாம் நிறைவேறிற்று

கடந்த ஒரு வாரமாக எழுதியதைப் பார்க்கும்போது வழக்கமாக நான் என் பதிவுகளுக்கு அளிக்கும் கவனத்தை சில பதிவுகளுக்கு அளிக்க முடியவில்லை என்று தோன்றுகிறது. தமிழ்மணம் என்னை நட்சத்திரமாக இருக்குமாறு ஒரு மாதத்திற்கு முன்பே கேட்டுக்கொண்டபோதும் எல்லாவற்றையும் கடைசி நேரத்துக்குத் ஒத்திப் போடும் குணத்தின் காரணமாக நட்சத்திர வாரத்துக்கான ஆக்கங்களில் இரு இடுகைகளை மட்டுமே முன்பே எழுதி வைத்திருந்தேன். மற்றவற்றை ஒவ்வொரு நாளும் சிறிது நேரம் செலவிட்டு எழுதிவிடலாம் என்று நினைத்தேன். ஆனால் பணிச்சுமை திடீரென்று அதிகரித்துவிட்டதாலும், நெருங்கிய உறவினர் ஒருவரின் வருகையாலும் நினைத்த அளவுக்கு எழுதமுடியாமல் போய்விட்டது. குறிப்பாக ஈழம், கேரளம் மற்றும் குமரி மாவட்டம் ஆகியவற்றுக்கு இடையே மொழி, கலாச்சாரம் மற்றும் சமூக அடிப்படையில் இருக்கும் எண்ணற்ற ஒற்றுமைகளைக் குறித்து ஒரு கட்டுரை எழுத நினைத்திருந்தேன். எழுதமுடியாமல் போனதும் ஒருவகையில் நல்லது தான். இப்போது எழுதியிருந்தால் நேரமின்மைக் காரணமாக மேலோட்டமாக எழுதியிருக்கக் கூடும். பிறகு விரிவாக எழுதுகிறேன்.

சென்ற ஆண்டு மனைவியும் குழந்தையும் சில வாரங்கள் ஊருக்குப் போயிருந்தபோது என் நாட்கள் நீளமாகிவிட்டதைப் போல உணர்ந்தேன். கிடைத்த நேரம் அனைத்தையும் புத்தகங்கள் (பெரும்பாலும் நாவல்கள்) வாசிப்பதிலேயே செலவிட்டேன். அவற்றை வாசிக்கும் போது எழுந்த எண்ணங்களை யாருடனாவது பகிர்ந்துகொள்ள வேண்டும் என்ற நோக்கமே என்னைப் பதிவு எழுதத் தூண்டியது. தமிழ்மணத்தில் கணக்குக் காட்டுவதற்காக சில இலகுவான இடுகைகளை இட்டுவிட்டு, ஜெயமோகனது எழுத்தைப் பற்றிய ஒரு நீண்ட கட்டுரையை இரண்டு பாகங்களாக எழுதினேன். இவை சொல்லிக் கொள்ளும்படியான வரவேற்பைப் பெறும் என்று நான் அப்போது எதிர்பார்க்கவில்லை.

அண்மையில் பாஸ்டன் பாலா ஒரு பதிவில் என்னைப் பற்றிக் குறிப்பிட்டது போல நான் என் பதிவின் வாசகர் எண்ணிக்கையைப் பெருக்குவதற்காக சந்தைப்படுத்தல் எதையும் செய்வதில்லை. ஆரம்பத்தில் பதிவு எழுதுவதை ஒரு நாட்குறிப்பு எழுதுவதைப் போல தான் பார்த்தேன். தமிழ்மணத்தின் மறுமொழி நிலவர சேவையைக் கூட சுமார் நான்கு மாதங்களுக்குப் பயன்படுத்திக் கொள்ளவில்லை. அதனால் இடுகையை தமிழ்மணத்தில் சேர்த்த சில நிமிடங்களிலேயே அது காணாமல் போய்விடும். தமிழ்மணம் மூலமாக இருபத்தைந்து முப்பது பேர் தான் வந்துப் படிக்கிறார்கள் என்று Sitemeter சொன்னது. அந்நாட்களில் என் பெரும்பாலான இடுகைகள் கில்லி தளத்தில் பரிந்துரைக்கப்பட்டதால் அங்கிருந்தும் ஒரு பத்து இருபது பேர் வருவார்கள். ஆனால் இப்படி வந்தவர்களில் பலர் நான் எழுதியிருந்ததைப் படித்துவிட்டு மிகவும் பாராட்டினார்கள். இவர்களில் பெரும்பாலானவர்கள் வலையுலகில் முக்கியமானவர்களாகவும், எழுத்துத்திறனுக்காக அறியப்படுபவர்களாகவும் இருந்தார்கள்.

எழுதத் தொடங்கிய சில நாட்களிலேயே மதி கந்தசாமி தன் பதிவில் என் கட்டுரைகளை வெகுவாகப் பாராட்டியிருந்ததைப் பார்த்தபோது ஆச்சரியமாகவும் உற்சாகமாகவும் இருந்தது. சென்ற ஆண்டின் இறுதியில் 2006-ன் சிறந்தப் பதிவுகள் என்று அவர் இட்டிருந்தப் பட்டியலிலும் என் பதிவைக் குறிப்பிட்டிருந்தார். பழைய பதிவர், புதிய பதிவர் என்ற பாகுபாடெல்லாம் இல்லாமல் தினமும் மிகவும் அதிகமான இடுகைகளைப் படிப்பவர் யார் என்று ஒரு போட்டி வைத்தால் மதிக்கு கடுமையான போட்டியை அளிக்கக்கூடியவர் பாஸ்டன் பாலா தான் என்று நினைக்கிறேன். அவரும் 2006-ன் சிறந்தப் பதிவுகளில் ஒன்றாக என் பதிவைப் பட்டியலிட்டிருந்தார். இண்டிபிளாகீஸ் நடத்திய தேர்தலிலும் கடந்த ஆண்டின் சிறந்த தமிழ்ப் பதிவுகளில் ஒன்றாக என் பதிவு பரிந்துரைக்கப்பட்டிருந்ததைக் கண்டேன்.

இதெல்லாம் பதிவு எழுதுவதைக் குறித்து நான் கொண்டிருந்த மெத்தனமான போக்கை கொஞ்சம் மாற்றியது. இத்தனை பேர் - அதுவும் தமிழ் இணையத்தில் பழம் தின்று கொட்டை போட்டவர்கள் - நம் எழுத்தைப் பற்றி நல்ல எண்ணம் கொண்டிருக்கையில் தொடர்ந்து எழுதுவது தான் முறை என்று தோன்றியது. இந்த ஆண்டின் தொடக்கத்திலிருந்து அதிக இடைவெளி விடாமல் அவ்வப்போது எழுத முயற்சித்து வருகிறேன். எனக்கு ஆர்வமுள்ள விஷயங்களை - மொழிகள், வரலாறு, சமூகவியல், புத்தக வாசிப்பு - குறித்து இனிவரும் நாட்களில் நிறைய எழுத நினைத்திருக்கிறேன். ஆனாலும் பணியிட அழுத்தங்களும் குடும்பப் பொறுப்புகளும் எந்த அளவுக்கு அனுமதிக்கும் என்று தெரியவில்லை.

இந்த நட்சத்திர வாரத்தின் போதும் அதற்கு முன்பும் என் இடுகைகளைப் பொறுமையாகப் படித்துக் கருத்து தெரிவித்தவர்கள், உற்சாகப்படுத்தியவர்கள், மற்றவர்களுக்குப் பரிந்துரை செய்தவர்கள் அனைவருக்கும் என் நன்றிகள்.

6 மறுமொழிகள்:

ஜெகத்,

/* குறிப்பாக ஈழம், கேரளம் மற்றும் குமரி மாவட்டம் ஆகியவற்றுக்கு இடையே மொழி, கலாச்சாரம் மற்றும் சமூக அடிப்படையில் இருக்கும் எண்ணற்ற ஒற்றுமைகளைக் குறித்து ஒரு கட்டுரை எழுத நினைத்திருந்தேன். எழுதமுடியாமல் போனதும் ஒருவகையில் நல்லது தான். இப்போது எழுதியிருந்தால் நேரமின்மைக் காரணமாக மேலோட்டமாக எழுதியிருக்கக் கூடும். பிறகு விரிவாக எழுதுகிறேன். */

கட்டாயம் இந்த கட்டுரையை எழுதுங்கள். மிகவும் சுவாரசியமானதாக
இருக்கும். மிகவும் ஆவலுடன் காத்திருக்கிறேன்.

ஜெகத்!

மிக அருமையான வாரமாக இருந்தது. ஆரவாரமில்லாததும், ஆதாரபூர்வமானதும், ஆய்வுரீதியானதுமான, உங்கள் எழுத்துக்களுக்கு என்றும் நிலையான ஒரு இடம், இணையப்பரப்பில் இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

பணிதொடர வாழ்த்துக்கள். நன்றி

ஸ்டார் வீக் போனா என்ன தல... தொடர்ந்து நினைத்தவற்றை எழுதுங்கள். நான் மகா சோம்பேறி என்பதால் பின்னூடமெல்லாம் போட மாட்டேன். ஆனா வந்து எட்டி பார்த்துட்டுத்தான் போறேன்.

உங்க இனியன் மொழிமாற்று கருவியால் சில வேறுமொழி படைப்புக்களை படித்து வருகிறேன். அதற்கு இங்கேயும் ஒரு நன்றி சொல்லிக்கிறேன்.

:)

ஜெகத்,

என்னைப் பொறுத்தவரைக்கும் இந்த வாரம் கடுமையான ஏமாற்றம் :-) இன்னும் நிறைய தங்க முட்டை இடுவீர்கள் என்று எதிர்பார்த்தேன். அதனாலென்ன வாத்தையா அறுக்க முடியும்?

திரையேற்றம், திரைஅரசியல் போன்றவற்றை வலைப்பதிவு பக்கமே வராதவர்கள்க்கு/நண்பர்களுக்கு அச்செடுத்துக் கொடுத்தேன்.

உங்க நிதானமான நடை ரொம்பப் புடிச்சுருக்கு. மலையாளப் படங்கள்ல வர்ற மாதிரி இயல்பான நகைச்சுவையும் வாசிக்கத் தூண்டுது.

மனமார்ந்த வாழ்த்துக்கள்!!! நிறைய எழுதுங்கள். நாங்கல்லாம் கொலவெறியோட படிக்கிறவங்க :-)

வெற்றி, மலைநாடான், பாலபாரதி, முபாரக்,

நான் எழுதுவது உங்களுக்கு பிடித்திருப்பது குறித்து மகிழ்ச்சி. உங்கள் ஆதரவுக்கு நன்றி.

"எல்லாவற்றையும் கடைசி நேரத்துக்குத் ஒத்திப் போடும் குணத்தின் காரணமாக"

procastination குணமில்லையாம். மாறாக நோயாம். நானும் ஒரு வியாதியஸ்தன் என்ற உரிமையில் :-))