கிறுக்கு, கிறுக்கலாக

ஒவ்வொருவரும் தங்களை விந்தையான சிந்தைக் கொண்டவர்களாகவும் மந்தையிலிருந்து வேறுபட்டவர்களாகவும் காட்டிக்கொள்ள முயலும் இந்த விளையாட்டில் கலந்துக்கொள்ள மதி அழைத்திருந்தார். என்னிடம் கிறுக்குத்தனங்களுக்குப் பஞ்சமில்லாததால் நிறைய எழுதலாம் தான். ஆனால் படிப்பதற்கு ஆள் வேண்டாமா? எனவே சுருக்கமாக:

புதிதாகப் போய் சேர்ந்த ஊர் ஒன்றில் அம்மை நோய் வந்து இரண்டு வாரங்கள் யாரையும் சந்திக்காமல் ஒற்றை வார்த்தைக் கூட பேசாமல் வீட்டுக்குள் தனியே வேக உணவுகளையும் வேகாத உணவுகளையும் உண்டு இருக்க நேர்ந்தால் உங்கள் மனநிலை எப்படி இருக்கும்? நான் ஒரு அதி உன்னதமான மனநிலையில் இருந்தேன். (இது விந்தையல்ல விசர் என்ற அசரீரி குரல் கேட்கிறது.) எவ்விதக் குறுக்கீடுகளோ கடமைகளோ இன்றி முற்றிலும் தான்தோன்றித்தனமாக புத்தகம் வாசிப்பதும், தொலைக்காட்சியில் படங்கள் பார்ப்பதுமாகப் பொழுதைப் போக்கிக்கொண்டிருந்தேன். நான் ஒரு தனிமைவிரும்பி என்றுச் சொன்னால் அதைப்போல் ஒரு understatement (தாழ்வுநவிற்சி?) இருக்கமுடியாது. கபிரியல் கார்சியா மார்க்வெஸைப் பற்றி எதுவும் தெரியாதக் காலத்திலேயே "One Hundred Years of Solitude" -ஐ அந்தத் தலைப்புக்காகவே எடுத்துவந்துப் படித்திருக்கிறேன் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.

தனிமையை விரும்புபவர்கள் அமைதியை விரும்பாமல் இருக்கமாட்டார்கள். கூட்டமும் இரைச்சலும் உள்ள இடங்களுக்குப் போவது எனக்கு சிறுவயது முதலே பிடிக்காது. இது இயல்பானது தான் என்றும் எல்லாரும் இப்படித் தான் இருப்பார்கள் என்றும் அப்போது நினைத்திருக்கிறேன். ஆனால் "இல்லை, இல்லை, இல்லவே இல்லை" என்றுச் சொல்லும் நிறைய மனிதர்கள் பின்னாளில் அறிமுகமானார்கள். சிறிது நேரம் கூட சலசலப்பு இல்லாமல் இருக்கமுடியாதப் பனங்காட்டு நரிகள் இவர்கள். தொலைபேசியோ இணைய இணைப்போ இல்லாத தனியறையில் அரை மணி நேரம் அடைக்கப்பட்டால் மூச்சுத்திணறக்கூடியவர்கள். நான் இதற்கு நேர் எதிர். பள்ளி நாட்களில் யாராவது ஆசிரியர் வரவில்லையென்றால் அந்த முக்கால் மணி நேரமும் முழு அமைதி காக்கவேண்டும் என்பது விதி. பேசுகிற மாணவர்களின் பெயர்களை ரகசியமாக குறித்துவைக்கும் ஐந்தாம் படை வேலையைச் செய்வதற்கு சில மாணவர்கள் பணிக்கப்பட்டிருப்பார்கள் என்பதும் அப்படி பேசுபவர்களுக்கு பிறகு பிரம்படி முதலானத் தண்டனைகள் கிடைக்கும் என்பதும் அனைவருக்கும் தெரியும். இருந்தாலும் வகுப்பில் பெரும்பாலான மாணவர்களுக்கு முக்கால் மணி நேரம் பேசாமல் அமைதியாக இருப்பது சற்றும் முடியாதக் காரியம். ஒவ்வொரு முறையும் பேசி அடிபடுவார்கள். எனக்கோ இந்த அமைதி நேரங்கள் மிகவும் விருப்பத்திற்குரியவை. ஏதாவதுப் பகற்கனவிலோ வேறு ஏதாவது எண்ணங்களிலோ எனக்குள்ளே தொலைந்துவிடுவேன். அதேப்போல் எனக்கு ஆர்வமில்லாத அறுவைப் பாடங்கள் நடத்தப்படும் போதும் மனம் வகுப்பறையை விட்டு எங்கோ பறந்துவிடும்.

சிலகாலம் முன்பு வரை சொல்வதற்கு உருப்படியாக ஏதும் இல்லாத நேரங்களில் மௌனமாக இருக்கும் வழக்கத்தைக் கொண்டிருந்தேன். (எப்போதுமே இப்படித்தான் என்றில்லை. ஒரே அலைவரிசையில் இருக்கும் நண்பர்களுடன் உரையாடுகையில் - குறிப்பாக கார்ல்ஸ்பெர்க்கோ அவன் சிற்றப்பன் ஹைனக்கென்னோ உடனிருந்தால் - மடை திறந்து பாயும் நதியலையாக மாறிவிடுவதுண்டு.) பன்னிரண்டு வயதிலிருந்தே படிப்புக்காகவும் பின்னர் வேலைக்காகவும் குடும்பத்தையும் சுற்றத்தையும் பிரிந்து வெளியூர்களில் ஒரு சிறு நண்பர் வட்டத்துக்கு வெளியே எவ்வித சமூக வாழ்வும் இல்லாமல் இருந்ததாலோ என்னவோ வெறுமனே சம்பிரதாயத்துக்காக நடத்தப்படும் உரையாடல்களில் (குசலம் விசாரிப்புகள், ஏதாவதுப் பேசவேண்டுமே என்பதற்காக பேசப்படும் வாக்கியங்கள்) அறவேப் பயிற்சியில்லாமல் இருந்தேன். "போன வருஷத்த விட இந்த வருஷம் வெயில் ஜாஸ்தி" போன்ற உப்புசப்பில்லாதப் பேச்சுகளை சகித்துக்கொள்ளவும், அதிகப்பட்சமாக ஒற்றை வார்த்தைகளில் பதில் சொல்லவும் முடிந்ததே தவிர அத்தகைய உரையாடல்களில் பங்கெடுக்க முடிந்ததில்லை. ஆனால் கடந்த மூன்று வருடங்களாக - திருமணத்திற்குப் பிறகு - இப்படி "பேச்சிலர்" ஆக இருப்பவர்களை மற்றவர்கள் எப்படிப் பார்க்கிறார்கள் என்பதைக் கொஞ்சம் புரிந்துக்கொண்டிருப்பதால் என்னை மாற்றிக்கொள்ள முயற்சித்து வருகிறேன். இப்போது சில நேரங்களில் வெயில், மழை பற்றியெல்லாம் நான் "ஆர்வத்துடன்" பேசுவது எனக்கே வியப்பாகவும் வேடிக்கையாகவும் இருக்கும்.

எவ்வளவு தான் என்னை மாற்றிக்கொள்ள முயன்றாலும், என்னால் இயல்பாக ஈடுபட முடியாத, நினைத்தாலே பயமும் மன அழுத்தமும் ஏற்படுத்துகிற ஒரு சம்பிரதாய உரையாடல் இருக்கிறது. ஆனால் வெளிநாட்டில் வசிப்பதால் அடிக்கடி அந்த ஆக்கினைக்கு ஆளாகவேண்டி இருக்கிறது. குடும்ப உறுப்பினர் யாரையாவது இழந்த உறவினரையோ நண்பரையோ தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசுவதைத் தான் சொல்கிறேன். ஊரில் இருந்தால் நேரில் சென்று எதுவும் பேசாவிட்டாலும் உங்கள் துக்கத்தில் நான் உடனிருக்கிறேன் என்பதை உணர்த்த முடியும். ஆனால் தொலைபேசியில்? கடுமையானத் துயரில் இருப்பவரிடம் என்ன "பேச" முடியும்? அந்த நேரத்தில் எதைப் பேசினாலும் எனக்கு அபத்தமாகத் தான் தெரியும். எப்படி இறந்தார், எப்போது இறந்தார் என்பதையெல்லாம் தெரிந்துவைத்துக்கொண்டே ஏதாவது கேட்கவேண்டுமே என்பதற்காக கேட்பதில் உள்ள போலித்தனம் உறுத்தும். ஆனாலும் இத்தகைய தொலைபேசி அழைப்புகள் எதிர்பார்க்கப்படுகின்றன. ஊரில் யாராவது இறந்துவிட்டதாக தகவல் அறிந்தால் அந்த இழப்பு தரும் கவலையுடன் உபரியாக இந்த தொலைபேசி அழைப்பை எப்படி சமாளிக்கப் போகிறேன் என்றக் கவலையும் தொற்றிக்கொள்ளும்.

பழைய கதைகள், படங்கள், பாடல்கள் ஆகியவற்றின் மீது எனக்கு இருக்கும் அதீதமான ஈர்ப்புக்கு தர்க்கபூர்வமான விளக்கம் எதுவும் என்னிடம் இல்லை. திரைப்படப் பாடல்களில் எண்பதுகளிலும் அதற்கு முன்பும் வெளிவந்தப் பாடல்களை மிகவும் விரும்பிக் கேட்பேன். புதிய பாடல்களை (கடந்த பத்து ஆண்டுகளில் வெளிவந்த எல்லா பாடல்களும் எனக்கு "புதிய" பாடல்கள் தான்) கிட்டத்தட்ட கேட்பதே இல்லை. சமகால ஆங்கில நாவல்களைப் பொறுத்தவரை ஞானசூன்யமான நான் விரும்பிப் படித்த/படிக்கும் பெரும்பாலான ஆங்கில நாவல்கள் திருமதி விக்டோரியாவின் காலத்தில் எழுதப்பட்டவை. கார்களும், கணினிகளும், தொலைபேசிகளும் மற்ற நவீன அடையாளங்களும் இல்லாத அந்த உலகம் எனக்கு ஏனோ பிடித்திருக்கிறது. குறிப்பாக பத்தொன்பதாம் நூற்றாண்டு இங்கிலாந்தின் அமைதியான கிராமம் ஒன்றில் சில நாட்கள் வாழ்ந்துவிட்டு வந்த உணர்வைத் தரும் தாமஸ் ஹார்டியின் நாவல்கள் எனக்கு மிகவும் விருப்பமானவை.

சந்திரமுகி சரவணனைப் போல் இல்லாத ஒரு நல்ல உளவியல் மருத்துவரிடம் நேரம் வாங்கிவிட்டுப் பொறுமையாகச் சொல்லியிருக்கவேண்டியதை எல்லாம் இங்கே எழுதிவிட்டேனோ என்றுத் தோன்றுகிறது. பரவாயில்லை. "சர்வம் கிறுக்கு மயம்" என்ற நிலையிலிருந்து தமிழ்மணம் மெல்ல மீண்டுக்கொண்டிருக்கும் இந்த நேரத்தில் இன்னுமொரு ஐந்து பேரை இந்த விளையாட்டுக்கு இழுக்கவேண்டாம் என்று நினைக்கிறேன்.

4 மறுமொழிகள்:

அடுத்து 5 பேரை இழுக்காதது கூட வியர்டாக தோன்றுகிறது.:-))

கலக்கல் பதிவு

Jegath, attagaasam! If I were to put together a book that touches on this topic, would you agree to having this in it? Email me at bala @ apic.net

//அந்த நேரத்தில் எதைப் பேசினாலும் எனக்கு அபத்தமாகத் தான் தெரியும். எப்படி இறந்தார், எப்போது இறந்தார் என்பதையெல்லாம் தெரிந்துவைத்துக்கொண்டே ஏதாவது கேட்கவேண்டுமே என்பதற்காக கேட்பதில் உள்ள போலித்தனம் உறுத்தும். ஆனாலும் இத்தகைய தொலைபேசி அழைப்புகள் எதிர்பார்க்கப்படுகின்றன. ஊரில் யாராவது இறந்துவிட்டதாக தகவல் அறிந்தால் அந்த இழப்பு தரும் கவலையுடன் உபரியாக இந்த தொலைபேசி அழைப்பை எப்படி சமாளிக்கப் போகிறேன் என்றக் கவலையும் தொற்றிக்கொள்ளும்.
.//

அதே அதே.....

இதே போன்ற சம்பிரதாயப் பூர்வமான உரையாடல்களை எப்பொழுதுமே செய்ய துணிவதில்லை. இதனாலேயே திருமணம், வீட்டு விசேஷங்களில் அன்னியப்பட்டு நிற்பது அடிக்கடி நிகழ்கின்றன. அவ்வாறான தருணங்களில் முழுவதும் உரிமை எடுத்து செயல்படும் வாய்ப்புள்ள இடங்கள்(என்னை நன்கு அறிந்த நண்பர்கள், வெகு வெகு சொற்பமான உறவினர்கள்) மட்டும்தான் எனது இந்த அன்னியப்பட்டுப் போகும் நிலையை விரட்டியடிக்கின்றன. அங்கெல்லாம் இந்த சம்பிரதாய பேச்சுக்களை என்னிடமிருந்து எதிர்பார்க்கும் ஆட்கள் இருப்பதில்லை. என்வே என் இயல்பில் வேலைகளைச் செய்து கொண்டு செல்வது சாத்தியமாகிறது.//பழைய கதைகள், படங்கள், பாடல்கள் ஆகியவற்றின் மீது எனக்கு இருக்கும் அதீதமான ஈர்ப்புக்கு தர்க்கபூர்வமான விளக்கம் எதுவும் என்னிடம் இல்லை. திரைப்படப் பாடல்களில் எண்பதுகளிலும் அதற்கு முன்பும் வெளிவந்தப் பாடல்களை மிகவும் விரும்பிக் கேட்பேன். புதிய பாடல்களை (கடந்த பத்து ஆண்டுகளில் வெளிவந்த எல்லா பாடல்களும் எனக்கு "புதிய" பாடல்கள் தான்) கிட்டத்தட்ட கேட்பதே இல்லை. //

அதே.. அதே...

என்னமோ போங்க.....

லிவிங் ஸ்மைல் என்னையும் வியர்டு எழுதச் சொல்லி கூப்பிட்டிருந்தார்கள். எனக்கு இது மாதிரி என்ன எழுதுவது என்றே தெரியாமல் அவரிடமே பதிலுக்கு கேட்டிருந்தேன். இப்போ இந்த பதிவையை வெட்டி, ஒட்டி, எடுத்து சில மாற்றங்களைச் செய்து பதிக்கலாம போல உள்ளது.


அசுரன்