அறம் எனப்படுவது...

சாமர்செட் மாமின் ஆக்கங்களில் ஆகச் சிறந்தது என்று நண்பர் ஒருவர் பரிந்துரைத்ததால் Of Human Bondage என்ற நாவலைப் படித்தேன். கதைப்படி குழந்தைப் பருவத்தில் பெற்றோரை இழந்த பிலிப் என்னும் சிறுவன் பழமைவாதக் கிருஸ்தவரான உறவினர் ஒருவர் வீட்டில் வளர்கிறான். பதினெட்டு வயதில் கல்விக்காக ஜெர்மனி, பிரான்ஸ் நாடுகளுக்குச் சென்று அங்கு பல புதிய மனிதர்களையும் புதிய சிந்தனைகளையும் எதிர்கொள்கிறான். தான் அதுவரைக் கொண்டிருந்த கருத்துக்களை மறு ஆய்வு செய்ததின் விளைவாகக் கிருஸ்தவ மத நம்பிக்கையை இழந்து நாத்திகன் ஆகிறான். இந்நிலையில் க்ரான்ஷா என்றக் கவிஞரின் நட்பு அவனுக்குக் கிடைக்கிறது. ஒரு உரையாடலின் போது க்ரான்ஷா பிலிப்பிடம் அவன் சரியான வாழ்வுமுறை எது என்பதை கிருஸ்தவ மத போதனைகளின் அடிப்படையிலேயே முடிவு செய்வதாகச் சொல்கிறார். பிலிப் அதை கோபமாக மறுத்து தான் பொதுவான அடிப்படை அறத்தின் அடிப்படையிலேயே எது சரி எது தவறு என்று முடிவு செய்வதாகக் கூறுகிறான். அதற்கு க்ரான்ஷா சொல்கிறார்:

"பொதுவான அடிப்படை அறம் என்று எதுவுமே இல்லை!" (There is no such thing as abstract morality)

இந்த வரி நிறையவே யோசிக்க வைத்தது. உண்மையில் அனைத்து சமூகங்களும் ஏற்றுக்கொள்ளக்கூடிய அறம் என்று ஒன்றை முன்வைப்பது மிகவும் கடினம் என்றேத் தோன்றுகிறது. "திருடுவது தவறு" போன்ற அறவிதிகள் பெரும்பாலான சமூகங்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டாலும் திருட்டை வாழ்க்கைமுறையாகக் கொண்ட பல சமூகங்களும் இருந்திருக்கின்றன. அங்கே பிறர் உடைமைகளைத் திருடுவதுக் குற்ற உணர்வை ஏற்படுத்தும் ஒருப் பாவச்செயலாக கருதப்பட்டிருக்காது. அப்பா திருடுகிறார், பெரியப்பா திருடுகிறார், எதிர்வீட்டு மாமா திருடுகிறார், அப்படியானால் திருடுவதில் என்ன தவறு இருக்கமுடியும்? தன் சமூகத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஒரு செயல் தார்மீக ரீதியாகத் தவறாக இருக்கமுடியாது என்ற எண்ணம் மிகப் பரவலாக நிலவுவதைக் எங்கும் காணலாம். சிறுவயதில் காந்தியின் சத்திய சோதனையைப் படிக்கையில் அவர் ஆட்டுக்கறி உண்டுவிட்டு அதீதக் குற்ற உணர்வடையும் நிகழ்வின் தீவிரத்தை என்னால் உணர முடியவில்லை. புலால் உண்ணுதல் காந்தியின் சமூகத்தில் எத்தகையப் பாவச்செயலாகக் கருதப்பட்டது என்ற புரிதல் இல்லாததும் நடப்பன, பறப்பன, நீந்துவன என்று எல்லாவற்றையும் ஒரு வெட்டு வெட்டுவது என் சமூகத்தில் அனுமதிக்கப்பட்டிருந்ததும் அதற்குக் காரணம்.

கொலை செய்துவிட்ட ஒரு மனிதனுக்குத் தண்டனையாக சமூகம்/அரசு அவனைக் கொலை செய்வது பல ஐரோப்பிய சமூகங்களில் "காட்டுமிராண்டித்தனமாகக்" கருதப்படுகிறது. இந்தக் கருத்தோடு பல இந்தியர்கள் கடுமையாக முரண்படுகிறார்கள் என்பதைத் தமிழ் வலைப்பதிவுகளின் அண்மைக்கால வாசகர்களுக்குச் சொல்லத் தேவையில்லை. கொலைக்குப் பதில் கொலை என்பதைத் தீவிரமாக நியாயப்படுத்தும் இவர்களுக்குக் கூட ஒரு மோதலில் எதிராளியைக் குருடாக்கிவிட்ட ஒருவனின் கண்களை அரசு தோண்டியெடுப்பதுக் "காட்டுமிராண்டித்தனமாக" தோன்றக்கூடும். ஆனால் சவுதியில் இதைச் செய்கிறார்கள். கண்ணுக்கு கண் என்பதைத் தற்காத்துப் பேசும் சவுதிக்காரர்களுக்குக் கூட பாலியல் வல்லுறவில் ஈடுபட்டவனுக்குத் தண்டனையாக அவன் வீட்டுப்பெண்களைச் சமூகம் வன்புணர்வுக்கு உட்படுத்தும் வழக்கம் மிக வக்கிரமான ஒன்றாகத் தெரியலாம். ஆனால் சில பழங்குடியினரிடையே இந்த வழக்கம் இருப்பது பதிவுச் செய்யப்பட்டிருக்கிறது. இந்நிலையில் பொதுவான அடிப்படை அறத்தை எங்கே போய் தேடுவது?

பாலியலுடன் தொடர்புடைய நெறிகளை எடுத்துக்கொண்டால் ஒரு சமூகத்தில் வெகு இயல்பானதாகக் கருதப்படும் வழக்கங்கள் அச்சமூகத்துக்கு வெளியே மிகவும் இழிவானதாக நோக்கப்படுவதைக் காணலாம். சில பிரிவினரிடையே வழக்கில் உள்ள சித்தி மகளை மணக்கும் முறையை மிகக் கடுமையாக விமர்சித்த தமிழர்களை நான் அறிவேன். ஆனால் இவர்களுக்குத் தமிழ் சினிமாவால் கொண்டாடப்படும் கலாச்சாரமான சகோதரி மகளை மணக்கும் வழக்கம் குறித்து எந்த விமரிசனமும் இல்லை. ஆனால் இம்முறை மற்ற இனத்தவர் பலராலும் மிகவும் அருவருப்புடன் நோக்கப்படுவதை நான் கண்டதுண்டு. பப்புவா நியு கினி தீவில் வாழும் ஒரு இன மக்களால் உயர்வாக மதிக்கப்பட்டுக் கடைபிடிக்கப்படும் சில மரபுகளைப் பற்றி இங்கு எழுதினால் இது ஆபாசப் பதிவாகிவிடும் அபாயம் உள்ளதால் அதை அப்படியே விட்டுவிடலாம்.

சமூகங்கள் தங்கள் அறநெறிகளை எங்கிருந்து பெறுகின்றன? மதக் கோட்பாடுகளிலிருந்தே என்ற பதில் பலராலும் முன்வைக்கப்பட்டிருக்கிறது. மத நம்பிக்கையை தூக்கியெறிந்துவிட்டவர்கள் கூட அந்த மதத்தின் ஆதாரமான அறநெறிகளை அப்படியே வைத்துக் கொள்கிறார்கள் என்று சாமர்செட் மாம் முன்குறிப்பிட்ட நாவலில் மற்றொரு இடத்தில் சொல்கிறார். கிருஸ்தவ மத நம்பிக்கையை முற்றாக நிராகரித்த பல (மேற்கத்திய) எழுத்தாளர்களால் முன்வைக்கப்பட்ட அறவிதிகள் கூட அப்படியே மலைப்பொழிவின் சாயலிலேயே இருக்கின்றன என்று மாம் எழுதுகிறார். மனிதன் அறநெறிகளின் படி வாழ்வதற்கும் தன் சக மனிதனை நேசிப்பதற்கும் இறைவன், முடிவில்லா வாழ்வு (immortality) ஆகியவை மீதான நம்பிக்கையே காரணம் என்றுக் கருதியவர்களில் முக்கியமானவர் தாஸ்தாவ்ஸ்கி. கரமசோவ் சகோதரர்களில் இவானின் கருத்தாக இதை முன்வைக்கிறார். மனித இனம் அத்தகைய நம்பிக்கைகளை முற்றாக இழந்துவிட்டால் உலகில் எதுவுமே - சக மனிதனைக் கொன்று அவன் தசையை உண்ணுதல் உட்பட - தவறாகவோ பாவமாகவோ கருதப்படாது என்பது இவானின் நிலைப்பாடு. தாஸ்தாவ்ஸ்கியின் தாக்கம் அதிகமாக இருப்பதாக நான் கருதும் எழுத்தாளர் ஜெயமோகன் இணைய இதழ் ஒன்றில் வெளியான ஒருக் கடிதத்தில் இப்படி எழுதுகிறார்:

"ஆன்மீக அடிப்படை இல்லாமல் ஒரு பழங்குடிச் சமூகம் கூட வாழ முடியாது. காரணம் வாழ்க்கையின் அற அடிப்படைகள் ஆதாரமான நம்பிக்கைகள் அங்கிருந்தே வர முடியும். நான் ஏன் ஒழுக்கமாக இருக்க வேண்டும், நான் ஏன் கருணையுடன் இருக்க வேண்டும்? அதற்கான எல்லா பதில்களையுமே நீங்கள் ஆன்மீகத்தில் இருந்தே எடுக்கமுடியும்."

அண்மையில் சிங்கப்பூரில் ஒரு விழாவில் ஜெயமோகன் பேசும்போது தன் புத்தகங்களின் எங்கெல்லாம் வாசகனின் கண்ணீர் விழுந்திருக்கிறதோ அங்கெல்லாம் தான் அறத்தை சொல்லியிருப்பதாகச் சொன்னார். வாசகன் தான் உயர்வாக மதிக்கும் அறத்தை இலக்கியப் படைப்பில் எதிர்கொள்ளும்போது நெகிழ்வுணர்ச்சி அடைவது உண்மையே. நானும் அந்த அனுபவத்தை அடைந்திருக்கிறேன். தற்போது நினைவுக்கு வருவது ஜெயமோகனின் கன்னியாகுமரி நாவலில் ஒரு இடம். உடன் படிக்கும் மாணவனுடன் கன்னியாகுமரிக்கு வரும் கல்லூரி மாணவி விமலா மூன்று ரவுடிகளால் கொடூரமான முறையில் வன்புணர்வு செய்யப்பட்டுப் பின் தற்கொலைக்கு முயல்கிறாள். இருபதாண்டுகளுக்குப் பிறகு ஒரு வெற்றிகரமான அமெரிக்க விஞ்ஞானியாக மீண்டும் கன்னியாகுமரி வரும் அவள் அந்த ரவுடிகளின் ஒருவனை எதிர்கொள்கிறாள். அவன் வறுமையாலும் கடும் நோயாலும் வதைக்கப்பட்டு சாவின் விளிம்பில் இருக்கிறான். தனது இறப்புக்குப் பிறகு எவ்வித ஆதரவும் இல்லாத தனது மகள்கள் வேட்டையாடப்பட்டு விடுவார்கள் என்பதே அவனது முக்கிய கவலையாக இருக்கிறது. விமலா அவனுக்கு ஆறுதல் சொல்லி செலவுக்கு பணம் தருகிறாள். அவன் பெண்களின் படிப்பிற்கும் வேலைக் கிடைப்பதற்கும் தான் ஏற்பாடு செய்வதாகச் சொல்கிறாள். அவன் பேசுவதறியாது கண்ணீர் விட்டபடிக் கைக்கூப்புகிறான்.

நாவலின் இந்தப் பகுதியை வாசிக்கையில் நான் ஏன் நெகிழ்வாக உணரவேண்டும்? தீமை செய்தோரை மன்னித்து அவர்களுக்கு நன்மை செய்தல் என்பதை நான் கடைபிடிக்காவிட்டாலும் அது மிக உயர்ந்த அறம் என்று என் மூளையின் ஏதோ ஒரு மூலையில் பதிவாகியிருப்பது தான் காரணமாக இருக்கக்கூடும். இந்த எண்ணம் என்னுள் எப்படி ஏறியது? இது அனைவருக்கும் பொதுவான அடிப்படை அறமா?

அறநெறிகள் ஆன்மீகத்திலிருந்தே பெறப்படுகின்றன என்பது உண்மையானால் தீமைக்கு பதில் நன்மை செய்வது உயர்ந்த அறம் என்று நான் கருதுவதற்கு என் கிருஸ்தவ பின்னணியும் காரணமாக இருக்கக்கூடும். (இன்னா செய்தாருக்கு நன்னயம் செய்ய வள்ளுவர் சொன்னதன் வேர்களைக் கூட சமண மதக் கோட்பாடுகளில் தான் தேடவேண்டும். கண்டிப்பாக அது புறநானூற்றுத் தமிழர்கள் பின்பற்றிய அறம் அல்ல.) பள்ளிப் பருவம் வரை கிருஸ்தவம் என்னில் பெரியத் தாக்கமாக இருந்தது. அந்நாட்களில் அதிகம் வாசித்த, வாசிக்கக் கேட்டப் புத்தகமென்றால் அது புதிய ஏற்பாடு தான். இன்று நான் கிருஸ்தவ மத அமைப்பின் மீதும், கிருஸ்துவின் இறைத்தன்மை மீதும் நம்பிக்கை இழந்துவிட்டால் கூட கிருஸ்துவின் போதனைகள் மற்றும் அவற்றைப் பின்பற்றுவோர் மீதான மதிப்பு மாறுவது கடினம். (எல்லாவற்றையும் தர்க்கப்பூர்வமாக அணுகும் ஒருவன் அப்படி இறைத்தன்மை மீது நம்பிக்கை இழப்பது இயல்பானது. அசாதாரண வாழ்க்கை வாழ்ந்த மனிதர்கள் அவர்கள் இறப்புக்குப் பின் கடவுளாக்கப்படுவதும், அவர்கள் வாழ்வைச் சுற்றி ஐதீகங்கள் பின்னப்படுவதும் இன்றைய அறிவியல் உலகில் கூட தொடர்ந்து நடந்து வரும் ஒன்று. வீரப்பனைப் புதைத்த இடத்தில் ஏராளமானவர்கள் வழிபட்டு புனித மண் எடுத்துச் செல்வதாக அண்மையில் படித்தேன்.) மத அமைப்புகள் இறைநம்பிக்கையை வலியுறுத்தும் அளவுக்கு அறநெறிகளின் படி வாழ்வதை வலியுறுத்துவதில்லை. அதே வேளையில் பெரும்பாலான மக்களுக்கு உளவியல் காரணங்களுக்காக இறைநம்பிக்கை மிகவும் தேவையாக இருப்பதையும் மறுப்பதற்கில்லை. பொதுவாகவே மத அமைப்புகளுக்கும் மதத்தின் அடிப்படையான அறநெறிகளுக்கும் தூரம் அதிகம். மறுகன்னம் காட்டச் சொன்னவரது பெயரால் தான் சிலுவைப் போர்களும் ஏராளமான அப்பாவிகளைப் பலி வாங்கிய புனித விசாரணையும் நடத்தப்பட்டன. ஒரு தற்கால எடுத்துக்காட்டு தருவதென்றால் அகிம்சை பரப்பவேண்டிய இலங்கை பௌத்த மதக் குருக்கள் வெளிப்படுத்தும் அதீதப் போர்வெறியைச் சொல்லலாம்.

அறநெறிகளுக்கு மதக் கோட்பாடுகளே அடிப்படை என்ற வாதத்தை வளர்த்தெடுத்தால் இறைவன், முடிவில்லா வாழ்வு, மறுபிறவி போன்ற எவ்வித நம்பிக்கையும் இல்லாத ஒரு சமூகத்தில் அறநெறிகளே இருக்கமுடியாது. இந்த வாதம் எந்த அளவு சரியானது?

கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழக உயிரியல் பேராசிரியர் டொனால்ட் ப்ரூம் என்பவர் எழுதிய "The evolution of morality and religion" என்ற நூலை அண்மையில் படித்தேன். உயர்ந்த அறமாக மனிதர்களால் கருதப்படும் பல வழக்கங்கள் குழுவாக வாழும் விலங்குகளாலும் கடைப்பிடிக்கப்படுகின்றன என்பதை ஏராளமான எடுத்துக்காட்டுகள் கொண்டு நிறுவுகிறார். காயமடைந்த / முதிய உறுப்பினர்களுக்கு மற்ற விலங்குகள் உணவுத் தேடிக்கொண்டு வருவது, ஆபத்தில் சிக்கிய சக விலங்கை மீட்பதற்கானப் போராட்டத்தில் மற்ற விலங்குகள் உயிரை இழப்பது, அனாதையாகிவிட்ட குட்டிகளை தத்தெடுத்து வளர்ப்பது போன்ற வழக்கங்கள் பல்வேறு உயிரனங்களிடையே இருப்பது இந்த நூலில் பதிவுசெய்யப்பட்டிருக்கிறது. மனிதனானாலும் விலங்குகளானாலும் குழுவாக வாழும்போது குழுவின் நலனுக்கும் குழுவை அழிவிலிருந்து தற்காத்துக் கொள்வதற்கும் உதவக்கூடிய செயல்கள் அறமாகவும் அதற்கு எதிரானச் செயல்கள் செய்யத்தகாதவையாகவும் நிலை கொள்கின்றன. "இயற்கையான" அறம் என்றால் இதுதான்.

கொலை செய்வதைப் பெரும் பாவமாகக் கருதும் சமூகங்கள் கூட போரில் எதிரிகளைக் கொலை செய்வதை மிக உயர்வாகப் போற்றுகின்றன. குழுவின் உறுப்பினர்கள் ஒருவரை ஒருவர் கொலை செய்வது குழுவின் ஒட்டுமொத்த நலனுக்கு எதிரானது, ஆனால் எதிர் குழுவைச் சேர்ந்தவர்களைக் கொல்வது குழுவின் நலனுக்கு உகந்தது என்பதைத் தவிர இந்த முரணுக்கு வேறு விளக்கம் இல்லை. போரில் எதிராளியைச் சுட்டுக்கொன்ற படை வீரன் குற்ற உணர்வு அடைவதில்லை. மாறாகப் பெருமைக் கொள்கிறான். அவன் சமூகம் அச்செயலுக்காக அவனுக்கு விருதுகளும் பதக்கங்களும் வழங்கிப் பெருமைப்படுத்துகிறது. ஆனால் அதுவும் கொலைதான். கொல்லப்பட்டவனின் வீட்டிலும் விடுமுறைக்கு வரப்போகும் அப்பாவை எதிர்பார்த்து ஒருக் குழந்தை இருக்கக்கூடும் என்பதைச் சற்று நினைத்துப் பார்த்தால் அந்தக் கொலையின் தீவிரம் புரியலாம். ஆயுதமேந்திய படைவீரர்களை விடுவோம். குடியிருப்புப் பகுதிகளில் குண்டு வீசிக் குழந்தைகள், பெண்கள் உட்பட அப்பாவிகளைக் கொல்வதற்குக் காரணமாக இருக்கும் இராணுவ/அரசியல் தலைவன் கூட குற்ற உணர்வு அடைய வாய்ப்பில்லை. அச்செயலுக்கு அவனது சமூகத்தின் - குறிப்பாக நாட்டுப் பற்றாளர்களின் - விமரிசனமற்ற ஆதரவும் அங்கீகாரமும் இருப்பதே அதற்குக் காரணம். லட்சக்கணக்கான அப்பாவி யூதர்கள் கொடூரமான முறையில் கொல்லப்பட்டபோது ஜெர்மானிய நாட்டு மக்கள் வெளிப்படையாகவும் தங்கள் மௌனத்தின் மூலமும் அதை அங்கீகரித்தார்கள். அதற்காக ஜெர்மானியர்கள் அறநெறிகள் ஏதும் இல்லாதவர்கள் என்றோ இயல்பிலேயே குரூரமானவர்கள் என்றோ சொல்வது மிகவும் அபத்தமானது. தேசப்பற்று தலைக்கேறிய வேறு எந்த சமூகமானாலும் "தேசவிரோதிகளுக்கு" எதிராக நடத்தப்படும் வன்முறைகளை இப்படித்தான் அங்கீகரிக்கும்.

பல ஆண்டுகளுக்குப் பிறகு சந்தித்த ஒரு கல்லூரி நண்பன் தான் அகமதாபாத்தில் பணிபுரிந்த அனுபவத்தை கூறுகையில் அங்குள்ள மக்கள் பழகுவதற்கு மிகவும் இனிமையானவர்கள் என்றுச் சொன்னான். குஜராத்திகள் அறிமுகம் இல்லாதவர்களிடம் கூட மிகவும் அன்பாக நடந்துக் கொள்ளக்கூடியவர்கள் என்பதை நான் ஏற்கனவே பல இடங்களில் படித்திருக்கிறேன். ஆனால் இதே அகமதாபாத்தில் தான் கடந்த ஐம்பது ஆண்டுகளாக பல்லாயிரக் கணக்கான மக்கள் - இந்தியாவின் வேறு எந்த நகரையும் விட அதிகமாக - மதக் கலவரங்களில் பலியாகியிருக்கிறார்கள். பாசமானவர்கள் என்றுப் பெயரெடுத்த இந்தச் சமூகத்தில் மாற்று மதத்தைச் சேர்ந்தவர்கள் மீது இழைக்கப்படும் வன்முறைகளுக்குப் பரவலான சமூக அங்கீகாரம் இருக்கிறது. "சமூக விரோதிகள்" செய்தார்கள் என்ற சப்பைக்கட்டெல்லாம் இங்கே எடுபடாது. 2002-ல் நடந்த கலவரங்களின் போது சமூகத்தின் பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்தவர்களும் (குறைந்தப்பட்சம் கடைகளைக் கொள்ளையிடுதல் போன்ற செயல்களிலாவது) ஈடுபட்டார்கள் என்பது நன்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. கர்ப்பிணிப் பெண்ணின் வயிற்றைக் கிழித்துக் கருக்குழந்தையை உருவுதல் போன்றச் செயல்களில் "நம்மைப் போன்றவர்கள்" ஒருபோதும் ஈடுபடமாட்டார்கள் என்றே பெரும்பாலானவர்கள் நினைக்கக்கூடும். ஆனால் "நம்மைப் போன்ற" சாதாரண மனிதர்கள் கூட அசாதாரணமான சூழ்நிலைகளில் மிகவும் குரூரமான செயல்களில் ஈடுபட வாய்ப்புள்ளது என்பதை மனித உளவியலில் ஆர்வம் உள்ளவர்கள் அறிவார்கள். தமிழில் இதை ஓரளவுக்கேனும் சொல்ல முற்பட்ட ஒருத் திரைப்படம் ஹே ராம். (சாக்கேத் ராமிடம் நட்பாகப் பழகும் தையல்காரன் அல்டாஃப் கலவரத்தின் போது ஒருக் கும்பலுடன் வந்து சாக்கேத் ராம் கண் எதிரிலேயே அவன் மனைவி அபர்ணாவை வன்புணர்ந்துக் கொல்லும் காட்சி மற்றும் வேறு சிலக் காட்சிகள்.)

பல்வேறு சமூகங்களால் பின்பற்றப்படும் பாலியல் ஒழுக்கவிதிகளுக்கு பொதுவான அடிப்படைக் காரணமாக ஒன்றை டொனால்ட் ப்ரூம் முன்வைக்கிறார். தன் துணையை மற்ற ஆண்களிடமிருந்துக் காவல் காக்கும் ஆணின் போக்கே அது. தன்னுடைய மரபணுக்களை வருங்கால சந்ததியினரிடையே பரப்பவேண்டும் என்ற உந்துதல்/இச்சை ஒவ்வொரு மனிதனுக்கும் விலங்குக்கும் இயற்கையாகவே அமைந்திருக்கிறது. தன் துணைக்குப் பிறக்கும் குழந்தை தன்னுடையது தான் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளும் ஆணின் தேவை இதிலிருந்தே எழுகிறது. இதற்கு துணையை மற்ற ஆண்களிடமிருந்துக் காப்பது தேவையாகிறது. இத்தகைய காவல் காக்கும் போக்கு பல்வேறு உயிரனங்களிடையே காணப்படுகிறது. பத்தினிகள் படிதாண்டலாகாது என்பதிலிருந்து க்ளிட்டோரெக்டமி வரை எல்லாவித வழக்கங்களும் அடிப்படையில் பெண் தன் துணையைத் தவிர மற்ற ஆண்களுடன் உறவுகொள்வதற்கான வாய்ப்புகளைக் குறைப்பதையே நோக்கமாகக் கொண்டவை. ஆனால் இவற்றில் சமூகத்தின்/குழுவின் பொதுவான நலனும் கலந்திருப்பதையும் கவனிக்கவேண்டும். (ஒருக் குழுவில் தகப்பனின் ஆதரவு இல்லாத சிறுவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பது பல தீங்குகளை விளைவிக்கக்கூடும். மேலும் குழுவின் ஆண் உறுப்பினர்கள் துணையைக் நேரடியாகக் காவல் காப்பதிலேயே தங்கள் நேரத்தையும் ஆற்றலையும் செலவிட்டால் உணவு தேடுதல், குழுவின் ஒட்டுமொத்த உற்பத்தித் திறன் ஆகியவைப் பாதிக்கப்படும்.)

இந்தச் சட்டகத்துக்குள் பொருந்தாத பாலியல் வழக்கங்களை ஆராய்ந்தால் அவற்றைக் கடைபிடிக்கும் சமூகங்களும் அந்த வழக்கங்களின் மூலம் வேறு பல லாபங்களை அடைவதைக் காணமுடியும். நூறு ஆண்டுகளுக்கு முன் வரை கேரளத்தில் நாயர் மற்றும் நம்பூதிரி சமூகங்களில் நிலவிய வினோதமான பாலியல் வழக்கங்களை இதற்கு எடுத்துக்காட்டாகச் சொல்லலாம். ஒரு பெண் பல ஆண்களுடன் சமூகத்தின் முழு அங்கீகாரத்துடன் "சம்பந்தம்" வைத்துக்கொள்ளும் இந்த முறைக்குப் பின்னால் பல வலுவான சமூக நோக்கங்கள் உண்டு. நம்பூதிரிகளின் குடும்பச் சொத்துக்கள் பிரிந்துச் சிதறி அச்சமூகம் பொருளாதார ரீதியாக வலுவிழந்துவிடக் கூடாது என்பதும், நம்பூதிரிகளுடன் நெருங்கிய உறவு பேணுவதின் மூலம் நாயர் சமூகத்தின் மேம்பாடும் இவற்றில் முக்கியமானவை. மேலும் போர்த்தொழில் புரிந்த நாயர் சமூக ஆண்கள் அதிக அளவில் இறக்க நேர்ந்தாலும் ஒரு பெண்ணுக்குப் பல ஆண்துணைகள் இருப்பதால் ஆதரவற்ற கைம்பெண்களின் எண்ணிக்கை அதிகரிக்காது. சம்பந்தப்பட்ட சமூகத்துக்கு சில நலன்களை அளிப்பதால் மரியாதைக்குரிய ஒன்றாக ஏற்றுக்கொள்ளப்பட்ட இந்த வழக்கம் அதே காலக்கட்டத்தில் மற்ற சமூகங்களில் மிகவும் இழிவானதாகக் கருதப்பட்டது என்பதுக் கவனிக்கத்தக்கது.

சமூகத்தின் ஒட்டுமொத்த நலனை நோக்கமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட அறநெறிகளின் படி நடப்பது தனிமனிதனுக்கு எப்போதுமே எளிதான ஒன்றல்ல. சாமர்செட் மாம் இதை இப்படிப் பார்க்கிறார். பல நேரங்களில் தனிமனிதன் தன்னுடைய சுயநலம் மற்றும் சமூகத்தின் நலன் ஆகியவற்றில் ஒன்றைத் தேர்ந்தெடுக்க வேண்டியக் கட்டாயத்துக்கு உள்ளாகிறான். அப்போது அவனது மனசாட்சி அவனைத் தன் சுயநலனை விடுத்து சமூகத்தின் நலனைத் தேர்ந்தெடுக்க வைக்கிறது. மனசாட்சி ஒவ்வொரு மனிதனின் அகத்திலும் சமூகத்தின் பிரதிநிதியாக இருந்து செயலாற்றுகிறது. ஆனால் ஒரு மனிதன் ஒரு எல்லை வரைத் தான் அறத்தைப் பேணுவதற்காகத் தன் சுயநலனை விட்டுக்கொடுக்க முடியும். எடுத்துக்காட்டாக ஒருபோதும் திருடியிராத ஒருவன் கூடப் பசித் தாங்கமுடியாத நிலையில் திருடக்கூடும். பசி, தூக்கம் போன்ற அடிப்படைத் தேவைகளின் முன் மனிதன் விலங்குகளைப் போல முற்றிலும் பலமில்லாதாவன் என்பதை ஏற்றுக் கொள்பவர்களில் பலரும் கூட காமத்தை அந்த வரிசையில் சேர்ப்பதில்லை. ஆனால் காமம் முற்றிலுமாக மறுக்கப்பட்ட ஒரு வாழ்க்கை மனிதனுக்கு சாத்தியமில்லை. உலகமெங்கும் மதத் துறவிகள் மீது அதிக அளவில் எழுப்பப்படும் பாலியல் புகார்கள் இதற்கு ஒரு முக்கிய ஆதாரம்.

ஜெயமோகனின் காடு நாவலில் நாட்டார் வழக்கில் ஏராளமானக் கதைகள் சொல்லும் குட்டப்பன் என்றப் பாத்திரம் வருகிறது. குட்டப்பன் சொல்லும் கதைகளில் ஒன்று மலைவாழ் மக்களிடையே மதப்பணி செய்யும் ஒரு வெள்ளைக்காரப் பாதிரியாரைப் பற்றியது. பெரிதும் மதிக்கப்படும் அந்தப் பாதிரியார் கடுமையான பாலியல் ஒழுக்கம் பேணுபவர். எக்காரணம் கொண்டும் பெண் சபலத்துக்கு ஆளாகிவிடக்கூடாது என்ற எண்ணத்தில் பெண்களைப் பார்ப்பதைக் கூட அறவேத் தவிர்ப்பவர். எதிரே பெண்கள் வர நேர்ந்தால் தரையைப் பார்த்தபடிக் கடந்துப் போய்விடுவார். என்னதான் மண்பார்த்து நடந்தாலும் எதிரே வரும் பெண்ணின் பாதங்கள் கண்ணில் பட்டுவிடுவதை அவரால் தவிர்க்க முடியவில்லை. நாளடைவில் மலைவாழ் பெண்களின் புழுதிப்படிந்தப் பாதங்களைக் காண்பதில் அவருக்கு விவரிக்க இயலாத ஒரு கிளர்ச்சி ஏற்படலாயிற்று. பின் பாதிரியார் வயதாகி இறக்கும் தருவாயில் அவரது இறுதி வார்த்தைகளைக் கேட்பதற்காக சீடர்களும் மற்றத் துறவிகளும் அவரது படுக்கையைச் சுற்றி நிற்கிறார்கள். பாதிரியார் தன் இறுதி விருப்பத்தை வெளியிடுகிறார். "சங்கரன் பொண்டாட்டியோடக் காலைப் பாக்கணும்". அந்தப் பெண்ணுக்குத் தேவ அழைப்பு வந்திருப்பதாகக் கருதி கன்னிகாஸ்திரிகள் அவளதுக் கால்களை சுத்தமாகக் கழுவி வாசனைத் தைலங்கள் பூசி அவர் முன் அழைத்து வருகிறார்கள். சிரமப்பட்டுக் கண்களைத் திறந்துப் பார்க்கும் பாதிரியாருக்குக் கடும் அதிர்ச்சி. "ஓ மை காட்! கழுவிப்போட்டாங்க" என்றபடி ஏமாற்றத்துடன் உயிர்த் துறக்கிறார்.

4 மறுமொழிகள்:

அருமையான பதிவு ஜெகத். பன்முகத்தன்மையுடன் இந்தக் கட்டுரை எழுதப்பட்டிருக்கின்றது. 'அறம்',
'உண்மை', 'நடுநிலைமை' என்பது அவரவர்களுக்குரியதே தவிர பொதுவான விதிகளுக்குள் சட்டமிட்டு அடக்கிவிட முடியாது போலவே தோன்றுகின்றது.
.....
ஜெயமோகன் நாவல்களிலுள்ள நுட்பமான சித்தரிப்புக்களை நீங்கள் குறிப்பிடும்போது, அவர் கட்டியமைத்திருக்கும் விம்பங்களைத்தாண்டி அவரது படைப்புக்களை நான் கூர்ந்து படிக்கவில்லையோ என்ற ஆதங்கமே எழுகின்றது. :-(.

அருமையான படைப்பு, நல்ல ஒரு கட்டுரை வாசித்த திருப்தி.
என்ன, எப்படி சொல்றதுன்னு தெரியல...ஆனா வாசிச்சு முடுச்சப்புறம்...ஒரு அமைதியான சிந்தனைக்கு கூட்டி செல்கிறது. இடையிடையில், ஆ.வி-யில் வந்த மதனின் "மனிதனுள் மிருகம்"-மும் மண்டைக்குள் வந்து போகிறது.
மொத்தத்தில்....(தூள்/சிந்தனை) கிளப்பீட்டீங்க :)

உங்களுடைய பதிவுகள் பல விடயங்களை புரிய வைக்கின்றன. மேலும், சொல்ல வந்த கருத்துக்களை தெளிவாக சொல்லியிருக்கிறீர்கள், பாராட்டுக்கள்.

பாலியலும் மதக் கட்டுப்பாடுகளும் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகி வருகின்றது. ரா.சு. நல்லபெருமாள் அவரது எண்ணங்கள் மாறலாம் என்ற நாவலில் ஒரு பிரமச்சாரியின் கற்பு ஒழுக்கம் குறித்து பல கேள்விகளை எழுப்பியுள்ளார். பல இடங்களில் ஓசோ இது குறித்து விரிவாக பேசியுள்ளார்.அறம் என்பது மனச்சாட்சி அவ்வளவு தான். அது மனித வளர்ச்சிக்கு ஏற்ப மாறும்.

ஒரு ஈழத் தமிழன்